பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 26, 2015

66. சமூகம் - பாடங்கள்


                                                           (அ) எழுத்து, படிப்பு, கணக்கு
                                                           (ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்
              வேதகால சரித்திரம், புராணகால சரித்திரங்கள், பௌத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்படவேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்று விக்கப்பட வேண்டும். (இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று, பாஷைப்பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ் நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.)  இந்தச் சரித்திரங்களில் மஹா கீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாகத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தைகளுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால், பள்ளிப்பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜூனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமை களையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்திமேன்மைப்படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும்.

               தேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?  இது நிற்க. 

              ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸௌகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ்,போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்கா, இத்தாலிய, கிரேக்க, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது.
                                                       (இ) பூமி சாஸ்திரம்

     ஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்த்ரமும், ஜகத்தைப் பற்றியும், ஸூரிய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப்படுத்தவேண்டும். ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்த தேசங்களின் ஜனத்தொகை, மதம், ராஜ்ய நிலை, வியாபாரப் பயிற்சி, முக்கியமான விளைபொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் இவற்றைக் குறித்து பிள்ளைகளுக்குத் தெளிந்த ஞானம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமான துறைமுகப் பட்டணங்களைப் பற்றியும், அவற்றில் நடைபெறும் வியாபாரங்களைக் குறித்தும் தெளிந்த விவரங்கள் தெரியவேண்டும். மேலும், இந்தியர்களாகிய நம்மவர் வெளித்தேசங்களில் எங்கெங்கே அதிகமாகச் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்ற விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன் அங்கு நம்மவர் படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும். மேலும் உலகத்திலுள்ள பல தேசங்களின் நாகரிக வளர்ச்சியைக் குறித்து பிள்ளைகள் தக்க ஞானம்பெறவேண்டும்.

    பாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங்கள், அவற்றுள், அங்குள்ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற்படுத்தக்கூடிய பகுதிகள்-இவைவிசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப் படவேண்டும். வெளி மாகாணங்களைக் குறித்துப் பின் வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தாரமான ஞான முண்டாக்க வேண்டும்; அதாவது பாரதபூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும் ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புகள் ஒன்றுபோலிருக்கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேதபுராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட  வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை, இந்தியாவிலுள்ள பெரிய மலைகள், நதிகள், இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம், தொத்து நோய்கள், இவற்றின் காரணங்கள், ஜல வஸதிக் குறைவு, வெளிநாடு களுக்கு ஜனங்கள் குடியேறிப் போதல் - இந்த அம்சங்களைக் குறித்து மாணாக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள், இவற்றைப்பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.

     உங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்திரம்.

இது கற்றுக் கொடுப்பதில், ஜனப் பாகுபாடுகளைப் பற்றிப் பேசுமிடத்து, ஹிந்துக்கள், மகம்மதியர் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் மகம்மதியர் களிலே பெரும்பாலார் ஹிந்துக்களின் சந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமன்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றிலும் ஸ்வதேசிகளாக மாறி விட்டனர் என்பதையும் மாணாக்கர்கள் நன்றாக உணரும்படி செய்ய வேண்டும். மேலும், பூமி சாஸ்திரப் பயிற்சியில் விளைபொருள் முதலியவற்றை திருஷ்டாந்தங்களின் மூலமாகத் தெளிவுபடுத்துவதுடன், இயன்றவரை பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று. பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றிலெல்லாம் பெயர்கள் தேச பாஷையிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

                                                             (ஈ) மதப் படிப்பு

      நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள்,  உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை, பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் - இவற்றை ஆதாரமாகக் கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்த போதிலும், அக் கிளைகள் சில சமயங்களில் அறியாமையால் ஒன்றை யொன்று தூஷணை செய்து கொண்ட போதிலும், ஹிந்து மதம் ஒன்றுதான். பிரிக்கமுடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்ட தெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடு விட்டுவிடும்படி போதிக்க வேண்டும். 'ஏகம் ஸத் விப்ரா:பஹூதா வதந்தி' (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேதஉண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் 'எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்' என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் - எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மன மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வர வேண்டும்' என்பது ஹிந்துமதத்தின் மூல தர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத்  தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும் அவர்களைக் கொல்வது போலேயாகும் என்றும் ஹிந்து மதம்கற்பிக்கிறது. 'எல்லாம் பிரம்மமயம்,' 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமேஎன்று ஹிந்து மதம் போதிக்கிறது. 'இங்ஙனம் எல்லாம் கடவுள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான், எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப் போல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்' என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்க ளெல்லாம் மாணாக்கருக்குத் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது. ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன.

   ஸ்ரீீராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கெனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை, நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகளின் குணங்களையும், ஸர்வதேச பக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவ தயை முதலிய புராதன வீரர்கள் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்த்த வேண்டும். சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும் பொருட்டாக தன் சதையை அறுத்துக்கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜனஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.

                                               (உ) ராஜ்ய சாஸ்திரம்

   ஜனங்களுக்குள்ளே ஸமாதானத்தைப்பாதுகாப்பதும், வெளி நாடுகளிலிருந்து    படை எடுத்து வருவோரைத் தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்துவிடக் கூடாது. ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வாஸம் முதலிய ஸௌகர்யங்களும், கல்வியும், தெய்வ பக்தியும், ஆரோக்கியமும், நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களை இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமையாவது.

   குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடைய நன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவி யென்று நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப் படவேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பல துறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத்தல், பழைய சட்டங்களை அழித்தல் முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்தவேண்டும்.

 குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச்  சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு  இஷ்டமான அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு. இந்த விஷயங்களை யெல்லாம் உபாத்தியாயர்கள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமிடத்தே, இப்போது பூமண்டலத்தில் இயல்பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், உலகத்து ராஜாங்கங்களில் சுவேச்சா ராஜ்யம், ஜனப் பிரதிநிதி யாட்சி, குடியரசு முதலியன எவை யென்பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும்.

   கிராம பரிபாலனம், கிராம சுத்தி, வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை காட்டவேண்டுமாதலால், மாணாக்கர்களுக்கு இவற்றின் விவரங்கள் நன்றாக போதிக்கப்பட வேண்டும்.

கோயிற் பரிபாலனமும் அங்ஙனமே. ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதும், தொழில் ஏற்படுத்திக்கொடுத்து உணவு தருவதும், ராஜாங்கத்தாரின் கடமை என்பது மட்டுமன்றி, கிராமத்துஜனங்கள் அத்தனை பேருக்கும் பொதுக்கடமையாகும்.

                                                         (ஊ) பொருள் நூல்

பொருள் நூலைப் பற்றிய ஆரம்பக் கருத்துக்களை மாணாக்கர்களுக்கு போதிக்கு மிடையே, தீர்வை விஷயத்தை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஜனங்களிடம் தீர்வை எத்தனைக் கெத்தனை குறைவாக வசூல் செய்யப்படுகிறதோ, அங்ஙனம் குறைவாக வாங்கும் தீர்வையிலிருந்து பொது நன்மைக்குரிய காரியங்கள் எத்தனைக் கெத்தனை மிகுதியாக நடைபெறுகின்றனவோ, அத்தனைக் கத்தனை அந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்; அந்த ஜனங்கள் க்ஷேமமாக வாழ்ந்திருப்பார்கள். வியாபார விஷயத்தில், கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். மிகவும் ஸரஸமான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் விற்க வேண்டும் என்ற பழைய வியாபாரக் கொள்கையை எப்போதும் பிராமணமாகக் கொள்ளக்கூடாது. விளைபொருளும், செய் பொருளும் மிஞ்சிக் கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி அவை வேண்டியிருக்கு மிடத்தில் கொண்டு போய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.

வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ, அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளி யொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்.

  செல்வம் ஒரு நாட்டில் சிலருக்கு வசப்பட்டதாய் பலர் ஏழைகளாக இருக்கும்படி செய்யும் வியாபார முறைகளைக் காட்டிலும், சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் பரவியிருக்கும்படி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாக பாராட்டத் தக்கனவாம்.

                                  (எ) ஸயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம்

               ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் மூலமாகவும் பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும் அவசியமாகும். பிள்ளைகளுக்குத் தாங்களே 'ஸயன்ஸ்' சோதனைகள் செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வியாபார விஷயங்களுக்கு ரஸாயன சாஸ்திரம் மிகவும் பிரதானமாகையால் ரஸாயன பயிற்சியிலே அதிக சிரத்தை காண்பிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகள் தண்ணீர் மூலமாகவும், காற்று மூலமாகவும்,மண் மூலமாகவும் பரவி நோய்களைப் பரப்புகின்றன என்றவிஷயம் ஐரோப்பிய 'ஸயன்ஸ்' மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதில் ஒரு சிறிது உண்மை இருப்பது மெய்யே யாயினும், மனம் சந்தோஷமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருப்பவனை அந்தப் பூச்சிகள் ஒன்றும் செய்யமாட்டா என்பதை ஐரோப்பியப் பாடசாலைகளில் அழுத்திச் சொல்லவில்லை. அதனால், மேற்படி சாஸ்திரத்தை நம்புவோர் வாழ்நாள் முழுவதும் ஸந்தோஷமாய் இராமல் தீராத நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆதலால், நமது தேசீய ஆரம்பப் பாடசாலையில் மேற்படி பூச்சிகளைப் பற்றின பயம் மாணாக்கருக்குச் சிறிதேனும் இல்லாமல் செய்துவிட வேண்டும்.

              உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும் சமைந்திருக்கிறது. இந்த மூன்று பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக் கூடும் என்ற மஹா நாஸ்திகக் கொள்கையை நவீன ஐரோப்பிய சாஸ்திரிகள் தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்று அந்த மூடக்கொள்கையை நமது தேசத்தில் இளஞ் சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்து விட்டார்கள். சிறு பிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வலிமை உடையன, அசைக்க முடியாதன, மறக்க முடியாதன. எனவே, நமது நாட்டிலும் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்கு ஆளாய் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்; பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசீயப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.

           பௌதிக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய  தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக, "ஆக்ஸிஜன்","ஹைட்ரஜன்", முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராண வாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள அகப்படாவிட்டால் ஸம்ஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப் படுத்தலாம்.  ஆனால், குணங்கள், செயல்கள், நிலைமைகள் இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது. பதார்த்தங்களின் பெயர்களை மாத்திரமே இங்கிலீஷில் சொல்லலாம், வேறு வகையால் உணர்த்த இயலாவிடின்.

                  (ஏ) கைத்தொழில், விவஸாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம்.

இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும்,  விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு, நெசவு முதலிய முக்யமான கைத்தொழில்களிலும், நன்செய்ப் புன்செய்ப் பயிர்த் தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத் தவிர, தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப்படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லௌகிகப் பயிற்சி யடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.

                                                       (ஐ) சரீரப் பயிற்சி

   தோட்டத் தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும். பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷ்டி துணிகளைத் தோய்த்தல் முதலியஅவசியமான கார்யங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம். இவற்றைத் தவிர, ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு  முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து  (Foot ball) முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும், பிள்ளைகளுடைய படிப்பில் பிரதான அம்சங்களாகக் கருதப் படவேண்டும்; குஸ்தி, கஸரத், கரேலா முதலிய தேசீயப் பயிற்சிகளும் இயன்றவரை அனுஷ்டிக்கப் படலாம்.  கபாத்து (ட்ரில்) பழக்குவித்தல் இன்றியமையாத அம்சமாகும். ஸௌகர்யப்பட்டால் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் மரக்குதிரை, ஸமக்கட்டைகள் (parallelbars), ஒற்றைக் கட்டை  (horizontal bar)  முதலிய பழக்கங்களும் செய்விக்கலாம். படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்யவேண்டும். 'சுவரில்லாமல் சித்திரமெழுத முடியாது.' பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்குநாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.

                                            (ஒ) யாத்திரை (எக்ஸ்கர்ஷன்)

    பிள்ளைகளை உபாத்தியாயர்கள் பக்கத்தூர்களிலும் தமதூரிலும் நடக்கும் உற்சவங்கள், திருவிழாக்கள் முதலியவற்றுக்கு அழைத்துச் சென்று, மேற்படி விழாக்களின் உட்பொருளைக் கற்பித்துக்கொடுத்தல் நன்று. திருவிழாவுக்கு வந்திருக்கும் பலவகை ஜனங்களின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஞானம் உண்டாகும்படி செய்யவேண்டும். வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும் பரஸ்பர ஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும். மலைகள் கடலோரங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கையின் அழகுகளையும், அற்புதங்களையும், பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்யவேண்டும். பல விதமான செடி, கொடிகள், மரங்கள், லோஹங்கள், கல்வகைகள் முதலியவற்றின் இயல்பைத் தெரிவிக்க வேண்டும்.


No comments: