பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 4, 2015

12. காமதேனு (தொடர்ச்சி 2)

அமிர்தம் தேடுதல்

''காக்க நின்னருட் காட்சியல்லாலொரு போக்குமில்லை.''                                                    --தாயுமானவர்.
பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.
'தூங்கையிலே வாங்குகிற மூச்சு-அது
சுழிமாறிப் போனாலும் போச்சு'
இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாகி விட்டது. என்னடா இது! இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தில் நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்?ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிறான். அறிவே தமது வடிவமாக அமைந்திருக்கிறான். அறிவு, இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம்இன்பம். இந்த உலகம் கவலையற்றதாகும்; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீது தான் நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுபோல் கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினாலே காண்கிறோம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக் கண்ணாலே தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டி போலத் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி, ஸூரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள், மலை, காடு, நதி, கடல் - அழகு.
தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் "அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே இன்பம்; மண், இதன்விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம்,இதன் தாங்குதல் இன்பம்; காற்று இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக் கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம். உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம்; கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல் அறிதல்-எல்லாம் இன்பந்தான்.
துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை

ஆனால் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ளவேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டிஎறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால்,அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரியபெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைகள்புலப்படுகின்றன. நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும் படி நாம் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத்தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் "காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். 'பொறுத்தவன் பூமியாள்வான்.''பதறின காரியம் சிதறும்' இடையே குறுக்கிடும் மரணம். இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மாலஇயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது இதனிடையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது?  தூங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்ஸை இது?  நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். ''அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை'' என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டிவராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நமுடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.
தர்மம்

"ஹிந்துஸ்தான் ரெவ்யூ" என்று அலஹாபாத்தில் பிரசுரமாகும் மாதப் பத்திரிகையில் ஸ்ரீீ வாடியா என்பவர் ''ஒழுக்கம்'' என்பது பற்றி மிகவும்நேர்த்தியான லிகிதம் "எழுதியிருக்கிறார். அதில் அவர் சில ரஸமான கேள்விகள் கேட்கிறார்.அவருடைய வசனங்களை முழுதும் மொழி பெயர்க்காமல் அந்தக் கேள்விகளின் ஸாரத்தை இங்கே சொல்லுகிறேன்:
'தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போரென்று ஸாமான்யர் சொல்லுகிறார்கள். சில சமயங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. ஒரு தந்தை தன் மகனைக் கொலைத்தண்டனையிலிருந்து மீட்கும் பொருட்டாய்ச் சாட்சி சொல்லுவதாக வைத்துக்கொள்வோம். அவனுடைய செய்கையை எவ்விதமாகத் தீர்மானஞ் செய்வோம்? மகனைக் காப்பது தந்தையின் கடமை. ராஜ்யத்தில் நீதி பரிபாலனத்திற்கு, தான் துணை புரிவதும் கடமை. இரண்டும் தர்மம். ஆனால் ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. தவிரவும், பூர்வசரித்திரங்களை ஆராய்ச்சி செய்யுமிடத்தில், யூனியுஸ் புரூத்தஸ் என்ற ரோம தேசத்தான் தேசபக்தியின் மிகுதியால் தன் சொந்த மகனைக் கொன்றான். மார்க்குஸ் புரூத்தஸ் அதே காரணத்தைச் சொல்லி யூலியுஸ் கேஸரைக் கொன்றான். பதிவிரதை நோன்பு பெரிதென்று கருதி லூக்ரேஸியா தற்கொலை செய்துகொண்டாள்; ஸீதை ராமனுடைய ஸந்தேக நிவர்த்திக்காக நெருப்பிலே விழத் துணிந்தாள். ஹிந்து மதத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றஅவாவினால் சிவாஜி அப்ஜுல்கானைக் கொலை செய்தான். தர்மங்களுக்குள்ளே பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. தர்மசாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டால் இரண்டு பக்கமும் பேசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன'
மேலும், 'ஒழுக்கம் என்ற சொல்லுக்கே பொருள் சில இடங்களில் சரியாக வழங்கவில்லை' என்று அவர் சொல்லுகிறார். ஒழுக்கத்திற்குப் பணிவு, கீழ்ப்படிதல் அவசியமென்று சிலர் சொல்லுகிறார்கள். சரித்திரத்தில் மேன்மை கொண்ட பெரியோர்களைக் கருதுவோம். புராதன உலகத்தில் அலெக்ஸாந்தர், யூலியுஸ்கேஸர், ஹானிபால் என்பாரும், இங்கிலாந்தில் க்ராம்வெல், சேதாம் என்பாரும், நெப்போலியன். பிஸ்மார்க், அக்பர், சிவாஜி, ஹைதர் அலி முதலிய சக்திமான்களும், இலக்கியத்தில் மில்டனும், கெத்தேயும் மிகுந்த கீழ்ப்படிவுள்ள குணத்துடன் இருக்கவில்லை. தன்னம்பிக்கை அவர்களிடம் பரிபூரணமாக இருந்தது. ?நமது காலத்தில் நாம் மகத்தான காரியங்கள் செய்வோம்; இளைக்க மாட்டோம்: பின் "வாங்கமாட்டோம்" என்று தீவிரமாக வேலை செய்தார்கள்;சரித்திரத்தின் நாயகராயினர். நீதி சாஸ்திரம் இன்னும் நேரேவகுத்தாகவில்லை.
'அட போ. பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை' என்று மேற்படி வாடியா சொல்லுகிறார். 'பதறின காரியம் சிதறும என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. 'சோற்றுக்கு முந்திக்கொள' என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியைநம்பலாம்? 'ஒழுக்கமாவது மனோதைரியம், இஷ்டத்தைக் கைவிடாத மேன்மைக் கொள்கை; மற்றதெல்லாம் அதற்கிணங்க வைத்துக்கொண்டால் அதுவே சரியான தீர்ப்பு' என்று ஸ்ரீவாடியா சொல்கிறார்.
கடைசியாகத் தம்முடைய முடிவை ஒருவிதமாக மேற்படி லிகித கர்த்தா காட்டுகிறார்:
'ஆரம்பத்தில் சொல்லியபடி பொய்ச் சாக்ஷி கூறி மகனுயிரை நீதி வஞ்சனையால் மீட்கக் கருதிய பிதாவினுடைய திருஷ்டாந்தத்தை எடுப்போம். அவன் கேவலம் தன்னுடைய குடும்ப தர்மமே உயர்வென்று நினைக்காமல் லோகதர்மமே மேலென்று நினைத்து அதன்படி உண்மை கூறியிருந்தால், மகனுயிர் போய்விடலாம். நெஞ்சு தகரலாம், மானம் அழியாமலும் தர்ம ஸம்பத்துக்கு வழியாகவும் இருக்கும' என்பது மேற்படி லிகித ஸாரம்.


No comments: