பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 8, 2015

24. மாதர் - பெண் விடுதலை (1)


                 இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக்கொடுத்தாய்விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்திவந்தது. 'அதைப்பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில்எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடையசினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்''எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில்"எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினிவேதவல்லி அம்மை வந்தார்.

               வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம்தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார் உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமது பத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும் சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்து வருகிறார். வேதவல்லிக்கு அவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம், யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம் ஒரு கிழவி பார்த்துக் கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம்,பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக் கூட்டம் முதலியவற்றிலே காலங்கழித்து வருகிறார்.

              வேதவல்லி வரும்போது நான் ராமராயர்முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்கு சங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச்சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலி கொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டு வரச் சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து "ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சிசெய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்றுசொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகு ஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்'' வலைக்குள் மாட்டிக்கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடைய தேசத்து வீராதி வீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஷோக்ஷோக்! இரட்டை ஷோக்!' என்றாள்.

            ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது.'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள் பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.

                ''இங்கிலாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது'' என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில் வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக்கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின் பேரிலே வைத்துவிட்டு தலைக்குமேலே உத்தரத்தைப் பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச்சமயத்தில் ஜலம் கொண்டு கொடுத்தது.வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். ''என்ன  ராமராயரே,! மோட்டைப் பார்க்கிறீரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம் ஸத்யம் லோகம்மித்யை ஆதலால், விதவான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பதே மேன்மை' என்றெழுதி யிருக்கிறதா?''"என்று கேட்டாள்.

ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது.கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக் கொண்டார். தாடியை இரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.

ஸ்ரீீமதி ஆன்னி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலேதலையிட்டு சுதேசியமே தாரக மென்றும், வந்தேமாதரம் ஒன்றே ஜீவமந்திரம் என்றும் பேசத்தலைப்பட்டது மேற்படி ராமராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும்; லௌகிக விஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம்.

வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச்சொல்லுகிறார்:-  'எடுத்ததற்கெல்லாம் ஆன்னி பெஸண்ட்"சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக் கத்தி கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் சுயராஜ்யம் நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக்கணிக்கிறீர்! ஐயோ!கஷ்டம்! புருஷ ஜன்மம்!  ஸ்திரீகளுக்குள்ள திறமையிலே நாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம். அதனால் சரீர உறுதி அதிகம் என்று ருஜு வாக்கியாயிற்று; புத்தி அதிகமென்பதுந்தான்.  ராமாயணத்தில் சீதை பொய் மானை மெய் மான் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தாள் என்றும் எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்து கொண்டு வாயில் கொழுக்கட்டையைப் போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை' என்று வேதவல்லிசொன்னாள்.

'ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்? என்றுராமராயர் சொன்னார்.

வேதவல்லி யம்மை சொன்னார்:' அன்னிபெஸண்டுக்கு ஸமானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்த அம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?'

                இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசிய போதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்றுதீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லிஅம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-

''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து"பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலை ஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப் புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில்வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப்பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் அன்னி  பெஸண்டுக்கு ஸமானமாக வேலைசெய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்தவிசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும்தான் உபயோகப் படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதி தைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமை இத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள்ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள்.

ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது. ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர்மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக்கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்கமாட்டார்கள். ஆதலால், காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம். எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான் போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடி இந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண்பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப்பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.

ராமராயர்:- 'வேறு விஷயம் பேசுவோம்' என்றார். தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான்இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லை யென்றும், இவர் சும்மாயிருக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில்செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.

நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும்கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான்இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன். 

ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும்அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகு மறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்.


No comments: