பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 18, 2015

42. கலைகள் - சந்திரத் தீவு


                 தென் கடலில் மலேயத்தீவுகளினிடையே ''பூலோ பூலாங்'' என்ற ஒரு சிறிய தீவிருக்கிறது ''பூலோ பூலாங்'' என்ற மலேய பதத்துக்குச் சந்திரோதயத் தீவு என்று அர்த்தம். சுமார் எழுபதினாயிரம் வருடங்களுக்கு முன்னே இத் தீவு 'சந்த்ர த்வீபம்' என்ற பெயருடன் விளங்கிற்று. அக்காலத்தில் அங்கு கங்காபுத்ரன் என்ற ஹிந்து ராஜா ராஜ்யம் செலுத்திக் கொண்டு வந்தான்.

           அவனுக்கு ஆண் மகவு கிடையாது. பலவிதமான தவங்களும் வேள்விகளும் புரிந்தபின் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சந்திரிகை என்ற பெயரிட்டு வளர்த்தான்.
அந்தப் பெண்ணுடைய அழகும், கல்வியும் வர்ணிப்பதற்கு அரியன; கப்பல் வியாபாரிகளின் மூலமாக அப்பெண்ணினுடைய கீர்த்தி பூமண்டல முழுவதிலும் பரவி விட்டது.

           அப்போது காசி நகரத்தில் அரசு செலுத்தின வித்யாபுத்ரன் என்ற பிராம்மண ராஜன், அந்தப் பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்பி, சண்டிகை என்ற தன் பெரிய தாயையும் ஸுதாமன் என்ற தன் மந்திரியையும் சந்திரத் தீவுக்கு அனுப்பினான்.

            அவ்விருவரும் பல ஸம்மானப் பொருள்களுடனும், பரிவாரங்களுடனும் சந்திரத் தீவிலே போயிறங்கி கங்காபுத்ரனைக் கண்டு வரிசைகளை யெல்லாம் கொடுத்துக் காசிராஜன் கருத்தை அறிவித்தார்கள்.

            சந்திரிகைக்கு வயது பதினேழு. நடுப்பகலில் அவள் ஓரிடத்துக்கு வந்தால் அங்கு பகலொளி மங்கி நிலவொளி வீசும அவள் முகம் முழுமதி போன்றிருந்தது. அவள் நெற்றி பிறை போன்றது. அவள்விழிகள் நிலவு கொப்புளித்தன. அவள் புன்னகை நிலவு வீசிற்று. அவள்மேனியும் நிலவையே தெறித்தது.

                 இத்தகைய அழகுடைய பெண் பூமண்டலத்தில் எங்கும் கிடையாதபடியால், அவளைத் தகுதியற்ற வரனுக்குக் கொடுக்கக் கூடாதென்று கங்காபுத்ரன், வந்த வரன்களை யெல்லாம் விலக்கி, மிகப் பொறுமையுடன் காத்திருந்தான்.

                 காசிராஜன் படத்தைப் பார்த்தவுடனே, அவனைத் தன்மகள் மணம் புரியலா மென்ற எண்ணம் கங்காபுத்ரனுக்குண்டாயிற்று. அவன் ராணியும் இணங்கினாள். ஆனால் அந்தப் பெண்ணுக்கு ஸம்மதமில்லை. பெண் சந்திரிகை காசியிலிருந்து வந்த மந்திரி ஸுதாமனுடைய அழகையும், அவன் சொல் - நயத்தையும், நடை மேன்மையையும் கண்டு மயங்கியவளாய் அவனையே மணம்புரிந்து கொள்வேனென்று ஒரே ஸாதனையாக ஸாதித்தாள்; அதாவது முரண்டு பண்ணினாள்.

                    மறு நாள் கங்காபுத்திரன் தனது மந்திரியாகிய ராஜ கோவிந்தனையும் காசி தேசத்து மந்திரியான ஸுதாமனையும் பல வேடர் பரிவாரங்களையுஞ் சேர்த்துக் கொண்டு யானை வேட்டைக்குச் சென்றான். வேட்டையில் இரண்டு ஆண் யானைகள் பட்டன. அப்பால் வனத்திலேயே ஸ்நான போஜனங்கள் முடித்துக்கொண்டு சிரம பரிஹாரத்தின் பொருட்டாகஆங்கோர் ஆலமர நிழலிலே, கங்காபுத்ரன், ராஜகோவிந்தன், ஸுதாமன் மூவருமிருந்து பலவிதமான சாஸ்திர ஸம்பாஷணைகள் செய்யலாயினர் - 
அந்த ஸம்பாஷணையிடையே சந்திரத் தீவின் ராஜா கேட்கின்றான்:- 'இன்று காலையில் இரண்டு யானைகளைக் கொன்றோமே? அது பெரிய பாவமன்றோ? ஆஹா! என்ன நேர்த்தியான மிருகங்கள்! ஆஹா! எத்தனை அழகு, எத்தனை ஆண்மை, எத்தனை வீரம், எத்தனை பெருந்தன்மை. அவற்றைக் கொன்றோமே, இது கொடிய பாவமன்றோ?' என்றான்.
அதற்குக் காசி மந்திரி ஸுதாமன் சொல்லுகிறான்:- 'ஆர்ய புத்ரா, யானையைக் கொல்வது மாத்திரந்தானா பாவம்? ஆடு, மாடு, கோழிகளைத் தின்கிறோம். அது பாவமில்லையா?' என்றான்.

               சந்திரத் தீவின் அரசன் 'அதுவும் பாவந்தான்' என்றான்.   

              அப்போது ஸுதாமன் சொல்லுகிறான்:- ''மாம்ஸ போஜனம் ஜந்துக்களுடைய இயற்கை; ஆதலால், பாவமாகாது. மனிதன் மாத்திரந்தானா மாம்ஸம் தின்னுகிறான்? மனிதனைப் புலி தின்னவில்லையா?  சிங்கம், புலி, கரடி, நாய், நரி முதலிய மிருகங்களெல்லாம் அஹிம்ஸா விரதத்தைக் "கைக்கொண்டிருக்கின்றனவா? கொக்கு மீனைத் தின்னவில்லையா? பெரிய மீன் சிறு மீனை விழுங்கவில்லையா? பருந்து கோழியைத் தின்னவில்லையா?  காக்கை பூச்சிகளைத் தின்னவில்லையா?குருவி புழுக்களை உண்ணவில்லையா?புழுக்கள் ஒன்றை யொன்று பக்ஷிக்கவில்லையா?' என்றான். அதற்குச் சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் சொல்லுகிறான்:- 'ஜீவஹிம்ஸை பொது நியாயமென்று சொல்லுதல் தவறு. யானை மாம்ஸந்தின்னாது. மாடு தின்னாது. மான் தின்னாது. குரங்கு தின்னாது. ஒட்டகை தின்னாது. குதிரை தின்னாது. கழுதை தின்னாது' என்றான்.

                அப்போது கங்காபுத்ரன் நகைத்துக்கொண்டு:- 'சிங்கம் புலி நம்மைத் தின்னு மென்றால், நாம் வேட்டையாடி அவற்றைத் தின்பது நியாயமென்று விளையாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம். சிங்கம் புலிகளை வேட்டையாடித் தின்போர் யாரையுங் காணோம். யாதொரு சூது மறியாத, எவ்வுயிருக்கும் எவ்வகைத் தீமையும் செய்யாத ஆட்டையும், மானையும், பசுவையும் மனிதன் தின்பது நியாயமா?'என்றான்.

              அப்போது காசி மந்திரி ஸுதாமன் சொல்லுகிறான்:-

              "இதர ஜீவ ஜந்துக்களின்மீது கருணை செலுத்து முன்னே, மனிதர் ஒருவருக்கொருவர் கருணை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்தால் நல்லது. போர்களில் மனிதர் ஒருவரை யொருவர் கொல்லவில்லையா?  ஆட்டை மாட்டைக் கொன்றாலும் தின்ன உபயோகப் படுகிறது. மனிதரை மனிதர் தின்னும் வழக்கம் சிற்சில தீவினருக்குள்ளே காணப்படுகிற தெனினும், நம்மைப் போன்ற நாகரீக ஜாதியார்களுக்குள்ளே அவ்வித வழக்கமில்லை. மனிதரை மனிதர் தின்னப் பயன்படாவிடினும் அநாவசியமாகக் கொன்று தள்ளுகிறார்கள். மேலும் பிற உயிர்களை அடிமைப்படுத்தும் வழக்கம் மிருகங்களுக்கில்லை. சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. ஒரு நாய், ஒரு கழுதை, ஒரு நரி, ஒரு பன்றி கூடச் சிங்கத்தின் கீழே அடிமையில்லை. முயல்கூடக் கிடையாது. மிருகங்களும் பக்ஷிகளும் பிற ஜாதி மிருக பக்ஷிகளை அடிமைப்படுத்துவதில்லை; ஸ்வஜாதிகளையும் அடிமையாக்குவ தில்லை .மனிதரோ, ஆடு, மாடு, குதிரை, கழுதை, ஒட்டகை, யானை முதலியஅன்னிய ஜாதி ஜந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது மட்டுமேயல்லாது, பிற மனிதர்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப் போல் பாவம் வேறேதேனுமுண்டோ? பிற உயிரொன்றை ஆயுள் முழுவதும் தன் கீழே வைத்துச் சிறிது சிறிதாக மனமுடையச் செய்து அடிமை நிலையிலே வருந்தி வருந்தி வாணாள் தொலைக்கும்படி செய்வதைக் காட்டிலும் ஒரேயடியாக அவற்றைக் கொன்று விடுதல் எத்தனையோ மடங்கு சிறந்ததன்றோ? மனிதர் கீழே மனிதர் இருப்பதைக் காட்டிலும் சாதல் சிறந்தது.

                 "ஆணுக்காண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகமிகப் பெரிது" என்று சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் சொன்னான்.

                "ஆணுக்காணும், ஆணுக்குப் பெண்ணும் அடிமைப்படாதிருத்தல் ஸாத்யமென்று தோன்றவில்லை" என்று ராஜா கங்கா புத்திரன் சொன்னான்.

                "எங்ஙனம்?" என்று காசி மந்திரி ஸுதாமன் கேட்டான்.

                "ஆண்களில் பெரும்பாலோர் செல்வமில்லாதவர்கள், சிலர் செல்வ முடையவர்கள். ஆதலால் செல்வமுடைய சிலருக்கு அஃதில்லாத பலர் அடிமைப்படுதல் அவசியம்" என்று ராஜா சொன்னான்.

                 "பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?" என்று சந்திரத் தீவின் மந்திரியாகிய ராஜகோவிந்தன் கேட்டான்.

                  அதற்கு ராஜா கங்கா புத்ரன் சொல்லுகிறான்:-

                  "பெண் சரீர பலத்தில், ஆணைக்காட்டிலும் குறைந்தவள். அவளாலே ஸ்வாதீனமாக வாழ முடியாது. தனிவழி நடக்கையிலே துஷ்டர் வந்து கொடுமை செய்தால், தன்னைக் காத்துக்கொள்ள வலியில்லாதவள். குழந்தை ஸம்ரக்ஷணம் முதலிய அவசியங்களாலே, உழுது பயிரிட்டுத் தொழில் புரிந்து ஜீவனம் செய்வதில் இயற்கை யிலேயே பெண்ணுக்குப் பல தடைகள் ஏற்படுகின்றன. அப்போது அவள் ஆஹார நிமித்தமாக ஆணைச் சார்ந்து நிற்றல் அவசியமாகிறது. பிறன் கைச்சோற்றை எதிர்ப்பார்த்தால் அவனுக்கடிமைப் படாமல் தீருமா?" என்றான். 

                   அப்போதுகாசிமந்திரியாகிய ஸூதாமன் சொல்லுகிறான்:

                  "பெண்கள் உழவு முதலிய தொழில் அனைத்திலும் ஆண் மக்களுக்கு ஸமானமான திறமை காட்டுகிறார்கள். மேலும், அவர்களுக்கு ஆண்மக்கள் ஸம்பாத்தியம் பண்ணிப் போடாமல், அவர்கள் ஸம்பாதித்து ஆண்மக்களுக்குச் சோறுபோடும் நாடுகளிலேகூட, ஆண் மக்கள் பெண்களை அடிமை நிலையிலே தான் வைத்திருக்கிறார்கள். சரீர பலத்தில் ஸ்திரீகள் ஆண்களைவிட இயற்கையிலே குறைந்தவர்கள் என்பது மாத்திரம் மெய். இது மனிதருக்குள் மட்டுமன்று; எல்லா ஜந்துக்களுள்ளும் அப்படியே. ஆண் சிங்கத்தைக் காட்டிலும் பெண் சிங்கம் பலங் குறைந்தது; வடிவில் சிறியது. காளை மாட்டைக் காட்டிலும் பசு மாடு பலங்குறைந்தது, வடிவத்திலே சிறியது. ஆண் நாயைக் காட்டிலும் "பெண் நாய் பலங்குறைந்தது. சேவலைக் காட்டிலும் கோழி சிறிது. ஆண் குருவியைக் காட்டிலும் பெண் குருவி சிறிது. ஆநேகமாக எல்லா ஜந்துக்களின் விஷயத்திலும் இதுவே விதி. இக்காரணம் பற்றியே மிருகங்கள், பக்ஷிகள், மனிதர், பூச்சிகள் முதலிய ஸகல ஜந்துக்களிலும் பெண்ணை ஆண் தாழ்வாக நடத்தும் வழக்கமிருக்கிறது. மனிதன் நாகரீக ஜந்துவாதலால் மற்றைய ஜந்துக்களைப் போல் அத் தாழ்வு நிலையைப் புறக்கணித்து விடாமல், அதை சாசுவதமாக்கி, சாஸ்த்ர மேற்படுத்தி வைத்திருக்கிறான். மனித ஜாதியில் ஆணுக்குப் பெண் அடிமைப் பட்டிருப்பதுபோல் இதர ஜந்துக்களுக்குள்ளே கிடையாது. மனிதரிலே கொடுமை அதிகம். இதற்கெல்லாம் ஆதி காரணம் ஒன்றே. பலங் குறைந்த உயிரைப் பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்ற விதி ஸகல பிராணிகளினிடையேயுங் காணப்படுகிறது. மனிதர் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள்" என்றான்.

             அப்போது ராஜா கங்கா புத்ரன் ஸூதாமனை நோக்கி:-

            "ஒரு ஸ்திரீயைப் புருஷன் அடிமையாக நடத்துவதும் மானைப் புலி தின்பதும், ஆட்டை மனிதன் தின்பதும், பள்ளனை அரசன் சொற்பக் கோபத்தால் சிரச்சேதம் செய்வதும் இவை அத்தனைக்கும் ஒரே பேர் என்று சொல்லுகிறாயா?" "என்றான்.

            அதற்கு ஸூதாமன்:- "ஆம் ஜந்துக்கள் பரஸ்பரம் துன்பப் படுத்தாமல் தடுப்பது நமக்கு ஸாத்யமில்லை. நாட்டிலுள்ள காக்கை குருவிகளை ஒரு வேளை திருத்தினாலும் திருத்தலாம். வனத்திலுள்ள துஷ்ட மிருகங்களையும் கோடானு கோடி ஜந்துக்களையும் மண்ணுக்குள் பூச்சி புழுக்களையும் கடலில் மீன்களையும் திருத்த மனிதனால் ஆகாது. மேலும், சிங்கம் புலிக்கு வாழைப்பழங்களும், மீன் புழுக்களுக்கெல்லாம் கீரையும், பூச்சி புழுக்களத்தனைக் கும் அரிசியும் தயார் பண்ணிக்கொடுக்க மனிதனால் முடியுமா? அதாவது ஒரு வேளை அவை எல்லாம் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்திவிடுவதாக ஒப்புக்கொண்ட போதிலும் நாம் அவற்றை சாகபக்ஷணிகள் ஆக்க வழியில்லை. ஆனால் மனிதருக்குள்ளே பரஸ்பரம் அடிமைப் படுத்தாமலும் முக்கியமாக ஆண், பெண்ணை அடிமைப்படுத்தாமலும் மனிதர் ஸமத்வ மாகவும் நியாயமாகவும் வாழ வழியுண்டு" என்றான்.

            "மனிதர் பிறவுயிர்களைத் தின்னாதபடி செய்யும் வழியுண்டு" என்று ராஜகோவிந்தன் சொன்னான்.

"எப்படி?" என்று சந்திரத்தீவின் ராஜாவாகிய கங்காபுத்ரன் கேட்டான்.

அப்போது ஸூதாமன் சொல்லுகிறான்:-        "அரசனெப்படி அப்படி மன்னுயிர்." ராஜா ஸ்திரீகளையும், மற்ற மனிதரையும் அடிமையாகக் கருதாமலிருந்தால் நாட்டில்ஸமத்வ முண்டாகும். ஒரு நாட்டில் நிலையுற்றால் எல்லா நாடுகளிலும் சீக்கிரத்தில் பரவிவிடும். கெட்ட வழக்கங்களைப் போலவே நல்ல வழக்கங்களையும் பூமண்டலத்து ஜனங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கைக்கொள்ளுதல் மரபே என்றான்.

அப்போது மந்திரி ராஜகோவிந்தன் சொல்லுகிறான்:-

"நாட்டில் அரசன் எவ்விதமான ஆஹார முண்கிறானோ, அதுபோன்ற ஆஹாரமே சகல ஜனங்களுக்கும் என்று ஏற்பாடு செய்யவேண்டும். அங்ஙனம் செய்தால் எல்லாக் கஷ்டங்களும் நீங்கிப்போம்" என்றான்.

அப்போது ராஜா கங்காபுத்ரன் சொல்லுகிறான்:-  "நமது சந்திரத் தீவை எடுத்துக் கொள்வோம். இங்குள்ள மனிதர் அத்தனை பேரும் மாம்ஸம் தின்பதில்லையென்று வைப்போம்; இத்தனை பேருக்கும் தின்ன சாக பதார்த்தங்கள் நம் தீவிலில்லையே?" என்றான்.

"வருஷந்தோறும் இரண்டு லக்ஷம் சாக்குத் தேங்காய்களும் மூன்று லக்ஷம் சாக்கு மற்றப் பழவகைகளும் பாரத தேசத்துக்கு நம் நாட்டினின்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன" என்று மந்திரி சொன்னான்.

அப்போது ராஜா கங்காபுத்ரன் சொல்லுகிறான

           "சரி, நான் தீர்மானம் செய்துவிட்டேன். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. இன்றைக் கிருப்பவர் நாளைக்கிருப்பார்களென்று நிச்சயமாகச் சொல்ல இடமில்லை.எனக்கு முன் கோடானு கோடி அரசர் உலகத்திலே பிறந்து மாண்டு போயினர். மனு, மாந்தாதா, தசரத ராமாதிகளெல்லாம் மண்ணிலே கலந்து விட்டனர்; என் காலத்தில் ஒரு புதிய தர்மம் நிலைப்படும்படி செய்கிறேன். மந்திரி ராஜகோவிந்தா, கேள்! நம்முடைய ப்ரஜைகள் எத்தனை பேர்? மொத்தம் 2 லக்ஷம்பேர். சரி இங்கு விளைகிற நெல், புல், கிழங்கு, காய், கனி, ஒன்றும்வெளியே போகக்கூடாது. பதினெட்டு வயதுக்குமேல் அறுபது வயது வரையுள்ள எல்லாரும் உழுதல், பயிரிடுதல், தோட்டஞ் செய்தல், துணிநெய்தல், மனை கட்டுதல், ஊர்துடைத்தல் முதலியஅவசியமான தொழில்களிலே ஸமமான பாகம் எடுத்துக் கொள்ளவேண்டும். வீடு விளக்கலும், குழந்தை வளர்த்தலும்,சோறாக்கலும் பெண்களுடைய தொழிலாதலால், அவர்கள்பயிர்த்தொழில் முதலியவற்றிலே துணை புரிதல் வேண்டாம்.சரி. மொத்த விளைவை இந்த இரண்டு லக்ஷம் ப்ரஜைகளும் ஸமமாகப் பகுத்துக் கொள்வோம். எனக்கும் என் பத்தினிக்கும் என் குழந்தைகளுக்கும் - எத்தனை தானியம், எத்தனை கனி, எத்தனை கிழங்குண்டோ அப்படியே ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் ஸமபாகமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிட ஏற்பாடு செய்வோம். பெண்களை அடிமைப்படுத்தவும் வேண்டாம். காசிராஜன் பெரிய தாயாராகிய சண்டிகையை அவள் கொண்டு வந்த வரிசைகளுடன் ஒற்றைக் கிரட்டையாக வரிசை கொடுத்து பரிவாரங்களுடன் அடுத்த கப்பலில் பாரத தேசத்துக்கனுப்பி விடுவோம். நமது மகள் சந்திரிகையின் இஷ்டப்படி அவளை ஸூதாமனுக்கே மணம் புரிந்து கொடுத்துவிடுவோம். நீ என்ன சொல்லுகிறாய்? ஸூதாமா, இங்கேயே இருப்பாயா?  காசிக்குப் போனால் நான் உன்னுடன் என் மகளை அனுப்ப முடியாது" என்றான்.

அதற்கு ஸூதாமன்:-  "நான் இங்கேயே இருக்கிறேன். பயமில்லை. விஷயத்தை யெல்லாம் தெளிவாகச் சொல்லியனுப்பினால் காசி ராஜா கோபம் கொள்ளமாட்டார். என்னுடைய தம்பியை அவருக்கு மந்திரியாக நியமித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விடுகிறேன். நான் இங்கே இருப்பேன்; இந்தத் தீவும் அழகியது. இதிலுள்ள ஜனங்களும் நல்லவர்கள். இதன் அரசனாகிய நீயும் நல்லவன், நின் மகளோ என் நெஞ்சில் தெய்வம். ஆதலால் இங்கிருப்பேன்" என்றான். விவாகம்நடந்தது. அங்கு மன்னனும் குடிகளும் அண்ணன் தம்பிகள்போல -  யாருக்கும் பசியில்லாமல், யாருக்கும் நோவில்லாமல், யாருக்கும் வறுமையில்லாமல், யாருக்கும் பகையில்லாமல் -  எவ்விதமான துன்பமு மில்லாமல், ஸூதாமன், ராஜகோவிந்தன் என்ற இரண்டு மந்திரிகளுடன் கங்காபுத்ர ராஜன் நெடுங்காலம் ஸுகத்துடன் வாழ்ந்தான்.   
1 comment:

  1. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

    ReplyDelete

You can give your comments here