'பறையர்' என்பது மரியாதை உள்ள பதம் இல்லை, என்று கருதி இக்காலத்தில்
சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர் என்ற
சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாடில்
இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்
போகும்போது ஜய பேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்தபடியால்
இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. 'இது குற்றமுள்ள பதமில்லை' யென்பதற்கு ருஜூ வேண்டுமானால்,
மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு 'பறையர்மஹாசபை' என்று பெயர்
வைத்திருப்பதைக் காண்க. அவர்களை மிருகங்களைப் போல் நடத்துவது குற்றமேயொழிய பறையர் என்று
சொல்லுவது குற்றமில்லை.
என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை
அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத்தான் நடத்துகிறார்கள்.
எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத்
தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா? நந்தனாரையும்,
திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறையருக்கு நியாயம் செலுத்த
வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து
''பட்லர்''களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேச்சு.
அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு.
கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு.
நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து
தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே!
நாட்டுக் கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல
பயன் தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்.
''பறையரை'', ''பரை'' (அதாவது ஆதிசக்தி முத்துமாரி) யின் மக்களென்றும்
பொருள் சொல்வதுண்டு. நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நேரே நடத்த
வேண்டாமா? அது சரிதான்; இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள்.
சென்னைப்பட்டணத்திலே நாலுபட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்த போதிலும், நாட்டிலுள்ள
பறையர் எல்லாரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எனக்கும் ஒரு வள்ளுவப்
பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக்கட்டிக் கொடுத்தேன்.
அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அவன் காத்தவராயசாமி விஷயமாகச் சில பாட்டுக்கள்
சொன்னான். காத்தவராயன் வேதத்திலேயே சொல்லிய காற்று வாயுக் கடவுளே யன்றி வேறில்லை யென்று
அந்தப் பாட்டுக்களினாலேயே தெரிந்து கொண்டேன். முத்துமாரி என்ற பராசக்தியுடைய பிள்ளைதான்
காத்தவராயன். பறையர்களும் நம்மைப் போலவே வைதிக தேவர்களைப் பூஜிக்கிறார்கள். மற்றொன்று
சொல்லுகிறேன்.
"அங்க மெல்லாங் குறைந்தழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பராயின் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே."
பறையர் ஹிந்துக்கள். அவர்களைக் கைதூக்கி விட்டு மேல் நிலைக்குக் கொண்டு
வருதல் நம்முடைய தொழில்.
பஞ்சமர்
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Wednesday, May 27, 2015
72. சமூகம் - பறையர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment