பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, December 25, 2020

தில்லையாடி வள்ளியம்மை (courtesy Malaichamy)

 

Malaichamy Chinna C

காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டிய தில்லையாடி வள்ளியம்மை!
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள தில்லையாடியை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் முனுசாமி மங்கலம் தம்பதியினர். இவர்களுக்கு 1898 ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பார்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களை வைத்து வேலை வாங்க முடியாத அங்குள்ள தோட்ட முதலாளிகள். பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் அப்பாவி கூலித்தொழிலாளர்கயை ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்தே அதிகம் பேர் அடிமைகளாக சென்றனர். இங்கிருந்து சென்றவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் கிறிஸ்தவ சட்டப்படியும், திருமண பதிவாளர் சட்டப்படியும், நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்றும் அப்படி நடக்காத திருமணங்கள் செல்லாது என்றும் அங்கு குடியேறிய இந்திய கூலிகளுக்கு எதிராக 1913 இல் ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதோடு கடுமையான வரி உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு எதிராகவே அமைந்தது. திருமணமான இந்திய பெண்களின் சட்டப்பூர்வமான மனைவிகளின் தகுதி கேள்விகுறியாகியது. இந்த கொடுமையான சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் அங்கு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை கேள்விப்பட்ட காந்திஜியும் இந்தியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்திற்கு தலைமை ஏற்றுநடத்தினார். அந்த போராட்டங்களின் சொற்பொழிவு வள்ளியம்மையை ஈர்த்தது. அந்த போராட்டத்தின்போது பிரிட்டிஷார் காந்தியாரின் மீது துப்பாக்கியை நீட்டி முதலில் என்னை சுடு பிறகு அவரை சுடலாம் என துணிவோடு முன்னால் வந்து நின்றவர் வள்ளியம்மை.
‘‘பாவம்.... இந்தக் குழந்தை! இது, எதற்காகச் சிறைக்கு வரவேண்டும்’’ என்று சிறை அதிகாரி ஒருவர் சொன்னபோது... அதற்கு அந்தப் பெண், ‘‘நான் குழந்தையும் அல்ல... பாவமும் அல்ல’’ என்று சீறினார். அவர் வேறு யாருமல்ல... விடுதலைக்காக உழைத்த வீரமங்கை தில்லையாடி வள்ளியம்மை.
பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, பார் போற்றும் மகாத்மா காந்தியாக மாற்றியது அந்த நொடிதான்!. இதுகுறித்து காந்தியடிகளே, ‘‘பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றிகண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்’’ என்று பெருமைபொங்கச் சொன்னார்.
‘‘நான் படிக்கிறேன்!’’
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த சமயம்... இந்தியாவிலிருந்து சென்று அங்கு வசித்தவர்களுக்கு எதிராகச் சில சட்டங்கள் இயற்றப்படுகிறது. அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள், இங்கிருந்து சென்றவர்கள். எதிர்த்து நின்ற இந்தியர்களுக்கு ஆதரவாய்க் குரல்கொடுத்துக் களத்தில் இறங்குகிறார் காந்தி. அவருக்குப் பின்னால், பெண்கள், குழந்தைகள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்கின்றனர். தனக்கு முன் கூடியிருந்த அந்த மக்களிடம் ஓர் உறுதிமொழித் தாளை எடுக்கிறார், காந்தி. அதை, தான் படிப்பதற்கு முன்பு... அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘இந்த உறுதிமொழித் தாளை யார் படிக்கிறீர்கள்’’ என்கிறார். ‘‘நான் படிக்கிறேன்’’ என்று ஓடி வருகிறார் சிறுமியான வள்ளியம்மை. அப்போது அவருக்கு வயது 15. ‘‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’’ என்ற வள்ளியம்மையின் முழக்கத்துடன் அந்தப் பயணம் புறப்படுகிறது. பயணத்தின்போது காந்தியைச் சுட்டுத்தள்ளத் திட்டமிட்ட தென்னாப்பிரிக்கப் போலீஸ், அதற்காகக் காத்திருக்கிறது. அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மை, திடீரென காந்திக்கு முன் வந்து... ‘‘இப்போது அவரைச் சுடு பார்க்கலாம்’’ என்று சொல்லி அவரைக் காக்கிறார். அத்துடன், அங்கிருந்த மக்களையும் கவனித்துக்கொள்கிறார். ‘‘வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்’’ என்று காந்தியே குறிப்பிடுகிறார்.
‘‘இதுதான் இந்தியாவின் கொடி!’’
நடைப்பயணத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். அதற்காக, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வள்ளியம்மையும் கைதுசெய்யப்பட்டு அவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. கைதான அனைவரும் ‘இந்தியர்கள்’ என்று பதிவு செய்வதைப் பார்த்த சிறை அதிகாரிகள், ‘‘ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே’’ என்று நக்கலாய்க் கேள்வி கேட்கிறார்கள். வள்ளியம்மையிடம் ஓர் அதிகாரி, ‘‘இந்தியா என்ற ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே’’ என்று கேட்கிறார். உடனே வள்ளியம்மை, தான் அப்போது உடுத்தியிருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, ‘‘இதுதான் இந்தியாவின் கொடி. இனி இதற்கு ஒரு நாடும் உண்டுதானே’’ என்று பதிலளிக்கிறார். முடிவில், வழக்குப் பதிவுக்குப் பிறகு அனைவரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
வள்ளியம்மையும் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, சரியான சிகிச்சையும், நிம்மதியான தூக்கமும் இல்லாமல் அவதிப்படுகிறார். ‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டுச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்கிறார் சிறை அதிகாரி. அதற்கு வள்ளியம்மை, ‘‘அது சத்தியாக்கிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேயேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்கிறார்.
‘‘தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன்!’’
ஒருகட்டத்தில், காந்திக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக உடன்பாட்டின்படி போராளிகள் விடுவிக்கப்பட்டார்கள். வள்ளியம்மையும் விடுதலை கிடைத்து வீட்டுக்கு வருகிறார், ஒரு போர்வை சுற்றப்பட்ட உடம்புடன். வீட்டுக்கு வந்தும் எழமுடியாமல் படுக்கையிலேயே இருக்கிறார். அவரை நேரில் பார்த்து விசாரிக்கிறார் காந்தி. ‘‘சிறைதானே உன் உடம்பை இப்படியாக்கிவிட்டது. சிறை சென்றதற்காக நீ வருத்தப்படுகிறாயா’’ என்கிறார். அதற்கு வள்ளியம்மை, ‘‘எனக்கு வருத்தமா... நிச்சயமாக இல்லை. இப்போது இன்னொரு தடவை கைதுசெய்யப்பட்டால்கூடச் சிறைக்குச் செல்ல நான் தயார்’’ என்கிறார், அந்த நிலையிலும் துணிச்சலாக. காந்தி மீண்டும் விடாமல், ‘‘சிறை சென்று நீ இறந்துபோவதாக இருந்தால் என்ன செய்வாய்’’ என்கிறார். அதற்கும் அவர் சற்றும் தளைக்காமல், ‘‘அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்’’ என்கிறார்.
இறுதியில் அங்கிருந்து விடைபெறும் காந்தி, வள்ளியம்மையின் இறுதிமூச்சு விடைபெறும்போது அவர் அருகில் இல்லை. ஆனால், அவருடைய கல்லறைக்குச் சென்று இறுதியஞ்சலி செலுத்திய காந்தி, ‘‘இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை’’ என்றார் பெருமைபொங்க.
மேலும், ‘‘இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயரும் நீங்கா இடம்பெற்றிருக்கும்’’ என்றார். உண்மைதானே!
தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் தனது பூர்வீகம் தில்லையாடி கிராமம் என்பதால் தில்லையாடி வள்ளியம்மை என்று அன்று முதல் அழைக்கப்பட்டார். காந்தியும் தனது கூட்டங்களில் வள்ளியம்மையின் தியாகத்தை கூறி நெகிழந்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து தில்லையாடிக்கு வந்திருந்த காந்தி அந்த மண்ணை அள்ளி கண்ணில் ஒத்திக்கொண்டார். அப்போது தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என கூறியிருக்கிறார்
ஆனால் இந்திய சுதந்திர அரசு வள்ளியம்மையின் நினைவை மறந்துவிட்டது, வள்ளியம்மை தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் மறந்துவிட்டது. அவரது பிறந்தநாளில் மட்டும் கட்டாயத்தின் பெயரில் அரசு பூமாலை போடுகிறது. மற்றபடி ஆளில்லா, பாழான கட்டிடமாகவே கிடக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலில் காந்திஜி

 தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்று தனித்தன்மை வாய்ந்தது. காந்தியின் வரலாற்றிலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு செலுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இந்த உறவு, தொடர்பு தொடங்கிவிடுகிறது. தென்னாப்பிரிக்கப் போராட்ட வரலாற்றில் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகம், காந்தியடிகளால் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கிறது.

சென்னையில் 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு காந்தியடிகள் விடுத்த செய்தியில், ‘எனது தமிழறிவு சொல்பமே. ஆயினும் நான் தமிழின் அழகையும் வளத்தையும் அந்த அறிவிலும் உணருகிறேன். தமிழை அலட்சியம் செய்வது ஒரு பெருங்குற்றம் என்பது என்னுடைய அபிப்பிராயம்’ என்று தமிழ் மீதான தமது ஈடுபாட்டைக் குறிப்பிட்டார் (மணிக்கொடி 24.12.1933). திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றின் உயர்வை உணர்ந்திருந்த அவர் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஓய்வு கிடைத்தால் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் படிக்க ஆசை என ஒருமுறை காந்தி கூறியிருக்கிறார். தம்மைச் சந்தித்த பாரதி விடைபெற்றதும், ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று ராஜாஜி உள்ளிட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்த கோயில்களின் கதவுகள்

தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் காந்தியடிகள் வந்துசென்ற வரலாற்றை ஆவணமாக்கி விவரிக்கும் அரிய நூல் அ.இராமசாமியின் ‘தமிழ்நாட்டில் காந்தி’. இந்நூலில் காந்தி தஞ்சைக்கு வந்து சென்ற வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நூல் விவரிக்காத முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பயணம் குறித்த சில செய்திகள் இப்போது ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் வாயிலாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று 24.03.1919-ல் தஞ்சைக்கு முதன்முறையாக வந்தபோது தஞ்சை பெரிய கோயிலுக்கு காந்தியடிகள் சென்ற நிகழ்வு. தஞ்சை பெரிய கோயிலுக்கும் காந்தியடிகளுக்குமான ஒரு தொடர்பை வெளிப்படுத்தும் அறிவிப்பு, பெரிய கோயிலில் இடம்பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 99 கோயில்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் வழிபாட்டுக்காகத் தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம் ராஜா திறந்து விட்டிருக்கிறார் என்பதை காந்தியடிகள் பாராட்டிய பதிவு இது. அப்பதிவு (29.07.1939) வருமாறு:

‘இராஜாஸ்ரீ இராஜாராம் இராஜா அவர்கள் மூத்த இளவரசரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அரங்காவலரும் ஆவார்கள். புகழ்பெற்ற தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வர ஆலயம் உட்பட இவரது பொறுப்பில் 90 கோயில்கள் உள. எல்லாத் திருக்கோயில்களையும் அரிசனங்களின் வழிபாட்டிற்காக இவர் திறந்துவிட்டார். இது அரிசனங்களுக்கான தன்னிச்சையான திருத்தச்செயலாகும். இதுவே இந்து மதத்தினைத் தூய்மைப்படுத்துவதை விரைவுபடுத்தும். இது இராஜாசாஹேப் அவர்களின் ஒரு பெரிய நல்ல செயலாகும். எனவே, தீண்டாமை இந்து மதத்திலுள்ள களங்கம் என்று நம்புபவர்கள் அனைவரின் வாழ்த்துகளையும் இவர் பெறத் தகுதியானவர்.’

காந்தியடிகள் தொடர்பான வேறு பதிவு பெரிய கோயிலில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. 1919 மார்ச் 26 அன்று வெளிவந்த ‘சுதேசமித்திரன்’ இதழில் பெரிய கோயிலுக்கு காந்தி சென்ற நிகழ்வு விரிவாகப் பதிவுபெற்றுள்ளது. மார்ச் 24 அன்று தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில், நகரின் பல பிரமுகர்களும் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து காந்தி இறங்கியதும் அவருக்கென்று ஏற்படுத்தியிருந்த ஆசனத்தில் அமரவைத்தனர். தஞ்சையின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் தேசியவாதியும் ‘தமிழ் வரலாறு’ நூலை எழுதியவருமான கே.எஸ்.சீனிவாசம் பிள்ளை மாலை அணிவித்தார். வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவருக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த மோட்டார் வண்டியில் ஏறி சீனிவாசம் பிள்ளையின் பங்களாவுக்கு காந்தி சென்றார்.

காந்தியின் முதல் தமிழ் கையொப்பம்

அதன் பின் 10 மணிக்குத் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கே கோயில் அதிகாரிகள் செய்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே வைக்கப்பட்டிருந்த வருகைதருவோர் கையொப்பம் இடுகிற புத்தகத்தில் தமது பெயரைத் தமிழில் காந்தியடிகள் கையொப்பமாக இட்டிருக்கிறார். காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதந்தபோதும் தமிழ் தொடர்பான சூழல்களிலும் தமிழிலேயே தம் பெயரை எழுதிக் கையொப்பமிட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் சில நடந்திருக்கின்றன. 1933-ல்

சென்னைக்கு வந்த மகாத்மா 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு ஆசி வழங்கி அனுப்பிய செய்தியில் ‘மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார். இதை, அந்தக் கூட்டத்தில் அறிவித்தபோது கூட்டத்தில் நீண்ட நேரம் கரகோஷம் எழுந்ததாம் (மணிக்கொடி 24.12.1933). பிற்காலத்தில், 1947-ல் கல்கி, ராஜாஜி ஆகியோர் மக்கள் ஆதரவோடு எட்டயபுரத்தில் மகாகவி பாரதி மணிமண்டபத்தை நிறுவிய விழாச் சூழலில் அதை வாழ்த்தித் தமது கைப்படத் தமிழில் எழுதிய செய்தியிலும் ‘பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம் - மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார்.

தமிழ்நாட்டளவில் தமிழில் கையொப்பமிடும் காந்தியின் முதற்பதிவாகத் தஞ்சை பெரிய கோயிலில் கையொப்பமிட்ட நிகழ்வு இருக்கக்கூடும். அவ்வாறு கையொப்பமிடும்போது, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனா, அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்திருக்கிறது. அதைக் கண்ட காந்தி, சுதேசிய மயமாய் இருக்கும் நாணத்தட்டையால் எழுத வேண்டுமென்றும், சுதேசியத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அங்குதான் அத்தியாவசியம் என்றும், தர்மகர்த்தாக்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியிருக்கிறார்.

தஞ்சையில் சத்யாகிரக உரை

அதன் பின்னர், பெரிய கோயிலிலிருந்து தஞ்சை நகர முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று ஆங்காங்கு பிரமுகர்களின் மரியாதை பெற்றுத் தமது இருப்பிடத்தை அடைந்தார். 12 மணி முதல் 2 மணி வரை திருவையாறு சாது கணபதி சாஸ்திரியார் குழுவினரால் நடத்தப்பட்ட வாய்ப்பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். 4 மணிக்கு நகரப் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். மாலை 6 மணிக்கு தஞ்சை பெசன்ட் லாட்ஜில் சுமார் 10,000 மக்களின் முன் சத்யாகிரக விரதத்தைப் பற்றி உரையாற்றினார். அதில் காந்தியடிகள் எடுத்துரைத்த செய்திகளை சுதேசமித்திரன் (26.03.1919) பின்வருமாறு வெளியிட்டிருந்தது:

‘மகாத்மா தன்னுடைய பிரசங்கத்தில் சத்யாக்ரஹ விரதமென்றால் இன்னதென்றும் அவ்விரதத்தைக் கைக்கொண்டவர்களுக்கு விஷேச ஆத்ம சக்தி உண்டாகுமென்றும் அவ்வாத்ம சக்தியினால் பெரிய காரியங்களை நடத்தலாமென்றும் அதற்கு தற்சமயமே சரியான காலமென்றும் ஒருவனும் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்யக் கூடாதென்றும் அநீதியான அதர்மமான கெட்ட சட்டங்களை அடியோடு ஒழித்துப் பொது நன்மைக்கும் பிரஜைகளின் முன்னேற்றத்திற்கும் நமது தேசத்தின் ஷேமத்திற்கும் சரியான வழியளிப்பது இந்த சத்யாக்ரஹ விரதமென்றும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சத்யாக்ரஹிகளால் ஒருவருக்கும் எவ்விதத் தீங்கும் விளையாது என்றும் சத்யாக்ரஹிகள் சத்தியத்தைக் கைக்கொண்டு கோபமில்லாமலும் பழிக்குப்பழி வாங்குவதென்ற எண்ணமில்லாமலும் சண்டைச் சச்சரவில்லாமலும் விஷேசமான பரித்யாகங்களைச் செய்தும் மகத்தான கஷ்டங்களை அனுபவித்தும் தேசத்தின் நன்மையைத் தேட வேண்டுமென்றும் பிரஹல்லாதருடைய மகிமையைப் பற்றி விஸ்தரித்துச் சொல்லி சத்தியத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்சமயம் ஜனங்களின் பிரதிநிதிகளின் அபிப்ராயத்திற்கு நேர்விரோதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரௌலட் சட்டத்தை உடனே கவர்ன்மெண்டார் ரத்துசெய்யும்படிச் செய்ய வேண்டியது சத்யாக்கிரஹிகளின் முக்கியக் கடமையென்றும் ஜனங்களெல்லாம் பரவசமாகும்படி எடுத்துச்சொன்னார்.’

காந்தியின் சொற்பொழிவை டாக்டர் ராஜன் தமிழில் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்து, முஸ்லிம் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசினர். 75 பிரமுகர்கள் சத்தியாகிரக விரதத்தை அனுஷ்டிக்க ஒப்புக்கொண்டு அங்கே கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் காந்தியடிகள் தஞ்சை மேலவீதியில் குஜராத்தியரின் மடத்துக்குச் சென்றார். குஜராத்தியப் பிரமுகர்கள் காந்திக்கு நல்வரவுப் பத்திரிகை வாசித்து அளித்து மரியாதை செய்தனர். தமிழ் மண்ணில் தமது தாய்மண்ணைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து காந்தி மகிழ்ந்தார்.

இச்செய்திகள் பலவும் ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலில் இடம்பெறவில்லை. 1919-ல் முதன்முறை தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகைதந்த பதிவு, 1939-ல் தாழ்த்தப்பட்டவர்கள் தரிசனத்துக்குத் திறந்துவிடப்பட்டதையொட்டி எழுதிய பதிவு என இரு பதிவுகள் பெரிய கோயிலை மையமிட்டுக் கிடைக்கின்றன. இந்த நூற்றாண்டு தினத் தருணத்தை நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்வோம்!

Courtesy:- ய.மணிகண்டன், பேராசிரியர்,   தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப்பல்கலைக்கழகம்.

Thursday, December 24, 2020

குடிப்பழக்கமும் மதுவிலக்கும்

 

 

                                                குடிப் பழக்கமும், மது விலக்கும்.

            நம் பூர்வகுடி மக்கள் உழைப்பில் அதிகம் நாட்டம் கொண்டு, காடு திருத்தி, கழனிகளை உருவாக்கி, நிலத்தை உழுது பயிரிட்டு உணவுக்கான தானியங்களை உற்பத்தி செய்து, உண்டு, உடுத்து பெருவாழ்வு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கிராமப் பகுடிகளில் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தென்னந்தோப்புக்கிடையில் ஒரு கீற்றுக் கொட்டகை பொட்டு அங்கு தென்னை மரத்துக் கள்ளை இறக்கி உழைக்கும் மக்கள் அங்கு வந்து கள் அருந்தும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

அப்படி கள்ளுக் கடைகளுக்குப் போகும் வழி என்று ஒரு வழிகாட்டி பலகையைச் சாலையில் அமைத்து அங்கிருந்து தோப்புக்குள் சென்று குடித்து விட்டு வருவார்கள். கள் குடிப்பது போதை பழக்கம் தான் என்றாலும், இன்றைய சாராயம், கள்ளச் சாராயம் போல உயிருக்கு உலை வைக்கும் விஷத் தன்மையுடையது அல்ல. எனினும் அந்தக் குடிப் பழக்கத்தையும் மக்கள் அறவே மறந்து விடவேண்டும் என்பதற்காகத்தான் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்திய சுதேசி வீரர்கள் கள்ளுக்கடைகளுக்கு மக்கள் செல்வதைத் தடை செய்ய வேன்டுமென்று சொல்லி மறியல் செய்து, தடியடி பட்டு சிறை சென்று பற்பல தியாகங்களைச் செய்த பிறகு மதுவிலக்கு எனும் சட்டத்தை ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த போது கொண்டு வந்தார்.

மகாத்மா காந்தி தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் இந்திய சுதந்திரத்துக்கு அடுத்ததாக, நமது மக்களின் நலனைக் கருதி மதுபானங்களை ஒழித்தல் என்பதும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. குடியினால் மனிதனின் அறிவு மழுங்கிப் போய், சிந்தனை சக்தியை இழந்து, அடிதடி போன்ற தீயவழிகளில் மனத்தைச் செலுத்தி பாழாய்ப் போய்க் கொண்டிருந்த நிலைமை மாற வேன்டுமென்பதற்காக குடிப்பழக்கத்துக்கு எதிரான போராட்டத்தை காந்திஜி கையிலெடுத்தார்.

காந்திஜி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் போராடிக் கொண்டிருந்த சமயம் 1921இல் மது ஒழிப்பு கொள்கையை வகுத்து மக்கள் மத்தியில் குடியின் தீமைகளை எடுத்துரைத்து நல்வழிகாட்டத் தொடங்கினார். மதுவிலக்கு என்ற சொல் கள், சாராயம் இவற்றுக்கு எதிரானது மட்டுமல்லாமல் போதை தரும் எதையும் எதிர்க்கும் போர்க்களமாகவே மதுவிலக்கை அவர் போதித்து வந்தார்.

1936இல் முதன் முறையாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் நின்று சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஒரு ஆட்சி இங்கு பதவியேற்ற சமயம், காங்கிரசின் மதுவிலக்குக் கொள்கையை அமல் படுத்தும் நோக்கில், முதலில் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அறிமுகம் செய்யப்பட்டு அது வெற்றி கரமாக நடைபெறத் தொடங்கியதும், அதை இதர மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தும் எண்ணம் தோன்றியது.

இந்திய நாடு ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற 1947க்குப் பிறகு மதுவிலக்கு என்பது சென்னை மாகாணம் முழுவதும் அமல் படுத்தப்பட்டு ஒரு தலைமுறையினர் குடியை மறந்து, ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணம் சீரமைக்கப்பட்டு ஆந்திரா பிரிந்து சென்றதும், சில பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குப் போனதும், சிற்சில பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டதும் நடைபெற்றது. இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தமிழகமும் குடிப் பழக்கமற்ற ஒரு மதுவிலக்குள்ள மாநிலமாகத் திகழ்ந்து வந்தது.

இந்த நிலையில்தான் 1967 தேர்தலில் தி.மு.க. கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அரசின் வருமானத்தைப் பெருக்குவதாகச் சொல்லி மதுவிலக்கு சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளப்பட்டு, சாராயக் கடைகளும், கள்ளுக் கடைகளும் எங்கும் பரவி தங்கள் ஆதிக்கத்தை மிகத் தீவிரமாக மக்கள் மீது காட்டத் தொடங்கியது. இதன் பயன், அரசாங்கத்துக்கு வருமானம் வந்தது என்னவோ உண்மைதான், ஆனால் உழைக்கும் மக்கள் போதைக்கு அடிமையாகிப் போனார்கள். புத்தி பேதலித்து, சுவாதீனம் இழந்து குடிகாரர்களாகப் பழி சுமந்து வாழும் கோடானு கோடி ஆண்கள், தங்களை நம்பியிருக்கும் மனைவி மக்களைச் சந்தியில் நிறுத்தத் தொடங்கிய காலம் அது. அரசாங்கத்துக்கு வருமானம் தான் பெரிதாகத் தோன்றியதே தவிர, மக்களின் மகத்தான் வாழ்வு பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் சாராயக் கடைகள், அரசாங்கமே சாராயக் கடைகளைத் தங்கள் மேற்பார்வையில் கண்ட இடங்களிலெல்லாம் வைத்து மக்களை, மக்களை என்ன? இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று எந்த தராதரமும் இல்லாமல் குடிக்கு அடிமையாக்கி வைத்து விட்டார்கள். பொதுவெளியில் நாம் பழகும்போது யார் குடித்துவிட்டு பொதையில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் ஆங்காங்கே பிரச்சினைகள். பெண்கள் குழந்தைகள் தனித்து வழிநடைப் பயணம் செய்ய அச்சம் தோன்றி தனிநபர் வாழ்க்கை  எனப்து எந்நேரத்திலும் ஆபத்துக்குள்ளாகும்படி இருந்தது.

எதனை யெத்தனை பெரிய தலைவர்கள், தங்கள் வாழ் நாளெல்லாம் குடிப் பழக்கத்துக்கு எதிராகப் பேசியி, எழுதியும் வந்து ஒரு வழியாக ஒரு தலைமுறை குடியை மறந்திருந்த சூழ்நிலையில் அவற்றைத் திறந்து வைத்து மக்கள் வாழ்வில் மண்ணைப் போட்ட காலம் நாட்டின் இருண்ட காலம் எனச் சொல்வது மிகையாகாது.

குடிய மறந்து நல்வாழ்வு வாழ்ந்து வந்த மக்களை மீண்டும் குடி எனும் அரக்கன் கையில் ஒப்படைத்த மகானுபாவர்கள் இந்த நாட்டை வாழ்விக்க வந்த மகான்களா அல்லது அழித்து ஒழித்துவிட சங்கல்ப்பம் செய்து கொண்டவர்களா என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் ஆகும் என்பதை தீர்க்க தரிசனத்தோடு கண்டு கொண்ட மகாத்மா காந்தி பல காலம் முன்னமேயே, இது குறித்து கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். 25-12-1924 ஆம் தேதியிட்ட “எங் இந்தியா” இதழில் அவர் எழுதியிருக்கும் செய்தி கவனிக்க வேண்டியதொன்று. அவர் சொல்கிறார். “இந்த அதர்மமான வழியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கப் பயனடுத்துவது என்பது பெருமையளிக்கும் செயல் அன்று. கல்வி கற்பிக்கப் பொதுமான பணம் கிடைக்காமல் போவதானுலும் கூட, துணிந்து இந்த வருமானத்தை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். “ என்று சொல்லிவிட்டு, அப்படியானால் வருமானத்துக்கு என்ன வழி என்று சிலர் கேள்வி கேட்கக் கூடும் எனக் கருதி அவர் சொல்கிறார் “இதற்கு மாற்று நமது ராணுவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்பது.

ஆனால், அவர் சொன்னபடி ராணுவச் செலவைக் குறைத்துக் கொண்டிருந்தால் என்ன நடைபற்றிருக்கும் என்பதை நாம் இப்பொதுஇ சிந்தித்தால் அச்சம் தருகிறது.  நேரு காலத்தில் இந்தோனேஷியாவில் பாண்டூங் நகரில் நடந்த பன்னாட்டு மகாநாட்டில் “இந்தி சீனி பாய் பாய்” என்று உறவு கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய கையோடு, சீனாவின் செள என் லாய் இந்தியா மீது படையெடுத்து இமயத்தின் பல பகுதிகளைக் கபளீகரம் செய்த துரோகச் செயல் நடைபெற்ற போது படைபலமும், ஆயுத பலமும் இல்லாமல் இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தது போல மேலும் பல ஆபத்துக்களைச் சந்தித்திருக்க வேண்டும். நல்ல காலம், அப்படி அவர் சொன்ன முறையில் ராணுவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளாமல் வளர்த்துக் கொண்டமையால், இரண்டு பாக் போர்களையும், சீன ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்து நம் நாடு வெல்ல முடிந்தது. வங்காள தேசமென்றொரு நாட்டையும் உருவாக்கிக் கொடுக்க முடிந்தது. அப்படி ராணுவச் செல்வைக் குறைக்காமல், மதுவிலக்கை அமுல் படுத்தி தேசத்து வருமானத்துக்கு வேறு பல வழிகளைக் கண்டிபிடித்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.

எல்லா குடிப்பழக்கங்களுக்கும் வாய்ப்பும், வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அதன் மூலம் அரசாங்க கஜானா நிரம்பும் நிலைமையும் இங்கே நிலைத்துவிட்ட நிலைமையில் இனி எந்த அரசும் கள்ளுக்கடை, சாராயக் கடைகளை மூடுவதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையை நாம் எட்டிவிட்டோம். இந்த குடிப் பழக்கத்துக்குச் சமமாக போதைப் பொருட்கள் எங்கிருந்தெல்லாமோ இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு, குடிகாரர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள், உழைக்கும் மக்கள், அலுவலகம் செல்வோர் என்று எல்லா மட்டத்திலும் இந்த பழக்கம் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. பள்ளிக்கூடம் போகும் மாணவன் சாராயக் கடை வரிசையில் நிற்கிறான்.

இன்ற யாராவது காந்திஜியின் அடியொற்றி குடிப்பழக்கத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளுக்கடை, சாராயக் கடைகளை ஒழிப்பதற்காகவும் பொராடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், என்ன ஆகும்? குடிக்கு அடிமையாகிப் போன குடிகாரனும், அரசுக்கு வருமானம் போய்விடுமே என்று அரசியல் வாதிகளும், அப்படி போராடுபவர்களை ஒழித்துக் கட்டவே விரும்பு வார்கள்.

காந்திஜி நடத்திய கள்ளுக்கடை மறியலின் போது காங்கிரஸ் தொன்டர்கள் கள்ளுக்கடை வாசலில் கொடியைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பார்கள். அங்கு குடிக்க வரும் குடிகாரர்களைப் பார்த்து, ஐயா, தயவு செய்து குடித்து உங்கள் குடியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னால், அந்தக் கள்ளுக்கடை, சாராயக் கடைக்காரனும், குடிக்க வந்த குடிகாரனும் ஒன்று சேர்ந்து இந்த தொண்டனைச் சாத்துவார்கள். பாவம் குடியைத் தடுக்க வந்தவனுடைய குடும்பம் சந்தியில் நிற்கும்.

அப்படியெல்லாம் நடக்காது, அதீத கற்பனையில் எழுந்த விபரீதக் கருத்து இது என்று சொல்வொருக்கு பழைய நிகழ்ச்சிகளை இப்போது நினைவுபடுத்த வேண்டும்.

1924ஆம் ஆண்டு, காந்தி கள்ளுக்கடை மறியல் செய்த நேரம். சேலம் மாவட்டம் சிங்காரப்பேட்டை எனும் கிராமத்தில், அவ்வூர் மணியக்காரராக இருந்த பெருமாள் நாயுடு என்பவர் ஊரில் தண்டோரா பொட்டு, மக்களுக்கு ஒரு அறிவிப்பினைச் செய்தார். அது, “கிராமத்தில் உள்ள யாரும் இனி கள் குடிக்கக் கூடாது, அப்படி மீறி குடித்தது தெரிய வந்தால் ஊரிலிருந்து தள்ளி வைக்கப்படுவார்” என்பது.

ஒரு சில பகுதியினர் தாங்கள் இனி குடிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு மணியக்காரரிடம் எழுதியும் கொடுத்தார்கள். ம்றி குடிப்பழக்கத்துக்கு பலியானவர்களை சாதிக் கட்டுப்பாடு என்று ஒதுக்கி வைத்தும், அபராதம் விதித்தும் குடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தார். அன்றைய ஆட்சியாளர்கள் இப்படியொரு தலைவரை விட்டு வைப்பார்களா? கள் குடித்த ஒருவனை அடித்தார் என்று குற்றச்சாட்டுக்களை சொல்லி அந்த மணியக்காரரைப் பதவி நீக்கம் செய்தார்கள். அவர் என்னவெல்லாமோ சொல்லி தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முயன்றபோதும், அதிகாரம் படைத்தொர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

போதாத குறைக்கு கள்ளுக் கடைக்காரர்களஒ விட்டுத் தங்களுக்கு வருமானம் இல்லாமல் செய்துவிட்டார் என்று அவர் மீது ஒரு வழக்கையும் தொடுத்தார்கள்.  இவரைப் போல மற்றவர்கள் எவரும் மதுவுக்கு எதிராகப் போராட வந்துவிடப் போகிறார்களே என்று அச்சத்தில் ஆள்வொர் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பு என்னவென்றால், “கள்ளுக்கடைகள் முன்பு மறியல் செய்யும்படியும், மற்றும் சட்ட விரோதமான காரியங்களைச் செய்யும்படியும் மக்களைத் தூண்டிவிட்டுப் பிரசங்கங்கள் செய்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. உங்களுடைய பேச்சுக்கள் அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் இருப்பதாலும், அரசாங்கத்தின் மீது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் சொல்லி 1895ஆம் வருஷத்தில 4ஆவது சட்டத்தின் 26ஆவது பிரிவின் படி நீங்கள் எங்கும் சென்று பிரசங்கங்கள் செய்யக் கூடாது, மீறினால் தண்டனைக்கு உள்ளாவீர்கள்” என்று ஒரு நோட்டீஸ் பிறப்பித்து அச்சுறுத்தியது. ஆக மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பது போல், ஒரு பக்கம் குடிகாரர்கள், மறுபக்கம் ஆட்சிபீடத்தில் இருப்போர், என்று இப்படி இருந்தால் யார் பூனைக்கு மணி கட்ட முற்படுவார்கள்?

பிறகு இதற்கு என்னதான் வழி? வழியா? விதிவிட்ட படி வழி, அவ்வளவுதான். மக்களாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. விழித்தெழுங்கள், எதிர்கொள்ளும் தீமையை மனதில் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். எழுமின்! விழிமின்! மக்கள் மனம் திருந்தும் வரை போராடுங்கள் குடிக்கு எதிராக! இதைத்தான் செய்ய வேண்டும்.

 

 

 

மகாகவி பாரதியின் வாழ்வில்

                                              

            மகாகவி பாரதியார் பற்றிய பல்வேறு செய்திகள் புத்தக வடிவிலும், கட்டுரைகளிலும் வந்தவண்ணம் இருக்கின்றன. 1921 செப்டம்பர் 11இல் தனது 39ஆம் வயதில் மறைந்த பாரதியின் பெருமை பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்களின் கவனத்துக்கு வந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இப்போதுள்ள அளவுக்கு மக்கள் போற்றவோ, புகழவோ, அவருடைய அருமையைப் புரிந்து கொள்ளவோ இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்திதான். பாரதியின் வாழ்க்கையை பல றிஞர் பெருமக்கள் ஆய்ந்து எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களில் ரா.அ.பத்மநாபன் அவர்களுடைய பங்கு போற்றுதற்குரியது. அவர் பாரதி வாழ்ந்த நாட்களில் நடந்த பல அரிய செய்திகளைப் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவைகள் தான் இன்றளவும் பாரதியை மக்கள் மத்தியில் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்து வருகிறது. அவற்றில் சில செய்திகளைப் பார்க்கலாம்.

            1902 முதல் 1904 வரையில் எட்டயபுரத்து சமஸ்தானத்தில் ஜகவீரராம வெங்கடேசுவர் எட்டப்ப நாயக்கர் என்பவர்தான் மன்னராக இருந்தார். அவருடன்  தான் காசி வாசம் முடிந்து எட்டயபுரம் திரும்பிய பாரதியார் நண்பராக பழகி வந்தார். தந்தை காலமான பின்பு தாயும் இல்லாத நிலமையில் பாரதிக்கு எட்டயபுரத்தில் எவரும் இல்லாமையால் காசியில் வாழ்ந்த அவருடைய அத்தையுடன் அவர் காசிக்குச் சென்று விட்டார். அங்கு இருந்த சமயம் எட்டயபுரம் மன்னர் டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்பும் சமயம் காசிக்கு விஜயம் செய்து, அங்கு பாரதியாரைப் பார்த்து அவரை எட்டயபுரம் வந்து விட அழைப்பு விடுத்ததனால் பாரதி மீண்டும் எட்டயபுரம் வந்து சேர்ந்தார்.

            அப்படி அவர் எட்டயபுரத்தில் ராஜாவுக்கு நண்பராக பழகி வந்த சமயம், ராஜாவினுடைய பழக்க வழக்கங்களுக்கும், பழைமை எண்ணங்களுக்கும், காசி சென்று விரிந்து பரந்த உலக அனுபவங்களை ஓரளவு புரிந்து கொண்டு வந்திருந்த பாரதியின் பரந்த விசாலமான எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை.

            பாரதிக்கு அந்த காலகட்டத்தில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி, மில்டன் ஆகியவர்கள் கவிதைகளில் ஈடுபாடு உண்டாயிற்று. அவர்களுடைய ஆங்கிலக் கவிகளில் மிளிர்ந்த அழகு, நயம், உயர்ந்த இலட்சியம், சமத்துவம் ஆகியவை அவர் மனதைக் கவர்ந்தன.

            எட்டயபுரம் ராஜா, பழமையில் ஊறியவர், தனது அதிகாரங்கள் பற்றிய அதீத பற்றுடையவராக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த புலவர்கள் அவரிடம் தரமுள்ள, நாட்டுக்கும், மக்களுக்கும் அவசியமான கருத்துக்களைப் பற்றி விவாதிக்காமலும், பொழுதுபோக்கும் விதமாகவே பல பழைய கொச்சையான பாடல்களின் மீது ஆர்வம் ஏற்படச் செய்து கொண்டிருந்தனர்.  விறலிவிடு தூது, கூளப்பநாயக்கன் காதல் போன்ற பல சிருங்கார ரசப் பாடல்களைச் சொல்லி மன்னரை மகிழ்ச்சியில் ஆழ்ந்தி வந்தனர். நேரடியாக மன்னரின் போக்கை விமர்சிக்க முடியாத சூழ்நிலைக் கைதியாக இருந்த பாரதி நேரம் கிடைத்த போதெல்லாம் மன்னருடைய போக்கைக் கேலி செய்தும், நையாண்டியாக எழுதியும் வந்திருக்கிறார். ஆனால் அப்படி அவர் பாடிய சில பாடல்கள் எதுவும் நமக்குக் கிடைக்க வழியில்லாமல் போயிற்று.

            பாரதியாருடைய தாய் மாமன் ஆர்.சாம்பசிவய்யர் என்பவரும், குருகுகதாசப் பிள்ளை என்பவரும், பாரதியின் உறவினர் கே.நடராஜன் என்பவரும் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்குத் தெரிவித்த சில கருத்துக்களின் படி பாரதியார் அந்த காலத்தில் மன்னரை கேலி செய்து எழுதிய ஒருசில பாடல்களைப் பார்க்கலாம். பாரதி பாடியதாகத் தெரியவரும் ஒரு பாடல்:

“நித்த நித்தம் துயின்றெழுந்து                                                                                     புத்தியில்லாப் புல்லருடன் போக்கி                                                                                  அத்தமித்தவுடன் விழு பணத்தை                                                                                   மண்ணைக் கல்லைத் தொழுதற்கோ                                                                        யான் பிறந்தேன்?”

இதை ரா.அ.பத்மநாபன் தன் நூலில் வெளியிட்டிருக்கிறார். அதே கட்டுரையில் ரா.அ.பத்மநாபன் குறிப்பிடும் இன்னொரு செய்தி. 1904இல் பாரதியார் ஒரு சிலேடை பாட்டைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் கிடைக்கவில்லையாயினும், அதன் கருத்தை பாரதியாரின் மாமா சாம்பசிவ ஐயர் சொன்னதாக எழுதுகிறார். சுடுகாட்டுச் சாம்பலுக்கும், மன்னனுக்கும் ஒப்புமை காட்டி எழுதப்பட்ட பாட்டாம் அது.

            இவை தவிர சில நிகழ்ச்சிகள் பாரதியாரின் நண்பர்கள், ஆர்வலர்கள் மூலம் தெரியவந்த செய்தியாகக் குறிப்பிடப்படுவை உண்டு. அதில் மன்னர் எட்டயபுரம் தெருவில் நகர்வலம் வருவாராம். அப்போது அவர் வாகனத்துக்கு முன்பாக ஒரு கொம்பு வாத்தியத்தை ஊதிக் கொண்டு ஒருவன் முன்னால் மன்னர் வருகையைப் பறை அறிவித்துச் செல்வானாம். இதைக் கேட்டு தெருவிலுள்ளோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்களாம். அப்படியொரு சமயம் மன்னர் வருகையை அறிவிக்க வாத்தியம் ஊதிக்கொண்டு வரும்போது, ஆங்கொரு நண்பர் வீட்டுத் திண்ணையில் பாரதி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாராம். வாத்தியத்தின் ஓசைகேட்டு அனைவரும் எழுந்து நின்றிருந்த போது, பாரதியார் மட்டும் அதனை கசப்போடு பார்த்து “முட்டாள்தனத்தின் முழக்கம்” எனும் பொருள்பட ஆங்கிலத்தில் “ Proclamation of Stupidity  என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டாராம்.

            இதை அங்கிருந்த யாரோ ஒருவர் மன்னரிடம் போட்டுக் கொடுத்து விட, இதனால் கோபம் அடைந்த மன்னர் உடனே பாரதியை வேலையிலிருந்து நீக்கி விட்டாராம். அன்றிரவு எட்டயபுரத்தில் யாரோ ஒருவருடைய வீடு தீப்பிடித்து எரிந்து போயிற்றாம். அதனைக் காண அங்கு சென்ற பாரதியாரிடம் ஒருவர் அவரை மன்னர் வேலையிலிருந்து நீக்கிவிட்ட செய்தியைக் கேட்டு துக்கம் விசாரித்திருக்கிறார். அதற்கு பாரதி சொன்னாராம், “ஆமாம். அன்று இலங்கையில் ஒரு ‘கவி’க்கு இராவணன் தீங்கி இழைத்தான், இலங்கையில் தீ மூண்டது. இன்று இங்கே ஒரு கவிக்கு எட்டயபுரம் ராஜா துன்பம் தந்தார், இங்கேயும் ஒரு தீ மூண்டது” என்று பதிலளித்தாராம். அனுமனைக் கவி என்று பாரதி சொல்லி தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

            1904இல் தான் பாரதியார் எட்டயபுரத்தை விட்டு நீங்கி மதுரை சென்று அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தற்காலிக பணியில் அமர்ந்தார்.  அப்படி அவர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அவர் “மூட சிகாமணிகள் நட்சத்திரமாலை” என்ற பெயரில் ஒரு பாட்டை இயற்றினாராம். பாட்டு அதில் இருந்த கிண்டலை ரசிக்கும்படி இருந்த போதிலும் நண்பர்கள் இதனால் துன்பம் வரும் என்று கருதியதால் அதை கிழித்து எறிந்துவிட்டதாகவும் செய்தி உண்டு.

            பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலகட்டத்தில் 1910-11 இல் பாரதி “சின்னச் சங்கரன் கதை” என்ற ஒரு கதையை எழுதினார். அது பின்னால் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காணாமல் போய்விட்டது. பிறகு ஒரு கடையில் பழைய பேப்பர் சாமான்கள் மடிக்கப் பயன்பட்ட காகிதத்தில் அவர் கதை இருந்து, அதன் ஒரு பகுதி மீட்கப்பட்டது என்றும், அந்தப் பகுதி வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது என்றும் தெரிகிறது. அந்த சின்னச் சங்கரன் கதை அவருடைய சுயசரிதம் போலத்தான் இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள்.

           

                                                                                                                       

           

சுப்ரமணிய சிவா

                             

            சுப்ரமணிய சிவா, இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி.அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.

            இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் இந்தியா முழுவதிலுமுள்ள தலைவர்களில் பலர் தேசியத்தையும், தெய்விகத்தையும் தங்களது இரு கண்களாக பாவித்து போராடினார்கள். அப்படிப்பட்ட தலைவர்களில் தமிழகம் தந்த மாவீரர் சுப்ரமணிய சிவா.

            இவர் பிறந்த ஆண்டு 1884. வத்தலகுண்டு எனும் ஊரில் ராஜம் ஐயர் என்பவருக்கும் நாகம்மாள் எனும் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். சிவாவுக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்று இரு சகோதரிகள், சுப்ரமணியன், வைத்யநாதன் என்று இரு சகொதரர்கள் உண்டு.  இவர்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். சிவா மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்வாகவில்லை. தூத்துக்குடியில் போலீஸ் இலாகாவில் சாதாரண வேலையில் சேர்ந்தார். வேலையிலிருந்து இவரை நீக்கிவிட்டார்கள். அந்த வருத்தத்தில் இவர் துறவுக் கோலம் பூண்டு அரசியலுக்கு வந்தார். இவர் இளமை முதல் ஆன்மிக வாழ்வில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருவனந்தபுரத்தில் ஊட்டுப்புறை ஒன்றில் இவர் தங்கி படித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அவருடைய இளம் வயதில் ஆன்மீக நாட்டம் மிகுந்து திருவனந்தபுரத்தில் சதானந்த சுவாமிகள் என்பவரிடம் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார்.

            திருவனந்தபுரத்தில் இருந்த போது இவருக்குப் பல ஆன்மீகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள் ஆகியோருடைய சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பத்திரிகைகளின் வாயிலாக இந்தியா அடிமைப்பட்டுக் கிடப்பதையும், சொந்த நாட்டிலே நாம் அந்நியருக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருப்பதும் இவருக்கு தேசாவேசத்தை உண்டாக்கியது. சிவா தினந்தினம் பத்திரிகை படிக்கும் வழக்கமுடையவர். அதில் வரும் செய்திகளைப் படித்து அன்றாட நிகழ்வுகளைக் கவனித்து வந்தார்.. இவர் தர்மபரிபாலன சமாஜம் என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கி, அங்கு நண்பர்களை அழைத்து அரசியல் விவகாரங்களை அலசுவார்.  இப்படி உள்ளே தொடங்கிய இவரது பேச்சு, மெல்ல மெல்ல தெருவுக்கும் வந்தது. இவர் பேச்சு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து மேடைப் பேச்சின் மூலம் தேசபக்திப் பிரச்சாரம் மேற்கொண்டார்.  இப்படி இவருடைய பேச்சு மக்கள் மத்தியில் ஒரு சுதேசிய உணர்வைத் தூண்டிவிட்ட காரணத்தால், இவரை இப்படியே விட்டு வைத்தால் ஆபத்து என உணர்ந்த திருவனந்தபுரம் சமஸ்தானம் இவரை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டுவிட்டது.

            அன்றைய காலத்தில் திருவனந்தபுரம் சமஸ்தான மன்னர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையால், இப்படியொரு தனி மனிதன் அரசுக்கு எதிராகப் பேச அனுமதித்து விட்டால், தங்களுக்கு ஆபத்து எனக் கருதி, அவர்கள் சிவாவை தங்கள் சமஸ்தானத்தை விட்டு நீங்கிவிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அங்கிருந்து கால்நடையாகவே நடந்து வழிநெடுக மக்கள் மத்தியில் பேசி, தேசபக்தி உணர்வை ஆங்காங்கே விதைத்துக் கொண்டு வந்தார். அப்படியே நடைபயணத்தில் வருகின்ற வழியெங்கும் மக்களைச் சந்தித்து பேசிக் கொண்டே திருநெல்வேலியை வந்து அடைந்தார்.

            அப்போது தென் தமிழகத்தில் திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தலைமையில் தேசபக்தி ஊட்டப்பட்டு மக்கள் மத்தியில் ஒரு ஆவேச உணர்ச்சி பரவ ஆரம்பித்திருந்தது. தமிழகத்துக்கு திருநெல்வேலி தேசிய எழுச்சிக்கு வித்திட்டது எனக் கூட சொல்லலாம். தூத்துக்குடி வக்கீலாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்திய பொருளாதாரம் ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைக் கண்டு, ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி இலங்கைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே கப்பல் போக்கு வரத்தைத் தொடங்கியிருந்தார்.

            1906இல் லார்ட் கர்சான் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்து வைத்தார். அந்தப் பிரிவினையை எதிர்த்து நாட்டில் அரசியல் எழுச்சி உருவாகியது. எங்கெங்கும் போராட்டங்கள் கர்சானின் முடிவை எதிர்த்து மக்கள் போராடி சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது மக்கள் எழுச்சி ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தீவிரமாக உருவாக்யது.  தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சென்னையில் சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகள் வாயிலாக சுப்ரமணிய பாரதியார் எழுத்துக்களும் மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கி இருந்தது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் தொடர்பினால், சென்னைக்கு பல தேசியத் தலைவர்கள் வந்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். பால கங்காதர திலகம், பிபின் சந்த்ர பால், லாலா லஜபதிராய், அரவிந்த கோஷ் போன்ற மாபெரும் தலைவர்களை தமிழகத்துக்கு பாரதியார் அறிமுகம் செய்வித்தார். தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை பால கங்காதர திலகரை நேரில் சந்தித்து அவருடைய சுதந்திர எழுச்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அந்த காலகட்டத்தில் தேசபக்தர்கள் எழுப்பிய “வந்தேமாதரம்” எனும் கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. தென் இந்தியாவில் அந்த வந்தேமாதர மந்திரத்தை உபதேசித்த வ.உ.சிதம்பரம் பிள்ளையை “வந்தேமாதரம் பிள்ளை” என்றே அழைக்கத் தொடங்கினார்கள். அப்படி வ.உ.சி. நாட்டையே திரும்பிப் பார்க்கும்படி செய்திருந்த காலத்தில் சுப்ரமணிய சிவா திருநெல்வேலி வந்தபோது அவரைப் பற்றி அறிந்து அவருடன் நட்பு பூண்டார். அது முதல் இவ்விருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல மேடைகள் தோறும் சுதந்திர கோஷத்தை உரக்க முழங்கினார்கள். அவர்களால் மக்கள் மத்தியில் வந்தேமாதரம் எனும் மந்திரம் பிரபலமாயிற்று.

            இப்படி திருநெல்வேலி தமிழகத்திலேயே தேசிய உணர்வை மிக வேகமாக வெளிக்கொணர்ந்த பிரதேசமாக ஆவதற்கு வ.உ.சி., சிவா, பாரதியார் ஆகியோரே காரணமாக இருந்தனர். தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் வ.உ.சி. தொடங்கிய கப்பல் கம்பெனியை இல்லாமல் ஆக்கிவிட வேண்டி ஆங்கிலேய கப்பல் கம்பெனியார் பிரம்மப் பிரயத்தனங்களைச் செய்து வந்தனர். சுதேசிக் கப்பலுக்கு ஆகும் பயணச் செலவைக் காட்டிலும் தாங்கள் குறைத்துக் கொள்ளவும், ஒரு கட்டத்தில் இலவசமாக அழைத்துச் செல்லவும் கூட அவர்களது கப்பல் கெம்ப்னி முன்வந்தது. எப்படியாயினும், எவ்வகையாயினும் சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்தே தீருவது என்பது அவர்களுடைய சங்கல்பம்.

            இப்படி வ.உ.சி. தலைமையில் தென் தமிழ்நாட்டில் சுதந்திரக் கனல் பரவி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், சென்னையில் மகாகவி பாரதியார் ஏற்பாட்டில் வட இந்தியாவில் புரட்சிக்காரராகக் கருதப்பட்ட பிபின் சந்திரபால் எனும் தலைவரை சென்னைக்கு அழைத்து கடர்கரையில் பேசச் செய்தார். அவர் தொடர்ந்து ஏழெட்டு நாட்கள் தங்கி சென்னையில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்து நடந்தது 1907 மே மாதத்தில்.  இப்படி தெற்கில் வ.உ.சி. சிவா ஆகியொரின் சண்டமாருத நொற்பொழிவுகள் அதிகரிக்கத் தொடங்கவும், ஆங்கில ஏகாதிபத்தியம் இவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க ஏற்பாடுகளைச் செய்தது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பல பொதுக்கூட்டங்களில் தேசபக்திப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தேசத் துரொகமானது என்று ஆங்கில ஏகாதிபத்தியும் அவர்கள் மீது 1908 பிப்ரவரி மாதம் வழக்குகளைத் தொடுத்தது.

            1907ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசின் ஆண்டு மாநாடு சூரத் நகரில் நடந்தது. அந்த மகாநாட்டில் காங்கிரசில் தீவிரமாக இருந்த குழுவினருக்கும், மிதவாத காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டு மாநாடு நின்று போயிற்று. அதில் பங்கேற்றிருந்த தீவிரவாத காங்கிரஸ் தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி அதற்கு ‘நேஷனலிஸ்ட் பார்ட்டி’ என்று பெயரிட்டனர். வ.உ.சி., சிவா, பாரதி இவர்களெல்லாம் அப்போது திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரசாராக விளங்கி வந்தனர்.

            1908இல் இந்த நேஷனலிஸ்ட் தீவிர வாத காங்கிரசார் தூத்துக்குடியில் மிகப் பெரிய கூட்டங்களைக் கூட்டிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அந்த கூட்டங்களில் எல்லாம் வ.உ.சி.யும் சிவாவும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் சொற்பொழிவுகள் ஆற்றினார்கள்.

             தூத்துக்குடியில் கோரல் மில் என்கிற நிறுவன தொழிலாளர்கள் ஆங்கில முதலாளிகளால் சுரண்டப்படுவதை எதிர்த்து ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது. வ.உ.சி. அவர்கள் தலைமை வகித்து நடத்திய அந்தப் போராட்டத்தில் சிவாவும் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியிருக்கிறார். இப்படி தெற்கே வெகு தூரத்தில் நடக்கும் இந்த போராட்டங்களை அன்றைய சுதேசமித்திரன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆதரித்து தன் பத்திரிகையிலும் எழுதியிருக்கிறார்.

            சிவா அந்தக் காலத்தில் நடத்தியது அந்நாளைய ஆன்மீக அரசியல்தான். இவர் பேசும்போது தொடக்கத்தில் எல்லா மதங்களின் கோஷங்களையும் எழுப்பி, அதாவது அல்லாஹு அக்பர், சர்வத்ர நாம சங்கீர்த்தனம், வந்தேமாதரம் என்றெல்லாம் கோஷம் எழுப்பிய பிறகுதான் பேசுவாராம். தேசபக்தியை தெய்வபக்திக்கு ஈடாக மதித்து அன்றைய தலைவர்கள் போராடியிருக்கிறார்கள்.

            இந்த கோரல் மில் போராட்டம் காரணமாக இவ்விரு தலைவர்களும் கூட்டங்களில் பேசிய பேச்சுக்களையெல்லாம் போலீசார் திரட்டி, இவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார்கள்.  இவர்கள் மீதான வழக்கு திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் சாட்சி சொல்வதற்காக பாரதியாரையும், சுரேந்திரநாத் ஆர்யா வையும் திருநெல்வேலிக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பப் பட்டது.  ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் அவர்களைச் சாட்சி சொல்ல அனுமதிக்க வில்லையாம்.

            இந்த வழக்கில் 1908 ஜூலை 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. வ.உ.சிக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. இந்த கடுமையான தண்டனையை அப்போது டெல்லியில் இருந்த ஆங்கிலேய பிரதிநிதி மிண்டோ என்பவருக்கு லண்டனில் இருந்த இந்தியா மந்திரியான மார்லி கண்டித்து கடிதம் எழுதியிருக்கிறார். பிறகு மேல் முறையீட்டில் இவ்விருவர் தண்டனைகளும் குறைக்கப்பட்டாலும், வ.உ.சி. கோவை, கள்ளிக்கோட்டை ஆகிய சிறைகளில் அடைபட்டு செக்கு இழுத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டு அங்கே தொழுநோய் தாக்கி கடைசி வரை தொழு நோயால் துன்பப்பட்டு மாண்டு போன கொடுமையும் நடந்தது.

            இவ்விருவர் மேலும் வழக்கு தொடர்ந்து இவர்களை எப்படியாகினும் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று அயராது பாடுபட்ட ஆங்கிலேய அதிகாரிகள் நீதிபதியாக இருந்த விஞ்சு துரை என்பாரும், கலெக்டராக இருந்த பின்ஹே என்பாரும் பெரும் பாடு பட்டிருக்கிறார்கள்.

            தீரர் சுப்ரமணிய சிவா, இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட காரணத்துக்காக, அவர் பேசிய பேச்சுக்கள் தேசவிரோதப் பேச்சுக்கள் என்று சொல்லி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அவருக்கு மூன்று முறை சிறை தண்டனை விதித்துச் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. முதல் கட்டமாக 1908 ஜூலை 7 முதல் 1912 நவம்பர் 2 வரையிலான ஆறாண்டு கால சிறை முதலில் கிடைத்தது. சேலம் சிறையில் அடைபட்டிருந்த அந்த சிறைவாசத்தில்தான் அவருக்குத் தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மிஞ்சிய வாழ் நாள் முசுதும் துன்பத்தில் ஆழ்த்தியது.

            சிறையிலிருந்து வெளிவந்த அவர் மீண்டும் தான் தேச சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்து ஒரு கவிதையை எழுதினார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு வரியில் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை படிப்பவர்கள் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

            முதல் சிறைவாசம் முடிந்து வெளிவந்த சிவா சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். அங்கு அவர் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு, ஒரு நாற்காலி இவற்றை எடுத்துக் கொண்டு போய் கடற்கரையில் போய் பாடி கூட்டத்தை வரவழைத்து அவர்களிடம் சுதந்திம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வந்தார். அதோடு அவர் பத்திரிகை தொடங்கி அதில் ஆசிரியராகவும் இருந்து நடத்தினார்.

            சுப்ரமணிய சிவாவின் இரண்டாவது சிறை வாசம் இரண்டரை ஆண்டுகள். 1921 நவம்பர் 17 தொடங்கியது. முதல் சிறைவாசம் முடிந்து இரண்டாம் சிறைவாசம் தொடங்குமுன்னதாக சுமார் ஒன்பது ஆண்டுகளில் அவருடைய பணிகள் தேசத்தின் சுதந்திரம் பற்றியே அமைந்தன. சிவம் எழுத்தாளராகவும் உருவெடுத்தது இந்த கால கட்டத்தில்தான். இவருடைய முதல் நூல் “சச்சிதானந்த சிவம்” என்பது. இவரே சொந்தமாக 1912இல்  “ஞானபானு” எனும்  ஒரு மாத இதழைத் தோற்றுவித்தார். இந்த பத்திரிகை தொடங்கப்பட்டதன் நோக்கத்தை சிவா அந்தப் பத்திரிகையிலேயே வெளியிட்டிருந்தார். அது, “உறங்கிக் கிடக்கும் தமிழ் ஜாதியினரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டு பண்ணி அவர்களை மேநிலையில் கொண்டு வரவேண்டுமென்பதே இப்பத்திரிகையின் நோக்கம்”. இதை சிவா தன் பெயரில் தொடங்கினால் பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதிக்காது என்பதால் அதைத் தன் மனைவி மீனாட்சி அம்மாள் பெயரில் தொடங்கி நடத்தினார்.

            சுப்ரமண்ய சிவா பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு ஓர் ஆலய எழுப்ப விருப்பம் கொண்டு அதற்கான அஸ்திவாரமும் போடப்பட்டது. ஆனால் அவரால் மேற்கொண்டு அதை எழுப்ப முடியாமல் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆனால் அவர் கண்ட கனவு பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்டு பாப்பாரப்பட்டியில் இப்பொது பாரதமாதா ஆலயம் எழுப்பப்பட்டு, அது சுப்ரமண்ய சிவாவின் நினைவிடமாகவும் திகழ்ந்து வருகிறது. தேசம் இவர் போன்ற தேசபக்தர்களை மறந்து விடக்கூடாது என்பதால் இவர் பொன்ற தியாகிகளை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவசியம், அப்போதுதான் எதிர்காலத்தில் சுயநலமற்ற தேசபக்தர்கள் இந்த நாட்டில் உருவாக முடியும். வாழ்க சுப்ரமணிய சிவா புகழ்!

கட்டுரை ஆக்கம்:-

தஞ்சை வெ.கோபாலன்,  இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007. # 9487851885. 

 

 

Sunday, December 20, 2020

ராபர்ட் கிளைவ்

        கிழக்கிந்திய கம்பெனியை தென்னாட்டில் நிலைபெற வைத்த ராபர்ட் கிளைவ்

            இங்கிலாந்து நாட்டிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியார் தூரக் கிழக்கு ஆசிய நாடுகளில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்குவதற்காக கப்பல்களில் வந்து, நம் நாட்டு கடற்கரையில் வந்திறங்கி, ஆங்காங்கே இருந்த குறுநில மன்னர்களின் அனுமதியோடு ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டு இந்தியாவில் அவர்களுடைய பொருட்களை விற்பனை செய்து, இங்கிருந்து ஏராளமான செல்வங்களை அள்ளிச் செல்லத் தொடங்கிய காலம். அப்போது சென்னைப் பட்டணத்தில் ஆங்கிலேயர்களும், புதுச்சேரியில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் தங்களது முகாமை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

            பிறகு இந்தியாவில் ஆங்காங்கே சின்னஞ்சிறு ராஜ்யங்கள் அரசர்களாலும், பாளையக் காரர்களாலும் ஆண்டு வரப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்த பொருள்களைக் காட்டியும், தங்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்தியும்,  தங்கள் ஆதிக்கத்தைச் சிறிது சிறிதாக இங்கே நிலைநிறுத்தத் தொடங்கினார்கள். அப்படி தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கம்பெனியாருக்கும், பிரெஞ்ச்சு கம்பெனியாருக்கும் போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டெல்லியில் இருந்த முகலாய மன்னரின் ஆட்சி, அதன் புகழ் மங்கிவரும் நேரம் அது. அப்போது இந்தியாவில் நூற்றுக்கணக்கான சுதேச அரசர்கள் சிறுசிறு பகுதிகளை ஆண்டு வந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாதிக்க அரசாக மத்தியில் முகலாயர்களுடைய அரசு இருந்து வந்தது.

இந்தியாவின் வளம், செல்வம் இவற்றைக் குறிவைத்து இங்கிலாந்து நாட்டிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியும், பிரான்ஸ் நாட்டின் கிழக்கிந்திய கம்பெனியும் இந்தியாவை வேட்டைக் காடாக்கி டெல்லி முகலாய சக்ரவர்த்தியின் ஆதரவோடு இங்கு வந்து தங்கள் வியாபாரத்தைத் தொடங்கி நன்கு வளரத் தொடங்கினார்கள். ஐரோப்பாவிலிருந்து பல்வேறு பொருள்களைக் கொணர்ந்து இங்கே விற்று, இங்கிருந்து அரிய பல பொருட்களையும், செல்வங்களையும் அவரவர் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர்.

டில்லி முகலாய சக்கரவர்த்தி ஆட்சியில் தென்னிந்தியாவில் வரிவசூல் செய்ய ஐதராபாத் நிஜாமும், அவருக்குக் கீழே தமிழ்நாட்டுப் பகுதிகளில் உள்ள பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்ய ஆற்காடு நவாபும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் தென்னிந்திய வரலாற்றில் ஆற்காட்டு நவாப் முக்கியத்துவம் பெறுகிறார். பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக் கம்பெனியாரும் இங்கே வந்து தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முயன்ற நேரத்தில் ஆற்காட்டு நவாபின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால் ஆற்காடு முக்கியத்தும் பெற்ற இடமாக ஆனது.

இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் முக்கிய நகரங்களாக விளங்கிய கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இருந்த பல நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பில் இருந்தார்கள். பிரான்ஸ் கம்பெனி புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டு தங்கள் வியாபாரங்களை நடத்தினார்கள். அந்தந்த கம்பெனிகள் அவர்கள் பிரதேசத்திலும், அண்டை அயலிலும் இருந்த சுதேச மன்னர்களோடு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு தங்கள் வியாபாரங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்கள். அவர்கள் வியாபாரம் செய்வதாக உட் புகுந்திருந்தாலும், அவர்களுக்கு இந்த பிரதேசங்களையும் எப்படி கவர்ந்து கொள்வது என்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள்.

இவ்விரு கம்பெனியாரும் எப்படியாவது ஆற்காடு நவாபை தங்கள் பக்கம் இழுத்துவிட முயற்சிகள் செய்தனர். அந்த காலகட்டத்தில் ஆற்காடு நவாப் 1744 முதல் 3 ஆகஸ்ட் 1749 வரையிலான காலகட்டத்தில் அன்வர்தீன்கான் ஆற்காட்டு நவாபாக இருந்தார். அவருடைய மகன் முகமது அலியை துரத்திவிட்டு சந்தா சாஹேப் நவாப் பதவியை அபகரித்துவிட்டார்.  அவரிடமிருந்து ஆற்காட்டை மீட்க பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியும், தஞ்சை மராத்திய மன்னர் பிரதாபசிம்ம ராஜாவும் முயன்று சந்தா சாஹேபை தஞ்சாவூரில் மரண தண்டனை கொடுத்த பின் மீண்டும் முகமது அலிகான் வாலாஜா ஆற்காட்டு நவாப் பதவியைப் பெறுகிறார். எனவே நாம் பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஆற்காட்டில் நவாப்  பதவிக்கு பங்காளிச் சண்டை நடந்து கொண்டிருந்தது.  1750 ஆம் ஆண்டு வாக்கில் ஆற்காடு சந்தா சாஹேபின் வசம் இருந்தது. 

1751 செப்டம்பர் 23 முதல் 1751 நவ 14 வரை ஆற்காடு கோட்டையை ராபர்ட் கிளைவ் எனும் கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தலைவன் முற்றுகை இட்டான். அந்த நேரத்தில் சந்தா சாஹேப் பிரெஞ்சுப் படையுடன் திருச்சியில் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தா சாஹேபின் கவனத்தைத் திருப்புவதற்காக ராபர்ட் கிளைவ் எனும் கிழக்கிந்திய கம்பெனிக்காரர், குறைந்த அளவு படையுடன் ஆற்காட்டின் மீது படையெடுத்தார்.

ஆற்காட்டு நவாப் ஊரில் இல்லாத நேரம், கோட்டையை நவாபின் சிறிய படையும், பிரான்ஸ் நாட்டின் கிழக்கிந்திய கம்பெனி படை வீரர்கள் சிலரும் சந்தா சாஹேபின் சார்பில் ஆற்காடு கோட்டையைப் பாதுகாப்பதற்காக  ஆற்காட்டில் தங்கி இருந்தனர். அப்போது நடந்த சண்டையை இரண்டாம் கர்நாடக யுத்தம் என அழைக்கின்றனர்.

ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அப்போதெல்லாம் விரோதம் நிலவி வந்தது என்பது வரலாற்றில் காணுகின்ற செய்தி. அங்கு நிலவிய அவர்களது விரோதம், வியாபாரம் செய்ய வந்த இந்தியாவிலும், இவ்விருவருக்குள்ளும் விரோதமும், போட்டியும் இருந்ததால், அந்தந்த பகுதிகளில் இருந்த நவாப்புகளைக் கையில் போட்டுக் கொள்ள எல்லா முயற்சிகளும் செய்து வதனர். நம் நாட்டில் இருந்த இந்த சிறு சுல்தான்களுக்கெல்லாம் இவ்விரு ஐரோப்பிய வியாபாரிகள் ஆயுதங்களையும், , இதர உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களுடைய ஆதரவைப் பெற்று வந்தார்கள்.

தட்சிண பிரதேசத்தில் ஐதராபாத் நிஜாமாக ஆசஃப் ஜா என்பவர் தனது குடும்ப அரசாட்சியை தெற்கு இந்தியாவில் நடத்தவும், டெல்லி நவாபுக்கு வரிவசூல் செய்து அனுப்பவும் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டார். இவருடைய ஆளுகைக்கு உட்பட்ட தென் இந்திய பகுதிகளை கர்நாடகப் பிரதேசம் என்றழைத்தார்கள். இவருக்கு தமிழ் பேசும் பகுதிகளில் இருந்த சுதேச அரசர்கள், ஜமீன்தார்கள், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் இவர்களெல்லாம் வரி வசூல் செய்ய ஆற்காட்டு நவாப் நியமித்திருந்தார்.

இந்த காலகட்டத்தில் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் இந்து நாயக்க, மராத்திய மன்னர்கள் ஆட்சிகள் நடைபெற்று வந்தன. மைசூர் அரசாங்கமும் ஒரு இந்து அரசாக வளர்ந்து வந்தது. ஆற்காட்டு நவாபுக்கு வரிவசூலில் உதவி செய்திட தென் இந்தியா நெடுக ஏராளமான பாளையக்காரர்கள் இருந்தார்கள். அப்போது வளர்ந்து வந்த விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கே வலிமையான அரசாக உருவான சமயம், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்களுடைய பிரதிநிதிகள், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய இடங்களில் ஆட்சி புரிந்து வந்தார்கள். நாயக்க மன்னர்கள் என்று இவர்களை அழைப்பார்கள். இந்த அரசாங்கங்கள் எல்லாம் சுயேச்சையான அதிகாரமுடைய நாடுகளாக்வே இருந்து வந்தன. தஞ்சையில் கடைசி நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்கர்களால் போரில் கொல்லப்பட்ட பிறகு பிஜப்பூர் சுல்தானின் விருப்பப்படி மராத்திய தளபதி ஏகோஜி என்பவர் தஞ்சையில் மராத்திய ஆட்சியைத் தொடங்கினார். நாம் காணும் இந்த ஆற்காடு கோட்டை போர் சமயத்தில் தஞ்சையில் அரசாண்டவர் பிரதாபசிம்ம ராஜா என்பவர்.

1748இல் ஐதராபாத் நிஜாம் ஆசஃப் ஜா காலமானார். அவருடைய இடத்துக்கு இருவர் போட்டியிட, ஒருவருக்கு பிரிட்டிஷ் கம்பெனியும், இன்னொருவருக்கு பிரான்ஸ் கம்பெனியும் ஆதரவுக் கரம் நீட்டின. இதில் பிரான்ஸ் ஆதரவளித்தவர் வெற்றி பெற்று ஐதராபாத் நிஜாமாக ஆனார். தெற்கே ஆற்காட்டில் ஆண்டு வந்த ஆற்காடு நவாப் பதவிக்கு சந்தா சாஹேப் என்பவரை பிரான்ஸ் கம்பெனியும், முகமது அலிக்கு இங்கிலீஷ் கம்பெனியும் ஆதரவு கொடுத்தன.

பிரெஞ்சுப் படையின் ஆதரவுடன் ஆற்காட்டு நவாபாக உட்கார்ந்த சந்தா சாஹேப், அவருக்குப் போட்டியாக ஆற்காட்டு நவாபாக ஆகவேண்டிய முகமது அலி கான் வாலாஜா என்பவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடலானார். சந்தா சாஹேப் ஒரு மிகப் பெரிய படையுடன் புறப்பட்டுப் போய் திருச்சிராப்பள்ளி கோட்டையை முற்றுகை இட்டார். அங்கு முகமது அலிகான் வாலாஜா தன்னுடைய சிறிய படையுடனும், 600 பிரிட்டிஷ் படைவீரர்களுடன் சந்தா சாஹேபை எதிர் கொண்டார். முகமது அலியின் பலவீனமான நிலைமையைப் பார்த்து பிரிட்டிஷ் கம்பெனி திருச்சிராப்பள்ளியையும், தென் இந்தியாவையும் கைகழுவிவிட எண்ணினார்கள் .

அந்த சமயம் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்த ராபர்ட் கிளைவ் போர் வீரனாக மாறி முதல் கர்நாடக யுத்தத்தில் பங்கெடுத்தவர், தங்கள் கம்பெனியின் தோல்வி மனப்பான்மையைக் கண்டு மனம் கொதித்து, அப்போது சென்னை கவர்னராக இருந்த தாமஸ் சாண்டர்ஸ் என்பவரிடம் முறையிட்டார். அதாவது சந்தா சாஹேப் ஆற்காட்டை விட்டு நீங்கி முகமது அலி வாலாஜாவை எதிர்த்துத் திருச்சிக்குப் போய் அங்கு முற்றுகையிட்டிருக்கிற நேரத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகள் ஆற்காட்டை முற்றுகையிட வேண்டுமென்று விரும்பினார். அப்படிச் செய்தால் சந்தா சாஹேப் ஆற்காட்டைக் காப்பாற்ற இங்கே ஒடிவருவார் என்பது அவர் கருத்து.

இந்த ஆலோசனையை கவர்னர் சாண்டர்ஸ் ஏற்றுக் கொண்டாலும், கிளைவுடன் தங்கள் படையில் இருந்த 350 பிரிட்டிஷ் படைவீரர்களில் 200 பேரை மட்டுமே அழைத்துச் சென்று ஆற்காட்டை முற்றுகையிட ஆலோசனை சொன்னார். இந்த 200 வீரர்களுடன், ஒரு 300 இந்திய சிப்பாய்களைச் தயார் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஆற்காடு நோக்கி படையெடுத்தார் ராபர்ட் கிளைவ். இது நடந்தது 1751 ஆகஸ்ட் 26ஆம் தேதி.

29ஆம் தேதி காலையில் அந்தப் படை காஞ்சிபுரம் வந்தடைந்தது. இது சென்னையிலிருந்து 42 மைல் (68 கி.மீ)தூரத்தில் இருக்கிறது. கிளைவின் ஒற்றர் படை ஆற்காடு நிலவரத்தைப் போய் பார்த்து வந்து, ஆற்காட்டில்  உள்ள படையில் தங்கள் படையை விட இரு மடங்கு வீரர்கள் இருப்பதாகத்  தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்திலிருந்து 27 மைல் (43 கி.மீ) தூரத்தில் இருந்த ஆற்காட்டுக்குச் செல்லும் வழியில் பயங்கர இடியுடன் கூடிய மழை, புயல் தாக்கி கிளைவின் பயணம் தடைப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து ஆற்காட்டைச் சென்றடைந்தது. அங்கு ஆற்காட்டில் கோட்டையைப் பாதுகாத்துக் கொண்டிருந்த சந்தா சாஹேபின் படைக்கு, ராபர்ட் கிளைவின் படை திடீரென்று வந்து தாக்கும் என்பது தெரியாது.  கோட்டைக்குள் காவலில் இருந்த சந்தா சாஹேபின்  படை பலம் அதிகமாக இருந்த போதிலும், சென்னையிலிருந்து வரும் ஆங்கில கம்பெனியாரின் படைபலம் அதிகமாக இருக்குமென்று கருதி, கோட்டையை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.  இப்படி ஆற்காட்டைப் பிடிக்க எதிர்ப்பே இல்லாமல் போனதால், கிளைவ் மிக சுலபமாக ஆற்காட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு துப்பாக்கி குண்டைக் கூட வீணடிக்காமல் அந்த கோட்டையைப் பிடித்துக் கொண்டார்.

ராபர்ட் கிளைவிடம் ஆற்காடு விழுந்து விட்டது என்ற செய்தி திருச்சியில் முற்றுகையில் இருந்த சந்தா சாஹேபுக்குச் சொல்லப்பட்டது. உடனே அவன் தன் படைவீரர்கள் 4000 பேரையும், உடன் 150 பிரான்ஸ் வீரர்களையும் அந்தப் படைக்குத் தன் மகன் ரஸா சாஹேப் என்பவன் தலைமையில் அனுப்பி வைத்தான். செப்டம்பர் 23 ஆம் தேதி ரஸா சாஹேப் தன்னுடைய படை வீரர்கள் 2000 பேரையும், புதிய சிப்பாய்கள் 5000 பேரையும் 120 ஐரோப்பியர்கள் 300 குதிரைப் படை வீரர்களுடன் கோட்டையை கிளைவிடமிருந்து  மீட்பதற்காகச் சென்றான்.  

அந்த காலகட்டத்தில் ஆற்காட்டில் ஒரு லட்சம் பேர் ஜனத்தொகை இருந்தது. அந்த கோட்டையைப் பிடித்திருந்த ராபர்ட் கிளைவு முதலில் செய்த வேலை தன் படை வீரர்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான தொல்லைகளையும் தரக்கூடாது, கொள்ளையிடக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, மக்களிடமிருந்து சந்தா சாஹேப் பறிமுதல் செய்த சொத்துக்களையெல்லாம் அதனதன் உரிமையானவர்களிடமே திரும்பக் கொடுத்து விட உத்தரவிட்டான். இப்படிப்பட்ட நடவடிக்கைகளினால் உள்ளூர் மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள முடிந்தது. போன சூட்டில் அந்த கோட்டையினுள் தண்ணீர் கிடைக்கவும், கோட்டைப் பாதுகாப்புக்காக ஆட்களையும் தயார் செய்தான். அந்த நேரத்தில் கோட்டைக்குள் இரண்டு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள் மட்டுமே இருந்தது.

ஆற்காட்டு கோட்டையின் சுற்றளவு ஒரு மைல் தூரம் இருக்கும். கோட்டை சுவர் உயரம் குறைவாகவும், சிலவிடங்கள் இடிந்தும் கிடந்தது. கோட்டை பாதுகாப்புக்கான பீரங்கி அமைப்புகள் அறவே இல்லை. சுற்றிலும் இருந்த அகழிகள் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் பெரும்பாலும் வறண்டு கிடந்தது. இதற்கிடையே கிளைவின் படை வீரர்களில் சிலர் உடல் நலம் கெட்டு படுத்த படுக்கையாக ஆனார்கள். மிகுந்தது 120 ஐரோப்பிய வீரர்களும் 200 சிப்பாய்களும் மட்டும்தான். இவர்களை வைத்துக் கொண்டு சந்தா சாஹேபின் படையை எதிர்த்து நின்று கோட்டை அவர்கள் வசம் விழுந்துவிடாமல் காக்க வேண்டியிருந்தது.

சந்தா சாஹேபின் படை கோட்டைக்கு வெளியே சில மைல் தூரத்தில் முகாமிட்டது. சென்னையில் இருந்து கிளைவுக்கு உதவி புரிய ஆங்கிலப் படை எதுவும் வராமல் இருக்க வழி மறித்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உணவுப் பொருள்களும் கோட்டைக்குள் போக முடியாமல் தடைகளை ஏற்படுத்தினார்கள். கோட்டை மீது இருமுறை படைகள் சென்று  மோதிய போதிலும், இரண்டு முறையும் தோல்விதான் மிச்சம்.

ராபர்ட் கிளைவ் இருக்கும் நிலைமைகளைப் பார்த்து விட்டு செப். 14 இரவு நேரத்தில் தன் படைகளை, கோட்டைக்கு வெளியில் தங்கியிருக்கும் சந்தா சாஹேப் படைகள் மீது தாக்குதல் நடத்த வைத்தான். எதிர்பாராத இந்த தாக்குதலால் அச்சமடைந்து சந்தா சாஹேப் படை வீரர்கள் சிதறி ஓடினார்கள். கிளைவ் படையில் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கவர்னர் சாண்டர்ஸ் கிளைவின் பாதுகாப்புக்காக, இரண்டு பெரிய பீரங்கிகளை அனுப்பி வைத்திருந்தார். அந்த பீரங்கிகளை ஆற்காட்டு கோட்டைக்குள் கொண்டு செல்ல உதவிட  தங்கள் படையின் பெரும் பகுதியை உடன் அனுப்பி வைத்தார். குறைந்த அளவிலான படை வீரர்களுடன் கோட்டைக்குள் இருந்த ராபர்ட் கிளைவ், இரவு நேரத்தின் இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு, கோட்டைக்கு வெளியே முகாமிட்டிருந்த சந்தா சாஹேப் படையின் மீது போரிட அனுப்ப, அவர்கள் சிதறி ஓடினார்கள். குறைவான வீரர்களுடன் ராபர்ட் கிளைவ் வெற்றிக் கனியை ஈட்டினான்.

ராபர்ட் கிளைவ் எதிரிகளைக் கோட்டைக்கு வெளியிலேயே சந்தித்து விரட்டிவிட்டான். சந்தா சாஹேப் அனுப்பிய ரசா சாஹேபின் படைகள், மதில் சுவற்றை ஒட்டிய உயர்ந்த கட்டடத்தினுள் புகுந்தது. கிளைவ் இவர்களை விரட்ட ஏற்பாடு செய்த போதிலும்,  எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டான். கிளைவ் தாக்குதல் நடத்தியதில் அங்கு இருந்த பிரெஞ்சு படை வீரர்களில் பலரும் மாண்டு போனார்கள். கிளைவ் இந்த தாக்குதலில்,  தனது ஆங்கிலேய வீரர்கள் பதினைந்து பேரை இழந்தான்.

கிளைவின் பிரிட்டிஷ் படைகள் நாலா புறமும் சூழந்துகொண்ட நிலையில், பதுங்கியிருந்த ரசாவின் படைகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். வெளியுலக தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டு உயர்ந்த கட்டடங்களுக்குள் எலிப் பொறியில் எலிகள் மாட்டிக் கொண்டதைப் போல, உண்ண உணவு, குடிக்க தண்ணிர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் அழுக்கு படிந்த தேங்கிய தண்ணீர் தான். அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து உணவைப் பறித்து உண்டார்கள். இப்படி எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியும், அவர்கள் ஓய்ந்து போனார்கள்.

இதற்கிடையே சென்னை ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் சாண்டர்ஸ் புதிதாக சிப்பாய்களை நியமித்தும், இங்கிலாந்திலிருந்து புதிய படைவீரர்களை வரவழைத்தும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். அக்டோபர் மூன்றாவது வாரத்தில் 130 பிரிட்டிஷ் வீரர்களும் 100 இந்திய சிப்பாய்களும் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அக்டோபர் இறுதியில் பீரங்கிப் படையொன்று பிரான்ஸிலிருந்து புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது. அந்தப் படை ஆற்காட்டை நோக்கி வந்து, கிளைவ் இருக்குமிடத்துக்கு வடமேற்கே நிலை நிறுத்தப்பட்டது. அந்தப் படை கிளைவின் ஒரு பீரங்கியைத் தாக்கி அழித்துவிட்டு இன்னொன்றை பழுதாக்கி விட்டது. ஆறு நாட்கள் பிரெஞ்சு படை கோட்டையைக் கடுமையாகத் தாக்கியது. அந்தத் தாக்குதலால் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த பிரிட்டிஷ் படை இந்த உடைப்பை சரிசெய்ய முயன்றது. இதற்கிடையே கோட்டையின் இன்னொரு பகுதியிலும் பிரெஞ்சு படையால் சுவர் உடைக்கப்பட்டது.

கோட்டை முற்றுகை நீண்டுகொண்டே போயிற்று. உணவுப் பொருட்களும், வெடி மருந்துகளும் கிட்டத்தட்ட தீர்ந்து போன நிலைமை. கோட்டை முற்றுகையின் ஐம்பதாவது நாளும் நெருங்கி வந்தது. கிளைவுக்கு இருந்த ஒரே நம்பிக்கை மராத்திய படையின் தலைவன் மொராரி ராவ் வாக்களித்தபடி, அவர்கள் படையின் உதவியை எதிர்பார்த்தான். அந்நாள் வரை தஞ்சை மராத்தியர்கள் முகமது அலியின் படைகளுக்கும், சந்தா சாஹேபின் படைகளுக்கும் இடையில் நடந்த போரில் நடுநிலை வகித்து வந்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் படைகளின் பக்கம் தங்களுக்கு அனுதாபம் ஏற்பட்டு இப்போது உதவி செய்ய தயாராகிவிட்டார்கள் மராத்திய படைவீரர்கள்.

மராத்திய படை மொராரி ராவ் தலைமையில் பிரிட்டிஷ் படைகளுக்கு உதவ தயாராக இருப்பதறிந்து, சந்தா சாஹேபின் தம்பி ரசா சாஹேப் எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து கொண்டான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட அவர் கிளைவுக்கு ஒரு தூது அனுப்பினான். பரிசுப் பொருட்களை அனுப்பி, கிளைவ் இனி தப்பிக்க வழியில்லை, அதனால் சரணாகதி அடைந்து விடுவதே நல்லது என்பதைச் சொல்லி அனுப்பினார். ஆனால் ராபர்ட் கிளைவ் மறுத்து விட்டான். உடனே ரசா சாஹேப், தான் உடனடியாக கோட்டையைத் தாக்கி உட்புக இருப்பதாகத் தகவல் அனுப்பினான். இதனால் கிளைவின் படை எதிர்வரும் கோட்டை முற்றுகையை எதிர்கொள்ள தயாரிப்பு வேலைகளில் இறங்கியது. இதற்கிடையே கிளைவ் ரசா சஹேபுக்கு அனுப்பிய பதிலில் தான் கோட்டையைப் போரிட்டுப் பிடித்துக் கொண்டவன் என்றும், தன்னுடைய படை வீரர்கள்  ஈவிரக்கம் இல்லாத முரடர்கள் என்றும், அப்படியிருக்கும் போது, ரசா தன் படைகளை விட்டுத் தாக்குவதற்கு முன்பு நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி செய்தி அனுப்பினான்.

ரசா சாஹேப் துணிந்து தாக்குதலை நவம்பர் 14ஆம் தேதி துவக்குவதென்று முடிவெடுத்தான். காரணம் அன்று ரம்ஜான் பண்டிகை. ஆனால் நவம்பர் 13இல் ஒரு ஒற்றன் கிளைவிடம் வந்து ரசா சாஹேப், அடுத்த நாள் கோட்டையைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் சொன்னான். மறுநாள் எதிரிகளின் படை கோட்டையை நோக்கி நகரத் தொடங்கியது. தங்கள் படைக்கு முன்னால் ஏராளமான யானைகள் அடங்கிய ஒரு யானைப் படையை அனுப்பினார்கள். அதன் முகபடாமில் இரும்பு தகடுகள் பொறுத்தப்பட்டிருந்தன. அந்த யானைகள் வேகமாக வந்து கோட்டைக் கதவுகளை முட்டித் தகர்த்தால் மரக் கதவுகள் உடைந்து திறந்து கொள்ளும் அபாயம் இருந்ததை உணர்ந்து கொண்டான் கிளைவ்.  அப்படி கோட்டையை முட்டி உடைக்க வேகமாக வந்து கொண்டிருந்த யானைகளின் மேல் கிளைவின் பீரங்கிகள் வீசிய இரும்பு குண்டுகள் விழுந்து தாக்கின. தாக்குதல்களுக்கு உள்ளான யானைகள் மிரண்டு போய் திரும்பி ஓடத் தொடங்கின. அப்படி ஓடுகின்ற போது அவற்றை நடத்தி வந்த ரசாவின் வீரர்களைத் துவம்சம் செய்துகொண்டு ஓடின. ரசாவின் வீரர்கள் அகழியின் மீது மரப் பலகைகளை வீசி பாலம் அமைக்கத் தொடங்கினார்கள். அந்த மரப் பாலத்தைத் தாண்டி கோட்டையைப் பிடிப்பது அவர்கள் திட்டம். இதனைப் புரிந்து கொண்ட கிளைவ் சாமர்த்தியமாக அந்த மரப் பாலத்தைத் தகர்த்து அந்த முயற்சியைத் தடுத்து விட்டான்.

ரசாவின் படை வீரர்கள் கோட்டை அகழியின் வறண்ட பகுதிகளைக் கண்டறிந்து அதன் மூலமாய் கோட்டைக்குள் புக முயற்சி செய்தார்கள். ஆனால் கோட்டைக் குள்ளிருந்து கிளைவின் பிரிட்டிஷ் படைகள் கடுமையாக பீரங்கித் தாக்குதலை நடத்தத் தொடங்கியது. இன்னொரு பிரிவினர் கோட்டையைக் காப்பதில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர்.

ரசாவின் முன்னால் செல்லும் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடி மருந்துகள், குண்டுகள் இவற்றை பின்னால் இருக்கும் படை அனுப்பிக் கொண்டே இருந்தது. இப்படி தாக்குதல் நடத்திய ரசா படையை உள்ளே இருந்த கிளைவின் பிரிட்டிஷ் படை அடித்துத் துரத்தியது. ரசாவின் வீரர்கள் ஓடத் தொடங்கினார்கள்.

இந்தப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. தாக்குதல் நடத்திய ரசாவின் படையில் நானூறு பேர் உயிரிழந்தனர். கிளைவின் படையில் ஐந்தாறு பேர்கள் மட்டுமே இறந்தார்கள். கோட்டை முற்றுகை பயங்கரமான இரவு முழுதும் தொடர்ந்தது எந்த நேரத்திலும் ரசாவின் படைகள் மறுபடியும் கோட்டையைத் தாக்கலாம் என்ற ஐயம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் மறுநாள் பொழுது விடிந்ததும் கோட்டைக்கு வெளியே எதிரியின் படைகளின் நடமாட்டத்தையே காணோம். முந்தைய இரவு முன் பொழுதில் நடந்த பீரங்கித் தாக்குதலுக்கிடையே ரசா தன் வீரர்களை மெல்ல முற்றுகையை நீக்கிக் கொண்டு பின்வாங்க ஆணையிட்டிருந்தான். அவன் படை வேலூருக்குச் சென்றடைந்தது. அப்படி அவர்கள் பின்வாங்கி ஓடுகின்ற போது ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள் இவற்றை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.

பிரெஞ்சுப் படையின் ஆதிக்கம் ஓங்கிவிடும், பிரிட்டிஷ் கம்பெனியார் தென்னிந்தியாவை பிரான்சுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த சூழ்நிலையில் அதனை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டான் ராபர்ட் கிளைவ். படைவீரர்களின் எண்ணிக்கையில் பிரெஞ்சு படை அதிகம் இருந்தாலும் கிளைவின் சாமர்த்தியத்தால் போரின் முடிவை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டான். ஆள்பலம் மட்டும் போதாது, வெற்றிக்கு வேறு பல வழிகளும் உண்டு என்பதை கிளைவ் நிரூபித்து விட்டான். கிளைவின் இந்த வெற்றி இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்ததென்றால் அது மிகையில்லை.

ராபர்ட் கிளைவின் வரலாற்றை எழுதிய மார்க் பென்ஸ் ஜோன்ஸ் என்பார் எழுதுகிறார், “கிளைவின் இந்த சாதனை, அதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம், எதிரிகளின் தவறான நடவடிக்கைகளால் கூட இருக்கலாம், இந்த நிகழ்வானது இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் நாடு பிடிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், தாங்கள் தோற்கடிக்கப் பட முடியாதவர்கள் என்கிற எண்ணத்தையும், இந்தியாவில் தாங்கள் நிரந்தரமாக நிலைத்து விடலாம் என்ற எண்ணத்தை இந்த வெற்றி கொடுத்தது” என்கிறார்.

இந்த ஆற்காடு வெற்றிக்குப் பிறகு ஏராளமான இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய படையில் சேர்ந்தார்கள். எதிரிகளின் படைவீரர்களும் கிழக்கிந்திய கம்பெனி படையில் சிப்பாய்களாகச் சேர்ந்து கொண்டார்கள். ஆங்கில படையின் வலிமை அதிகரித்துக் கொண்டே போன நிலயில் பிரான்சின் காலனி ஆதிக்க ஆசைக் கனவு, மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பின்னர் நடந்த ஏழாண்டு போரில் பிரான்சின் தோல்விக்குப் பிறகு அவர்கள் இந்தியாவை காலனியாக ஆக்கும் கனவை அறவே மறந்துவிட வேண்டி இருந்தது.