பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 27, 2017

“சாலபஞ்சிகா”

பெங்களூரில் வசிக்கும் மோகினியாட்டக் கலைஞர் திருமதி ஸ்வப்னா ராஜேந்திரகுமார் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஆடிய ஓரங்க நாட்டிய நாடகத்தின் கதை சுவாரசியமாக இருந்தது. அதனை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கதையின் பெயர் “சாலபஞ்சிகா”.



சாலபஞ்சிகா” என்பது நாம் ஆலயங்களிலும் சிற்பங்களிலும் பார்க்கிறோமல்லவா “பாவை விளக்கு” ஒரு பெண் கையில் ஒரு தீபத்தை ஏந்திய வண்ணம் இருக்குமே அதுதான் இதன் பொருள்.

இங்கு “சாலபஞ்சிகா” என சொல்லப்படும் இந்த காப்பியம் கேரள மாநிலத்திலுள்ள ஒரு இராமர் ஆலயத்தைக் குறித்த ஒரு புராண கதையின் அடிப்படையில் இயற்றப்பட்டது.
நடனம் அல்லது நாட்டியம் பண்டைய நாட்களில் தேவதாசியர் எனப்படும் பிரிவினர் இறைவனுக்கு உளப்பூர்வமாக செய்து வந்த ஆடல் வழிபாடு. ஒரு நாள் மேற்படி அந்த தேவதாசி ஆலயத்தில் தன்னுடைய நாட்டியத்தை முடித்துக் கொண்டு திரும்புகையில் அங்கிருந்த ஒரு பெண் கற்சிலையைப் பார்த்து “ஓ அழகிய இள நங்கையே! நானும் பல காலமாக இறைவனுக்கு பக்தி பூர்வமான இறையுணர்வுடன் நடன வழிபாடு செய்து வருகிறேன். பல உணர்வு பூர்வமான பாவங்களை உணர்ந்த எனக்கு உன் முகபாவம் புதுமையாக இருக்கிறதே! நீ எந்த அசைவுமின்றி அமைதியாக, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத பாவத்தில் இருக்கிறாயே! எனினும் நீ ஏதோவொன்றை எனக்குச் சொல்ல விரும்புவது தெரிகிறது. அதை என்னவென்று எனக்குச் சொல்!” என்கிறாள்.
அந்தக் கற்சிலை மெல்லத் தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறது. அது சொல்லிற்று: “பெண்ணே! பாரத பூமி பெண்ணின் பெருமையைப் போற்றி வணங்கி பாதுகாத்து வருகின்ற பெருமைக்குரிய தேசம். பெண்ணின் பெருமையைப் போற்றும் இந்த பெருமைக்குரிய பூமியில் ஒரு பத்தினிப் பெண் அகல்யா என்பார் தன் கணவர் கெளதம முனிவரின் சாபத்துக்கு ஆளாகிக் கல்லாக ஆகிப்போனாள்.

தேவேந்திரனான இந்திரனுக்கு இந்த முனிபத்தினியான அகல்யாவின் மீது ஒரு கண். ஒரு நாள் இருள் பிரியாத விடியற்காலை நேரம். இந்திரன் கெளதமரின் ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து பொழுது விடிந்துவிட்டதை அறிவிக்கும் ஒரு சேவலைப் போல கூவினான். சேவலின் கூவலைக் கேட்ட கெளதம முனிவர் பொழுது விடிந்து விட்டது போலுமென்றெண்ணிக் கொண்டு எழுந்து நதிக்குச் சென்று நீராடுவதற்குப் புறப்பட்டார்.  இதனைப் பயன்படுத்திக் கொண்டு இந்திரன் கெளதம முனிவரைப் போல வேடம் பூண்டு அகல்யாவை நெருங்கினான். இந்திரனின் இந்த சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அகல்யா கெளதமர் வேடத்தில் வந்திருக்கும் அவனைத் தன் கணவன் என்று நினைத்து அந்தரங்கமாக அவனுடைய சல்லாபங்களுக்கு இணங்கினாள். ஆற்றங்கரைக்கு ஸ்நானம் செய்யச் சென்ற கெளதம முனிவர் அப்போது பொழுது விடியவில்லை என்பதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அவர் உடனே வேகமாகத் தன் ஆசிரமத்துக்குத் திரும்பினார். அங்கே தன் பத்தினி அகல்யா இந்திரனின் ஆலிங்கனத்தில் தன்னை மறந்து இருப்பதைக் கண்டார். ஆத்திரமும் கோபமுமாக முனிவர் இந்திரனுக்கும், தன் மனைவிக்கும் சாபமிட்டார். அவர் இட்ட சாபத்தின் விளைவாக தான் (அகல்யா) கல்லாக மாற சாபமிடப்பட்டதை உணர்ந்தாள்.

நான் அவ்விடத்துக்கு அருகிலேயே பல யுகங்களாக பாறையாகக் கிடந்தேன். அங்கு அந்த ஆசிரமத்தில் அகல்யாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து என்னுடைய அந்தரங்க ஆன்மா ஆடிப்போனது. சாபத்தால் கல்லாக மாற சபிக்கப்பட்ட அந்த புண்ணியவதிக்கு நான் உடம்பாக ஆகிப்போனேன்.

எங்கள் ஒருங்கிணைப்பு காலம் காலமாக இருந்து வந்தது. பாறையாக இருந்த என்னுள் அகல்யா தன்னுடைய பெண்மையின் உணர்வுகளை விதைத்து விட்டாள். அதற்குப் பதிலாக என்னுடைய பாறையின் உணர்வற்ற தன்மையைத் தன்னுள் ஏற்றுக் கொண்டு விட்டாள்.

காலம் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு நாள், அயோத்தி இராமன் வந்து சேர்ந்தார். அவருடைய பாததூளி என்மேல் பட்ட மாத்திரத்தில் என்னுள் ஆழ்ந்திருந்த அகல்யா விடுபட்டு அசைவற்ற மனத்துடன் அகன்று சென்றாள். அந்த அதிசயச் செயலுக்குக் காரணமான இராமபிரானும், அகல்யாவும் இன்றளவும் மக்களால் போற்றப்படுகின்றார்கள்.

ஆனால் பெண் உள்ளத்தை உள்வாங்கிக் கொண்ட நான் மட்டும் ஒரு கல்லாகவே என் உள்ளுணர்வுகளை வெளிக்காட்ட முடியாமல் இருந்து கொண்டிருந்தேன்.

பாறையாக் கிடந்த என் மீது ஒரு நாள் சிற்பி ஒருவனின் பார்வை பட்டது. அவன் ஒரு சாதாரண சிற்பி அல்ல. என் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது அவனால். அவன் கைவண்ணத்தில் நான் “சாலபஞ்சிகா”வாக, சிலையாக வடிக்கப்பட்டேன். ஆண்மையுடைய அந்த அற்புத சிற்பியின் ஸ்பரிசங்கள் என் மீது படப்பட நானும் அவன் வயப்பட்டு விட்டேன். என் நெற்றியில் குங்குமத்தை இடவந்த அவன் என் கண்களை ஊடுறுவிப் பார்த்து நின்றுவிட்டுப் பின் அங்கிருந்து சென்று விட்டான்.

கல்லாக இருந்த எனக்கு பெண்வடிவம் கொடுத்து சிலையாக வடித்த அவனுக்கு எனக்கு உயிரூட்டிப் பார்த்துவிடத் துடிப்பது தெரிந்தது.

“அருமை நாட்டிய மணியே! நீயும் பல காலமாக இராமபிரானை வணங்கி நடன ஆராதனை செய்து வருகிறாய். அந்த இராமனுடைய சிலையும் இன்னொரு சிற்பியால் உருவாக்கப்பட்டது. உன்னால் அந்த இறைவனிடம் உரையாட முடிந்தால் எனக்காக அவரிடம் கேள், என்னை உருவமைத்த அந்த சிற்பி திரும்ப வருவானா என்று. அவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்பதைத் தவிர எனக்கு வேறு ஆசை எதுவும் கிடையாது.”

இந்த வேண்டுகோளால் மனமிரங்கிய அந்த தேவதாசி பிற நடனமாதர்களுடன் சேர்ந்து “சாலபஞ்சிகா” எனும் பெண் சிற்பம் எதற்காகக் காத்திருக்கிறாள் என்பதைச் சொல்லி அருள் புரிந்திட இராமபிரானிடம் வேண்டினர்.


இந்த கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் என்னுடைய இந்த மோகினியாட்டக் கதையில் பாத்திரங்களாக என் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுவர். கதையோட்டத்தின் கருவினைப் புரிந்து கொண்டு பார்த்தால் இந்த நடனத்தின் மூலம் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். இனி இதோ உங்கள் முன் அந்த கதா பாத்திரங்கள்.