பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 31, 2015

87. சமூகம் - நானா விஷயங்கள்


                                         மிருகங்களை நாகரீகப் படுத்தும் வழி

              "ஸர்க்கஸ்" கம்பெனிகளிலே புலி, சிங்கம், யானை, கரடி முதலியவைகளைப் பூனைக்குட்டிகள் போலே பழக்கி வைத்து விடுகிறார்கள். "கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்; ஒரு சிங்க முதுகின் மேல் கொள்ளலாம்; கட்செவி* (*பாம்பு) யெடுத்தாட்டலாம்" என்று தாயுமானவரும் சொல்லியிருக்கிறார். மனுஷ்ய சரித்திரம் எழுதப்படத் தொடங்கிய காலத்திற்கு முன்னே, மனிதருக்கிடையே எழுத்துத் தொழில் பழக்கப்படத் தொடங்கிய காலத்திற்கும் வெகு காலத்திற்கு முன்னரே, மனிதர் மற்ற மிருகங்களுடன் போராடிப் போராடி, வென்று வென்று, தம் மேன்மையை நிலைநிறுத்திக் கொண்டு விட்டனர். காட்டில் மனிதன் கிழங்குகள் பறித்துண்ணப் போனவிடத்தில் தனியாகவும், மற்ற மனிதருடனும், தனிப்பட்ட அல்லது கூட்டமாக வந்து நின்ற காட்டுப் பன்றிகளுடன் போராடி அவற்றைச் சில சமயங்களில் வென்றும், சில சமயங்களில் அவற்றாலே கொல்லப்பட்டு மடிந்தும் வந்து கொண்டிருந்தான்.

            கடைசியாகக் காட்டுப்பன்றிக் குலம் தோல்வியை அங்கீகரித்துக் கொண்டது. இங்ஙனமே, கணக்கற்ற, கணக்கற்ற, கணக்கற்ற துஷ்ட மிருகங்களுடனும் பாம்புகளுடனும் போராடிப்போராடி, மண்ணுலகத்தின் மீது, மனிதனேஅரசனாகவும் மற்றைய ஐந்துக்க ளெல்லாம் இங்கு வாழ்வதற்கு இயற்கை உரிமை இல்லாத (அதாவது,''மனிதக் கூட்டத்தார் இஷ்டப்பட்டு உயிர் தரித்திருக்க இடங்கொடுத்தால் உயிர் வாழலாம்; இல்லாவிட்டால் ஜீவித்திருக்கும் பாத்யதை அவற்றுக்கில்லை  யென்று மஹா நீசத் தண்டனை மனித ஜாதியால் விதிக்கப்பெற்ற) அடிமைக் குடிகளாகவும் ஏற்படும் நிலைமை யுண்டாயிற்று. இவற்றுள்ளே மனிதனைக் கொல்லக்கூடிய வலிமை படைத்தன சில குலங்கள். மனிதனாற் கொல்லப்படத்தக்க மனிதனைக் காட்டிலும் பலம் குறைந்த ஐந்துக் குலங்கள் கணக்கற்றன. கணக்கற்றன, கணக்கற்றன, பல பல, பற்பல, பல பல, பல பல.

            இத்தனை ஜந்துக்களையும் மனிதன் தந்திரத்தால் அடிமைப்படுத்தி விட்டான். தீயின் பலத்தால் மனிதன் மிருகங்களை ஜயித்தான். கை பலத்தால் ஆட்டைக்கொன்றான். வில்லின் பலத்தால் புலியைக் கொன்றான். தீயின் பலத்தால் யானையையும் சிங்கத்தையும் வென்றான். முன்னொரு காலத்தில் சிங்கக் குலத்துக்கும் மனிதக் குலத்துக்கும் கொடிய போராட்டம் நிகழ்ந்தது. சிங்கக்குலம் தோற்றுவிட்டது. சிங்கத்தின் புஜபலத்தையும் வீரத் தன்மையையும் மனிதன் தீயின் சக்தியால் வென்றான். இயற்கை தன் ரஹஸ்ய சக்திகளில் ஒன்றை மனிதனுடைய தந்திரத்திற்கு வெளிப்படுத்திற்று. இத்தனை கோடி, கோடி,கோடி, மிருகங்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் சேர்ந்து, பூமண்டலத்தில் ஜீவலோகம் உற்பத்தியான கோடானு கோடி வருடங்களுக்கு முன்பு முதல் இன்றுவரை, தீ கண்டுபிடிக்கும் தந்திரம் தெரியாமற் போய்விட்டது.

               இரண்டு சிக்கிமுக்கிக் கல்-துண்டுகளை ஒன்றுக் கொன்று தட்டினால் தீயுண்டாக்கி விடலாம். இத்தனை கோடானுகோடி அடிமை ஜந்துக்களுக்கும் இன்று வரை இந்த சாதாரண யுக்தி புலப்படாமல் போனது வியப்புக்குரிய செய்தி யன்றோ? இதுபற்றியே, முற்கால ரிஷிகள் தீயை முதற் கடவுளாகப் போற்றினர் போலும். மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியையும் பூமண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப் படுத்தவில்லை. குடிகளைப் பட்டினி போட்டுவிட்டு தான் தீர்வை கறந்து வாங்கித் தன் வயிற்றில்அஜீரணமுறப் புதைக்கும் கொடுங் கோலரசனைப் போல், தன் குடிகளாகிய மிருக பக்ஷி கீடங்களில் பலவற்றைத் தின்று பிழைக்கும் ஈன வழக்கத்தைக்கைக் கொண்டிருக் கிறான். மனிதன் செய்யும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாகப் புலப்பட்டிருக்கிறது.

மனிதன் செய்யக்கூடிய பாபங்கள் அனைத்திலும்இதுவே மிகக் கொடிய பாபம் என்று என் புத்திக்கு ஐயந்திரிபற விளங்கியிருக்கிறது.

மிருகங்களை நமக்கு ஸகாக்களாக வைத்துக்கொண்டால், அவற்றால் எண்ணிறந்த பயன்கள் எய்தலாம். அவற்றை நாம் அடிமைகள் ஆக்கிவிட்டோம். ஒரு ராஜாதன் குடிகளை அடிமைகள் போலே நடத்துகிறான். அவர்களுக்கு நல்ல சோறு கிடைக்காமல் இருக்கும் போது தீர்வையை உறிஞ்சுகிறான். அவர்களுக்கு ஸ்வதந்திரம் கொடுக்கவில்லை. நாகரீகம் கொடுக்க விரும்பவில்லை. மற்றொரு ராஜா தன் குடிகளைத் தனக்கு ஸமானமான அந்தஸ்துடையவர்களாக மதிக்கிறான். கொஞ்சமாகத் தீர்வையை வாங்கிக் கொண்டு, குடிகளுக்கு சோற்றுப் பயமில்லாமலும் பஞ்ச மரணங்கள் இல்லாமலும் காப்பாற்றுகிறான். அவர்களுக்கு எல்லாவித மனுஷ்ய ஸ்வதந்திரங்களும் ஜீவாதார உரிமைகளும் கொடுத்து மேன்மைப்படுத்துகிறான். கல்வி, காட்சி முதலிய பல்வகை பயிற்சிகளாலும் அவர்களை எல்லா விதங்களிலும் எப்போதும் நாகரீகப்படுத்த விரும்புகிறான்.

முதற்சொன்ன ராஜாவுக்கு ஏதேனும் ஆபத்துக் காலம் நேரிட்டால், அப்போது அவனுடைய குடிகள் எல்லா விதத்திலும் பயன்பட மாட்டார்கள். அந்த ஆபத்தை ஸகல விதங்களிலும் மிகுதிப் படுத்த முயற்சி செய்வார்கள். இரண்டாவதிற் சொன்ன ராஜா, தன் குடிகளை நடத்தும் நேர்மையினாலேயே மிகவும் பயன் பொருந்தியவனாய், எவ்வித ஆபத்திற்கும் உட்படாமலே நல் வாழ்வு வாழ்ந்திருப்பான்.

            மனிதன், மிருகங்களாகிய தன் தோலிவியுற்ற குடிகளின் விஷயத்தில், இரண்டாவது சொன்ன ராஜாவைப் போல் நடந்து கொள்ளாமற் முதற் சொன்ன ராஜாவைப்போல் நடந்து கொண்டு வருகிறான். மிருகங்களும் பரஸ்பரம் தின்னுகின்றன என்பதைச் சில மனிதர் தாம் செய்யும் மாம்ஸ போஜனத்திற்கு ஆதாரமாகச் சொல்கிறார்கள். "யதா ராஜா, ததா பிரஜா". அரசன் எப்படியோ, அப்படியே குடிகளும் அரசனே குடிகளைத் தின்றால், குடிகள் தம்மால் இயன்றவரை கொன்று தின்னாமல் விடுவார்களா?

            மிருகங்கள் ஸர்க்கஸ் கம்பெனியில் பழக்கப்பட்டு வரும் மாதிரியைப் பார்த்தால், அவற்றின் உதவியைக் கொண்டு நாம் எத்தனையோ புதிய புதிய வழிகளில் காரிய ஸாதனை செய்து கொள்ள வழிகள் கண்டுபிடிக்கலாம் என்பது விளங்குகிறது.

            அவற்றைத் துணைவர்போல நடத்தி மிகவும் வலிய வாழ்வு வாழ்வீர்களா அன்றி, அவற்றை அடிமைகளாக நடத்தி வருத்துவீர்களா? மனிதர்களே, உங்களுக்கு எந்த வழி ஸம்மதம்?

            உண்மையாக, அவற்றை நாகரிகப்படுத்தி அவற்றால் வாழ்வைப் பல துறைகளிலும் அதிகப் பயன்படச் செய்ய விரும்புவீர்களேயானால், அதற்கு ஓர் மார்க்கம் தான் இருக்கிறது. அதாவது அன்பு.


No comments: