பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 10, 2015

29. மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்



''காசி'' எழுதுவது:-
புதுச்சேரியில் சில தினங்களின் முன்பு நடந்தபெண்கள் ''மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்ட''மொன்றில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு:-

ஆரம்பம்
பார்வதி, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலியபடங்களுக்குப் பூஜை முடித்த பிறகு விடுதலைப் பாட்டுகள் பாடப்பட்டன. பிறகு ஸ்ரீமான் ஸ்ரீநிவாஸாசார்யர் புத்திரி மண்டயம் ஸ்ரீது கிரியம்மா பின்வரும் உபந்யாஸம்செய்தார்:

முயற்சியின் பயன்

நமது தேசத்தில் தெய்வ பக்தி அதிகமென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தெய்வத்தை நம்பிவிட்டு நாம் யாதொரு முயற்சியும் செய்யாமல் வெறுமே இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும். தெய்வத்தை நம்பி நாமும் முயலவேண்டும். எப்படியென்றால் ஒரு குழந்தை அழாமல் வெறுமே இருந்தால் நாம் அதன்மீது கண்ணைச் செலுத்தாமல் மற்ற வேலைகளில் கவனஞ்செலுத்துகிறோம். அழத்தொடங்கினால் ஆத்திரத்துடன் வேலையைவிட்டு அதை எந்த விதத்திலாயினும் ஸமாதானப்படுத்த முயலுகிறோம். அதுபோல நாம் ஒரு கார்யத்தில் ஊக்கம் வைத்து பிரயத்தினப் பட்டால் அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டும்.

இப்போது நாம் முயற்சி செய்யவேண்டியவிஷயம் பெண் விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக, நாம் அடிமைப் பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா?  இல்லை.

'உங்களுடைய வழி இதுதான்' என்று ஒரு சட்டம்ஏற்படுத்தி வைத்தது.

இப்போது நாம் 'இப்படி இருக்கமாட்டோம்' என்றால், 'சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னெரு வழி உண்டாக்கியிருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்றுகூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

'நான் தூங்குவேன்' என்று தெய்வத்தினிடம் சொன்னால் தெய்வம்:-  'ஸூசகமாகத் தூங்கு, உனக்கு மெத்தென்று படுக்கை போட்டுத் தருகிறேன்' என்று சொல்லி நம்மைத் தட்டித் தூங்கப் பண்ணுகிறது.

'மாட்டோம்! நாங்கள் எழுந்து உலக விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதோ; இதோ எழுகிறோம்' என்றால், 'எழுந்திரு குழந்தாய், இதோ பார்;  உனக்கு இந்தப் பெரிய வழியை ஏற்படுத்தி இருக்கிறேன். அந்த வழியே போய் நீ நன்மை அடை' என்கிறது.

ஆதலால், ஸகோதரிகளே, தெய்வத்தை நம்பி நாம் முன்னடையும் வழியை நாமே தேட வேண்டும். 'முயற்சிதிருவினை ஆக்கும்' என்பது முன்னோர் உறுதிமொழி. நாம் எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்தல் அவசியம். தெய்வம் நன்மை செய்யும். நம்முள் ஏதேனும் வருத்தம் நேர்ந்தால், அதை நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்த இடத்தில் தாக்ஷண்யமில்லாமற் சொல்லித் தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவுகொடுப்பாள். நாம் அழுவதற்கு வழி முயற்சியினால்தெய்வத்தை இரங்குவித்தல். ஆதலால் முயற்சிசெய்வோம். ஓம் வந்தே மாதரம்.


No comments: