பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 29, 2015

83. சமூகம் - செல்வம் (2)


             "பணமில்லாதவன் பிணம்" என்று பழமொழி சொல்கிறது. இதன் கருத்தைத் தான் திருவள்ளுவர் வேறொரு வகையிலே "பொருளில்லார்க் கிவ்வுலகமில்லை" என்று சொல்லியிருக்கிறார்.

              இந்த உலகிலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் எல்லாச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையாவது. "இன்மையின் இன்னாததில்" என்றும் "இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன் றெடுத்த தாய் வேண்டாள்; செல்லாதவன் வாயிற் சொல்" என்றும் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.

             இங்ஙனமே, ஏழ்மையின் நிகரற்ற இகழ்ச்சியையும், துன்பத்தையும் விளக்குவன வாய்த் தமிழ்ப் பண்டைத் நூல்களிலும், காவியங்கள் முதலியனவற்றிலும் காணப்படும் வசனங்களையும் உதாரணங்களையும் எடுத்துக்காட்ட முயன்றால், அத்தொகுதி ஆயிரம் சுவடிகளுக்கு மேலாய் விடும். இவ்விஷயமாக இதர பாஷைகளிலுள்ள நூல்களிலும் இவ்வாறே செறிந்து கிடக்கும் வாக்கியங்களும் திருஷ்டாந்தங்களும் கணக்கில்லாதனவாம்.

             எல்லா தேசங்களிலும் எல்லா பாஷைகளிலும் அறிஞரெல்லாம் ஒருங்கே வறுமைதான் எல்லா நரகங்களைக் காட்டிலும் மிகக் கொடிது என்பதை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். ஆதலால், இந்த விஷயத்துக்கு நாம் மேற்கோளாதாரங்களை அதிகமாகக் காட்டவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வறுமை மிகமிகப் பெரிய இகழ்ச்சியும் துன்பமுமாகும் என்பது கற்றோர்க்கு மட்டுமே யல்லாது கல்லாதார்க்கும் நன்குதெரிந்த விஷயமேயாம்.

              எல்லா உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. ஆனால், வறுமை மரணத்திலும் பெரிய துன்பமென்றுணர்ந்த ஏழைகள் மாத்திரமே "தெய்வமே எனக்கொரு சாவு வராதா" என்று சில சமயங்களில் வேண்டுவது காண்கிறோம்.

              இந்த ஏழ்மை இத்தனை கொடிதாக ஏற்பட்ட காரணந்தான் யாதெனில் சொல்லுகிறேன். உணவு தான் ஜீவ ஜந்துக்களின் அவசரங்களனைத்திலும் பெரிய அவசரமானது.

 "மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை                                                                                     தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்                                                                                     கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்                                                                                     பசி வந்திடப் பறந்துபோம்"

             எனவே, இவ்வுலக இன்பங்கள், பெருமைகள் எல்லாவற்றிற்கும் அஸ்திவார பலம் உணவு. உணவு இல்லாத இடத்தில் அவை நிற்க வழியில்லை. மேலும், வெறுமே, உயிர் தரித்திருப்பதற்குக் கூட ஆஹாரம் அவசியமாயிருக்கிறது. சோறில்லாவிட்டால் உயிரில்லை. இது கொண்டே, பெரும்பான்மையோருக்கு அன்றாடம் உணவு கிடைக்குமென்ற உறுதி யில்லாமலும், பலருக்கு உணவே கிடையாதென்பது உறுதியாகவும் ஏற்படுத்திவைக்கும் வறுமையை இத்தனை பெரிய கொடும் பகையாகக் கருதி மனிதர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த விஷயத்தில் மனித ஜாதியாரின் நிலைமைமற்ற மிருகங்கள் பக்ஷிகள் நிலைமையைக் காட்டிலும் அதிக பரிதாபகரமாகவும் இழிவாகவும் ஏற்பட்டிருக்கிறது. திருஷ்டாந்தமாக, பன்றி ஜாதி அல்லது நாய் ஜாதியை எடுத்துக் கொள்ளுங்கள். பலஹீனமான நாயொன்று ஏதேனும் ஆஹாரம் தின்று கொண்டிருக்கும்போது அகஸ்மாத்தாக அங்கே பலசாலி நாயொன்று வருமாயின் அந்தச் சமயத்தில் மாத்திரம் பலமில்லாத நாய் அவ்வுணவைப் பலசாலி நாய்க்குக் கொடுத்துவிட்டுத் தான் டிப் போய் விடும்படி நேருகிறது. ஆனால், சில சில சமயங்களில் மாத்திரம் இந்தஸம்பவம் நிகழ்வதல்லாமல், எப்போதுமே (மனித ஜாதி யிலிருப்பது போல)  இஃது நியதமாக நடைபெறுவதில்லை.

            மேலும், நான்கு பன்றிகள் அல்லது நான்கு நாய்கள் கூடி யாதேனும் ஒரு ஊரில் அல்லது ஒரு காட்டில் கிடைக்கக் கூடிய ஆஹார முழுதும் தங்களுக்கே தஸ்தாவேஜூப்படி சொந்தம் என்றும் தாங்களாக இஷ்டப்பட்டு தாங்கள் திட்டம் செய்து கொடுக்கும் அளவுப்படி தான் மற்றெல்லாப் பன்றிகள் அல்லது எல்லா நாய்களும் உண்ணக் கூடுமென்றும் விதி போடுகிற வழக்கம் (மனிதருக்குள் இருப்பதுபோல்) அந்த ஜந்துக்களிடையே காணப் படுவதில்லை. சிறு தொகையான மனிதருக்கு அடுத்தவேளை ஆஹாரம் கிடைப்பது நிச்சயமாகவும் பெருந்தொகையோர்க்கு அடுத்த வேளை சோறு நிச்சயமில்லாமலும் ஏற்பட்டிருக்கும் ஸம்பிரதாயம் மனிதரைத் தவிர வேறெந்த ஜாதி ஜீவர்களிடத்திலும் கிடையாது. 'காக முறவு கலந்துண்ணக் கண்டீரே?'

           எனவே, மிகவும் முக்கியமானதும் ஜீவஜாதிகளுக்கு பரம அவசியமானதுமாகிய இந்த அம்சத்தில், மனிதருடைய நாகரீக நிலை மற்றெல்லா மிருகங்கள் பக்ஷிகள் முதலியவற்றின் நாகரீக நிலையைக் காட்டிலும் தாழ்வானது என்பதில் சிறிதேனும் ஸந்தேஹமில்லை. இதில் வேறொரு விஷயம் யாதெனில், மனித ஜாதிக்குள்ளே கூட மற்றெல்லா வகுப்பினரைக் காட்டிலும் ஹிந்துக்கள் அதிக இகழ்ச்சியடைந்து அதிக பரிதாபகரமான ஸ்திதியிலிருக்கிறார்கள்.

             முற்காலத்திலே இந்தியா செல்வத்துக்கும், கல்விக்கும், ஞானத்துக்கும், தியானத்துக்கும், பக்திக்கும்,வீரத்துக்கும், பராக்கிரமத்துக்கும், சாஸ்திரங்களுக்கும், பலவிதமான கைத்தொழில்களுக்கும் விசேஷ ஸ்தலமாக விளங்கி வந்தது. இக்காலத்திலே, இந்தியா பஞ்சத்துக்கும், பசி மரணத்துக்கும், வறுமைக்கும் சிறுமைக்கும், தொத்து நோய்களுக்கும் சாசுவத ஸ்தலமாயிருக்கிறது.  இந்தியதேசத்தார் அழிவுறுவதுபோல் மற்றபடி பூமண்டல முழுதிலும் எந்நாட்டிலும் மனிதர் இவ்வாறு வருஷந் தவறாமல் வேறுகாரணம் யாதொன்று மில்லாமல் சுத்தமான பஞ்சக் காரணமாக பதினாயிரம் லக்ஷக் கணக்கில் மடிந்து போகும் ஆச்சர்யத்தைக் காணமுடியாது. மனித ஜாதியார்களுக்குள்ளேயே இப்படியென்றால், மற்ற மிருகங்கள், பட்சிகள், பூச்சிகள் வருஷந் தவறாமல் கூட்டங் கூட்டமாக வெறுமே சுத்தமான பட்டினியால் மடியும் அநியாயம் கிடையாதென்பது சொல்லாமலே விளங்கும்.

              இங்ஙனம், மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும், பொதுக் கஷ்டமாகவும் ஹிந்துக்களுக்கு விசேஷ அவமானமாகவும் விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அந்த நோயை நீக்கி இந்தியாவிலும் பூமண்டலத்திலும் ஸகல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாக பயமில்லாதபடி அரை வயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவசரங்களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான்கருதுகின்றேன்.  இவ்விஷயத்தைக் குறித்துத் தமிழ் நாட்டுமக்களில் வேறு பலரும் தத்தமக்குப் புலப்படும் உபாயங்களை நமது ''மித்திர''னுக் கெழுதியனுப்பும்படி வேண்டுகிறேன்.

              பூ மண்டலத்தில் அபார நலத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ந்த முக்கியமான கருவிகளில் ஒன்றாக நிற்கும் பெருமையும் புகழும் ''சுதேசமித்ரனுக்'' கெய்துக. மனித ஜாதி முழுமைக்கும் பேரவசியமான இந்த மஹாமஹோபகாரத்தை நடத்துவதற்கு உறுதியான தந்திரங்களைக் காட்டிக் கொடுப்பதாகிய நிகரற்ற மஹிமை தமிழ்நாட்டு மேதாவிகளுக் கெய்துக.

              உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத்தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக்கின்றன.

             மனுஷ்ய நாகரீகம் தோன்றிய கால முதலாக எல்லா ஜனங்களும் ஸமானமாக வாழவேண்டும் என்ற கருத்து ஞானிகளாலும் பண்டிதர்களாலும் வற்புறுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், ஒருவன் மிகவும் பலசாலியாக இருக்கிறான். அவனைப் பலமில்லாதவர்கள் மேன்மை யுடையோனாகக் கருதுகிறார்கள். அவனும் அதில் மகிழ்ச்சி கொண்டவனாய் பலமில்லாதவர்களை வேறு சிருஷ்டியாக நினைத்து மிக இழிவாக நடத்தத் தொடங்குகிறான்.

            இங்ஙனமே அழகுடையவன் அழகில்லாதவர்களைத் தாழ்வாக நினைக்கிறான். கல்வியுடையோர் கல்லாத மக்களிடம் வைத்திருக்கும் இகழ்ச்சியோ சொல்லுந் தரமன்று. 'விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல் கற்றாரோ டேனையவர்.' அதாவது, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எத்தகைய பேதமிருக்கிறது, அத்தனை பேதம் கற்றாருக்கும் கல்லாதாருக்கு மிடையே உளது. இந்தக் குறள் கல்விப் பெருமையுடையோர் அஃதில்லாதாரின் விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தை நன்கு விளக்குகிறது. இங்ஙனமே, பாடத் தெரிந்தவன் அது தெரியாதவரைக் குறைவாக எண்ணி நடத்துகிறான். நெட்டையாக இருப்பவன் குள்ளனைக் குறைந்த ஜாதியாக எண்ணுகிறான். மேற் குலத்திற் பிறந்தவன் தாழ்ந்த குலத்தானை இகழ்ச்சி செய்கிறான். சுருங்கச் சொல்லுமிடத்தே, யாதேனுமொரு வித விசேஷ அநுகூலம் படைத்தோர் அஃது படையாதவரை இழிவாக எண்ணி நடத்துகிறார்கள். இங்ஙனம் கோடிவிதமான காரணங்களைஉத்தேசித்து மனிதருக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் கஷ்டங்களும் மனஸ்தாபங்களும் பொறாமைகளும் கர்வங்களும் போராட்டங்களும் எண்ணற்றனவாகின்றன. இதனால் இவ்வுலகத்தில் மனித வாழ்க்கை நரக வாழ்க்கை போல தீராத் துன்பமாக முடிந்திருக்கிறது.

              ஏனென்றால், ஒருவன் எத்தனை விசேஷ அநுகூலங்கள் படைத்திருந்த போதிலும், ஏதேனும் ஒருவிஷயத்தில் அவன் வேறு சிலருக்குக் குறைந்தவனாகவே இருக்கும்படி இயற்கை யமைப்பு இருக்கிறது.

             அளவிறந்த கல்வியுடையவன் கொஞ்சம் குள்ளனாக இருந்தால் போதும். பிடித்தது சனி! நெட்டை மனிதரைக் கண்டு அவன் பொறாமை கொள்வதினின்றும் நெட்டையாட்கள் அவனை இகழ்ச்சி செய்வதினின்றும் அவனுக்குப் பலவித அனர்த்தங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. அவன் தான் குள்ளனாகப் பிறந்ததைப் பற்றி ஓயாமல் மனம் நொந்து சாகிறான்.

             மிகுந்த செல்வமுடையவன் கொஞ்சம் கரு நிறமுடையவனாக இருந்தால் போதும். வந்தது வினை! செந் நிறமுடையவர்களாலே அவனுடைய வாழ்க்கை நரகத்தைப் போல் ஆக்கப்படுகிறது.

             இங்ஙனம் எத்தனையோ பேதங்களால் மனிதனுக்குப் பல தொல்லைகள் விளைகின்றன. எனினும், நான் தொடக்கத்திலே கூறியபடி செல்வத்தால் ஏற்படும் வேற்றுமைகளே சால மிகக்கொடியன. செல்வமுடையவன் செல்வமில்லாதவரிடத்துக் கொண்டிருக்கும் இகழ்ச்சியும், செல்வமில்லாதவன் செல்வமுடையோரிடத்தே கொண்டிருக்கும் பொறாமையும் வேறெந்த முகாந்திரத்தைக் கருதியும் மனிதருக்குள்ளே ஏற்படுவதில்லை.

'கண்ணுடையோ ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு                                                 புண்ணுடை யார் கல்லாதவர்'

என்று வள்ளுவர் சொல்லியபடி, படித்தவன் படியாதவனை வெறுமே குருடனாகக் கருதி நடத்துகிறான். பணமுடையவனோ பணமில்லாதவனைப் பிணமாக நினைக்கிறான்.
இதனிடையே மனித ஜாதி நாகரீகத்தில் முற்ற முற்ற, ஸமத்வம் அவசியமென்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக்கொண்டே வருகிறது. எத்தனை வேற்றுமைகள் குணத்தாலும் செய்கையாலும் பிறப்பாலும் மற்ற வீண் நியமங்களாலும் மானிடருக்குள் ஏற்பட்டிருந்த போதிலும், அந்த வேற்றுமைகளை யெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லாரும் ஈசனுடைய மக்கள் அல்லது அம்சங்கள் என்ற பரம ஸத்யத்தை மனதில் தரித்து எல்லாரையும் நிகராக பாவிக்க வேண்டும் என்ற கருத்து வேத ரிஷிகளாலும், கிறிஸ்து, புத்தர் முதலிய அவதார புருஷர்களாலும் மனிதருக்கு வற்புறுத்திக் கூறப் பட்டன. அவர்களை ஒட்டி எண்ணிறந்த ஞானிகளும் பண்டிதர்களும் அக்கொள்கையைப் பலவகையாலே பரவச்செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

              இங்ஙனம், பரமார்த்த ஞானமுடையோர், ஆதிகாலம் தொட்டு, ஸமத்வக் கொள்கையைப் பரப்பிவருதல் ஒரு புறத்தே நிகழவும், சென்ற சில நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பல வித்வான்கள் தெய்வத்தைப் பற்றி யோசனை செய்யாமல் வெறுமே மானிட வாழ்க்கை ஸூகமாகவும் ஸமாதானமாகவும் நடைபெறவேண்டும் என்கிற லௌகீக காரணத்தைக் கருதி ஸகல ஜனங்களும் ஸமாதானமாகவே நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்தைப் பிரசாரஞ் செய்துகொண்டு வருகிறார்கள். இக் கொள்கை, நாட்பட நாட்பட, ஐரோப்பாவிலும், அதன் கிளைகளாகிய அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும் ஐரோப்பிய நாகரீகத்தை அநுசரிக்க விரும்பும் ஜப்பான், இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்துவருகிறது.

              ஒற்றைக் குடும்பத்தில் ஒரு பிள்ளை புத்திமானாகவும் கல்வியுடையவனாகவு மிருக்கிறான், மற்றொருபிள்ளை கல்வி யறிவற்ற மூடனாகவே இருக்கிறான்; ஒருவன் சிவப்பாக இருக்கிறான்; மற்றொருவன் கருநிற முடையவனாக இருக்கிறான். ஒருவன் பலசாலியாக இருக்கிறான்; மற்றொருவன பலஹீனனாக இருக்கிறான். ஒருவன் தைரியசாலியாக இருக்கிறான்: மற்றொருவன் கோழையாக இருக்கிறான். ஒருவன் நெட்டை; மற்றொருவன் குட்டை. ஒருவன் அழகுடையவன்; மற்றொருவன் முகமெல்லாம் அம்மைத் தழும்புடையவனாய் ஒரு கண் பொட்டையாக இருக்கிறான். எனினும், அறிவுடைய தாய் தந்தையர் இந்த மக்களுக்குள்ளே எவ்விஷயத்திலும் வேற்றுமை பாராட்டாமல் இவர்களை ஸகல விதங்களிலும் ஸமான அன்புடன் நடந்தி வருகிறார்கள்.

              அதுபோலவே, மனிதஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ள இயற்கையாலும் மானிடர்தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடு களாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக ஸௌகரியங்களும், பலருக்குக் குறைந்த ஸௌகரியங்களும், சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப்பும், சிலருக்கு லாபங்களும், பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும், மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும், நவீன ஐரோப்பிய ஸித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான ஸித்தாந்தமாகும். இந்தக் கொள்கைக்கு எல்லா மதங்களும் சார்பாக இருப்பதை உத்தேசிக்கு மிடத்தே, இது  நாளடைவில் ஐரோப்பாவில் மாத்திரமின்றி உலக முழுமையிலும் பரிபூர்ணமாக வெற்றிபெறும் என்பதில் ஸந்தேஹமில்லை.

              இந்த ஸித்தாந்தம் பரிபூர்ண ஜயமடைந்து மனிதருக்குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகுதான், மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர்.

              மேலும், மானிடருக்குள்ளே இயற்கையால் ஏற்பட்டிருக்கும் வர்ண வேற்றுமைகள், உயர வேற்றுமைகள், சரீர பல வேற்றுமைகள் முதலியனவே மாற்ற முடியாதவை. செயற்கையால் உண்டாகிய கல்வி வேற்றுமைகள், செல்வ வேற்றுமைகள், ஜாதி பேதங்கள் முதலியன எளிதாக மாற்றிக்கொள்ளக் கூடியன.

              ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல தேசங்களிலும் ஏற்கனவே பிற்கூறிய வேற்றுமைகளை நீக்குவதற்குப் பலமான முயற்சிகள் நடைபெற்று வந்து நல்ல பயன்களும் ஏற்பட்டு விட்டன. எல்லாருக்கும் கல்வி கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் முக்கியமாக வலிமையடைந்து வருகிறது. தேசத்து மக்கள்அத்தனை பேருக்கும் கட்டாய மாகவும் இனாமாகவும் கல்வி கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.  இந்த முயற்சி இன்னும் அதிக பலம் அடையும்.  நாளுக்குநாள் இந்த முயற்சியில் சக்தியும் வேகமும் அதிகரித்து வருகின்றன. இதனினும் இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் அந்த முறையைக் கைப்பற்றி நடக்கும். இந்தியா, ஜப்பான் முதலிய தேசங்களிலும் படிப்புத் தெரியாதவர் ஒருவர்கூட இல்லாமற் போய்விடுவார்கள் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஜாதி பேதங்கள் இந்தியாவிலேயே சிதறுண்டு வருகின்றன வெனில் மற்ற நாடுகளைப் பற்றிப்பேச வேண்டியதில்லை.

              இதுபோலவே. செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும் உலகத்தில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. ஐரோப்பா விலேதான் இந்த முயற்சி வெகுமும்முரமாக நடந்து வருகிறது. ஒரு தேசத்தில் பிறந்தமக்கள் அனைவருக்கும் அந்த தேசத்தின் இயற்கைச் செல்வ முழுவதையும் பொது உடமையாக்கி விடவேண்டுமென்ற கொள்கைக்கு இங்கிலீஷில் 'சோஷலிஸ்ட்' கொள்கையென்று பெயர். அதாவது 'கூட்டுறவுக் கொள்கை.  'இந்தக் 'கூட்டுறவு வாழ்வு'க்  கொள்கை (சோஷலிஸ்ட்) ஐரோப்பாவில் தோன்றியபோது இதை அங்கு முதலாளிகளும் மற்றப்படி பொது ஜனங்களும் மிக ஆத்திரத்துடனும், ஆக்ரஹத்துடனும் எதிர்த்து வந்தார்கள். நாளடைவில் இக் கொள்கையின் நல்லியல்பு அந்தக் கண்டத்தாருக்கு மேன்மேலும் தெளிவுபட்டு வரலாயிற்று. எனவே, இதன் மீது ஜனங்கள் கொண்டிருக்கும் விரோதம் குறைவுபட்டுக் கொண்டுவரவே, இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கெனவே, ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின், ஸ்ரீ மான் மின்த்ரோத்ஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடமையாகிவிட்டது. இக் கொள்கை ஜர்மனியிலும், ஆஸ்திரேலியாவிலும், துருக்கியிலும் அளவற்ற வன்மைகொண்டு வருகிறது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரம்மாண்டமான பகுதியாக நிற்கும் ஸைபீரியா தேசம் ருஷியாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததாதலால், அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்துவிட்டது. அங்கிருந்து இக்கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகிறது.  ஐரோப்பாவிலுள்ள பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைக் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள்புரிந்து வருகிறார்கள்.

                   ஆனால், இந்த முறைமை போர், கொலை, பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம் ஸஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர், அவற்றைக் குத்து, வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கை யென்று நான் நினைக்கிறேன். பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும், நிலஸ்வான்களின் பூமியையும் பிடுங்கி  தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை  ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வகாரணங்களிருக்கின்றன. நெடுங் காலமாகவே, ருஷியாதேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்றகொடுங்கோன்மையாலும், அநீதங்களாலும், செல்வர்களின் குரூரத்தன்மையாலும் பல ராஜாங்க புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது ஸுலபமாயிற்று. மற்ற ஐரோப்பிய தேசங்களில் முதலாளிகளும் செல்வர்களும் இன்னும் முற்றிலும் பலஹீனமடைந்து போகவில்லை. பெரும்பாலும்அவர்களிடத்திலேயே எல்லாப் பலங்களும் சக்திகளும் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம்  ''சோஷலிஸ்ட்''  கூட்டுறவு வாழ்க்கைக் கட்சி ருஷ்யாவிலுள்ள சக்தியும் பராக்கிரமமும் பெற்றுவிடவில்லை. அங்ஙனம் பெறுவற்கு இன்னும் பல வருஷங்கள் செல்லும்  என்றே தோன்றுகிறது. தவிரவும், அங்ஙனம் ''சோஷலிஸ்ட்'' கட்சியார் பலமடைந்தபோதிலும், அந்த பலத்தைஉபயோகிப்பது நியாயமில்லை யென்று நான்சொல்லுகிறேன். ஏனென்றால், பிறருடைமையைத் தாம்அபகரித்து வாழவேண்டும் என்கின்ற கெட்ட எண்ணமுடையவர்களும் ஸர்வ ஜனங்களும் ஸமான ஸௌகர்யங்களுடன் வாழவேண்டும் என்கிற கருத்து இல்லாத பாவிகளும்  தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள், பீரங்கி, துப்பாக்கிகளால் அநேகரைக் கொலை செய்து, ஊர்களையும் வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது நமக்கு அர்த்தமாகக் கூடிய விஷயம். அங்ஙனமின்றி,  எல்லா மனிதரும் உடன்பிறந்த சகோதரரைப் போல் ஆவார்கள் என்றும்,ஆதலால் எல்லாரையும் ஸமமாகவும் அன்புடனும் நடத்தவேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள் தம்முடைய கருணா தர்மத்தை நிலை நிறுத்த கொலை முதலிய மஹாபாதகங்கள் செய்வது நமக்குச் சிறிதேனும் அர்த்தமாகக் கூடாத விஷயம் . கொலையாலும், கொள்ளையாலும், அன்பையும் ஸமத்வத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.    'இதற்கு நாம் என்னசெய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; என்று லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்ல தாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே யொழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்லவேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை. அதர்மத்தை தர்மத்தால் வெல்லவேண்டும்;  தீமையை நன்மையாலேதான் வெல்லமுடியும். கொலையையும் கொள்ளையையும்அன்பினாலும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இதுதான் கடைசிவரை கைக்கூடி வரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து. சிறிது காலத்திற்கு நோயைஅடக்கி வைக்கும். பிறகு, அந்நோய் முன்னைக் காட்டிலும் ஆயிரம்மடங்கு அதிக வலிமை யுடையதாய் ஓங்கிவிடும். ஒரு கொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனா பலத்தாலும் ஆய்த பலத்தாலும் மற்றொரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கிவிடக்கூடும். இதனாலே தோற்றகூட்டம் நாளைக்கு பலம் அதிகப் பட்டு முந்திய கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலைதூக்கி அதைஅடக்கும், இங்ஙனம்  தலைமுறை  தலைமுறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று தீமைசெய்து கொண்டே வரும். இதற்கு ஓய்வே கிடையாது. தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்க வல்லதாகும். இதனை அறியாதார் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதார் ஆவர்.
மேலும், ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் ''ஸோஷலிஸ்ட்'' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருதவழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹா பலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் ''கூட்டு வாழ்க்கைக்'' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்தவல்லரசுகள் கொஞ்சம் சக்தி யேறிய மாத்திரத்திலே ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப்பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழியில்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால், இந்தியாவின் ஸாத்யா ஸாத்யங்களைக் கருதியே நாம் யோஜனை செய்யவேண்டும். முதலாவது, இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும்,  முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட்டார்கள். எனவே, கொள்ளைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.செல்வர்களுடைய உடைமைகளை பலாத்காரமாகப் பறித்துக்கொள்ள முயலுதல் இந்நாட்டிலே, நான் மேற்கூறியபடி, பொருந்தவும் செய்யாது; ஸாத்தியமும் இல்லை.

              ஆனால், கோடிக்கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும், லக்ஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப் பட்டினியால் கோர மரணமெய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு க்ஷணங்கூடச் சகித்திருப்பது நியாயமில்லை என்பது சொல்லாமலே போதரும்.

              எனவே, உலக துன்பங்கள் அனைத்திலும் கொடிதான இந்த ஏழ்மைத் துன்பத்தை ஸமாதான நெறியாலும் மாற்றக்கூடிய உபாயமொன்றை நாம்கண்டு பிடித்து நடத்து வோமானால், அதினின்றும் நமதுநாடு பயனுறுவது மட்டுமேயன்றி, உலகத்தாரெல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மைஅடைவார்கள்.

             'அப்படிப்பட்ட உபாயமொன்று கிடைக்குமா' என்பதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி செய்வோம்.

             ஜனங்களுக் குள்ளே கலகங்களும் யுத்தங்களும் கொலைச் செயல்களும் நேரிடாத வண்ணம் ஸமாதான நெறியிலே உலகத்தின் ஏழ்மையைத் தொலைப்பதற்குத் தகுந்த உபாயமாக எனக்குத் தோன்றுவதை இங்கு தெரிவிக்கிறேன்.

              உலகம் தேசங்களால் அமைக்கப்பட்டது. தேசம் மாகாணங்களின் தொகுதியாம். மாகாணங்கள் ஜில்லாக்களின் சேர்க்கையாகும். ஜில்லா, ஒரு சில நகரங்களும் பெரும்பான்மை கிராமங்களும் கூடிய தொகுதியாகும். எனவே, ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு அதில் வறுமையே இல்லாமல் செய்வதற்குரிய வழி கண்டுபிடிப்போமாயின், பிறகு அந்த உபாயமே பூமண்டலத்தின் வறுமையைத் தொலைப்பதற்குப் பொருந்தியதாய் விடுமென்பது சொல்லாமலே விளங்கும். திருஷ்டாந்தமாக, நான் இப்பொழுது வாசம் புரிந்து வரும் கடையம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். இவ்வூரைச் சூழ்ந்திருக்கும் வயல்க ளெல்லாம் சுமார் 30 பெரிய மிராசுதார்களுக்கும் பல சில்லரை நிலஸ்வான்களுக்கும் உரியன. 

              இந்த நிலஸ்வான்கள் எல்லாரும் சேர்ந்த ஒரு ஸபை சமைக்கப்பட வேண்டும். இந்த ஸபையார் கோயில் வாயிலிலே கூட்டம் கூடியிருந்து கொண்டு ஊர் ஜனங்கள் அத்தனை பேரையும் பறை சாற்றுவித்துத் தம்முன்னே வரவழைக்கவேண்டும். அப்போது நில ஸ்வான்கள் எல்லாருடைய ஸம்மதப்படி, அவர்களின் பிரதிநிதியாகிய ஒருவர் எழுந்து நின்று கிராமத்தாரிடம் பின்வருமாறு பிரமாணம் செய்துகொடுக்க வேண்டும்.

              எப்படி என்றால்:-

              ''கஞ்சியாவது கிடைத்து வருகிறதெனினும் அது நியதமாக எப்போதும் கிடைத்து வரும் என்ற நிச்சயம் இல்லாதபடியால் நீங்கள் எண்ணில்லாத மனக் கவலைகளுக்கும், மனஸ்தாபங்களுக்கும், பொறாமைகளுக்கும், வஞ்சனைகளுக்கும்,  ஏமாற்றங்களுக்கும், கலகங்களுக்கும் இரையாகி மடிகிறீர்கள். ''அன்னவிசாரம் அதுவே விசாரம்'' என்று பட்டினத்துப் பிள்ளை சொல்லியது போல், உங்களுக்கு இந்த ஆகார விசாரம் தீராத பெரு விசாரமாக வந்து மூண்டிருக்கிறது. நியாயமான உழைப்பாலோ, அல்லது ப்ரூதோம் என்ற பிரான்ஸ் தேசத்து சாஸ்திரி, 'உடைமையாவது களவு' என்று  சொல்லியபடி வஞ்சனைத் தொழில்களாலே,  இந்த ஊரிலுள்ள வயல்கள் தோட்டங்கள் எல்லாவற்றையும் எங்கள் சிலருக்கு மாத்திரம் உரிமையாகும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள். பூஸ்திதி எங்களிடம் இருப்பது எங்களுடைய குற்றமாகமாட்டாது. எனினும், உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் ஸ்நேஹமும் இல்லாவிட்டால் எங்களுக்கு இந்த நிலங்கள் எல்விதமான பயனும் தரமாட்டா. மேலும் நீங்கள் அத்தனை பேரும் ஆகாரவிஷயத்தில் ஒருவித நிச்சய மில்லாமையால் படும் கஷ்டங்களும் அதனின்றும் உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்களும் எங்களையும் சூழ்ந்து தீராத துன்பத்துக்கு உள்ளாக்குகின்றன. நாங்கள் பொருளுடைமை விஷயத்தில் மாத்திரம் உங்களின்றும் வேறுபட்டிருப்பினும், மற்றெல்லா அம்சங்களிலும் உங்களைப் போன்ற மனிதர்களே; ஆதலாலும்,உங்களுடனே எப்போதும் ஊடாடிப் பழகுவதும் விவஹரிப்பதும் எங்களுக்கு மிகவும் இன்றியமையாதாதலாலும், நீங்கள் தீராத வறுமை நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்கள் மாத்திரம் சந்தோஷமாக இருத்தல் சாத்தியப்படவில்லை. எங்களுடைய காரியங்களெல்லாம் உங்களாலே ஆகவேண்டியிருக்கிறது. எங்களுக்கு உங்களைத் தவிர வேறு கதியில்லை. உங்களுடைய வறுமைத் தீ எங்களை நானாவிதங்களிலும் சாபம் போல எரிக்கிறது. எங்களுக்குச் சிறிதேனும் ஒற்றுமையில்லாமல் செய்துவருகிறது. பூமி எல்லோருக்கும் பொதுவான தாய் போலாகும். அதில், நாங்கள் மாத்திரம் உரிமை கொண்டாடுதல் அநியாயம் என்று எங்களுக்கு அர்த்தமாகின்றது. அதனின்றும் பூர்வீக காலம் முதல்பரம்பரை பரம்பரையாக வழங்கி வரும் சொத்தை, ருஷ்யா முதலிய தேசங்களில் நடப்பதுபோல், நீங்கள் பலாத்காரமாக எங்களைக் கொன்றும் சிறையிலிட்டும் எங்களிடமிருந்து பறித்துக் கொள்வது நியாயம் இல்லை. ஏனென்றால், உடைமை பொது நாகரீகத்திற்கு ஹேதுவாகும். எந்தக் காரணம் பற்றியும் கொள்ளையிடுவது சரியில்லை. நிலமில்லாத நீங்கள் எங்களுடைய நிலத்தைக் கொள்ளையிட்டுப் பறித்துக்கொள்ளலாமெனில், துணியில்லாதவர்கள் உங்களுடைய துணிகளைப் பறித்துக்கொள்ளலாமன்றோ? வீடில்லாதவர்கள் பிறர் வீடுகளைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஒரு சிறிதேனும் உடமையில்லாதவர்கள் மலை க்குறவர் இடையேகூட காணப்படுவதில்லை. பூஸ்திதி மாத்திரம் தானா உடைமை? துணி, மணி, வீடு, பாத்திரம், பண்டம், பாய் தலையணி-எல்லாம் உடைமைகளே. மலைப் பழிஞர் நாட்டுக்குள்பிரவேசித்து உங்களுடைய வீடு பாத்திரங்களெல்லாம் அபகரித்துக்கொள்ளுதல் நியாயமென்று உங்களுக்குத்தோன்றுகின்றதா?

