தொழிலுக்கும்
செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்
கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப் படுகிறது.
கைத்தொழில் செல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத்தொழிலை நடத்துகிறது. 'புத்தியில்லாத
மூடர்கள் சக்ரவர்த்திகளாகவும், ராஜாக்களாகவும், பெரிய நிலஸ்வான்களாகவும், முதலாளிகளாகவும்
இருந்து பெருஞ்செல்வங்களைக் கையாளுதல் காண்கிறோமே! எனவே, அறிவுத் திறமையாலும், அறிவு
முயற்சியாலும் பெருஞ்செல்வம் திரட்டப்படுகிற தென்றுசொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?' என்று கேட்பீர்களாயின், அதற்கு உத்தரம் சொல்லுகிறேன்.
பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமிருப்பது காண்கிறோமாயினும்,
இவர்களுக்கு இந்தச் செல்வம் ஏற்படுத்திக் கொடுக்க இவர்களுடைய முன்னோர்களில் அநேகர்
அல்லது ஒருவனாயினும் மிகுந்த புத்திசாலியும், அந்த புத்தியைக் கொண்டு சோம்பலின்றி
விடாமுயற்சியுடன் உழைப்பவனாகவும் இருந்திருக்கவேண்டும். புத்தி மாத்திரம் இருந்தால்
போதாது. அதைக்கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான்
செல்வம் சேர இடமுண்டாகும். 'வெறுமே மிருகபலத்தால் ராஜாக்கள் ஸைந்யங்களின் மிகுதி காரணமாகப்
பிற நாடுகளைக் கொள்ளையிட்டு அளவிறந்த பூமியும் செல்வங்களும் சேர்த்ததாகச் சரித்திரங்களில்
படித்திருக்கிறோமே. அப்படியிருக்கையில், புத்தி நுட்பத்தால் செல்வம் சேர்வதாகச் சொல்லுதல்
தகுமோ?' என்று கேட்பீர்களானால், அதற்கு விடை கூறுகிறேன். யுத்தம் மிருகத் தொழிலாக இருந்தபோதிலும்,
நல்லோர்களால் எவ்வகையாலும் வெறுக்கத்தக்க இழிதொழிலாக இருந்தாலும், அதற்கு மிருகபலம் மாத்திரம்
இருந்தால் போதும் என்று நினைப்பது தவறு. யுத்தசாஸ்திரம் என்பது ஒரு பெரிய சாஸ்திரம்,
அதில் மிருகபலம் கருவு; அறிவு கர்த்தா. ஸாதாரணக் கொள்ளைக் கூட்டங்களிலே கூடத் தலைவனாக
இருப்பவன் சிறந்த புத்தி நுட்பமுடையவனாக இருத்தல் இன்றியமையாதது. எத்தனையோ விதமான
அறிவுப் பயிற்சிகள் ஆதிகால முதலாகவே யுத்தத்துக்கு அவசியமாக ஏற்பட்டிருக்கின்றன. அதிலும்,
தற்கால யுத்தங்களோ பல பலதுறைகளில் மிகச் சிறந்த அறிவுத் தேர்ச்சி கொண்ட பண்டிதர்களாலே
நடத்தப்படுகின்றன.
வியபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதானநெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு
மிக உயர்ந்த புத்தி நுட்பம் எக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இக்காலத்தில்
இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒரு க்ஷணங்கூடத் தரித்து நிற்கமாட்டா.
இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகால முதல் அறிவுப் பயிற்சியுடைய வகுப்பினர்
கைத்தொழிலாளிகளுக்குக் கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.
'எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விலக்கிவிட வேண்டும்' என்ற விநோத விதியொன்று
மனு ஸ்ம்ருதியிலே காணப்படுகிறது. நம்முடைய தேசத்தில் மட்டுமே யன்று, உலக முழுமையிலும்
எல்லா நாடுகளிலும் கைத்தொழிலாள ருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள்
நடைபெற்று வந்திருக்கின்றன.
ஆனால், இந்த சூழ்ச்சியை மீறி, எல்லா நாடுகளிலும், முக்கியமாக, நமது
பாரத தேசத்தில்,கைத்தொழில் புரியம் கூட்டங்களைச் சேர்ந்தோரில் பற்பலர்கல்வித் தேர்ச்சி யடைந்து
வந்திருக்கிறார்கள். ஆனால், இங்ஙனம் கல்விப் பயிற்சி வாய்ந்தோர் பெரும்பாலும் தம்முடைய
பரம்பரைத் தொழில்களில் இறங்காமல், சுத்த இலக்கியப் பயிற்சியிலேயே வாழ்நாள் கழிப்பாராயினர்.
எனினும், சென்ற ஓரிரண்டு நூற்றாண்டுக்குள்ளே ஐரோப்பாவில் எல்லா வகுப்பினருக்கும்
கல்வி பயிற்றும் முறைமை தொடங்கி வந்திருக்கிறது. இந்த ஸர்வ ஜனக்கல்வி யென்னும் கொள்கை
ஐரோப்பாவிலிருந்து உலகத்தின் பிறபகுதிகளிலும் தாவிவிட்டது. இக்கொள்கையை நமதுநாட்டில்
நிறைவேற்றிவிட வேண்டுமென்று பல புண்ணியவான்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள். இங்ஙனம்
எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த எல்லா மனிதரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகிய பலவகைப்பட்ட
அறிவுப் பயிற்சிகளும் பரவிவிடுமானால்,அதினின்றும், கைத்தொழிலாளிகள் கல்விப் பயனைக் காவியங்கள்
இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத்தமக்கு உரிய
தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதினின்றும் இதுவரை உலகத்தில்கைத்தொழிலாளர்
பரம ஏழைகளாக இருந்து வரும் நிலைமைநீங்கி மேன்மேலும் கைத்தொழிலாளருக்குள்ளே செல்வம் வளர்ச்சி
பெற்று வர ஹேதுவுண்டாகும்.
இப்போது நமது நாட்டில் அங்கங்கே பலதொழிற்சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு
வருகின்றன.இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய
யத்தனங்கள் பல செய்துகொண்டு வருகிறார்கள். இந்தப் பிரயத்தனங்களெல்லாம் முற்றிலும்
நியாயமே. இதில் ஐயமில்லை.
ஆனால், இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலேமுயற்சி செய்வதுடன் தமது
கார்யங்களை நிறுத்திவிடாமல்,அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில்
தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும். மேலும், பகற்பள்ளிக்கூடங்கள்
மாத்திரமே யன்றி இராப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் - எல்லாப் பிராயத்தினரும்
- சென்று படிப்பதற்குரிய காரியங்களைநடத்தவேண்டும்.
அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் மாமியும்
மருமகளும் போல்வர் என்றும், கல்வியுள்ள இடத்தில் செல்வமும், செல்வமுள்ள இடத்தில் கல்வியும்
ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமது நாட்டில் பரம மூடத்தனமான கொள்கை யொன்று பரவிநிற்கிறது.
வெறுமே வர்ணனைகளும், கற்பனைகளும் சமைத்து,யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில்
காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச்செல்வம் சேர
மார்க்கமில்லை யென்பது ப்ரத்யக்ஷம். இந்த அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டே மேற்படி கொள்கை ஆதிகாலத்தில்
உற்பத்தியாயிற்று. ஆனால், அது இக்காலத்துக்குப் பொருந்தாது. காவியங்களைக்கூட எளிய
நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொதுஜனக் கல்வியும் பரவிவரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு
ஏராளமான லாபம் கிடைக்கும்.காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் படிக்காமல், பலவகை வியாபாரங்களுக்கும்,
தொழில்களுக்கும் வேண்டிய படிப்புகள் படித்து, அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு,மேன்மேலும்
செல்வம் பெருகும். ஆதலால், தொழிலாளிகளே, கல்விப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும்
உங்கள் மக்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள்.
தொழிலாளருக்குச்
சில வார்த்தைகள்
சென்ற செவ்வாய்க்கிழமையன்று ''சுதேசமித்திரன்''தலையங்கத்தில் தொழிலாளர்
இயக்கத்தைப் பற்றி மிகநேர்த்தியான வ்யாஸமொன்று எழுதப்பட்டிருந்தது.
அதன் ஆசிரியர் அதே விஷயத்தைக் குறித்துஇன்னும் தொடர்ச்சியாகப் பல வ்யாஸங்கள்
எழுதுவதாகத்தெரிவித்திருப்பது தொழில் விஷயத்தில் சிரத்தையுடைய என்போன்றோருக்கெல்லாம்
மிக மகிழ்ச்சி தரத்தக்க தொருசெய்தியாம்.
தொழிலாளிகள் என்போர் சரீரத்தால் உழைத்து"வேலை செய்கிறவர்களே என்று
சிலருக்கு எண்ணமிருக்கலாம்.அது தப்பு. சரீரத்தாலாகட்டும், புத்தியாலாகட்டும், முதலாளிக்குட்பட்டு
வேலை செய்கிறவர்கள் எல்லாருமேதொழிலாளிகள் என்று அந்த வ்யாசம் எழுதியவர்சொல்லுகிறார்.
இது நம்முடைய தேசத்தார் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், நம்மவருடைய மனதில்
இந்த விஷயம் பதிவு பெறுதல் மிகவும் சிரமம்.
குமாஸ்தாக்கள், உபாத்தியாயர்கள் முதலியவர்களும் தொழிலாளிகளே என்று அந்த
வ்யாஸ மெழுதியவர்சொல்லுகிறார். எனவே, என்போன்ற நூலாசிரியர்களும் தொழிலாளிகளே. முதலாளிகூட,
ஆள் நியமித்தல், வேலையைமேற்பார்த்தல், வியாபார சம்பந்தமான கணக்குகளைக்கவனித்தல் முதலிய
செய்கைகளால் தொழிலாளி ஆகிறான்.
முதலாளி, தொழிலாளி என்னும் இந்தக் கக்ஷி பேதமே நமது நாட்டுக்குப் புதிது.
நூலாசிரியரும் வீதிபெருக்குவோரும் ஓரினமாகச் சேர்ந்து வைசியருக்கு விரோதமாகப் போராடுதல்
நமது தேசத்தில் நேற்றுவரை நினைக்கொணாததோர் செய்தியாக இருந்தது; இன்று ஸாத்யமாகிவிட்டது.
இது ஐரோப்பிய தொழில் முறைமைகளும் கொள்கைகளும் நம்முடைய தேசத்தில் பரவுவதால்
ஏற்படும் இன்றியமையாத விளைவாகும்.
நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும்
உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம்
ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமேசெய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம்.மற்ற
தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும்
இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம் (அதாவது,நான்கு வர்ணங்களென்ற
வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. சில இடங்களில் மாத்திரம்
குருக்களைக் காட்டிலும் அரசர் உயர்ந்தவகுப்பினராகக் கருதப்பட்டனர்; சில நாடுகளில்
அரசரே குருக்களாகவுமிருந்தனர். மற்றப்படி உலக முழுமையிலும்குருக்களும், சாஸ்திரிகளும்
தலைமைப் பகுதியாகவும், அரசர்,வணிகர், கைத்தொழில் செய்வோர் என்பார் முறையே தனித்தபகுதிகளாகவுமே
கருதப்பட்டு வந்தனர்.
ஆனால், சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் ஸகல ஜனங்களும் ஸமானமென்றும், ஆதலால்
பிறப்புப் பற்றியேனும், உடைமை பற்றியேனும்,தொழில் பற்றியேனும், மனிதருக்குள்ளே எவ்விதமேன்மை
தாழ்வுகளேனும் உணவு உடை முதலியஅவசியப் பொருள்களின் அனுபவத்தில் வேற்றுமைகளேனும் பாராட்டக்
கூடாதென்றும் ஒருபுதிய கொள்கை தலைப்பட்டு நடந்துவருகிறது. சென்றசில வருஷங்களாக இக்
கொள்கை அந்தக் கண்டத்தில்மிகவும் வலிமையுடையதாய் விட்டது. ஆரம்பமுதலாகவே இக் கொள்கை
ஐரோப்பாவில்தொழிலாளருக்குள்ளே அதிகம் செல்வாக்குப்பெற்றுவந்தது.
நூலாசிரியர்களும், உபாத்தியாயர்களும், மாஸம் 1,000 ரூபாய் வாங்கும்
குமாஸ்தாக்களும், மாஸம் 2,000ரூபாய் ஸம்பாதிக்கும் பத்திராதிபர்களும், இவர்களைப் போன்ற
பிறரும் தொழிலாளிகளுடன் சேர்த்து கணக்கிடுவதற் குரியவரென்ற கொள்கை ஐரோப்பாவிலேயே ஆரம்ப
முதல் கிடையாது. இது சமீபகாலத்திலே நேர்ந்ததொரு புதிய கொள்கை. ஆதியில், தொழிலாளரின் கிளர்ச்சி
ஐரோப்பாவில் வேரூன்றியது. முக்கியமாக யந்திரசாலைகளின் ஸ்தாபனத்தினாலேயாம். அதற்கு முன்னர்,
அங்குள்ள தொழிலாளர் பெரும்பாலும் ஜமீன்தார்களிடமும் எண்ணற்ற சிறு சிறு தொழிற்கூடங்கள்
வைத்து வேலை செய்த தொழிலாளரிடமும், சிறு சிறு முதலாளிகளிடமுமே வேலை செய்துகொண்டிருந்தனர்.
தத்தம் வீட்டிலேயே தறி முதலியனவைத்து தாமே முதலாளிகளாகவும் தொழிலாளி களாகவும் வேலை
செய்தோர் பலர். இப்படியிருக்கையிலே, துணி நெய்யவும், இரும்பு தறிக்கவும், மர மறுக்கவும், எண்ணெயாட்டவும்,
பாத்திரங்கள் செய்யவும், முக்கியமான தொழில்களுக் கெல்லாம் யந்திரங்கள் ஏற்பட்டன. அதாவது மனித
சக்தியால் செய்து கொண்டு வந்த காரியங்கள் நீராவியின் சக்தியாலும், மின்சார சக்தியாலும் செய்யப்படலாயின.
நீராவியும் மின்சாரமுமோ அபாரவலிமை கொண்ட பூத சக்திகள். அவற்றின் திறமைக்குவரம்பே
கிடையாது. ஆயிரம் மனிதர் சேர்ந்து ஆயிரம் நாட்களிலே செய்தற்குரிய தொழிலை இந்த இயந்திரங்கள் ஒரு
தினத்தில் செய்து முடிக்கத் தொடங்கின. எனவே, பெருஞ் செல்வமுடையோர் தம்முள்ளே
கூட்டுகள் கூட்டிக்கொண்டு யந்திரங்களை ஏராளமாகத் தயார் செய்து அவற்றின் மூலமாக நெசவு
முதலிய தொழில்களைச் செய்யத் தலைப்பட்டனர். இதனால் ஏககாலத்தில் பதினாயிரம் லக்ஷக்கணக்கான
தொழிலாளருக்குத் தொழிலில்லாமற் போய் பட்டினி கிடக்க நேர்ந்தது. இதுதான் ஐரோப்பாவிலே
தொழிலாளர் கக்ஷி வேரூன்றி பலப்படத் தொடங்கியதின் காரணம்.
அதற்கு முன்பு தனித்தனி ஜமீன்தார்களிடத்திலும் சிறு சிறு முதலாளிகளிடத்திலும்
வேலை செய்த தொழிலாளிகள் தத்தமக்கு நேரும் குறைகளை தத்தம் இடத்துக்கும் ஸ்திதிக்கும்
தக்கபடி கெஞ்சியும் முணுமுணுத்தும் சில ஸமயங்களில் சிறு கலகங்கள் நடத்தியும் தீர்த்துக்கொண்டார்கள்.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேதான் யந்திரங்களின் சக்தியால் தொழில் செய்யும் முறைமை
மிகுதியுற்றது. அப்போதுதான் அங்குள்ள தொழிலாளிகள் முதலாளிகளுக் கெதிராகக் கிளர்ச்சி
நடத்தும் வழக்கத்தை கைக்கொள்ளலாயினர். நாட்பட நாட்பட, யந்திரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட
துணி முதலியன ஐரோப்பாவினின்றும் ஆசியா முதலிய இதர கண்டத்து ஜனங்களினிடையே அதிகமாக விற்கப்படலாயின.
இங்கிலாந்து முதலிய தேசத்தார் தம் நாடுகளுக்கு வேண்டிய துணிகள் முதலியனவே யன்றி
உலக முழுமையிலும் கொண்டு விற்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் தாம் புதுமையாய்க் கண்டுபிடித்த
பூத சக்திகளாகிய நீராவியையும் மின்சாரத்தையும் கொண்டு வேலை செய்வாராயினர். இதனால்
உலகத்துச் செல்வம் மேன்மேலும் ஐரோப்பாவிற்குச் செல்ல இடமுண்டாயிற்று. அதினின்றும்
ஆரம்பத்திலே பல தொழிலாளிகள் வேலையிழந்து அங்கு பட்டினிகிடக்க நேர்ந்த துன்பத்துக்குத்
தக்க நிவாரணமுண்டாய் அந்த நிவர்த்தி மேன்மேலும் மிகுதிப்பட்டு வந்தது.
அதற்கு முன் இருந்த ஜன ஸமூக வரம்புகளும் நியதிகளும் சிதறிப்போய் விட்டனவே
யெனினும் பெரும்பாலும் தொழிற் கூட்டத்தாருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆசியாவிலும்
பிற கண்டங்களிலும் லக்ஷம் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஐரோப்பியத் துணி முதலியன ஏற்றுமதியாகத்
தலைப்பட்டதினின்றும் ஐரோப்பிய தொழிற் கூட்டத்தாரிடையே தொழிலற்றவராய் வருந்திய ஜனங்களின்
தொகை மேன்மேலும் குறையலாயிற்று. எனினும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே
ஏற்பட்ட கக்ஷி பேதங்கள் தீரவில்லை; அவை மிகுதிப்பட்டுக் கொண்டே வந்தன. இதற்குக் காரணம் அங்கு
தொழிலாளருக்குள்ளே சங்க சக்தி அபாரமாக அதிகப்பட்டு விட்டது. ஒவ்வொரு ஆலையிலும் பதினாயிரம்
லக்ஷக்கணக்கான தொழிலாளிகள் வேலைசெய்தனர். இவர்களுக்குள்ளே பலர் கல்வி கற்றோர்ஆயினர்.
இதனிடையே மேற்கூறப்பட்ட ஸமத்துவக் கொள்கை, அதாவது, குற்றங்களுக்குத்
தண்டனை விதிப்பதில், செல்வருக்கும் எளியோருக்கும், மேற்குலத்தாருக்கும் கீழ்க்குலத் தாருக்கும்,
சட்டம் ஸமானமாக வேலை செய்ய வேண்டுமென்றும், உணவு முதலிய ஸௌகரியங்களிலும் லௌகீக மரியாதைகளிலும் மானிடருக்குள்ளே
எக்காரணம் பற்றியேனும் யாதொரு வேற்றுமையும் நடைபெறக் கூடாதென்றும், உலகத்தில் எல்லா
மனிதரும் எல்லா வகைகளிலும் ஸமானமாவாரென்றும் பிரான்ஸ் தேசத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில்
எழுச்சி பெற்று நாட்பட நாட்பட ஐரோப்பா முழுவதிலும் வியாபித்துக் கொண்டு வந்ததொரு கொள்கை
தொழிலாளரிடையே மிகுதியாகப் பரவலாயிற்று. அதன் மேல் இத் தொழிலாளர் நாம் பாடுபட்டு உற்பத்தி
செய்யும் பொருள்களை விற்று இந்த முதலாளிகள் இத்தனை பணம் ஸம்பாதிக்கிறார்கள். நாமோ பெரும்பாலும்
குடியிருக்கக் குடிசைகளும் சாக்கடைகளும் தின்பதற்குப் பழைய ரொட்டியும் பழைய மீனுமாக
வாழ்ந்து வருகிறோம். இவர்கள் மாளிகைகளில் வாழ்ந்து குபேரஸம்பத்தை அனுபவிக்கிறார்கள்.
இது ஸமத்துவக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இவர்கள் முதல் போட்டார்களே யெனில்,
நாம் பாடுபட்டோம். எல்லோருக்கும் லாபம் ஸமானமாகவே இருக்க வேண்டும் என்றுவிரும்பலாயினர்.
எனினும் திடீரென்று ஸமபாகம் கேட்க துணியாமலும் அதனைப் பெறுதல் சாத்யமில்லை யென்று நிச்சயமாகத்
தெரிந்தபடியாலும் சிறிது சிறிதாக கூலி உயர்வுக்குக் கலகம் பண்ணிக்கொண்டு வந்தார்கள்.
வாஸத்திற்கு ஸௌகரியமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றார்கள், தொழிலாளிகள்
கிழவரானஇடத்திலும் நோயாளிகளான இடத்திலும் இனாம் சம்பளம் கொடுக்க வேண்டு மென்றார்கள்,
தங்களுக்கும் தம்முடைய மக்களுக்கும் படிப்புச் செரல்லி வைப்பதற்குரிய சாதனங்கள் செய்யவேண்டு
மென்றார்கள். தொழில் நோக்கத்தைக் குறைக்க வேண்டு மென்றார்கள், படிப்படியாக இவ் வேண்டுதல்களை
முதலாளிகள் தெரிந்து கொண்டே வந்திருக்கிறார்கள் எனினும் இத்தகைய போராட்டங்களில் இன்றுவரை
தொழிலாளிகளே வெற்றியடைந்து கொண்டு வருகிறார்கள். இதற்குரிய காரணங்கள் பல. இவற்றைக் குறித்து
பிந்திய பகுதிகளில் விஸ்தாரமாக எழுதுகிறேன்.
தொழிலாளர்
பெருமை
ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட
வேற்றுமைகள் இப்போது மிகவும் முற்றிப் போய்விட்டன. இந்நிலையில் அவ்விரண்டு கக்ஷியாருக்கு முள்ள
மனஸ்தாபங்களை யெல்லாம் தீர்த்து அவர்களில் ஒரு திறத்தாரால் மற்றொரு திறத்தாருக்கு விளையும்
பரஸ்பரமான கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அவர்களுக்குள்ளே ஸமாதானமும் ஒற்றுமையுணர்வும் ஏற்படுத்துதல்
மிகவும் சிரமமான காரியம். இஃது வெறுமே சாதாரண மனிதயத்தனத்தால் நிறைவேறக் கூடியதாக தோன்றவில்லை. உலகத்தில்
இதுவரையில்லாத புதிய தெய்வீக சக்திகள் கொண்ட அவதார புருஷர்கள் தோன்றினால் அவர்களே ஐரோப்பாவில்
மூண்டிருக்கும் இந்தப் பெரிய விபத்துக்கு ஸமாதான வழிகளிலே நிவர்த்தி செய்யக்கூடும். சென்றஇரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பியத் தொழிலாளர் சிறிது சிறிதாக சம்பாதித்துக்
கொண்டு வந்திருக்கும் உரிமைகளுடனே அவர்கள் திருப்தி கொண்டு இருக்கவேண்டும். இதுவரை
அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளே மிகவும் அதிகம். இவற்றைக் கூட இன்னும் குறைத்தால்
நல்லது. இப்படியிருக்க,தொழிலாள்ளர் இன்னும் அதிகமான உரிமைகள் கேட்பதற்கு நாம் கொஞ்சமேனும்
செவி சாய்க்கக்கூடாது என்று பெரும்பான்மையான முதலாளிகள் நினைக்கிறார்கள். தொழிலாளரோ,
அங்கு ராஜாங்க அதிகாரத்தை தமது வசமாகச் செய்து கொண்டாலன்றி, அதாவது, தங்கள் இஷ்டப்படி
சட்டம் போட்டு, முதலாளிகளினுடைய பணத்தை தங்கள் இஷ்டப்படி விநியோகிக்கக்கூடிய நிலைமை
ஏற்பட்டாலன்றி, தங்களுக்கு முதலாளிகளிடமிருந்து நியாயம் கிடைக்க இடமில்லை என்று நினைக்கிறார்கள்.
எனவே, இங்கிலாந்து முதலிய தேசங்களிலுள்ள தொழிலாளிகள் பார்லிமெண்ட் சபையில்
தாம் ஆதிக்கம்பெற்று, அதன் மூலமாக தம்முடைய கட்சியாரே மந்திரிகளாகும் படியான
நிலைமையை ஏற்பாடு செய்துகொண்டு, இவ்வழியாலே ராஜ்யாதிகாரத்தையும் தம்முடையதாகச் செய்து
கொள்ளும்படி மும்முரமான முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால், மேற்படி தேசங்களில்
ராஜ்யாதிகாரம் இப்போது பெரும்பாலும் முதலாளிகளுக்குச் சார்பாக இருப்பதால், அந்தமுதலாளிகள்
தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் தொழிலாளிகளைத் தலை தூக்க ஒட்டாமல் அழுத்திவிட முயற்சி
செய்து வருகிறார்கள். இதனால் அவ்விரு திறத்தாருக்குள்ளே சமாதானமும் சிநேகிதத் தன்மையும் ஏற்படுவதற்கு
வழியில்லாமல், நாளுக்கு நாள் மனஸ்தாபங்களும், அவநம்பிக்கையும், வயிற்றெரிச்சல்களும்
மிகுதிப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன.
இந்தியாவில் இந்த விபரீதமான
நிலைமை ஏற்பட வேண்டுமென்பது நம்முடைய விருப்பமன்று. ஐரோப்பாவில் ஆரம்ப முதலாகவே தொழிலாளரும்,முதலாளிகளும்
தொழிலின் பெருமையையும் அவசியத் தன்மையையும் நன்கு கருதியிருப்பார்களாயின், இப்போது
அங்கே இவ்வளவு பயங்கரமான நிலைமை ஏற்பட்டிராது. எனவே இந்தியாவில் முதல் முதலாகத்தொழிலாளர்
கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்திலே, நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள், தொழிலாளிகள்
என்று இரு திறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏற வொட்டாதபடி
முளையிலேயே கிள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன்
கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற் குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்.தொழிலின்
மஹிமையையும் இன்றியமையாத் தன்மையையும் எல்லா ஜனங்களும் அறியுமாறு செய்யவேண்டும்.
ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்தஏற்பாடுகள் செய்யாவிடின், நாளடைவில்
ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்.
ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் பல புரட்சிகளின்
காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும் பகுதியார் தொழிற் கட்சியையும் அபேதக் கொள்கைகளையும்
சார்ந்தோராய் விட்டனர். இதினின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற் கட்சிக்குக் கிடைத்து
விட்டது. தேசத்து நிதி யனைத்தையும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து, எல்லாரும்
தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கிறார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வ ஜனங்களுக்கும்
தேசத்துச் செல்வம் பொது என்பதுஉண்மையாய் விடின், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால்
உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி ஸகலரும் தொழில் செய்து தான் ஜீவிக்கவேண்டும்
என்ற விதி வழங்குமானால், தேசத்துத் தொழில்மிகவும் அபிவிருத்தி யடைந்து ஜனங்களின் க்ஷேமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும்.
எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடையகொள்கைகள் அவ்வளவு தீங்குடையன வல்ல.
ஆனால், அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்
சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருஷ்யக் கொள்கைகளை இப்போது அனுஷ்டிக்கப்படும்
ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெறவேண்டுமானால், அதற்குள்ளே முக்காற்பங்கு
ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று. நாட்டுக்குள்ளேயே
செல்வர்களும் ஏழைகளும் ஒருவரை ஒருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும்
தூக்கு மரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?
இந்தியாவில் இந்த நிலைமை நேரிடாத வண்ணம், ஜனத்தலைவர்கள் இப்போதே தீவிரமாகவும்
பலமாகவும் வேலை செய்யத் தொடங்கவேண்டும். தொழிலாளரிடம் பொது ஜனங்களும் முதலாளிகளும்
மிகுந்த மதிப்புச் செலுத்தும்படி ஏற்பாடு செய்வதே இந்த வேலையில் முதற்படியாம். தம்முடைய காரியத்தைச்
செய்ய வேண்டியதே தொழிலாளியின் ஆத்மாவுக்கு ஈசனால் விதிக்கப்பட்ட புருஷார்த்தம் என்று
முதலாளிகளில் பலர் நினைக்கிறார்கள். யந்திரங்களைப் போலவே இவர்கள் மனிதரையும் மதிக்கிறார்கள்.
பொதுவாக ஏழைகளிடம் செல்வருக்கு உள்ள அவமதிப்பு அளவிடும் தரம் அன்று. இவ்விதமான எண்ணம்
நம்முடைய தேசத்திலும் செல்வர்களிடத்து மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வெண்ணத்தை
உடனே மாற்றித் தொழிலாளிகளையும் மற்ற ஏழைகளையும் நாம் ஸாதாரண மனிதராக நடத்தவேண்டும்.
அதிலும் தொழிலாளிகளின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்த வேண்டும். இவ்வித
மதிப்பினால் நாம் தொழிலாளிகளின் விஷயத்தில் என்னென்ன கடமைகள் செலுத்த நேரும் என்பதை
பின்னொரு வியாசத்திற் பேசுகிறேன்.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Thursday, May 28, 2015
78. சமூகம் - தொழிலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment