பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 6, 2010

நவராத்திரி -- 2

பாரதி சிந்தனை 7. நவராத்திரி -- 2. வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.

ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்.

1. அறிவு. 2. செல்வம். 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இகலோகத்திலே கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும் படியாகவும் நாம் தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி. இகலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டு வாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம் செய்தார்? அர்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில் கேட்டான்? ஸ்ரீ கிருஷ்ணனிடத்திலே கேட்டான். ஸ்ரீ கிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.

இகலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு அவசியமான அறிவுத்திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம். "தெய்வமே, நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு" என்று கேட்கவில்லை. "தெய்வமே! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமே! உனக்குப் புண்ணியமுண்டு. மாவிதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி எப்படி வளர்ப்பது? சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக்கொண்டிருக்கச் சம்மதம். ஆனால் மாம்பழம் கொடுத்துத் தீர வேண்டும். நீதானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?" என்று கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.

விக்கிரமதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம். ஸ்ரீமந் நாராயணமூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரமதேவன் தலிவியாகிய ஸரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்பமென்று கருதியா? சரத்காலம் நம் நாட்டில் ஒன்றுபோல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லையாயினும் ஓரிடத்திலே தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவியிருக்கலாம்.

'மஹாளய அமாவாஸ்யை' என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத் தப்பிய புதிய உயிர் கொண்டவுடன் சேர்ந்தபடியாகப் பல நாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரி பூஜைக்குப் புராணப்படி முகாந்தரம் சொல்லப்பட்டிருக்கிறது. நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை) லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும், அதுமுதல் வருஷந்தோறும் நமது தேசத்தில் இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது. இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம். பராசக்தி எங்கும் இருக்கிறால். எப்போதும் அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச் சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற்புறத்திலே மாத்திரம் இல்லை; அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது, பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்; அதன் கீழே ஒன்று, அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.

எப்படிப் பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும் முடிவில்லாமலும் இருக்கும் அற்புத வஸ்து. கோடானுகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது. ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள் இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது. பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள் பராசக்தி.

இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம். செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை, சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும். "கேட்டது பெறுவாய்" என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற கிறுஸ்து சித்தர் சொல்லுகிறார்.

மஹாலக்ஷ்மி

பாரதி சிந்தனை 6. மஹாலக்ஷ்மி .   வழங்குவோர்: தஞ்சை வெ. கோபாலன்.

"இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா?" என்பது கேள்வி.

ரிஷி சொல்லுகிறார், "அரசனே, என்னோடு பாதசாரியாக வருவாயானால் தெரியப் படுத்துகிறேன்" என்று.

அப்படிக்குப் பாதசாரியாகப் போகும்போது கன்னட தேச ராஜகுமாரத்திக்கு விவாகம் நிச்சயித்திருப்பதால், ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் ராஜகுமாரத்தியின் விவாகத்திற்கு வந்திருக்கிறபோது அவ்விடத்திற்கு மேற்படி அரசனும் ரிஷியும் இருவருமாகப் போய்ச் சேர்ந்தார்கள். இப்படி எல்லோரும் விவாக மண்டபத்தில் கூடியிருக்க, அந்த விவாகமண்டபத்தில் ஒரு பால்ய ஸந்நியாசியும் வேடிக்கை பார்க்க வந்தார். "கன்னடத்து ராஜகுமாரி! எந்த ராஜகுமாரனை விவாகம் செய்து கொள்ளுகிறாய்?" என்று தோழியானவள் கேட்டுக் கொண்டே போனாள். அவ்விடத்து ராஜகுமாரர்களை யெல்லாம் 'வேண்டாம், வேண்டாம்' என்று களைந்துபோய், இந்தப் பால்ய ஸந்நியாஸியைக் கண்டு புஷ்ப மாலையை அணிந்தாள். அந்த புஷ்ப மாலையானது பாம்பாகி, மேற்படி பால்ய ஸந்நியாசியின் கழுத்தில் யமனுடைய பாசம்போல் வந்து விழ, அவன் திடுக்கிடாமல் "ஓம் சக்தி, ஓம் சக்தி" என்ற மந்திரத்தை ஜபித்து மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டான். பிறகு அதே மாலை மீண்டும் பரிமள கந்தமுடைய புஷ்ப மாலையாய்விட்டது.

இதனை மேற்படி மஹரிஷியானவர் அந்த ராஜனிடத்திலே காண்பித்து, "இல்லறத்தில் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தைரியத்துடன் வாழ வேண்டும். மணமாலையே பாம்பாக வந்து விழுந்த போதிலும் மனம் பதறக்கூடாது. தைரியம் பாம்பைக்கூட மணமாலையாக மாற்றிவிடும். இவ்விதமான தைரியத்துடன் இல்லறத்தில் நிற்பார் வீடுபெறுவர். துறவறத்துக்கும் இதுவே வழி. ஆகவே இரண்டும் ஒன்றுதான்" என்று சொன்னார்.

வரலக்ஷ்மி நோன்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதன் விவரம்:- அன்றையதினம் பெண் மக்களெல்லாம் ஸ்நானம் செய்துவிட்டு, பழைய பட்டுக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டு கூந்தல்களில் புஷ்பங்களை அணிந்து கொண்டு, பார்க்கிற பார்வைக்கு வரலக்ஷ்மியைப் போலவே, அதிபத்தி விநயத்துடன் இருந்து சில பலகாரங்களையும், பழவர்க்கங்களையும் வைத்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, பெண் குழந்தைகளுக்கு விநியோகப்படுத்தி, அன்றிரவு பூர்த்தி செய்து, மறுதினம் காலையில் பெளர்ணமி பூஜை, சாப்பாடு செய்து அவர்களுக்குரிய இஷ்ட காம்யார்த்த சித்தி பெற்று, ஜீவகோடிகள் அம்பாள் அனுக்ரஹத்தினால், அவள் திருவடியை முடிமீது சூட்டி, ஞானசித்தியை உணர்ந்து, சதா முக்தர்களாக வாழும் வழியைக் காட்டுகிறார்கள்.

நவராத்திரி--1. ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், ஸரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலந் தொடங்கிக் குமரிமுனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய்கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு.

மஹாளய அமாவாஸ்யை கழிந்தது.

இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய, சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலேதான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.

சக்தி:- நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்தனும், காளிதாசனும் வணங்கிய தெய்வம். "உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழை அருள் புரியும், சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கிப் பூஜைகள் செய்ய வேண்டும்" என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம், மேலான வழி. கும்பகோணம் சங்கரமடத்தில் இந்தப் பூஜைமிகவும் கோலாகலமாக நடத்தப் போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது சஹஜமான விசேஷம். தேசம் முழுவதும் (இப்படி) நடப்பது (நல்லது). சங்கரமடத்திலும் (எனக்கு) ஒருவிதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம், வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்த போது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது. இந்தப் பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்றுவித வடிவங்கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்று வரை பாரத தேசத்தில் எல்லாப் பாகங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை; இவளே சக்தி, செய்பவளும் செய்கையும், செய்கைப் பயனும் இவளே; தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம், இவள் காத்திடுக" என்பது தந்தி.

உண்மைதான். ஆனால், "தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்" என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக ஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப்படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்ய வேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். 'தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல்' - இம்மூன்றும் கர்ம யோகம் (கிரியா யோகம்) என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். லெளகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகைகள் நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள், ஆகமங்களிலே கூறப்பட்டன.

ஒன்பது நாளும் தியானம், கல்வி, தவம் இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்க வேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

"சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்."

நவசக்தி மார்க்கம்

பாரதி சிந்தனை: 5. நவசக்தி மார்க்கம். வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.

கணபதி: வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே பிரஹ்மணஸ்பதி; அவரே பிருஹஸ்பதி. விநாயகர் பிரணவ மந்திரத்தின் வடிவம். யானை முகம் பிரணவ மந்திரத்தைக் காட்டுவது. அறிவின் குறி 'கணா நாம் த்வா கணபதியும் ஹவாமஹே' என்று சாமான்ய வழக்கத்திலுள்ள வேத மந்திரத்திலே பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து கொள்க.
'ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பல விதமாகச் சொல்லினர்' என்று வேதமே சொல்லுகிறது. கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பல மூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன.

காளி: படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலையும் குறிப்பிட்டுப் புராணங்களில் மூன்று மூர்த்தியாகப் பரமாத்மாவைப் பேசுகிறார்கள். பிரம்மம் என்ற பெயரை விசேஷமாகப் பரமாத்மாவுக்கு வேதாந்த சாஸ்திரம் வழங்குகிறது. பிரம்மம் என்பது வேள்வியையும், மந்திரத்தையும், ஞானத்தையும் குறிப்பிட்டு வேத ரிஷிகளால் வழங்கப்பட்டது. மந்திர நாதனும், ஸரஸ்வதி நாயகனும், வேதமூர்த்தியுமாகிய பிரம்ம தேவனை வேதம் 'ப்ரஹ்மணஸ்பதி' என்று கூறும். அதாவது, ப்ரஹ்மத்தின் பதி அல்லது தலைவன் என்று அர்த்தம். மூன்று மூர்த்திகளின் ஒவ்வொன்றையும் உபாஸனையின் பொருட்டுப் பிரிவாகக் காட்டினால், அந்த அந்த மூர்த்தியையே, ஸாக்ஷாத் பரமாத்மாவாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். நாராயணன் பரிபாலன மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. சிவன் ஸம்ஹார மூர்த்தி, பரப்ரஹ்மம் அவரே. பிரம்மா சிருஷ்டி மூர்த்தி; அவரே ஸாக்ஷாத் பரப்ரஹ்மம். அவருடைய பெயரடித்தான் பிரஹ்மத்திற்கு வைத்திருக்கிறது.

இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்ற நாமங்கள் வேதத்தில் பரமாத்மாவுக்கே வழக்குகின்றனெ. மேலே 'ஏகம் ஸத்' என்ற ரிக்வேத மந்திரத்தின் பொருள் குறிப்பிட்டிருக்கிறோம். மூர்த்தியுபாஸனைக் கூட்டத்தாருக்கிடையே லெளகிக காரியங்களை அனுசரித்துப் பிற்காலத்தில் பல சண்டைகள் உண்டாயின. தக்ஷயாகத்தில் வீரபத்திரன் வந்து, இந்திரன், அக்னி, சூரியன், பகன், விஷ்ணு முதலிய தேவர்களைத் தண்டனை செய்ததாக ஒரு புராணம் சொல்லுகிறது. இப்படியே பல புராணங்கள் தாம் உபாஸனைக்குக் காட்டும் மூர்த்தி, மற்ற மூர்த்திகளைப் பல விதங்களில் விரோதித்துத் தண்டனை செய்ததாகச் சொல்லுகின்றன. இப்படிப்பட்ட கதைகள் பழைய புராணங்களில் பிற்காலத்தாரால் நுழைக்கபட்ட பொய்க்கதைகளே யன்றி வேறில்லை. இந்தக் கதைகள் வேதகாலத்துக்கு முற்றிலும் விரோதம். வேதத்தில் இந்துக்களுடைய தேவர்கள் ஒருவரையொருவர் பழிப்பதும் அடிப்பதும் இல்லை.

