பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 22, 2015

53. கலைகள் - ஜப்பானியக் கவிதை


                 ஸமீபத்தில் "மாடர்ன் ரிவியூ" என்ற கல்கத்தா பத்திரிகையிலே `உயோநே நோகுச்சி' என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அதிலே அவர் சொல்வதென்னவென்றால்:-

               "மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கை யில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலேயில்லை. எதுகை சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமே பாட்டை அதுபோகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக மிருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

               "ஐப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. 'கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிடவேண்டும்' என்று ஒரே ஆவலுடன் "எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை யெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன்-அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு-இவற்றிலே ஈடுபட்டுப்போய் இயற்கையுடனே ஒன்றாக வாழ்பவனே கவி.
"கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் `வாஷோமத்ஸுவோ' என்னும் புலவரிடம் மூன்று ரியோ (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தானாம். இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்தஇந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம். இவருக்கு காகா  (Kaga)  என்ற ஊரில் ஹொகூஷிஎன்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய 'வாஷோமத்ஸுவோ' புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்.

                              'தீப்பட்டெரிந்தது, வீழுமலரின் அமைதியென்னே!'

"மலர் தனக்கு வாழுங் காலம் மாறிக் கீழே விழும் போது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ, அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகின்றான். 'வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால், அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை' என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்."

'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மை' யென்று நோகுச்சிப் புலவர் சொல்லுவதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது;"கடுகைத் தொளைத் தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்." கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் "ஹொகூஷி" பாட்டன்று. "நோக்குச்சி" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு."


No comments: