பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 29, 2015

85. சமூகம் - விசாரணை



கைதிகளை அன்புடன் நடத்தவேண்டும். அவர்களும்மனிதர்தானே? ஏன் குற்றம் செய்தார்களேன்று கோபிக்கிறாயா?  ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். ஒழுங்கானபடி யிருந்தால் செய்திருப்பார்களா? தெளிந்த புத்தியிருந்தால் நடந்திருக்குமா? நல்ல ஸஹவாஸத்திலே பழக்கப்படுத்தி யிருந்தால் இந்த நிலைக்கு இழிந்திருப்பார்களா?  ஜன சமூஹத்திலே சிலரை நாகரீக நிலைமைக்குக் கீழே அமிழ்த்து வைத்த குறை யாரைச் சேர்ந்தது? இப்போதுகூட சிறுபிள்ளைகள் குற்றம் செய்தால் கடூர தண்டனைவிதிப்பதில்லை. 'திருத்தம் கூட'த்திலே போடுகிறார்கள். அமெரிக்கா, முதலிய நாகரீக தேசங்களில், கைதிகளுக்கு நாள்தோறும் அதிக ஸௌகர்யங்களும் க்ஷமையும் இரக்கமும் காட்டி வருகிறார்கள். பழைய காலத்தில் இங்கிலாந்திலும் நமது தேசத்திலும் பெரும்பாலும் எல்லாத் தேசங்களிலும் சொற்பக் குற்றங்களுக்கெல்லாம் மிகவும் கடூர தண்டனை விதித்து வந்தார்கள். இக்காலத்தில் எந்ததேசத்திலும் அப்படி நிஷ்டூரமான தண்டனை கிடையாது. விசேஷமாக, ராஜ்ய சம்பந்தமான குற்றங்கள் செய்து சிறைப்படுவோரை இங்கிலாந்து முதலிய தேசங்களில் ஸாமான்யக் கைதிகளைப் போல் நடத்துவதில்லை. பலவிதமான குற்றங்களுக்குத் தண்டனை குறைந்து வருகிறது. மேலும் புராதன ராஜ்யங்களிலே மதத் திருத்தம், ராஜ்யத்திருத்தம் முதலியவற்றை விரும்புதல் குற்றம் என்று நீதிக்காரர் பாவித்திருக்கும் பல திருஷ்டாந்தங்கள் உண்டு. இப்போது அப்படியில்லை. பெரும்பான்மையான தேசங்களில் மேற்கண்ட திருத்தக்காரருக்கு ராஜ்ய ஸன்மானமும் உயர்ந்த பதவிகளும் கிடைக்கும்.ஆனால், இக்காலத்திலே கூட சில தேசங்களில் ராஜ்யத் திருத்தம், மதத் திருத்தம் முதலியவற்றை நீதிக்காரர், குற்றமென்று சொல்லாவிட்டாலும், சற்றே சினந்த முகத்துடன் நோக்குகிறார்கள். இப்படி நடப்போர் நீதி சாஸ்திரத்தின் ஆதார வலிமைகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை.

                                              தண்டனையின் கருத்து

குற்றஞ் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றஞ் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவேண்டும். இந்தக்கருத்துடன் தண்டனை செய்வோரையே தர்ம தேவதை க்ஷமிக்கலாம். பழிக்குப் பழி வாங்கிவிட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற அதிகாரம் மனிதனுக்கே கிடையாது. ஏழையைப் பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான். பேராசைக்காரனைக் கொஞ்சம் ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான். மூடனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்தால், இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால், உயர்ந்த பதவியிலிருப்போர் எப்பொழுதும் நியாயத்தையே செய்து காட்டினால், பிறகு களவு இராது.

பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்  என்பதை அநேக நீதிசாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார் களின்தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.

                                                                க்ஷமை

பொதுவாக அநேகரிடத்தில் ஒரு  துர்க்குணமிருக்கிறது. தான் ஒரு குற்றஞ்செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசனிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம். மனிதனுக்கு, உண்மையாகவே புத்தித் தெளிவும் யோக்யதையும் தொடங்கும் போது, பிறர் குற்றங்களை க்ஷமிக்கவேண்டுமென்ற எண்ணமுண்டாகிறது. மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான்; அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான்; அல்லது, பொய்க் காரணங்கள் சொல்லி அது குற்றமில்லை என்று ருஜூப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதை நீக்கும் வழி ஸத்ஸங்கமும் தைர்யமும். பிறர்  குற்றங்களை க்ஷமிக்கும் குணம் குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும். குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிச்சலோடிருப்பார்கள். ஒரு தொழிலைச் சேர்ந்தவர்களுக்குள்ளே பொறாமையுண்டாவது ஸஹஜந்தானே!

                                                                நீதி

நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில் வலியவனுக்கு வேறு நியாயம்; எளியவனுக்கு வேறு நியாயமாக இருந்தால், அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், கிராமம் விரைவில் அழிந்துவிடும். 

ஜனங்கள்குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக்கொள்ள வேண்டும்.நீதிக்காரர் குற்றஞ் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். நீதிக்கா ரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு; நியாயஸ்தலங்களிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி; நீதி (சட்ட) சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி; இவ்விரு திறத்தாரும் கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சேர்ந்தது.

                                                            வாக்குச் சீட்டு

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா - அநேகதேசங்களில் சட்டங்கள் செய்யும் ஸபைக்கு "ஜனஸபை" என்றுபெயரிட்டு ஸபைக்காரர் (மெம்பர்) ஒவ்வொருவரையும் பொதுஜனங்கள் வாக்குச் சீட்டுப் போட்டு நியமனம் செய்யும் வழக்கம் பலவாறாக நடை பெற்று வருகிறது.  ஜனஸபையார் நியாயமில்லாத சட்டங்கள் செய்தால், அடுத்த தடவை ஜனங்கள் தம்மைத் தள்ளி விடுவார்கள் என்ற பயம் இருக்கவேண்டும். ஜனங்களுடைய அதிகாரத்திற்குட்படாத சட்ட ஸபையார் மனம்போனபடி யெல்லாம் சட்டம் போடுவார்கள். அதிலே பல விபரீதங்கள் ஏற்படும். வாக்குச்சீட்டு (வோட்) விஷயத்தில் பலவித அனுஷ்டானங்கள் இருக்கின்றன. இங்கிலாந்திலே வாக்குச் சீட்டுப்போடும் உரிமை சிலருக்கில்லை. பிரான்ஸ் தேசத்திலே எல்லாரும் சீட்டுப்போடலாம். அமெரிக்காவிலே பல ஜில்லாக்களிலே பெண்கள் ஜனஸபைக்குச் சீட்டுப் போடுகிறார்கள். இந்த முறையை தேசமுழுமைக்கும் பொதுவாக்கி, ராஜ்யத்தில் ஆணையும் பெண்ணையும் நிகராக்கி விடவேண்டும் என்று அந்த நாட்டிலே மிஸ்டர் ஹியூஸ், மிஸ்டர் வில்ஸன் போன்ற பெரிய செல்வாக்கு உடைய தந்திரிகள் விரும்புகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அமெரிக்காவில் எல்லா நாடுகளிலும் பெண் சீட்டு வழக்கமாய் விடும் என்று தோன்றுகிறது. வாக்குச் சீட்டே புருஷ லக்ஷணமென்று மேற்கு தேசத்தார் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இப்போது பெண்ணுக்குக்கூட அந்த உரிமை இல்லாவிட்டால் இழிவுஎன்று தீர்மானம் செய்து வருகிறார்கள்.


No comments: