பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 15, 2015

மகாகவி பாரதியாரின் வசன கவிதை

                                
பாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவிதை போன்றவற்றை நாம் அதிகம் படிப்பதில்லை. கட்டுரைகள் பெரும்பாலும் அவர் பணியாற்றிய “சுதேசமித்திரன்”, “இந்தியா”, “விஜயா” போன்ற பத்திரிகைகளில் எழுதி வெளியானவை. கதைகள் என்றதும் இன்றைக்கு நாம் பத்திரிகைகளில் படித்து வரும் கதைகளைப் போன்றவை என்று கருத முடியாது. அவர் சொல்ல வரும் கருத்தை ஒரு கதை வடிவில் வடித்துக் காட்டியிருப்பார். சில மிகவும் சுருக்கமாகக்கூட இருக்கும், அவற்றில் பொதிந்திருக்கும் கருத்துதான் முக்கியமானது. அதுபோன்றே அவருடைய வசன கவிதைகள், “பாரதியார் கவிதைகள்” எனும் நூல்களில் காணப்பட்டாலும், அவைகளின் பின்னணி சுவாரசியமானவை.

மகாகவி பாரதியார் ‘ரிக்’ வேத சுலோகங்களை மகான் அரவிந்தரிடம் கற்றறிந்தார் என்று தெரிய வருகிறது. பாரதியார் போன்ற மகா மேதைகள் ஒரு விஷயத்தைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்கிறார் என்றால் அந்த கேள்வி ஞானத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. அதைப் பற்றி மேலும் மேலும் சிந்தித்து அதனுள் நுழைந்து பற்பல அரிய முத்துக்களை வெளிக்கொணரும் பழக்கமுடையவர். அப்படி அவர் மகான் அரவிந்தரிடம் பயின்ற ‘ரிக்’ வேதத்தை அவர் பாணியில் வசன கவிதைகளாகப் படைத்திருக்க வேண்டும். காரணம் வேதங்களில் மிக பழமையானது ‘ரிக்’ வேதம். அது இயற்கையை வழிபடும் விதமான சுலோகங்களைக் கொண்டது. அதனால்தானோ என்னவோ மகாகவி பாரதி தன்னுடைய வசன கவிதைகளில் இயற்கையைப் போற்றி வரிகளை எழுதியிருக்கிறார்.

வேதங்களை ஓதுதற்கு அவைகளுக்கென்று இருக்கும் ஒலி வடிவில் ஓதுதல் வேண்டும். வேதம் ஓதும்போது அவற்றின் ஒலியை நாம் கேட்டிருக்கிறோம். அந்த ஒலி நடையில் சொன்னால்தான் அது முறையான ஓதுதல். பாரதியின் வசன கவிதைகளில் வேத ஒலியோடு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதுதான் புரிந்தது, பாரதி வசன கவிதைகளை வேதத்தின் கருத்தையொட்டி அமைத்திருக்க வேண்டுமென்றும், அவற்றைப் பாடும்போது வேத முறைப்படி அதே ஒலி நயத்தோடு பாட வேண்டுமென்றும் தெளிவாகிறது. இப்போது வசன கவிதைகளை எடுத்து வைத்துக் கொண்டு வேத ஒலி நடையில் பாடிப்பாருங்கள், பெரும்பாலும் அவற்றுக்கு ஒத்து வருவதைக் காணலாம். இனி வசன கவிதையினுள் புகுந்து பாடத் தொடங்கலாம், வாருங்கள்.


1.    காட்சி 
                                             முதற்கிளை: இன்பம்
            இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
            யுடைத்து: காற்றும் இனிது. 
            தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது;
            ஞாயிறு நன்று; திங்களும் நன்று;
            வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
            மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது;
            கடல் இனிது; மலை இனிது; காடு நன்று;
            ஆறுகள் இனியன;
            உலோகமும், மரமும், செடியும், கொடியும்
            மலரும், காயும், கனியும், இனியன.
            பறவைகள் இனிய,
            ஊர்வனவும் நல்லன.
            விலங்குகளெல்லாம் இனியவை.
            நீர் வாழ்வனவும் நல்லன.
            மனிதர் மிகவும் இனியர்.
            ஆண் நன்று; பெண் இனிது;
            குழந்தை இன்பம்.
            இளமை இனிது. முதுமை நன்று.
            உயிர் நன்று. சாதல் இனிது.
           
                                                            2
            உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன.
            உயிர் சுவை யுடையது.
            மனம் தேன், அறிவு தேன், உணர்வு அமுதம்,
            உணர்வே அமுதம்
            உணர்வு தெய்வம்.

                                                            3
            மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம்.
            காடு, மலை, அருவி, ஆறு
            கடல், நிலம், நீர், காற்று,
            தீ, வான்,
            ஞாயிறு திங்கள் வானத்துச் சுடர்கள் – எல்லாம்
            தெய்வங்கள்
            உலோகங்கள், மரங்கள், செடிகள்
            விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன,
            மனிதர் – இவை அமுதங்கள்.

                                                            4.
            இவ்வுலகம் ஒன்று.
            ஆண், பெண், மனிதர், தேவர்
            பாம்பு, பறவை, காற்று, கடல்,
            உயிர், இறப்பு – இவையனைத்தும் ஒன்றே
            ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி,
            குழல், கோமேதகம் – இவையனைத்தும் ஒன்றே.
            இன்பம், துன்பம், பாட்டு
            வண்ணான், குருவி
            மின்னல், பருத்தி
            இஃதெல்லாம் ஒன்று.
            மூடன், புலவன்,
            இரும்பு, வெட்டுக்கிளி –
            இவை ஒரு பொருள்.
            வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகைமலர் –
            இவை ஒரு பொருளின் பல தோற்றம்.
            உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று.
            இந்த ஒன்றின் பெயர் ‘தான்’ (ஆத்மா)
            ‘தானே’ தெய்வம்
            ‘தான்’ அமுதம், இறவாதது.

                                                            5
            எல்லா உயிரும் இன்ப மெய்துக.
            எல்லா உடலும் நோய் தீர்க.
            எல்லா உணர்வும் ஒன்றாத லுணர்க.
            ‘தான்’ வாழ்க.
            அமுதம் எப்போதும் இன்ப மாகுக.

                                                            6
            தெய்வங்களை வாழ்த்து கின்றோம்.
            தெய்வங்கள் இன்ப மெய்துக.
            அவை வாழ்க.
            அவை வெல்க.
            தெய்வங்களே!
            என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்;
            என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர்;
            எவற்றையும் காப்பீர்.
            உமக்கு நன்று
            தெய்வங்களே!
            எம்மை உண்பீர், எமக்கு உணவாவீர்,
            உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்,
            உமக்கு நன்று.
            தெய்வங்களே!
            காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது;
            அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று;
            உண்பது நன்று, உண்ணப்படுதலும் நன்று;
            சுவை நன்று; உயிர் நன்று, நன்று, நன்று.

                                                                        7
            உணர்வே, நீ வாழ்க!
            நீ ஒன்று, நீ ஒளி,
            நீ ஒன்று, நீ பல,
            நீ நட்பு, நீ பகை
            உள்ளதும் இல்லாததும் நீ.
            அறிவதும் அறியாததும் நீ.
            நன்றும் தீதும் நீ.
            நீ அமுதம், நீ சுவை.
            நீ நன்று, நீ இன்பம்.

                                                (இரண்டாம் கிளை “புகழ்” தொடரும்.)
                                                           
                                                            

              

                            
                                                            

              

No comments:

Post a Comment

You can give your comments here