பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 22, 2015

51. கலைகள் - மாலை (2)


"ஆணி முத்தைப் போல அறிவு முத்து மாலையினாள்."

                    ஐரோப்பிய ஸங்கீதம், ஹிந்து ஸங்கீதம் இரண்டையும் பற்றித் தமது கொள்கைகளை வங்கத்துப் புலவராகிய ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூர் தமது சரித்திரக் குறிப்புகளிலே எழுதியிருக்கிறார். இவர் இளவயதிலேயே பல வருஷம் இங்கிலாந்தில் வாஸம் செய்தவர்; குழந்தை முதலாகவே நல்ல ரஸிகர். இவருடைய வார்த்தைகள் மதிப்புக்குரியன.

ரவீந்திரநாதர் சொல்லுகிறார்:-

                  "குரலைப் பழக்குவதில் நமது தேசத்துப் பாட்டுக்காரரைக் காட்டிலும் மேற்கு நாட்டுப் பாடகர் மிகவும் சிறப்புடையோர். அவர்களுக்குத் தொண்டை வசப்பட்டிருப்பது போலே, இங்கு இல்லை. நம்மவர்களிலே உயர்ந்த பாட்டுக்காரர் பாடும்போதுகூட 'இவர்கள் சிரமப்படுகிறார்கள்' என்ற விஷயம் வெளியே தெரிந்து விடுகிறது. யாதொரு சிரமமும் காட்டாதபடி மழை பெய்வது போலே இயற்கையாகப் பாடும்படி நம்மவர் சாரீரத்தைப் பழக்கவில்லை. சில சமயங்களில் மேல் ஸ்தாயியிலும் தமக்கு எட்டாத ஸ்வரங்களைத் தொட முயற்சி செய்கிறார்கள். ஐரோப்பாவில் பாட்டுக்கு வெளியேறுவோரின் தொண்டை, வல்லவன் வாசிக்கும் வாத்தியம் போலே, ஒரு குற்றம், ஒரு அபசப்தம், ஒரு கரகரப்பு, ஒரு பிழை இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு தொண்டையைப் பயிற்சி செய்யாதோர் அங்கே பாடுவதாக வெளிப்பட மாட்டார்கள்.

                "நம்மவர்கள், பாட்டுக் கச்சேரி வந்தால், சபைக்கு வந்த பிறகுதான் தம்பூர் சேர்ப்பதும் மிருதங்கத்தைத் தட்டித் தட்டி ஒத்திட்டுப் பார்ப்பதும் ஏதெல்லாமோ ஒரு மணி நேரத்து வேலைசெய்கிறார்கள். இந்த நீண்ட ஹிம்ஸையை சபையோர் சும்மா பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலே அப்படியில்லை. கருவிகளை யெல்லாம் சபைக்கு வருமுன்பாகவே நேர்படுத்தி வைத்துக்கொண்டு சபைக்கு வந்த உடனே பாட்டுத் தொடங்குகிறார்கள்.

                "நம்மவர்கள் வர்ணமெட்டு சரியா என்பதையே பிரதானமாகப் பார்க்கிறார்கள். அங்குள்ளோர் குரலையே முதலாக வைத்துக் கொண்டு ஆச்சரியமாக வேலை செய்கிறார்கள்."

                "எனக்கு ஐரோப்பிய ஸங்கீதம் ரஸப்படவில்லை; நன்றாகத்தானிருக்கிறது; ஆனால், "ஸர்க்கஸ்" வேடிக்கை எப்படி ஒழுங்காகவும் நன்றாகவுமிருக்கிறதோ அதே மாதிரி. ஒரு பெரிய பாட்டுக்காரி இங்கிலாந்தில் கச்சேரி நடத்தும் போது நான்கேட்கப் போனேன். பாடிக்கொண்டு வரும் போதே பக்ஷிகள் கத்தும் ஒலிகளைக் காட்டத் தொடங்கினாள். எனக்கு சிரிப்புப் பொறுக்க முடியவில்லை. பெருங் கேலியாக இருந்தது. ஆண் பாட்டு இத்தனை மோசமில்லை.

"நெடுநாள் பழக்கத்தினால் இப்போது எனக்கு ஐரோப்பிய ஸங்கீதத்தின் பொருள் விளங்கத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய ஸங்கீதத்தின் வழி வேறு, அவர்கள் வழி வேறு. அது ஜடம்; நம்முடையது ஸூக்ஷ்மம். அது லௌகீகம்; நமது பாரமார்த்திகம். அந்த ஸங்கீதத்திலே மானுஷீக சக்திஅதிகமிருக்கிறது; நமது ஸங்கீதத்திலே தெய்வசக்தி விளங்குகிறது."

மேலே ரவீந்திரர் வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்க்கவில்லை. ஸாராம்சத்தை எனது பாஷையில் எழுதியிருக்கிறேன். 'நம்முடைய ஸங்கீத சாஸ்திரம் ஐரோப்பிய சாஸ்திரத்தை விட மேலானது' என்று ரவீந்திரர் சொல்லும் வார்த்தை முழுவதும் உண்மையென்பது இரண்டு முறைகளிலும் பழக்கமுடைய பண்டித ரெல்லாருக்கும் தெரிந்த விஷயமேயாம். ஆனாலும், நமது தேசத்து வித்வான்கள் கண்டப் பயிற்சி, ஸபா நாகரீகம் என்ற அம்சங்களில் ஐரோப்பியருக்கு ஸமானமாகும்படி முயற்சி செய்தால் நல்லது. ஜனங்களுக்கு இன்பம் அதிகப்படும்; பாடுவோருக்கு பணம் அதிகப்படும்.


No comments: