பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 31, 2015

89. சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்


 ''கொல்லா விரதம் குவலய மெல்லாமோங்கி                                                        எல்லார்க்கும் சொல்வதென் இச்சை பராபரமே''         - தாயுமானவர்.
                                                                  
             லெள‌கிக விஷயங்களில் மஹா நிபுணரும், சிறந்த "வேதாந்தப் பயிற்சியுடைய வருமாகிய என் நண்பரொருவர் (அவருக்கு 'கோபால பிள்ளை' என்ற புனை பெயர் சூட்டுகிறேன்) இன்று பகல் நேரத்தில் என்னிடம் வந்து சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

            அவர் என்னிடம் சொன்னார்:- 'நீங்கள் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில், எந்த வகுப்பினருக்கும் மனவருத்தம் நேரிடாதபடியாக எழுதுவதே நன்று. 'இன்சொலால் அன்றி இரு நீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே.' பிறருக்குக் கோபம் ஏற்படாத வகையில் எவ்வளவோ எழுத இடமிருக்கிறது. உலகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பதும், உலகத்தாருக்கு உங்களால் இயன்றவரை நன்மை செய்யவேண்டு மென்பதுமே, நீங்கள் பத்திரிக்கைக்கு வியாசங்கள் எழுதுவதின் நோக்கம். அந்த நோக்கம் விரைவில் நிறைவேற வேண்டுமானால், நம்முடைய கொள்கைகளைச் சிறிதேனும் கோபமில்லாமலும், ஆத்திரப்படாமலும், பிறர் யாவரேயாயினும் அவர் மனம் சிறிதேனும் நோவாமலும், முற்றிலும் இன் சொற்களால் எழுதுவதே சிறந்த வழியாகும்' என்றார்.

             இது கேட்டு நான்:- 'மிகவும் நன்றாகச் சொன்னீர்கள். இதுவே என் சொந்த அபிப்பிராயமும். ஆனாலும், ஸ்திரீகளின் நிலைமை, கீழ்ச் சாதியாரின் நிலைமை, ஏழைகளின் நிலைமை, மிருக பக்ஷிகளின் நிலைமை-இவற்றைக் குறித்து எழுதும்போது, மேற்படி மாதர் முதலான எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்க மின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் பிறந்து விடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாக அனுஷ்டிக்க முயலுகின்றேன். ஏனென்றால், கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் நிறைவேறுதலுக்கே, நீங்கள் குறிப்பிட்டவாறு, தடையாகி முறிகின்றன. ஆடு மாடு தின்போரை நாம் வாய்க்கு வந்தபடி வைதால், அதனின்றும் அவர்களுக்கு நம்மீது கோபம் அதிகப்படுமே யொழிய, அவர்கள் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்த வழியுண்டாகாது. தக்க நியாயங்கள் காட்டுவதும் அவர்களுடைய காருண்யத்தை நாம் கெஞ்சுவதுமே மனிதர் நாம் சொல்லும் கக்ஷியை அங்கீகரிக்கும்படி செய்யும் உபாயங்களாம்' என்றேன்.

               அப்போது என் நண்பர்:- ''மிருகங்களைக் கொன்று தின்னும் அநியாயத்தை நினைக்கும் போது,எனக்கும் அடக்கமுடியாத வயிற்றெரிச்சல் உண்டாகத்தான் செய்கிறது. அவற்றை வெட்டும் போது, நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா?ஆட்டை வெட்டப்போகும் ஸமயத்தில், அது தலையை அங்குமிங்கும் அசைத்து விட்டால் வெட்டுசரியாக விழாதென்பதை உத்தேசித்து, அதன்வாய்க் கெதிரே பச்சைக் குழையைக் காட்டுகின்றார்கள். அதுகுழையைத் தின்பதற்காக முகத்தை நேரே நீட்டும்சமயத்தில் திடீரென்று ஒரே வெட்டு வெட்டி அதன் தலையைத் துண்டித்து விடுகிறார்கள். அங்ஙனம் வெட்டும்போது பார்த்தால் வெட்டுவோனிடம் நமக்கு மிகுந்த குரோதம் உண்டாகத் தான் செய்கிறது. அவனை க்ஷமிப்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது.  இத்தனை சுலபமாக ஒரு ஆட்டை வெட்டிக் கொன்று தீர்த்து விடுகிறார்கள். ஒரு ஆட்டிற்கு உயிர் அளிக்க இவர்களால் முடியுமா?

'சில தினங்களுக்கு முன்பு, சங்கரநயினார்கோயிலுக் கருகே ஒரு கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாடன் கோயிலில் பெரிய ஜனத்திரள் கூடிபூஜை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மாடசாமி யார் தெரியுமா? அந்த கிராமத்தில் பல வருஷங்களின் முன்னே ஒரு மறவன் இருந்தானாம். அவன் கொலை, களவு முதலிய செயல்களில் மிகுந்த வீரனாகவும் ஏழை எளியோர் மீது மாத்திரம் கிருபை யுடையவனாகவும் இருந்தானாம். அவன் செத்த பின், அவனை அந்த இடத்தில் ஸமாதி வைத்து, அந்த ஸமாதியில் ஓர்கோயில் கட்டி அந்த மறவனையே மாடசாமியாகச் செய்து, அந்தப் பக்கத்துக் கிராமத்தார் கும்பிட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலில் வேடிக்கை பார்க்கும் பொருட்டாக நான் சில சிநேகிதர்களுடன் போயிருந்தேன் அங்கே இருநூறு, முந்நூறு கழு மரங்கள் நாட்டி அவற்றில் ஆடுகளைக் கோத்து வைத்திருக்கிறார்கள்.அந்த ஆடுகள் கழு மரங்களில் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கையிலே நான் பார்க்கவில்லை. அப்போது பார்த்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அறியேன். அவை செத்துப் போய் இரத்தமும் நிணமும்ஒழுகிக் கொண்டிருக்கையிலே நான் பார்த்தேன். அந்தக்காட்சியை நினைக்கும் போது, இப்போதும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. ஆஹா! என்ன கொடும்பாவம்! என்ன மஹாபாதகம்!' என்று கூறி, என் நண்பராகிய கோபால பிள்ளை மிகவும் பரிதாபப்பட்டார்.

            அப்போது நான் சொன்னேன்:- ''சில தினங்களின் முன்பு பாரஸீகத்தின் பொம்மை ராஜாவாகிய ஷா சக்கரவர்த்தி பாக்தாது நகரத்திற்குத் திரும்பி வந்தாராம். அதாவது, அவர் ஐரோப்பாவில் சுற்றுப்பிரயாணம் பண்ணி விட்டுத் தம் தேசத்திற்கு வருகையிலே பாக்தாது நகரத்திற்கு விஜயம் பண்ணினாராம். அப்போது, அவருடைய வரவை அலங்கரிக்கும் பொருட்டாக பாக்தாது நகரத்தில் 80 ஆடோ 100 ஆடோ வெட்டப்பட்டதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் தந்தி சமாசாரம் வந்திருந்தது. அதைப் படித்தபோது என் வயிற்றில் நெருப்புப் பந்தம் விழுந்தது போலிருந்தது. ஆனால், நமது தேசத்து சில்லரைத் தெய்வங்களின் கோயில்களிலே பூஜை தோறும், சில இடங்களில் 1,000 ஆடு 10,000 ஆடு வீதம்கூட வெட்டப்படுவதை நினைக்கும்போது எனக்கு அடக்க முடியாத கோபமுண்டாகிறது.

 திருநெல்வேலிக்கருகே ''குரங்கிணி யம்மன்'' கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அங்கு வருஷோத்ஸவ காலங்களில் கணக்கில்லாத ஆடுகள் வெட்டப்படும் என்று கேள்விப்படுகிறேன்.

 இதே மாதிரி சென்னைப் பட்டணத்திற் கருகேஒரு கிராமத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. இன்னும் நாடு முழுமையிலும் இம்மாதிரியான கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றில் நடக்கும் கொலைகளைத் தடுக்கும்படி அந்தக் கோயில் தர்மகர்த்தாக்களையும் பொது ஜனத் தலைவர்களையும் காலில் விழுந்து கேட்டுக் கொள்வதாகப் பத்திரிகைக்குஎழுதப் போகிறேன். ''கோபச்சொற்கள் சொல்வதிலும் வைவதிலும் கார்யம் இல்லை'' என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, நாம் என்ன செய்வோம்?' என்றேன்.

இங்ஙனம் நெடுநேரம் ஜீவநாசத்தின் அநியாயத்தையும் அதனால் மனிதருக் குண்டாகும் எண்ணற்ற பாவங்களையும் அவற்றால் உண்டாகும் நோய் சாவுகளையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த சம்பாஷணை முழுவதையும் இங்கு எழுத இடமில்லை. எனினும், நான் கோபால பிள்ளையிடம் வாக்குக் கொடுத்தபடியே இங்கு வேண்டுதல் செய்கிறேன். 

'தமிழ் நாட்டு ஜனத்தலைவர்களே, உங்கள் காலில் வீழ்ந்து கோடிதரம் நமஸ்காரம் செய்கிறேன். மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்.' 


No comments:

Post a Comment

You can give your comments here