சிதம்பரம்: காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து பூஜை முடித்து, பழம் தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு, மேனிலத்திற்கு வந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில் அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங் கொண்டு முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும் நானாவிதமாகப் படுத்துக் கிடக்கிறது. எதிர் வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்து வீட்டிலிருந்து சங்கீத ஓசை வருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின் சப்தம் கேட்கிறது. வண்டிச் சப்தம், பக்கத்து வீட்டு வாசலில் விறகு பிளக்கிற சப்தம், நான்கு புறத்திலும் காக்கைகளின் குரல், இடையிடையே குயில், கிளி, புறாக்களின் ஓசை, வாசலிலே காவடிகொண்டு போகும் மணியோசை, தொலைவிலிருந்து வரும் கோயிற் சங்கின் நாதம். தெருவிலே சேவலின் கொக்கரிப்பு, இடையிடையே தெருவில் போகும் ஸ்திரீகளின் பேச்சொலி, அண்டை வீடுகளில் குழந்தை அழும் சப்தம், "நாராயணா, கோபாலா!" என்று ஒரு பிச்சைக்கரனின் சப்தம், நாய் குலைக்கும் சப்தம், கதவுகள் அடைத்துத் திறக்கும் ஒலி, வீதியில் ஒருவன் 'ஹூகும்' என்று தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக் கொள்ளும் சப்தம், தொலைவிலே காய்கறி விற்பவன் சப்தம், 'அரிசி! அரிசி!' என்று அரிசி விற்றுக் கொண்டு போகிற ஒலி - இப்படிப் பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில் படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத் தெய்வத்தின் மஹா மெளனத்தைச் சுருதியாக்கி என் மனம் அனுபவித்துக் கொண்டு இருந்தது.

வல்லூறு நாயக்கர்: இப்படி இருக்கையில், என் முன்னே வேதபுரம் ஸ்ரீ கிருஷ்ணகான சபையாரின் காரியதரிசியாகிய வல்லூறு நாயக்கர் வந்து நின்றார். உட்காரும்படி சொன்னேன். உட்கார்ந்தார். 'விஷயமென்ன?' என்று கேட்டேன். அவர் சொல்லுகிறார்:- "அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு நமது சபையின் ஆதரவின்கீழ் நடைபெறும் ராமாயண உபந்நியாசக் கோவையில் இரண்டாவது பகுதியாகிய சீதா கல்யாணம் நடக்கிறது. முதல் கதையாகிய ஸ்ரீராமஜனனம் சென்ற புதன்கிழமை நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மிகவும் நன்றாகப் பாடக்கூடிய பின்பாட்டுக்காரர் வந்திருக்கிறார். இவருக்குச் சன்னமான சாரீரம். ஆனால் பெண் குரல் அன்று. நன்றாகப் பாடுவார். ஒருதரம் வந்து சேட்டால் உங்களுகே தெரியும். மேலும் இந்த ராமாயணக் கதையில் வசூலாகும் பணத்தில் ஒரு சிறு பகுதி நமது அரசாங்கத்தாரின் சண்டைச் செலவிற்கு உதவி செய்வதாக அதிகாரிகளிடம் வாக்குக் கொடுத்திருக்கிறொம். நான்கு ரஸிகர் வந்து கேட்டால்தானே பாகவதற்குச் சந்தோஷம் ஏற்படும். ரஸிகராக இருப்பவர் வந்து கேட்டால் மற்ற ஜனங்களும் வருவார்கள். நம் சபைக்கு லாபம் உண்டு. பாகவதர் ராமாயணப் பிரசங்கத்தில் தேர்ச்சியுடையவர். மிருதங்கம் அடிக்கிற பிராமணப் பிள்ளை பதினைந்து வயதுடையவன்; ஆனால் மிகவும் நன்றாக அடிக்கிறான். தாங்கள் அவசியம் வரவேண்டும்" என்றார்.
அதற்கு நான், 'சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், லக்ஷ்மண சக்தி, பட்டாபிஷேகம் என்கிற நான்கு கதைக்கும் நான் வரலாமென்று உத்தேசிக்கிறேன்; நிச்சயமாக வருகிறேன். எனக்கு இரவில் தூக்கம் விழிப்பது கொஞ்சம் சிரமம். ஆயினும் தங்கள் பொருட்டாகவும் தங்கள் சபையின் தலைவராகிய ஓங்காரச் செட்டியார் பொருட்டாகவும் அந்தச் சிரமத்தைப் பார்க்காமல் வருவேன்' என்றேன். "இராமாயணப் பிரசங்கத்தில் வரும் தொகையிலே ராஜாங்கத்தாரின் சண்டைச் செலவிற்காக உதவி செய்யப்படும் என்ற விஷயத்தைத் தனியாகக் காட்டி ஒரு விசேஷ விளம்பரம் போடப் போகிறோம். அதில் என்ன மாதிரி வக்கணை எழுத வேண்டும் என்பதைத் தாங்கள் தெரிவிக்க வேண்டும்" என்று வல்லூறு நாயக்கர் பிரார்த்தித்துக் கொண்டார். நான் வக்கணை சொன்னேன். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் குள்ளச்சாமி வந்து சேர்ந்தார்.

