இன்று தேவர்களை அழைக்கிறோம்.
இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தை காட்டும் பொருட்டாக.
அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி,
பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை யழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.
கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி,
உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும் பொருட்டாக.
இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்து தரும் பொருட்டு.
எமது குற்றங்களை யெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி, எமக்கு அமர இன்பத்தைத் தரும்
பொருட்டு.
எமதறிவையே தேனாக்கிக் கொடுக்கிறோம். இந்தத் தேனை தேவர்கள் உண்டு களிபெறுக.
எமது மந்திரங்கள் தேவருடைய திருவடியைப் பற்றுக. அவர்களை இந்த வேள்வியிலே கொண்டு தருக. எமதுடலையும், உயிரையும், அறிவையும் அவர்களுக்குக் கோயிலாக்குகிறோம். எமதுடைமைகள் எல்லாம் அவர்களைச் சார்ந்தன; எமது மனைவி மக்கள் அவர்களுக்குச் சேவகர்; எமதுவீடு, வாசல், மாடு, கழனியெல்லாம் அவர்களுக் குரியன. எமது தொழில் அவர்களுடையது. எமது நினைப்புக்களெல்லாம், ஆசைகளெல்லாம், விருப்பங்கள் எல்லாம், இன்பங்கள் எல்லாம் தேவர் முன்பு வைக்கிறோம்; அவை அவரின் உணவாகுக.
வானவரே, வந்து சுவை கொள்ளுவீர்.
அன்பே வா, மித்ரா; உன்னைப் பணிகின்றோம். உன்னாலே காக்கப்பட்டவன் அழிவதில்லை.
தோல்வி பெறுவதில்லை. இவனை இங்கிருந்தேனும், தொலையில் இருந்தேனும் தீங்கு வந்து தீண்டுவதில்லை
என்று எமது முன்னோர் கண்டனர். நாமும் அங்ஙனமே காண்கிறோம்.
அனைத்தையும் ஆழ்ந்து நிற்கும் அநந்த நிலையே, வருக வருணா, எல்லையற்ற
நினதாண்மை, இந்த எமதறிவாகிய யாகஸ்தலத்திலே நிறுத்தி, எமது கட்டுகளை எல்லாம் வெட்டிவிடு
வலிமையே, நினது வரவு நல்வரவு. உன்னை மிகவும் வேண்டுகிறோம். அர்யமந், எமக்கு வலிமை
தருதல் வேண்டும்.
இன்பமே வா, வா, வா. பகதேவா, எப்போதும் எம்மோடு கூடி வாழ்ந்திரு. உனது முகம் மிகவும் அழகுடையது. அதைப் பார்த்துக்கொண்டே யிருந்தால் போதும் எமதுள்ளம் நிறைந்திருக்கும். உனது உதயதேவி முன்னமே வந்து விட்டாள். இளையவள், "செந்நிறமுடையவள், என்றும் விழிப்பவள், இவளைத் தீ கொணர்ந்து கொடுத்தான். தீ எம்மிடத்தே வளர்கிறான். தீ வலியவன். அவன் உண்மையையுடைய கடவுள். உள்ளத்தை அவனுக்கு விறகாகக் கொடுத்தோம். அதில் என்றும் எரிவான்; அவிந்து போகமாட்டான். நீ எமது தலைவன். அவனை முப்போதும் சரண மடைகின்றோம். இன்று இப்போது தேவர்களை அழைக்கிறோம். வா, சூர்யா, தெய்வ ஒளியே, ஞானச் சுடரே. அமிர்த ஊற்றே, வலிமையின் தந்தையே, வானவர் வழியே, அநந்தவிரிவே, ஆக்கமே, புகழே, வெற்றியே, எமதரசே, நின் வரவு நன்று, மிகவும் நன்று. மருத்துக்களே, புயற் காற்றுக்களே, மனதின் அசைவுகளே, மதிகளே, ஒளிமிகுந்தீர், வலிமையுடையீர், வானத்தையும் மண்ணையும், வலிமைக் களியிலே, குமுறும்படி செய்வீர் மேகங்களைப் புடைத்து நல்ல மின்னல் காட்டுவீர். மருத்துக்களே, வாரீர். மனதிலே நேரும் சோர்வுகளை யெல்லாம் உங்கள் வீரத்தினாலே தீர்த்து விடுக. நீங்கள் வாயுமண்டலத்தைப் புனிதப்படுத்துகிறீர்கள் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கிறீர்கள். வருக. இன்று தேவர்களை அழைக்கின்றோம். காற்றே வா. இங்கேயே இரு எப்போதும்; திரும்பியே போகாதே. நீ உயிர், உன்னை வரிக்கின்றோம். அசுவினிதேவர் உயிர்ப் பரிகளிலே ஏறி வருகின்றனர். அவர் நோய்களைத் தீர்ப்போர். அவரை எம்முள்ளே பதியும்படி செய்கின்றோம். |
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Saturday, May 16, 2015
38. கலைகள் - இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment