பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 7, 2015

22. மாதர்

 பெண்

வேதபுரத்தில் தர்மவீதியில் வாத்தியார் பிரமராயஅய்யர் என்றொரு  பிராமணர் இருக்கிறார்.  இவர் சாக்தமதத்தைச் சேர்ந்தவர். ''சக்தி பூஜை''  பண்ணுவோரில் சிலர் மதுமாம்ஸ  போஜனம் செய்கிறார்கள். இந்த  வாத்தியார்அப்படியில்லை. இவர் ''சுத்த சைவம்''. அதாவது ஆட்டுக்குட்டியை மாம்ஸம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம். வாத்தியாரை மாம்ஸம் தின்னம்படி செய்ய முடியாது.இவர் இங்கிலீஷ், ப்ரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும்நல்ல பாண்டித்யமுடையவர். கொஞ்சம் ஸமஸ்கிருதமும்தெரியும். பகவத்கீதை, வால்மீகி ராமாயணம், குமார ஸம்பவம்மூன்று நூலும் படித்திருக்கிறார். வேதாந்த விசாரணையிலேநல்ல பழக்கமுண்டு. கதை, காலக்ஷேபம், உபந்யாஸம்முதலியன நடந்தால், தவறாமல் கேட்கப் போவார்.பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பிவருவார். வீட்டுக்கு வந்து உபந்யாஸிகளின் கொள்கைகளைஒரு மாதம் தொடர்ச்சி யாக நண்பர்களுடனே தர்க்கிப்பார்."''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர்.இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்குவரப்போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாகவெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும்நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர்சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டுஉலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக்கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம்,ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான்பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியாதேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாகஇருப்பார்களென்று தோன்றவில்லை? என்று நானாவிதமாக நம்தேசத்தாரின் அறிவு நிலைமையை தூஷணை செய்துகொண்டேயிருப்பார்.

மேற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும்கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில சமயங்களில் கவிதை கூட எழுதுவார். இவருடைய கவிதை மிகவும்உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை; நடுத்தரமானது. இவருக்கு"சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. ஆனால் பாடத் தெரியாது. தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹா நிபுணர். பெரியபெரிய மிருதங்கக்காரரெல்லாம் இவரைக் கண்டால்பயப்படுவார்கள்.

இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால் மூன்றாவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூடத்துவேலை முடிந்தவுடனே  வீட்டுக்கு வந்து,  ஸாயங்காலம் ஆறு  மணி  முதல் எட்டு  மணிவரை  தன் வீட்டுத்திண்ணையில் சினேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது, கர்ஜனை செய்துகொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார்.சாப்பிட்டுக் கையலம்பிக் கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு  வந்து சப்தம் போடத் தொடங்கிவிடுவார்.  இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார்,  'இடிப் பள்ளிக் கூடம்'  என்று  பெயர்"வைத்திருக்கிறார்கள். அந்த  இடிப்பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக்கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தநாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அனேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும் ஸ்நேகமுண்டு.  நானும் அடிக்கடி இடிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு. ஹிந்துக்கள் பரம மூடர் களென்று அவர் சொல்லும்வார்த்தையை மாத்திரம் நான் அங்கீகாரம் செய்துகொள்வது கிடையாது. மற்றபடி, அநேக விஷயங்களில் அவருடையஅபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகவே தோன்றும்.

நாலாநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மழைத்"தூற்றலாக இருந்தபடியால், நான் வெளியே உலாவப்போகாமல், பொழுது போக்கும் பொருட்டாக மேற்படி இடிப் பள்ளிக் கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே வாத்தியார் கர்ஜனைஅட்டஹாஸமாக நடந்து கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்களின் ''ஜாப்தா'' பின்வருமாறு:

(1) வீராசாமி நாயக்கர். (இந்த நாயக்கர் ஆனைக்குட்டியைப் போலிருப்பார்; சர்க்கார் உத்தியோகம்; முப்பத்துமூன்று வயது; அதற்குள் சரியான வழுக்கை; நல்ல வ்யவஹார ஞானமுடையவர்; வாய் பேசுவது கிடையாது. கோபம் வரும்போது  கொஞ்சம் பொடியெடுத்து மூக்கில் போட்டுக் கொள்வார்).

(2) கொங்கண பட்டர். (இவர் பெருமாள் கோயில்பட்டர்; ஏழரையடி உயரம்;     இவரை யார் வேண்டுமானாலும்வையலாம்; வேஷ்டியைப் பிடித்திழுக்கலாம். மேற்படி வீராசாமிநாயக்கர் இவருடைய தலையில் கால்மணி நேரத்திற் கொருதரம் குட்டுவார். இவருக்குக் கோபம் வராது. இவருடைய ஜாதகத்திலேகோபத்துக்குரிய கிரகம் சேரவில்லை யென்று கேள்வி).

(3) நாராயண செட்டியார் (பணக்காரர். குள்ளம்,வட்டிக்குக் கொடுக்கல் வாங்கல், இடிப்பள்ளிக்கூடம் - இந்த இரண்டு தொழிலையுந் தவிர, மூன்றாவது கார்யத்தை இவர் கவனிப்பதே கிடையாது. வாரத்துக்கொருமுறை வெள்ளிக் கிழமையன்று பிள்ளையார் கோவிலுக்குப் போவார். மற்றப் படி வீட்டை விட்டு வெளியேறமாட்டார்.இவரை அந்தப் புரச்செட்டியாரென்றும் சொல்லுவார்கள்.

(4) குருசாமி பாகவதர். (ஸங்கீத வித்வான்; குழந்தைகளுக்குப் பாட்டும்  வாத்தியமும் சொல்லிக்கொடுப்பார். சாரீரம் கட்டை.)

மேற்படி சபையில் நானும் போய்ச் சேர்ந்தேன்."பிரமராய வாத்தியாருக்கு என்னைக் கண்டவுடன் கொஞ்சம்சந்தோஷம் ஏற்பட்டது.

'வாருங்கள், வாருங்கள், உங்களுக்கு ரஸப்படக்கூடிய விஷயந்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்'என்றார்.

'அதாவது என்ன விஷயம்?'  என்று கேட்டேன்.

'ஸ்திரீயுடைய பேச்சு' என்றார்.

'ஸ்திரீகளைப் பற்றின பேச்சா?  சரிதான், மேலேஉபந்யாஸம் நடக்கட்டும்' என்றேன்.

வாத்தியார் கர்ஜனையைத் தொடங்கினார்:

'நான் சொன்ன விஷயத்தைச் சுருக்கமாக ஸ்ரீபாரதியாரின் புனை பெயர். ''சக்திதாஸ''ருக்கு மறுமுறைசொல்லிக் காட்டிவிட்டு மேலே சொன்னால் தான் அவருக்குத் "தொடர்ச்சி தெரியும்' என்று சொல்லி பூர்வ கதையையெடுத்தார்.

அந்த நிமிஷத்தில் வீராசாமி நாயக்கர் ஒரு தரம்பொடிபோட்டுக் கொண்டு கொங்கண பட்டர் தலையில் ஒருகுட்டுக் குட்டினார்.

'சில்லரை விளையாட்டு வேண்டாம். வாத்தியார்பிரசங்கம் நடக்கட்டும்' என்றேன்.

வாத்தியார் கர்ஜனை செய்யலானார்.

'இந்தியாவின் ஆண் பிள்ளைகளுக்குக்கூட வாக்குச் சீட்டுக் கிடையாது. அதாவது ஜனங்களுடையஇஷ்டப்படி ஆள் நியமித்து ஜன சபையாலே நடத்தும் அரசாட்சியுரிமை ஹிந்துகளுக்குக் கிடையாது. ஹிந்துக்களுக்குப் புத்தி சொற்பம். நம்முடைய தேசத்தில் ஆண் பிள்ளைகளுக்குக் கிடையாத மேற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் வேறு சிலதேசங்களிலே பெண்களுக்கு உண்டு. அதாவது, அரசாட்சி இன்னபடிதான் நடக்கவேண்டு மென்று நியமிக்கும் பாத்தியதை அங்கே ஸ்திரீகளுக்கும் உண்டு.

''ஆஸ்திரேலியா, ந்யூஸிலாந்து, டென்மார்க், நார்வே,யுனைடெட் ஸ்டேட்ஸிலே பாதி, கானடா - இத்தனை தேசங்களில், பெண்களுக்கு வாக்குச் சீட்டு கெட்டியாகவுண்டு. இங்கிலாந்திலேகூட அந்த அநுஷ்டானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலர் மன்றாடுகிறார்கள். போன மந்திரி ஆஸ்க்வித் கூட அந்தக்கட்சியை நெடுங்காலமாக எதிர்த்து வந்து, ஸமீபத்தில் அதற்கனுகூலமாகப் பேசுகிறாரென்று கேள்வி,  இதை விடுங்கள். 

''துருக்கி தேசம் தெரியுமா ? அங்கே நேற்று வரை ஸ்திரீகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ அந்தமாதிரி; திறந்தால் வாசனை போய்விடும் என்று நம்முடையதேசத்திலேயே கூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரிதானே" செய்கிறார்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமை நிலைமையிலிருக்கிறாள். நம்முடைய வீடுகளில் அறைக்குள்அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளே தான் இருந்தாலென்ன, குடி கெட்டுப் போச்சுது? அடிமையைத் தண்ணீர் கொண்டுவர தெருவிலே விட்டால்தானென்ன? அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் கைதியாக வைத்திருந்தாலென்ன? எந்தநிலைமையிலிருந்தாலும் அடிமை அடிமைதானே ஸ்வாமி? மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டு வித நிலைமைதான் உண்டு. எதுவும்தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற்படக்கூடிய இன்பநஷ்டங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை, அதுதான் சுதந்திரம். அப்படி இல்லாமல், பிறர் இஷ்டப்படி தான் இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மீறி நடக்கக்கூடாதபடி கட்டுப்பட்டிருத்தல், அடிமை நிலை. அந்த ஸ்திதியில் நம்முடைய"ஸ்திரீகளை வைத்திருக்கிறோம். சும்மா பொய்க்கதை சொல்வதில் பிரயோஜனமென்ன, ஸ்வாமி?  நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள். அதிலே சந்தேகமில்லை. ஹிந்துக்களுக்குள்ளே புருஷர்களுக்கே அரசாட்சியில் வாக்குச் சீட்டுக் கிடையாது. அவர்களுக்குள்ளே ஸ்திரீகள் அடிமைகள். ஹிந்து ஸ்திரீகளைக் காட்டிலும் இப்போது துருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிறார்கள். மிஸ்.எல்லிஸன் என்றொரு இங்கிலீஷ்காரி ஒரு புஸ்தகம் போட்டு,நேற்றுத்தான் ஒரு பத்திரிகையில் அந்தப் புஸ்தகத்தைப் பற்றிஅபிப்பிராயம் போட்டிருந்தது. அந்த அபிப்பிராயம் எழுதினவர் ஒரு சிங்களத்துப் பௌத்தர். அவர் பெயர் ஜினராஜதாஸர். அவர்ஒரு இங்கிலீஷ்காரியைக் கலியாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப் பொறுப்பிலே ஊக்கம் முதலிய சகல அம்சங்களிலேயும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டுவருவதாக அந்த இங்கிலீஷ் புத்தகத்தில் போட்டிருப்பதாக அந்த பௌத்தர் சொல்லுகிறார். ஐயோ, ராமா, ராகவா, கேசவா, விசுவாமித்ரா! - நமக்கு ஸந்தியாவந்தனம் கொஞ்சம் மறதி!'

இங்ஙனம், அவர் பிரசங்கத்தில் கொஞ்சம் மூச்சுவாங்கும்பொருட்டாக, ஒருவிகட வார்த்தை சொன்னவுடனே, அவருடையமுக்கிய சிஷ்யராகிய கொங்கணபட்டர் கொல்லென்று சிரித்தார். வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒருகுட்டுக் குட்டி ஒரு தரத்துக்குப் பொடி போட்டுக்கொண்டார்.

வாத்தியார் மறுபடியும் கோஷிக்கலானார்.

''ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படி கலியாணம் செய்யவேண்டும்; புருஷன் கொடுமையைச் சகிக்க முடியாமலிருந்தால், ஸ்திரீ சட்டப்படி அவனை த்யாஜ்யம் செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்கவேண்டும் ; ஊர்க்காரரும் தூஷணை செய்யக்கூடாது. பெண் உழைத்துச் சாப்பிட முடியாது. அந்த விஷயத்தில் ஐரோப்பிய ஸ்திரீ ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என்அபிப்பிராயம் பேதப்படுகிறது. பெண்ணை ஸம்பாத்யம் பண்ணிபிழைக்கவிடக்கூடாது. அவளுக்கு பிதுரார்ஜிதத்தில் பாகமிருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடையசொத்து அவளுடையதாகவே பாவிக்கவேண்டும். (பெண்டாட்டிகையில் காசு கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிற மனுஷ்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.) பெண்அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். தனி இடங்களில் ஸ்திரீகளைக் கண்டால் மரியாதை செய்து வணங்கவேண்டும். அப்படி எந்தப்புருஷன் மரியாதை செய்யவில்லை யென்று தோன்றுகிறதோ,அவனை கிருகஸ்தர்கள் நெருங்கக்கூடாது. அவன்கூட ஒருவனும்பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாமல் இருந்துவிடவேண்டும். அப்படி வீதி வழியோ, கடைத்தெருவோ, ரயில் வழியோ, காசிப்பட்டணமோ ஸ்திரீகள் தனியே போனாலும், புருடர் கண்டுவணங்கும்படி ஏற்பாடு செய்வது நாளது தேதியில் இந்த தேசத்தில் வெகு கஷ்டம். என்ன செய்யலாம்? ஹிந்துக்களிலே நூற்றுக்குத்தொண்ணூறு பேர் மூட ஜனங்கள். அது எப்படி நாசமாய் போனாலும் படித்துக் கௌரவமாகக் குடித்தனம் பண்ணும் ஜனக்கூட்டத்துக் குள்ளே ''ஸ்திரீகள் சுயேச்சையாகப் பேசலாம்,சுயேச்சையாக ஸஞ்சரிக்கலாம்'' என்று வைக்க வேண்டும். அது ஸாத்யமாகும்படி புருஷரைத் தண்டிக்க வேண்டும். கையாலாகாதபேரைத் தண்டிப்பதிலே என்ன பிரயோசனம்! ஸ்வாமி எத்தனை நாள் இந்தத் தேசத்தில் பழங்குப்பையில் முழுகிக் கிடக்கப்போகிறார்கள் ? நத்தைப் புழுவைப்போல ஆணும் பெண்ணும்கூடப் பிறக்கிறோம். உடன் பிறந்தான் ஆண்டான், உடன்பிறந்தவள் அடிமை, ஸ்வாமி ! சுத்த பாமரஜனங்கள்' என்றுசோனாமாரியாகப் பொழிந்தார்.

இந்தச் சமயத்தில் என்னுடைய குழந்தை வீட்டிலிருந்துஒடிவந்து என்னைச் சாப்பிடக் கூப்பிட்டது. நான் எழுந்தேன். 'பிரமராய வாத்தியார் சொல்லுகிற விஷயத்தைக் குறித்து உம்முடையஅபிப்பிராயமென்ன?' என்று என்னை நோக்கிக் கொங்கணபட்டர்கேட்டார்.

நான் சொல்லத் தொடங்கு முன்னே, வீராசாமிநாயக்கர் மேற்படி பட்டா சார்யாருடைய தலையில் ஒரு குட்டுக் குட்டி,'நீர் சும்மா இருமே, ஓய்' என்று சொன்னார். பிறகு நான்: -'பூலோகத்துப் பஞ்சாயத்தெல்லாம் எனக்கு வேண்டியதில்லைஸ்வாமி, யாருக்கு என்ன காரியம் சித்தியாக வேண்டுமானாலும்,'ஓம் சக்தி, ஓம் சக்தி' என்று சொன்னால், அவர்களுக்கு அந்தக்காரியம் சித்தியாகும். இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம்' என்றேன்.

பிரமராய வாத்தியார் 'அது உண்மை' என்றார்.  இடிப்பள்ளிக்கூட முழுவதும் ''வாஸ்தவந்தான்'' என்று ஒப்புக்கொண்டது. நான் போஜனத்துக்குப் புறப்பட்டேன்.


No comments: