பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, December 28, 2015

காலபைரவாஷ்டகம்தேவராஜ சேவ்யமான பாவங்கிரி பங்கஜம்
வ்யாலயக்ஞ சுத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.  1.


1.   காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில் தேவேந்திரன் வந்து பணிந்து வணங்குகிறான்;  நீ அணிகின்ற யக்ஞோபவீதமோ நச்சினைக் கக்கிடும் அரவம் அன்றோ; நினது சடாமுடியை அலங்கரிப்பதோ பாலொளிவீசும் முழுநிலவு; அருட் பார்வையை அள்ளி வீசும் நினது ஒளிவீசும் நயனங்கள்; நாரத முனிவரும் ஏனைய இசை வாணர்களும் நயம்பட இசைக்கும் புகழுடையாய்; திக்குகள் அனைத்தையும், உடையாய் அணிந்த எழிலுறு மேனியனே! நின்னைப் பாடுகின்றேன்.

பானுகோட்டி பாஸ்வரம், பாவப்திதார கம்பரம்
நீலகண்ட மீப்சிதர்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மாம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.  2.


1.   காசி நகராளும் காலபைரவா! நின் புகழை என் நாவால் உரக்கப் பாடுகின்றேன். கோடி சூரியர் நாடிய ஒளிக்கதிர் வீசிடும் ஞாயிறே; மீண்டும் மீண்டும் வந்து பிறக்கும் கேட்டினை அழிப்பாய்; பிரபஞ்சத்தின் அதிபதியே நீலகண்டா! எங்கள் பெற்றியைப் போற்றி வரம் தரும் கருணையே; முக்கண் உடைய மூலப் பரம்பொருளே; காலனையழித்த கருணை வள்ளலே; தாமரைக் கண்ணா; அழிவற்ற ஆயுதம் கரங்களில் தாங்கிய கருணையே நீதான் நிலையானவன்.


சூலதாங்க பாசதண்ட பாணிமதி காரணம்
ஷ்யாமகாய மாதிதேவ மாக்ஷரம் நிராமயம்
பீமவிக்ர மம்ப்ரபும் விசித்ரதாண்ட வப்ப்ரியம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.    3.


1.   காசி நகரையாளும் காலபைரவா நின் புகழினைப் பாடுகின்றேன். கடிந்திடும் கோடரி கைக்கொண்டு, பாசக் கயிற்றினை பற்றிய கையுடன், இப்புவனந்தனை படைத்துக் காத்திடும் பேரருள் கருணையே! சாம்பல் பூசிய கவின்மிகு உடலுடன், தேவாதி தேவா தேவருள் தலைமையே! அழிவினை அழிக்கும் அழியாச் செல்வமே; நோய்நொடிதனையே நெருங்காமல் செய்து உடல்நலம் காக்கும் உத்தமத் தலைவா! வலிமையனைத்தும் ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்து, சிற்சபைதனிலே தாண்டவமாடும் தனிப்பெரும் இறைவா!


புக்திமுக்தி தாயகம் ப்ரசாஷ்தசாரு விக்ரகம்
பக்தவத்சலம் சிவம், சமஸ்தலோக விக்ரகம்
வினிக்வனன் மனோக்னஹேம கிண்கிணிலா சத்கடீம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.      4.


1.   காசி நகராளும் காலபைரவரைப் புகழ்வேன்! மனதில் தோன்றும் விருப்புகளையும், அதனை அடையும் மார்க்கங்களையும் காட்டி அருள்புரியும் தேவா! மனதை கொள்ளை கொள்ளும் எழிலுடை தோற்றமுடையாய்! பணிவோர் தம்மை பரவசப்படுத்தும் கருணைக் கடலே! நிரந்தரப் பொருளே! பல்லிடந்தோறும் பற்பல தோற்றம் பயின்றிடும் தேவே! இடையில் ஒளியுமிழ் பொன்னணியுடனே மணிகள் ஒலிக்க நடமிடும் இறைவா!


தர்மசேது பாலகம்த்வா தர்மமார்க நாசகம்
கர்மபாச மோசகம் சுஷர்மதாய கம்விபும்
ஸ்வர்ணவர்ண சேஷபாச ஷோபிதாங்க மண்டலம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.      5.


1.   காசி நகரில் கருணை வழங்கும் காலபைரவர் புகழினை இசைப்பேன். நேர்மை வழிதனை நிலைத்திடச் செய்வோன்; அறவழி பிறள்வோரை அழித்திடும் காலன்; கர்ம வினைகள் விளைத்திடும் செயல்கள் அனைத்தையும் அழித்துக் காப்போன்; அளிக்கும் நலன்களை அடக்கமோடு அளிப்போன்; அற்புதத்திலும் அற்புதமானவன்; அணியும் அணிகலன் அனைத்தும் ஒளிருகின்றன பொன்னின் நிறத்தில். 


ரத்னபாது காபிரபாபி ராமபாத யுக்மகம்
நித்யமத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யுதர்ப நாசனம் கரலதம்ஷ்ட்ர மோக்ஷணம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.      6.


1.   காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன்; பொன்னாலான காலணி இரண்டும் மின்னிடும் கால்களை யுடையோன்; நிரந்தரமானவன்; ஈடில்லை இவருக்கு மாற்றார் எவரும்; விரும்பியதனைத்தையும் விரைந்து அருள்பவன்; தனக்கென விருப்பம் எதுவும் இலாதவன்; இறப்பையும் வென்ற மேலோனாவன்; ஆன்ம விடுதலையைத் தன் பற்களால் தருபவன்.


அட்டஹாச பின்னபத்ம ஜாண்டகோச சந்ததீம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ர சாசனம்
அஷ்டசித்தி தாயகம் கபால மாலிகாதரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.      7.


1.   காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன். படைப்புத் தேவன் தாமரைச் செல்வன் பிரம்மன் படைத்த அனைத்தையும் தன் கர்ஜனையால் மட்டுமே உடைக்கும் ஆற்றல் படைத்தோன்; பாவங்கள் அனைத்தையும் தன் கருணைப் பார்வையால் கருகிடச் செய்வோன்; ஆள்பவரில் இவனே ஆண்மையாளன் எனும் பெருமையைப் பெற்றோன்; அட்டாங்க சித்தி* அருளும் பெரியோன்; கபால மாலையை அணிந்திடும் பெற்றியன்.

(*அட்டாங்க சித்தி என்பது: அனிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா, ஈசத்வா, வசித்வா எனும் சித்திகளாம்)பூதசங்க நாயகம் விஷாலகீர்த்தி தாயகம்
கேசிவாஸ லோகபுண்ய பாபஷோப கம்விபும்
நீதிமார்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.      8.


1.   காசி நகராளும் கற்பகமாம் காலபைரவரைப் பாடுகின்றேன். பேய்க்கணங்கள் அனைத்துக்கும் அதிபதியானவனே! அளவற்ற புகழினை அள்ளித் தெளிப்பவனே! காசியில் வாழ்வோர் பிணிகளை நீக்கி, பாவங்கள் போக்கி பவித்திரமாய்ச் செய்வோனே! ஒளிமயமானவனே! நல்வழி காட்டிடும் நலம் தரும் நாயகனே! காலத்தை வென்ற நிரந்தரமானவனே! பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து வழிநடத்தும் வல்லோனே! நின் பாதம் பணிகின்றேன்.


காலபைர வாஷ்டகம் படந்தியே மனோஹரம்
ஞானமுக்தி சாதனம் விசித்ரபுண்ய வர்த்தனம்
சோகமோக தைன்யலோப கோபதாப நாசனம்
தேப்ரயந்தி காலபைர வங்க்ரிசந்நி திம்த்ருவம்.  9. 


காலபைரவரின் புகழ்பாடும் இவ்வெட்டு வசீகரப் பதிவினையும் படித்து ஆன்ம விடுதலை எனும் அரும்பொருளை உணர்ந்தோர் எல்லோரும், பாவ வழி மறந்து நற்செயல்கள் புரிந்து, துக்கம் அழிந்து, பற்றும் பாசமும் ஒழித்து, ஆசையும், கோபமும் துறந்து பரம்பொருளாம் காலபைரவரின் பாதரவிந்தங்களை அடைவர் என்பது திண்ணம்.

Thursday, December 24, 2015

அன்னதான சிவன்

திருக்குடந்தை மாநகரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் "மகாமகம்" விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் ஒரு மலர் வெளிக்கொணர விருப்பதாகவும் அதற்கு கட்டுரைகள் அனுப்ப விரும்புவோர் அனுப்பலாம் என்று ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து அது "தினமணி" இதழில் இரு நாட்கள் வந்தன. அந்த முகவரிக்கு நான் அனுப்பிய கட்டுரை, அப்படியொரு மின்னஞ்சல் முகவரி இல்லையென்று திரும்பி வந்துவிட்டது. போகட்டும், மலரில் இல்லாவிட்டாலும் இந்த வலைப்பூவிலாவது வெளிவரட்டுமென்று இதில் வெளியிடுகிறேன். படித்தபின் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.   தஞ்சை வெ.கோபாலன். 

                               
                        அன்னதான சிவன்
புண்ணியங்களில் எல்லாம் பெரும் புண்ணியம் பசித்தவர்களுக்கு உணவளித்தல் என்கின்றனர் நமது பெரியோர்கள். சமீபத்தில் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த சமயம் மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் தவித்த தவிப்பினை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம் அல்லவா? அந்தக் காலத்தில் சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போது போல ஊரெங்கும் உணவு விடுதிகளும், தேநீர் கடைகளும் கிடையாது. மிகப் பெரிய ஆலய திருவிழாக்கள் போன்ற விசேஷ தினங்களில் அந்தந்த ஊர்களில் மக்கள் பெருமளவில் வந்து கூடுவார்கள். லட்சக் கணக்கில் வந்து கூடுகின்ற அந்தக் கூட்டத்தினர் உணவுக்கு எங்கே செல்வர்? அப்போதெல்லாம் அதற்கென்று சில அறக்கட்டளைகள் மாயூரம், கும்பகோணம் போன்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்டு, விசேஷ தினங்களில் அந்தந்த ஊர்களுக்கு வரும் பக்தர்களுக்கு தர்ம காரியமாக உணவளிக்க ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார்கள். அங்கெல்லாம் வருகின்ற அத்தனை பேருக்கும் இல்லையெனாமல் உணவு அளித்து வந்திருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான உணவு விடுதிகள் ஏற்பட்டுவிட்டதனாலோ என்னவோ, அதுபோன்ற தர்மங்கள் ஓரளவு நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், முன்பு போல முழுவீச்சில் நடைபெறுவது இல்லை.

கும்பகோணத்தில் சென்ற நூற்றாண்டில் நடந்த சில மகாமக நிகழ்ச்சிகளின் போதெல்லாம் அங்கு தேப்பெருமாநல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் இல்லையெனாமல் அன்னதானம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். காஞ்சி மகாசுவாமிகள் என அழைக்கப்படும் பூஜ்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அறிவுரையின்படி, அந்தப் பெரியவர் ஒவ்வொரு ஊராகச் சென்று மகாமகம் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னாலிருந்து அரிசி, பருப்பு, புளி போன்ற உணவுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் நல்லமனம் படைத்தவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று ஒரு பெரிய மாட்டு வண்டியில் வைத்து தேப்பெருமாநல்லூர் கொண்டுவந்து சேமித்து வைத்திருப்பார்.

ஒரே நாளில் பல்லாயிரம் பேர் உணவருந்தும் அளவுக்கு அவருடைய சேமிப்பு வளர்ந்து விடும். அவருடைய இயற்பெயரை விட இவர் செய்யும் இந்த தர்ம காரியத்தை வைத்து இவரை அனைவரும் “அன்னதான சிவன்” என்றே அழைத்தார்கள். அவர் உயிர்வாழ்ந்த காலம் வரை இந்த புண்ணிய காரியம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது என்பதை இந்த நாடே நன்கு அறியும்.

இந்த அன்னதான சிவனின் இயற்பெயர் ராமசாமி ஐயர் என்பது. முன்பே சொன்னதைப் போல கும்பகோணத்தை அடுத்த தேப்பெருமாநல்லூர் என்பது இவருடைய ஊர். அவர் இந்த அரிய பணியை 1919 முதல் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடம் தங்கள் தலைமையகமான காஞ்சியைவிட்டு கும்பகோணம் வந்த பிறகு மராட்டிய மன்னர் துளஜாஜி மகாராஜா செய்த உதவியினால் இங்கேயே நிலைபெற்று இருந்தார்கள். தேப்பெருமாநல்லூர் ராமசாமி ஐயர் எனும் அன்னதான சிவன் 1916இல் சங்கரமடத்தினுள் தன் வாசத்தைத் தொடங்கி 1939இல் காலமாகும் வரை அங்கேயே இருந்து வந்தார்.

1933ஆம் ஆண்டு மகாமகத்தைப் பற்றிய ஒரு செய்தியை ரா.கணபதி தன்னுடைய நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். நூற்றுக்கணக்கான கட்டை வண்டிகளில் விறகு வந்து இறங்குமாம்; ஊறுகாய்க்காக பெருநெல்லிக்காய் வண்டிகளில் கொண்டுவந்து தருவார்களாம். பெரிய கொட்டாய் அமைத்து அங்கு சமையல் நடந்து கொண்டிருக்குமாம். அப்போது சாம்பார், ரசம் போன்றவை கொதிக்கும்போது வருகின்ற வாசனையை வைத்தே அவர் எதில் என்ன குறைவு, என்ன சேர்க்க வேண்டுமென்பதையெல்லாம் சரியாகச் சொல்லி சமையல் நல்ல ருசியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வாராம். சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காக அவர் இரண்டு கட்டை வண்டியில் தென்னை விளக்குமாற்றைக் கொண்டு வந்து வைத்திருப்பாராம்.

ஏராளமானவர்களுக்கு சமைக்க வேண்டியிருக்குமென்பதால் சாதத்தை ஒரே நேரத்தில் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடமாட்டார். முதலில் பத்து பதினைந்து மூட்டை அரிசியை பெரிய பெரிய அண்டாக்களில் கொதிக்கவிட்டு, வெந்த சாதத்தைத் தரையில் நீண்ட சாக்குப் படுதாவின் மீது மெல்லியதாகப் பரப்பி, அதன் மீது புதிய துணியைப் பரப்பி வைத்து அதன் மீது மேலும் பத்து பதினைந்து மூட்டை அரிசியை அப்படியே பரப்பிவிடுவாராம். அதன் மீது தடித்த சாக்குப் படுதாவை விரித்து அழுத்தி மூடிவிடுவாராம். கீழேயுள்ள வெந்த சாதத்தின் சூட்டில் மேலேயுள்ள அரிசியும் வெந்து சாதமாகிவிடுமாம். இதனை அன்னப் பாவாடை என்று அழைப்பர். அரை மணி நேரத்தில் மேலே பரப்பப்பட்ட அரிசி மிகவும் நன்றாக வெந்து சாப்பிடும் பதத்தில் இருக்கும் என்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் உணவருந்த வேண்டுமென்றால், அத்துணை பேருக்கும் வேண்டிய தயிர், மோர் வேண்டுமல்லவா? அதற்கு அவர் என்ன செய்வார் தெரியுமா? அந்தக் காலத்தில் குளிர்பதனப் பெட்டிகள் எல்லாம் இல்லையல்லவா; அதனால் அவர் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார். திருவிழா தொடங்குவதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் முன்னதாகவே இவர் ஊர் ஊராகச் சென்று பாலை வாங்கி சேகரித்துக் கொள்வார். அதற்கு உறை ஊற்றி தயிராக ஆக்கியபின் அதனை மரத்தினால் ஆன பீப்பாய்களில் நிரப்பி அதன் வாயை நன்றாக காற்று புகாமல் அழுத்தி வாயை மெழுகினால் பூசி மூடிவைத்து விடுவார். அப்படி தயாரான மரப் பீப்பாய்களை ஆழமான நீர்நிலைகளில் மூழ்கும்படி போட்டு வைத்துவிடுவார். பிறகு தேவைப்படும்போது அந்த பீப்பாய்களை எடுத்துத் திறந்து பார்த்தால் அதிலுள்ள தயிர் புத்தம்புதிதாக முதல்நாள்தான் உறையூற்றித் தயாரித்த தயிர் போல இருக்குமாம்.
சிவனின் அன்னதானம் நடக்கும் இடம் திருவிழாவின் முந்தைய நாள் வரை அங்கு இப்படியொரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடக்கப்போவதற்கான அறிகுறிகள் எவையும் இருக்காதாம். முதல்நாள் இரவுதான் சாப்பாட்டுக்குத் தேவையான சாமான்கள் வந்து இறங்குமாம். நள்ளிரவுக்குப் பிறகு ஏராளமான ஆட்கள் சமையல் வேலையில் ஈடுபட்டு மறுநாள் ஆயிரக்கணக்கான நபர்கள் உணவருந்த தேவையானவைகள் தயாராகிவிடுமாம்.
இதில் ஒரு சுவாரசியமான செய்தி என்னவென்றால், இத்தனைக்கும் காரணமான “அன்னதான சிவன்” அங்கு தயாராகும் உணவில் ஒரு சிறிதும் சுவைத்ததோ சாப்பிட்டதோ கிடையாதாம். அவர் மட்டும் அருகிலுள்ள யார் இல்லத்திற்காவது சென்று தனக்கு உணவு அளிக்க முடியுமா என்பாராம், இவர் வரவுக்காக மகிழ்ந்து அவர்களும் இவரை உபசரித்து, உணவைப் படைத்து மகிழ்வார்களாம். இந்த அன்னதான சிவனுக்குப் படைத்தால், அது அந்த சிவபெருமானுக்கே படைப்பதாக அவர்கள் கருதிவந்தார்கள் என்கிறார்கள். அந்த நாட்களில் இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதை இப்போது சொன்னால், நம்புவதுகூட சிரமமாகத்தான் இருக்கும். வாழ்க அன்னதான சிவன் புகழ்!

(ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,                    28/13, எல்.ஐ.சி.குடியிருப்பு 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.     கைபேசி எண்: 9486741885. மின்னஞ்சல்:  privarsh@gmail.com)Wednesday, December 23, 2015

தீபம் நா.பார்த்தசாரதி

                                
தீபம் நா.பார்த்தசாரதி அவர்களையும், அவர் ஆசிரியராக இருந்து நடத்திய “தீபம்” இதழைப் பற்றியும் அறியாத தமிழ் வாசகர்கள் இருக்க முடியாது. அவருடைய “குறிஞ்சிமலர்”, “சமுதாய வீதி”, “பொன் விலங்கு”, “நித்திலவல்லி”, “பாண்டிமாதேவி”, “சத்திய வெள்ளம்” போன்ற புதினங்கள் மிகப் பெருமளவில் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவைகள். இதில் குறிஞ்சி மலர், பொன்விலங்கு ஆகியவை  தொலைக்காட்சி நெடுந்தொடர்களாகவும் வந்தது நினைவிருக்கலாம்; அதுமட்டுமல்ல குறிஞ்சிமலரில் அரசியல் வாதியொருவர் கதாநாயகனாக நடித்ததும் அனைவரும் அறிவர்.

 இவர் சுமார் 40 புதினங்களும், சிறுகதைகள், சிறுகதைத் தொகுதிகள், கவிதை கட்டுரை ஆய்வு நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார்.

அடிப்படையில் இவர் ஒரு தமிழாசிரியர். எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு நல்ல தமிழில் எழுதி வந்தார். தன்னுடைய சொந்தப் பெயரான நா.பார்த்தசாரதி என்பது தவிர இவர் ஏராளமான புனைபெயர்களையும் சூட்டிக்கொண்டு எழுதி வந்தார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் போன்ற பல பெயர்கள் இவருக்கு உண்டு. எழுதும் விஷயத்துக்கேற்ப இவருடைய புனைபெயர்களும் பொறுத்தமாக அமையும்.
இவருடைய கதைகளை வரலாற்று நவீனம் என்றும் சமகால பிரச்சினைகளை அலசும் கதைகள் என்றும் பிரித்துப் பார்க்கலாம். இவருடைய கதைகளில் காதல் என்பது மிக நளினமாக, சங்ககால இலக்கியத்தில் காணப்பெறும் காதல் காட்சிகளைப் போல உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் உணர்வுகளை மெல்ல வெளிக்கொணரும் விதத்தில் அமைந்திருக்கும். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயம்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் நதிக்குடி எனும் கிராமத்தில் பிறந்தவர். மகாகவி பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் தமிழாசிரியர் என்பதால் நல்ல தமிழில் இவரால் எழுத முடிந்தது. கல்கி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி பின் சொந்தமாக ‘தீபம்’ இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்.
பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடத்திய தினமணி கதிர் இதழின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். பிறகு அதிலிருந்தும் விலகி சுயேச்சையாக இருந்துகொண்டு எழுத்துப் பணியில் ஈடுபடலானார்.

இவர் பல அயல்நாடுகளுக்கும் பயணம் சென்று அது குறித்தெல்லாம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இதய நோயால் பாதிக்கப்பட்டு இவர் உயிரிழக்க நேர்ந்தது. இவருடைய படைப்புகள் ஏராளமானவை இலக்கியத் தரத்தோடு படிப்பவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.


தி.ஜானகிராமன்

                                              

இப்போதைய இளைய தலைமுறையினரில் தமிழ் சிறுகதை, புதினம் ஆகியவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களிடம் இந்தப் பெயரைக் கேட்டால் ஒருக்கால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் இவர் பெயரை அறிந்தே வைத்திருந்தார்கள். “அம்மா வந்தாள்”, “மோகமுள்”, “செம்பருத்தி” “மரப்பசு” போன்ற நாவல்கள் ஒருகாலத்தில் இளைஞர்கள் விரும்பிப் படித்தவைகள். இவருடைய பத்து சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து காவல்துறை அதிகாரியாக இருந்த திருமதி திலகவதி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளில் அவர் தேர்ந்தெடுத்தவை 1.கங்கா ஸ்நானம் 2. சிலிர்ப்பு 3. பரதேசி வந்தான் 4. பிடி கருணை 5. முள்முடி 6. மேரியின் ஆட்டுக்குட்டி 7. கோதாவரிக் குண்டு 8. பசி ஆறிற்று 9. சத்தியமா! 10. செய்தி. ஆகியவை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை வெளிப்படுத்தும் கதைகள்.

தமிழ் எழுத்துலகுக்கு இவரது பங்களிப்பு பற்றி திருமதி திலகவதி சொல்லும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கது. “ஜானகிராமனின் படைப்புகள் படைப்புலகில் அடியெடுத்து வைப்போர்க்கு எண்பதுகள் வரை ஆதர்சமாக இருந்தன”. ஆம்! இது சத்தியமான வாக்கு. அந்தக் காலத்தில் தி.ஜானகிராமனைப் படிக்காமல் தமிழில் சிறுகதை, நாவல் எழுத யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை. தஞ்சை மாவட்டத்தின் காவிரிக்கரை மக்களின் சொல்வழக்கும், நடவடிக்கைகளும் அவருடைய பாத்திரப் படைப்புகளில் முழுமையாக நிறைந்திருக்கும். எடுத்துக்காட்டாக “செம்பருத்தி” கதையின் பெரும்பகுதி தஞ்சை மண்ணில் ஒரு சிறு கிராமத்தில் நடக்கிறது. அந்தக் கதையில் வரும் தெருவில் இருபுறமும் வரிசையான வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்காரரும் தன் வீட்டு வாசலை சாணி தெளித்து நன்றாகப் பெருக்கிக் கோலமிட்டு வைப்பார்கள். இருவீட்டு வாசலுக்கு நடுவில் இவர்கள் குவித்த மண் திட்டாக குவிந்திருக்கும். இரவு நேரங்களில் உணவருந்தியபின் கையலம்ப அவர்கள் பின்புறம் போகாமல் வாசலில் அந்த மண்திட்டில் கை அலம்புவது உண்டு. இந்த சிறிய விஷயத்தைக் கூட ரசித்து எழுதும் அவரது எழுத்தில் எதார்த்தம் குடிகொண்டிருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவருடைய எழுத்துக்களில் கர்நாடக இசை ஒரு முக்கிய அங்கம் வகிக்கும். அந்தந்த சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி இவர் குறிப்பிடும் ராகங்கள், கதையின் அந்தப் பகுதியில் மிகுந்திருக்கும் ரசங்களுக்கேற்ப அமைந்திருக்கும். அந்த ராகம் சோகத்தை வெளிப்படுத்தக்கூடியது என்றால், அந்த காட்சியும் சோகமயமாகவே இருக்கும். அப்படி இவர் பல ராகங்களைத் தன் கதைகளில் கொண்டுவந்திருக்கிறார். அதிலும் மோகமுள் எனும் நாவல் ஒரு இசைக் கலைஞரைப் பற்றியது. அது திரைப்படமாகவும் வந்து மக்கள் மனங்களைக் கவர்ந்திருக்கிறது.

அம்மா வந்தாள் எனும் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘தி இல்லஸ்டிரேடட் வீக்லி” இதழில் “அப்பூஸ் மதர்” எனும் தலைப்பிட்டுத் தொடராக வெளியிட்டு வந்தார்கள். அதில் வரும் அப்புவை யாரால் மறக்க முடியும். அப்புவின் அம்மாவின் கள்ள உறவை பச்சையாக எந்த இடத்திலும் விளக்கி எழுதாமல் இலை மறைவு காய் மறைவாக அந்த உறவை சொல்லும் யுத்தி யாருக்கு வரும்?

பெண்களின் மன சங்கடங்களை, உணர்வுகளை மென்மையாக தெளிவாக எழுதுவதில் கைதேர்ந்தவர் தி.ஜா. அந்தக் காலத்தில் எந்த விஷயத்தையும் வீட்டில் வயதான பெண்மணிகள் பச்சையாகப் பேசமாட்டார்கள். அவர்கள் பூடகமாகப் பேசி விளக்கும் அழகை அவருடைய எழுத்துக்களில் காணமுடியும். நேரடியான உரையாடல்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜாடை மாடையான செய்திகள் சொல்வதன் மூலம் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தவர் தி.ஜா. அவரைப் படித்தவர்கள் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது, அந்த அளவில் அவர் எல்லோர் மனங்களிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துவிட்ட உணச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை படைத்த எழுத்தாளர்.

அவருடைய நாவல்கள் ஏதோ ஒருவருடைய கற்பனையில் உதித்த சம்பவங்களாக இல்லாமல் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்த, நேரில் பார்த்த நிகழ்ச்சிகளை மறுபடியும் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். காலத்தால் மறக்க முடியாத ஓர் அற்புதமான எழுத்தாளர், மண்வாசனை துலங்க எழுதிய அவர் எழுத்துக்கள் காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.
தி.ஜா. என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் தி.ஜானகிராமன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். யதார்த்தம் அவருடைய எழுத்தின் உயிர்மூச்சு. இவர் பிறந்தது 1921 பிப்ரவரி 28இல்.

இவர் சுமார் பன்னிரெண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.


இவருடைய நாடகங்களான “வடிவேலு வாத்தியார்”, “நாலு வேலி நிலம்” ஆகியவை எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் நாடகங்களாக நடிக்கப்பட்டவை. 1979இல் இவருக்கு சாகித்ய அகாதவி விருது வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற்ற தி.ஜானகிராமன் 1982 நவம்பர் 18 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தி.ஜா. புகழ்!

Sunday, December 20, 2015

இலலோ ப்ரணதார்த்திஹர

                          
                         

 ராகம்: அடாணா                                                                  ஆதி தாளம்                                  .         ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவையாறு ஐயாறப்பர் மீது பாடியது.

                                                               பல்லவி
                        இலலோ ப்ரணதார்த்திஹருடனுசு பே...
                        ரெவரிடிரே சங்கருடனி நீ
                                                            அனுபல்லவி
                        தலசி காகி சிரகாலமு பமுன
                        தண்ட மிடின நாயெட தயலேதா யெ
                                                               சரணம்
                        கர சரணயுரமு நொஸலு புஜமுலு
                        தரணி சோகம் ரொக்கக லேதா
                        சரண மனுசு மொரலிட லேதா பஞ்..
                        சநதீச த்யாக ராஜனுத நீ

பொருள்:  அடிபணிந்து வணங்குவோர்தம் துயரங்களைத் தீர்த்து வைப்பவன் என்றும், நலன்களையெல்லாம் தருபவன் என்றும் இந்த உலகத்தில் யார் உனக்குப் பெயரிட்டது?
உன்னையே நினைத்து உள்ளம் உருகி நீண்ட காலமாக நின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கி வரும் என்மீது உனக்குச் சிறிதுகூட தயை இல்லாமல் போய்விட்டதே!

கை, கால், மார்பு, நெற்றி, தோள் ஆகிய எல்லா உறுப்புகளும் தரையில் பட உன்னை நான் பணிந்து வணங்கவில்லையா?

நீயே எனக்கு அடைக்கலாம் என்று உன்னிடம் நான் முறையிடவில்லையா? இந்தத் தியாகராஜனால் வணங்கப்படும் ஐயாறப்பா! பிரணதார்த்திஹரனே!


       

Friday, December 18, 2015

பாஞ்சாலி சபதம்.

 மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில், சூதாட்டச் சருக்கத்தை மட்டும் ஒரு நாடகமாக ஆக்கியிருக்கிறேன். தொடக்கப் பாடலை பி.எஸ்.ராமையாவின் பாஞ்சாலி சபதம் நாடக நூலிலிருந்து கையாண்டுள்ளேன். எப்படி இருக்கிறது? இதை நாட்டிய நாடகமாக நடிக்கலாம் விருப்பமுள்ளவர்கள்.         

   
                                 பாஞ்சாலி சபதம்.
கதாபாத்திரங்கள்:  1. பாஞ்சாலி  2. தருமன் 3. பீமன், 4. அர்ஜுனன்  5. நகுலன்  6. சகாதேவன் 7. பீஷ்மன்  8. விதுரன்  9. திருதராஷ்டிரன்  10. துரியோதனன் 11. துச்சாதனன் 12.  சகுனி  13. விகர்ணன்  14. சேவகன்

                                                     காட்சி 1
(கெளரவர் அரசவை. அரியணையில் கண்தெரியாத திருதராஷ்டிர மன்னன். அருகில் துரியோதனன், சகுனி, துச்சாதனன். அவையினுள் பாண்டவர் ஐவரும் விதுரனுடன் வருகின்றனர். அவர்களை வரவேற்க இரு பெண்கள் ஆடுகின்றனர்)
                                                  பாடல்
            வாசலிது வாசலிது – மகாராஜன் வாசலிது
            அத்தினா புரத்தரசன் அமர்ந்திருக்கும் வாசலிது
            நாமகளும், திருமகளும் வாசஞ்செய் வாசலிது
            பூசுரரும், புவியோரும் மகிழ்ந்திருக்கும் வாசலிது
            வீரமுரசெங்கும் ஒலிக்கின்ற வாசலிது
            வரவேண்டும், வரவேண்டும் இங்கே
            பாண்டவர்கள் வரவேண்டும்.!
(பாண்டவர்கள் அமர்கின்றனர். அப்போது சகுனி எழுந்து பேசுகின்றான்)
சகுனி:
            அறத்தின் நாயகனே, தருமபுத்திர மாமன்னா!
            போர்த் தொழிலால் புவியினை வென்றவனே
            வாருங்கள், வந்தெமது குலத்தினை மேம்படுத்த
            சூது எனும் போரில் வென்றிடுவீர் இச்சபையில்!
தருமன்:
            தீதுறும் சூதினுக்கா இங்கு எனை அழைத்தாய்
            சூதில் பெருமையெனும் பெற்றிதான் உண்டோ?
            வருமந்தனை மனத்துடையாய்! எங்கள்
            வாழ்வினை கெடுப்பாயோ இந்த இழிதொழிலால்?
சகுனி:
            பலபல மொழிகுவதேன் தருமா? உன்னை
            பார்த்திவன் என்றெண்ணி அழைத்து விட்டேன்
            சோரம் இங்கு இதில் உண்டோ? தொழில்
            சூதெனில் ஆடுநர் அரசரன்றோ?
            சூரசிகாமணியே நடு மண்டபத்தில் நின்றன்
            சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ?
            சாத்திரம் பேசுகின்றாய், நாத்திறம் உடையவனே
            மன்னவர் குல வழக்கை சூதென நீக்கலாமோ?
            சூதுக்கு உன்னை அழைத்து விட்டேன், சொல்லு
            துணிவில்லை யெனில் நீங்கிடு இடத்தைவிட்டு.

              (பின்னணியில் பாடல் ஒலிக்கிறது)
            தீதில்லா தருமனும் விதியினை நொந்து கொண்டான்
            பொய் யொழுக்கை அறமென்று பேசும்
            பொய்யர்தம் கேலியைப் பொறுத்திடுவானோ?
            ஐயகோ! பாரத நாட்டின் தர்மம் போச்சுது!
            அறமும், வீரமும் விதியினால் அழிந்தது.
            மாயச் சூதினுக்கே ஐயன் மனமிணங்கி விட்டான்
            தாய முருட்டலானார் அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்
            நேயமுற்ற விதுரன் போலே நெறியுளோர் களெல்லாம்
            வாயை மூடிவிட்டார், தங்கள் மதி மயங்கி விட்டார்.
              (தருமன் சூதாட தயாராகி விட்டான்)
தருமன்:
            பந்தயங்கள் சொல்வாய் – சகுனி
            கைகள் பரபரத்திடாதே!
            மன்னர் சபைதனிலே நீ சூதில் அமர்ந்து விட்டாய்
            சூதில் பணயம் வைக்க உனக்கு பெருத்த நிதியம் உண்டோ?
துரியோதனன்:
            அருமையான செல்வம் என்பால் அளவிலாத துண்டு
            ஒரு மடங்கு வைத்தால் எதிரில் ஒன்பதாக வைப்பேன்
            பெருமை பேச வேண்டாம், இனிமேல் பின்னடக்கு ஐயா.
தருமன்:
            ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பதுண்டொ?
            தருமமாகுமோடா? சொல்வாய் தம்பீ! இந்த வார்த்தை
(கர்ணன் எழுந்து நின்று சொல்வான்)
கர்ணன்:
            மாமன் ஆடப் பணயம் இங்கே மருகன் வைக்கொணாதோ?
            இதில் வந்த குற்றம் என்ன? வீணில் பேசுவது வேண்டாம்
            பொழுது போக்குதற்கே சூதுப் போர் தொடங்குகின்றோம்
            அழுதலேன் இதற்கு, துணிந்து ஆடிடுவோம் தருமா!
(பின்னணியில் பாட்டு கேட்கிறது. அவையில் சகுனியும் காய் உருட்டி சூதாடிக் கொண்டிருக்கிறார்கள். இடையிடையே சகுனி மற்றும் துரியோதனாதியர் எழுப்பும் சிரிப்பொலி கேட்கிறது)
            தர்மம் வீழ்ந்தது – பாரதப் போர் எழுந்தது
            சூதினால் தருமன் அனைத்தையும் இழந்தான்
            சூதர் கூட்டமும் ஆர்ப்பரித்து ஆடி மகிழ்ந்தனர்.

(அப்போது விதுரன் வந்து துரியோதனாதியரைக் கண்டிக்கிறான்)

விதுரன்:
         ஐயகோ, இதனை யாதெனச் சொல்வேன்
               வையகம் இதைப் பொறுத்திடுமோ? வானும்
               பூமியும் ஏற்றிடுமோ, பழிதனை யாரே சுமந்திடுவார்?
               கேடு விளந்திடும் நிச்சயமே, நீ அழிவதும் ஜகத்தினில்
               நடந்திடுமே.,
துரியோதனன்:
              நன்றி கெட்ட விதுரா? சிறிதும் நாணமனற்ற விதுரா
              தின்ற உப்பினுக்கே – நாசம் தேடுகின்ற விதுரா
              அன்று தொட்டு நீயும் – எங்கள் அழிவை நாடுகின்றாய்
              மன்றில் உன்னை வைத்தான் – எந்தை மதியை என்னுரைப்பேன்
              ஐவருக்கு நெஞ்சும் – எங்கள் அரண்மனைக்கு வயிறும்
              தெய்வம் அன்றுனக்கே – விதுரா செய்து விட்டதேயோ?
              மெய் வகுப்பவன் போல் – பொதுவாம் விதியுணர்ந்தவன் போல்
              ஐவர் பக்கம் நின்றே – எங்கள் மாற்றலார்களோடு
              முன்னர் நாங்கள் பணயம் – வைத்தே முறையில் வெல்லுகின்றோம்
              என்ன குற்றம் கண்டாய்? – தருமம் யார்க்குரைக்க வந்தாய்?
              கன்னம் வைக்கிறோமோ – பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?
              வன்புரைத்தல் வேண்டா – எங்கள் வலி பொறுத்தல் வேண்டா
              இன்பம் எங்கணுண்டோ _ அங்கே போகலாம் நீயும் இன்று.

(துரியோதனன் இப்படிப் பேசிவிட்டுத் திரும்பும்போது விதுரன் பேசுகின்றான்)

            இங்கே இருந்தாலும் போனாலும் இனி என்னேடா
            செய்கை நெறியறியாத சிறியனே – நின்னைப்
            பொன்றாத வழி செய்ய முயன்று பார்த்தேன்
            பொல்லாத விதி என்னைப் புறங்கண்டானால்.
            பால் போலும் தேன்போலும் இனிது சொல்வோர்
            இடும்பைக்கு வழி சொல்வார், நன்மை காண்பார்
            இளகுமொழி கூறார் என்று இனைத்தே தானும்
            நினக்கெவரும் கூறியவர் இல்லை கொல்லோ?
            நெடும் பச்சைமரம் போலே வளர்ந்து விட்டாய்?
            நலம்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா
            நரபதி!  நின் அவைக்களத்தே அமைச்சன் என்று
            வலங்கொண்ட மன்னரோடு பார்ப்பர் தம்மை
            வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்!
            சிலங்கைப் பொற்கச்சணிந்த வேசை மாதர்
            சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர் மற்றும்
            குலம் கெட்ட புலைநீசர், முடவர், பித்தர்
            கோமகனே! நினக்குரிய அமைச்சர் கண்டாய்!
            சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?
            செப்புவன நினக்கென நான் செப்பினேனோ?
            மன்றார் நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார்
            மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்
            இன்றோடு முடிகுவதோ! வருவதெல்லாம்
            யான் அறிவேன், வீட்டுமனும் அறிவான் கண்டாய்
            விதிவழியை நன்குணர்ந்திடினும் பேதையேன் யான்
            வெள்ளை மனம் உடமையினால், மகனே! நின்றன்
            சதிவழியைத் தடுத்து உரைகள் சொல்லப் போந்தேன்
            சரிசரி! இங்கு ஏதுரைத்தும் பயனொன்றில்லை,
            மதிவழியே செல்.
             (விதுரன் அமர்ந்து கொள்ள பாடல் கேட்கிறது)
குரல்: 
            காயுருட்டலானார் சூதுக் களி தொடங்கலானார்
            மாயமுள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்
            நீ அழித்த தெல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும்
            ஓய்வடைந்திடாதே தருமா ஊக்க மெய்து கென்றான்.
           
(சூதாடுபவர் சிரிப்பொலி, பகடை உருட்டும் ஒலி, வெற்றி பெற்றதன் அறிகுறியாக சகுனியும் துரியோதனாதியரும் ஹோ ஹோ வென சிரிக்கும் ஒலி)

குரல்:              கோயில் பூஜை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
                        வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்
                        ஆயிரங்களான நீதி – அவை உணர்ந்த தருமன்
                        தேயம் வைத்திழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான்.
                        நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்களென்று கருதார்
                        ஆட்டு மந்தையாமென் றுலகை அரசர் எண்ணி விட்டார்
                        காட்டும் உண்மை நூல்கள் பலதாங் காட்டினார்களேனும்
                        நாட்டு ராஜநீதி மனிதர் நன்கு செய்யவில்லை.
                        ஓரஞ்செய்திடாமே, தருமத் துறுதி கொன்றிடாமே
                        சோரஞ் செய்திடாமே பிறரைத் துயரில் வீழ்த்திடாமே
                        ஊரை ஆளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை
                        சாரமற்ற வார்த்தை, மேலே சரிதை சொல்லுகின்றோம்.
சகுனி:
            செல்வம் முற்றும் இழந்து விட்டாய், தருமா
            தேசமும் குடிகளும் சேர்ந்திழந்தாய்
            எல்லாம் இழந்த பின்னர் நின்றன்
            இளைஞரும் நீயும் மற்றெதில் பிழைப்பீர்!
            வல்லார் நினது இளைஞர் சூதில்
            வைத்திடத் தகுந்தவர் பணயம் என்றே
            சொல்லால் உளம் வருந்தேல் வைத்துத்
            தோற்றதை இங்கே மீட்டிடுவாய்!
துரியோ:
            மாமா! பரவு நாட்டையெல்லாம் இங்கே பணயமாக வைப்போம்
            தம்பிமாரை வைத்து ஆடித் தருமன் வென்றுவிட்டால்
            முன்பு மாமன் வென்ற பொருளை மீண்டளிப்போம்
            நம்பி வேலை செய்வோம் தருமா! நாடிழந்த பின்னர்
            அம்பின் ஒத்த விழியாள் உங்கள் ஐவருக்கும் உரியாள்
            அவள் இகழ்ந்திடாளோ? அந்த ஆயன் பேசுவானோ?
            கவலை தீர்த்து வைப்போம், மேலே களி நடக்கும் இங்கே.

(தருமன் வரிசையாக நகுலன், சகாதேவன் ஆகிய தம்பிகளை வைத்து இழக்கிறான் )

தருமன்:  என் உயிரினும் இனியர் என் தம்பியர் இருவர்
                நகுலனும் சகாதேவனும் இங்கே பணயம் வைக்கின்றேன்.
சகுனி:   ஆகா! நல்லது தருமா, பார் இப்போ பகடை பன்னிரெண்டு

 (காயை உருட்ட அப்போது பன்னிரெண்டு விழுகிறது. சகுனி கூட்டத்தார் கூச்சலிட்டு குதிக்கின்றனர்)

சகுனி: (கேலியாக சிரித்துக் கொண்டே)
            மாற்றாந் தாயிடம் பிறந்தவர் என்றே இவர்களைச்
            சூதில் வைத்திழந்தாய், திண்ணிய வீமனும் பார்த்தனும்
            குந்தி தேவியின் மக்கள் என்றே அவரைக்
            காட்டிட அஞ்சினையோ?
தருமன்:
            சூதில் அரசிழந்தாலும், எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் ஐவர்
            எண்ணத்தில் ஆவியில் ஒன்று காண், எம்மை பிரித்திட எண்ணும்
            உன் பாதகச் சிந்தனை நிறைவேறாது என்பதை உணர்ந்திடுவாய்.
            இதோ இங்கே விஜயனும், வீமனும் சூதில் வைத்தேன்
            போட்டிடுவாய் பகடை ஆறு.

      (சகுனி காயை உருட்ட ஆறு விழுகிறது. மீண்டும் கூச்சல். துரியோதனனும் சகுனியும் மற்றவர்களும் கெக்கெலி கொட்டி சிரிக்கின்றனர்)

துரியோ:
            மங்கி அழிந்தனர் பாண்டவர் – புவி மண்டலம் இனி நம்மது
            சங்கை யிலாத நிதியெலாம் நம்மைச் சார்ந்தது இனி வாழ்த்துவீர்
            இந்தச் செய்தியை எங்குமே பறை அறைந்து சொல்லடா தம்பீ!
சகுனி:
            புண்ணிடைக் கோல் கொண்டு குத்துதல் நின்னைப்
            போன்றவர் செய்யத் தகுவதோ? களி நண்ணித்
            தொடங்கிய சூதன்றோ, இதில் நாணுறச் செய்வது மேன்மையோ?
            இன்னும் பணயம் வைத்து ஆடுவோம் – வெற்றி
            இன்னும் இவர் பெறலாகுமே
            ஒளி மின்னிடும் அமுதம் போன்றவள் இவர்
            மேவிடும் தேவியை வைத்திட்டால், அவள்
            துன்னும் அதிர்ஷ்டம் உடையவள், இவர்
            தோற்றது அனைத்தையும் மீட்டலாம்.
குரல்:
            (பாவியர் சபைதனிலே புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப் பயனை
            ஆவியில் இனியவளை உயிர்த்தணி சுமந்து உலவிடு செய்யமுதை
            ஓவியம் நிகர்த்தவளை, அருள் ஒளியினை, கற்பனைக்கு உயிரதனை
            தேவியை நிலத்திருவை எங்கு தேடினும் கிடைப்பரும் திரவியத்தை
            படிமிசை இசையுறவே நடைபயின்றிடும் தெய்வ மலர்க்கொடியை
            வடிவுறு பேரழகை இன்ப வளத்தினைச் சூதில் பணயமென்றே
            கொடியவர் அவைக் களத்தில் அறக்கோமகன் வைத்திடக் குறித்துவிட்டான்.
தருமன்:
            இதோ பாஞ்சாலன் திருமகளை, திருஷ்டதும்னன் உடன் பிறப்பை
            சூதில் பணயம் வைத்தேன், எங்கே போடு பகடை ஐந்து.

 (சகுனி காய் உருட்ட ஐந்து விழுகிறது. (திரெளபதியை சூதில் இழந்து விட்டனர். துரியோதனாதியர் மகிழ்ச்சியில் குதிக்க பாண்டவர் தலை குனிந்து மெளனமாகின்றனர்)

துரியோ:
            மாமனே! சகுனி மாமனே! என் துயர் தீர்த்தாயடா, மாமனே
            ஏளனம் தீர்த்து விட்டாய். அன்று நகைத்தாளடா உயிர் மாமனே
            அவளை என் ஆளாக்கினாய். என்றும் மறவேனடா உயிர் மாமனே
            என்ன கைமாறு செய்வேன்? ஆசை தணித்தாயடா, உயிர் மாமனே
            ஆவியைக் காத்தாயடா, பூசை புரிவோமடா, உயிர் மாமனே
            பொங்கல் உணக்கிடுவோம். நாசமடைந்தடா, நெடுநாள் பகையின்று
            நாம் இனி வாழ்ந்தோமடா, மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய்.
துரியோ:
            காவலா! சென்றிடுவாய் அந்தப்புறம் அந்தப்
            பாஞ்சாலியைக் கொண்டு வந்து அவையில் நிறுத்திடுவாய்.
                      (காவலன் போகிறான்)

                                                  காட்சி. 2
(அத்தினபுரத்து அரண்மனை. திரெளபதி மாதவிடாயில் இருக்கிறாள். காவலன் அங்கு சென்று அழைக்கிறான்)

காவலன்:
            அம்மனே போற்றி, அறங்காப்பாய் தாள் போற்றி!
            விதிவசத்தால் சகுனியோடு உதிஷ்டிரனார் சூதாடி
            பூமியும், பொருளையும், தம்பிகள் அனைவரையும் இழந்து
            நின்னையும் பணயம் வைத்து இழந்து விட்டார்!
            அனைவரும் கூடிநிற்கும் சபக்தனிலே நின்னை
            அழைத்துவரப் பணித்தான் எம்மரசன்!
பாஞ்சாலி:
            யாவர் சொன்ன வார்த்தை? யாரிடம் வந்து சொன்னாய்?
            சூதர் அவையினிலே, சீர்குலத்து மாதர் வருவதுண்டோ?
            யார் பணியால் அழைக்கின்றாய்? சொல்லிடுவாய் காவலா!
காவலன்:      
            மன்னன் சுயோதனன் ஆணையால் அழைக்கின்றேன்.
பாஞ்சாலி:
            நல்லது காவலா! நான் சொன்னதைப் போய்ச் சொல்லு
            வல்லவன் சகுனியிடம் என் நாயகர் பகடை சொல்லி
            என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா? அதுவன்றி
            தானே தோற்ற பின்பு என்னை வைத்துத் தோற்றாரா?
            சென்று வா! சபையில் கேட்டு செய்தி எனக்குத் தெரிந்து வா!
                                                 
                                                            காட்சி 3
                              (அரசவை. காவலன் வந்து நிற்கின்றான்.)

துரியோ:    என்ன காவலா? எங்கே அந்த பாஞ்சாலி?
காவலன்:   வாள் வேந்தே! ஆங்கந்த பெண்ணரசி தாள் பணிந்து
                        போதருவீர் என்றிட்டேன். அதற்கு அவர்
                        “என்னை முன்வைத்து இழந்த பின்பு தன்னை
                         தன் மன்னர் இழந்தாரா? மாறாக
                        என்னைத் தோற்றாரா என்று நும் பேரவையில்
                        கேட்டுத் தெளிந்து வா என்றெனை அனுப்பி வைத்தார்.
துரியோ:       
பிள்ளைக் கதைகள் பேசுகிறாள்
என்றன் பெற்றியை அவள் அறியவில்லை
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல
வேண்டிய சொற்களைச் சொல்லிடலாம்
நீண்ட பெருஞ்சபை அதனிலே அவள்
நேரிட வந்து நிற்கின்ற போது தான்
மன்னன் அழைத்தனன் என்று நீசொல மாறி
அவளொரு வார்த்தையைச் சொல்லுவதோ
பாகன் அழைக்க வருகிலள்! இந்தப்
பையலும் வீமனுக்கு அஞ்சினான்
இவன் அச்சத்தை இவ்விடம் போக்குவேன்,
பின்னொரு காலம் வரும்வரை
தம்பீ! துச்சாதனா. போகக் கடவை இப்போதங்கே.
இங்கு அப்பொற் கொடியைக் கொண்டு வந்திடு.

                                                      காட்சி 4
                        (பாஞ்சாலி அரண்மனை. துச்சாதனன் வருகிறான்)
துச்சா:
            மன்னன் அழைத்திட்ட போதிலும் நீ  
அவைக்கு வரவில்லை தூதனை
            கேள்விகள் கேட்டு துரத்தினை,
உன்னை இழுத்துப் போகவே வந்தேன் நான்.
பாஞ்சாலி:
            மன்னன் துருபதன் கன்னி நான் – புவி
            போற்றிடும் பாண்டவர் தேவி நான்
            யாரும் இதுவரை என்னிடம் இங்ஙனம்
            கட்டுத் தவறி நடந்த தில்லை
            நீ வந்த செய்தி சொல் விரைவாக, இடத்தை
            நீங்கிடு என்கோபம் தகிக்கா முன்.
துச்சா:
            பாண்டவர் தேவியும் அல்லை நீ –
புகழ் பாஞ்சாலன் மகளும் அல்லை நீ
            ஆண்டருள் வேந்தர் தலைவனாம் எங்கள்
மன்னனுக்கே நீ அடிமையாம்
            நீண்ட சபைதனில் சூதாடி உன்னை
நேசச் சகுனி வென்றிட்டான்
            ஆடி விலைப்பட்ட தாதி நீ உன்னை
ஆள்பவன் எம் அண்ணன் சுயோதனன்
            கூடியிருக்கும் சபையிலே உன்னை
கூட்டிவரும்படி ஆணை யிட்டான்
            ஓடி வந்தேன் இது செய்தி காண் இனி
என்னோடு அங்கே வந்திடுவாய்
            பேடி மகனாம் பாகன்பால் நீ சொன்ன
பேச்சுக்கள் எதையும் வேண்டிலனே.
பாஞ்சாலி:
            தார் வேந்தர் பொற்சபை முன் என்னை
            அழைத்து வரச் செய்தல் முறையுமில்லை
            சோதரர் தம் தேவியினைச் சூதில்
அடிமை என்று கொண்ட பின்பவளை
பெருமை குலைத்திடல் மரமோடா? போய்
            மன்னர் அவையில் கூறிடுவாய்.
துச்சாதனன்:
            அன்றெமை கேலியாய் சிரித்தாயடி உன்னை
            மன்னர் அவையினில் சிரிக்க வைப்போம்
            வந்திடு என்னுடன் இல்லையேல் உந்தன்
            கூந்தலைப் பிடித்தே இழுத்தேகுவேன்.

                                                             காட்சி 5
(பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்திழுதத வண்ணம் துச்சாதனன் தெருவோடு ஒகிறான். மக்கள் “ஐயோ, இது என்ன கொடுமை” என்று அங்கலாய்க்கின்றனர்)

மக்கள்:  என்ன கொடுமை இது? என்ன கொடுமை இது?
               மண்ணாளும் மன்னரின் தேவிக்கா இந்த நிலை
               கேட்பார் இலையா, இதைத் தடுத்து நிறுத்துவார் இலையா?
               ஐயோ பாவம், இவளுக்கா இந்த கதி?
(அப்போது கேட்கும் குரல்J
            ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?
            வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை
            மிதித்துத் தராதலத்தில் போக்கியே
            பொன்னை அவள் அந்தப் புரத்தில் சேர்க்காமல்
            நெட்டை மரங்களென நின்று புலம்புகின்றார்
            பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
                                               
                                                                   காட்சி 6
           (திருதராஷ்டிரன் அவை. அனைவர் முன்பும் பாஞ்சாலி நியாயம் கேட்கிறாள்)

பாஞ்சாலி:
            விதியோ, கணவரே! அம்மி மிதித்து அருந்ததி காட்டி
            என்னை வேதச்சுடர்த்தீ முன் வேண்டி மணம் செய்தாய்
            இந்நாள் பாதகர் முன் பரிசழிதல் காணீரோ?

(திரெளபதி தருமன் தொடங்கி, வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஒவ்வொருவரையும் கேட்கிறாள் “பரிசழிதல் காணீரோ?” என்று. அனைவரும் தலை குனிந்து நிற்கின்றனர்)

பாஞ்சாலி:
            மன்னன் நற்சபையில் நல்லிசையோர் இருக்கின்றார்
            தவசிகள், வேதியர்கள், மேலோரும் இருக்கின்றார்
            நீதி நெறி தெரிந்தோர் வெஞ்சினம் ஏன் கொளவில்லை?
துச்சாதனன்:
            நீலிக்கண்ணீர் சொரிந்து நெடுங்கதைகள் பேசாதே
            கேலிக்கும் அஞ்சுவையோ? நீ கீழடிமைத் தாதியடி!
            தாதியடி நீ தாதி, கீழடிமைத் தாதி.
பாஞ்சாலி:
            தம்மைத் தோற்ற பின் என்னைத் தோற்றிட
            நாயகர்க்கு உரிமை யில்லை, புலைத்
            தாயத்தில் விலைப்பட்ட பின்னர் இங்கு என்ன
            சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்?
            இனி துருபதன் கன்னி நான், சூதில் தோற்றிட்ட
            உமக்கு தாரம் எனும் உரிமை இனியும்தான் உண்டோ?
            அறம் கண்டவர் யாரும் இங்கில்லையோ?
            செளரியம் வீழ்ந்திடும் முன்னரே, அங்கு
            சாத்திரம் செத்துக் கிடக்குமோ?
பீஷ்மன்:
            தருமன் சூதாடி உன்னைத் தோற்றுவிட்டான்
            வாதாடி அதனை நீ அவன் செய்கை மறுக்கின்றாய்
            நீ சொல்லும் நியாயங்கள் வேத காலத்தில் உண்டு
            இந்நாளில் ஆடவர்க்கு ஒப்பில்லை மாதர் எனும்
            அறந்தான் நிலைபெற்று நின்றுவிட்ட நேரத்தில்
            ஒருவன் தன் தாரத்தை விலைபேசி விற்றிடலாம்
            தானமாய் வேறொரு மனிதனுக்குத் தந்திடலாம்
            முற்றிலும் விலங்குகள் போல் வாழ்வதுவே தருமம்
            ஆகையால் நடப்பதைத் தடுக்கும் திறமில்லேன்
பாஞ்சாலி:
            சாலவே சொன்னீர் ஐயா நாட்டின் தர்ம நெறி
            சீதையை அபகரித்து வந்த இராவணனுக்கு
            அவன் மந்திரிமார் சொன்னராம் “தக்கது செய்தீர்” என்று
            பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
            வஞ்சனையால் மன்னவனை சூதாட
மன்றத்தில்அழைத்ததுதான் நேர்மையோ

விகர்ணன் (துரியோதனின் தம்பிகளில் ஒருவன்)
            பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன பதில்
            பேச்சதனை நான் ஏற்க மாட்டேன்
            எந்தையர் தம் மனைவியரை விற்றதுண்டோ?
            அரசியரை சூதில் தோற்ற கதையும் உண்டோ?
            தன்னை இவன் இழந்து அடிமையான பின்பு
            இவனுக்குத் தாரமேது, வீடேது, உறவுதான் ஏது?
            மன்னர்களே! கேளுங்கள்
            களிப்பதுதான் சூதென்றாலும் மனுநீதி துறக்கலாமோ
            தாத்தனே நீர் பேசியதும் சரிதானோ, தகுமாமோ?

கூடியிருந்த சில அரசர்கள்:
            ஒவ்வாது சகுனி செய்யும் கொடுமையெல்லாம்
            இவ்வாறு செய்தால் நீர் புகைந்து போவீர்
            ஏந்திழையை அவைக்களத்தே இகழ வேண்டாம்
            செவ்வானம் படர்ந்தாற்போல் குருதி பாய
            செருக்களத்தே தீரும் இந்த மாறாப் பழி.

பாடல்: 
            ஆடை குலைவுற்று நிற்கின்றாள் – அவள்
            ஆவென்று அலறித் துடிக்கின்றாள் – வெறும்
            மாடு நிகர்த்த துச்சாதனன் – அவள்
            மைக்குழல் பற்றி இழுக்கின்றான் – இந்தப்
            பீடையை நோக்கினன் வீமனும் – கரை
            பீறி எழுந்தது வெஞ்சினம்.
பீமன்:
            சூதர் மனைகளிலே – அண்ணே
            தொண்டு மகளிர் உண்டு.
            சூதிற் பணயமென்றே – ஆங்கோர்
            தொண்டச்சி போவதில்லை.
            ஏது கருதி வைத்தாய் – அண்ணே
            யாரைப் பணயம் வைத்தாய்?
            மாதர் குல விளக்கை – அன்பே
            வாய்ந்த வடிவழகை
            பாஞ்சாலன் மகளை – அண்ணே
            ஆடி இழந்து விட்டாய்
            தவறிழைத்து விட்டாய் – அண்ணே
            தருமம் கொன்று விட்டாய்
            சோரத்தில் கொண்டதில்லை – அண்ணே
            சூதினால் படைத்த தில்லை
            வீரத்தினால் படைத்தோம் – வெம்போர்
            வெற்றியினால் படைத்தோம்
            சக்கரவர்த்தி என்றே – மேலாம்
            தன்மை படைத்திருந்தோம்
            பொக்கென ஓர் கணத்தே – எல்லாம்
            போகத் தொலைத்து விட்டாய்
            நாட்டை யெல்லாம் இழந்தாய் – அண்ணே
            நாங்கள் பொறுத்திருந்தோம்
            மீட்டும் எமை அடிமை செய்தாய்
            மேலும் பொறுத்திருந்தோம்
            துருபதன் மகளை –
            திருஷ்டத்யும்னன் உடன் பிறப்பை
            இருபகடை என்றாய் – ஐயோ
            இவர்க்கு அடிமை என்றாய்   (சகாதேவனைப் பார்த்து)
            இது பொறுப்பதில்லை – தம்பீ
            எரிதழல் கொண்டு வா
            கதிரை வைத்திழந்தான் – அண்ணன்
            கையை எரித்திடுவோம்.
அர்ஜுனன்:
            என்ன வார்த்தை சொன்னாய் – வீமா
            எங்கு யாவர் முன்னே சொன்னாய்?
            சினமான தீ அறிவைப் புகைத்தலாலே
            திரிலோகநாதனைச் சினந்து சொன்னாய்
            ‘தருமத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
            தருமம் மறுபடி வெல்லும்’ எனும் இயற்கை
            மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும்
            வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்
            கருமத்தை மேன்மேலும் காண்போம்
            இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்
            காலம் மாறும் அப்போது
            தருமத்தை வெல்லக் காண்போம்
(தன் வில்லைக் காட்டி)
            தனுவுண்டு, காண்டீபம் இதன் பேர்.

(துச்சாதனன் திரெளபதியின் வஸ்திரத்தை உறுவத் தொடங்குகிறான். பாஞ்சாலி அஞ்சி உடைகளைக் கையால் இறுகப் பிடித்துக் கொண்டு)

பாஞ்சாலி:
            ஹரி ஹரி ஹரி கண்ணா
            அபயம் அபயம் அபயம் நானுனக்கு
            சக்கரம் ஏந்தி நிற்பாய் கண்ணா
            சார்ங்கம் எனும் வில்லைக் கையுடையாய்
            துக்கங்கள் அழித்திடுவாய் கண்ணா
            தொண்டர்தம் கண்ணீரைத் துடைத்திடுவாய்
            ஆக்கினை கரத்துடையாய் என்றன்
            அன்புடை எந்தை, அன் அருட்கடலே
            நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்திடுவாய்.
            ஐய! வேறு கதியறியேன் கண்ணா நின்
            பாதமலரே சரண், ஹரி ஹரி ஹரி ஹரி

(அப்போது துகில் வளர்கிறது, அவள் துகிலை உரிய உரிய கை சோர்ந்து மயங்கி வீழ்கிறான் கொடியவன் துச்சாதனன். பாஞ்சாலி மீது மலர் கொட்டுகிறது)

பீமன்:
            விண்ணவர் மீதாணை, பராசக்தி மீதாணை
            ஆணையிட்டு இஃதுரைப்பேன் நான்
            ஆண்மையிலா துரியோதனன் தன்னை
            மாணற்ற மன்னர் கண்முன்னே
            யுத்த அரங்கின் கண் தொடை பிளந்து அவன்
            உயிர் மாய்ப்பேன், தம்பி சூர துச்சாதனன் தனை
            ஆங்கே கடைபட்ட தோட்களைப் பிய்ப்பேன்
            ஆங்கு கள்ளென ஊறும் அவன் ரத்தம் குடிப்பேன்
            நடபெறும் காண்பீர் உலகத்தீரே, இது
            நான் சொல்லும் வார்த்தை அன்று
            பராசக்தி சொல்லும் வார்த்தை இது
            சாதனை செய்க பராசக்தி!
அர்ஜுனன்:
            கேளீர் உலகத்தீரே! அந்தப் பாதகக் கர்ணனைப்
            போரில் முடிப்பேன், கண்ணன் கழலாணை
            காண்டீப வில்லின் மீதாணை
            போர்த்தொழில் விந்தைகள் கண்டிடுவீர்
            ஹே பூதலமே அந்தப் போழ்தினிலே.
பாஞ்சாலி:
            தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
            பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப்
            பாழ்த் துரியோதனன் ஆக்கை ரத்தம்
            இவை மேவி இரண்டும் கலந்து
            குழல் மீதினில் பூசி முடிப்பேன்
            இது செய்யும் முன் முடியேன்.

(அப்போது பின்னணியில் குரல்)
குரல்:
            ஓம் ஓம் என்று உரைத்தனர் தேவர்,
            ஓம் ஓம் என்று உறுமிற்று வானம்;
            பூமி அதிர்ச்சி உண்டாச்சு
            விண்ணைப் பூழ்திப் படுத்தியதாம் சுழல்காற்று
            சாமி தருமன் புவிக்கே என்று
            சாட்சி உரைத்தன் பூதங்கள் ஐந்தும்
            நாமும் கதையை முடித்தோம், இந்த
            நாநில முற்றும் நல் இன்பத்தில் வாழ்க!