பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 24, 2015

62. கலைகள் - பெண்ணின் பாட்டு்


                                          இதிலுள்ள வகுப்புக்கள்

                இருபாலருக்கும் பொதுவான சந்தங்கள் இருப்பதுடன், பெண்களுக்கு மாத்திரம் சிறப்பான பாட்டுக்களும் சந்தங்களும் இருக்கின்றன. பண்டைத் தமிழ் நாட்டு மாதர் பாடிக் கொண்டிருந்த  பல பாட்டு வகைகள் இப்போது வழக்கின்றி இறந்து போய்விட்டன.

               ஆனால், ஜீவன் பெண்ணென்றும், பரமாத்மா ஆணென்றும் பாவனை செய்து பழைய பக்தர் பாடியிருக்கும் பாட்டுக்களில் பெண்களுக்குரிய சில பாட்டு வகைகள் காணப்படுகின்றன.

               திருஷ்டாந்தமாக, திருவாசகத்திலே பின்வரும் வகைகள் காணலாம்.

  (1) எம்பாவை (பெண்கள் நீராடப்போவது). 
  (2) அம்மானைப் பாட்டு. 
  (3) தும்பி, குயில், கிளி முதலிய தூதுப் பாட்டுகள். 
  (4) தெள்ளேணம் (நடுவே ஒரு பெரிய முரசை  வைத்துக்கொண்டு, பெண்கள் சுற்றியிருந்து             இரண்டு  கைகளிலும் கோல் கொண்டுகொட்டி அந்தத் தாளத்திற்கு இசையப் பாடுதல்.) 
  (5) சுண்ணம் இடித்தல். சுண்ணமென்பது கந்தப் பொடி. 
  (6) சாழல். 
  (7) உந்தி. (இவ்விரண்டும் பெண்களுடைய விளையாட்டு என்று  தெளிவாகிறது.                            ஆனால் விளையாட்டின் விவரங்கள்  தெரியவில்லை.) 
  (8) பூவல்லி (பெண்கள் பூக் கொய்யும்போது பாடுவது.) 
  (9) தோணோக்கம் (பெண்கள் தோள் கோத்துப் பாடிக் குதிப்பது.) 
(10) ஊசல் (இதை இக்காலத்தில் "ஊஞ்சற் பாட்டு" என்கிறோம்.) 
(11) காலைத் துயில் எழுப்பும் பாட்டு.

                  இங்ஙனம், தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி முதலிய வேறு பல வகை களுமிருந்தன. 'பிள்ளைத் தமிழ்' என்ற நூல் வகுப்பைக் காண்க. இவற்றிலே, தாலாட்டு, ஊஞ்சல், அம்மானை, பள்ளியெழுச்சி என்ற நான்கு வகையும்வெவ்வேறு சந்தங்களுடன் இக்காலத்தில் நமது பெண்களுக்குள் வழங்கி வருதல் காண்கிறோம். பழைய காலத்து வகைகளை நாம் விஸ்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய ஸௌகரியங்கள் இல்லை. ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம்.

குடும்பத்துப் பெண்களிலே சாஸ்திரப்படி ஸங்கீதம் கற்றுக்கொள்வோரின் தொகை மிகவும் குறைவு. நகரப் பழக்கமும் சுக ஜீவனமும் உடைய குடும்பங்களில் மாத்திரமே பெண்களுக்கு வாத்தியார் வைத்துப் பாட்டுக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆயினும், வாத்தியார் இல்லாமல் சாஸ்திர வழிகளில் வாஸனை ஏற்பட்டவர் பலர் உண்டு.

இவர்களை யல்லாது, பொதுப் படையாகப் பார்க்குமிடத்து, நமது மாதர் பாட்டுக்களின் இனம் பின்வருமாறு:-

  (1) கல்யாணப் பாட்டு.நலங்கு, பத்யம், ஊஞ்சல், ஓடம் முதலியன.
  (2) கும்மிப் பாட்டு. குதித்துப் பாடுகிற பாட்டுக்கள்.இவ் வகுப்பில், கிளிப் பாட்டு,                              பல்லிப்பாட்டு முதலியனவும் அடங்கும். 
  (3) அம்மானை, தூது, மாலை, சோபனம் முதலிய நீண்ட கதைப் பாட்டுக்கள்.
  (4) பொதுத் தாலாட்டு, விளையாட்டுப் பாட்டுக்கள், ஜாவளிகள், கீர்த்தனை முதலியன.

மேலும், பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான மெட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட பாட்டுக்களில் மிக இன்பமான சந்தங்கள் பல இருக்கின்றன. இவை கால வெள்ளத்தில் மறைந்துபோகு முன்பாக ஸங்கீத வித்வான்கள் பொறுக்கியெடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே சேர்த்து விடவேண்டும்.

பெண்களுக்குக் கல்விப் பயிற்சி. ஏற்பட்டால் இப்போதுள்ள கொச்சை மொழிகளும், பிழைகளும், ரஸக் குறைவும் பொருந்திய பாட்டுகளை மறந்து விடுவார்கள். ஆனால், அத்துடன் பழைய ஸங்கீதக் கட்டுக்களை மறந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய வழிகளை முற்றிலும் மறந்துபோய் நமது பெண்கள் நாடக மெட்டுக்கள் முதலிய வற்றையே பாடத் தொடங்கிவிட்டால், தமிழ் நாட்டில் ஸங்கீத வுணர்ச்சி நாசமாய்விட ஹேது உண்டாகும்.

              கொச்சை மொழிகளும் ரஸக் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்னோம். ஆனாலும் ஒரு கூடைப் பதரில் ஓருழக்கு அரிசி யகப்படும். அதை நாம் இழந்துவிடக்கூடாது. கவிதைத் தேட்டமுடையோர் நமது பெண்களின் பாட்டைத் தேடிப் பார்த்தால், சிற்சில விடங்களில் நல்ல கவிதை கிடைக்கும். பாட்டி ராமாயணத்தில் குசலவரின் கதையை ஒரு நீளப்பாட்டாகச் சொல்லுவாள். அதில் சீதையின் கஷ்டங்களைக் கேட்கும்போது குழந்தை களெல்லாம் கண்ணீர் விட்டழும். ராமனைக் குசலவர் வெல்லும் இடத்து வரும்போது மனதிலே ஆத்திரம் பொங்கும். 'ராமனுக்கு வேணும்; நன்றாக வேணும்' என்று தோன்றும். நலங்குப் பாட்டு, கும்மி முதலிய வற்றிலே கூடச் சில இடங்களிலே முத்துபோல வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரஸமானது. சந்தமும் இன்பம்; ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.

பெண்களின் பாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களில் பெரும் பகுதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் சம்பந்தமாக இங்கே இன்னும் சில வார்த்தைகள் சேர்க்க விரும்புகிறேன். வீட்டிலே பந்துக்களின் முன்பும், விவாக ஸந்தர்ப்பங்களிலும் பாடும்போது கூச்சத்தினாலே பாட்டை விடக்கூடாது. வித்தை விஷயத்தில் கூச்சங்காட்ட நியாயமில்லை. வித்தைப் பயிருக்கு விடுதலை நீர் பாய்ச்ச வேண்டும் மேலும் பெண்களுக்குள்ளே பொதுக் கல்வியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கவேண்டும். கல்வி யறிவில்லாத மூடர் எந்தத் தொழிலும் நேரே செய்ய மாட்டார்கள். தவிரவும் பார்ஸி மெட்டிலே ஆரத்தி யெடுப்பது, இங்கிலீஷ் நலங்கு முதலிய கோரமான விகாரங்களுக்குத் துணை செய்யக்கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையுங்காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுகளை கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்.No comments:

Post a Comment

You can give your comments here