பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 22, 2020

“எங்கிருந்தோ வந்தான்...”


                                                     
            இந்த சொற்றொடரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது மகாகவி பாரதியாரின் “கண்ணன் – என் சேவகன்” எனும் பாடல்தான். அதில் அவர் தனக்கு அமைந்த சேவகன் ஒருவனைப் பற்றி அழகாக முன்னிலைப் படுத்துகிறார். அவன் எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்வதற்கு முன்பு, பொதுவாக நமக்கு அமையும் சேவகர்கள் எப்படியிருப்பார்கள் என்று சொல்லிவிட்டு, இப்போது தன்னிடம் வந்து நிற்கும் இந்த சேவகனைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார். அந்த அழகான, பொருள் பொதிந்த வரிகளை முதலில் பார்த்து விடுவோம். அவர் சொல்கிறார்.....  “கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாம் தாமறப்பார், வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்”.

            மறுநாள் அவன் வேலைக்கு வந்துதானே ஆகவேண்டும், அப்படி அவன் வரும்போது, “ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை?” என்றால் அவன் சொல்லும் பதில்கள்தான் நம்மை திகைக்க வைக்கின்றன. அவன் சொல்கிறான், “பானையிலே தேள் இருந்து, பல்லால் கடித்ததென்பார்; பாட்டியார் செத்துவிட்ட பன்னிரெண்டாம் நாளென்பார், அதுமட்டுமா? “வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்ததாம்” எப்படி இருக்கிறது காரணங்கள்? அத்தோடு விட்டால் பரவாயில்லை, அவன் அடுக்கிக் கொண்டே போகும் பொய்க்காரணங்களைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை.

            அவன் சொல்கிறான், “பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளாம்” இப்படி அவன் ஓயாமல் பொய் உரைப்பான், நாம் ஒன்று செய்யச் சொல்லி ஏவினால் வேறொன்றைச் செய்து வருவான். நமக்கு உறவு என்போர் அனைவருமே நம் நன்மைகளில் மிகுந்த அக்கறை உடையவர்கள் என நினைக்க முடியாது. சில தாயாதியர் உண்டு, அவர்களுக்கு நம்மைப் பற்றிய ரகசியங்கள் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும், ஆகையால் நம் வீட்டு நிகழ்வுகளை வேலையாள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு அவை துன்பகரமாக இருக்குமானால் அவர்களுக்கு மகிழ்ச்சி, இன்பம் பயப்பதாக இருக்குமானல்  அவர்களுக்கு ஏமாற்றம். நம் வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், அவற்றை நாம் வீட்டினுள் விவாதிப்பதும், ஓர் முடிவெடுப்பதுவும் நடப்பது இயற்கைதானே? அப்படிப்பட்ட செய்திகள் இவர்கள் காதில் விழுந்து விட்டால் போதும், இவர்கள் வேலைக்குப் போகும் இதர வீடுகளில் போய் “உங்களுக்கு விஷயம் தெரியுமா? அவர்கள் வீட்டில் இப்படியெல்லாம் பிரச்சனைகளாம், அவர்கள் பேசிக்கொண்டார்கள்” என்று ஒலிபெறுக்கி இல்லாமல் ஒலிபரப்பு செய்வார்கள்.

            வீட்டில் மிகச் சாதாரண, எப்போதாவது பயன்படக் கூடிய பொருட்களில் “எள்” ஒன்று. எள் தானேயென்று நாம் தேவைப்படும்போது வாங்கிக் கொள்வோம் என்றிருப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் எள் இல்லை என்பது தெரியவருகிறது. அது எப்படிப்பட்ட அகில உலக பிரச்சனை? அதைப் போய் ஊர் முழுதும் போய் தெரிந்தவர்களிடமெல்லாம், “அம்மா விஷயம் தெரியுமா? அவுங்க வீட்டுல விசேஷத்துக்கு எள்ளைத் தேடினால், வீட்டில் எள் இல்லை” என்பதை மிகப் பெரிய குற்றம் போல எடுத்து உரைப்பார்கள். இப்படி நாம் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கும் ஆட்களால் உண்டாகும் தொல்லைகள் மிக அதிகம் என்பதை அனைவரும் அனுபவித்திருப்பார்கள். ஆனால் அப்படி நம் ஏவலுக்கென்று ஓடியாடி வேலை செய்ய ஒரு ஆள் இல்லையென்றாகி விட்டால் ஒரு வேலையும் நடப்பதில்லை. இது அனுபவத்தில் கண்டது என்கிறார் பாரதியார். அதில் நான் மட்டும் விலக்காகிவிடுவேனா, நானும் அப்படிப்பட்ட இடரைச் சந்தித்தவன் தான். அப்போதுதான் ஒருவன் வந்து நின்றான், தான் வேலைக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டு.

            பாரதி கேட்கிறார், திடுதிப்பென்று ஒருவன் வந்து நான் வேலைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டால் உடனே சேர்த்துக் கொண்டுவிட முடியுமா? முடியாதல்லவா? அவன் யார், எங்கிருந்து வருகிறான், அவனுக்கு என்ன அனுபவம் இவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? ஆமாம், அதனால் தான் நான் உனக்கு என்ன வேலைகள் எல்லாம் தெரியும் என்று கேட்டேன். அவன் சொன்னான், “ஐயனே! நான் சாதியிலே இடைச்சாதி. அட இது என்ன இடைச்சாதி என்று வியந்த போதுதான் புரிந்தது, அவன் சொல்வது தான் “இடைப்பட்ட சாதி”, அதாவது தேவர்களுக்குள்ளும் இல்லை, மனிதர்களுக்குள்ளும் இல்லை, இவர்கள் இரண்டு பேருக்கும் இடைப்பட்டவரான தேவாம்சம் பொருந்திய மனிதருள் தேவன் அதாவது ஒரு அவதார புருஷன் என்று சொல்கிறான் என்று. (உலக வழக்கில் யாதவர்களை இப்படி குறிப்பிடுவார்கள்) வீட்டிலுள்ள மாடுகன்றுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மேய்ந்த பின் வீட்டில் கொண்டு வந்து பத்திராமாய்ச் சேர்த்திடுவேன்.

            வீட்டை நன்கு பெருக்கி சுத்தம் செய்து, மாலையானால் இருள் நீங்கும்படி விளக்குகளை ஏற்றி வைத்து, யார் என்ன சொன்னாலும் அவர்கள் சொன்ன வேலைகளை விரைந்து செய்து முடிப்பேன், வீட்டிலுள்ளோர் துணிமணிகளை யெல்லாம் நன்கு துவைத்து காயவைத்து மடித்து வைப்பேன், வீட்டிலுள்ளோர் சொல்லும் பணிகளையெல்லாம் அவர்கள் சொன்னபடி கேட்டுச் செய்வேன். வீட்டிலுள்ள சின்ன குழந்தைகள் அவ்வப்போது அழும், விஷமங்கள் செய்யும், அடம் பிடிக்கும் அல்லவா, அப்போதெல்லாம் நான் அவர்களுக்கு சிங்காரமாகப் பாடல்கள் பாடியும், அதற்கேற்ப ஆட்டங்கள் ஆடியும், குழந்தைகள் அழாதபடி பார்த்துக் கொள்வேன்.

            எஜமான் வெளியூர் பயணம் செய்கிறார் அதிலும் காட்டு வழியில் செல்கிறார் எனும்போது, அங்கு வழியில் கள்வர் பயம் இருக்குமென்பதால், இரவு எந்நேரமாக இருந்தாலும் என் சிரமங்களைப் பார்க்காமல், எஜமானருடன் களைப்பின்றி சுற்றி வந்து, அவருக்கு எவ்வித  துன்பமும் ஏற்படாதபடி காப்பேன்” என்கிறானாம் அவன்.  இப்படி தொடங்குகிறது பாரதியாரின் “கண்ணன் என் சேவகன்”. பின்னர் அவன் யார் என்பதையும், அவன் திறமைகள் என்பதனைத்தையும் எஜமான் கேட்டுத் தெரிந்து கொண்டு அவனைத் தனக்குப் பணியாளாக அமைத்துக் கொள்கிறார் என்று போகிறது பாரதியாரின் பாடல்.

            பாரதிக்கு அமைந்த சேவகன் இருக்கிறானே, அவன் தன் எஜமானரிடம் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், அவரே வியந்து பாராட்டும் வகையில் நன்றியை எதிர்பார்க்காமல் பணியாற்ற முன்வருகிறான். வேலையாள் என்றதும் அவனுக்கு என்ன கூலி கொடுப்பது என்ற கேள்வி எழுமல்லவா? அவரே கேட்கிறார்.

            அதற்கு அவன் சொல்கின்ற பதில்தான் நம்மை அதிசயிக்க வைக்கிறது. அவன் சொல்கிறான், “ஐயனே, தாலிகட்டும் பெண்டாட்டி, சந்ததிகள் ஏதுமில்லை, நானோர் தனி ஆள். உடலில் நரை திரை தோன்றாவிடினும் எனக்கு ஆனவயதுக்கு அளவில்லை. தேவரீர் ஆதரித்தால் போதும் அடியேனை, நெஞ்சிலுள்ள காதல் பெரிது எனக்குக், காசு பெரிதில்லை” என்றான். இப்படியும் ஒருவன் இருப்பானா? வியந்து போய் அவன் திறமைகளையெல்லாம் சொல்லி, அவனை நான் பணியாளாகக் கொள்வதற்கு என்ன தவம் செய்து விட்டேன், அவன் எனக்காக “எங்கிருந்தோ வந்தான்” என வியக்கிறார் பாரதி கண்ணன் என் சேவகனில்.

            பாரதியின் இந்த கண்ணன் பாட்டிலுள்ள ‘கண்ணன் – என் சேவகன்” பாட்டைப் படிக்கும் போது காப்பியங்களில் ஒன்றான இராமாயணத்தில் இவனைப் போலவே ஒருவன் எவ்வித பயனையும் எதிர்பார்க்காமல், தனக்கென்று எதையும் கேட்காமல், தான் மதிக்கும் இராமனுக்கு சேவை செய்வதே தன் ஜன்ம லட்சியம் என்று ஒருவன் இருந்தது நம் நினைவுக்கு வருகிறது. பயன் கருதாது துணை புரிந்த கங்கைக் கரை வேடன் “குகன்”தான் அந்த மாமனிதன்.

            “இராம காதையில்” குகன் எனும் பாத்திரம் ஏன் படைக்கப்பட்டது? அல்லது அவனைக் குறிப்பிட்டு ஒரு படலம் எழுதும் வகையில் அவன் முக்கியத்துவம் பெற்றது எப்படி? இந்த குகன் எனும் படகோட்டி இல்லையென்றால் இராமனால் கங்கையாற்றைக் கடந்து சென்றிருக்க முடியாதா? வழிநெடுக எத்தனையெத்தனை நதிகளையெல்லாம் கடந்து வந்த இராமனுக்கு கங்கையைக் கடப்பது என்பது ஒரு சிரமமான காரியமா என்ன? இல்லை! ஆனால் உலகில் சுயநலம் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்தாலும், தனக்கென்ற சுயநலம் எதுவுமின்றி தன் மனதுக்கு நிறைவான, பக்தி கொண்டு ஒரு பெரியோருக்குச் சேவை செய்வதைத் தன் கடமையாகக் கொண்ட ஒருவனும் இருந்தான் என்பது உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் குகன் எனும் பாத்திரம்.

            கைகேயி கேட்ட வரம் ஒன்றினால் மன்னன் தசரதன் பரதன் அரசாளவும், பட்டத்துக்குரிய மூத்த மகன் இராமன் ஏழிரெண்டாண்டுகள் வனமாளவும் வரம் கேட்ட விவரத்தைக் கம்பர் சொல்வது:

“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்                                                                           சேய் அரசாள்வது; சீதை கேள்வன்  ஒன்றால்                                                                   போய் வனம் ஆளவது; எனப் புகன்று நின்றாள்                                                               தீயவை யாவையினும் சிறந்த தீயாள்”

தீயினும் சுடவல்ல இத்தீய சொல்லைக் கேட்டு தசரதன் அயர்ந்தான், நாகப் பாம்பனைய கொடியவள் நாவில் வந்த சொற்களைக் கேட்ட மன்னன் தசரதன் மயங்கி வீழ்ந்தான். பின்னர் மெல்ல நினைவு மீண்டு எழுவான், நிற்பான், அவள் கேட்டது உண்மைதான் என்பதறிந்து மீண்டும் வீழ்வான், உயிரடங்கிய உடல்போல வீழ்ந்து கிடந்தான்.  பின் மீண்டும் எழுந்தான், செய்வதறியாது திகைத்தான்.

            கையோடு கையைப் புடைத்துத் தன் கோபத்தை வெளிப்படுத்தினான், வாய் கடித்து, நெஞ்சு சோர்ந்து வலியிழந்து இவ்வையகத்தையே கட்டியாண்ட தசரதன் அனைத்தும் அழிந்து வெட்டப்பட்ட மரமென வீழ்ந்து மயங்கினான்.

            பின்னர் நடந்தவை அனைத்தும் காப்பியம் நமக்குக் காட்டிவிட்ட காட்சிகள். கானகத்தில் இராமனையும், சீதையையும், இலக்குவனையும் கொண்டு போய் இறக்கிவிட்டு சுமந்திரன் ஊர் திரும்ப, பளிங்குத் தரையில் நடந்து பன்னீரில் நீராடி, மாடத்தில் வெண்ணிலவு கண்டு மகிழ்ந்திருக்க வேண்டிய அம்மூவரும் அந்தோ, அந்தக் கொடியவள் கைகேயி கேட்ட வரத்தினால் கல்லும் முள்ளும் மலிந்த கானகத்துள் நடக்கத் தொடங்கினர்.

            வழியில் கங்கையெனும் புண்ணிய நதி, அதனைத் தாண்டி தென்திசை நோக்கிச் செல்ல விரும்பி அங்கிருந்து முனிவர்களோடு அவர்கள் ஆசிரமத்தில் அமர்ந்து ராமன் உரையாற்றிக் கொண்டிருக்க, வாயிற்புறத்தில் இலக்குவன் காவல் இருக்கிறான். அப்போது எங்கிருந்தோ கடல் அலைபோல் ஓசை கேட்கிறது. இலக்குவன் ஓசை வந்த திசை நோக்கிப் பார்த்தான். அங்கு ஒரு பெருங்கூட்டம், வேடுவர் கூட்டமென உணர்ந்தான் இலக்குவன். அந்தக் கூட்டத்தின் முன்னால் அறையில் கட்டிய துணியை இழுத்துக் கட்டி அதில் கூர்மையான வாளையும் செறுகிக் கொண்டு, நச்சரவத்தின் கடும் பார்வையோடும் ஒருவன் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி வருகிறான்.

            யார் அவன்? சிருங்கிபேரம் எனும் கங்கைக்கரை நாட்டுக்கு அதிபன் அவன். தன் தோற்றத்தால் பிறரை அச்சுறுத்தக்கூடிய குகன் தன் உடன் வந்த வேட்டுவ மக்கள் அனைவரையும் அந்த ஆசிரமத்துக்கு வெகுதூரத்தில் நிறுத்தினான். இவர்கள் கூச்சலால் அங்கிருக்கும் இராமனுக்குத் துன்பம் வரக்கூடாது என்பது அவன் கருத்து.

            வீரத்தோடு நடைபோட்டு தன்னந்தனியனாய் குகன் ஒரு கையில் தேன் நிறைந்த ஒரு குடுவை, மறு கையில் கங்கையில் அன்று தேர்ந்தெடுத்துப் பிடித்த சிறந்த மீன்கள் இவற்றோடு இராமன் தங்கியிருக்கும் ஆசிரமம் நோக்கி தனித்தே வருகிறான்.

            இராமன் யார், எப்படி இருப்பார் என்பதெல்லாம் அந்த குகனுக்குத் தெரியாது. ஆனால் இராமன் அயோத்தி ராஜகுமாரன் என்பதும் அவன் பராக்கிரமத்தையும், இரக்கம், நல்ல குணம் இவற்றைக் கேட்டறிந்து அவன் மீது கட்டற்ற பக்தி கொண்டு அத்தகையவன் தானிருக்கும் கானகம் வந்த செய்தி கேட்டு அவரை தரிசிக்க வருகிறான்.

            பெரியோர்களைக் காணச் செல்லும்போது வெறுங் கையுடனா போவது. எண்ணிப் பார்த்தான், இராமனுக்காக இந்த உலகையே கொடுக்கலாமே. பூமி தொடங்கி ஆகாயம் வரை இயன்றால் இராமனுக்குப் படைக்கலாமே என்கிற எண்ணம். உயரே பார்த்தான், வானுயர்ந்த மலைகள், அவற்றில் எண்ணிறந்த உயர்ந்த மரங்கள் அவற்றின் உச்சியில் அடர்ந்து வைத்திருக்கும் தேனடைகள். ஆகா, நாம் வசிக்கும் கானகம் வந்த இராமனுக்கு நம் காட்டின் தேனைக் கொடுக்கலாமென்று மலைமீதேறி தேனை ஒரு குடுவையில் சேர்த்துக் கொணர்ந்தான். போதுமா இது? இவனுக்கு வேறு என்ன கொடுக்கலாம். தான் படகோட்டி பிழைக்கும் இந்த கங்கையில் வாழும் கெழுமிய மீன்களைப் பிடித்துத் தந்தால் என்ன? உடனே கங்கையில் இறங்கி அங்கிருந்து தேர்ந்தெடுத்த மீன்களைப் பிடித்துச் சேர்த்து இரு கரங்களிலும், மீனையும், தேனையும் கொணர்ந்தான் குகன். அவனுக்கு இந்த பூமியின் அடிமுதல் முடி வரை இராமனுக்குத் தரவேண்டுமென்கிற எண்ணம். மிகவும் ஆழமுடைய கங்கையின் வெகு ஆழத்தில் வாழ்ந்த மீன்களைப் பிடித்தான், வானுயர்ந்து நிற்கும் மலையின் உச்சியில் இருந்த மரத்திலிருந்து தேனை எடுத்தான் அடியும், முடியும் என் இராமனுக்கே என்று அவற்றை அவரிடம் சேர்ப்பதற்கென கொண்டு வந்தான்.

            ஆசிரமத்தின் வாயிலில் மரவுரி தரித்து, தலையில் ஜடாமுடியும் கையில் வில் அம்புமாக நிற்கும் இலக்குவனை இராமனோ என்று சற்றுத் தயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

            இப்படியொருவன் வருவதைக் கண்ட இலக்குவன் குகனை நோக்கி “ஐயனே! நீவிர் யார்? என்று வினவினான்.

            அவன்தான் இராமன் என்று கருதிக் கொண்டிருந்த குகன் சொல்கிறான், “தேவா! நின் கழல் சேவிக்க வந்தேன். நான் இந்த கங்கை நதியில் நாவாய்கள் ஓட்டுபவன் தங்கள் அடியவன்” என்கிறான்.

            இலக்குவனுக்குப் புரிந்தது, இவன் தன்னைத்தான் இராமன் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறான் என்று. உடனே குகனிடம் சொல்கிறான், “ஐயனே! இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டுத் தன் அண்ணனிடம் சொல்ல உள்ளே செல்கிறான்.

            உள்ளே சென்று, அங்கு முனிவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த இராமனிடம் பணிந்து “கொற்றவ, நின்னை தரிசிக்கவென்று, ஒரு பெருங்கூட்டத் துடனும், சுற்றத்தார்களுடனும் ஒருவன் வந்திருக்கிறான். தூய உள்ளமுடையவன். பெற்ற தாயினும் அன்பு காட்டக்கூடிய நல்லவன், கங்கை நதியில் நாவாய்கள் ஓட்டி வாழும் வேட்டுவர் குல மன்னன் குகன்” என்றான்.

            இராமனுக்கு மகிழ்ச்சி, தம்பியை நோக்கி, “அவனை என்பால் அழைத்து வா” என்றான். பரிவோடு இலக்குவன் போய் குகனை அழைத்து வருகிறான். இராமனை முதன் முதல் இவன்தான் ராமன் என்றறிந்த கருத்த மேனியுடைய மலைபோன்ற குகன் மண்ணில் உடல் முழுதும் படும்படியாக வீழ்ந்தெழுந்து தொழுதான். எழுந்து நின்று வாய் புதைத்து இராமன் முகம் நோக்கி நின்றான்.

            “உட்கார்” என்று இராமன் சொன்ன போதும் உட்காரவில்லை குகன். ஐயனே தங்களுக்காகத் தேர்ந்தெடுத்த மீன்களையும், தேனையும் கொணர்ந்தேன், தங்கள் திருவுள்ளம் என்னவோ?” என்றான் குகன்.

            இராமன் குகனின் அன்பின் ஆழத்தைப் புரிந்து கொண்டான். என்னே இவன் அன்பு. என்னே இவன் பண்பு. உட்கார் என்று சொல்லியும் வாய் புதைத்து நின்ற பாங்கு இராமனை கனிந்திடச் செய்தது. இப்போது தனக்காக அவன் அன்போடு தேனும் மீனும் கொணர்ந்த செய்தியைச் சொன்னதும் இராமனுக்கு மனதிற்குள் இப்படியொரு அன்பா, நான் இவற்றை உண்ணலாமா என்பது கூட தெரியாமல் அன்பின் மிகுதியினால் கொணர்ந்து தந்து உண்பாயாக என்கிறானே என்பது போல இளநகை முகத்தில் தோன்ற குகனிடம் பேசலானான்.

            “உன் உள்ளத்தில் உள்ள மிகுந்த அன்பின் காரணமாக எனக்கென்று அரியதாக இவற்றைக் கொண்டு வந்திருக்கிறாய் எனும்போதே, அவை அமிழ்திலும் பெருமை மிக்கதன்றோ? ஆழ்ந்த அன்போடு தரும் எதுவும் அமிழ்தம், இவற்றை நாம் அன்போடு ஏற்றுக் கொண்டு உண்டதாகவே எண்ணிக்கொள்” என்றான்.

            மறுநாள் கங்கை நதியைக் கடந்து இராம, இலக்குவன், சீதை செல்வதற்கு படகினைத் தயார் செய்து வை என்று குகனை அனுப்பினார் இராமன். குகன் ஐயன் இட்ட கட்டளைப்படி மறுநாள் கங்கை நதியைக் கடக்க ஓர் படகைக் கொணர்ந்து காத்திருந்தான். அண்ணலும், சீதையும், இலக்குவனும் படகுக் கரை வந்ததும், அவர்கள் பாதங்களை கங்கை நீரால் *நீராட்டி மனம் மகிழ்ந்து பாதத்தை படகில் வைக்க வேண்டி அடுத்த கரை கொண்டு சேர்த்தான்.

(*இந்த இடத்தில் ஒரு செய்தியை பேராசிரியர் இரா.ராதாகிருஷ்ணன் சொல்வார். அதாவது முன்பு விசுவாமித்ர முனிவருடன் இராம லட்சுமணர் கானகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ராமனின் பாத துகள் பட்டு ஒரு பாறை பெண்ணாக மாறியதாம், அது போல இப்போது ராமன் காலிலுள்ள மணல் பட்டு தன் படகு பெண்ணாகி விட்டால் என்ன செய்வது என்று அவர் காலை கங்கையின் புனித நீரால் நீராட்டினான் என்பார். இது நகைச்சுவைக்காகச் சொன்னது என்றாலும், ரசிக்கக் கூடியது)

            முன்பின் அறியாத, தனக்கென்று எதையும் கேட்டுப் பெறத் தெரியாத வேட்டுவக் குலத் தலைவன் காட்டிய அன்பு இராமனிடம் எதையும் எதிர்பார்த்தா? இல்லையே. அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்? உண்மையான அன்பு இருந்தால் பயன் கருதாது சேவை செய்வதை பாரதியின் சேவகனும் செய்தான், இராமனின் தம்பியரில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குகனும் செய்தான்.

            எதற்கும் பயன் எதிர்பார்க்கும் இவ்வுலகில், இப்படி பயன் கருதாமல் உள்ளத்தை அர்ப்பணிப்பு செய்யும் அபூர்வ மனிதர்களும் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள். பாரதியின் சேவகனையும், இராமனின் குகனையும் நட்புக்கு இலக்கணமாய், அன்புக்கு இலக்கணமாய்க் கொண்டால் வாழ்வு இனிமையுறும்.

           
           
           

Thursday, April 16, 2020

மறைந்த மாயம்!

                                                        மறைந்த மாயம்!         
                                                               
          இந்தத் தலைப்பு யாரைப் பற்றியது? இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஏராளமான தலைவர்கள் பெயர்களைத் தெரிந்த அளவுக்கு இளம் தலைமுறையினர் நேதாஜி என அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போசை அறியவில்லை.  உண்மையில் முதன் முதலில் சுதந்திர விழா கொண்டாடி இந்திய மூவண்ணக் கொடியை யேற்றி உரையாற்றியது சுபாஷ்தான். அது நடந்தது அந்தமான் தீவில், ஜப்பானியர்கள் கீழை நாடுகளையெல்லாம் வென்று பர்மாவையும் பிடித்து அந்தமான் தீவுகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அதை சுபாஷிடம் அளித்ததும், அங்கு நமது கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
“On this day in the year 1943, (30-12-1943) Netaji Subhash Chandra Bose hoisted the National Flag for the first time at the Gymkhana Ground (present Netaji Stadium) in Port Blair. He also announced the Islands, the first Indian Territory freed from the British rule.”

            ஜப்பானியர்கள் அந்தமான் தீவை நேதாஜியிடம் ஒப்படைத்த போதும், ஜப்பானிய படைகள் இந்தியர்கள் மீது நடத்திய கொடுமை ஒரு பக்கம் நடந்த சோக வரலாறு.

            சிப்பாய் கலகம் எனும் முதல் சுதந்திரப் போரில் காசியைச் சுற்றிய கிராமங்களில் நுழைந்து கண்டவர்களையெல்லாம் கொலை செய்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் நீல் என்பானுக்குச் சென்னையில் ஒரு சிலை திறந்து வைத்திருந்தார்கள். அதை எடுக்க ஒரு போராட்டம் நா.சோமையாஜுலு என்பவர் தலைமையில் நடந்தது. அது 1936இல் ராஜாஜி முதலமைச்சராக ஆனபோது பெயர்க்கப்பட்டு எழும்பூர் காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதைப் போல கல்கத்தாவில் ஹால்வெல் என்ற ஆங்கிலேயப் படை தளபதி ஒருவனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டது. 1940ஆம் ஆண்டில் சில இளைஞர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் அந்தச் சிலையை உடைக்க முயன்றனர். பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

            காந்திஜி தலைமையில் நடந்த அகிம்சை போராட்டம் ஒரு புறம் நடந்தாலும், ஆயுதபலம், படைபலம் கொண்டுதான் பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற முடியும் என்று போஸ் நம்பினார். அப்படியொரு படையை நிறுவி தானே முன்னின்று இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற முடிவெடுத்தார். சில தலைவர்கள் முயற்சியால் இவரை எப்படியாவது ரஷ்யாவுக்கு அனுப்பிவிட முயற்சிகள் நடந்தன.

            அந்த நிலையில் நேதாஜி உண்ணாவிரதம் மேற்கொண்டார். கட்டாயப் படுத்தி இவருக்கு உணவு செலுத்த போலீஸ் முயன்று தோற்றது, அதனால் அரசு அவரை விடுதலை செய்து வீட்டுச் சிறையில் கொண்டு போய் வைத்தது. அங்கு அவர் உறவினர்கள் உட்பட எவரையும் பார்க்காமல் தனிமையில் இருந்தார். உணவு மட்டும் ஓரிடத்தில் வைக்கப்படும், அவர் எடுத்துக் கொள்வார். வெளியில் இருந்தவர்களிடம் இவர் யோகியாகி விட்டார் யாரிடமும் பேசமாட்டார் என்று ஒரு வதந்தியும் இருந்தது.

            அப்படி அவர் வெளியில் வராமல் இருந்த காலத்தில் தாடி மீசை வளர்ந்ந்து உருமாறி காணப்பட்டார். இந்த நிலையில் 1941 ஜனவரி 15 அன்று இரவு போஸ் தங்கியிருந்த இல்லத்திலிருந்து இரண்டு பேர் இஸ்லாமியர்கள் போல தோற்றத்தில் கிளம்பி ஒரு காரில் ஏறி வெளியேறினர். அந்தக் கார் கல்கத்தாவிலிருந்து நாற்பது மைலுக்கு அப்பால் இருந்த ஒரு ரயில் நிலையம் சென்று அவரை இறக்கிவிட, அந்த இருவரும் ரயிலில் ஏறிச் சென்று விட்டனர்.

(இந்த நிகழ்வு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசா மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் சொல்லியிருப்பதாவது: பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே ஒரிசா, கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான (அந்த கட்டுரை ஆசிரியருக்கு) தகவல் அனுப்பி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒருவரை, மாறுவேஷத்தில் எப்படியாவது பெஷாவருக்குக் கொண்டு வந்து சேர்த்துவிடச் சொன்னதாகவும், அதன்படி மாறு வேஷத்தில் இருவரும் பெஷாவர் சென்று அங்குக் காத்திருந்த இரஷ்ய நாட்டுக்காரர்களிடம் அவரை ஒப்படைத்து விட்டதாகவும் அந்த கட்டுரையாளர் எழுதியிருந்தார். கடைசி வரை தான் அழைத்துச் செல்லும் நபர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பது அவருக்குத் தெரியாதாம்.)

            1941 ஜனவரி 17ஆம் தேதி இவர்கள் பெஷாவரை அடைந்தனர். அங்கு அவர்களை ஒருவர் காரில் வந்து அழைத்துச் சென்றார். மெளல்வி உடையில் இங்கிருந்து சென்றவர் அங்கு ஒரு பட்டாணியராக (பதான்) உருமாறி இருந்தார். அவர் அங்கிருந்து காபூல் நகரை அடைவதற்கு பல சிரமங்களுக்கு உள்ளானார். ஒரு சோதனைச் சாவடியில் இவரை அழைத்துச் சென்றவர் அங்கிருந்தவர்கள் இவரை சந்தேகத்துடன் பார்த்ததைக் கண்டு, இவர் என் அண்ணன், காது செவிடு, ஊமை, இவரை சாகிசாகிப் மசூதிக்கு யாத்திரைக்காக அழைத்துச் செல்கிறேன் என்று பொய் சொல்லி காபூலை அடைந்திருக்கிறார்கள். இந்திய எல்லையைக் கடந்து ஆப்கானிஸ்தான் எல்லைக்கு வந்துவிட்டனர். அங்கு யாரையும் தெரியாது, குளிர், பனி தொல்லை. ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றனர். அங்கு, ஒட்டகங்கள், குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு குகை போன்ற ஒரு அறையில் தங்கினார்கள். ஒரு ஆப்கன் போலீஸ்காரர் இவர்களைச் சந்தேகத்துடன் கண்காணித்து வந்தார். கடைசியில் நேதாஜியின் கை கடிகாரத்தைப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டான். அந்த அறைக்கு வாடை ரூ.1. படுக்கைக்கு அரை ரூபாய். அந்த அறையில் ஒரு வாரகாலம் கழித்தனர்.

            அங்கு ஒரு இந்திய வியாபாரி இருந்தார், பெயர் உத்தம் சந்த். அவரைக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்து அவரோடு தங்கினார்கள். சுபாஷ் ரஷ்யாவுக்குச் செல்ல நினைத்து அவர்களைத் தொடர்பு கொண்டார், ஆனால் சரியான பதில் இல்லை. உடனே இத்தாலிக்கோ அல்லது ஜெர்மனி பெர்லினுக்கோ போவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

            அதற்குள் அவருக்கு காபூலில் பல இடையூறுகள், துன்பங்கள். கடைசியில் இத்தாலி தூதரின் மனைவி உத்தம் சந்தை அழைத்து, ரோம் நகரிலிருந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நேதாஜியை அங்கு அழைத்துக் கொண்டு போவார்கள் என்று செய்தியைச் சொன்னார்.

            அங்கிருந்து காரன்டைன் என்ற பெயருடன் கார், ரயில், விமானம் மூலம் பல இடங்களையும் கடந்து பத்து நாட்களுக்குப் பிறகு பெர்லின் நகரைச் சென்றடைந்தார் போஸ். கல்கத்தாவில் சுபாஷ் காணாமல் போனதிலிருந்து சரியாக 73ஆம் நாள் போஸ் பெர்லின் நகரில் சென்று இறங்கினார். பெர்லினில் ஹிட்லர் சுபாஷை வரவேற்றார்.

            சுபாஷுக்கு உதவிய உத்தம் சந்த் சுபாஷ் 1943இல் ராவில்பிண்டியில் கைது செய்யப்பட்டார். ராவல்பிண்டி சிறையில் இருந்த போதுதான் உத்தம் சந்த் இந்த வரலாற்றினை முதன்முதலாக எழுதி வெளியிட்டார்.

             இந்தியாவிலிருந்து தலைமறைவாகி, பெஷாவர் சென்று அங்கிருந்து ஆப்கன் தலைநகர் காபூலில் தங்கி, அங்கிருந்து ஜெர்மனியில் பெர்லின் நகர் சென்றது வரை இந்த கட்டுரையின் முதல் பகுதியில் படித்தோம். இனி....


            பெர்லினில் சுபாஷுக்கு ஹிட்லர் சிறப்பான வரவேற்பளித்தார். ஜெர்மானியர்களும், இத்தாலியர்கௌம் சுபாஷ் மீது பற்று மிக வைத்திருந்தனர். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை மீட்டெடுத்து சுதந்திர நாடாக ஆக்க அவர் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இருந்த போது அங்கு ஓர் இந்தியப் படையை உருவாக்கி, அதற்கு ஜெர்மனியின் ஒத்துழைப்பையும் பெற்றார். நேதாஜி ஜெர்மனியில் இருந்தபோதுதான் எமிலி என்கிற ஆஸ்ட்ரிய / ஹங்கேரிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார். எமிலி 1910 டிசம்பர் 26இல் பிறந்தவர். இவர் 1996 மார்ச் 13இல் ஆஸ்ட்ரியாவின் வியன்னா நகரில் காலமானார். நேதாஜியின் மகள் இந்தியா வந்து கல்கத்தாவுக்கும், ஜப்பான் டோக்கியோவில் வைக்கப்பட்டிருக்கும் நேதாஜியின் அஸ்தி கலசத்தையும் பார்த்துவிட்டுப் போனார்.

            ஆசியாவின் கீழ்த்திசையில் ஜப்பான் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் வென்ற பகுதிகளில் இருந்த இந்திய படைவீரர்களை யெல்லாம் பிரிட்டன் ஜப்பானிடம் சரணடையச் சொல்லி விட்டது. அப்படி சரணடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

            ஜெர்மனியும், ஜப்பானும் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பல் கொடுத்து உதவின. 1943 ஜூன் 20ஆம் நாள் நேதாஜி பெர்லினை விட்டுக் கிளம்பி ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரை வந்தடைந்தார். அங்கு அவருக்குப் பெரும் வரவேற்பு. தொடர்ந்து பர்மா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் இந்தியர்கள் தவிர, ஜப்பானியர்கள், சீனர்கள், மலாய், பர்மியர்களும் அடக்கம்.

            சுபாஷ் ஜப்பானில் இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு அங்கு வசித்து வந்த ராஷ் பிகாரி கோஷ் என்பவரைச் சந்தித்தார். அவர் நிறுவிய இந்தியா லீக் அமைப்பின் தலைவராகவும் சுபாஷ் நியமிக்கப்பட்டார்.

            பிரிட்டிஷாரால் கைவிடப்பட்டு ஜாப்பானிடம் சரணடைந்த இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவம் நிறுவப்பட்டது. அந்தப் படைப் பிரிவுகள் காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ஆசாத் பிரிகேட், ஜான்சிராணி பிரிகேட் என்ற பெயரில் பிரிக்கப்பட்டது. ஜான்சிராணி பிரிகேட்டுக்கு இளம்பெண்கள் பலர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

            1943 அக்டோபர் மாதம் இதிய குடியரசை சுபாஷ் அறிவித்தார். அவர்தான் படைத்தளபதியும். ஜப்பானியர்கள் தாங்கள் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபார் தீவுகளை இந்திய சுதந்திர அரசாங்கத்துடன் ஒப்படைத்தது. 1943 டிசம்பர் 30இல் சுபாஷ் அந்தமானுக்கு வந்து போர்ட் ப்ளேரில் இந்திய மூவண்ண கொடியை ஏற்றி சுதந்திர தின சொற்பொழிவாற்றினார். இன்றும் அந்த சொற்பொழிவு வலைத்தளங்களில் இருக்கின்றன.

              ‘நேதா’ என்றால் தலைவர், சுபாஷ் சந்திர போஸ் எனும் பெயர் மெல்ல நேதாஜி என்றே வழங்கத் தொடங்கியது. இவர் ஐம்பதாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு இந்திய படையை உருவாக்கினார். ஏற்கனவே ராணுவத்தில் இருந்தவர்கள்தான் ஐ.என்.ஏ. என்ற இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்ததனால் இவர்கள் அல்லாமல் புதியவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கிழக்காசிய நாடுகளில் எல்லாம் இருந்த இந்தியர்கள் ஐ.என்.ஏ.வுக்கு ஏராளமாக பண உதவி செய்தார்கள். ஒரு வங்கி தொடங்க ஒருவர் ஐம்பது லட்சம் கொடுத்தார், பெண்கள் சிலர் எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர். நேதாஜி போகுமிடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு.

            நேதாஜி எந்த நாட்டுக்கும் அடிமையாகவில்லை, தன் ராணுவத்துக்கு வேண்டிய தளவாடங்களைக் கூட ஜப்பானிடம் பணம் கொடுத்து வாங்கினார். ஐ.என்.ஏ. என்பது சுதந்திரமான இந்திய ராணுவமாகத் திகழ்ந்தது. அவர் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவுக்கு மூவண்ணக் கொடி தேசியக் கொடி. ஆட்சி மொழி இந்தி. “டெல்லி சலோ, டெல்லி சலோ” என்பது ராணுவத்தின் போர் முழக்கம், ‘ஜெய் ஹிந்த்’ என்பது நேதாஜியின் அறைகூவல். ஐ.என்.ஏ.வின் ஜான்சிராணி பிரிகேடுக்கு சென்னையைச் சேர்ந்த மேஜர் லக்ஷ்மி.

            1944 ஜனவரி 26 (காங்கிரசில் ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக வெகுகாலமாக அனுசரித்து வந்தனர்) அன்று ஐ.என்.ஏ.வின் ராணுவ அணிவகுப்பை நேதாஜி பார்வை யிட்டார். ‘டெல்லி சலோ’ ‘ஜெய் ஹிந்த்’ எனும் ராணுவ கோஷங்களுடன் படை டெல்லி நோக்கிப் புறப்பட்டது.

            1944 ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய ராணுவம் பர்மா அரக்கான் பகுதியில் பிரிட்டிஷ் ராணுவத்துடன் நடந்த போரில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய ராணுவம் இம்பால், மணிப்பூர், கொஹீமா ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. போர் உச்ச கட்டத்தை நெருங்கிய சமயம் ஜப்பானிலிருந்து ஆயுதங்கள் வருவது குறைந்தது. வேறு வழியின்றி படையைப் பின்வாங்க நேதாஜி உத்தரவிட்டார்.

            அந்த நேரம் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசி படுநாசத்தை விளைவித்தது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் விழுந்த அணுகுண்டுகள் போரின் திசையை மாற்றியது. பர்மாவிலும் பிரிட்டிஷ் ராணுவம் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் நேதாஜி ஜப்பான் செல்வதற்காக 1945 ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானத்தில் ஏறினார். அந்த விமானம் என்னவாயிற்று? அதில் பயணித்த நேதாஜி என்னவானார்? அன்று அவருடன் விமானத்தில் பயணம் செய்த கர்னல் ஹபிபுர் ரஹ்மான் விமானம் ஃபார்மோசா தீவுக்கருகில் தீப்பற்றி விழுந்தது, அதில் நேதாஜி தீக்காயங்களுடன் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்று சொல்லியிருக்கிறார்.

            இந்திய சுதந்திரம் என்பது மகாத்மா காந்திஜியின் தலைமையில் நடந்த அகிம்சை, சத்தியாக்கிரக போராட்டங்களாலும், நேதாஜி போன்றோர் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தினாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்தியாகம் செய்தும், சிறைக்குச் சென்று கடுந்தவம் செய்தும் கிடைத்தது என்பதை சுதந்திர இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தால் சுதந்திரத்தின் விலை என்ன என்பது தெரியும். இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட ஒவ்வோர் தியாகியையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் ஒவ்வொருவரும் உறுதி மேற்கொள்ள வேண்டும்.  சுதந்திரத்தின் அருமை தெரியாமல், சுதந்திரத்துக்காக நம்மவர்கள் செய்த அரும்பெரும் தியாகத்தை உணராதவர்கள், தேசபக்தி யில்லாதவர்கள், இவர்களால் எல்லாம் அரும்பெரும் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் புரியும். 

             கல்கத்தாவிலிருந்து பெஷாவருக்கும், பிறகு அங்கிருந்து காபூலுக்கும், அங்கிருந்து பெர்லினுக்குமாக விரைந்து மறைந்தவர் சுபாஷ் என்பதால் இந்த கட்டுரையின் தலைப்பு அவர் மறைந்த மாயம் என்பது.  வாழ்க நேதாஜி புகழ்!




பத்திரிகையாளர் சந்திப்பு.


                                   
          பத்திரிகையாளர் சந்திப்பு என்பது நீண்ட நெடு நாட்களாக நமக்குத் தெரிந்த நிகழ்வு. என்னுடைய 83 வயதில் நேரு காலம் தொடங்கி பல பெருந்தலைவர்களையும், கலைத்துறையினர், முக்கிய அயல்நாட்டு விருந்தினர், அரசு அதிகாரிகள் ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகள் பற்றி முன்பெல்லாம் பத்திரிகைகளில் வரும், அப்போது அந்த சந்திப்பு நிகழ்ச்சி எப்படி நடந்திருக்கும் என்பதை அரசு திரையரங்குகளில் வெளியிடும் நியூஸ் ரீல் மூலம் தான் அறிந்து கொள்ள முடிந்தது. இப்போதெல்லாம் டி.வி.நிகழ்ச்சியை இடையில் நிறுத்திவிட்டு இப்போது இன்னார் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லி ஒரு நிகழ்ச்சியைக் காட்டுகிறார்கள்.

டி.வி.அறிமுகமான புதிதில் சில பெருந்தலைவர்கள் நடத்திய பிரஸ் மீட் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். ஒரு மாநாட்டு அறையில் நிறைய நிருபர்கள் காமிராக்கள், எழுதும் நோட்புக் சகிதம் உட்கார்ந்திருப்பார்கள். முக்கிய விருந்தினர் அருகில் சில உதவியாளர்கள் இருப்பார்கள். நிருபர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் பெயர், எந்த ஊடகம் போன்றவை கொண்ட ஒரு அட்டை கொடுக்கப்படும்.

உதவியாளர்கள் அவர்களில் குறிப்பிட்ட எவராவது ஒருவரைக் கேள்வி கேட்கச் சொல்வார். அவர் மட்டும் எழுந்து கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்பார். நிருபர்கள் என்பவர்கள் மிகுந்த தகுதி வாய்ந்த, திறமை வாய்ந்த, கட்டுப்பாடு, கண்ணியம் காப்பவர்களாக இருந்ததால் சுயகட்டுப்பாட்டோடு அவரவருக்கு கிடைக்கும் வாய்ப்பில் கேள்விகள் கேட்பார்கள், கேள்விகளும் முக்கியமானதாகவும், அவசியமான விவரங்களைத் தெரிந்து கொள்ளும் விதத்திலும் இருக்கும்.  பேட்டி அளிப்பவர் சொல்வதை அனைவரும் குறித்துக் கொள்வார்கள். கூடியமட்டும் வந்திருக்கும் அனைத்து நிருபர்களுக்கும் வாய்ப்பு வரிசைப்படி கொடுக்கப்படும். கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்காமலும், ஒரே நேரத்தில் பலரும் கத்தி ஒன்றும் புரியாமல் செய்ய மாட்டார்கள்.  புதிய செய்திகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் அறிவுபூர்வமாகவும் கேள்விகள் அமையும். மறுநாள் எல்லா ஊடகங்களிலும் ஒரே மாதிரியான செய்தி வெளியாகும், எங்காவது ஒருசில மாற்றங்களும் இருக்கும்.

ஆனால் இப்போது பத்திரிகையாளர் சந்திப்பு என்பது சந்தைப்பேட்டையை நினைவு படுத்துவதாக இருக்கிறது. வழக்கம் போல பிரபல ஊடகங்கள் தவிர, ஏனைய சின்னஞ்சிறு பத்திரிகை அல்லது ஏதாவது ஊடகங்கள் சார்பிலும், புகைப்படக் கருவி, வீடியோ காமரா சகிதம் அவை நிறைந்து தயாராக இருக்கிறார்கள்.

            பேட்டி அளிப்பவர், வந்தோம், கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்தோம் என்பது இல்லை. அவர் வந்து கூட்டம் அமைதியடையும் வரை காத்திருக்க வேண்டும். இடையில் கூடியிருப்பவர்கள் தங்களுக்குள் விவாதம் செய்வதெல்லாம் கூட நமக்குக் கேட்கும். தான் தயார் என்பதை ஒலிபெருக்கி மூலம் சொல்லி கேளுங்கள் என்றதும் தொடங்கும் ‘கோரஸ்’. ஒரே நேரத்தில் பலரும் பல்குரலில் பல்வேறு கேள்விகள். எந்த குரல் உரத்து ஒலிக்கிறதோ அந்தக் குரலுக்குடையவரை முக்கியஸ்தர் பார்த்து அவருக்குப் பதிலளிக்கிறார். உடனே அடுத்த கேள்விக்கும் ஒரே கோரஸ். இப்படிப்பட்ட சந்திப்புகளில், கேள்வி கேட்பவர்களின் கூச்சல் மெலிதாக டிவியில் கேட்கிறது, என்ன கேட்கிறார்கள் என்பது ஒலிபரப்பாவதில்லை. பதில் சொல்லும் போதுதான், கேட்டவர் என்ன கேட்டிருப்பார் என்பது ஓரளவு புரிகிறது.

            பேட்டி அளிப்பவருடன் சில உதவியாளர்கள் இருக்க வேண்டும். முன்கூட்டியே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்து அதனை அந்த உதவியாளர்கள் வைத்திருக்க வேண்டும். சந்திப்பு தொடங்கியவுடன் அவர் முதலில் முக்கியமான ஊடகங்களின் நிருபர்களுக்கான எண் அட்டையை எடுத்துக் காட்டி அல்லது சொல்லி, அவரைக் கேள்வி கேட்கச் சொல்ல வேண்டும். அதனை அடுத்து ஒவ்வொருவரின் எண்ணையும் வரிசையாகச் சொல்லி அவர்களைக் கேட்கச் செய்ய வேண்டும். கேள்வி கேட்க விரும்புபவர்கள் எவரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் வாய்ப்பு அளித்திட வேண்டும். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பக் கேட்டு அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் நிலையை யாரும் உருவாக்கக் கூடாது, அப்படி தேவையில்லாமல் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைப் பலரும் கேட்பதை உடன் இருக்கும் அதிகாரிகள் அனுமதிக்காமல் அனைவரும் ஒரே நேரத்தில் கூச்சலிட்டு கேள்விகள் கேட்காமலும் ஒரு ஒழுங்கினை கடைபிடித்து நடந்து கொண்டால், எல்லோராலும் கேள்விகள் கேட்க முடியும், ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டு தொல்லை தராமலும், தரமான, அவசியமான விளக்கங்களைக் கேட்டு வெளியிட ஊடகங்கள் முன்வர வேண்டும். சுய கட்டுப்பாடு அவர்களாகவே உருவாக்கிக் கொண்டாலும் சரி, அல்லது பேட்டி அளிப்பவர் சார்பில் உடனிருப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பு என்பது ஒரு கட்டுப்பாட்டுடன் கண்ணியமிக்கதாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். செய்வார்களா?

மகாத்மா காந்திஜியின் கடைசி நாள்.


                                      
          30 ஜனவரி 1948, வெள்ளிக்கிழமை, விடியற்காலை 3.30க்கு தூங்கி எழுந்தார். சில நிமிஷங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு வேலைகளில் ஈடுபட்டார். 4-45க்கு எலுமிச்சம்பழச் சாறும் தேனும் கலந்த வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தினார். பிறகு சிறிது நேரம் கழிந்தபின் மீண்டும் படுத்து உறங்கிவிட்டு காலை 6 மணிக்கு விழித்தெழுந்தார்.  பிறகு உதவியாளர் பியாரிலாலிடம் காங்கிரசை புனரமைப்பு செய்ய தான் எழுதிய புதிய விதிகள் அடங்கிய பிரதியைக் கொடுத்து அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு ஏதேனும் விடுபட்டிருந்தால் சேர்க்கும்படி சொன்னார்.

            காலை பத்திரிகைகளைப் படித்து முடித்தார். அரை மணி கழித்து குளிக்கச் சென்றார். பிறகு பியாரிலாலிடம் சென்னை மாகாணத்தில் ஏற்பட்டிருந்த உணவுப் பஞ்சத்தை எங்ஙனம் சமாளிப்பது என்பது பற்றி, தங்களது நவகாளி அனுபவத்தை வைத்து ஒரு குறிப்பு தயாரிக்கச் சொன்னார்.

(தேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட மதக் கலவரம் வங்காளத்தில் உச்சத்துக்குச் சென்ற சமயம் காந்திஜி நவகாளி என்ற இடத்துக்கு நேரில் போய் அங்கு உண்ணாவிரதமிருந்து சமய ஒற்றுமைக்குப் பாடுபட்டார். அந்த சமயம் நவகாளியில் எப்படி உணவு பற்றாக்குறையை சமாளித்தார்கள் என்பதையொட்டி ஒரு அறிக்கை தயார் செய்யச் சொன்னார். இப்போது அந்த நவகாளி எனும் ஊர் பங்களாதேஷில் இருக்கிறது.)

            அடுத்ததாக நடைபெறவிருந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரசின் விதிமுறைகளை மாற்றி, காங்கிரஸ் என்ற கட்சியை “லோக சேவா சங்கம்” என்ற பெயரில் மாற்றி, கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்கி, கிராம சேவை ஊழியர்களை நியமித்து நிர்வாகம் நடத்த ஆலோசனை கூறப்பட்டிருந்தது.

            காலை 9-30 மணிக்கு வங்கமொழி கற்கத் தொடங்கினார். நவகாளி யாத்திரை வந்தது முதல் அவர் வங்க மொழியைக் கற்கத் தொடங்கியிருந்தார். பிறகு பியாரிலால் கொண்டு வந்து கொடுத்த காங்கிரஸ் புனரமைப்பு விதிகளை பார்வையிட்டார்.  பகல் 12 மணிக்கு டெல்லி முஸ்லீம் தலைவர்கள் வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் தான் சேவாகிராம் செல்லப்போவதாகவும், 1948 பிப்ரவரி 2ஆம் தேதி அங்கு ஒரு மகாநாடு நடைபெறப்
போவதாகவும் அவர்களிடம் காந்திஜி சொன்னார்.

            பிறகு பிஷன் எனும் ஊழியரை அழைத்துத் தனக்கு வந்திருந்த கடிதங்களைக் கொண்டு வரச் சொன்னார். அவற்றைப் படித்துவிட்டு இன்றைய தினமே பதிலெழுத வேண்டும், ஏனென்றால் நாளைக்கு நான் இருப்பேனோ இல்லையோ, யார் கண்டார்கள் என்றார். பிறகு சுதிர் கோஷ், பியாரிலால் இருவரிடமும் பேசிக்கொண்டு இருந்தார்.

            பகல் 2-15. காந்திஜியைப் பேட்டி காண வந்திருந்தவர்களுக்கு பேட்டியளிக்கத் தொடங்கினார். இலங்கை டாக்டர் டி சில்வா, அவர் மகள் வந்திருந்தனர்.  பிப்ரவரி 14 அன்று இலங்கை சுதந்திரம் பெறுவதால், காந்திஜியிடம் சுதந்திர தினச் செய்தி வாங்கிச் செல்ல அவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு செய்தி கொடுத்துவிட்டு அதில் காந்திஜி கையெழுத்திட்டார். அதுதான் அவருடைய கடைசி கையெழுத்து.

            3 மணிக்கு மேலும் பலரும் வந்து சந்தித்தார்கள். 4 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் தன் மகள் மணிபென் படேலுடன்  வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.   4-30க்கு சிறிது ஆட்டுப்பால், பழரசம் அருந்தினார். மாலை 5 ஆகிவிட்டது. அப்போது அவர் பிரார்த்தனை மேடையில் இருக்க வேண்டும். 5-10க்கு அவசரமாகக் கிளம்பி பேத்திகள் மனுகாந்தி, ஆபாகாந்தி ஆகியோர் தோள்களில் கைபோட்டுக் கொண்டு பேசிக்கொண்டே வேகமாக மேடைக்கு நடந்து வந்தார்.

            பிரார்த்தனைக் கூட்டத்துக்காக சுமார் 500 கூடியிருந்தனர். அவர் வருவதைக் கண்டு கூட்டத்தினர் எழுந்து நின்றனர். காந்திஜி அனைவரையும் கைகுவித்து வணங்கியபடி வந்தார். அப்போது..........

            கூட்டத்தின் இடப்பக்கத்திலிருந்து ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து வந்து காந்திஜிக்கு எதிரில் அவர் பாதங்களைத் தொட்டுக் கும்பிடக் குனிந்தார். மனுகாந்தி அவரைத் தடுக்க முயன்றார், காரணம் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுவது காந்திஜிக்குப் பிடிக்காது. மனுகாந்தியை வந்த மனிதர் ஒதுக்கித் தள்ள, அவர் கையில் இருந்த நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் உமிழும் படிக்கம் இவை கீழே விழுந்து விட்டன. மனுகாந்தி அவற்றை எடுக்க முயன்ற நேரத்தில், வந்தவர் காந்திஜிக்கு முன் சில அடி தூரத்தில் நின்று கொண்டு கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி மூன்று முறை சுட்டார். மூன்று குண்டுகளில் இரண்டு அவர் உடலை ஊடுறுவிக் கொண்டு போய்விட்டன, ஒன்று அவர் உடலினுள் தங்கிவிட்டது.

            முதல் குண்டு பாய்ந்ததுமே அவர் கால்கள் தடுமாறி, கரங்கள் சரிந்தன; இரண்டாவது குண்டு வெடித்ததும் இவர் “ஹே, ராம்!” என்று இருமுறை சொல்லிக் கொண்டே மூன்றாவது குண்டு பாய்ந்ததும் கீழே சாய்ந்தார். அப்போது சரியாக மாலை 5 மணி 17 நிமிடம். அவர் கீழே விழுந்தபோது அவர் மூக்குக் கண்ணாடியும் விழுந்தது. காலில் அணிந்திருந்த செறுப்புகள் நழுவின. காந்திஜி உடல் தரையில் சரிந்து விழுந்து கிடந்தது. ஒரு சகாப்தம் அன்றைக்கு முடிந்து மண்ணில் விழுந்து விட்டது.