பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 1, 2015

39. பேய்க் கூட்டம் - 1


 -
மூன்றா நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, நான் எந்தக் காரணத்தாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராது போனால் அருவியை நினைத்துக் கொண்டு அது சலசலவென்று விழும் ஓசையிலே மானஸிகமாகச் செவியைச் செலுத்திக் கொண்டிருந்தால் சிறிது நேரத்திற்குள் தூக்கம் வந்துவிடுமென்று நான் குழந்தையாயிருந்தபோது ஒரு புஸ்தகத்தில் படித்திருந்தேன். அந்தப்படி அருவியை நினைத்தால் பாதி இரவில் அந்த ஞாபகத்திலிருந்து குளிர் அதிகப்படுகிறதே யொழியத் தூக்கம் வருகிற பாட்டைக் காணோம்.
என்ன காரணம்? குளிர்தான் காரணமென்றெண்ணி நான்கு சாளரங்களையும் சாத்தினேன். பிறகு காற்றோட்டமில்லாத அறையில் படுத்திருக்கக் கூடாதென்று வெள்ளைக்கார சுகாதார சாஸ்திரமும் சற்றேறக் குறைய - அனுபவமும் சொல்லுவதால், ஒரு ஜன்னலைத் திறந்தேன்.
வாசற்பக்கத்தில், என் அறைக்கு நேரே, "காந்தவிளக்கு" (எலெக்ட்ரிக் விளக்கு). அதை மின்னல் விளக்கென்று சொல்வது நியாயம். ஆனால் ஜனங்கள் அதைக் காந்த விளக்கென்று சொல்லுகிறார்கள். ஊரோடொக்க ஓடு என்று தர்ம புத்திரர் சொல்லியது போலே நானும் ஜன வழக்கத்தைப் பெரிதாகக் கொண்டு அதைக் காந்த விளக்கு என்றே சொல்லுகிறேன். மேலும் காந்தம் என்ற சொல் அழகாக இருக்கிறது. காந்தி, கந்தன், காந்தை என்ற பிரயோகங்கள் அதிலே நினைவுக்கு வருகின்றன. வாசலில் காந்த விளக்குப் போட்டிருக்கிறது. அதைச் சுற்றி விளையாடும் பூச்சிக் கூட்டங்கள் என் அறைக்குள்ளே பிரவேசித்து விடுகின்றன. அறைக்குள் விளக்கை அவித்துப் போடுவோமா என்று யோசித்தாலோ, தூக்கமும் வராமல் இருளில் கிடப்பது மிகவும் சிரமம். என் மனம் பல பல விஷயங்களை யோசித்துக்கொண்டிருந்தது. கண்ணை மூடினால் எனக்கு ருஷியாவின் நிலைமை ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அதற்குக் காரணமென்ன தெரியுமா? ஒரு மனுஷ்யன் காலையில் கண்ணை விழிக்கும்போது விழித்தவுடனே, அவன் வேறெந்த வஸ்துவையும் பார்க்கு முன்னே அவன் முன் ஒரு குரங்கைக் கொண்டு நிறுத்தினால் அன்று முழுவதும் அவன் அந்தக் குரங்கை மறப்பது மிகவும் சிரமம். அதுபோலவே மூன்றாம் நாள் காலையில் நான் கண்ணை விழிக்கு முன்பாகவே என் பத்தினி "சுதேசமித்திரன்" பத்திரிகையைத் தலையணைக் கருகேகொண்டு போட்டிருந்தாள். திறந்து பார்த்தேன்...முதலாவது என் கண்ணில் "ருஷியாவில் உள்நாட்டுக் கலகம்; சச்சரவு அதிகரிக்கின்றது - "என்ற பகுதி தென்பட்டது. இதென்னடா விசேஷம் என்று வாசித்துப் பார்த்தேன். இரவில் தூக்கமில்லாது படுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் படித்த விஷயங்களெல்லாம் மற்றொரு முறை மன வீதியிலே உலாவி வரலாயின. மாஸ்கோ நகரத்தில் கலகம் - ஸ்திரீகளும் குழந்தைகளும் உட்பட்ட இருநூறு பேர் கொலையுண்டனர்...துப்பாக்கிப் பிரயோகங்கள் அமிதவாதிகளும், மிதவாதிகளும் பரஸ்பரம் செய்துகொண்டனர்.
ஒதெஸ்ஸா நகரத்தில் செல்வரிடமிருந்து பொருளையெல்லாம் பிடுங்கி ஏழை ஜனங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொடுக்க ஒரு கமிட்டி! முதலிய பல செய்திகள். ருஷியா விஷயம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை. தூக்கம் வரப்போகிற - அல்லது வராமல் இருக்கிற - பாதி இரவு நேரத்தில் மனம் புத்தி சொன்னபடி கேட்கவே கேட்காது. எப்போதும் மனதைக் கட்டியாள்வது சிரமம். படுக்கையிலே படுத்துக் கொண்டு மனதைக் கட்ட விசுவாமித்திரராலேகூட முடியாது. பிறகு எனக்கு ருஷியாக் குடியரசின் தலைவனாகிய லெனின் என்பவனுடைய ஞாபகம் வந்தது. உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. லெனினுக்கு லக்ஷம் பக்கத்திலே!
தள்ளடா! லெனினுமாயிற்று; வெங்காயமுமாயிற்று; தூங்குவோம் என்று நினைத்தால் கொசு வந்து காதில் "ஙொய்" என்று ரீங்காரம் பண்ணுகிறது.
சரி தூக்கம் வருமென்று நினைக்க ஹேதுவில்லை; எழுந்து உட்கார்ந்து ஏதேனும் புஸ்தகம் வாசிப்போமென்று மேஜை மீது வைத்திருந்த விளக்கைப் பெரிதாக்கி எதிரே நாற்காலியில் உட்கார்ந்து மேஜையின் மீது முதலாவது கண்ணுக்குப் புலப்பட்ட புஸ்தகத்தைக் கையிலே எடுத்தேன். அது ஸ்காந்த புராணம். அதிலே நல்ல கட்டம் கண்ணுக்குப்புலப்பட்டது. தினைப்புனத்தில் வள்ளியம்மையைச் சுப்பிரமணிய ஸ்வாமி பல விதங்களில் கெஞ்சியும் பயமுறுத்தியும் பெண்டாகச் செய்து கொண்டார்.
பிறகு புராணம் சொல்லுகிறது: கேளீர் முனிவர்களே' அந்த வள்ளியம்மையானவள் திரும்பித் தனது பரணுக்கு வந்து சேர்ந்தாள். தினைப்புனத்தை அங்கே காத்துக் கொண்டிருந்த ஸகியானவள் வள்ளியை நோக்கி, "ஏனம்மா, வள்ளி, இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டாள்.
"குளத்துக்குப் போய் நீராடி வந்தேன்" என்று வள்ளியம்மை சொன்னாள்,
"நெடுநேரம் குளத்திலே இருந்தாயா? ஸ்நானத்துக்குச் சென்றால் இத்தனை காலம் ஆகிய முகாந்தரமென்ன?" என்று தோழி தொளைத்துத் தொளைத்துக் கேட்கலானாள். அப்போது வள்ளியம்மை சினங்கொண்டு, "ஏதடி பாங்கி, நீ என் மேல் பழி சுமத்தப் பார்க்கிறாயா?" என்றாள்.
அப்போது பாங்கி கண்ணைப் பரக்க விழித்து, "நான் ஒன்றும் சொல்லவில்லையே. தெய்வமே, நீ தானே பழியென்ற சொல்லை எடுத்தாய்?" என்று கூறிக் கலகல வென்று நகைத்தாள்.
வள்ளியம்மை கண்ணிலே நீர்த்துளிகள் பிறந்தன. முருகக் கடவுள் அந்தச் சமயத்தில் வில்லையும், அம்புகளையும் சுமந்து கொண்டு மறுபடி வேட வேஷந் தரித்துக்கொண்டு அவ்விரு பெண்களின் முன்னே வந்து நின்று: "ஏ பெண்களா! என்னம்புகளால் உடம்பெல்லாம் அடிபட்டோடிய மிக உன்னதமான பெரிய யானை யொன்று இந்தப் பக்கத்தில் வரக்கண்டீர்களா?" என்று கேட்டார்.
சகி சொல்லுகிறாள்: "ஐயா, உமது பராக்கிரமத்தை உம்மை யொத்த சூரரிடம் போய்ச் சொல்லும். தனிக் காட்டிலே சிறு கன்னிகைகளிடம் சொல்ல வேண்டாம்" என்றாள்.
ஸ்காந்த புராணம் சொல்லுகிறது; பிறகு கேளீர், முனிவர்களே, அந்தப் பாங்கி தன் மனத்துக்குள் ஆலோசனை செய்து கொண்டதாவது: "இவ்விருவர்களின் விழிகளைப் பார்த்தாயா! இவன் யோக்கியமாக, ஆனை தேட வந்ததையும், இவள் தடாக ஸ்நானம் பண்ணி வந்த செம்மையையும் இதோ இந்தக் கண்கள் நன்கு விளக்குகின்றன! இவள் அவனை விழுங்குவதுபோல் பார்க்கிறாள். அவன் இவளைக் கவிராயன் சந்திரனைப் பார்ப்பதுபோலே பார்க்கிறான். இவ்விருவர் காதலிலே உடம்பட்டனர்!" என்று தோழி நிச்சயித்துக்கொண்டாள்......
இங்ஙனம் நான் மிகவும் ரஸமாகக் கதை வாசித்துக் கொண்டிருக்கையிலே நூற்று முப்பத்தேழு பேய்கள் சேர்ந்து ஏக காலத்திலே கதவை யிடிப்பதுபோல், வாயிற்கதவு படபடா! படபடா! என்று சத்தங் கேட்டது. திடுக்கிட்டெழுந்து சாளர வழியே "யார் கதவைத் தட்டுவது?" என்று உச்ச ஸ்தாயியிலே கேட்டேன். எதிர்ச்சத்தம்:
"நான் தான் வேணு முதலி. என்னுடன் கடோற்கசனும் இன்னும் மூன்று சிநேகிதர்களும்" என்றது. "வேணு முதலியா! இந்த நேரத்தில் - பேய்களெல்லாம் ஸந்தியாவந்தனம் பண்ணப் புறப்படுகிற சமயத்தில் - வந்து கதவைத் தட்டுகிறாயே! உனக்குப் பயித்தியமா?" என்று கேட்டேன். அப்போது வேணு முதலி சொல்லுகிறான், "நான் மாத்திரமில்லை. ஐயரே, நானும் என்னுடன் நான்கு பேரும் இருக்கிறோம். எங்கள் அத்தனை பேருக்கும் பயித்தியம் - நீர் மாத்திரம் புத்திசாலியா? கதவைக் கீழேவந்து திறவும். ஏதோ முக்கியமான காரியம் இருக்கக் கண்டு தான் வந்து கதவைத் தட்டுகிறோம். இல்லாவிட்டால் வருவோமா?" என்றார்.
"காரியத்தைச் சொல்" என்றேன். அப்போது வேணு முதலி: "இங்கிருந்து சொல்ல முடியாது. நீர் தயவு செய்து இறங்கி வாரும்" என்றான். சரி காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது. விதியைத் தள்ளினாலும் தள்ளலாம், வேணு முதலியை விலக்க நம்மால் முடியாது. தவிரவும் நமக்கும் தூக்கம் வரவில்லை. இவன் ஏதோ செய்தி கொணர்ந்திருப்பான். அதைக் கேட்கும்போது, போது போக்க இடமுண்டாகும்" என்று யோசனைப் பண்ணிக் கீழே இறங்கிப் போய்க் கதவைத் திறந்தேன். பளிச்சென்று என் கண்களில் எவனோ துணியை வரிந்து கட்டினான்.
ஒருவன் என் வாய்க்குள்ளே துணியைச் செலுத்தினான். ஒருவன் கையைக் கட்டினான் மற்றொருவன் காலைக் கட்டினான். கண் மூடித் திறக்கு முன்னே என்னைக் குண்டுக் கட்டாகக் கட்டி ஒரு குதிரை வண்டிக்குள் தன் வசமின்றிப் போட்டார்கள். குதிரை வண்டி வாயு வேகமாப் பறக்கிறது. வண்டி ஓடும்போதே என் மனதில் யோசிக்கலானேன்.
"ஐயோ! என்ன செய்வோம்! வேணுமுதலியின் குரலைப் போல் தானேயிருந்தது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டானே! இப்போ தொன்றும் தெரியவில்லையே! கண்களை அடைத்து விட்டார்களே! வாய் பேச வழியில்லையே! நான் அசையவொட்டாமல் நெஞ்சில் அழுத்திக் கொண்டிருக்கிற பாதகன் யாரென்பதும் தெரியவில்லையே! என்ன செய்வோம்! நம்மை எங்கே கொண்டு போகிறார்கள்! - தெய்வமே, நம்மை இவர்கள் கொன்று போடுவார்களோ? என்னவோ தெரியவில்லையே! போனால் போகிறது போ - செத்தால் செத்துப் போவோம்! நாம் செத்தால் காடெல்லாம் எலும்பாயிடுமே? போனால் போகிறது, மனமே, சும்மா இரு. அடடா!

நாம் செத்தால் இந்தக் குழந்தைகளும் பெண்டாட்டியும் எப்படி ஜீவிக்கும்? அடபோ! அதெல்லாம் வீண்கதை! எல்லா உயிர்களையும் தெய்வம் தானே காப்பாற்றுகிறது. நாம் செத்ததனாலே இந்தக் குழந்தைகளுக்கு யாதொரு பிரமாதமும் நேரிட்டு விடாது. ஒரு மாசம் அழும். அப்பால் அப்பா இருந்தார். மொத்தத்திலே நல்லவர் என்று கதை சொல்லிக்கொண்டு செளக்கியமாகவே இருக்கும். நம்முடைய பிதா செத்துப் போனாரே, நாம் உடன்கட்டை ஏறினோமா? மேலும் இவர்கள் நம்மைக் கொல்வார்களென்பதுதான் நிச்சயமா? எங்கேனும் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பார்களோ என்னவோ? ஐயோ! அடைத்து வைத்தால் என்ன செய்வோம்? அட போடா! செய்வதென்ன? சும்மா விருப்போம். நல்லது தானே! சோறு அவன் போடுவான். நமது பாடு மஜா பாட்டுப் பாடிக்கொண்டு யாதொரு வேலையுஞ் செய்யாமல் ஷோக்காகவே இருக்கலாம். சித்திரவதை பண்ணுவார்களோ என்னவோ? ஏனடா, நம்மை அப்படிச் செய்கிறான்? நம்மை யாரும் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். நாம் எவனுக்காவது தீங்கு நினைத்தாலன்றோ, நமக்கொருவன் தீங்கு நினைப்பான். நாம் சும்மா இருக்கும்போது நமக்கேன் பிறர் தீங்கு செய்கின்றார்கள்? அது நடக்காது. நம்மை அனாவசியமாம ஹிம்சிக்க மாட்டார்கள். ......... பின் எதற்காகத்தான் கொண்டு போகிறார்கள்? அதிலும் இப்படி அப்ராக்கிருதமான அவஸ்தைக்குட் படுத்தி நம்மைக் கொண்டு போவார் ஹிம்சைக்கில்லாமல் ஸீமந்த கல்யாணத்துக்கா இப்படி அழைத்துக் கொண்டு போவார்கள்?" என்று பலவிதமா எண்ணினேன். அப்போது திடீரென்று வண்டி நின்றது.



No comments: