பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 1, 2015

36. குழந்தைக் கதை


              ராமபுரம் என்ற ஊரில் வட கோடித் தெருவில் ஒரு பெண் குழந்தை தன் வீட்டு மேடையில் ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து பச்சை நூலில் ஊசி கோர்த்துத் தையல் வேலை செய்து கொண்டிருந்தது.

             அப்போது நேர்த்தியான காலை வெயிலடித்தது. அவ்வீட்டைச் சுற்றி நாற்றிசைகளிலும் நெருங்கி வளர்ந்திருந்த தென்னை, முருங்கை, ஆத்தி, வாழை முதலிய பசுமரங்களின் இலைகள் இள வெயில் இன்பத்திலே களி கொண்டு நின்றன. காக்கை, புறா, கிளி, சிட்டுக் குருவி, நாகணவாய், ஓரிரண்டு மரங்கொத்திக் குருவிகள் முதலிய பக்ஷிகள் ஓடிப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டு உலாவின.

            இந்தச் சமயத்தில் தெருவில் ஒருவன் "வெல்லம் வாங்கவில்லையா, வெல்லம்" என்று கூவிக்கொண்டு வந்தான். அக் குழந்தை யிருந்த வீட்டுக் கெதிர் வீட்டு வாயிலில் சுமார் நாற்பது வயதுடையவராகத் தோன்றிய கிருகஸ்த ரொருவர் நின்று கொண்டிருந்தார். அவர் பார்வைக்கு வேளாளரைப் போலிருந்தார். அந்த முதலியார் வெல்ல வியாபாரியை நோக்கி: "ஏ, யாரப்பா வெல்லம் இங்கே கொண்டுவா" என்றார். வெல்ல வியாபாரி நாட்டுப்புறத்தான். அவனுக்குச் சுமார் முப்பது வயதிருக்கும், முழங்காலுக்கு மேல் இடுப்புவரை ஓரழுக்குத் துணியை வளையக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய பிரப்பங் கூடையில் வெல்லத்தை வைத்துத் துணியால் மூடி அதைத் தலைச்சும்மாட்டின் மேலே சுமந்து கொண்டு வந்தான். முதலியார் வீட்டு வெளித் தாழ்வாரத்தில் கூடையை இறக்கினான். அப்போது அங்கு பக்கத்து வீட்டிலிருந்து ஒரு செட்டிச்சியம்மா வந்து சேர்ந்தாள். இவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும்: விதவை. சிவப்புத் துணி கட்டியிருந்தாள்.
ரவீந்திர நாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற் பங்கு காயாகவுமிருந்தது. அதாவது, முக்காற்பங்கு நரை; பாக்கி நரையில்லை.

               செட்டிச்சி வந்து குனிந்து கூடைமீதுள்ள துணியை விலக்கினாள். "தொடாதே யம்மா" என்று வெல்ல வியாபாரி கத்தினான். அதற்குள் வேறு சில செட்டிச்சிகளும் வந்து கூடி விட்டனர்.

     சத்தம் அதிகப்பட்டது. பலவிதமாக விலை பேசலாயினர். "பணத்துக்கு எத்தனை கட்டி? இன்னும் இரண்டு போடு......அட, போ, மூன்று காசுக்குப் பால் மாறாதே......அடீ, நீவாடீ, நாம் கடைத் தெருவில் போய் வாங்கிக் கொள்ளலாம்" என்று நானாவிதமான சம்பாஷணைகள் நிகழ்ந்தன. வியாபாரம் நடக்கவில்லை. ஸ்திரீகளின் கூட்டம் அதிகப்பட்டவுடனே, முதலியார் அங்கிருந்து சற்றே விலகிக் கொண்டார். அப்போது அந்த முதலியாருடைய நண்பராகிய ஒரு கிழவர் அங்கு வந்து சேர்ந்தார். அவ்விருவரும் சம்பாஷணை செய்யலாயினர்.

     நான் அந்த வீதியில் ஒரு வேலையாகப் போயிருந்தேன். ஒரு மனிதருக்காகக் காத்திருக்கும்படி நேரிட்டது. அக் குழந்தை தையல் வேலை செய்து கொண்டிருந்த வீட்டுக்குக் கீழே ரஸ்தாவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

     அப்போது அந்த முதலியார் சொன்னார்: "வெல்லம் விலை விஷம் போலேறி விட்டது. அட, வெல்லம் மாத்திரமா, பெருங்காயம் முதல் பலாப்பழம் வரை; உப்பைத் தொட்டுக் கற்பூரம் வரை எல்லாச் சாமான்களுக்குந் தான் விலை ஒரேயடியாகப் பின்னுக்கேறி விட்டது. தெருவிலே கீரை கொத்தமல்லி கொண்டு வரும் கிழவிகூடப் போன வருஷத்துக்கு இவ்வருஷம் மூன்று மடங்கு சாமான் குறைவாகப் போடுகிறாள். இந்தக் குட்டிச் சுவராக, மண்ணாகப் பாழாகிப் போகிற ஜெர்மனிக்காரன் எப்போது தான் சண்டையை நிறுத்துவானோ?" என்று முதலியார் பெரு மூச்சு விட்டார்.

                உடனே அந்தக் கிழவர் சொல்லுகிறார்: "ஜெர்மனியானுக்குப் பலமான அடி! நம்முடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் இஸ்திரிக்கடை வைத்திருக்கிறார். அவருக்குத் தினந்தோறும் 'சுதேசமித்திரன்' பத்திரிகை வருகிறது. அவர் அதைப் படித்து சாயங்காலம், சாயங்காலம் நமக்கு விஷயங்களெல்லாம் சொல்லுவார். ஜெர்மனி ராஜா சிங்காதனத்தை விட்டு நீங்கி விட்டானாம். நேசக் கக்ஷியார் சீக்கிரம் பெர்லின் நகரத்தைப் பிடித்துக் கொள்வார்களாம். ஜெர்மனியான் சமாதானம் கேட்டானாம். அது நேரே நம்முடைய இங்கிலீஷ்காரரிடம் கேட்காமல் அமெரிக்காவிலே போய்க் கேட்டானாம். அமெரிக்காவில் ராஜாவே கிடையாதாமே! ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரை அங்கே நாலைந்து வருஷத்துக்கு 'ஆக்டிங்'காக ராஜா மாதிரி வைத்திருக்கிறார்களாம்.

அவர் ஜெர்மன் ராஜாவுக்குப் பதில் வார்த்தையாக "உன்னைத் தூள் தூளாகச் செய்த பிறகுதான் சமாதானமேயொழிய அதுவரை சமாதானத்தைப் பற்றி உச்சரிக்கக் கூடாதென்று சொல்லி விட்டாராம். நல்ல வாத்தியார் அவர்" என்று கிழவர் சொன்னார்.

அப்போது முதலியார்: "அப்படியானால் சண்டை சமீபத்தில் முடியப் போகிறதில்லை. நேசக் கக்ஷியால் தம்முடைய பூமியெல்லாம் மீட்டுக் கொண்டு அப்பால் ஜெர்மனியின் எல்லைமேல் படையெடுத்துப் போய் பர்லின் நகரத்தைப் பிடுங்க வேண்டுமானால் அதற்கு இன்னும் குறைந்த பக்ஷம் இரண்டு மூன்று வருஷமாவது செல்லாதா?"

என்றார். அது கேட்டுக் கிழவர்: "ஹும், ஹும், ஹும், ஜெனரல் போஷ் என்ற நேசக்கக்ஷி ஸேனாதிபதி மஹா, மஹா, மஹா, வீரராம். அமெரிக்காவிலிருந்து எண்ணத் தொலையாத புதுத் துருப்புகள் வந்திருக்கின்றனவாம். இன்னும் நாலைந்து மாதத்தில் ஜெர்மனி துவையலாய்ப் போய்விடும், பார்த்துக் கொண்டேயிரும்" என்று சொன்னார்.
இங்ஙனம் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே, வெல்ல வியாபாரியைச் சூழ ஸ்திரீகளின் கூட்டம் பெருங் கூட்டமாய் விட்டது.

மேடையின் மீது தையல் வேலை செய்துகொண்டு தெருவை நோக்கி யிருந்த குழந்தை ஏதோ பராக்காக இருக்கையிலே, ஒரு காக்கை அந்தக் குழந்தையின் கையைத் தீண்டிக் கொண்டு பாய்ந்து செல்ல அதனால் அக் குழந்தை பயந்து கையிலிருந்த நூல் நழுவி விட்டது. அந்த நூல் என்தலைமேல் வந்து விழுந்தது. அதை நான் அப்படியே தரையில் விழாதபடி கையால் பிடித்துக் கொண்டேன். இதைக் கண்டு குழந்தை மகிழ்ச்சி யடைந்து அந் நூலை என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளும் பொருட்டாகக் கீழே யிறங்கி ரஸ்தாவுக்கு வந்தது.

அந்தப் பெண் குழந்தைக்குச் சுமார் எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். மிகவும் அழகான ரூபம்; செவப்பு நிறம். ஒரேவிதமாக வெள்ளையுமில்லை. சுத்த மஞ்சள் நிறமில்லை. அரை மஞ்சள்; காலை வெயிலின் நிறத்தை அந்தக் குழந்தையின் நிறத்துக்கு ஒப்பிடலாம். அதன் முகத்தில் அற்புதமானதொரு நிலாவொளி வீசிற்று. மானே போல விழிகள். ஆஹா! அந்தக் குழந்தையின் விழிகளிலே தோன்றிய சௌந்தர்யத்தை நான் எங்ஙனம் வர்ணிப்பேன்! அதன் கண்களைப் பார்த்தால் ஒருவனுடைய பாவங்கள், பிணிகள், பயங்களெல்லாம் பறந்தோடிப் போய்விடும்.

அதன் கண்களை நோக்கி நான் வியந்து கொண்டிருக்கையிலே, அப் பெண், "நூலைக் கொடு" என்று கேட்டது.

"உன் பெயரென்ன?" என்று வினவினேன்.

"நூலைத் தா வென்றால் பெயரென்னவா! என் பெயர் பேரில்லாப் பூச்சி, நூலைத்தா" என்றது.

அப்போது நான் அக் குழந்தையை நோக்கி "ஏ, பேரில்லாப் பூச்சி, உன் தந்தை பெயரென்ன?" என்றேன்.

            அது மறுபடி "நூலைப் போடு, நூலைப் போடு" என்று கூவிற்று.

"உன்னுடைய உண்மையான பெயரைச் சொன்னாலன்றி நான் இந்த நூலைத் தரமாட்டேன்" என்றேன்.

"என் பெயர் இப்போது சொல்ல மாட்டேன், நீ முதலாவது நூலைக் கொடு. பிறகு சொல்லுகிறேன்" என்றது குழந்தை.

இதற்குள் வெல்ல வியாபாரி போய்விட்டான். செட்டிச்சிகளின் கூட்டமுங் கலைந்து விட்டது. முதலியாரும் கிழவரும் எழுந்து வீட்டுக்குள்ளே போய்விட்டனர்.

தெருவில் சத்தத்தையே காணவில்லை. சாக்கடையோரத்தில் ஓரழகான சேவல் நின்றுகொண்டு அகண்ட லோகத்துக்கும் தானே ராஜா வென்ற பாவனையுடன் "கொக் கொக் கோ" என்று கூவிற்று.

வானத்திலே மரக் கிளைகளினின்றும் குருவிகளின் சங்கீதமும், காக்கைகளின் சுயக்குரலும் செவிப்பட்டன.

அக் குழந்தை என்னை நோக்கி மறுபடி: "நூலைக் கொடுப்பாயா? மாட்டாயா? ஒரே வார்த்தை சொல்" என்றது.

"மாட்டேன்" என்றேன்.

அப்போது அக் குழந்தை என்னை மிகவுங் கோபத்துடன் நோக்கித் தரைமேல் எச்சிலுமிழ்ந்து விட்டுத் தன் வீட்டுக் குள்ளே சென்றது. சிறிது நேரத்துக் கெல்லாம் உள்ளேயிருந்து ஒரு மனிதனை அழைத்துக் கொண்டு வந்தது. அந்த மனிதனைப் பார்த்தால் ஒரு மகமதியை சுல்தானைப் போலிருந்தது.

            இடுப்பில் நிஜார். உடம்பின் மீது தழையத் தழைய ஒரு மஸ்லின் உடுப்பு. நெஞ்சு வரை தாடி தொங்குகிறது. ஜெர்மனி தேசத்து கெய்ஸர் மாதிரி மீசை வைத்துக் கொண்டிருந்தான். பச்சைப் பட்டுத் துணியொன்றைத் தலையில் சுற்றிக் கொண்டிருந்தான்.

'குழந்தையைப் பார்த்தால் பிராமணக் குழந்தை போலிருக்கிறது. இவனைப் பார்த்தால் பச்சைப் பட்டாணித் துருக்கனைப் போலிருக்கிறது. இதென்னடா ஆச்சரியம்' என்று நான் சற்றே திகைப்பெய்தி நின்றேன். அப்போது அக் குழந்தை அவனிடம் என்னைச் சுட்டிக்காட்டி "இவர் தானப்பா, நூலை யெடுத்துக் கொண்டு தரமாட்டே னென்கிறார்" என்று சொல்லி அட்டஹாஸம் பண்ணிற்று. அதனின்றும் அக் குழந்தையின் பிதா, வந்த மனிதன் என்று தெரிந்து கொண்டேன்.

நூலைக் குழந்தை கையிலே கொடுத்துவிட்டேன். அது நூலை வாங்கிக் கொண்டு மறுபடி மெத்தைக்கு ஏறிப்போய், வீதியெதிரே நாற்காலியின் மீதிருந்து கொண்டு மீளவும் தையல் வேலை தொடங்கி விட்டது.

அந்த மனிதனுக்கு நான் என்னை அறியாமலே, மகமதிய ரீதியில் ஸலாம் பண்ணினேன். அவனும் சுத்தமான அரபி பாஷையில், "ஆலேகும் ஸ்லாம்" என்றான். எனக்குக் கால்கள் ஸ்தம்பித்துப் போயின. கடைசி வரை இந்த ஆள் துருக்கன் தானோ என்ன இழவோ? அப்படியானால், தெளிந்த பாண்டித் தமிழ் பேசும் மேற்படி பிராமணக் குழந்தை இவனை 'அப்பா' என்று கூப்பிட நியாயமில்லையே, இதென்ன விரோதம்! என்று யோசிக்கலானேன். இதனிடையே அந்த மனிதன் என்னை சம்பாஷணைக் கிழுத்தான்.

சிரித்துக் கொண்டே பேசுகிறான்: "வாருங்கள்; ஹெ, ஹெ, ஹெ, ஹெ. அந்தக் குழந்தையுடன் நூலுக்காகச் சண்டையா போட்டீர்கள்? இப்படி வாருங்கள்.
இந்தத் திண்ணையில் உட்காருங்கள். என்ன விசேஷம்? இங்கெதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றான்.

அப்போது நான்: "சரிதான். இந்த மனிதனுக்குப் போது போகவில்லை. நம்மை பேச்சுக் கிழுக்கிறான். நாம் எதிர்பார்க்கிற ஆளும் வரக்காணோம். நமக்குப் போது போக வேண்டுமோ, இல்லையோ? இவனுடனே கொஞ்சம் பேசுவோம். இவனுடைய விஷயத்தையும் தெரிந்து கொள்ளலாம்" என்றெண்ணி அந்த வீட்டுத் திண்ணைமேற் போய் உட்கார்ந்தேன். எதிர்த்த திண்ணையின் மேல் அவன் உட்கார்ந்து கொண்டான். எங்களுக்குள்ளே பேச்சாரம்பித்தது. "தங்களைப் பார்த்தால் இஸ்லாமானவர் மாதிரி இருக்கிறதே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.

அதற்கவன் நகைப்புடன்: "இல்லை; இல்லை; நமக்கு மஹமதியருடைய சிநேகம் அதிகம். அதனால் வேஷம் இப்படியிருக்கிறது. நான் சரியான சுதேசிப் பிராமணன்" என்றான்.

இப்படி யிருக்கையில் இந்த வீட்டுக்குள்ளே இருந்து ஒரு ஸ்திரீ அங்கு வந்தாள். அவளைப் பார்த்தாலும் பெரும்பாலும் துருக்கச்சி போலே தானிருந்தது. தலையை மாத்திரம் மூடிக் கொள்ளவில்லை. நெற்றியிலே ஒரு பச்சிலைப் பொட்டுக் குத்தியிருந்தது. அவளைப் போல அழகு நான் பார்த்ததே கிடையாது. அவளை இத்தனை அற்புதமான சௌந்தர்யத்துடன் படைத்த பிரமதேவன் அவளுக்கு மூக்கு மாத்திரம் நிறைய வைக்க மறந்து போய் விட்டான். எனவே அவள் சீனத்தி போலவும், துருக்கச்சி போலவும், நானாவிதமாகப் புலப்பட்டாள். அவளைக் கண்டவுடன் அந்தப் பிராமண ஸஹா:- "மெத்தையில் நாற்காலிகளெல்லாம் நேரே போட்டு வை; இவரும் இங்கேதான் காபி சாப்பிடுவார். காபி யெல்லாம் தயாராய் விட்டதா?" என்று கேட்டான்.

             "தயாராய் விட்டது" என்றாள்.

 "சரி, மெத்தைக்கு வருகிறீர்களா?" என்று அவன் என்னை அழைத்தான். நான் சம்மதப்பட்டேன். மூன்று பேரும் மெத்தைக்குப் போய்ச் சேர்ந்தோம். மெத்தையிலே நீண்ட மாடம்; அங்கு நீண்டதொரு மேஜையின் மேல் பழங்கள், ரொட்டி, பிஸ்கோத்து, ஒரு பெரிய காப்பிச் சொம்பு, நாலைந்து வெண்கலக் கிண்ணங்கள் இவையெல்லாம் அடுக்கி வைத்திருந்தன. நான்கு நாற்காலிகள் போட்டிருந்தன. குழந்தையையுஞ் சேர்த்து நாங்கள் நால்வருமாக இருந்து பழங்கள் முதலியவற்றைத் தின்று காபி குடித்தோம்.

   அப்போது நான் அந்தப் பிராமணனை நோக்கி "இவ்வளவு நேரமாயும் நான் உங்கள் பெயரை விசாரிக்கவில்லை. தங்களுடைய நாமதேய மென்ன?" என்று கேட்டேன்.

   அதற்கவன் என்னை நோக்கி: "உங்கள் பெயரென்ன?" என்றான்.

   "என் பெயர் குமாரதேவ முதலியார்" என்றேன்.

   "தொழில் என்ன?" என்று கேட்டான்.

   "பத்திரிகைகளுக்கு வியாசங்களெழுதுவது என்னுடைய தொழில்" என்றேன். 

               "சரிதான்" என்று சொல்லி ஒரு சுருட்டை எடுத்து முனையைக் கிள்ளி வாயிலே வைத்துக் கொண்டான். என்னிடம் ஒரு சுருட்டை நீட்டினான். "நான் சுருட்டுப் பிடிக்கும் வழக்க மில்லை" என்று சொல்லி விட்டேன். அப்பால் தன் மனைவியை நோக்கி, அவன் "தீப் பெட்டி கொண்டு வா" என்றான். அவள் கீழே யிறங்கிப் போய் ஒரு தீப் பெட்டியும், இரண்டு ரோஜாப் பூச் செண்டும், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, லவங்கம், ஏலக்காய் ஜாதிக்காய், ஜாதிப்பத்திரிகளும் கொண்டுவந்து மேஜையின் மீது வைத்தாள்.

               அந்தப் பிராமண ஸாஹப் சுருட்டுப் பிடிக்கலானான். நான் தாம்பூலம் தரித்துக் கொண்டேன்.

  பிறகு நான் மறுபடி அந்தப் பிராமணனை நோக்கி: "உங்களுடைய நாமதேயத்தை இன்னும் தெரிவிக்க வில்லையே" என்றேன்.

அப்போதவன்: "என் பெயர் கங்காதர சாஸ்திரி" என்றான்.

"இந்தக் குழந்தையின் பெயரென்ன?" என்று கேட்டேன்.

"நித்திய கல்யாணி" என்றான்.

பிறகு காலையில், அந்தக் குழந்தையிடம் நான் பெயர் சொல்லும்படி கேட்டபோது அது சொல்ல மாட்டே னென்று சாகஸம் பண்ணியதைக் கங்காதர சாஸ்திரியிடம் எடுத்துரைத்தேன்.

அப்போது கங்காதர சாஸ்திரி அந்தக் குழந்தையின் கீர்த்தி பிரதாபங்களை யெல்லாம் என்னிடம் விஸ்தரித்துச் சொல்லத் தொடங்கினான். "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது பழமொழி. அப்படி யிருக்க இத்தனை அழகும் முகத்தில் ஞானவொளியு முடைய அதன் பிதா புகழ்ச்சி புரிவது சகஜமேயாதலால், அவன் சொல்வதை யெல்லாம் நான் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கடைசியாக அவன்: "மேலும் நம்முடைய நித்திய கல்யாணிக்கு சங்கீதத்தில் ஆச்சரியமான ஞானம். கணக்கிலும் அப்படியே. இலக்கியத்திலும் அப்படியே. லௌகிக விஷயங்களிலும் இக் குழந்தைக்கு நல்ல ஞானமுண்டு. "சுதேசமித்திரன்" பத்திரிகையில் சண்டைத் தந்திகளை ஒன்று விடாமல் வாசித்துக் கொண்டு வருகிறாள். பூ மண்டல விஷயங்களெல்லாம் நித்திய கல்யாணிக்கு ஸ்பஷ்டமாகத் தெரியும்" என்றான்.

            இப்படி யிருக்கையில் வானத்தில் நான்கு புறங்களிலுமிருந்து மேகங்கள் வந்து சூழ்ந்து மழை பலமாகப் பெய்யத் தொடங்கிற்று.

அப்போது நான் காலையில், சிறிது நேரத்திற்கு முன்பு எதிர் முதலியாரும் கீழ்வரும் சண்டை விஷயமாகப் பேசியதை ஞாபகத்தில் கொண்டு அவர்களுடைய லௌகிக ஞானத்துக்கும் இக் குழந்தையின் ஞானத்துக்குமுள்ள தாரதம்யத்தைப் பரிசோதனை செய்வோம்; மழையோ பலமாகப் பெய்கிறது; நாம் எதிர்பார்த்த மனிதன் இன்று வரமாட்டான்; அந்தக் காரியத்தை நாளைக் கவனித்துக் கொள்ளலாமென்று யோசனை பண்ணி, அக் குழந்தையை நோக்கி, "பேரில்லாப் பூச்சி. இந்த யுத்தம் என்ன நோக்கங்களுடன் நடக்கிறது? சொல், பார்ப்போம்" என்றேன்.

"பூமி பாரங் குறைவதற்காக நடக்கிறது" என்றது.

"ஹும். அதைக் கேட்கவில்லையம்மா. ஜெர்மனியக் கக்ஷியார் என்ன நோக்கங்களுடன் போர் செய்கிறார்கள்? நம்முடைய நேசக் கக்ஷியார் என்ன கருத்துக்களுடன் யுத்தம் நடத்துகிறார்கள்?" என்று கேட்டேன்.

"நேசக் கக்ஷியாரை ஜயிக்க வேண்டுமென்ற கருத்துடன் ஜெர்மனி யுத்தம் நடத்துகிறது. ஜெர்மனியை ஜெயிக்க வேண்டுமென்கிற எண்ணத்துடன் நேசக் கக்ஷியார் யுத்தம் பண்ணுகிறார்கள்" என்று குழந்தை சொல்லிற்று.

"இது பொதுப்படையான வார்த்தை யன்றோ குழந்தாய்? இரு திறத்தாரின் யுத்த லக்ஷ்யங்கள் எவை?" என்று கேட்டேன்.

"பரஸ்பரம் வெற்றி பெற வேண்டுமென்பதே லக்ஷ்யம்" என்று அக் குழந்தை மீட்டும் சொல்லிற்று.

            "அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய வில்ஸன் பண்டிதர் நேசக் கக்ஷியாரின் யுத்த லக்ஷ்யங்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்?" என்று கேட்டேன்.

"லார்ட் கர்ஸன் என்ன சொல்லுகிறார்?" என்று அக்குழந்தை என்னிடம் கேட்டது. 

             அப்போது அக் குழந்தையின் தாய் புல்லாங்குழலைப் போன்ற குரலில் "பச்சை குழந்தையிடம் தொளைத்துத் தொளைத்துக் கேள்விகள் கேட்டால் அதற்கென்ன தெரியும்? அதன் பிதா அதை மித மிஞ்சிப் புகழ்ந்து பேசினார். அதை நம்பாதேயுங்கள். நித்திய கல்யாணி, நீ போய் பாடம் வாசி" என்றாள். குழந்தை புன்னகையுடன் குதித்தெழுந்து பாடம் படிக்கப் போய் விட்டது. இதற்குள் மழையும் நின்று விட்டது. நானும் பின்னுமொரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டேன். அப்பால் மேற்படி கங்காதர சாஸ்திரியிடமும், அவர் மனைவியிடமும் விடை பெற்றுக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன். மேற்படி குழந்தையின் விஷயமாக அதன் தாய் சொல்லியவார்த்தை மெய்யில்லை யென்றும், தந்தை சொல்லியதே சரியென்றும், என் மனம் உறுதியாய்க் கருதலாயிற்று. எனினும் ஜனாதிபதி வில்ஸனைக் காட்டிலும் லார்ட் கர்ஸன் விஷயத்தில் அக் குழந்தைக்கு அதிக மதிப்பேற்பட்டிருப்பதை எண்ணுமிடத்தே எனக்கு வியப்புண்டாகிறது.


No comments: