பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, January 20, 2016

சக்தி -- மகாகவி பாரதியாரின் "சக்தி" பாடல்கள் சில.


துன்ப மிலாத நிலையே சக்தி,
      தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,
அன்பு கனிந்த கனிவே சக்தி,
      ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
      எண்ணத் திருக்கும் எரியே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
      முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
      சொல்லில் விளங்கும் சுடரே சக்தி,
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
      தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி,
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
      பாட்டினில் வந்த களியே சக்தி,
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
      சங்கரன் அன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
      மாநிலங் காக்கும் மதியே சக்தி,
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
      சஞ்சல நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
      விண்ணை யளக்கும் விரிவே சக்தி,
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
      உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி. 

சக்தி விளக்கம் 

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத்
தொல்லை மதங்கள் செய்யுந் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்!
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்று பழவேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்,
சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.

ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்
அன்னை யருள் பெறுதல் முக்தி,
மீதி உயிரிருக்கும்போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்று சக்தி என்று.

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 

ராகம் - பூபாளம் தாளம் - சதுஸ்ர ஏகம்

கையை,
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சாதனைகள் யாவினையுங் கூடும் - கையை
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி யுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணை,
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சக்தி வழியதனைக் காணும் - கண்ணை
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி திருப் பாடலினை வேட்கும்.

வாய்,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி புகழினையது முழங்கும் - வாய்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும்.

சிவ,
சக்திதனை நாசி நித்த முகரும் – அதைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி திருச் சுவையினை நுகரும் - சிவ
சக்தி தனக்கே யெமது நாக்கு.

மெய்யை,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி தருந்  திறனதி லேரும் - மெய்யைச்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாதலற்ற வழியினைத் தேறும்.

கண்டம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி யுடனென்று  முறவாடும்.

தோள்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தாரணியு மேலுலகுந்  தாங்கும் - தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி பெற்று மேருவென வோங்கும்.

நெஞ்சம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதைத்
தாக்க வரும் வாளொதுங்கிப் போகும்.

சிவ,
சக்தி தனக்கே யெமது வயிறு - அது
சாம்பரையு  நல்லவுண  வாக்கும் - சிவ
சக்தி தனக்கே யெமது வயிறு - அது
சக்திபெற வுடலினைக் காக்கும்.

இடை,
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை
சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன்
சாதிமுற்றும் நல்லறத்தி லூன்றும்.

கால்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சாடி யெழு கடலையுந்  தாவும் - கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அது
சஞ்சல மில் லாம லெங்கு மேவும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை  கூடும் - மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில்
சாத்துவிகத் தன்மையினைச் சூடும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி யற்ற  சிந்தனைகள் தீரும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சாரு நல்ல உறுதியுஞ் சீரும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவுந் தேசும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி நுட்பம் யாவினையு நாடும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தி சக்தி யென்று குதித்தாடும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - அது
சந்ததமுஞ் சக்திதனைச் சூழும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - அதில்
சாவு பெறுந் தீவினையும் ஊழும்.

மனம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - எதைத்
தான் விரும்பினாலும் வந்து சேரும் - மனம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - உடல்
தன்னிலுயர் சக்திவந்து நேரும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத்
தாரணியில் நூறுவய தாகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - தோள்
சக்தி பெற்றுநல்ல தொழில் செய்யும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ
சக்தி நடையாவு நன்கு பழகும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - முகம்
சார்ந்திருக்கு நல்லருளு மழகும்.

மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு - உயர்
சாத்திரங்கள் யாவு நன்குதெரியும் - மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல
சத்திய விளக்கு நித்த மெரியும்.

சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல
தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில்
சாரு நல்ல வார்த்தைகளும் பாட்டும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமை யாக்கு – அது
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமை யாக்கு
சக்தி புகழ் திக்கனைத்து நிறுத்தும்.

மனம்,
சக்தி தனக்கே யுரிமை யாக்கு - அது
சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமை யாக்கு - அதில்
சார்வதில்லை யச்சமுடன் சூதும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி பரிமள மிங்கு வீசும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சஞ்சலங்கள் யாவினையு மழிக்கும்.

சித்தம்,
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி வந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம்
சக்தி தனக்கே யுரிமையாக்கு - அது
சக்தி யருட் சித்திரத்தில் ஆழும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சங்கடங்கள் யாவினையு முடைக்கும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அங்கு
சத்தியமும் நல்லறமுங் கிடைக்கும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தியுறை விடங்களை நாடும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தர்க்க மெனுங் காட்டிலச்ச நீக்கும் - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
தள்ளிவிடும் பொய்ந்நெறியுமந் தீங்கும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில்
சக்தி யொளி நித்தமு நின் றிலகும்.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
சார்வதில்லை யையமெனும் பாம்பு - மதி
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
தான் முளைக்கும் முக்தி விதைக் காம்பு.

மதி,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தாரணியி லன்பு நிலை நாட்டும் - மதி
சக்தி தனக்கே யடிமை யாக்கு - அது
ஸர்வ சிவ சக்தியினைக் காட்டும்.

மதி,
சக்தி தனக்கே யடிமை யாக்கு - அது
சக்தி திருவருளினைச் சேர்க்கும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
தாமதப் பொய்த் தீமைகளைப் பேர்க்கும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
தாக்கவரும் பொய்ப்புலியை யோட்டும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சத்தியாநல்லிரவியைக்  காட்டும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சக்தி விரதத்தை யென்றும் பூணும் - மதி
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ
சக்திதரு மின்பமு நல் லூணும்.

மதி,
சக்தி தனக்கே யடிமையாக்கு - தெளி
தந்தமுதம் பொய்கையென வொளிரும் - மதி
சக்தி தனக்கே யடிமையாக்கு - அது
சந்ததமு மின்பமுற மிளிரும்.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம்
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தாமதமும் ஆணவமும் தீரும்.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தன்னை யவள் கோயிலென்று காணும் - அகம்
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தியெனுங் கடலிலோர் திவலை - அகம்
சக்தி தனக்கே யுடைமை யாக்கு - சிவ
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை.

அகம்,
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம்
சக்தி தனக்கே யுடைமையாக்கு - அது
சக்தி திருமேனி யொளி ஜ்வலிக்கும்.

சிவ,
சக்தி என்றும் வாழியென்று பாடு - சிவ
சக்தி சக்தி யென்று குதித்தாடு - சிவ
சக்தி என்றும் வாழியென்றுபாடு - சிவ
சக்திசக்தி யென்று விளை யாடு.


சிவசக்தி புகழ்

ராகம் - தன்யாசி தாளம் - சதுஸ்ர ஏகம்

ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,
சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு.

ஓம், சக்திமிசை பாடல்பல பாடு - ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு.
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு.

ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு - என்றும்
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு.
சக்திபுக ழாமமுதை அள்ளு - மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.

ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு.
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.

ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - இதைச்
சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை - அதில்
தன்னமுத மாரிநித்தம் பெய்கை.

ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு,
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச்
சாதிகளெல் லமதனைக் கேட்டு.

ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு - அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு.
சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.

ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு - நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு,
சக்திகளை யேஇழந்துவிட்டால் - இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு.

ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு - ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு,
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருளென் றேமனது தேறு.

ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து - சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து,
சக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் - சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! 



1 comment:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html