அலங்கார சாஸ்திரம்
எல்லாவித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர வேறொன்றுமில்லை;
'உபமாலங்காரமே அலங்கார சாஸ்திரத்தின் பிராணன்? என்று பழைய இலககணக்காரர் சொல்லுகிறார்கள்.
பிரான்ஸ் தேசத்தில் மஹாகீர்த்தி பெற்று விளங்கிய நெப்போலியன் சக்ரவர்த்தியின்
மதம் அப்படியன்று. "உவமையணி விரிவணி ஒன்றும் பெரிதில்லை. புனருக்தி (மீட்டுரை)
தான் மேலான அலங்காரம். அதாவது, நம்முடைய கக்ஷியைத் திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும்.
எதிராளி சொல்லும் பேச்சை கவனிக்கவே கூடாது. நம்முடைய கக்ஷியை ஓயாமல் திரும்பச்சொல்லவேண்டும்.
அடிக்கடி எந்த வார்த்தை சொல்லுகிறோமோ அந்த வார்த்தை மெய்யாய்ப் போகும்" என்று
நெப்போலியன் சொல்லியதாக ஒரு கதை. லௌகீக காரியங்களிலே இது நல்ல உபாயம். நம்முடைய
நியாயத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லுவதினால்,
பொய் கூட மெய்யாகத் தோன்றும்படி செய்துவிடலாம்.
குண்டூசி
வியாபாரம்
ஒருவன் ஊசி வியாபாரம் பண்ணினான். பக்கத்துக் கடையிலே ஒருவன் வாழைக்காய்
வியாபாரம். அவனைப் பார்த்து குண்டூசி வியாபாரியும் பகல் வெயில் நேரத்தில் அரைத் தூக்கமாய்
கண்ணை மூடிக்கொண்டே சாமான் எடுத்துக் கொடுக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொண்டான். ஒருநாள்
பகல் வெயிலில் குண்டூசிக்காரன் அரைக் கண்ணைத் திறந்துகொண்டு முக்கால் குறட்டையாகத்
தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது இலேசான கனவு காணலானான். கையிலே வாய் திறந்த குண்டூசி
டப்பியொன்று இருக்கிறது. இவன் கனவிலே ஒரு பெண் வந்தாள். அவள் வந்து தன் புருவத்திலும்
கண்ணிமையிலும் ஜவ்வாது தடவுவதாகக் கனாக் கண்டான். கையிலிருந்த குண்டூசி டப்பியை கண்ணிலே
கவிழ்த்துக்கொண்டு மிகவும் வருத்தப்பட்டான். குண்டூசி வியாபாரம் பண்ணுகிறவன் பட்டப்பகலில்
நடுக்கடையில் உட்கார்ந்து தூங்கக்கூடாது.
தூற்றல்
ஓயாமல் தூற்றல் போட்டால் அது மழையாக மாட்டாது. சிணுங்கல் மழையினால்
கெடுதிதான் உண்டாகும். தூற்றலாகத் தொடங்கியது மழையாக விரைவிலே பெய்து முடித்துவிடவேண்டும்.
ஒரு நல்ல காரியம் செய்யத் தொடங்குவோன், அதை ஒரே நீட்டாக வருஷக் கணக்கில் நீட்டி,
மற்றவர்களுக்கு அதுவே ஒரு தீராத தொல்லையாகும்படி செய்யலாகாது. "சுபஞ்ச சீக்கிரம்"; நன்மையைத் துரிதப்படுத்தவேண்டும்.
வசனநடை
தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம்
சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும்
தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான்
உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம்,
ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே
அமைந்துவிட்டால் நல்லது.
பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும்
பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழகமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால்
வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது,
வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப்பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு
நண்பனிடம் படித்துக் காட்டும்வழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும். சொல்ல வந்த விஷயத்தை
மனதிலே சரியாகக்கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல்,
நடை நேராகச் செல்ல வேண்டும். முன்யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால்,
பின்பு ஸங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதில் கட்டி முடிந்த வசனங்களையேஎழுவது நன்று.
உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.
தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடுபோல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும்;
வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுதிருக்காது. வசன நடை, கம்பர் கவிதைக்குச்
சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்கவேண்டும்.
இவற்றுள், ஒழுக்கமாவது தட்டுத்தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால
வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்திலே
தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக்கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.
தமிழ்
நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்
தமிழ் நாட்டிலே புஸ்தகம் எழுதுவோரின் நிலைமை இன்னும் சீராகவில்லை. பிரசுரத்
தொழிலை ஒரு வியாபாரமாக நடத்தும் முதலாளிகள் வெளிப்படவில்லையாதலால், சங்கடம் நீங்காமலிருக்கிறது.
புதிய புஸ்தங்களைப் படித்துப்படித்து, ''பயன்படுமா படாதா'' வென்று தீர்மானம் செய்யவேண்டும்.
''நன்றாக விலையாகுமா விலையாகாதா'' என்பதை ஊகித்தறியவேண்டும். ஆசிரியரிடமிருந்து புஸ்தகத்தை
முன் விலையாகவோ, வேறுவித உடன்பாடாகவோ, வாங்கிக்கொண்டு தாம் கைம்முதல் போட்டு அச்சிட்டு
லாபம் பெறவேண்டும். இந்த வியாபாரத்தை நமது தேச முதலாளிகள் தக்கபடி கவனியாமலிருப்பது
வியப்பை உண்டாக்குகிறது. புஸ்தகங்கள் வெளிவரத்தான் செய்கின்றன. "பெருந் தொகையான
ஜனங்கள் வாங்கிப் படிக்கத் தான் செய்கிறார்கள். ஒரு ஒழுங்கான பிரசுர வியாபாரம் நடந்தால்
ஜனங்களுக்கு நல்ல புஸ்தகங்கள் கிடைக்கும். இப்போது அச்சிடப் பணமுள்ளவர் எழுதும் புஸ்தகங்களே
பொதுஜனங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பழைய புஸ்தகங்களிலே ஆச்சரியமானவை பல
எழுதப்பட்ட காலத்தில், ஆசிரியர் தனவந்தராக இருந்ததில்லை. மேன்மேலும் ஊக்கத்துடன்
நடத்தினால், பிரசுர வியாபாரத்தில் நிறைய லாபம் உண்டாகுமென்பதில் சந்தேகமில்லை.
விக்டர்
ஹ்யூகோ என்ற பிரெஞ்சு ஞானியின் வசனங்கள்
தெய்வம் எப்படிப் பேசுகிறது?
உலகத்தில் நடைபெறும் செய்திகளை யெல்லாம் கடைந்து பார்க்கவேண்டும். அதன்
ஆணைகள் தெளிவுபடும். ஆனால் இது ரஹஸ்ய பாஷை; எளிதில் அர்த்தமாகாது. சாதாரண மனிதர்
இந்தப் பாஷையை மொழிபெயர்க்கத் தொடங்கினால், அதிலே பிழைகள் போடுகிறார்கள்; அவஸரப்படுகிறார்கள்.
முன்பின் முரணுகிறார்கள்; இடையிடையே சில அமிர்தங்களை விட்டு விடுகிறார்கள்.
அறிவுடையோர், பொறுமையுடையோர், ஆழ்ந்து சிந்தனை செய்வோர்-இவர்கள் பரபரப்புக்கொள்ளாது,
காத்திருந்து காத்திருந்து, மெல்ல மெல்ல மொழிபெயர்த்துப் பார்க்கிறார்கள். இவர்களுடைய
மொழிபெயர்ப்பிலே உண்மை அகப்படுகின்றது.
ஸமத்துவம்
என்பது யாது?
ஸமத்வக் கொள்கையிலே இரண்டு செய்திகளைப் பற்றிய விசாரணை யுண்டாகிறது.
முதலாவது, செல்வத்தை உண்டாக்குதல். இரண்டாவது, அதைப் பங்கிட்டுக் கொடுத்தல்.முதலாவது
செய்தியில் தொழிலைப் பற்றிய ஆராய்ச்சி ஏற்படுகிறது. இரண்டாவது செய்தியில் கடவுளைப்
பற்றிய பேச்சு.
முதல் விஷயம் திறமைகளின் உபயோகத்தைப் பற்றியது.
இரண்டாம் விஷயம் இன்பங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதைப் பற்றியது.
திற்மைகளை உபயோகப்படுத்துவதினாலே ஜன வலிமையுண்டாகிறது.
இன்பங்களை நேரே வகுத்தால் ஒவ்வொருவனுக்கும் இன்பம் உண்டாகிறது.
நேரே வகுத்தல் என்றால் ஒன்றுபோல் வகுத்தல் என்று அர்த்தமில்லை. நியாயமாக
வகுத்தல் என்று அர்த்தம். நியாயமே ஸமத்வத்தின் பெயர். நியாயமே முதலாவது ஸமத்வம்.
மேலே கூறிய ஜன வலிமை, ஸர்வஸுகம், என்ற இரண்டும் சேர்ந்தால் ஜனச்செம்மை
ஏற்படுகிறது.
ஜனச் செம்மை எப்படியிருக்கும்?
மனிதன் செல்வவானாவான். குடிகள் விடுதலை பெற்றிருப்பர். நாடு உயர்வு
பெற்றிருக்கும்.
காதல்
உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது; ஒரேயொரு தெய்வம் முடிவுரை விரிந்து
நிற்பது; இது காதல்.
காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை யெழுதலாகா தென்று
தடுத்தால் அவர்கள், நமக்குத் தெரியாதபடி, ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டு பிடித்துப்
பேசிக் கொள்கிறார்கள். பறவைகளின் பாட்டையும், மலர்களின் கந்தத்தையும், குழந்தையின்
சிரிப்பையும், ஞாயிற்றின் ஒளியையும், காற்றின் உயிர்ப்பையும், விண்மீன்களின் கதிர்களையும்
காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது? தெய்வத்தின் படைப்பு முழுதும்காதலுக்குத்
தொண்டு செய்யும் பொருட்டே அமைந்திருக்கிறது. உலக முழுதையும் தூதுபோகச் செய்கிற திறமை
காதலர்க்குண்டு.
இளவேனிற் காலமே, நான் அவளுக்கு எழுதுகிற ஓலை நீ. உயிரே, நீ கல்லாய்ப்
பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியானால், தொட்டால் வாடிச்செடியாகி விடு; மனிதனானால்,
காதல் செய். காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Friday, May 22, 2015
50. கலைகள் - மாலை (1)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment