பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 30, 2015

86. சமூகம் - குரு


                                                                  
              இக்காலத்தில், பிராமணர் தமக்கு சாஸ்திரங்களிற் சொல்லப்பட்ட ஆறு தொழில்களை மறந்து பெரும்பாலும் வேறு தொழில் செய்து வருகிறார்கள். இருந்தாலும், ஐரோப்பா முதலிய இதர தேசத்துக் குருக்களைக் காட்டிலும், நமது தேசத்துப் பிராமணர்கள் சிறந்தவர்கள் என்று ''அமிர்தபஜார்'' பத்திரிகை சொல்லுகிறது. ''புரோஹிதத் தொழிலும் சாஸ்திரப் படிப்பும் விடாமலிருக்கும் பிராமணர் இப்போது கூடப் பல இடங்களில் விசாலப் பயிற்சியும், அதனால் உண்டாகும் பெருமைகளும் இல்லாதிருந்த போதிலும், நல்லொழுக்கம் வைதீக புத்தி முதலியவற்றில் பிறதேசத்து குருக்களிலும் மேல்'' என்பது அந்தப் பத்திரிகையின் கொள்கை. இது சம்பந்தமாக எழுதி வருகையில், மேற்படி பத்திரிகை பின்வரும் கதையைச் சொல்லுகிறது.

            ஐம்பதறுபது வருஷங்களுக்கு முன்பு நவத்வீபத்தில் ராமநாதர் என்ற தர்க்க சாஸ்திரி இருந்தார். மேற்படி ராமநாத சாஸ்திரியிடம் கிருஷ்ண நகரத்து மஹாராஜா பூதானம் வாங்கிக் கொள்ளும்படி வேண்டினார். அதற்கு சாஸ்திரி சொன்னாராம்:- என் குடும்ப ஸம்ரக்ஷணைக்கு வேண்டிய தானியம்என்னுடைய கழனியிலிருந்து வருகிறது. கொல்லைப் புளிய மரத்தின் பசுந்தழைகளைக் கொண்டு எனது பத்தினி ருசியான குழம்பு வைக்கப் படித்திருக்கிறாள். உன்னிடமிருந்து நான் பூதானம் வாங்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு வேண்டிய செல்வமெல்லாம்என்னுடைய வீட்டில் இருக்கிறது? என்று,  மேற்படி கதை நம்பத்தக்கது. இப்போது சென்னப்பட்டணத்தில் பெரிய தமிழ்ப் பண்டிதராக விளங்கும் ஒரு வேதியர், சில வருஷங்களுக்கு முன்பு, தென்னாட்டு ஜமீன்தார் ஒருவரிடம், தாம் பூதானம் வாங்கிக் கொள்ள விரும்பவில்லை யென்று சொல்லிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். விதி விலக்கான சிற்சில விசேஷமனிதரைத் தவிர, மற்றப்படி பணவிருப்பம் எல்லாருக்கு முண்டு. ஆனாலும், லௌகிக ஆசை விஷயத்தில், ஐரோப்பியப் புரோகிதர், குருக்கள் முதலியவர்களைக் காட்டிலும், நமது தேசத்து''ஐயன்மாரை'' கொஞ்சம் நேர்மையுடையவர் களாகவேநினைக்கவேண்டும். காசுக்கும் அதிகாரத்திற்கும் எல்லாருந்தான் வாயைப் பிளக்கிறார்கள். ஆனாலும்,ரோமபுரியில் கிறிஸ்தவக் குருக்கள் ஐரோப்பா எல்லை முழுதிலும் பூமியாட்சி விவகாரங்களில் தலையிட்டு, ராஜாக்களுடன் கூடியும் பகைத்தும்  கலகங்கள் ஏற்பட்டுத்தியது போல் நமது தேசத்துப் புரோஹிதரும் குருக்களும் செய்ததில்லை. தமிழ் நாட்டில் வன்னியரும் மறவரும், நாயகரும் துருக்கரும், அரசும் அதிகாரமும் செலுத்துகையில், குருக்கள் தெய்வ பக்தியை மறந்து பணத்துக்காகச் சூழ்ச்சிகள் செய்யவில்லை. இக்காலத்திலே கூட, ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவப் பாதிரிக்குக் கிடைக்கும் வரிம்படியில் நூறில் ஒரு பங்குகூட அதே தொழில் செய்யும் புரோகிதப் பிராமணருக்குக் கிடைப்பதில்லை. இதையெல்லாம் உத்தேசித்து நான் 'அமிர்தபஜார்' பத்திரிகையின் கருத்தை ஒப்புக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment

You can give your comments here