பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 31, 2011

விடியலுக்கு வாழ்த்துக்கள்

   விடியும் விடியலுக்கு வாழ்த்துக்கள் 
         ++++++++++++++++
புத்தாண்டின் விடியலிலே
புது பாதை தேடும்  என்தோழா- உனக்கான 
முகவரிகள்  செய்யும்  பொழுதினிலே ...

முட்டுக்கட்டை போடும்-எந்த 
முகம்தெரியா தடைகண்டும் 
மூச்சடைத்து நிற்காதே. உன் பார்வையை மாற்றாதே.

நித்தமும் தடைகள். 
மொத்தமும்  தோல்விகள் .  
எதிலும் ஏமாற்றங்கள். 

இந்த வேதனை எனும் சோதனையை
 நீ சோதித்தால்
அவைசொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள் 
தெரிந்து கொண்டால் 
பாதைகள் பணிந்துவிடும்.

 உன்னை சூழும் நெருப்பை-நீ 
 அள்ளிப் போட்டு தின்றால்  -அங்கோர்
 உலகம் உன்னைக் கண்டு உதித்துவிடும்    .

எண்ணித் துணிந்தால் கருமம் .
உன்னுள் தேவை  வன்மம்-இருந்தால் 
ஜெயமே  இந்த ஜென்மம்.

 -தனுசு-

Friday, December 16, 2011

ராஜாஜியும் காமராஜரும்


ராஜாஜியும் காமராஜரும்


(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு புகழ்பெற்ற காங்கிரஸ்காரர். நகைச்சுவையோடு நீண்ட நேரம் பேசக்கூடியவர். ஆவேசமாகவும் பேசுவார், கேட்போரை அழவும் வைத்துவிடுவார். சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகும்படி பல பழமொழிகளை உதிர்த்துக் கிண்டலாகவும் பேசுவார். 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தமிழகத்தில் இவர்தான் பெரிய 'ஹீரோ' எனச் சொல்லும்படி நம்பமுடியாத சம்பவங்கள் நடந்தேறின. இவர் யார்? கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு இவர் யார் என்பதைப் பாருங்கள்.)

1942இல் ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டார். க்விட் இந்தியா இயக்கம் வன்முறை இயக்கம் என்பது அவர் கருத்து. அதன் பின்னர் அவரை காங்கிரசில் சேர்க்க சிலர் முயன்றனர். தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைமை எதிர்த்தது. இந்த சூழ்நிலை குறித்த நமது 'புகழ்பெற்ற' கட்டுரையாளர் என்ன சொல்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
Chinna Annamalai with Rajaji & MKT Bhagawathar

"காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்" என்று தமிழ் நாட்டுக் காங்கிரஸ்காரர்களில் ஒரு பகுதியினர் கிளர்ச்சி நடத்தினர். இந்தக் கிளர்ச்சியைத் தலைவர் காமராஜ் ஆதரித்தார். மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களும் அதே எண்ணம் கொண்டு தொண்டர்களைத் தூண்டி வந்தனர். 

"காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டும்" என்று தலைவர்களில் ஒரு சாராரும், தொண்டர்களில் சிறுபான்மையினரும் வாதாடினார்கள்.

நான் சிறுவயது முதற்கொண்டே ராஜாஜியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்தவன். அரசியலிலும் சரி, தமிழ்த் தொண்டிலும் சரி ராஜாஜி உடன் இருந்து பல காரியங்கள் செய்து வருபவன். ஆகவே "ராஜாஜி வேண்டும்" என்ற கோஷ்டியில் நான் சேர்ந்து பணிபுரிவது இயற்கையே. ஆனால் காமராஜ் என் மீது தனி அபிமானம் கொண்டிருந்தார். 1942 போராட்டத்தில் எனது 'சாகசம்' அவரைக் கவர்ந்திருந்தது. எனது நகைச்சுவைப் பேச்சு அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் நான் காமராஜ் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது என்னிடம் மிகவும் கோபமாக பேசினார். "ராஜாஜி 1942 போராட்டம் செய்தவர்களை எல்லாம் 'குண்டர்கள், பலாத்காரவாதிகள்' என்றெல்லாம் ஏசிப்பேசி நமது போராட்டத்தை எதிர்த்தாரே மறந்து விட்டீர்களா? 1942 போராட்டத்தை நடத்திய நீங்கள் குண்டரா? நான் குண்டாவா? இப்படிப்பட்டவர்களைக் காங்கிரசில் வைத்துக் கொள்ளலாமா? 1942 ஆகஸ்டில் தியாகம் செய்யாதவர்கள் காங்கிரசிற்கே வேண்டாம்" என்று பொரிந்து தள்ளினார்.

நாம் அமைதியாகச் சொன்னேன். "ராஜாஜியை ஆகஸ்ட் தியாகி இல்லை என்று சொல்லுகிறீர்கள். அதனால் என்ன, அவர் செப்டம்பர் தியாகி, அக்டோபர் தியாகி, நவம்பர் தியாகி, டிசம்பர் தியாகி -- பல ஆண்டுகளாகப் பல மாதங்கள் தியாகம் செய்த பெரியவரை - சிறந்த அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை" என்றேன்.

"காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலோர் வேண்டாம் என்று சொல்லும்போது நீ மட்டும் ஏன் கிறுக்கனாக இருக்கிறாய்?" என்றார். "எனக்கு காந்தி கிறுக்கு - காந்தியடிகளை நம்பி காங்கிரசுக்கு வந்தவன். மகாத்மாஜி "ராஜாஜியை வேண்டாம்" என்று சொல்லவில்லையே. ராஜாஜியை ஏற்றுக் கொள்ளும்படிதானே 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதியிருக்கிறார்."

"நீங்கள் எல்லாம் ஏன் காந்திஜி பேச்சை மீறுகிறீர்கள்? காந்திஜிக்கு விரோதமான இக்காரியம் செய்யும் உங்களுடன் நான் ஒருக்காலும் ஒத்துழைக்க மாட்டேன். காந்தியடிகளின் விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிரச்சாரம் செய்வேன்" என்றேன்.

"சரி, சரி போ - போய் அந்தக் கிழவனைக் கட்டிக் கொண்டு அழு" என்று சீறினார். நான் அமைதியாக வந்துவிட்டேன்.

அதன் பின்னர் "ராஜாஜி வேண்டும்", "வேண்டாம்" கிளர்ச்சி பெரிதாக நடந்தது. ராஜாஜியை காங்கிரஸ் உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சேர்த்துக் கொண்டார். ராஜாஜியை வேண்டாம் என்று சொல்பவர்களை 'க்ளிக்' என்று மகாத்மாஜி ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார்.

உடனே காந்திஜியை கண்டனம் செய்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பேசினார்கள். சில ஊர்களில் காந்தியடிகளின் படங்கள்கூட எரிக்கப்பட்டன. இப்படியாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லோலப் பட்டது.

கடைசியில் ஒரு வழியாக ராஜாஜி மத்திய அரசில் மந்திரியானார். அத்துடன் அந்தப் பிரச்னை தீர்ந்தது. ஆனால் திரு காமராஜ் அவர்கள் அதன் பின்னர் ராஜாஜியை ஆதரித்தவர்களை நம்புவதில்லை. காங்கிரஸ் கமிட்டிகளில் எதிலும் வந்து விடாதபடி பார்த்துக் கொண்டார்.

நான் எப்போதும்போல் காங்கிரஸ் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். நாளாக ஆக, தலைவர் காமராஜ் அவர்கள் பழையபடி என்னுடன் சுமுகமாகப் பழக ஆரம்பித்தார்கள்.

ராஜாஜி வங்காள கவர்னராகி, அதன் பின்னர் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகி மிகுந்த புகழுடன் பதவி விட்டு சென்னை வந்து தங்கியிருந்தார்.

1952 தேர்தலில் காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னைக் கூடவே கூட்டிக் கொண்டு போனார். ரொம்பவும் அன்பு காட்டினார். நானும் "இனி காமராஜ் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். தேர்தலில் முதலமைச்சர் குமாரசாமி ராஜா தோற்றார். காங்கிரஸ் பெரும்பான்மை இழுபறியாகிவிட்டது. காமராஜ் பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைப்பதானால் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது என்று குமாரசாமி ராஜா கருதினார். மீண்டும் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டு வருவதை காமராஜ் எதிர்த்தார்.

கடைசியில் சர்தார் வல்லபாய் படேலும், நேருஜியும் ராஜாஜிதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் காங்கிரஸ்காரர்கள் கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஆனால் காமராஜ் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து வந்தார்.

ராஜாஜி மந்திரிசபை அமைத்தார். கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்த்தார்கள். "ராஜாஜி மந்திரிசபை எதிர்ப்புக் கூட்டம்" என்று மூலைக்கு மூலை போட்டார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எதிரிகள் அனைவரும் சேர்ந்து கொண்டார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டிகள் மெளனமாகவே இருந்தன. காமராசரும் நமக்கென்ன என்பது போல வாளாவிருந்தார். இதை என்னால் கொஞ்சம் கூட பொறுக்க முடியவில்லை. நேராக காமராஜரிடம் போனேன். "இப்படி இருந்தால் எப்படி?" என்றேன்.

"என்ன செய்யச் சொல்கிறீர்கள்?" என்றார். "மந்திரிசபை காங்கிரஸ் மந்திரிசபைதானே. அதை ஆதரித்து நாம் கூட்டம் போட்டு எதிர்க்கட்சிகளின் போக்கை அம்பலப்படுத்த வேண்டாமா?" என்றேன்.

"ராஜாஜியை எவன் கொண்டு வந்தானோ அவன் செய்யட்டும். நான் ஒன்றும் செய்யப் போவதில்லை" என்றார்.

"நீங்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர். நடப்பது காங்கிரஸ் மந்திரிசபை. இதை ஆதரிப்பது ஒரு காங்கிரஸ்காரன் கடமை அல்லவா?" என்றேன்.

"ஆமா! கடமைதான். நீ வேண்டுமானால் உன் கடமையைச் செய்" என்று கோபமாகப் பேசினார்.

"கடமையைக் கண்டிப்பாகச் செய்வேன்" என்று கூறிவிட்டு திரு ம.பொ.சி.யிடம் போனேன். பின்னர் சி.சுப்பிரமணியத்தைச் சந்தித்தேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களைச் சந்தித்துப் பேசினேன்.

அதன் பலன் சென்னை கடற்கரையில் திரு ம.பொ.சி. தலைமையில் ராஜாஜி மந்திரிசபை ஆதரவுக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. ராஜாஜியும் வந்து கலந்து கொண்டார்.

பின்னர் பட்டி தொட்டிகளில் எல்லாம் மந்திரிசபைக்கு ஆதரவுக் கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்டுகள் ஒருவாறு அடங்கினார்கள். இவைகள் எதிலும் காமராஜ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. என்மீது மீண்டும் அவர் கோபம் கொண்டார்.

ராஜாஜிக்கு இக்கட்டான நிலைமை உண்டானது. புதிய கல்வித் திட்டத்தைத் திரித்துக் கூறி ராஜாஜியை திராவிடக் கழகம் - முன்னேற்றக் கழகம் எல்லாம் எதிர்த்தார்கள். அப்போதும் தலைவர் காமராஜ் ராஜாஜிக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதனால் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் காமராஜ் முதன் மந்திரியானார்.

ராஜாஜி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு அண்ணாதுரை அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 1967 தேர்தலில் காமராஜ் அவர்களையும் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்தார்.

ராஜாஜி - காமராஜ் சண்டையினால்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது. தேசிய சக்திகள் குன்ற தேச விரோத சக்திகள் பலமடைந்தன.

காமராஜ் அவர்களை முறியடிக்க ராஜாஜி அவர்கள் செய்த முயற்சியில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துவிட்டது. பின்னர் ராஜாஜி - காமராஜ் இருவரும் ஒன்று சேர்ந்தும் கூட தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியவில்லை. தேசிய சக்திகள் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்க முடியாதபடி ராஜாஜி காமராஜ் பகை செய்துவிட்டது.

அரசியலில் ராஜாஜி - காமராஜ் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களே ஒழிய, தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தார்கள்.

ராஜாஜி தன் கடைசி காலத்தில் தமிழ அரசைக் காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினார். காமராஜரைப் போன்ற நாணயமான வாழ்க்கை உடையவர்கள் அரசியலில் கிடைப்பது அரிது என்று ராஜாஜி கருதினார். இதைப் பகிரங்கமாக எழுதினார், பேசினார்.

ஆனால் ராஜாஜியின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர் அமரரானார். சொன்னால் நம்பமாட்டீர்கள்! யாருக்கும் கண்ணீர் விடாத காமராசர், ராஜாஜியின் சடலத்தைப் பார்த்ததும் 'பொல பொல'வென்று கண்ணீர் சிந்தினார்.

(இதை எழுதியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? இவர் 1942 க்விட் இந்தியா போராட்டத்தில் தூள் கிளப்பியவர். இவருக்காக ஒரு ஊரின் சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். யார் இவர்? நாளைக்குச் சொல்கிறேனே, ஒரு சிறு சஸ்பென்சோடு. கண்டுபிடிக்க முடிந்தவர்களுக்கு சபாஷ், தமிழக வரலாற்றை நன்கு படித்தவர்கள் என்று பாராட்டுகிறேன்.)


"காமராஜ் - ராஜாஜி" குறித்து நேற்று வெளிவந்த கட்டுரையை எழுதியவர் திரு சின்ன அண்ணாமலை. அவருடைய "சொன்னால் நம்பமாட்டீர்கள்" எனும் நூலில் வெளியான கட்டுரை அது. இவர் செட்டிநாட்டில் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் நூல்கள் வெளியீட்டாளர். தமிழ்ப் பண்ணை எனும் இவரது பதிப்பகம் பல எழுத்தாளர்கள் கூடும் இடமாக இருந்தது. இவர் 1942இல் கைது செய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து சிறைக் கதவை உடைத்து இவரை வெளிக் கொணர்ந்தனர். பின்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இவர் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்திலும் இருந்தவர். தங்கமலை ரகசியம் போன்ற பல திரைப்படங்களை எடுத்தவர். சரோஜா தேவியை திரையுலகத்துக்கு அறிமுகம் செய்தவர். சிவாஜி ரசிகர் மன்றத்தைத் தோற்றுவித்தவர்.

Thursday, December 15, 2011

ராஜாஜி

ராஜாஜி அவர்களுடைய பிறந்த நாளையொட்டி வெளியாகும் சிறப்புக் கட்டுரை இது:

ராஜாஜி

1878 டிசம்பர் 10ஆம் தேதி தமிழகத்தின் அப்போதைய சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி எனும் ஊரில் ஓர் ஆண் மகவு பிறந்தது. பின்னாளில் அந்தக் குழந்தை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணிபுரியும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ராஜகோபாலன் எனும் நாமகரணம் பெற்ற இந்தக் குழந்தை பின்னர் ராஜகோபாலாச்சாரியாராக ஆகி பின்னர் ராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட மேதை, தீர்க்கதரிசி, தலைசிறந்த அறிவாளி. இவருடைய 134ஆம் பிறந்த நாள் இந்த மாதம் 10ஆம் தேதி வந்து சென்றது. இந்த நேரத்திலாவது தமிழகம் தந்த இந்தப் பெரியோனின் வரலாற்றின் பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்கலாமே!

சேலம் மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்த ராஜகோபாலன் பெங்களூர் செண்ட்ரல் காலேஜிலும், பின்னர் சென்னை ராஜதானி கல்லூரியிலும் பயின்றார். சட்டம் படித்த இவர் 1900இல் அதாவது தனது 22ஆம் வயதில் வக்கீலாக தொழிலில் இறங்கினார். இவருடைய திறமை காரணமாக புகழ் பெற்ற வக்கீலாக இருந்தார். சேலம் நகரசபையில் முதலில் உறுப்பினராகவும் பிறகு அதன் சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போர் சூடு பிடிக்கத் தொடங்கிய சமயத்தில் ரெளலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈடுபட்டார். வைக்கம் சத்தியாக்கிரகம் சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றிலும் பங்கு கொண்டார். 1930இல் வடக்கே காந்திஜி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தைப் போல தெற்கே திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை தொண்டர்களுடன் சென்று உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்து முதன் முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். 1937இல் நாடு முழுவதும் நடந்த தேர்தலில் சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலுக்குப்பின் இவர் மாகாணத்தின் பிரதமராக (அப்போது முதல்வரை அப்படித்தான் அழைப்பர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரை இங்கிலாந்து அறிவித்தபின் 1940இல் இவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

இவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தியபோது இவர் அதில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரசிலிருந்தும் விலகியிருந்தார். யுத்த நேரத்தில் நாம் இங்கிலாந்துடன் ஒத்துழைத்து நமது சுதந்திரத்துக்கு முயற்சி செய்ய வேண்டுமென்று விரும்பியதால், இவர் 1942 க்விட் இந்தியா இயக்கத்தில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் நாட்டு பிரிவினைக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தபோது, இந்து முஸ்லீம் கலவரங்களையும், படுகொலைகளையும் தவிர்க்கத் தனி நாடு ஏற்படுவதே சிறந்தது என்று எண்ணி இவர் முகமது அலி ஜின்னாவுடனும் முஸ்லிம் லீகுடனும் பேச வேண்டுமென்று விரும்பினார்.

1946இல் கீழ்வானில் இந்திய சுதந்திரத்தின் உதயம் தெரிந்த நேரத்தில் டெல்லியில் உருவான இடைக்கால மத்திய சர்க்காரில் நேரு தலைமையில் இவர் தொழில்துறை, விநியோகம், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1947, 1948இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்துக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டார். அதன் பின் லார்டு மெளண்ட் பேட்டனுக்குப் பிறகு கடைசி கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பதவி வகித்தார். 1951, 1952 காலகட்டத்தில் இவர் டெல்லியில் மத்திய சர்க்காரில் உள்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 

இந்தியா ஜனநாயக குடியரசாக அறிவிக்கப்பட்டு புதிய அரசியல் சாசனத்தின்படி முதல் பொதுத்தேர்தல் 1952இல் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்துக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. எதிர்கட்சிகள் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் பெருமளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஜவஹர்லால் நேருவின் விருப்பப்பட்டியும், காமராஜ் போன்றோரின் சம்மதத்துடன் ராஜாஜியை அழைத்து சென்னை மாகாண முதலமைச்சராக ஆகும்படி வற்புறுத்தவே இவர் முதல்வர் ஆனார். 1953இல் இவர் கொண்டு வந்த ஆதாரக் கல்வியை எதிர் கட்சியும் காங்கிரசில் ஒரு சாராரும் இது 'குலக்கல்வி முறை' என்று குற்றம்சாட்டி எதிர்க்கவே, இவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு 1954இல் வெளியேறினார்.

1959இல் இவர் காங்கிரசிலிருந்து விலகி சுதந்திரா கட்சி என்று தனிக்கட்சி துவக்கினார். சோஷலிசம் பேசிவந்த காங்கிரசை எதிர்த்து வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட கட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு சுதந்திராக் கட்சி பிரபலமாக வளர்ந்து வந்தது. பெரும் புள்ளிகள் இந்தக் கட்சியில் சேர்ந்தனர். 1962, 1967, 1972 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் இந்தக் கட்சி போட்டியிட்டது. சென்னை மாகாணத்தில் 1967இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு தி.மு.க.அமைச்சரவை அமைய இவருடைய சுதந்திரா கட்சி தி.மு.கவுடனும் இதர கட்சிகளுடனும் ஒரு கூட்டணி அமைத்து போட்டியிட்டு காங்கிரசைத் தோற்கடித்து காரணமாக விளங்கியது. 1967இல் விழுந்த காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் எழவேயில்லை.

ராஜாஜி சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல புலமை உடையவர். பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களான மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் நூலாக எழுதி வெளியிட்டவர். கர்நாடக இசையிலும் வல்லவர். இவர் எழுதிய "குறையொன்றும் இல்லை" எனும் பாடலைப் பாடாத பாடகர்களே இருக்க முடியாது. இவர் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்காக எழுதிக் கொடுத்து அவர் பாடிய பாடல்கள் உண்டு.

தமிழ்நாட்டு ஆலயங்களில் ஆலயங்களுக்குள் சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காத நிலை இருந்து வந்தது. அதனால் இவர் தென் தமிழ் நாட்டில் மதுரையில் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில், பசும்பொன் தேவர் துணையுடன் மீனாக்ஷி ஆலயத்தில் ஆலயப் பிரவேசத்தை நடத்தி முடித்தார். ஹரிஜனங்கள் மேம்பாட்டுக்காக ராஜாஜியும் மதுரை வைத்தியநாத ஐயர் போன்ற அவருடைய ஆதரவுத் தலைவர்களும் அயராது பாடுபட்டனர்.

1937இல் இவர் பிரதமராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார், பின்னர் இவரே இந்தியை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தத் துணை புரிந்தார். மகாத்மா காந்தியின் மனசாட்சியின் காப்பாளர் என்று இவரை ஜவஹர்லால் நேரு வர்ணித்தார்.

1897இல் அலமேலு எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். இரு மகன்கள் இரு பெண்கள். 1916இல் இவரது மனைவி இறந்தார். இவரே குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து வளர்த்தார். இவரது மகன்களில் ஒருவரான சி.ஆர்.நரசிம்மன் நாடாளுமன்ற உறுப்பினராக 1952லிருந்து 1962 வரை இருந்திருக்கிறார். 

1965இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டல் வலுத்தது. 1965 ஜனவரி 26 முதல் இந்தி அரசாங்க அலுவல் மொழியாக ஆகியது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கக்கூடாது என்று போராட்டம் வெடித்தது. 17-1-1965இல் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மகாநாட்டை ராஜாஜி கூட்டினார். அதில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்திய அரசியல் சட்டத்தை கடலில் தூக்கி எறியவேண்டுமென பேசினார்.

1967 தேர்தலில் தி.மு.க.வுடன் இவருடைய சுதந்திராக் கட்சி கூட்டணி அமைத்து தனது 88ஆம் வயதிலும் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரசை ஒழித்துக் கட்டுவதே தனது வாழ்வின் லட்சியம் என்று பேசினார். தேர்தலில் தி.மு.க. வென்றது. சிஎன்.அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார்.

அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மு.கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். 1971இல் இவர் மதுவிலக்கை தளர்த்திவிட்டு அதற்கு மாநிலத்தின் நிதிநிலைமைதான் காரணம் என்று கூறிவந்தார். சுந்தந்திராக் கட்சி இந்த மதுவிலக்குத் தளர்வை எதிர்த்து ஆதரவை நீக்கிக் கொண்டது.

1972இல் ராஜாஜியின் உடல்நிலை தளர்ந்து போயிற்று. 94 வயதை அடைந்த ராஜாஜி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். 1972 டிசம்பர் 25 கிருஸ்துமஸ் தினத்தன்று மாலை 5.44க்கு அவர் உயிர் பிரிந்தது. அவர் மகன் சி.ஆர்.நரசிம்மன் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.

இலக்கிய உலகுக்கு அவர் அளித்த கொடை அதிகம். 1922இல் "சிறையில் தவம்" எனும் நூலை எழுதினார். தனது 1921, 22 ஆண்டுகளில் சிறை வாழ்க்கையை பிரதிபலித்தது இந்த நூல். 1951இல் இவர் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் சுருக்கி நூலாக "வியாசர் விருந்து" என்றும் "சக்கரவர்த்தி திருமகன்" என்றும் நூலாக எழுதினார். 1965இல் இவர் "திருக்குறள்" நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பகவத் கீதை, உபநிஷத் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார். சாக்ரடீஸ் பற்றி "சோக்ரதர்" எனும் நூலை எழுதினார்.

1958இல் இவருக்கு சாஹித்ய அகாதவி விருது கிடைத்தது. கே.எம்.முன்ஷியுடன் இணைந்து இவர் பாரதிய வித்யா பவனை உருவாக்கினார். "இந்துயிசம் - ஒரு வாழ்க்கைத் தத்துவம்" எனும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் அணு ஆயுதங்களுக்கு எதிரானவர். வெளிநாட்டுப் பயணங்களை ஏற்காத இவர் அணு ஆயுத எதிர்ப்புக்காக அமெரிக்கா சென்று ஜனாதிபதி கென்னடியைச் சந்தித்துப் பேசியது வரலாற்றின் ஏடுகளில் பதிவான சிறப்பான செய்தியாகும். அவர் இவருக்கு அளித்த மரியாதை வேறு யாருக்கும் கொடுத்ததில்லை என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள்.

போற்றுவார் ஒரு புறம், இவரைத் தூற்றுவார் ஒரு புறமுமாக இவர் தன் வாழ்க்கையை நிஷ்காம்யகர்மமாக நினைத்துத் தனது 94ஆம் வயதில் அமரர் ஆனார். ராஜாஜி என்ற சொல்லுக்கு சுடர்மிகும் அறிவு என்று பொருள் கொள்ளும்படியாக அமைந்தது இவரது வாழ்க்கை. வாழ்க ராஜாஜியின் புகழ்.










Wednesday, December 14, 2011

ராஜாஜி கல்வித் திட்டம்


ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம்

1952 முதல் 1954 வரை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் மிகப் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கி இறுதியில் அவர் பதவி விலகலில் கொண்டு போய் முடிந்தது. எதிருப்பு அலையைத் தொடங்கி வைத்தவர்கள் எதிர்க்கட்சியினராக இருந்த போதும், அதன் முடிவில் அவர் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியினரும் அந்த எதிர்ப்பில் ஈடுபட்டு ராஜாஜியின் நோக்கத்துக்குக் காரணங்களைக் கற்பித்ததன் விளைவாக அவர் பதவி விலகினார். உண்மையில் ராஜாஜி இந்தக் கல்வித் திட்டம் பற்றி சொன்ன கருத்துக்களும், அதனைக் கொண்டு வர காரணிகளையும் புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தத் திட்டம் பற்றி ராஜாஜி என்ன சொன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


1953ஆம் ஆண்டில் அதாவது 58 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது அவர் செங்கல்பட்டில் பேசிய பேச்சை இப்போது பார்ப்போம். இனி ராஜாஜியுடன் ..........

"புதிய கல்வித் திட்டம் பற்றிய, பல்வேறு விவாதங்களையும், அந்த திட்டத்திற்கான ஆதரவுகளையும் குறித்து, அனைவரும் கவனம் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயம் மிகவும் சிக்கலானது. பெரும் விவாதங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பல பெரிய விஷயங்கள் எந்தவிதக் கேள்வியும், பிரச்சனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஆனால் சில சிறிய விஷயங்கள், உரிய முறையில் புரிந்து கொள்ளப் படுவதில்லை. இத்தகைய உணர்வுகள் இயற்கையானதே. ஒரு பாறை அல்லது கல் என்பது ஆபத்தான பொருள் என்று நாம் அறிவோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள காற்றின் சக்தியினை நாம் அறிவதில்லை. ஆதாரக் கல்வித் திட்டத்தை நான் காற்றோடு ஒப்பிடுவேன். காற்று என்பது மரங்களை வீழ்த்திச் சாய்க்கும் அளவிற்கு வலிமையானதாகும். ஆதாரக்கல்வி என்பது கண்ணுக்குத் தெரியாத காற்றினைப் போல் எங்கும் பரவ வேண்டும். அத்தகைய ஆதாரக் கல்வியை நான் வாழ்க்கையின் சுவாசம் என்றுகூட அழைப்பேன்.

இந்த ஆதாரக் கல்வித் திட்டத்தின் பின்னால், பெரியதொரு சதி உள்ளது என்று சொல்வது வருந்தத் தக்கதாகும். இந்தத் திட்டத்தின் காரணகர்த்தாவாக நான் இருப்பதால், இத்திட்டத்தின் பின்புலத்தில் 'ஏதோ' இருக்கிறது என்ற சந்தேகம் சிலருக்கு வருகிறது. இறையருளால் இந்தத் திட்டத்தை வேறு யாரேனும் செயல்படுத்தியிருந்தால் வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும். இந்தத் திட்டம் பற்றி நான் முப்பது வருடங்களுக்கும் முன்னரே ஆலோசனை சொல்லியுள்ளேன். அந்தத் திட்டத்தை யாரேனும் செயல்படுத்துவார்கள் என்றும் எண்ணினேன். ஆனால் யாரும் அதைப் பற்றிக் கருதவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதைப் பற்றி, நான் கடந்த காலத்தில் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. எனது வயது முதிர்ந்த காலத்தில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை வேறு சிறந்த மனிதர்களிடம் ஒப்படைக்காமல், நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியினை சிலர் எழுப்பக்கூடும். அது கேள்வியின் ஒரு பக்கமாகும். பல ஆண்டுகளாக செயல்படுத்தாத இந்தத் திட்டத்தினை, இப்பொழுதாவது செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். இந்தத் திட்டத்தைப் பற்றி சில காலத்திற்கு, மக்கள் என்னைத் தூற்றுவார்கள். பின்னர் அது ஓர் முடிவுக்கு வரும்.

இந்த எளிய திட்டத்தைப் பற்றி பெரும் எதிர்ப்புகள் ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்திய வரலாற்றில், கல்வி சம்பந்தமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. பழங்காலத்தில் இந்திய வரலாறு படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. பின்னர் இந்தப் படிப்புக்கான உத்தரவு மாற்றப்பட்டு, இந்திய வரலாறு படிப்பது, தடை செய்யப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் எவரும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. அதேபோன்று, ஆங்கில வரலாறு படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவை நீக்க யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உடற்கூறு தொடர்பான கல்விக்கும், இதே நிலைமைதான் ஏற்பட்டது. இந்த விஷயங்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரிக்கவோ, அல்லது மற்ற மேடைகளில் பேசப்படவோ இல்லை. பழங்காலத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த ஆதாரக் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்த நினைக்கும் நானோ துரதிர்ஷ்டசாலியாவேன்.

இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் வேளையில், ஆதாரக் கல்வித் திட்டத்திறேகான எதிர்ப்புக்களின் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதைப் பற்றிய கருத்துக்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நெடுங்காலமாக, சாதிமுறைகள் நடைமுறையில் இருந்து வந்தன. கலப்புத் திருமணங்களும், சமபந்தி போஜனங்களும் பல்வேறு சமூக அமைப்புக்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தன. ஒரு நெசவாளர் தன் குடும்ப விழாக்களை, தன்னைச் சார்ந்த சமுதாயத்தோடு நிறுத்திக் கொண்டார். சலவைத் திழிலாளர்களும், மற்றத் தொழில் செய்பவர்களும் அவ்வாறே செயல்பட்டனர். அத்தகைய மாந்தர்கள், தங்களை ஒரு கூட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு, மற்றவர்களுடன் இயல்பாகவும், சுலபமாகவும் பழகவில்லை. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பின்னர், பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். கல்வி கற்கும் ஆர்வம் கொண்டவர்களைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கச் சொன்னார்கள். அந்தக் காலகட்டத்தில் இருந்த கல்வி முறையையும், நாம் தற்போது அறிமுகப்படுத்தவுள்ள, திருத்தி அமைக்கப்பட்ட கல்வி முறையையும் இணைத்துப் பேச வேண்டாம். அத்தகையப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் வசூலிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கலின் நிர்வாகம் நகராட்சியின் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.

குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள், அந்தப் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள். காலப் போக்கில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கான காரணம் என்னவென்றால், பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ ஏதேனும் ஓர் வேலை கிடைத்தது. வேலை கிடைக்கப் பெற்றவர்களுக்கு, அதிக சுமையோ, கஷ்டங்களோ இல்லாமலே போதிய சம்பளம் கிடைத்தது. தற்போதைய சூழ்நிலையில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உண்டாகி, அதன் காரணமாக ஏமாற்றம் கொண்டுள்ளனர்.

ஒரு குதிரைப் பந்தயத்தில் எல்லோரும் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தோற்றவர்கள் மனவருத்தம் கொண்டு, அரசாங்கம் ஏன் குதிரைப் பந்தயத்தைத் தடை செய்யக் கூடாது என்று கேட்கும் அளவிற்கு மன உளைச்சல் கொண்டுள்ளார்கள். இந்த மனச்சோர்வானது முதன் முறையாக குதிரைப் பந்தயத்திற்குப் போகும்போது ஏற்படுவதில்லை. குதிரைப் பந்தயத்தில் அனைவரும் வெற்றிபெற முடியாது. அதே போன்று, எல்லோருக்கும் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்காது. படித்தவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை கொடுக்க முடியாது என்ற உண்மையை பொதுமக்கள் உணர்ந்துள்ளார்கள். படித்தவர்களிடையே வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த நிலைமை முன்னேற்றமடைந்த சமூகத்தினருக்கும் பொருத்தமாகும். படித்த எவருக்கும் வேலை கிடைக்கும் என்ற உறுதியான நிலைமை இன்று இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புக்கு மேல் படிப்பதில், அதிக உற்சாகம் காட்டுவதில்லை. எதிர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கும், மேற்கொண்டு படிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாத நிலை ஏற்படக்கூடும். படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மனோபாவம், குழப்பமான எண்ணங்களை உருவாக்குகிறது. இது ஒருவிதமான நோய் போன்றது.

கல்வி என்பதன் உண்மையான பொருள் அறிவினைப் பெறுவது என்பதேயாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் கல்வி என்பதன் அர்த்தம் தற்போது தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டும் அல்ல. தற்போது செயல்படுத்த உள்ள அடிப்படைக் கல்வித் திட்டமானது, கல்வி கற்கும் காலத்தை பாதியாகக் குறைத்து விடுகிறது. அதன் நடைமுறையானது நாம் உண்ணும் உணவில் பாதி உணவை உண்பதற்குச் சமமாகும் என்ற விமர்சனமும் எழுகின்றது. இது தவறாகக் கொள்ளப்பட்ட கருத்தாகும். அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதி, மதம், தொழில் என்ற பாகுபாடுகளைக் களைந்து அனைவரும் இந்தக் கல்வியைப் பெற வேண்டும். அது வாழ்க்கையின் சுவாசம் போன்றதாகும்.

பிரிட்டிஷ்காரர்களின் காலத்தில் நிலவிய கல்வி முறையையும் தற்போதைய கல்வி முறையையும் மக்கள் பகுத்துணர்ந்து, தாரதம்மியத்தைக் கண்டு கொள்ள வேண்டும். உடல் உழைப்பால் வாழும் எளிய மக்களாக, கூலித் தொழிலாளி, சலவைத் தொழிலாளி அல்லது ரிக்ஷா இழுப்பவர் ஆகியோரின் குழந்தைகளுக்குப் படிக்கும் வாய்ப்புக்களை அளிக்க முடியுமா என்ற பெரிய கேள்வி எழுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பது மிகவும் நல்ல விஷயமாகும். அந்த நிலைமையை எப்படிப் பெறுவது என்பதுதான் கேள்வியாகும். திறமை மிகுந்தவர்களை மட்டும் தயார் செய்ய வேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். எல்லோருக்கும் கல்வி என்ற வாய்ப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். கற்பதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் அதிகமான தொடர்பு இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், புதிய கல்வித் திட்டத்தின் குறிக்கோளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு மூன்று மணி நேரத்தில் கற்பிக்கலாம் என்ற நிலைமை இருந்தால் அவர்களை ஐந்து மணி நேரத்திற்கு ஏன் தொல்லைப்படுத்த வேண்டும். ஒரு மாணவன் தனியாக விடப்பட்டால், அவன் மரத்தின் மீது ஏறுவான் அல்லது எதுவுமே செய்யாது சோம்பிக் கிடப்பான் என்றும் சிலர் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு விமர்சனம் செய்பவர்களின் எண்ணம் என்னவென்றால், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் கருதுகிறார்கள். மாணவர்கள் முன்னதாகவே பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தால் பெற்றோர் ஏமாற்றம் கொள்கிறார்கள். இத்தகைய எதிர்ப்புகளை தெரிவிப்பவர்களைப் பற்றி நான் பரிதாபம் கொள்கிறேன்.

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது பல வகையிலும் கலந்து ஆலோசிக்கலாம். பரிசீலனைகளையும் செய்யலாம். திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால், மக்கள் மனமாற்றம் கொள்ள வேண்டும். கிராமப் பகுதியில் உள்ள பகுதிகள் மக்களிடமிருந்து தனித்து விலகியே உள்ளன. இந்த நிலை மாற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு 'பாலிடெக்னிக்'காக மாற வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தொழில் முறைக் கல்வி பயில்வதற்கு எதிரானவர்கள் என்றே நான் கருத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஒவ்வொருவரும் தனது கரங்களைப் பயன்படுத்தும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். இத்தகைய விருப்பத்தினை இளம் பிராயத்திலேயே வளர்க்க வேண்டும். அத்தகைய பயிற்சி, நாட்டின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் துணையாக நிற்கும். திருத்தி அமைக்கப்பட்ட கல்வியானது நிறைந்த அளவில் உயர்படிப்புக் கல்விகளுக்கான வாய்ப்பினையும் அளிக்கிறது. நமது கரங்களைப் பயன்படுத்தாமல் இருந்தால், ஒரு கோழியானது இரண்டு இறக்கைகளை உடையதாக இருந்தாலும் பறக்காமல் இருப்பதைப் போன்றதேயாகும். வேலை கிடைக்காத பட்சத்தில் ஒருவன் தனது கரங்களைப் பயன்படுத்திப் பொருள் சம்பாதித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

முதலில் கல்வி கற்போம். அதன் பின்னர் தொழிலினைக் கற்றுக் கொள்வோம் என்று சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையது அன்று. இளம் பிராயத்தில் விஷயங்கள் மனதில் சுலபமாகப் பதிந்துவிடும். மக்கள் அனைவரும் குறிப்பாகக் கிராமத்தில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கிராமத்தில் ஒரு மனிதனாவது குழந்தகளுக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அத்தகைய வழிகாட்டிகள் அதிக அளவில் முன் வந்தால் ஒரு சங்கமே அமைக்கலாம். வழிகாட்டிகள் அதிகம் படிக்காதவர்களாக இருந்தாலும் பாதகமில்லை. ஆதாரக் கல்வித் திட்டத்தில் கல்வி கற்றுவரும் குழந்தைகள், தங்களது கரங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, சிந்தனைச் செல்வத்தையும் வளர்த்துக் கொள்வார்கள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

"இராஜாஜியின் உரைகள்" பாரதிய வித்யாபவன் வெளியீடு.
தமிழாக்கம்: திரு த.கணேசன், முன்னாள் நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி. த.க.அகிலா.

Tuesday, December 13, 2011

பாரதியின் பாஞ்சாலி



அன்பிற்கினியவர்களே!
வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் "பாரதியின் பாஞ்சாலி" எனும் தலைப்பில் நான் பேசிய உரையைக் கீழே கொடுத்திருக்கிறேன். இது 14-12-2011 அன்று காலை திருச்சி வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன். நன்றி.
தங்கள்
தஞ்சை வெ.கோபாலன்


பாரதியின் பாஞ்சாலி

"பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்றான் பாரதி. இந்த பாரத புண்ணிய தேசத்தில் தலைசிறந்த இதிகாசங்களாகப் போற்றப்படுபவை இராமாயணமும், மகாபாரதமும். மகாபாரதத்தின் உயிர்நாடி பாஞ்சாலி. பாஞ்சாலிக்கு ஏற்பட்ட துன்பம்தான் அவளை மகாபாரத காப்பியத்தின் உயிர்நாடியாக ஆக்கியது.

வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியாக பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது. எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது. முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது.

வியாசர் மட்டுமல்ல, தமிழில் வில்லிபுத்தூராரும் பாரதக் கதையை எழுதியிருக்கிறார். காப்பியத்தில் சூதுப்போர் சருக்கம் மட்டும் பாரதியின் வாக்கால் பாஞ்சாலி சபதமாக உருவெடுத்திருக்கிறது. காரணம் கதையின் உயிர்நாடி மட்டுமின்றி, பாரதப் போருக்கும் இந்த பாஞ்சாலி செய்த சபதமே காரணமாக ஆகிறது என்பதுதான்.

பாஞ்சாலியின் கதை பண்டிதர்கள் மட்டுமல்ல, பாமரனும் அறிந்து பாடி உணர்ந்து கொள்ளத்தான் பாரதி இந்தக் காப்பியத்தை விருத்தப் பாக்களாகப் பாடாமல், நொண்டிச் சிந்திலும், நாடோடிகள் பாடிவந்த ராகங்களையும் இணைத்து பாஞ்சாலி சபத்தை இயற்றியிருக்கிறார்.

துரியோதனின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத் தீயின் விளைவு, சகுனியின் சாமர்த்தியத்தால் சூதாட்டத்தில் வந்து முடிந்தது. ஆட மனமில்லாத தருமனை அரச தர்மம் எனும் சங்கிலியால் பிணைத்து ஆடவைத்த சாமர்த்தியம் சகுனியின் சூதுமனத்தால் முடிந்தது. தொடர்ந்து பலவற்றை இழந்தபிறகு தருமன் மனம் சோர்ந்து அமர்ந்தபோது அவனைத் தூண்டிய சகுனி "நீ இழந்ததெல்லாம் பின்னே, நின்னிடத்தே மீளும், சோர்வடைந்திடாதெ தருமா ஊக்கமெய்து" என்கிறான். துரியனின் நெஞ்சில் விளந்த தீ, குரு வம்சத்தையே அழிக்கும் பெருந்தீயாகக் கொழுந்து விட்டெரிந்தது, பாஞ்சாலி செய்த சபதத்தின் பயனாக. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாமல், கோவையாகச் சொல் சித்திரமாக வரைந்து காட்டிய பாரதியை என்னசொல்லி போற்றுவது?

பாஞ்சாலி சினம் கொண்டு இறுதியில் சபதம் ஏற்கிறாள். இடையில் காப்பியத்தில் பலரும் பல நேரங்களில் சினத்தீயால் மற்றவர்களைச் சுட்டு எரிக்கின்றனர். 

தன் மகன் துரியோதனின் இழிந்த சூழ்ச்சி கண்டு கண் இழந்த திருதராட்டிரன் ஒரு கட்டத்தில் நெஞ்சில் பொங்கி எழுகிறது சினம் எனும் தீ. அந்தத் தீயை அவனுடைய புத்திர பாசம் அணைத்து விடுகிறது. தீ மனம் கொண்ட துரியனின் சூழ்ச்சிக்கு கண்ணற்ற மன்னனும் துணை போய்விடுகிறான். எழுந்து எரிக்க வேண்டிய தீ அங்கு புத்திரபாசத்தால் அணைந்துவிடுகிறது.

இரண்டாவது தீ சூதில் தன் தம்பியாகிய அர்ச்சுனனை இழந்த கையறு நிலையில் தருமனின் மனதில் எழுகிறது வெஞ்சினத் தீ. அவன் நெஞ்சை மேலும் சுட்டுப் புண்ணாக்குகிறான் சகுனி. என்ன செய்கிறோம் என்பதையே உணராத நிலை தருமனுக்கு. பாரதி சொல்கிறார்

"தருமன் தக்கது செய்தல் மறந்தனன் - உளஞ் சார்ந்திடும் வெஞ்சின வெள்ளத்தில்
எங்கும் அக்கரை இக்கரை காண்கிலன்" என்கிறார்.

சினத் தீயால் விழுங்கப்பட்ட தருமன், மீண்டும் பீமனைப் பணயம் வைத்தும் இழக்கிறான். 

மூன்றாவது தீ சூதாடும் மன்றத்தில், மன்னர் அவைக்களத்தில் சூதில் பணயமென்றே திரெளபதியை வைத்து தருமன் இழந்தபோது, பீமன் உள்ளத்தில் எழுகிறது சினத்தீ. 

"மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான் - இந்தப்
பீடையை நோக்கினன் பீமனும் - கரை பீறி எழுந்தது வெஞ்சினம்"

பீமனின் வெஞ்சினம் கரையில் வந்து மோதி மேலெழும் அலையைப் போல, தீக்கங்குகள் அவன் உள்ளத்தில் மோதி மேலெழுந்ததாம். 

பாஞ்சாலியைச் சூதில் கெலித்துவிட்ட சுயோதனாதியர் கூட்டம் கொக்கரித்து ஆர்ப்பரிக்கிறது. புத்தியுள்ள விதுரன் அறிவுரை சொல்கிறான். "அறியாமையால் செய்த நீண்ட பழியிதனை நீர் பொறுப்பீர்" என்று சொல்லி பாண்டவரைத் தங்கள் வள நகருக்கே செல்ல விடீர்" செய்யத் தவறினால் பாரதப் போர் வரும், நீர் அழிந்திடுவீர்" என்று எச்சரிக்கிறான்.

பாஞ்சாலி அரசனின் மன்றுக்கு அழைக்கப் படுகிறாள். ஓர் சேவகன் சென்று அரண்மனையில் தனித்திருக்கும் பாஞ்சலியை அரசவைக்கு மன்னன் அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லுகிறான். அப்படிச் சொல்லும் முன்பாம அவன் பாஞ்சாலியை என்னவென்று அழைக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். "அம்மனே போற்றி, அறம் காப்பாய் தாள் போற்றி" என்றெல்லாம் விளிக்கிறான்.

"யார் பணியால் என்னை அழைக்கின்றாய்? சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா?" என்று மரபியல் பேசுகிறாள்.

சூதர் சபைக்குச் சென்று ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு வா, என்கிறாள் பாஞ்சாலி. அது என்ன விஷயம்? "வல்ல சகுனியிடம் மாண் பிழந்த நாயகர் தாம் என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்னம் இழந்து முடித்து என்னைத் தோற்றாரா?" விடை தெரிந்து வா என்கிறாள். நடுங்கித் தவிக்கும் அந்த சேவகன் வில்லில் புறப்பட்ட அம்பு போல பாய்ந்தோடினான் பாவையின் தீப்பார்வையிலிருந்து தப்பிப் பிழைத்து.

தூதனின் சொல் கேட்டு சினத்தீயில் கொந்தளிக்கிறான் துரியோதனன். "அவள் வேண்டிய கேள்விகள் கேட்கலாம், சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் -- இங்கு இந்த மன்னர் சபைக்கு அவள் நெரிடவே வந்த பின்பு" என பதில் சொல்லி அவளை இழுத்துவரப் பணிக்கிறான். மீண்டும் சென்ற தூதனிடம் பாஞ்சாலி கேட்கிறாள்.

"கெளரவ வேந்தர் சபை தன்னில் - அறம் கண்டவர் யாவரும் இல்லையோ? - மன்னர்
செளரியம்* வீழ்ந்திடும் முன்னரே - அங்கு சாத்திரம் செத்துக் கிடக்குமோ? *பலம்/வீரம்

என்கிறாள் பாஞ்சாலி. மன்னர் அவைக்கு அவளைக் கொண்டு வரமுடியவில்லை என்றதும் ஆத்திரம் உச்சிக்கு ஏற துரியோதனன் தன் தம்பி துச்சாதனனை அவளிடம் அனுப்பி அவளைக் கொண்டு வா இங்கே என்கிறான். இவ்வுரை கேட்ட துச்சாதனன் அண்ணனின் இச்சையை மெச்சி எழுந்தனன்.

அங்கு போய் பாஞ்சாலியிடம் வாதிட்டுப் பேசிச் சொல்கிறான், "ஆடி விலைப்பட்ட தாதி நீ - உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன். இனி ஒன்றும் சொல்லாது என்னோடு ஏகுவாய்" என்கிறான். 'மாதவிலக்காய் ஒற்றை ஆடையில் இருக்கிறேன், தார்வேந்தர் பொற்சபைக்கு என்னை இப்படி அழைத்தல் மரபில்லை" என்று மறுக்கிறாள் பாஞ்சாலி.

மாடு நிகர்த்த துச்சாதனன் "கக் கக் கவென்றே கனைத்தே பெரு மூடன் பாஞ்சாலியின் கூந்தலைக் கையால் பற்றி கர கர என இழுத்தான். ஐயகோ என்றே அலறி உணர்வற்றுப் பாண்டவர் தம் தேவி அவள் பாதி உயிர் கொண்டு இழுத்த இழுப்பில் சென்றாள்.

அப்போது ஊரவர் தம் நிலைமையை என்னவென்று சொல்லுவது? பாவி துச்சாதனன் மெல்லிடையாள் பாஞ்சாலியின் மயிரைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியை வழிநெடுக மொய்த்த மக்கட்கூட்டம் "என்ன கொடுமை இது என்று சொல்லிக்கொண்டு பார்த்திருந்தார்கள். ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமில்லா நாய்கள். விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னை அவள் அந்தப் புரத்தினில் சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?" இது கவியின் வாக்கால் வெளிப்படும் கோபத் தீ. 

பாஞ்சாலிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு மட்டுமா மக்கள் நெடுமரங்களாய் நின்றார்கள். பாரத அன்னையை அன்னியர்க்கு அடிமையாக்கி இந்த மண்ணை மீட்க போராடிய நம்மவர்களை அவன் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கியபோதுமல்லவா நெட்டை மரங்களென நின்று புலம்பினார்கள். 

பாரத புண்ணிய பூமியில் அறிவில் சிறந்து விளங்கிய பெண் குலத்தை மொத்த அடிமைகளாக ஆக்கி இருட்டில் பூட்டி வைத்திருந்த அவலம் அரங்கேறியிருந்த போதும் வாய் மூடி மெளனிகளாய், செயலற்று நின்று வேடிக்கைப் பார்த்த கூட்டம் தானே இது.

பாரதியின் உணர்ச்சிகள் தீப்பிழம்பாய் இந்த நெட்டை நெடுமரங்கள் மீது பாய்ந்தது, பாஞ்சாலி படும் துயருக்காக மட்டுமல்ல, பாரத நாட்டு விடுதலை, பெண்களின் அடிமைத் தளை இவற்றைக் கண்டும் பொங்கிய பகுதி இது.

சூது சரியா? சூதில் பணயமென ஒரு பெண்ணை வைத்தல் சரியா? அந்தப் பெண்ணை மன்றுக்கு அழைத்து வந்து அவமானம் செய்தல் சரியா? என்றெல்லாம் பாஞ்சாலி சாடியபோது எல்லாம் அறிந்த பீஷ்மாச்சாரியார் இன்றைய தர்மப்படி அதெல்லாம் சரியே என்கிறார். பெண்ணை அடிமையென விற்கலாம். கற்றறிந்த வீட்டுமனும் இவ்வுரை சொல்ல பாஞ்சாலி மீண்டும் கொதித்து எழுகிறாள்.

"ஆடை குலைவுற்று, ஆவென்று அழுது துடிக்கும் பாஞ்சாலியை மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்கூந்தலைப் பிடித்து இழுத்ததைக் கண்டு துடிக்கிறான் வீமன். அவனுக்குக் கரை மீறி எழுந்தது வெஞ்சினம்."

அண்ணன் தருமனைப் பார்த்து "அண்ணே, யாரைப் பணயம் வைத்தாய், மாதர் குலவிளக்கை, அன்பே வாய்ந்த வடிவழகை, துருபதன் மகளை, திஷ்டத்துய்மன் உடன்பிறப்பை இருபகடை என்றாய், ஐயோ! இவர்க்கடிமை என்றாய், இது பொறுப்பதில்லை, தம்பீ, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்" என்கிறான். 

பீமனைக் காட்டிலும் அதிகம் கோபப் படவேண்டியவன் அர்ச்சுனன். வீரத்தில் குறைவில்லை. சாதிக்கக்கூடிய வல்லமை படைத்தவன். எவரையும் வெல்லும் காண்டீபம் கைக்கொண்டவன். அவன் அங்கு பீமனைப் போல் பொங்கி எழவில்லையாயினும், அவனைச் சமாதானம் செய்வித்து, தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும், வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான், கருமத்தை மேன்மேலும் காண்போம், இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம் காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்" என்று சொல்லித் தன் கைவில்லை எடுத்துக் காண்பித்துச் சொல்லுகிறான் "தனு உண்டு, காண்டீவம் அதன் பேர்" என்கிறான்.

பொங்கும் போது பொங்கி, காலம் வந்தபோது தாக்கி தருமத்தை நிலைநாட்ட விரும்புகிறான் அர்ச்சுனன்.

அப்போது தர்மம் பேசவேண்டிய தருமன் வாய் திறக்கவில்லை. தருமம் அனைத்தையும் அறிந்த வீட்டுமன் அநியாயத்துக்குத் துணை போனான். பாஞ்சாலியின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்து எழுந்த ஒரே குரல் பாண்டவர் பக்கத்தது அல்ல. துரியோதனின் தம்பி விகர்ணன் என்பான் கொடுத்த குரல்தான் அது.

அவன் சொல்கிறான், "எந்தையர் தம் மனைவியரை விற்றதுண்டோ? இதுகாறும் அரசியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ?" என்று பீஷ்மர் சொன்ன நியாயத்தை அடித்து நொறுக்குகிறான்.

விலைமாதர்க்கு விதித்த பிற்கால நீதிக்காரர் சொந்தமென சாத்திரத்தில் புகுத்திவிட்டால் அதனை தர்மம் என்று பேச வந்த பீஷ்மர் மீது விகர்ணனுக்கு அத்தனை ஆத்திரம்.

அநியாயம் கோலோச்சும் அவையில் நியாயத்தின் குரல் எடுபடுமா? விகர்ணனை அதட்டியே உட்கார வைத்தனர் அநியாயக் காரர்கள். கர்ணன் ஏசுகிறான் விகர்ணனை. "நீ விரகிலாய் (விவேகமில்லாதவன்) புலனும் (அறிவும்) இலாய்" என்கிறான்.

பாண்டவர் தம் மேலாடைகளை கழற்றிப் போட்டனர். அடிமைகளுக்கு மார்பில் துணி எதற்கு என்பது கர்ணனின் வாதம். துச்சாதனன் எழுந்தான் அன்னையின் துகிலினை மன்றில் உரிதலுற்றான். பாஞ்சாலி எவ்வழி உய்வோம் என்று தியங்கினாள் இணைக்கை கோர்த்தாள்.

விதுரன் "அச்சோ தேவர்களே" என்று மயங்கிச் சாய்ந்தான். அந்தப் பேயன் துச்சாதனன் துகிலினில் கை வைத்த போது அன்னை உட்ஜோதியில் கலந்தாள், உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்றாள்.

ஹரி, ஹரி ஹரி என்று வாய் கதற, கண்ணா! அபயம் அபயம் உனக்கு அபயம் என்றலறினாள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

பொய்யர்களுக்கு வரும் அடுக்கடுக்கான துன்பங்களைப் போலவும், புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் புகழினைப் போலவும், தையலார்க்கெல்லாம் இருக்கும் கருணையைப் போலவும், கடலில் சலசலத்திடும் அலைகளைப் போலவும், பெண்மையைப் போற்றுவாரிடம் சேரும் செல்வத்தைப் போலவும், கண்ணனின் அருளால் தம்பி கழற்றிடக் கழற்றிட வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன பொற் சேலைகள். அன்னையின் மானம் காப்பாற்றப்பட்டது.

தேவர்கள் பூச்சொரிந்தார். ஓம், ஜய ஜய பாரத சக்தி என்றே! பீஷ்மன் எழுந்து கை தொழுதான். சாவடி மறவரெல்லாம் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று கரம் குவித்தார். அரவுயர்த்த வேந்தன் வெட்கி தலைகுனிந்தான் என்கிறார் பாரதி பாஞ்சாலியின் பெருமையை ஊருக்கு விளக்கிக் காட்டிட.

தொடர்ந்து பீமன் எழுந்து சபதம் செய்தான், 'நாய் மகனாம்' துரியோதனனின் தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன் என்றும், தம்பி சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன், அதில் ஊறும் இரத்தத்தைக் குடிப்பேன் என்றும் பயங்கரமான சபதத்தைச் செய்கிறான். 'தான்' எனும் அகந்தையாலொ, தன் வீரத்தாலோ அல்ல, தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது என்று அறிவிப்பினைச் செய்தபின், "இது சாதனை செய்க பராசக்தி!" என்ற வேண்டுதலோடு முடிக்கிறான். 

பார்த்தனும் எழுந்து உரை செய்கிறான். "இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்" என்கிறான். எப்படி இந்த சாதனை நிகழும்? அவனே சொல்கிறான். பெரும் புகழ் விஷ்ணு, எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை, கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும், காண்டீப வில்லின் மீதும் ஆணை" என்கிறான் அர்ச்சுனன். அப்போது போர்த்தொழில் விந்தைகள் காண்பாய்! ஹே! பூதலமே! என்று உலகுக்கு அறிவிப்பினைச் செய்கிறான். 

உலகோர் போற்றும் பெரும்புகழ் பாஞ்சாலியும் சபதமேற்கிறாள். "ஓம்! தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் கைகளை பீமன் பிய்த்ததும் பீச்சியடிக்கும் அவன் செந்நீரையும், அந்தப் பாழ் துரியோதனன் தொடையைப் பிளந்த ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறு நெய் குளித்த பின்பே சீவிக் குழல் முடிப்பேன்" என்கிறாள். பராசக்தியின் மீது இட்ட ஆணை அல்லவா?

ஓம் என்று உரைத்தனர் தேவர், ஓம் ஓம் என்று சொல்லி உறுமியது வானம். பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியது சுழற் காற்று என்று கதையை முடிக்கிறார் பாரதி. 

பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? 

அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா? எது எப்படியாயினும் ஒரு வரலாற்று நிகழ்வை நாம் மறந்துவிட முடியாது.








































































Monday, December 12, 2011

அமைதி


'பொன்னை விரும்பும் பூமியிலே 
என்னை விரும்பும் ஓர் உயிரே"
என்று பாடினார் கவியரசர்.

எங்கோ எட்டாத தொலைவில்
பிழைப்பு நாடி சென்று
ஊரை, உறவை, நட்பை
விட்டு விலகி நிற்கும் நமது
அன்பு புருனெய் தனுசுவின்
மனத்தின் ஏக்கம் என்ன? அவர்
பெற விரும்புவது எது? இதோ
அவரது கவிதை!

 அமைதி தரும் தாய்  நிலா

என்னுள்  ஒரு  கலக்கம்.  
எனக்குள்  ஒரு  ஏக்கம்.  
என்ன  வேண்டும்  எனக்கு?  
என்ன  குறை  எனக்கு ?
எங்கும்   தேடினேன்  கிடைக்கவில்லை. 
என்னவென்றும் தெரியவில்லை.
ஏன் இந்த கலக்கம்.
எதை தேடுது என் உள்ளம்
?


ஆனால்
 நள்ளிரவில்...
நீந்திவரும்  நிலவை பார்கையில் ஓர்  அமைதி! .
அதன் பேரொளி படுகையில் பேரமைதி!!. 
என் உணர்வும் திரும்புகிறது. 
என் தேடலும் தெரிகிறது. 
அது 
அமைதி எனவும் புரிகிறது

 வெளிச்சம்  போட்ட  .
வி
ண்வெளி  விளக்கே  
விடையும் கொடுத்தாய் எனக்கே .

நான் தேடும் அமைதியை     
எனை
த் தேடி வந்து தரும்
வெண்ணிலவே 
நீ  என்  தாயே !   
                               - தனுசு -

Friday, December 9, 2011

சிறுகதை.
லஞ்சமா வேணும்? இந்தா நல்ல பாம்பு!!
எழுதியவர்: கருக்காபட்டி கருப்புச்சாமி

லஞ்சம்னு சொன்னா பிறந்த புள்ளைக்குக்கூட தெரியுமே! அத்தனை விளம்பரம். 

காலைல பத்திரிகையை பிரிச்சி எழுத்துக்கூட்டி படிக்கும் பள்ளிக்கூட புள்ளை அவன் அம்மாகிட்ட கேக்கறான், 'ஆத்தா! லஞ்சம்னா என்ன?'. 

'லஞ்சம்னா ஒழுங்கா வாங்கற கூலிக்கு செய்ய வேண்டிய வேலைங்களுக்கு நம்ம போல ஏழைங்க கிட்டே கூட கை நீட்டி அநியாயமா அதிகாரப் பிச்சை கேக்கறத்துக்குப் பேருதாண்டா லஞ்சம்' என்கிறாள் அந்த அம்மா. 

'லஞ்சம் யாரும்மா வாங்குவாங்க?' என்கிறான் அந்த கிராமத்துப் பையன். 

அம்மாக்காரிக்குக் கோபம் வருகிறது. 'தனக்குனு இருக்கறவ போறாதுன்னு அடுத்தவள சாடையா பாக்கறாங்களே பொறம்போக்கு பசங்க, அவங்க மாதிரிதான் வாங்கற சம்பளம் தவிர இதைப் போல கை நீட்டி ஏழை பாழைங்ககிட்டே கூட அடாவடியா வாங்கற பணத்துக்குத்தான் பேரு லஞ்சம்' என்கிறாள் அவள். 

"அப்படீன்னா, இவன் பொண்டாட்டியையும் மத்தவங்கள்ளாம் கூட அப்படித்தானேம்மா பாத்து ஜொள்ளு விடுவாங்க?"

"அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்காத கபோதிங்கதாண்டா தம்பி இதைப் போல லஞ்சம் கேட்டுப் புடுங்கித் திங்கற பசங்க"

'ஏம்மா! பஸ் ஸ்டாண்டிலே பஸ் ஏறறவன் கிட்டே பாக்கெட்ல கைவிட்டு பர்சை எடுக்கறானே பிக்பாக்கெட், அவனைப் போலங்கிறியா?'

'இல்லடா, அவனைவிட கேவலமானவன்டா இவன். அவனாவது மாட்டிக்கிட்டா தர்ம ஒதை வாங்கறான். இவன் நாற்காலில ஒக்காந்துகிட்டு அதிகாரமா பணத்தைக் கொண்டா, இல்லன்னா வேலை நடக்காது போடாம்பான்' என்கிறாள் தாய்.

இப்படியொரு விவாதம் நடப்பது சாதாரண ஏழை குடிசையில். அங்கு வாழற ஏழைங்கதான் அடிக்கடி ஏதாவது காரியம் ஆவணும்னா கவர்மெண்டு ஆபீஸ் அது இதுன்னு அலையராங்க. அவுங்க வேலைக்குப் போனாத்தான் கூலி. ஆனா, அந்த வேலையை வுட்டுட்டு தினம் தினம் ராஜாங்க ஆபீசிலே போயி நின்னு வேணுங்கற வேலைக்கு மனுப்போட்டா, அலட்சியமா, போயிட்டு வான்னு விரட்டி விடுவாங்க. கிட்டி முட்டி ஏதாவது பெரிய மனுசங்க யாரையாவது சிபாரிசுக்குக் கூட்டிட்டு போனோ, எங்களை கவனிக்காம எப்படிங்க? என்று சாடைகாட்டிப் பேசுவாங்க. என்ன செய்யறது?

நம்ம ஊர்லதான் இப்பிடின்னு நெனைக்காதீங்க. உத்தரப் பிரதேசம் இருக்குல்ல. வடக்க, பெரிய மானிலங்கறாங்களே, அங்க. பஸ்தர்ங்கற பகுதி. அது ரொம்ப பின் தங்கிய பகுதி. காட்டுவாசிங்க மலைப்பிரதேச சனங்க வாழற ஊருங்க. அங்க ஒருத்தருக்கு என்ன வேலைன்னா, எங்கயாவது பாம்பு வந்திடிச்சின்னா அவருக்குச் சொல்லிவிட்டா போதும். அவரு வந்து பாம்பை புடிச்சிகிட்டு போயி கூடைல அடைச்சி வச்சிடுவாறு. கொல்ல மாட்டாரு. அவரு குடிசை முழுதும் ஒரே பாம்புக் கூடையா போச்சு. என்ன செய்வாரு? வேற வழியில்ல. கொஞ்சம் நிலம் கெடச்சா அதில ஒரு கொட்டகை போட்டு பாம்பு கூடைங்களை வச்சுடலாம்னு முடிவு பண்ணாரு. உடனே அவரு அரசாங்கத்துக்கு ஒரு மனு போட்டாரு.

ஒண்ணும் பிரயோசனமில்ல. டில்லி ராஜாங்கத்துக்கு எழுதினாரு. கெணத்துல போட்ட கல்லுதான். இப்பதான் எங்க பாத்தாலும் சனங்க ஆட்சி, சனாதிபதின்னா சனங்க தேர்வு செஞ்சு அனுப்பின பெரிய தலைவரு அப்படீங்க்கறாங்களேன்னு அவுகளுக்கு ஒரு கடிதாசி தட்டி வுட்டாரு. அவுரு என்ன நெனைச்சுக்கிட்டிருக்காருன்னா பெரிய தலைவரு சனாதிபதி உடனே, நம்ம சனங்கள்ளே ஒருத்தனுக்குக் கொஞ்சமா எடம் வேணுமாம், தந்துட்டா அவன் மத்தவங்களுக்கு ஒதவியா பாம்பை புடிச்சிகிட்டு இருந்துடுவான்னு அந்த ஊரு ஆபீசுக்கு உத்தரவு போட்டிருவாருன்னு நம்பிகிட்டு தினம் அந்த ஆபீசுக்குப் போயி நிப்பான்.

இவனைப் பாத்ததுமே அவுக அல்லாம் சிரிப்பாங்க. போடா பொசைகெட்ட பயலே. கொடுக்கறதை கொடுத்தா நெலம் என்னடா, என்ன வேணா கிடைக்கும்டா, பணத்தை எடுத்து வீசாம சுளுவா நெலம் மட்டும் கிடைக்குனு பாக்கறியே, எங்களை என்னடா நெனச்சே. மாங்கா மடையங்களா இங்கே அதிகாரிங்களா குந்திக்கினு இருக்கோம். போடா பணம் கொண்டா, நிலம் தரோம் என்றார்கள்.

இவன் நம்மைப் போல நெளிவு சுளிவு தெரிந்த நகரத்து வாசியா என்ன? காரியம் ஆகணும்னா இதெல்லாம் ஜகஜம்னு கொடுத்துட்டு வரதுக்கு. அடம் புடிச்சான். இல்ல இல்ல, எங்க சனாதிபதிகிட்டேந்து நிச்சயம் உத்தரவு வரும்னு காத்து காத்து வயசுதான் ஏறிப்போச்சு. பாத்துப் பாத்து அலுத்துப் போயி ஒரு நாள் என்ன செஞ்சான். பாம்புப் பெட்டியெல்லாத்தையும் எடுத்துக்கிட்டான். கூட தொணைக்கு ஒருத்தனைக் கூட்டிக்கிட்டான். நேரே அந்த ஆபீசுக்குப் போனான். அவுங்க கிட்டே போயி நின்னான். அவுங்களும் வழக்கம் போல சிரிச்சாங்க.

'வாடாலே! வந்தியா? பணம் கொணந்திருக்கியா, இல்லாட்டி வந்த வழியப் பாத்து போயிட்டேயிரு!' இன்னாங்க.

'சனாதிபதி உத்தரவு எதுவும் அனுப்பலீங்களான்னு கேட்டான். ஹி ஹி ஹி ன்னு சிரிச்சாங்க.'

பார்த்தான் நம்ம ஹீரோ. பரம ஏழைக்கு இழக்க என்னா இருக்கு? மேலே ஆகாயம், கீழே பூமி. வந்தா மலை, போனா மசிரு. எடுத்தான் பாம்புப் பெட்டிங்களை. திறந்து அத்தனை பாம்புங்களையும் அபீசுக்குள் விட்டான். அதுங்க வளைஞ்சு நெளிஞ்சு உள்ளே ஓடிச்சுங்களா, அவ்வளவுதான், நாக்காலில ஒக்காந்துகிட்டு டீ குடிச்சுகினு இருந்தவங்க, வெத்திலை பாக்கு போட்டுகிட்டிருந்தவனுங்க, அரட்டை அடிச்சுகிட்டிருந்தவனுங்க அத்தனை பேரும், ஆ, ஊன்னு கத்திகிட்டு மேசை மேல ஏறி நின்னுகிட்டாங்க. ஆபீசே அலறி உதற ஆரம்பிடிச்சு.

நம்ம ஹீரோ ஹக்குல் என்கிற ஆள் என்ன செஞ்சான் தெரியுமில்ல. அவன் பாட்டுக்கு போங்கடா போக்கத்தவங்களா, நீங்களாச்சு, பாம்புங்களாச்சுன்னு ஊருக்குக் கிளம்பிட்டான். ஆபீசருங்க காட்டுலாகாவுக்கு போன் போட்டு சொல்லி, அவுங்க வந்து பாம்பை புடிச்ச பொறவுதான் இவுனுவளுக்கு மூச்சே வந்ததாம். அதோட இல்ல, இண்டு இடுக்கு மேசை மேல கீழேன்னு எல்லா இடத்தையும் துருவித் துருவிப் பாத்துட்டு காலை தரையிலே வைக்காம மேலே தூக்கிக்கிட்டே ஒக்காந்திருந்தாங்களாம். எப்படி இருக்கு? இந்த வைத்தியம். 

அப்பறம் அந்த ஹக்குலை கைது பண்ணி உள்ள தள்ளிட்டாங்களாம். ஆனா, லஞ்சம் கேட்டு அந்த ஏழையை அலையவிட்டவங்கள என்ன பண்ணினாங்களாம். அதை பெரிய மனுசங்க கிட்டதான் கேக்கணும், என்ன ஆச்சுன்னு தெரியல இல்லன்னா அண்ணா ஹசாரேன்னு ஒருத்தர் ஏதோ போராடறாத சொல்றாங்களே, அவுருகிட்டதான் கேக்கணும்.

Thursday, December 8, 2011

புதுக்கோட்டை


பப்ளிக் ஆபீஸ் கட்டடங்கள்

                                           புதுக்கோட்டை

தமிழகத்தில் இருந்த சமஸ்தானங்களில் முக்கியமான சமஸ்தானங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் இருந்த இங்கு எல்லா வளங்களும் நிரம்பியிருந்தன. சேஷையா சாஸ்திரி எனும் திவான் வடிவமைத்த நகர் அமைப்பும், நீர் நிலைகளும் மிக மேலானவைகளாகப் போற்றப்பட்டவை. நகரின் நடுவில் அரண்மனை, சுற்றிலும் ராஜவீதிகள், ஒவ்வொரு ராஜவீதிக்குப் பின்னர் வரிசையாக மற்ற வீதிகள், ஆங்காங்கே குளங்கள், ஒரு குளம் நிரம்பியதும் நீர் அடுத்த குளம் செல்வதும், பின்னர் ஒவ்வொன்றும் நிரம்பியபின் புதுக்குளம் நிரம்புவதும், அக்குள நீர் குடி நீராகப் பயன்படுவதும் இவ்வூரின் அழகு.

இந்த அருமையான புதுக்கோட்டையைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோமே!  புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது. இங்கே மிகப் பழமையான கல்வெட்டுக்களும், சமணர்களின் குகைப் படுக்கைகளும், கிராமதேவதைகளுக்கான புகழ்பெற்ற ஆலயங்களும், தமிழர் பண்டிகைகளாகச் சித்திரை முதல் நாளும் கொண்டாடப் பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட திருமெய்யம் எனும் ஊர் வரலாற்றுப் பெருமை உடைய ஊர். பாண்டியர்கள் ஆண்ட காலத்தில் இவ்வூர் ஒல்லையூர் என புகழுடன் விளங்கியதாகத் தெரிகிறது. பல புலவர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள கருக்காக்குறிச்சி எனுமிடத்தில் கிடைத்த 500 ரோமானிய பொற்காசுகள் இந்த நாடு ரோமானியர்களுடன் வைத்திருந்த வியாபாரத் தொடர்பு பற்றி தெரியவருகிறது. மீமிசல், தொண்டி துறைமுகங்கள் வியாபார முகத்துவாரங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. இந்த மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, திருக்கோகர்ணம், சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். இங்கு ஓடும் வெள்ளாறு சோழ நாட்டின் தென் எல்லையாகவும், பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் விளங்கியிருக்கிறது.  வரலாற்றில் போரில் ஈடுபட்டிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் அகப்பட்ட நாடாக இந்த புதுக்கோட்டை பகுதி விளங்கியிருக்கிறது.
                                                                     Thirumayam
தமிழக மன்னர் பரம்பரையினரான முத்தரையர்களும், கொடும்பாளூர் வேளிர்களும் தலை சிறந்தவர்கள். அவர்கள் ஆண்ட பகுதியும் இதுதான். இங்குள்ள சித்தன்னவாசலில் பல்லவ மன்னர்கள் கால கல்வெட்டுகளும், குடுமியான்மலையில் கோச்சடையன் ரணதீரன் என்கிற சடையன் மாறன் காலத்திய கல்வெட்டுகளையும் காணலாம். பல்லவன் ராஜசிம்ஹன் காலத்தில் கொடும்பாளூரில் பல போர்கள் நடந்திருக்கின்றன. திருக்கோகர்ணம், நீர்ப்பழனி ஆகிய இடங்களிலும் பல வரலாற்றுக் கல்வெட்டுகள் இருக்கின்றன. சமண மதம் இந்தப் பகுதிகளில் 11ஆம் நூற்றாண்டு வரை கொடிகட்டிப் பறந்திருக்கிறது. பல சமண தீர்த்தங்கரர் ஆலயங்களும், கல்வெட்டுகளும் காணப் படுகின்றன. பெளத்த மதத்தின் தாக்கமும் இங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கோட்டைப்பட்டணத்தில் காணலாம். கடைச்சோழர்கள் எனப்பட்ட விஜயாலயன் சந்ததியினரின் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிகள் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆனால் இந்த சோழ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜாதிராஜனின் காலத்தில் சோழர்கள் ஆட்சி மங்கத் தொடங்கியது. சோழர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்களின் கை ஓங்கியிருந்தது. அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனாக இருந்த மாலிக்காபூர் என்பவன் தென்னகத்துக்குப் படையெடுத்து வந்தானல்லவா? அப்போது இந்தப் பகுதிகளை அவன் கபளீகரம் செய்து மதுரையில் சுல்தான் ஆட்சியைக் கொண்டு வந்தான். ராங்கியம், பனையூர் ஆகியவிடங்களில் இதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
டில்லி அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின் சிறிது காலம் சுமார் 75 ஆண்டுகள் தென்னகம் முஸ்லீம் ஆட்சியில் இருந்த போது புதுக்கோட்டை பகுதிகளும் தப்பவில்லை. ராஜ்யம் சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதறுண்டு போயிற்று. அதன் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யம் தோன்றியதும் மதுரை முதலான தென்னகப் பகுதிகள் நாயக்கர் வம்சத்தாரின் ஆட்சிக்குள் வந்தது. ஹம்பி விஜய நகரத்தில் தோன்றிய சாம்ராஜ்யம் இங்கெல்லாம் ஆட்சி புரிந்ததற்கான சின்னங்கள் இப்போதும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதே புதுக்கோட்டை பகுதிகள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் வம்ச ஆட்சியின் கீழ் சிறிது காலம் வந்தது. 17ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்கள் ஆட்சி புதுக்கோட்டையில் தொடங்கியது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் அரசர்கள் மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்து வந்தார்கள். தொடர்ந்து இவர்கள் ஆட்சி நடந்த காலத்தில் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து மராத்தியர் ஆட்சி வந்தது. பின்னர் 1885இல் கடைசி மராத்திய மன்னன் இரண்டாம் சிவாஜிக்குப் பிறகு டல்ஹவுசியின் நாடு அபகரிக்கும் திட்டத்தின்படி தஞ்சை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நேரடியாக வந்து சேர்ந்தது. ஆனால் புதுக்கோட்டை சுதந்திரத்துக்குப் பின் டில்லி சென்று மன்னர் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலிடம் சென்று இந்த ராஜ்யத்தை இந்திய குடியரசோடு இணைக்க ஒப்புதல் அளித்துவிட்டு வந்தார்.
மகாராஜாவின் அரசவைக் கூட்டம்
                                                   
புதுக்கோட்டை தொண்டைமான்களின் பூர்வீகம் வடக்கே தொண்டைமண்டலத்தில் இருந்த திருப்பதி பகுதியாகும். விஜய நகர சாம்ராஜ்யத்தின் படைகளுடன் தெற்கே படையெடுத்து வந்த இந்த வீரர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த கறம்பக்குடி எனும் பகுதியிலும் அம்புக்கோயில் எனும் பகுதியிலும் குடியேறினார்கள். பின்னர் அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

இப்படியொரு மாற்றங்கள் தென் தமிழகத்தில் ஏற்பட்ட காலத்தில் இவர்கள் புதுக்கோட்டை பகுதியின் ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். தெலுங்கில் காணப்படும் "தொண்டைமான் வம்சாவளி" எனும் கவிதைத் தொகுதியில் இவர்கள் இந்திர வம்சத்தார் என்று குறிப்பிடுவதோடு, இவர்களில் முதல் மன்னன் பச்சை தொண்டைமான் என்றும் தெரிகிறது.

ஆவடிராய தொண்டைமான் என்பவர் அடுத்ததாகப் பதவிக்கு வந்திருக்கிறார். அப்போது விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன்  இந்தத் தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவாகியது. விஜய நகர ராயர்களுடனான தொடர்பால் தொண்டைமான் மன்னர்களும் தங்கள் பெயரோடு ராய எனும் சொல்லை ஏற்றுக் கொண்டனர்.
விக்டோரியா மகாராணியார் நினைவு வளைவு

ரகுனாத ராய தொண்டைமான் எனும் புதுக்கோட்டை மன்னன் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுடனும், திருச்சியை ஆண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் என்பவருடனும் நட்பு பூண்டிருந்தார். திருச்சி ராஜ்யத்தின் காவலராகவும் இந்தத் தொண்டைமான் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அப்போது இராம நாதபுரத்தை ஆண்ட மறவர் மன்னர் விஜய ரகு நாத கிழவன் சேதுபதி (1673 முதல் 1710) இவர்களுக்கு நெருக்கமாக ஆனார். இவரைக் கிழவன் சேதுபதி என்றே அழைப்பர். வரலாற்றில் புகழ்மிக்க இடத்தைப் பிடித்துவிட்டவர் இந்தக் கிழவன் சேதுபதி. இவருக்கு அனேகம் மனைவியர். அப்படி இவருக்கு வாய்த்த ஒரு இளம் மனைவி காதலி நாச்சியார் என்பவர். இவர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் சகோதரி ஆவார்.

கிழவன் சேதுபதி தொண்டைமானின் சகோதரி காதலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வெள்ளாற்றுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதிகளை தொண்டைமான் வசம் கொடுத்தார் கிழவன் சேதுபதி. அந்தப் பகுதியைத் தான் விரிவுபடுத்தப்பட்ட புதுக்கோட்டை ராஜ்யமாக ஏற்றுக்கொண்டு தொண்டைமான் ஆட்சி நடைபெற்றது. சேதுபதிகளின் வரலாறும் தொண்டைமான் ஆட்சியும் எனும் வரலாற்று ஏடுகள் இந்தத் தகவல்களையெல்லாம் கொடுக்கின்றன. வெள்ளாறு வரலாற்றில் பதிய காரணமாக இருந்தது தொண்டமானின் ஆட்சிக்கு எல்லைக்கோடாக இந்த ஆறு அமைந்த காரணத்தால்தான் என்பதையும் அறிய முடிகிறது. சோழ நாட்டின் எல்லை குறித்த ஒரு தமிழ்ப் பாடலும் இந்த ஆற்றை சோழ மண்டலத்தின் தெற்கெல்லையாகக் குறிப்பிடுவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். ரகுநாதராய தொண்டைமான் இப்படித் தன்னுடைய ராஜ்யத்தை விஸ்தரித்த காலமான 1686 முதல் அவர் ஆட்சி முடிந்த 1730 வரையில் மிக மகோன்னதமான நிலையில் இந்த ராஜ்யம் இருந்திருக்கிறது.
சித்தன்ன வாசல் குகை

தொண்டைமான் ஆட்சிக்குப் புகழ் சேர்த்து ராஜ்யத்தை விரிவு படுத்திய ரகுநாத ராய தொண்டைமானின் காலத்தில் அவருடைய சகோதரர் நமன தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த குளத்தூர் எனும் பகுதிக்குத் தலைவர் ஆனார். இவருக்கு திருச்சிராப்பள்ளியை ஆண்ட நாயக்க மன்னரான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் ஆசி கிடைத்தது. இவர் காலத்திலிருந்து குளத்தூர் தனி ராஜ்யமாக விளங்கி இங்கு ஆட்சி புரிந்தவர் குளத்தூர் தொண்டைமான் எனவும் அழைக்கப்பட்டார். இந்த நிலை 1750 வரை நீடித்தது. ஏனென்றால் 1750இல் இந்த குளத்தூர் பகுதி புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ரகு நாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடி, திருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார். இந்த ஒருங்கிணைந்த பகுதிதான் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் எனப் புகழுடன் விளங்கியது.
சித்தன்னவாசல் ஓவியங்கள்

தொண்டைமான் வம்சத்தில் இரண்டாவது மன்னராக விளங்கிய (1730 முதல் 1769) விஜய ரகுனாத ராய தொண்டைமான் காலம் மிகவும் சிறந்த காலகட்டமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டையை இவர் ஆண்ட காலத்தில் வடக்கே டில்லி முகலாயர்களின் ஆட்சி இந்திய நாடு முழுவதும் விஸ்தரித்திருந்தது. தெற்கே ஆண்டுவந்த நாயக்கர் மன்னர்களான செஞ்சி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய அரசர்கள் முகலாய சாம்ராஜ்யத்துக்கு ஆற்காட்டு நவாப், நிஜாம் ஆகியோர் மூலமாக கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆகினர். இவர்கள் தவிர தெற்கே இருந்த சின்னஞ்சிறு பாளையக்காரர்களும் ஆற்காட்டு நவாப் மூலம் முகலாய மன்னர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக ஆகினர். டில்லி முகலாயர்கள் நிஜாமைத் தங்களது தென்னிந்திய பிரதி நிதியாகவும், அந்த நிஜாம் ஆற்காட்டு நவாபைத் தன் பிரதி நிதியாகவும் நியமித்தனர். ஆற்காட்டாரின் ஆளுமையில் அடங்கிய பிரதேசம் தமிழ் நாட்டின் பகுதிகள்; இவை கர்னாடகப் பிரதேசம் என வழங்கப் பட்டது. அரசியலில் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டு இந்தியாவின் கடைக்கோடிப் பிரதேசத்தில் இருந்த பாளையக்காரர்கள் முதல் பெரிய சமஸ்தானாதிபதிகள் வரை அனைவரும் டில்லி பாதுஷாவுக்குக் கப்பம் கட்டும் நிலை ஏற்பட்டதும்; ஆற்காட்டு நவாப் இவர்களது எஜமானர்கள் போலத் தங்களை நியமித்துக் கொண்டு நாட்டாமை செய்ததும் ஒரு புதிய சூழ் நிலையை இங்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக தென்னக பாளையக்காரர்கள் ஆற்காட்டாருக்கு கப்பம் செலுத்த மறுத்தனர். அதன் விளைவாக ஆங்காங்கே பூசல்கள் ஏற்பட்டன. ஆற்காட்டு நவாபின் படைகள் நிஜாமினால் வலுப்படுத்தப் பட்டது. டில்லி சுல்தான் ஆதரவும், நிஜாமின் பக்க பலமும் சேர்ந்து ஆற்காட்டு நவாபின் கைகளை ஓங்கச் செய்தன. இவரும் தனது படைகளைக் கொண்டு தங்களுக்கு அடங்க மறுக்கும் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் மீது போர் தொடுக்க படையெடுப்பதுமென நாட்டின் சூழ் நிலை மாறத் தொடங்கியது. இந்த சூழ் நிலையில் பற்றி எரிந்த இலங்கைக்கு நடுவில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனம் மட்டும் எரிதழலின் கரங்கள் தீண்டப்படாமல் பசுமையாக இருந்தது போல புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் எந்தவித சேதத்துக்கும் ஆட்படாமல் தப்பி இருந்தது.
                                                               திருமெய்யம் ஆலயம்

இப்படி ஊரை அடக்கி உலையிலிடும் தண்டல்காரனாக மாறியிருந்த ஆற்காட்டு நவாப் ஆட்சிக்கு ஒரு சவால்; வெளியில் இருந்து அல்ல. உள்ளுக்குள்ளேயே பங்காளிச் சண்டை ஏற்பட்டுவிட்டது.  அதுதான் நாடறிந்த வரலாறு ஆயிற்றே! முகமது அலிக்கும் சந்தா சாகேபுக்கும் ஏற்பட்ட பூசல்தான் அது. இருவரில் யார் அரசுக்கு உரியவர் என்பதுதான் போட்டி. இதில் அன்னிய தலையீடு தங்கள் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, ஆங்கிலேயர் முகமது அலியையும், ஃபிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாஹேபையும் ஆதரிக்கத் தொடங்கினர். தத்தமது படைகளையும் இவர்களுக்குக் கொடுத்துத் தாங்களும் போரில் நேரிடையாக ஈடுபட்டனர். எங்கோ ஐரோப்பாவிலிருந்து வியாபாரம் செய்து பொருட்களை விற்க வந்தவர்கள் இங்கு நடக்கும் ஆட்சிக்காக புருஷர்கள் நடத்தும் போட்டியில் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கொண்டு காய் உருட்டலானார்கள். ஓராண்டல்ல, ஈறாண்டல்ல, பல ஆண்டுகள் தென்னகத்து மண் இவர்களுடைய போரினால், உயிர் சேதமும், உடமைகள் சேதமும், விவசாய நாசமும் ஏற்படக் காரணமாயின. இப்படி நாடு முழுவதும் போரும் அமைதியுமான மாற்றங்களில் தவித்துக் கொண்டிருந்த காலத்தில் புதுக்கோட்டை மன்னர்கள் மட்டும் பிரிட்டிஷ் பக்கத்தில் உறுதியாக நிலைகொண்டிருந்தனர்; தஞ்சை மராட்டிய மன்னர்களோ இங்கும் அங்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தனர். தமிழர் பூமியில் ஐரோப்பிய ஆதிக்க யுத்தம் இப்படி குழுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் ஃப்ரென்சு அடக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆதிக்கம் தலையெடுத்தது. இரு ஐரோப்பிய ஆதிக்கச் சக்திகளுக்கிடையே நடந்த போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை சமஸ்தானம் நடந்து கொண்டதற்குப் பரிசாக இனி புதுக்கோட்டை சமஸ்தானம் ஆற்காட்டு நவாபுக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டாம் என முடிவாகியது.
                                                   மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
                                                            ஆஸ்திரேலிய மனைவியுடன்

புதுக்கோட்டை மன்னர்கள் ஆங்கிலேயர்களைத் தீவிரமாக ஆதரிக்க மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. அப்போது புதுக்கோட்டைக்கு சவாலாக விளங்கிய மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியின் அச்சுறுத்தல் இவர்களுக்கு இருந்துவந்ததும் ஒரு காரணம். விஜயரகு நாத தொண்டைமான் (1789 முதல் 1807) ஆற்காட்டு நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் ஆதரவாக விளங்கக் காரணமாக இருந்ததும் இந்த மைசூரின் அச்சுறுத்தல்தான். ஆற்காட்டாரின் நன்றி விசுவாசம் அவர்கள் புதுக்கோட்டை மன்னருக்கு "ராஜா பஹதூர்" எனும் விருதினை வழங்கிக் கெளரவித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாமே! அப்போது காற்று ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக வீசிக் கொண்டிருந்தது. எதிர்க் குரல் கிளப்பிய பல பாளையக்காரர்கள் வீழ்த்தப் பட்டனர். எங்கும் ஆதரவுக் கரம் நீட்டப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்கள் எதிர்ப்போர் யாருமின்றி தாந்தோன்றிகளாகத் திகழ்ந்தனர். 1800ஆம் ஆண்டு வாக்கில் தென்னகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஏகோபித்த ஆட்சி நிலவத் தொடங்கிவிட்டது. தஞ்சாவூரில் துளஜேந்திர ராஜாவுக்குப் பின் சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்த போதே ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷ் ஏற்றுக் கொண்டு அவரை பொம்மை ராஜாவாகத்தான் அங்கீகரித்திருந்தார்கள். ஆனால் 1855இல் தஞ்சை ராஜ்யமும் இரண்டாம் சிவாஜிக்கு வாரிசு இல்லை என்று காரணம் காட்டி முழுமையாக எடுத்துக் கொள்ளப் பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இராம நாதபுரம் மறவர் பூமியில் ஆண்டுவந்த சேதுபதிகள் வெறும் ஜமீன் தார்களாக ஆக்கப் பட்டார்கள். ஆனால் இத்தனை புயல் அடித்தபோதும் புதுக்கோட்டையில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது ஒரு தனி ராஜ்யமாக இயங்க அனுமதிக்கப் பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குட்பட்டதாகக்கூட கருதப் படவில்லை. தனி சமஸ்தான அந்தஸ்து புதுக்கோட்டைக்கு மட்டும் கிடைத்தது.
புதுக்கோட்டையின் புகழ்பெற்ற அம்மன் காசு

இந்த விஜயரகு நாத தொண்டைமான் காலத்தில்தான் தெற்கே பல பாளையக்காரர்களுடன் வெள்ளையர்களுக்கு மோதல் ஏற்பட்டது; குறிப்பாக பாஞ்சாலங்குறிஞ்சி கட்டபொம்மு நாயக்கர் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல். எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் இந்த மண்ணின் மைந்தன் கப்பம் கட்டவில்லை என்பதற்காக அந்தச் சின்னஞ்சிறு பாளையக்காரர் மீது கோட்டையை முற்றுகையிட்டுப் போரிட்டனர். அந்த வீரம் செறிந்த பாளையக்காரர் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். மீண்டும் அவர் தொண்டைமானின் ஆளுகைக்குட்பட்ட கானகப் பாதை வழியாகச் சிவகங்கை செல்ல முயன்றார். ஆங்கில ஆதிக்கத்தினர் விடுத்த வேண்டுகோளின்படி கட்டபொம்மு நாயக்கர் திருமெய்யம் அருகே தொண்டைமான் படை வீரர்களால் பிடிக்கப்பட்டு மதுரையில் இருந்த ஆங்கில கம்பெனியார் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் விசாரணை என்ற பெயரால் ஒரு நாடகம் நடத்தப்பட்டு அந்த வீரன் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார். அந்த மாவீரனின் மரணம் இந்திய சுதந்திர ஆர்வம் கொண்டவர்களால் பின்னர் போற்றிப் பாராட்டப்பட்டது. அவனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
திருமெய்யம் குகைக் கோயில்
பின்புலத்தில் கோட்டை

கட்டபொம்மு நாயக்கரைக் கைது செய்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைத்த நிகழ்ச்சியானது தொண்டைமானுக்கு வரலாற்றில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்த செயலை தேசபக்தியற்ற செயலாகவும், துரோகமாகவும் சித்தரிக்கத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு பக்கமும் உண்டு. பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி ஓடிவந்த கட்டபொம்மு நாயக்கர் சிவகங்கை மருதுவிடம் செல்லத்தான் வந்தார்; செல்லும் வழியில்  தொண்டைமானின் பிரதேசத்தின் காட்டு வழிப் பாதையைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் தொண்டைமானிடம் அடைக்கலம் என்று வந்து சேரவில்லை. நம்பி வந்தவனைப் பிடித்துக் கொடுத்தால்தான் அது நம்பிக்கைத் துரோகம்; ஆனால் தன்னிடம் அடைக்கலம் என்று வராத நிலையில் தன் ராஜ்யத்தின் எல்லையில் தங்களது நண்பர்களான பிரிட்டிஷாருக்கு எதிரானவர் வந்தபோது அவரைப் பிடித்துக் கொடுப்பது ராஜத் துரோகமோ, காட்டிக் கொடுத்தலோ அல்ல என்றும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. அவரவர்களுடைய நிலைக்குத் தகுந்ததுபோலத்தான் இந்த நிகழ்ச்சியை எடைபோடவேண்டுமே தவிர இன்றைய தேசிய எழுச்சியையும், பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வையே எடைக்கல்லாகக் கொண்டும் பார்க்கும்போது இது ஒரு துரோகமாகப் பட்டாலும், அன்றைய நிலையில் பிரிட்டிஷாருக்கும் புதுக்கோட்டை மன்னர்களுக்கும் இருந்த உறவில், முன்னவர்களுக்கு எதிர்களானவர்களைப் பிடித்துக் கொடுத்தால் துரோகமல்ல என்பதும் அன்றைய சூழலில் புதுக்கோட்டையின் பார்வையில் பார்ப்பவர்களுக்குத் தெரிவதில் வியப்பு ஒன்றும் இல்லை.
திருக்கோகர்ணம் அருங்காட்சியகம்

அடுத்த மன்னர் ராஜா விஜயரகுனாத ராய தொண்டைமான் (1807 முதல் 1825) பதவிக்கு வந்தபோது பதினெட்டு வயது பூர்த்தியாகததால் பிரிட்டிஷ் அரசாங்கம் அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதற்கென்று மேஜர் பிளாக் பர்ன் என்பவரை நியமித்தனர். இவர் ஏற்கனவே தஞ்சாவூரில் 'ரெசிடெண்ட்' எனும் பதவியில் இருந்த காரணத்தால் அங்கு அமலாகியிருந்த நிர்வாக வழிமுறைகளை இங்கும் கொண்டு வந்து நடத்தினார். அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மன்னர்களின் மொழியான மராத்தி மொழியை புதுக்கோட்டையிலும் கொண்டு வந்து நிர்வாக மொழியாக சுமார் 75 ஆண்டுகள் வரை இருக்க வழி செய்துவிட்டார். தஞ்சையில் கையாண்ட அதே நில அளவை முறைகள், நிலவரி விதிப்பு போன்றவைகளையும் அவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அமல் செய்தார். தொண்டைமான் மன்னர்கள் நகரத்தின் மத்தியில் சாந்தாரம்மன் ஆலயத்தையொட்டி அமைந்திருந்த அரண்மனையில் வாழ்ந்திருந்தார்கள். அது பழமையானதால் புதிதாக அரண்மனையொன்றை கட்டினார். நிர்வாகத் திறமை, நகரமைப்பில் அழகு இவைகளையெல்லாம் கொண்டு புதுக்கோட்டை மிக எழில் கொஞ்சும் நகரமாக விளங்கத் தொடங்கியது. நாங்கு ராஜ வீதிகள், அவற்றுக்குப் பின்னால் வரிசையில் பல அடுக்கு அடுக்கானத் தெருக்கள். இவற்றை இணைக்கும் குறுக்குச் சாலைகள், ஆங்காங்கே நீர் நிலைகள், குடி நீர்த்தேக்கங்கள் என்று நகரம் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. ஐயன்குளம், பல்லவன் குளம், ராஜா குளம் என்றெல்லாம் பெயர்களில் ஊர் முழுவதும் ஏராளமான நீர் நிலைகள் பசுமையூட்டப் பயன்பட்டன.

இவருக்குப் பின்னர் வந்த ரகுநாத தொண்டைமானுக்கு (1825 முதல் 1839) ஆங்கில ஆதிக்க அதிகாரிகளை அழைப்பது போன்று "ஹிஸ் எக்செலன்சி" என்று விருதினை ஆங்கில அரசு கொடுத்து கெளரவித்தது. 1830இல் இவர் காவிரி நதியிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குக் குடி நீர் கொண்டு வர ஏற்பாடுகளைத் தொடங்கினார். அதற்காக ஒரு புதிய வாய்க்கால் வெட்டவும் ஏற்பாடுகளைச் செய்தார்; ஆனால் அது அப்போது நிதி நெருக்கடி காரணமாக நிறைவேறவில்லை. இவருக்குப் பின் இராமச்சந்திர தொண்டைமான் பதவிக்கு வந்தார். அவரது காலம் (1839 முதல் 1886).

இந்த இராமச்சந்திர தொண்டைமானுடைய ஆட்சி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை என்பது தெரிகிறது. சரியான ஆட்சிமுறை, நிதி நிர்வாகம் போன்ற நல்ல ஆட்சிக்குரிய அம்சங்கள் குறைந்து காணப்பட்டன. திவான் சேஷையா சாஸ்திரி என்பவர் 1878இல் பதவியேற்றுக் கொண்டார். அவருடைய வருகைக்குப் பிறகு பற்பல முன்னேற்ற நடவடிக்கைகள் நடைபெறலாயின. இவருடைய காலத்தில்தான் புதுக்கோட்டை நகரம் புது வடிவம் பெற்றது. நேர் நேரான சாலைகள், குளங்கள், அந்தக் குளங்களுக்கு நீர் வரும் வசதியான பாதைகள், துளி நீர்கூட வீணாகாமல் சேமிக்கும் அருமையான அமைப்புகள் என்று புதுக்கோட்டை புதுவடிவம் பெற்றது. இன்றை நகரமைப்புத் திட்டங்களை அன்றே மிக அருமைகாகத் திறமையாகக் கொணர்ந்தவர் சேஷையா சாஸ்திரி. அரசாங்க அலுவலகங்களுக்காக ஒரு புதிய செந்நிற செங்கல் நிற கட்டடம் இவர் காலத்தில் எழுப்பப்பட்டது. நாட்டில் மழையின்று வறுமை தாண்டவமாடிய சமயத்தில் விவசாயிகளுக்கு வேலை கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் விதமாக புதுக்குளம் எனும் குடி நீர் குளத்தை உருவாக்கியவர் சேஷையா சாஸ்திரி. ராமச்சந்திர தொண்டைமான் பற்பல பழமை வாய்ந்த ஆலயங்களைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்வித்தார். நிர்வாகத் திறமையின்மை வெளிப்பட்ட ஆரம்ப நிலை மாறி, இவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில் மிகவும் பயனுள்ள பல திட்டங்களை நிர்மாணித்த பெருமையோடு முடிவடைந்தது. இவற்றுக்கெல்லாம் சேஷையா சாஸ்திரியின் அனுபவமும், திறமையும் கைகொடுத்தது என்பது மிகையல்ல.
ராஜாங்க சின்னம்

இவரையடுத்து மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886 முதல் 1928) பதவிக்கு வந்தார். இவர் வந்த காலம் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்க்களைக் கண்ட காலம். விக்டோரியா மகாராணியார் கம்பெனி ஆட்சியை நீக்கிவிட்டு  இங்கிலாந்து மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்திருந்த காலம். மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவி ஏற்றபோது அவருக்கு வயது 11.  ஆட்சி நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேற்பார்வையோடு ஒரு நிர்வாகக் குழு கவனித்து வந்தது.

இவர் ஐரோப்பிய யாத்திரை சென்று அயல் நாடுகளை விரிவாகக் கண்டு ஆராய்ந்து வந்தவர். இவர் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணான மேரி எஸ்மி சோரெட் ஃபிங்க் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவ்வளவு நீளமான பெயரை சுருக்கி மோலி என்று அழைத்தார்கள். இந்தத் திருமணம் 1915இல் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அந்த மகன் பெயர் என்ன தெரியுமா சிட்னி மார்த்தாண்டன். நம் மன்னருக்கும் ஒரு அயல் நாட்டு மாதுவுக்கும் பிறந்த இந்த சிட்னி மார்த்தாண்டன் பதவிக்கு வருவதற்கு பலத்த எதிர்ப்பு மக்களிடமிருந்து ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இவருடைய இந்தத் திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது. ஆகையால் ராஜா பதவியைத் துறந்து பிரான்சில் குடியேறிவிட்டார். பிரிட்டிஷ் இளவரசர் ஒருவர் தன் காதலிக்காகப் பதவியைத் துறந்தார் அல்லவா? அதைப்போல நமது புதுக்கோட்டை இளவரசரும் பதவியைத் துறந்து பிரான்சில் குடியேறி அங்கு 1928இல் இறந்து போனார். அவர் இங்கிலாந்தில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.

புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் கடைசி ராஜாவாக, அந்த வரிசையில் ஒன்பதாவதாக ராஜா ராஜகோபால தொண்டைமான் (1928 முதல் 1948) பதவிக்கு வந்தார். இவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு அரசபதவி கிடைத்த பொது இவரது வயது 6. இவர் பதவியேற்ற பின் ஆட்சி நிர்வாகத்தை ஒரு நிர்வாகக் குழு கவனித்து வந்தது. அந்தக் குழுவில் இருந்த அலெக்சாண்டர் டோடென்ஹாம் என்பவர் குறிப்பிடத் தகுந்தவர். புதிய அரண்மனையின் கட்டுமான அழகு 1930இல் இவரால் எழிலூட்டப்பட்டது. கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த அழகு மாளிகையில்தான் இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.

1947 - இந்தியா பிரிட்டிஷாரின் அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு. புதிய இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அனைத்து சமஸ்தானாதிபதிகளுக்கும் தெரிவித்துக் கொண்டது, அவர்கள் சமஸ்தானம் இந்திய அரசாங்கத்தோடு இணைந்துவிட வேண்டுமென்பது. அதன்படி முதன் முதலாக ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் டில்லி சென்று வல்லபாய் படேலிடம் 4-3-1948 அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்தோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க இந்த இணைப்பு, எந்தவித கசப்போ, அச்சுறுத்தலோ இன்றி, மனப்பூர்வமாக நடந்தது. மகாராஜா ராஜகோபால தொண்டைமானின் இந்த தேசபக்தி மற்ற சுதேச சமஸ்தானங்களுக்கும் இருந்திருக்குமானால் பல கசப்பான நிகழ்வுகள் இந்திய வரலாற்றில் நடந்திருக்காது. இதனால்தான் புதுக்கோட்டை ராஜவம்சத்தாருக்கு இன்றுவரை மக்கள் தலை வணங்கவும், உளமாற நேசிக்கவும், அவர்களைப் போற்றி வாழ்த்தவும் காரணமாக அமைந்தது, ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்களின் பெருந்தன்மை என்றால் மிகையல்ல.வாழ்க இராஜகோபால தொண்டைமான் புகழ்!

புதுக்கோட்டை பகுதிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது அல்லவா? இது 1974 ஜனவரி 14ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டது. இதில் முன்னாள் புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகளோடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்தும் சில பகுதிகள் இணைக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியது. தற்போது புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரு ரெவின்யூ பிரிவுகள் உள்ளடக்கிய பத்து தாலுகாக்கள் குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகொட்டை, திருமெய்யம், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய பதிகள் உள்ளடக்கியதாக இருக்கிறது. 765 ரெவின்யூ கிராமங்கள் உள்ளன. 4664 சதுர கி.கீ. பரப்பளவு உள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜனத்தொகை. பருவ மழையை நம்பியுள்ள வானம் பார்த்த பூமியாகத்தான் இப்போதும் இப்பகுதிகள் இருக்கின்றன.

இவை தவிர பழைய நடிகர் பி.யு.சின்னப்பாவும், இடைக்கால காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற இசை மேதைகளும் இங்கு இருந்திருக்கின்றனர். புதுக்கோட்டை அசல் தமிழ் மண்ணின் ஒரு உதாரணப் பகுதி.