அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலை கொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம்
நிச்சயமாக நேரிட்டு, அண்டச் சுவர்கள் இடிந்து போய் ஜகத்தே அழிந்துவிடும் என்று சொல்லுதல்
அவர்களை அடிமைப்படுத்தி ஆள்வோருடைய ஸம்பிரதாயம்.
இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில்
தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,பெண் கல்வி தமிழ்நாட்டில்
சாதாரணமாகப் பரவியிருக்கிறது.அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடிய
மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால்,இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால், ஏழுலோகமும்
கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும் என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம்
நடுவிலேஅகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர்நடுங்குகிறார்கள்.
'மதறாஸ் மெயில்' போன்ற ஆங்கிலேயப் பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். ''ஓஹோ!ஹோ! ஹோ! இந்தியாவிற்கு சுயராஜ்யம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர் மஹாராஷ்டிரரின் கூட்டத்தை யெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும், சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளிஎலும்புகளை மலையாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சுவிடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர், கேசவப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க்கேளுங்கள். 'அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது. ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால் அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம் நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லுவார்கள்.
அதுபோலவே, பெண்களுக்கு விடுதலை கொடுத்ததனால் ஜனசமூகம் குழம்பிப் போய்விடும்
என்று சொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன் வாழ்வதை தாம் பார்க்கக்கூடாதென்று
அசூயையால் சொல்லுகிறார்களே யொழிய வேறொன்றுமில்லை. விடுதலை என்றால் என்ன அர்த்தம்? விடுதலை
கொடுத்தால் பிற ஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள்? பெண்களுக்கு விடுதலை கொடுக்க
வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? வீடுகளை விட்டு வெளியேதுரத்திவிடலாமா?
செய்யவேண்டிய விஷயமென்ன என்று பலர் சங்கிக்கலாம். இங்ஙனம் சங்கையுண்டாகும் போது விடுதலையாவது
யாது என்ற மூலத்தை விசாரிக்கும்படிநேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகுசுலபம்.
பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய
உழைப்பின்பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ''நான் ஏதுபிரியமானாலும் செய்யலாம்''
என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும் பிறருக்குத்
தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம்செய்யலாம் என்பதே விடுதலை என்று ஹெர்பர்ட்
ஸ்பென்ஸர்சொல்லுகிறார்.
இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையானஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை.
ஆனால் இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆண்மக்கள் பாடுபட்டு வருகிறார்கள்.
ஆண்மக்கள் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்கமுடியாது ஆனால், இதில்
ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக்காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள்பெண்
கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் விளைகின்றன.
அடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற்பெரும் பாலோர் - அதாவது ரஹஸ்யப்
போலீஸ் உபத்திரவத்திற்கு இடம் வைத்துக்கொண்டவர். தவிரமற்றவர்கள் - தம் இஷ்டப்படி
எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம். தனியாக சஞ்சாரம்
பண்ணக்கூடாதென்ற நியதி கிடையாது. ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும்
உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்.
'ஓஹோ! பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்ய இடங் கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம்
இடிந்து போகும். ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப்பிராயமாய் விடுவார்கள்'
என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும்,
அமெரிக்காவிலும் பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்று வைத்திருக்கிறார்கள்.
அதனால் பூகம்ப மொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர்
மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள். ''அவரைப்போலே நமதுஸ்திரீகள் இருக்கலாமே''
என்றால், நம்மவர் கூடாதென்று தான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய ஸ்திரீகளைக் காட்டிலும்
நமது ஸ்திரீகள் இயற்கையிலே நம்பத்தகாதவர்கள்என்று தாத்பர்யமா?
''மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால்" நமக்கு ஸரிப்படாது.
நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ,கேவலம் ஐரோப்பியர்'' என்று சொல்லிச்சிலர்
தலையசைக்கலாம்.
சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள் யதேச்சையாகச் சஞ்சாரம்
பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது. ஏன்?
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும்முக்கியமான - ஆரம்பப் படிகள்
எவையென்றால்:-
(1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.
(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனைவிவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல்
கூடாது.
(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க
வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது.
(4) பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத்
தடுக்கக்கூடாது.
(5) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்றால்
கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங் கொடுக்கவேண்டும்.
(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன்பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும்
பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.
(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும்
பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும்
அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம்இல்லாமல் இருக்கையிலே,
அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு
சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு
கொடுக்க வேண்டும் சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அன்னிபெஸண்டு
என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதைமறந்து போகக் கூடாது.
இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள்
தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்.
அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷிபத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள்
வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல்
மூடத்தனம். பெண் உயராவிட்டால்ஆண் உயராது.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Saturday, May 9, 2015
25. மாதர் - பெண் விடுதலை (2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment