பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 19, 2016

திருவையாற்றில் வரலாற்று நூல்கள் வெளியீடு.

          திருவையாறு பாரதி இயக்கம், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலகம் ஆகியவை சார்பில், தஞ்சை வெ.கோபாலன் எழுதிய “தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு” எனும் நூலும் “சுதந்திர கர்ஜனை” எனும் வரலாற்று நூல்கள் ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டன.

இந்த நூல்களில் ஆசிரியரும், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனருமான தஞ்சை வெ.கோபாலனின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் நூல்கள் வெளியீட்டு விழாவும் ஞாயிறு அன்று திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் முனைவர் இராம.கெளசல்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேனாள் அமைச்சர் குறள்நெறிச்செல்வர் சீ.நா.மீ.உபையதுல்லா அவர்கள் நூல்களை வெளியிட தஞ்சை பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தாளாளரும், தொழிலதிபருமான சே.ப.அந்தோணிசாமி அவர்கள் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். விழாவில் நாயக்கர் வரலாறு நூலை அறிமுகம் செய்து தஞ்சை அனன்யா பதிப்பகத்தின் கவிஞர் வியாகூலனும், “சுதந்திரக் கர்ஜனை” நூலை தியாகி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் அவர்களின் புதல்வர் கி.முத்துராமகிருஷ்ணனும் உரையாற்றினர்.

தொடர்ந்து இந்த நூலாசிரியர் இதுவரை எழுதி வெளியாகியுள்ள “வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்”, “திருவையாற்று வரலாறு”, “பாரதி போற்றிய பெரியோர்கள்”, “தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள்”, “பட்டினத்தார் பாடல்களுக்கான எளிய உரை”, இப்போது வெளியாகும் “தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள்”, “சுதந்திர கர்ஜனை” ஆகிய நூல்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசினார் குப்பு வீரமணி அவர்கள்.

வழக்குரைஞர் நா.பிரேமசாயி, பி.ராஜராஜன், ஜி.ரவிக்குமார், இரா.மோகன் ஆகியோரும் ஆசிரியரைப் பற்றியும், அவரது நூல்கள் பற்றியும் பேசினார்கள்.  80ஆம் அகவையினுள் நுழையும் ஆசிரியர் தஞ்சை வெ.கோபாலன் பற்றிய ஓர் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் லட்சுமி ரவி ஒரு வாழ்த்துப் பா எழுதி அளித்தார்.

தஞ்சை மராத்திய மன்னர்களுக்கு முன்பாக தஞ்சையை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரச குடும்பத்தார் ஆண்டு வந்தனர். கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுததேவராயரின் உறவினர் சேவப்ப நாயக்கர் தஞ்சாவூருக்கு விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி சார்பில் நியமிக்கப் படுகிறார். அவரைத் தொடர்ந்து வந்த அச்சுதப்ப நாயக்கர், அவரது மகன் ரகுநாத நாயக்கர், இறுதியாக விஜயராகவ நாயக்கர் ஆகியோர் தஞ்சையை சுமார் 128 ஆண்டுகள் ஆண்ட வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சதர் பற்றிய சிறப்பான குறிப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன. சேவப்பர் நாயக்கர் நீர்நிலைகள் பதுகாப்பு, நீர் பங்கீடு பற்றியெல்லாம் மிகச் சிறப்பான நடவடிக்கைகளை செய்திருக்கின்றார். அச்சுதப்ப நாயக்கர் திருவரங்க ஆலய கோபுரங்களையும், சுற்றுப்பிரகாரங்களையும் கட்டிக் கொடுத்த விவரங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசி அரசர் விஜயராகவர் மதுரை நாயக்கர் படைகளால் தஞ்சை நகரத்தின் மையப்பகுதியில் வெட்டிக் கொல்லப்படும் செய்திகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

“சுதந்திர கர்ஜனை” எனும் நூல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1857இல் நடந்த சிப்பாய் கலகம் என வருணிக்கப்பட்ட முதல் சுதந்திரப் போரில் தொடங்கி இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரையிலான வரலாற்றைச் சுருக்கமாகக் காணக் கிடைக்கின்றது. இவ்வரலாறு சிப்பாய் கலகம் தொடங்கி பின்னர் விக்டோரியா மகாராணி இந்தியாவை இங்கிலாந்து நேரடியாக ஆளத் தொடங்கிய காலம்; பின்னர் 1906 வரையிலான திலகர் காலம், 1915க்குப் பின் இந்தியாவுக்கு வந்த மகாத்மா காந்தியடிகள் காலம் 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள், 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நமக்குக் கிடைத்த சுதந்திரம் வரை கூறப்பட்டிருக்கிறது. இது வெறும் வரலாற்று ஆவணமாக இல்லாமல், ஒரு வரலாற்றுப் புதினம் போல சொல்லப்பட்டிருக்கிறது.

பெரும்பாலும் காந்திய கொள்கைகளின்படி நடத்தப்பட்ட சுதந்திரப் போரில் அகிம்சை, சத்தியாக்கிரகம் ஆகிய காந்திய தர்மங்கள் காக்கப்பட்ட விதமும், பின்னர் 1942இல் மும்பை காங்கிரசின் தீர்மானத்தின்படி “வெள்ளையனே நாட்டைவிட்டு வெளியேறு” போராட்டம், அதன் பின் விளைவுகள் என்று சுதந்திர வரலாறு பேசப்படுகிறது. 1942 போராட்டத்தில் அதிகம் வெளியில் அறியப்படாத பல தமிழ் நாட்டு நிகழ்வுகள் குறிப்பிடப் படுகின்றன. வரலாற்றில் ஆர்வமுள்ள பலருக்கும் இந்த நூல்கள் பெருத்த நல்வராவாக அமைந்திருக்கின்றன.


கூட்ட ஏற்பாடுகளை பாரதி இயக்கத்தின் நா.பிரேமசாயி, திங்களூர் சீனிவாசன், இரா.மோகன் ஆகியோர் செய்திருந்தனர். நூலாசிரியர் தஞ்சை வெ.கோபாலன் ஏற்புரை நிகழ்த்த, இயக்கத்தின் செயலர் சார்பில் இரா.முத்துக்குமார் நன்றி உரையாற்றினார்.

நூல்கள் கிடைக்குமிடம்:

              அனன்யா பதிப்பகம்,  
              குழந்தை ஏசு ஆலயம் அருகில்,
              புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613005

பாராட்டு மடல்


திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 2016 ஜூலை 3ஆம் நாள் ஞாயிறன்று என்னுடைய இரண்டு நூல்கள் "தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு", "சுதந்திர கர்ஜனை" ஆகியவை வெளியீடும், என்னுடைய 80ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியையும் திருவையாறு பாரதி இயக்கம் சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது கும்பகோணம் திருமதி லட்சுமி ரவி அவர்கள் வழங்கிய பாராட்டு மடல் இது. அன்பர்கள் பார்வைக்காக:
Monday, 4 July 2016

மகுடாபிஷேகத்திற்கு ஒரு மகிழமலர்ச்செண்டு. - திரு.வெ .கோபாலனின் 80 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வாசித்தது.

அரங்கிலுள்ளோர் அனைவரையும்
அடக்கத்துடன் வணங்குகின்றேன்!  

கலைத்துறைகள் பலவற்றில்
காலூன்றி சேவையாற்றும்
மகத்தான மாமனிதனுக்கு -
மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கும்
ஆன்றோர்கள் அவைதனிலே,
அணில்குஞ்சு நான் வந்து,
இயன்றவரை என் முதுகில்
மணல் சுமக்க விழைகின்றேன்!

தமிழ் பணிகள் செய்துவரும்
தலைசிறந்த குடிமகனின்
அறிமுகம் கிடைத்ததற்கே - நான்
முகம் மலர்ந்து போகின்றேன்! - அவரின்
தொண்டினைப் பற்றியெல்லாம் இதுகாறும்
துல்லியமாய் எடுத்துரைத்தீர் - நான் அவரின்
பண்பினைப் பற்றி மட்டும்
பணிவாகக் கூறுகின்றேன்!

பதவி ஓய்வு பெற்றபின்
சாய்வு, தொய்வு ஏதுமின்றி
கலைப்பணியே கடமையென
கண்ணியமாய் வாழுகின்றார்.
எழுத்துச் சரத்துக்குள் எண்ணிலடங்கா
எண்ணங்களை ஏற்றிவைத்து
வலைத்தளத்தை வடிகாலாய்
வடிவமைத்துக் கொண்டுள்ளார்.

அவரோடு உரையாடுகையில்,
கருத்துச் செறிவோடு
கணக்கற்ற செய்திகளும்,
வருடக் குறிப்போடு
வரலாற்று நிகழ்வுகளும்,
உணர்ச்சிப் பெருக்கோடு
உதிரும் கவிதைகளும் - என்
சிற்றறிவுக்குள்  செல்லமுடியாமல்
சிக்கித் தவித்ததே உண்மை!

எளிமையின் உருவமவர்!
எளிதில் பிறர்க்கு உதவுபவர்!
சிந்தனை செய்வதில் செம்மல்!
சமூக சீர்திருத்த ஆர்வலர்!
அறிவுச் சுரங்கம்!
அள்ளக் குறையா அட்சயபாத்திரம்!
கற்பனையின் உச்சம்!
காருண்யத்தின் விருட்சம்!

கதை, கட்டுரை, நாடகங்கள்
இலக்கியம், வரலாறு, நாட்டியங்கள்
இவையெல்லாம் அவரின் சுவாசங்கள்!
அவற்றிற்கெல்லாம் நேசமாய் என் வந்தனங்கள்!
விழா நாயகனாம் திரு.கோபாலனின்
வானுயர்ந்த செயல்திறனை,
கார்மேகம் சூழ்ந்துவந்து
நீர்துளியால் வாழ்த்தட்டும்!
வான் மீதிருந்து தேவர்கள்
வாழ்த்துப்பா பாடட்டும்!

ஒரு மலருக்குச் சிறப்பு - அதன்
நிறமும், மணமும்.
கடலுக்குச் சிறப்பு - அதன்
அலையும், ஆழமும்.
மலையின் சிறப்பு - அதன்
உயரமும், சிகரமும்.
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்! - ஆம்
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்!

வாழ்க அவரின் பணி!
வளர்க அவரின் தொண்டு!

நன்றி வணக்கம்!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின்
“மருமக்கள்வழி மான்மியம்” தொகுப்பில்.

பொய்கள் அடைக்கல புகுமிட மாகியும்
குதர்க்கம் கடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்தவோர்
அண்டப் புரட்டன் வக்கீல் ஆபீசில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை அறிந்து
காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்
காரண வனைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்என்றார்
புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில்
தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம் முன்செய்த நல்வினைப் பயனோ?
தேரை முன்செய்த தீவினைப் பயனோ?
ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்?
செல்லும் செலவு செய்திட, ரூபாய்
நூற்றைம் பதுக்கோர் நோட்டு, வக்கீல்
மைத்துனன் முத்து வாத்தியார் பேர்க்கு
எழுதி முடித்தார், எடுத்து வந்த
ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்,
இவரிவர் சாட்சிகள் என்றும் சொன்னார்;
வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்
மூத்த பிள்ளையே முதலாம் சாட்சி;
மாத்தால் கணக்கு மகாரா சன்மகன்
பிச்சைக் காரன் பின்னொரு சாட்சி;
இருக ணில்லா இருளப் பன்மகன்
முத்தொளி மறவன் மூன்றாம் சாட்சி,
ஐயம் பிள்ளை அண்ணாவி புதல்வன்
நல்ல பிள்ளை நாலாம் சாட்சி;
பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
யாடும் பெருமாள் ஐந்தாம் சாட்சி;
நம்பர் பதித்த நாலாம் மாதம்
ஒருநாள் காலை உறக்கப் பாயில்
எழுந்(து)என் கணவர் இருக்கும் பொழுது
கருப்பன் கட்டையன் கப்படா மீசைக்
காரன் ஒருவன் காலனைப் போல
கோர்ட்டு சம்மனைக் கொண்டு வந்தான்!
நச்சுவா யண்ணன் நாச காலன்
வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான்,
எண்ணியது போல எல்லாம் ஆச்சுதே,
நினைத்தது போல நேரம் விடிந்ததே!
இந்நாள் இங்கு யான்படும் பாடெலாம்
நாளை
அவரும் மக்களும் அனுபவிப் பார்கள்
யாதும் தடையிலை, யாதும் தடையிலை;
பத்தினி என்சொல் பழுதா காது,
உத்தமி யென்சொல் ஊரையும் சுடுமே!
கேட்கும் கேட்கும், தெய்வம் கேட்கும்!
சேவகன் வந்த காரியம் தெரிந்தோ,
இயல்பாய்த் தானோ, (யாதோ அறியேன்)
மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை
அண்ணனும் அப்பொழு(து) அங்கு வந்து,
யார்இவன்என்றனர், ‘இன்னார்
சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்துஎன்
புருஷனை நோக்கி, “போன தெல்லாம்
போகட்டும் ஐயா! பொய்கைப் பற்றில்
ஆறு தடியும் அணஞ்சி விளையும்
துலுக்கன் தோப்பும, தொட்டிச்சி மேடும்
மேலத் தெருவில் மேடை வீடும்,
ஈரணை ஏரும் ஏழு பசுவும்,
யாதொரு கடனும் இல்லா மல்நீர்
இருக்கு மட்டும் யாப்பிய மாகவும்
அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள்
ஒன்று விடா(து)உகந் துடைமை யாகவும்
எடுத்துக் கொள்ள ஓர்ஓலை யெழுதி
உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல்
வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல்
சும்மா இருப்பது மெத்தச் சுகமாம்
இப்படி ராஜி எழுதிக் கொடுக்க
உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும்.
வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து
கறகற வென்று கறங்கி மயங்கி
கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி
வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம்!
அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்!
தொல்லைக்குத் தூது சொல்லிட வேண்டாம்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
பண்டொரு நீதி பதிதம் கோர்ட்டு
வாயிலின் வந்த மனித ரெல்லாம்
உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி
வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்
தாட்பொதி யொன்று தலையிற் சுமந்து
வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்
கண்களால் கண்டு, கண்டு நாளும்
நல்லறிவு எய்திட நடைநடை தோறும்
இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
செய்து வைத்த கதைதெரி யாதோ?
இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்
இவைக ளன்றிவே(று) எவையும் உண்டோ?
புத்தி யில்லாஇரு பூனைகள் பண்டு (140)
வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி
உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்
நாம்,
பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ?
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்.
அரையடிச் சுவருக் காகஐக் கோர்ட்டு
வரையிலும் ஏறி, வழக்குப் பேசி
அந்தி புரத்து மந்திரம் பிள்ளை
அடியொடு கெட்டது அறியமாட் டீரோ?
வடக்கு வீட்டு மச்சம் பியும்அவர்
மருமக் களுமாய் வருசம்எட் டாக
மாறி மாறி வாதம் செய்து,
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம்
கண்ணால் இன்று காண வில்லையோ?
வேலுப்பிள்ளை வீட்டு நம்பரில்
ஐந்தாம் சாட்சி ஆண்டி அவனை
அழஅழப் படுத்தி, அறுபது ரூபாய்
வாங்கிக் கொண்டு, மேல்வாயிதாத் தோறும்
வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்
பானையி லேபத் தரிசி இல்லை!
உப்போ புளியோ ஒன்று மில்லை!
உச்சிக்கு எண்ணெய் ஒருதுளி யில்லை!
தொட்டில் கட்டத் துணியு மில்லை,
காந்தி மதிக்குக் கண்டாங்கி இல்லை,
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை,
இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழிநான் கொடுக்க வருவே?’
என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
முளைய நல்லூர் முதல்பிடிப் பிள்ளை
அண்ணனும் இப்படி யாகக் காரணம்,
விளாத்திக் கோண விவகார மல்லவோ?
எத்தனை வகையை இழந்தார், அப்பா!
மூக்கறை யன்விளை மூலையில் நிற்கும்
பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்
தாங்கி,மீதியும் தருமே, அப்பா!
அந்த,
மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
எல்லா நகையும் இறக்கிவிட் டாளே!
ஒவ்வொரு காதிலும் உழக்குழக் குப்பொன்
இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே!
கருந்தாளி உலக்கை கையில் எடுத்(து)அவள்
கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
யாவ ராயினும் எண்ணினது உண்டா?
என்ன செய்வாள், ஏழை! பாவம்!
நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய்
ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
இதுவும்செய்யும் மேலே எதுவும் செய்யும்;
கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்
வல்லம் வல்லமாய் மாம்பழம் அனுப்பவும்
பானை பானையாய்ப் பால்நெய் யனுப்பவும்
மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்
வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்
யாரால் முடியும்? யாரால் முடியும்?
எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்? ஐயா,
வழக்கும் இழந்து, வகையும் இழந்து
யாவும் இழந்து உளம்ஏங்கி யிருக்கும்
கைலாசம் பிள்ளைக் கரையாளன் வீட்டை
வக்கீல் பீஸு பாக்கி வகையில்
எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?
இந்த மாசம் எட்டாந் தேதி
மேலத் தெருவில் .... வீட்டில்
ஜப்திக்கு வந்த தலைவன், ஐயோ
எள்ளள வேனும் இரக்கமில் லாமல்
அந்தக்
கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும்,
தண்ணீர் குடிக்கும் சமயம் பார்த்துப்
பிள்ளைக் கெண்டியைப் பிடுங்கச் செய்ததும்
சருவப் பானை சட்டுவம் அகப்பை
குட்டுவம் செம்பு குழியல் முதலாய்
உப்பொடு சிரட்டை ஒன்றுமில் லாமல்
எல்லாம் வண்டியில் ஏற்றிச் சென்றதும்
நாம்
கண்ணாற் கண்டதோ? கனவோ? ஐயா!
நாமெலாம் சேர்ந்து நடத்தின கட்சிக்
கொடையில், மாடன் கொண்டாடி நம்பி
சந்தனம் பூசிச் சல்லடம் கட்டிப்
பூவை யெடுக்கப் போன பொழுது
வாரண்டுக் காரன் வந்ததை யறிந்து
குட்டிச் சுவரெலாம் குதித்துச் சாடி,
வாய்க்கால் வழியே வடக்கே யோடி
ஒருவரும் காணாது, ஓச்சன் குளத்து
மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்
சாமி சுடலைச்சாம்பலி லாடி
விளையா டுதற்கு வேகமாய்ப் போகிறார்
என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம்
எழுந்து போனதும், எங்கும் தேடிக்
காணா தானதும், கடைசியில் உண்மை
தெரிய வந்ததும், செலவோடு செலவென்று
ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
வாரண்டை அன்று மடக்கி விட்டதும்
நடந்த காரியமோ? நாடகந் தானோ?
வியாச்சியம் வேண்டாம் வியாச்சியம் வேண்டாம்,
தேடின முதலைத் தெருவில் வாரி
இறைக்க வேண்டாம், இறைக்க வேண்டாம்.
அல்லும் பகலும் அலுப்பில் லாமல்
ஆஆ என்(று)அலை ஆமீன் வாயில்
அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்
பொல்லா மீன்இது போலொரு மீனைக்
கடலிலும் கூடக் கண்டவ ரில்லை.
எவரினும் பெரியவன் யானே ஆவேன்,
எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்
இம்மிருகத் தையும் எடுத்தொரு நொடியில்
வானெலாம் சுற்றி வருவதற் குள்ள
ஆற்றலு முடையேன், ஆனால், அத்திறம்
அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட
அற்பமும் ஆசை எனக்கிலை, அன்றியும்
உருவமோ, நீளமோ, உயரமோ கண்டே
மூட உலகம் மோசம் போகும்;
ஆதலால் ஒருவரும் அறியா திருந்(து)இந்
நாலுகை யானை நடத்து கின்றேன்
என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று
எண்ணா(து) டம்பம் எடுத்துரைப் பதுபோல்,
இரவும் பகலும் இடைவிடாமல்
பற்பல வருசம் படித்து பீ.எல்
எம்.எல் பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்
யாங்க ளில்லையேல் என்செய் வார்?’எனப்
புத்தி யில்லாது புலம்பித் திரியும்
குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக்
குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
இன்ன படியென்று எழுதி விட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன்,
விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்,
வருகிற வழியாய் வந்(து)எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
தருவேன்என்று சற்றும்வாய் கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருசன்
நிறையா வயிற்றை நிறைந்திடக் கடலைத்
திறந்துவிட் டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும்
சாட்சிப் படிகளும் சமன்சுப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிசன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்
வாரண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ? ஐயா!
கோர்ட்டுப் பீசு குமாஸ்தாப் பீசு
கூடிக் காப்பி குடிக்கப் பீசு
வெற்றிலை வாங்கிட வேறொரு பீசு
வக்கீல் பீசு மகைமைப் பீசு
வக்கா லத்து வகைக்கொரு பீசு
எழுதப் பீசு சொல்லப் பீசு
எழுதிய தாளை எடுக்கப் பீசு  
நிற்கப் பீசு, இருக்கப் பீசு
நீட்டின கையை மடக்கப் பீசு
பாரப் பீசு கீரப் பீசு
பார இழவு பயிற்றுப் பீசு
கண்டு பீசு, காணாப் பீசு
முண்டுத் துணிக்கொரு முழுமல் பீசு
அந்தப் பீசு, இந்தப் பீசு
ஆனைப் பீசு, பூனைப் பீசு
ஏறப் பீசு இறங்கப் பீசு
இப்படி யாக என்றென் றைக்கும்
பீசு பீசாகப் பிச்சி எடுக்கும்
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!

குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்!