ஜீவன் முக்தி; அதுவே சிதம்பரம்: குள்ளச்சாமி யாரென்பதை நான் முன்னொரு முறை சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய "வண்ணான் கதை"யில் சொல்லியிருக்கிறேன். இவர் ஒரு பரமஹம்ஸர். ஜடபரதரைப் போல், யாதொரு தொழிலும் இல்லாமல், முழங்காலுக்குமேல் அழுக்குத் துணி கட்டிக்கொண்டு போட்ட இடத்தில் சோறு தின்று கொண்டு, வெயில் மழை பாராமல் தெருவிலே சுற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய ஒழுக்க விநோதங்களை மேற்படி "வண்ணான் கதையிலே" காண்க. இவர் வந்து சோறு போடு என்று கேட்டார். தாம் திருவமுது செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என் கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். நான் அதை வாங்கியுண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார். 'கண்ணை மூடிக்கொள்' என்றார். கண்ணை மூடிக்கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார். 'விழித்துப்பார்' என்றார். கண்ணை விழித்தேன் நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப்போல மாடமெங்கும் பாய்கின்றது. பலகணி வழியாக இரண்டு சிட்டுக் குருவிகள் வந்து கண்முன்னே பறந்து விளையாடுகின்றனெ. குள்ளச்சாமியார் சிரிக்கிறார். கடைக்கண்ணால் தளத்தைக் காட்டினார். கீழே குனிந்து பார்த்தேன். ஒரு சிறிய ஓலைத்துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப் போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ளச்சாமி சிரித்துக் கொண்டு வெளியே ஓரிப்போனார். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் இஷ்டமானபோது வருவார்; இஷ்டமான போது ஓடிப்போவார். சிறு குழந்தை போன்றவர். மனுஷ்ய விதிகளுக்குக் கட்டுப்பட்டவரில்லை. ஆகவே, நான் அவரைக் கூப்பிடாமலே கீழே கிடந்த ஓலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன்.

1. எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷ்யங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ!
2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாம சக்தி பக்தருக்கு வரதானம் கொடுக்கிறார். போய் வரம் வாங்கு.
3. சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணிய க்ஷேத்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும் நீண்ட வயதும் ஜீவன் முக்தியும் விளைக என்று எழுதியிருந்தது. இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத்திற்கு ஒத்திருக்கிற படியால் அவற்றைச் சுதேசமித்திரன் பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்.

குறிப்பு:- "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ? இந்த ஜன்மத்தை வீணாகக் கழிப்பேனோ?" என்று நந்தன் சரித்திரத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடியிருப்பதற்கும் இதுவே பொருள் என்று உணர்க.

சக்தி தர்மம்

பாரதி சிந்தனை: 4. சக்தி தர்மம். வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.

"ஆத்மா உணர்வு. சக்தி செய்கை."

உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று சொல்லும்.

ஆறு மதங்கள்: ஆதி சங்கராச்சாரியார் பெளத்த மதத்தை எதிர்த்தபோது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பெளத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர்.

இந்த ஆறு மதங்களில் எதையும் கண்டனம் செய்யாமல் சங்கராச்சார்யார் இவ்வாறும் வெவ்வேறு வகையான வைதிகப்படிகளென்றும், வேதாந்தமே இவையனைத்திற்கும் மேலான ஞானமென்றும் சொன்னார். இது பற்றியே அவருடைய கூட்டத்தார் அவருக்கு "ஷண்மத ஸ்தாபனாசார்யார்" என்று பெயர் சொல்லுகிறார்கள். இது ஆறு மதங்களாவன:

1. ஐந்திரம் - தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி, பரமாத்மாவை "இந்திரன்" என்று பெயரால் வழிபடுவது.
2. ஆக்னேயம் - அக்னியே முதற் கடவுள் என்பது.
3. காணாபத்தியம் - பரமாத்மாவைக் கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது.
4. சைவம் - சிவனே தேவர்களில் உயர்ந்தவன் என்பது.
5. வைஷ்ணவம் - விஷ்ணுவே மேலான தெய்வம் என்பது.
6. சாக்தம் - சக்தியே முதல் தெய்வம் என்பது.

வேதம் உபநிஷத் இரண்டையும் இந்த ஆறு மதஸ்தரும் ஒருங்கே அங்கீகாரம் செய்தார்கள். ஆனால் புராணங்கள் வெவ்வேறாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாயிற்று. திருஷ்டாந்தமாக, வைஷ்ணவர் சிவபுராணங்களையும், சைவர் வைஷ்ணவ புராணங்களையும் உண்மையாக ஒப்புக் கொள்வதில்லை. பொதுக் கதைகளை எல்லாப் புராணங்களிலும் சேர்த்துக் கொண்டார்கள். இதிகாசங்களையும் பொதுவாகக் கருதினர் எனினும் பழைய சாக்த தர்மத்தின் அழுத்தம் பொது ஜனங்களின் சித்தத்தை விட்டுப் பிரியவில்லை. மதுரை சுந்தரேசர், காஞ்சி ஏகாம்பர மூர்த்தி என்ற பெயர்களைக் காட்டிலும் மதுரை மீனாக்ஷி, காஞ்சி காமாக்ஷி என்ற பெயர்கள் அதிகப் பெருமை கொண்டு நிற்கின்றன. மாரி, காளி என்ற பெயருடன் சக்தித் தெய்வத்தையே மஹாஜனம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது.

நவசக்தி மார்க்கம். சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூல தர்மங்களை ஜனங்கள் தெரிந்து கொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை. பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி "லோக மாதா" என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்சர் "என் தாய் காளி" என்றுதான் பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள் வணங்கும் "லோக மாதா" இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள் தெரிந்து போற்றுவது நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிறார்.

'பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும்
பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யம
படர் எனும் திமிரம் அணுகாக்
கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு,
காயச் சித்திகளு முண்டு". 'மலைவளர் காதலி' முதற் பாட்டு.

இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது. குருக்களுக்குள்ளே மேற்படி மதவேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தத்தம் மனப்படி வைத்து வணங்கி வந்தனர். சங்கராச்சார்யார் கொள்கையை அனுசரிப்போர், எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம் என்று சொல்லியது பொது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும், சித்தர்களும் இடையிடையே தோன்றி, 'ஒரே பரம்பொருளைத்தான் ஆறு மதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன'. என்ற ஞாபகத்தை ஜனங்களுக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

மேற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு க்ஷீணமடைந்து போனதாகக் கூறலாம். 'ஒருவாறு' என்றேன். ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத் தவிர மற்றவை முழுவதும் க்ஷீணமடையவில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுவதிலும் கணபதி பூஜை உண்டு. ஆனால் கணபதியே முதற்கடவுளென்று பாராட்டும் காணாபத்ய மதம் பரவி நிற்கவில்லை. மஹாராட்டிரத்தில் இக் கொள்கையுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி. நிச்சயமாகத் தெரியாது. அக்னி பூஜை பிராமணர்க்குள் இருக்கிறது. ஆனால் ஆக்னேய மதம் இல்லை.

சாக்தம்: இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொது ஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது. ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரடித் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.

(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரகசியமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில் 'சாக்தன்' என்றால் ரகசியமாகக் குடிப்பவன் என்ற அர்த்தம் உண்டாய் விட்டது. காலத்தின் விந்தை!)

(பாரதியார் கட்டுரைகள்)

மூட பக்தி

பாரதியார் சிந்தனை: 3. மூட பக்தி. வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.

இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள், நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல். க்ஷவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனிக் கலியாணங்கள், சடங்குகள், வியாபாரம், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்ய நஷ்டம் மட்டுமன்றி மேற்படி லக்னம் முதலிய பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.

'காலம் பணவிலை உடையது' என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதனால் பண லாபம் கிடையாமற் போகும். இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனால், அந்தக் கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தூங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப் போனால், அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும்.

'இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையினால் ஏற்பட்டிருக்கின்றன என்றும் ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக் கொடுத்தால் இவை அழிந்து போய்விடும்' என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனால், அதற்குத் தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு சுத்தமாகப் பிரயோஜனமில்லை என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான - கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா? இல்லை. நமது தேசத்தில் முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்தபின்புதான் மேற்கூறிய சாமான்ய மூட பக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாக்ஷிப்படி யோக்கியமாக நடந்து வந்திருப்பார்களானால், மற்றவர்களிலும் பெரும்பாலோர் நடை திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிறோம். அதுபோலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும்.

ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப் போய் தேறினவர்களிடம் மனசாக்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள் - நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன - எத்தனையோ வித சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.

ஆனால் ஸ்வதந்திரம் ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம், இவை அத்தனை ஜாக்கிரதையாக கற்றுக் கொடுப்பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின்படி ஒழுக வேண்டுமென்றும், அங்ஙனம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகும் என்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமே இல்லை. இந்த விஷயத்தைக் கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஒழுக்கப் பயிற்சி இல்லை. புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப் போல் இத்தனை சிறந்த திருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது.

"கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வே றுடையார் தொடர்பு"

என்று திருவள்ளிவர் பாடியிருக்கிறார். இதன் பொருள்:- வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது என்பதேயாகும். பி.ஏ., எம்.ஏ., பரீக்ஷைகள் தேறி வக்கீல்களாகவும், உபாத்தியாயராகவும், எஞினீயர்களாகவும் பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை, முதலியவர்களில் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா? "பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூட பக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்று சிலர் முறையிடுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும்படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்ற்மிடத்தே அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று. போலிக்காரணம். நம்மவர் இத்தகைய சாதாரண மூட பக்திகளை விட்டு விலகத் துணியாமலிருப்பதன் உண்மையான காரணம் 'வைதிகரும் பாமரரும் நம்மை ஒரு வேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலகி விடுவார்கள்' என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து இந்துக்கள் கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக் கொண்டு தத்தளிப்பதன் தலைமைக் காரணம் மேற்படி பந்தி போஜனத்தைப் பற்றிய பயம்தான். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின் மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ விவகாரங்களில் தம்மினத்து மாதரை விலையடிமைகள் போலவும் விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக் காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸ்த்யதெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்தி போஜன ஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைரியமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும். ஸத்ய பலம் முதலிய பல காரணங்களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியாகிவிடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்.

(பாரதியார் கட்டுரைகள்)

Thursday, November 4, 2010

கலியின் விளைவு

கலியின் விளைவுகளை மகாகவி பாரதி குறிப்பிடுகிறார்.

"மிகப் பொன் உடையோன், மிக அதைச் சிதறுவோன்
 அவனே வலியனாய் ஆணைதான் செலுத்துவன்.
 பாத்திரம் தவறிப் பைம்பொன் வழங்கலே
 தவம் என முடியும், தையலார் நாணிலாது
 ஆட்சியை விரும்புவர். அவனியை ஆள்வோர்
 குடிகளின் உடைமையைக் கொள்ளையிட்டு அழிப்பர்,
 பொய்யுரை கூறி வணிகர்தம் பொருளைக்
 கவர்வர், இவ்வுலகத்தின் இறுதியின் கண்ணே
 மக்களின் அறன் எலாம் மயங்கி நின்றிடுமால்
 பொருட் காப்பு என்பது போய்ப் பெரும் கேடுறும்."

Tuesday, November 2, 2010

மற்ற வலைத்தளங்கள்

இந்தப் பதிவினைப் படிக்கின்ற அன்பர்கள் என்னுடைய மற்ற வலைத்தளங்களையும் படித்துத் தங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். தங்கள் ஆலோசனைகள் எனக்கு ஊக்கத்தைத் தரும்.
http://www.tamilnaduthyagigal.blogspot.com
http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
http://www.ilakkiyapayilagam.blogspot.com