                     ''எனவே, எங்களுடைய பூஸ்திதிகளை நீங்கள் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ளுதல் நியாயமன்று. ஆனாலும் பூமித்தாய் எல்லாருக்கும் பொதுவாகத் தரும் விளை பொருள்களை நாங்கள் சிலபேர்  மாத்திரம் பங்கிட்டெடுத்துக் கொண்டு, உங்களுக்கு  'எங்களுடைய தயவு இருந்தால் தான் ஆகாரம். எங்கள் தயவில்லாவிட்டால் பட்டினி' என்ற நிலையில் உங்களை வைத்து, அதனின்று உங்களை அடிமைகளாக்கி நடத்திவரும் மஹாபாவத்திற்கு இன்னும் ஆளாயிருக்க எங்களுக்குச் சம்மதமில்லை.  ''இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலும் நிரப்பு'' என்று திருவள்ளுவர் சொல்லியது போல,  (அதாவது,' நேற்று முழுதும் நம்மைக் கொலை செய்வது போலவே வருத்திக் கொண்டிருந்த வறுமை இன்றைக்கு வந்து விடுமோ'  என்று)  பரிதபித்து  ஏங்கும் நிலைமையில் நீங்கள் உயிர்வாழ்க்கை நடத்தி வருகிறீர்கள். உங்களை இந்த உணவு நிச்சயமில்லாத நிலையில் வைத்திருக்கும் பாவத்தை இனி சுமந்து கொண்டிருப்பதில் எங்களுக்குச் சம்மதமில்லை. எனவே, உங்களில் ஆண் பெண் குழந்தை எவருக்கும் என்றைக்கும் ஆகார விஷயமாக பயமில்லாதபடி செய்துவிடவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்கு, பின்வரும் வழியை அனுசரிக்க வேண்டும் என்று நிச்சயித்து இருக்கிறோம். அதாவது, எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி 'தொழில் நிர்வாக சங்கம்' என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த் தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப் பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானாவகைப்பட்ட கைத்தொழில்கள்-இவைஇந்தக் கிராமத்துக்கு மொத்தம் இவ்வளவு நடைபெறவேண்டு மென்றும், அத் தொழில்களில் இன்னின்ன தொழிலிற்கு இன்னார் தகுதியுடையவர் என்றும் மேற்படிதொழில் நிர்வாக சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை பேரும்தொழில் செய்யவேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக, ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரினும் ஒருவர்  தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை, பிள்ளை, தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவறமாட்டோம். இந்தப்படிக்கு இந்தஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு பிரதிக்னை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்யஸ்தர் கை எழுத்திட்டு செப்புப் பட்டையம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம்.'  இங்ஙனம் பிரதிக்னை செய்து இதில் கண்டகொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின், கிராமத்தில் வறுமையாவது அதைக்காட்டிலும் கொடிதாகிய வறுமையச் சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் ஏற்பட்டு, அற்பாயுள், நோய் முதலிய பிசாசுகளின் பயந்தொலைப்பது, பரிபூர்ண  க்ஷேமம் உண்டாகும். ஒருகிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து, பின்னர் அதனை உலகத்தா ரெல்லாரும் கைக்கொண்டு நன்மை யடைவார்கள். தமிழ் நாட்டு மக்களே, இங்ஙனம் உலகத்தில் வறுமையைத்  தீர்க்கும் பெருந்  தர்மத்தில்வழிகாட்டுவோராக நிற்கும் மஹிமை உங்களைச் சார்வதாகுக.



No comments: