பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 28, 2015

அன்னாபிஷேகம்கரூரில் கோயில் கொண்டருளும் அருள்மிகு ஆநிலையப்பர் எனும் பசுபதீஸ்வரருக்கு நாளது அக்டோபர் 26, ஐம்பசி திங்கட்கிழமையன்று அன்னாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. அன்னாபிஷேகம் என்றால் என்ன, சிவாலயங்களில் ஏன் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்பது போன்ற விவரங்களை கீழே காணும் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. அன்னாபிஷேகத்தன்று சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து சிவபெருமான் பிரசாதத்தைப் பெற்றுச் செல்லுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

                                                              அன்னாபிஷேகம் 
வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.
அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.  அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போம்.  ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது.
பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் .
அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம். ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர். சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர். காஞ்சியில் காமாக்ஷ’யம்மன் ஆலயத்தில்
அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே                                                          ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது,
அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.


இந்தியாவின் அரியவகை நடனங்கள்.


Bharatha Natyam

1. பரத நாட்டியம்: இது தமிழ் நாட்டில் ஆடப்பட்டு வரும் அரிய நடனக் கலை.

                                                                           Kuchipudi

2. 'குச்சிபுடி' எனும் இவ்வகை நடனம் ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள குசேலபுரி எனும் கிராமத்தின் பெயரைக் கொண்டது. இவ்வகை நடனம் ஆந்திராவில் பிரபலமாக ஆடப்படுவது.

                                                                          Kathakali

3. 'கதக்களி' எனும் அற்புதமான நாட்டிய நாடக வகை கேரள மாநிலத்தின் கலை நயத்துக்குப் பெயர் போன நடனம். கேரளத்தில் கலாமண்டலம் எனும் அமைப்பு அமைத்துத் தந்த இந்த அரியவகை நாட்டிய நாடக வகையில் பெரும்பாலும் ஆண்களே பங்கேற்பார்கள்.

                                                                          Mohiniattam

4. 'மோகினியாட்டம்' எனும் இவ்வகை நடனமும் கேரள மாநிலத்தின் கலைக் கொடை. கதக்களி ஆண்களே ஆடுவதற்கு இருப்பதைப் போல பெண்கள் பங்கேற்பதற்கென்று கலாமண்டலம் உருவாக்கிய அரிய வகை நடன பாணிதான் 'மோகினியாட்டம்'. இதில் தலைசிறந்த நடனக் கலைஞர்கள் இருந்து வருகிறார்கள்.

                                                                             Odissi

5. 'ஒடிசி' எனும் இந்த நடனம் ஒடிஷா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டது. சோனாலி மான்சிங் எனும் மாபெரும் கலைஞர் இந்தக் கலையை உலகறியச் செய்தவர். இப்போது கரக்பூர் பல்கலைக் கழகத்தில் ஒடிசி நடனப் பயிற்சி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

                                                                           Kathak

6.'கதக்' எனப்படும் இவ்வகை நடனம் பாரசீகத்தில் உருவான கலை. இது முகலாயர் காலத்தில் இந்தியாவுக்கு வந்து இந்திய பாரம்பரிய கலை வடிவத்தோடு இணைந்து 'கதக்' எனும் பெயரில் ஆடப்பட்டு வருகிறது. முகலாய மன்னர்கள் அவைகளில் இவை பெரிதும் அந்தக் காலத்தில் ஆடப்பட்டு வந்திருக்கிறது. இவ்வகை நடனத்தில் 'கால்கள்' தாளமிடும் வேகத்தையும், நடனம் சுற்றிச் சுழன்று ஆடும் வேகத்தையும், பார்ப்போர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்தது.


                                                                           Manipuri

7. 'மணிப்புரி' நடனம், அசாம், மணிப்புரி, மேகாலயா மாநிலங்களில் ஆடப்படும் நடன வகை. இதில் உடைகளும், ஆடும் விதமும் மற்ற நடன வகைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். வண்ணமயமான கலை இது.

                                                                       Yakshagana

8. "யக்ஷ கானம்" எனப்படும் கர்நாடக மாநிலத்தின் தெருக்கூத்து வகையைச் சேர்ந்த நாட்டிய நாடகம். இது குறித்து கன்னட மொழி எழுத்தாளர்கள் ஆர்வமும், ஆய்வும் நடத்தி வந்திருக்கிறார்கள்.

                                                       Pride of Tamilnadu Therukkoothu

9. 'தெருக்கூத்து' இது தமிழ் நாட்டின் பாரம்பரியமான கிராமியக் கலை. இரவு முழுவதும் பாடி, நடித்து புராணக் கதைகளைச் சொல்லும் கலை. இதில் ஆண்களே பெண் வேஷமும் அணிவர், கலைஞர்களே சொந்தக் குரலில் பாடுவர் (அபஸ்வரமாக இருந்தாலும்). கிராமப் புறக் கலையான இது இப்போது நலிந்து வருவது வருத்தமளிக்கிறது.

     

Wednesday, September 23, 2015

கௌதம புத்தர்

                                               

‘கௌதம புத்தர்’ என்றும் சித்தார்த்தர் என்றும் எல்லோராலும் போற்றப்படும் இவர் புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்ல எண்ணம்’, ‘நல்ல வாய்மை’, ‘நல்ல செய்கை’, ‘நல்ல வாழ்க்கை’, ‘நல்ல முயற்சி’, ‘நல்ல சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.
இவ்வுலகில் தோன்றிய மகா ஞானிகளில் விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகக் கருதப்பட்டவர் புத்தர். இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்களுக்கு, அவரது வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து,  இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. வினைகளை அதிகரிக்காமல்,  நல்ல கர்மங்களைச் செய்து, மனதைத் தூய்மைப்படுத்துவதால் ஞானத்தை அடையும் போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறிது பார்ப்போம்.
இவர் கிறிஸ்துவுக்கு முன்பு 563 ஆண்டுவாக்கில் இப்போது நேபாளத்திலுள்ள லும்பினி எனுமிடத்தில் பிறந்தார். அப்போது அது பாடலீபுத்திரம் அருகில் இருந்ததாகத் தெரிகிறது. சித்தார்த்தர் கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா என்ற அரசருக்கும், மகாமாயா என்ற அரசிக்கும் மகனாக பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது புனிதத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு அடையாளங்கள் இருந்தனவாம். அவர் பிறந்து, ஏழு நாட்களில் அவரது தாயார் இறந்ததால், மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.
 சித்தார்த்தரின் ஜாதக கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள் கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை, அவருக்குத் துன்பம், இறப்பு மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம் தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.
 ‘எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவானோ’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர், சித்தார்த்தனுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.
அரண்மனை வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது வாழ்வின் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார். ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான முதியவர், ஒரு நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப் பார்த்தார். முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர், மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ அமைதி தெரிந்தது. இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர், தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை, ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இரவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
உலக உடமைகளைத் துறந்து, துறவறம் பூண்ட சித்தார்த்தர்,  தனது தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற உடையில், அரண்மனையை விட்டு வெளியேறி, மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா  என்ற இடம் நோக்கிச் சென்றார். பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளுக்குச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.
ஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்கள் அவர் அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய கட்டுப்பாடுகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக் கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.
 தனது தேடலுக்குப் பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்த பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமய போதனைகளை யும், உபதேசங்களையும் பெற்றார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
புத்தர் தனது போதனைகளை போதிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு எடுத்துரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார். அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழை பணக்காரர் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக முக்கியமான மையங்களாகக் கருதப்படுகின்றன.
புத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்றார். அவர், இறுதியாகக் காகுத்தா ஆற்றில் குளித்தார். இதையடுத்து சிறிது நேர ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.


பழ.கருப்பையாவின் "தினமணி" இதழின் நடுப்பக்க கட்டுரை

For ready reference, the article is given below for spot reading.

திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!

First Published : 23 September 2015 01:33 AM IST
காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் நாடாண்டவர்!
 "தாய் மகனை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியபோது, "விடுதலைக்குப் பிறகு பார்க்கலாம்' என்றவர்! ஆனால் அவருடைய வயதைப் போக்கிவிட்டுத்தான் விடுதலை வந்தது!
 முறைசார்ந்த பள்ளிக் கல்வியைப் பெற்றவரில்லை; ஆனால் இணையற்ற அறிஞர்களுக்கு இணையாக அரசியல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவரை ஏராளமாகப் படிக்க வைத்தது!
 அவர் அரசியலில் இணைந்த காலம் எம்மான் காந்தி இந்த நாட்டை வழி நடத்திய காலம்!
 தன்னலமின்மை, உண்மை, தூய்மை, தியாகம், தேசியம், எந்த ஒன்றிலும் அறிவு சார்ந்த பார்வை என்னும் இவையே பொது வாழ்வின் அடிப்படை நிலைப்பாடுகள்! இவற்றில் நனைந்து ஊறி வளர்ந்தவர்தான் காமராசர்!
 அரசியல் என்றால் "அகப்பட்டுக் கொள்ளாமல் அகப்பட்டதைச் சுருட்டுவது' என்னும் "அரிய அரசியல் தத்துவம்' அறியப்படாத காலம் அது!
 சாதிகள் இருந்தன; ஆனால் அவை தலைதூக்கி ஆட முடியவில்லை; அவற்றிற்குப் பொதுவாழ்வில் எந்தப் பங்களிப்பும் இல்லை. மதத்தின் நிலையும் அதுதான்!
 தாய் தளைப்பட்டிருக்கிறாள் என்னும் நிலை, "நாம் ஒரு தாய் மக்கள்' என்னும் உணர்வுப் பெருக்கத்திற்குக் காரணமானது!
 1907-இல் வெள்ளைக்கார ஆட்சி வங்காளத்தில், இசுலாமியர்கள் மிகுதியும் வாழ்ந்த பகுதியைக் கிழக்கு வங்காளமாகத் தனித்துப் பிரித்தபோது, இசுலாமியர்களும் இந்திய சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து, "நாங்கள் இந்தியர்கள்; எங்களைப் பிரிக்க நீ யார்?' என்று கடுமையாகப் போராடியதன் விளைவு, அந்த பிளவு மூடப்பட்டு மீண்டும் ஒரே வங்கமாக்கப்பட்டது. அந்தப் பிரிவினையை உண்டாக்கிய தலைமை ஆளுநர் கர்சான், பாரதியால் "கர்சான் என்னும் குரங்கு' என்று வாயார வசைபாடப் படுகிறார்!
 ஆனால் அந்த வங்கப் பிரிவினையோடுதான் இந்திய விடுதலை மலர முடிந்தது என்னும் கால முரண் வேறு கதை!
 ஆயினும் வங்கப் பிரிவினை நிகழ்ந்து சீர்செய்யப்பட்ட சிறிது காலத்தில் தமிழ்நாட்டில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்றொரு இயக்கம் பிட்டி தியாகராயர் தலைமையில் முளைவிட்டது!
 தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும் நீதிக்கட்சி என்றும், பல்வேறாக அது அறியப்பட்டாலும், அதனுடைய அடிப்படை பார்ப்பன மறுப்பே!
 அடிமட்ட நீதிபதியிலிருந்து உயர்நீதிபதி வரை, அரசு அலுவலகங்களில் அடிநிலை எழுத்தரிலிருந்து, வெள்ளைக்காரனின் அதிகாரப் பகட்டில் ஒளிரும் நிருவாக சபை உறுப்பினர்கள் வரை, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று எல்லா வகை அலுவல்களும் அதிகாரங்களும் பார்ப்பனமயமாய் இருந்த காலம் அது!
 கல்விக்குச் சாதியில்லை என்பதும், மேல், கீழ் என்னும் வேற்றுமை இல்லை என்பதும், கல்வி வாயில்கள் அனைவருக்கும் பொது என்பதும் வெள்ளைக்காரனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளிலெல்லாம் பெரிய நன்மை!
 கடலனைய பார்ப்பனரல்லாத பெருங் கூட்டத்தில் புதிதாகப் படித்துவிட்டு வந்த சிலருக்குக் கூட அலுவலுமில்லை; அதிகாரமுமில்லை என்பது சூட்டைக் கிளப்பியது!
 அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு முழுக்கப் பார்ப்பனவசமாகி இருந்தது!
 ஆங்கிலக் கல்வியின் முதற் பயனைப் பெற்றவர்கள் அவர்கள்தாம்! அதன் காரணமாக கோட்டைக்கு நெருக்கமாகி வெள்ளைக்காரனுக்கு நடைபாவாடை விரித்தவர்களும் அவர்கள்தாம்; "வெள்ளைக்காரனுக்கு இந்த மண்ணில் என்ன வேலை!' என்று முதலில் கேட்டவர்களும் அவர்கள்தாம்!
 வெள்ளைக்காரனைக் கனவிலும் கலவரப்படுத்திய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் செக்கிழுக்கும் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு பார்ப்பனரல்லாத தலைமை காமராசர் வாயிலாகக் கிளர்ந்தெழும் காலம் வரை, காங்கிரசு பார்ப்பனப் பிடிக்குள்தான் இருந்தது!
 வ.உ. சிதம்பரம் பிள்ளை காலத்திற்குப் பிறகு காங்கிரசு மிதவாதத் தன்மையை அடைந்துவிட்டது!
 காங்கிரசுக்காகக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுபவர்கள் மூவர் என்றால் அந்த மூவரும் சேலம் விசயராகவாச்சாரியார், டி. ரங்காச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர ஐயர் என்பன போன்ற பெயருக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்! அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர்க் குழுவின் தலைவராயிருந்த மயிலாப்பூர் வி. கிருட்டிணசாமி ஐயர் வெள்ளைக்கார அரசில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார்!
 வாஞ்சி ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் நாட்டுப்பற்றில் குறைந்தவர்களல்லர்; தியாகத்திற்குப் பின்வாங்கியவர்களும் அல்லர்!
 ஆனால் சாதியால் மேல், கீழ் என்பதல்லாத வெள்ளைக்காரன் ஆட்சி போன பிறகு, ஏற்படப் போகும் காங்கிரசின் ஆட்சி உயர்வு, தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் கருதியதால், அவர்கள் வெள்ளைக்காரனுக்குச் சார்புநிலை எடுக்கும் அளவுக்குச் சென்றார்கள்!
 இந்தச் சார்பு நிலை வரலாற்றில் பெரும் அதிர்வை உண்டாக்கிய ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை அடைந்த நாளைத் "துக்க நாள்' என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு இழுத்துச் சென்றது!
 ஒரு பெருந் தேசபக்தராகவும், காந்தி பக்தராகவும் விளங்கிய ஈ.வெ.ரா., காந்தி கள்ளுக்கடை ஒழிப்பைச் சமூக உருவாக்கப் பணிகளில் ஒன்றாகக் கொண்டபோது, அதற்காகத் தன் தோட்டத்திலிருந்த விலைபெற்ற ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை; கதரைத் தலையில் தூக்கி விற்ற சீமான் வீட்டுப் பிள்ளை; தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு பெருந் தலைவர், ஒருநாள் "எது தேசம்? எதற்கு அதன்மீது பக்தி? யார் இந்தக் காந்தி?' என்னும் தலைகீழ் மாற்றத்தை அடைந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பது வரலாற்றில் பெரிய கேள்வி அல்லவா?
 அதற்கு அடிப்படையான காரணங்கள் பல உண்டு என்றாலும், காங்கிரசில் பெரியாரோடு சேர்ந்து பணியாற்றிய வ.வே.சு. ஐயரின் ஒரு நிலைப்பாடு, அந்த "ஈரோட்டு வெடிமருந்துக் கிடங்கு' தீப்பற்றிக் கொள்வதற்கும், அது வெடித்துச் சிதறி, தமிழ் நிலத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்கும் காரணமானது!
 அண்ணல் காந்தி ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களை மறுத்துத் தாய்மொழி வழியாகக் கல்வி என்பதை முன் வைத்ததை ஒட்டி சுதேசக் கல்வி நிறுவனங்கள் தோன்றின!
 வ.வே.சு. ஐயர் அத்தகையதொரு கல்வி நிறுவனத்தைக் குருகுலம் என்னும் பெயரில் 1922-இல் சேரன்மாதேவியில் தொடங்கினார்!
 காங்கிரசின் கல்விக் கொள்கையை வ.வே.சு. ஐயர் நடைமுறைப் படுத்த முன் வந்ததை ஒட்டி, காங்கிரசு அவருடைய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது; தனியார்களும் உதவினார்கள்!
 ஆனால் குருகுலத்தில் உணவு உண்ணச் செய்யும்போது மாணவர்களை அமர்த்தி வைப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது என்பது பெருஞ் சலசலப்பை ஏற்படுத்தியது.
 பார்ப்பனப் பிள்ளைகள் வேறு இடத்திலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வேறு இடத்திலும் உணவு உண்ணுமாறு செய்யப்பட்டார்கள்!
 சொ. முருகப்பா, வரதராசலு நாயுடு, அன்றையத் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஈ.வெ.ரா. எனப் பலர் கொதித்தெழுந்தனர்! காந்தி வரையிலும் குறுக்கிட நேர்ந்தது!
 "எங்களை இழிவுபடுத்துவதற்கா நாங்கள் பணம் கொடுத்தோம்? கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்றார் ஈ.வெ.ரா.!
 "தருமம் செய்துவிட்ட பணத்தைத் திருப்பிக் கேட்கிறவர் நமது நாயக்கர் ஒருவர்தான்' என்று வ.வே.சு. ஐயர் நகையாடினாரே ஒழியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை; முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை!
 ""சன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே குருகுல ஆசாரங்களும் இருக்கும்'' என்னும் நிலைப்பாட்டில் திண்ணமாக இருந்தவர் வ.வே.சு. ஐயர்!
 அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்றப் போய், தானும் தவறி விழுந்து வ.வே.சு. ஐயர் இயற்கை எய்தும் காலம் வரை இந்தச் சச்சரவு நீடித்தது.
 பெரியார் காங்கிரசிலிருந்து வெளிவந்ததற்கு இடஒதுக்கீடு போன்ற இன்னும் பல காரணங்கள் உண்டெனினும், விடுதலை அடைந்த இந்தியாவில் பார்ப்பனரல்லாதாரின் நிலை எவ்வளவு இழிந்ததாக இருக்கும் என்று பெரியாரை உணரச் செய்தது சேரன்மாதேவி குருகுல நிலைப்பாடுதான்!
 தன்மான இயக்கம் பிறக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் நலன் நீதிக்கட்சியினும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.
 "சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் குருகுலமும் இருக்கும்' என்று அதை நியாயப்படுத்த முயன்றவர்களை முறியடிக்க வேண்டுமென்றால், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனப் பெரியார் எண்ணினார்.
 பார்ப்பன எதிர்ப்பு நிலை வேகம் பெற்றது! நாம் திராவிடர்கள் என்னும் புதிய நிலை முன்னெடுக்கப்பட்டது. நம்முடைய மொழி வேறு; நாகரிகம் வேறு; பழக்கவழக்கங்கள் வேறு; சமூக மதிப்பீடுகள் (Social Values) வேறு என்பது பார்ப்பனரல்லாதாருக்கு விளங்குமாறு எடுத்துரைக்கப்பட்டது! பெரியார் இந்த அரும்பெரும் பணியை வெல்லத்தக்க வகையில் செய்வதற்கு அண்ணா பெருந்துணையாக இருந்தார்!
 வ.வே.சு. ஐயர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் காங்கிரசில் பார்ப்பனத் தலைமையே நிலைபெற்றிருந்தது. 1937ல் இராசாசி தமிழ்நாட்டின் முதல்வரானார்!
 ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பெரும் மாறுதல்கள் நிகழத் தொடங்கிவிட்டன!
 காங்கிரசு பார்ப்பனர் கட்சி என்னும் நிலை காங்கிரசையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தது.
 இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருகிறது.
 காங்கிரசின் தலைமைக்குப் போட்டியிட வேண்டியவர்கள் அதைத் தங்களின் பிடியில் வைத்திருந்த இராசாசியும் சத்தியமூர்த்தியும்தான்! அவர்கள் ஒருவருக்கொருவர் பகை!
 நாடு திராவிட உணர்வுகளுக்கு ஆளாகி நிற்கும் நிலையில் காங்கிரசு மக்களிடையே வாழ வேண்டும் என்றால், தாங்கள் தமிழ் மக்களின் கண்ணை உறுத்தாமல் பின்னால் இருந்துதான் இயங்கியாக வேண்டும் என்னும் நிலைக்கு இரு தலைவர்களும் உள்ளாகினர்.
 எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாமல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையைப் பெரியார் வெளியில் இருந்து ஏற்படுத்தி விட்டார்!
 காங்கிரசு மக்களிடம் நிலை கொள்ள வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாத ஒருவரின் தலைமை மலர்ந்தாக வேண்டும் என்பது காலக் கட்டாயம்!
 1940-இல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தன் சீடர் காமராசரையும், இராசாசி தன் சார்பாக சி.பி. சுப்பையாவையும் நிறுத்துகின்றனர்!
 காமராசர் வெறும் இரண்டே இரண்டு வாக்குகளில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகிறார். ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவராகி, அவருடைய அதிகாரத்தால் சத்தியமூர்த்தி செயலாளராக நியமனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது!
 ஆயினும் காமராசர் சத்தியமூர்த்தியை ஒரு குருவுக்குரிய இடத்தில் வைத்து இறுதி வரை போற்றினார்!
 சத்தியமூர்த்தி காலத்திற்குப் பிறகு வலிமைமிக்க தலைவராக உருவானார் காமராசர்! பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்! இறக்கும்வரை தமிழ்நாடு காங்கிரசு அவர் கைப்பிடிக்குள் இருந்தது.
 1945-இல் திருப்பரங்குன்றத்தில் இராசாசிக்கும் காமராசருக்கும் நடந்த மோதலிலே காமராசர் மேலும் ஊன்றிக் கொண்டார்!
 1952-இல் குற்றாலத்தில் குளித்து விட்டுக் காற்று வாங்கிக் கொண்டிருந்த இராசாசியை அழைத்து வந்து முதல்வராக்கினார்! அவருடைய கல்வித் திட்டம் "குலக் கல்வித் திட்டம்' எனத் திராவிட இயக்கத்தாரால் பழிக்கப்பட்டு, தமிழ்நாடு போர்க்களமானபோது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இராசாசியிடம் காமராசர் வலியுறுத்தினார்! இராசாசி மறுத்துவிட்டுப் பதவியை உதறிவிட்டு வெளியேறினார்!
 காமராசர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். பத்தாண்டுகள் நிகரற்ற ஆட்சி நடத்தினார்! ஒரு நாள் அந்த நாற்காலியைப் புறங் காலால் எற்றி விட்டு தில்லி போனார்!
 இராசாசி வெளியேற்றத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது. பெரியாரின் நோக்கம் முற்றுப் பெற்றது!
 செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறுவகையானது. அது தனி ஆய்வுக்குரியது!
 பற்றற்ற மனநிலையினரான இராசாசியின் பார்ப்பனத் தலைமை, இன்னொரு பற்றற்ற மனநிலையினரான காமராசரின் பார்ப்பனரல்லாத் தலைமையில் வெல்லப்பட்டது!
 பார்ப்பனப் பிடியிலிருந்த காங்கிரசு பார்ப்பனரல்லாதாரைத் தலைவராக ஏற்றாக வேண்டும் என்னும் காலநிலையைப் பெரியாரின் போராட்டமும், அவருக்குத் துணையிருந்த அண்ணாவின் அருந்தமிழ் ஆற்றலும் ஏற்படுத்தின!
 காமராசரின் தனி ஆற்றலும் பெருமையும் தான் அவருடைய உயர்வுக்குக் காரணம் என்றாலும், பெரியாரின் திராவிட இயக்கம்தான், ஓர் எளிய பார்ப்பனரல்லாதாரின் பயணத்தை இயலும் நிலைக்கு உள்ளாக்கியது!
 பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பதினாறாம் லூயியின் வாரிசுகள்தாம் நாடாண்டு கொண்டிருப்பார்கள்! பிரெஞ்சுப் புரட்சி பதினாறாம் லூயியை ஒழித்துக் கட்டியது! காலியாக இருந்த அரியணையில் நெப்போலியன் ஏறி அமர்ந்து கொண்டான்.
 அதனால் நெப்போலியனைப் பிரெஞ்சுப் புரட்சியின் பிள்ளை என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்!
 அதுபோல, தலைவர்களுக்கெல்லாம் தலைவரான *காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை!

 கட்டுரையாளர்:
 சட்டப்பேரவை உறுப்பினர்.


 Our note:--  பெருந்தலைவர் காமராஜரை "திராவிட இயக்கத்தின் குழந்தை" என்றால் அவரேகூட ஏற்றுக்கொள்ள மாட்டார்; இவர் ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறார்.
Our Comments.

இன்றைய (23-9-2015) "தினமணி" இதழின் நடுப்பக்க கட்டுரையைப் படித்தேன். இதை எழுதியவர் பழ.கருப்பையா என்பதால் அவர் மீதிருந்த மரியாதை யின் காரணமாக முழுவதும் படித்தேன். படித்தபின் இது "தினமணி"தானா அல்லது "விடுதலை" பத்திரிகையா என்ற சந்தேகம் எழுந்தது. கட்டுரையாசிரியரின் முந்தைய கட்டுரைகளையெல்லாம் படித்திருக்கிறேன். அவர் பேச்சையும் கேட்டிருக்கிறேன்; அப்போதெல்லாம் இல்லாத ஒரு ஜாதி வெறி இந்தக் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்குமென்று யோசித்ததில் சில பதில்கள் கிடைத்தன.

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெருந்தலைவர் காமராஜ் ஏக காலத்தில் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பெற்றவர். அவர் மீது வெறுப்பை உண்டாக்கி அவரை ஒரு பிராமண எதிரி என்பது போல படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறார் செட்டியார். பெருந் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் பலரும் ஆர்.வெங்கட்டராமன் போன்ற பலரும் செட்டியார் மொழியில் "பார்ப்பனர்"களே. இவர் எந்தக் காலத்திலும் தன்னையொரு பிராமண எதிரியாகக் காட்டிக் கொண்டதுமில்லை, நடந்து கொண்டதுமில்லை. இவரது ஆசான் தீரர் சத்தியமூர்த்தியும் ஒரு பிராமணரே. பெருந்தலைவர் முதல்வராக பதவி யேற்றுக் கொள்ளச் செல்லுமுன் அவர் மகள் இல்லம் சென்று சத்தியமூர்த்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டுத் தான் சென்றார் என்பதை இவர் அறிவாரா?

செட்டியார் இனத்தைச் சேர்ந்த தேசபக்தர் தேவகோட்டை சின்ன அண்ணாமலை திருவாடனை சிறையில் அடைக்கப்பட்ட போது 1942இல் அங்கு சிறை உடைக்கப்பட்டு கலவரம் நிகழ்ந்தது. அப்போது அங்கு துணை காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பார்த்தசாரதி ஐயங்கார், சுதந்திரத்துக்குப் பிறகு சென்னையில் காவல்துறை கமிஷணராக இருந்தார். அப்போது பெருந்தலைவர்தான் முதல்வர். திருவாடனையில் ஐயங்கார் காங்கிரஸ்காரர்களை மிருகத்தனமாக அடித்து துவைத்திருந்தார். அந்த வன்மத்தை போலீஸ்காரர் என்பதற்காகவே, அவர் பிராமணர் என்பதற்காகவோ அவரிடம் தலைவர் எந்த வெறுப்பும் வைத்துக் கொள்ளவில்லை. ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதையேற்ற பின் சென்னைக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பெருந்தலைவர் விமான நிலையம் வந்தார். அவரை உள்ளே விட இதே பார்த்தசாரதி ஐயங்கார் மறுத்துவிட்ட நிலையில் அவர் வெளியிலேயே நின்று கொண்டார், அப்போதும் ஐயங்காரின் பதவிக்கு வேட்டு வைக்க முயற்சி செய்யவில்லை தலைவர். இதெல்லாம் செட்டியாருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.

இவருக்கு பெருந்தலைவர் காமராஜரை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்கிற எண்ணத்தைவிட, ஒரு ஜாதியாரை முடிந்தவரை இழிவாகப் பேசவேண்டும், அவர்களது கடந்த கால செயல்பாடுகளைத் தூற்ற வேண்டுமென்பதுதான் ஒரே நோக்கம் என்பது தெளிவாகிறது. இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் இந்த கொலைவெறி என்று எண்ணும்போதுதான் ஒரு உண்மை புலனாயிற்று. அது, இவர் சார்ந்திருக்கும் கட்சியில் தொடக்கத்தில் செல்வாக்கோடுதான் இருந்தார். துறைமுகம் தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார். சபாநாயகராக ஆவார் என்றுகூட பத்திரிகைகள் எழுதின. ஆனால் இவர் ஓரம் கட்டப்பட்டார். சட்டமன்றத்தில் முதல் வரிசையில் இருந்தவர் பின்னால் ஒதுக்குப்புறமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து வருந்தியவர்கள் உண்டு, நானும்கூட. இவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், காலம் மாறும், தன்னுடைய நிலைமையில் மாற்றம் வரும் என்று, ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. தலைமையை எதிர்த்து நேரடியாகப் பேச தைரியம் இல்லை என்பதாலோ என்னவோ, மறைமுகமாக அவர் பிறந்த ஜாதியைச் சாடினால், அது அவருக்கு வலிக்காமலா போய்விடும் என்ற நோக்கில் இதை எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியில்லாவிட்டால், தலைவியை இவர் "செயலலிதா" என்று எழுதுவாரா. இதுவரை ஜெயலலிதா என்றுதானே சொல்லி வந்தார். இப்போது ஏன் இவர் இப்படி பச்சைத் தமிழராக ஆனார் என்பதுதான் மர்மம்.

அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு இதே "தினமணி"யில் விஜயகாந்த் கட்சியிலிருந்து வெளியேறி அ.தி.மு.க. ஆதரவாளர்களாக இருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவர் எங்களையும் சேர்த்துக் கொள்வது எப்போது என்று கேட்டுவிட்டார் என்பதற்காக, இவர்களைப் போன்று ஒரு கட்சியிலிருந்து ஓடிவந்தவர்களைச் சேர்த்துக் கொள்வது கூடாது என்பது போல கட்டுரை எழுதியிருந்தார். இது என்ன தன் கட்சிக்கே "சுய கோல்" போடுகிறாரே என்று நினைத்தோம்.

இன்னொன்று ராஜாஜியை எல்லோரும் ராஜாஜி என்றுதான் எழுதுகிறார்கள். இந்தப் பச்சைத் தமிழனுக்கு மட்டும் அவர் ராசாசி. முன்பெல்லாம் "முரசொலி"யில் ராஜாஜியை இப்படித்தான் எழுதி வந்தார்கள். ராஜாஜி ஒரு அஞ்சல் அட்டையில் ஆசிரியருக்கு ஒரு வரியில் கடிதம் எழுதினார். "உங்கள் கட்சியில் இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திரனை எம்.சி.ஆர் என்று எழுதினால் என் பெயரையும் ராசாசி என்றே எழுதலாம்" என்று. அதுமுதல் "முரசொலி"யும் அவரை ராஜாஜி என்றே எழுதத் தொடங்கியதாம்.

போகட்டும் சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் மிதவாதிகள் கையில் இருந்தது என்பது வாஸ்தவம்தான். இவர் சொல்லும் சிலர் ஆங்கிலேயர் சார்புடையவர்களாக இருந்தபோதும் பெரும்பாலான பிராமண இனத்தவர் (இவர் மொழியில் பார்ப்பனர்) சுதந்திரத்துக்குப் பாடுபட்டவர்கள்தான். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஜாதியால் மேல் கீழ் என்பது இருக்கும் என்பது தெரிந்துதான் பெரியார் வெள்ளையனுக்கு சார்புநிலை எடுத்தாராம். அவரே சொல்லாத புதிய கருத்து நம் செட்டியாருக்குத் தோன்றியதுதான் ஆச்சரியம். 

ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை நாளை துக்க நாள் என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு வந்ததும் இந்த அச்சம் தானாம். என்னே கண்டுபிடிப்பு. ஒரு முறை வாரணாசியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் சென்றனர். அவர்களில் மேற்படி நாயக்கரும் ஒருவர். காசியில் ஒரு பிராமண சத்திரத்தில் உடன் வந்த காங்கிரஸ் மிதவாத தலைவர்கள் சாப்பிடப்போய்விட்டார்களாம். அப்போதைய சமூக சூழ்நிலையில் அவரவர் சத்திரங்களில் அந்தந்த ஜாதியாருக்கு உணவு தரப்படுவது வழக்கமாக இருந்தது. தன்னைப் பசியில் வாடவிட்டுவிட்டு இந்த "பார்ப்பனர்கள்" தங்கள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கப் போய்விட்டார்கள் என்ற கோபம் தான் அவரை பிராமண எதிர்ப்பில் கொண்டு விட்டுவிட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். செட்டியாருக்குத் தெரியுமோ இல்லையோ தெரியவில்லை.

இவர் சார்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நாடு முழுவதும் புண்ணியத் தலங்களில் தர்ம சத்திரங்கள் உண்டு. அப்படி வாரணாசி போன்ற இடங்களிலும் இருக்கிறது. ஒரு முறை நான் காசியில் ஒரு ஐப்பசி மாதம் தீபாவளி கழிந்த நான்காம் நாள் நடந்து சென்று கொண்டிருந்தேன். வழி நெடுக நகரத்தார் நிரம்பியிருந்தனர். என்னை தமிழ்நாட்டு வேட்டி சட்டையில் பார்த்த சிலர் இன்னைக்கு அன்னபூரணி கோயில் குடமுழுக்கு, நம்ம சத்திரத்துக்கு வந்துடுங்க சாப்பாட்டுக்கு என்று அழைத்தனர். இந்த செட்டியாரை ஒன்று கேட்கிறேன், என்னைக் கேட்டது போல, அந்தக் காலத்தில் இவர்கள் சத்திரத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தாரை அழைத்து இவருடன் உட்கார வைத்து சாப்பாடு இவர் போட்டிருப்பாரா? செய்திருந்தால் பாராட்டுகிறேன்.

வ.வெ.சு. ஐயரின் விவகாரம் அவர் காலத்திலேயே முடிந்து போன கதை. ஐயரின் விளக்கத்தையும் ஏற்றுக்கொண்டு பெரியார் தன் பத்திரிகையில் விவகாரத்தை முடித்து வைத்து எழுதியது செட்டியாருக்குத் தெரியாதோ என்னவோ? இவர் எழுதுவது போல பார்ப்பனப் பிள்ளைகள் ஓரிடத்திலும், பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளை வேறு இடத்திலும் வைத்து உணவளித்தார் என்பது சுத்த சுயம்பிரகாச பொய். எப்படி பெரியார் காங்கிரஸ் பணத்தை நன்கொடையாகக் கொடுத்து விட்டுத் திரும்ப கேட்டார் என்று எழுதுகிறாரோ அதைப் போல பல பிராமணர்களும் நன்கொடை கொடுத்தனர். அவர்களில் ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளுக்குத் தனியாக உணவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களை மட்டும் தனியாக உட்கார வைத்து உணவளித்தாரே தவிர எல்லா பிராமணப் பிள்ளைகளையும் அப்படி உட்கார வைக்கவும் இல்லை, தான் அனைவரோடும் கூட அமர்ந்து சாப்பிட்டார் என்பது உலகறிந்த உண்மை, பாவம் இவருக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனதோ தெரியவில்லை.

வ.வெ.சு.ஐயரும், வாஞ்சிநாதனும் நாட்டுப் பற்றில் குறைந்தவர்கள் அல்லர், தியாகத்தில் பின் வாங்கியவர்களும் அல்லர் என்று ஒரு சான்றிதழ் வழங்குகிறார் செட்டியார். ஆனால் 'சா'தியில் மேல், கீழ் என்று பார்ப்பவர்கள் என்ற கோணத்தில் இவர் அவர்களைத் தூற்றுகிறார். போகட்டும், அவர்கள் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த நிலைமையை இந்தச் செட்டியார் பார்த்திருக்க வாய்ப்பில்லை, அதனால் இப்படி எழுதுகிறார்.

சமீபத்தில் இவர் பெரியார் மாளிகையில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியதை ஒரு காங்கிரஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதிலும் இதே திராவிட பக்தி, திராவிட வாசனையோடு பேசினார். இது என்ன புது அவதாரம் என்று நினைத்த போதுதான், இவர் மோதுவது பிராமணர் (பார்ப்பனர்) மீதல்ல, இவர் சார்ந்த கட்சியின் தலைமையின் மீது என்பது புரிந்தது. அவர் வாசகத்தை மீண்டுமொரு முறை பாருங்கள் "செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறு வகையானது. அது தனி ஆய்வுக்குரியது" என்கிறார். அப்படியென்றால் இவர் என்ன சொல்ல வருகிறார். ஜெயலலிதாவும் பார்ப்பனர்தான், ஆனால் ஒரு திராவிடக் கட்சிக்குள் நுழைந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறார். ஆகையால் இவர் ஒரு திராவிடக் கட்சியின் தலைவி என்பதும் தனி ஆய்வுக்குரியதுதான் என்கிறார். 

இதையெல்லாம் பார்க்கும்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் மீது தாக்குதல் தொடுக்க தைரியமில்லாமல், ஊர் மீது கோபித்துக் கொண்டு, மனைவியை அடித்துத் துவைக்கும் கோழையைப் போல இவர் திடீரென்று பார்ப்பனத் தாக்குதலில் இறங்கியிருக்கிறார். இவரது சூழ்ச்சியை அ.தி.மு.க. தலைமை புரிந்து கொள்ளாமலா இருக்கும். இவருடைய அரசியல் நிலைமையைப் பார்த்து ஐயோ வென்று இரக்கப் பட்டவர்கள் கூட, இப்போதைய இவருடைய புதிய அவதாரத்தைப் பார்த்து இவரை எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

இதுபோன்ற தரக்குறைவான கட்டுரைகளை தினமணி வெளியிட்டது கண்டனத்துக் குரியது.

Sunday, September 20, 2015

மாலிக்காபூர்.

                                                    
மாலிக்காபூர்.

இந்த பெயர் வரலாற்றுப் பாடத்தில் படித்ததாக நினைவு; மற்றபடி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை அல்லவா? ஆனால் நம் தமிழ் நாட்டில் பல ஆலயங்கள் சிதிலமடைந்து கிடப்பதற்கு இவன் படையெடுப்புதான் காரணம் என்று சொல்லி வைத்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. ஆம், அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான இவன் தமிழ் நாட்டுக்கு படையெடுத்து வந்து இங்கு பல கோயில்களை உடைத்து, சேதப்படுத்தி, இங்கிருந்த பல விலைமதிப்பற்ற செல்வங்களைக் கொள்ளை கொண்டு போனவன் என்பதை படித்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. பல கோயில்களில் நிலவறைகள் இருப்பதை நாம் அறிவோம். இவன் படையோடு தென்னகம் நோக்கி வருகிறான் என்றதும் விலையுயர்ந்த பொருட்களை இந்த நிலவறையில் மறைத்து வைத்திருந்தார்கள். அவை இப்போது புதையலைப் போல கிடைத்து வருவதையும் நாம் அறிவோம். அது சரி! யார் இந்த மாலிக்காபூர்? இவன் தெற்கே படையெடுத்து வந்ததன் நோக்கம்தான் என்ன? இறுதியில் இவன் செய்த கொடுமைகளுக் கெல்லாம் எப்படி பதில் சொன்னான்? இவற்றை ஓரளவுக்குத் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? மறுபடியும் வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டு இந்திய சரித்திர பாடத்தைப் படிக்காவிட்டாலும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்திகள் இவை என்பதால் ஓரளவுக்கு தெரிந்து கொள்வோம்.

அலாவுதீன் கில்ஜி காலத்தில் அவன் படைத்தலவனாக நியமிக்கப்பட்டவன் இந்த மாலிக்காபூர். இவன் குஜராத் பகுதியைச் சேர்ந்தவன். இந்துவாகப் பிறந்து வளர்ந்தவன், பிறகு இஸ்லாமுக்கு மாறிக் கொண்டவன் என்றொரு செய்தி உண்டு. வரலாற்றாசிரியர்கள் சிலர் இவன் பாக்தாதில் விலைக்கு வாங்கப்பட்டவன் என்றும், வேறு சிலர் இல்லையில்லை இவன் எத்தியோப்பியா நாட்டுக்காரன் என்றும் சொல்கிறார்கள். இந்துவாக இருந்தபோது இவன் பெயர் சாந்த்ராம். இவன் ஒரு மூன்றாம் இனத்தான், அதாவது பழைய பாணியில் சொல்வதானால் இவன் ஒரு அலி. நல்ல தோற்றக் கவர்ச்சியுடையவன், புத்திசாலி. இல்லாவிட்டால் இவன் ஏராளமான கோயில் சொத்துக்களைக் கொள்ளை கொண்டு போயிருப்பானா? அடிமைகளை அந்தக் கால வழக்கப்படி கடையில் பொருட்கள் வாங்குவது போல பணம் கொடுத்து வாங்குவார்கள். அதன்படி அடிமையான இவனை நுஸ்ரத்கான் என்பவர் ஆயிரம் தினாருக்கு விலைக்கு வாங்கினார். அதன் காரணமாகவே இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவனை “ஹஸார் தினாரி” (ஆயிரம் தினாருக்கு வாங்கப்பட்டவன்) என்றனர். எது எப்படியானால் என்ன, இந்த அடிமை இந்திய வரலாற்றையே கிடுகிடுக்க வைத்துவிட்டான் அல்லவா?

அலாவுதீன் கில்ஜி


அப்போதைய சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு இவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது. பிடித்துப் போய்விட்டது என்றால் எப்படி? போரில் வென்று கவர்ந்து வந்த கமலா தேவி எனும் குஜராத் பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதோடு, இந்த அடிமையின் அழகிலும் (இவன் தான் அலியாயிற்றே) இவன் இடுப்பில் தாலி கட்டி சேர்த்துக் கொண்டான். அதோடு இவனைத் தன் படையிலும் சேர்த்துக் கொண்டான். இவனை விலைக்கு வாங்கிய பத்து வருஷங்களுக்குள் இவன் தன்னுடைய திறமை(!)யினால் சுல்தான் அவையில் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டான். கில்ஜியின் படைக்கு இவன் தலைவனாக நியமிக்கப்பட்டான். சுல்தான் தெற்கே படையெடுத்துச் செல்ல முடிவு செய்தவுடன் இவனை அந்தத் தென்னக படையெடுப்புக்குத் தலைவனாக அறிவித்தார். தெற்கே படையெடுத்துச் சென்று வழிநெடுக இவன் பெற்ற வெற்றிகளின் காரணமாக சுல்தானுக்கும் இவனுக்கும் செல்வம் கணக்கின்றி கிடைத்தது, மாலிக்காபூருக்கு பெருமையும் சேர்ந்தது.

தென்னக படையெடுப்பில் மாலிக்காபூர் 1306இல் முதலில் தேவகிரியைப் பிடித்துக் கொண்டான். 1309இல் இப்போதைய ஆந்திரா, தெலுங்கான பகுதிகளின் மீது படையெடுத்து வென்றதோடு, அவர்களின் கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஏராளமான செல்வங்களையும் கொள்ளை கொண்டான். அத்தனை செல்வங்களையும் அவன் சுமந்து கொண்டு சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் சமர்ப்பித்து அவரது அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானான். அடுத்த வருஷத்தில் அதாவது 1310இல் தென்னக மேற்குக் கடற்கரைப் பட்டினமான துவாரசமுத்திரத்தைத் தாக்கிப் பிடிக்க அனுப்பப் பட்டான். இது அப்போது இருந்த ஹொய்சாள வம்சத்து வல்லாள மன்னர்களின் தலைநகரம். அதைப் பிடித்துக் கொண்டு இவன் மலபார் பகுதிக்கு படையோடு சென்றான். அங்கு கொள்ளையடித்துக் கொண்டு, கிழக்கே திரும்பி பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையை நோக்கி வந்தான். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட வழிநெடுக இருந்த கோயில் சொத்துக்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அங்கு சில காலம் தங்கியிருந்தான். அப்படி தங்கியிருந்த காலத்தில் மதுரையில் ஒரு மசூதியைக் கட்டி வைத்தான்.

மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்த காலத்தில் அங்கு ஆண்ட அரசன் மாறவர்மன் குலசேகர பாண்டியன். இவன் காலம் 1268 முதல் 1310 வரை. இவனுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீரபாண்டியன். இவர்களில் சுந்தர பாண்டியன் பட்டமகிஷிக்குப் பிறந்தவன், வீரபாண்டியன் மன்னனின் சேர்த்துக் கொண்ட மனைவிக்குப் பிறந்தவன். வழக்கத்துக்கு மாறாக மன்னன் தன்னுடைய இளைய மகனுக்குத்தான் பட்டம் சூட்டவேண்டுமென முடிவெடுத்தான். அரியணைக்கு உரியவனான சுந்தர பாண்டியன் ஆத்திரமடைந்தான். விளைவு? மன்னன் கொல்லப்பட்டான், மூத்தவனான சுந்தர பாண்டியன் 1310இல் அரியணை ஏறினான். நமக்குத்தான் தெரியுமே ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்று. இளையவன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக சிலர் கிளம்பினார்கள். உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த கலகத்தில் சுந்தரபாண்டியன் தோற்றோடிவிட்டான். ஓடியவன் ஓடிப்போய் டெல்லி சக்கரவர்த்தி அலாவுதீன் கில்ஜியிடம் முறையிட்டான். அந்த சமயம் சுல்தானின் தளபதியான மாலிக்காபூர் துவாரசமுத்திரத்தில் இருந்தான். அவ்னை சுல்தான் அழைத்து மதுரைக்குப் போய் சுந்தர பாண்டியனுக்கு அரசாட்சியை மீட்டுக் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தான். அதையொட்டி டெல்லி படைகள் மாலிக்காபூரின் தலைமையில் 1311இல் மதுரைக்குள் நுழைந்தது.

மதுரையில் மாலிக்காபூர் இருந்த ஓராண்டில் அங்கு ஒரே பிரளயம் தான். கொள்ளை, கொலை, கற்பழிப்பு. ஒரு இண்டு இடுக்கு கூட விடாமல் சென்று கொள்ளையடித்த செல்வத்தை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்தான் மாலிக்காபூர். வழியில் தஞ்சையை அடுத்த கண்டியூரில் சில காலம் தங்கி சுற்றிலுமிருந்த பல கோயில்களைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்திருந்தான். அப்படி அவன் கொள்ளையடித்த செல்வங்களை, தங்கம், வெள்ளி, சிலைகள் என்று கணக்கற்றவைகளை 312 யானைகள் மீது ஏற்றினான். 20,000 குதிரைகள் மீது ஏற்றினான். இவன் அடித்த கொள்ளையில் 10 கோடி தங்கக் காசுகள் அடக்கம் என்கிறது வரலாற்றுச் செய்திகள்.

மதுரையிலிருந்து மாலிக்காபூர் இராமேஸ்வரம் நோக்கித் திரும்பினான். அங்கும் வழக்கமாகச் செய்வது போல கொள்ளையடித்துக் கொண்டு அங்கும் ஒரு மசூதியைக் கட்டி வைத்தான். அவன் கொள்ளையடித்த செல்வங்களைத் தூக்கிச் செல்ல முடியாத அளவுக்குச் சேர்ந்து விட்டது. அத்தனையையும் சுமந்து கொண்டு சிறிதும் அசராமல் தொடர்ந்து தன் வேலையில் ஈடுபட்டான். மதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் அவன் அடித்த கொள்ளையோடு தேவகிரி கொள்ளையைக்கூட ஒப்பீடு செய்யமுடியாது. அத்தனை செல்வம் கொள்ளையடித்து வைத்துக் கொண்டான்.

டில்லியில் அல்லாவுதீன் கில்ஜிக்கு தன் படைத்தலைவன் கொள்ளையடித்துக் கொண்டு வந்த செல்வங்களைப் பார்த்து மகிழ்ந்து போய், அவனே மாலிக்காபூருக்கு அடிமையாகி விட்டான். விடுவானா அந்த அடிமை. சுல்தானை கவிழ்த்துவிட்டுத் தானே முடிசூடிக் கொள்ள ஆசை கொண்டு விட்டான். அதற்கு என்ன வழி? முதலில் சுல்தானின் மனைவி மாலிக் இ ஜெஹான் மீதும், மகன்கள் கய்சர்கான், ஷாடிகான் ஆகியோர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை அதாவது அவர்கள் சுல்தானுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற பொய்யை சுல்தானிடம் சொல்லி அவர் மனதைக் கலைத்தான். இவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத சுல்தானும் அவர்களை சிறையில் அடைத்தான். ராணியை டில்லி கோட்டையிலும், பிள்ளைகளை குவாலியர் கோட்டையிலும் சிறையிலடைத்து வைத்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாலிக்காபூர், சுல்தானுக்கு விஷமிட்டுக் கொல்லவும் முயற்சிகள் மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றான். சுல்தான் அலாவுதீன் கில்ஜி மாண்டார், மாலிக்காபூர் தன் கைப்பாவையான ஒருவனை அரசணை ஏற்றினான். தான் அவனது துணைவனாக இருந்து கொண்டான். சூதும், வஞ்சகமும் வென்றன. டில்லி சாம்ராஜ்ய வரலாற்றில் இவைகள் அப்போது சர்வசாதாரணமாக இருந்தது.

சுல்தான் கில்ஜியைக் கொன்றாகிவிட்டது. அடுத்ததாக அரசுக்கு உரிமை கொண்டாடும் அனைவரையும் கொன்று தீர்த்தான். அரச வம்சத்தார் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து தன்னை நன்கு நிலைநாட்டிக் கொண்டான். சிறையில் இருந்த கில்ஜியின் மகன்களின் கண்களை பனை நுங்கைத் தோண்டியெடுப்பது போல தோண்டி எடுக்கச் செய்தான். கில்ஜியின் ஆதரவாளர்களையெல்லாம் தேடித் தேடி களையெடுத்தான். இப்படி முன் ஜாக்கிரதையுடன் அரியணைக்கு உரியவர் எவரையும் உயிரோடு விட்டுவிடக்கூடாது என்று தேடித்தேடி அழித்த நேரத்தில் ராஜகுமாரன் முபாரக் என்பான் தப்பியோடி விட்டான். இறையுணர்வு மிக்கோர் நம்புவது “இறைவன் பெரியவன்”. இந்த அடிமை செய்த கொடுமைகளைக் கண்டு இறைவன் சும்மாயிருக்கவில்லை. இவன் கில்ஜியைக் கொன்ற முப்பத்தி ஆறாவது நாள் மாலிக்காபூரும் அவனுடன் இருந்த ஆதரவாளர்களும் பூண்டோடு கொல்லப்பட்டு விட்டனர். ஆம்! இறைவன் பெரியவன்.
இது எப்படி நடந்தது? தென் இந்தியாவை கொள்ளையிட்டு தூக்க முடியாத சுமைகளைத் தூக்கிக் கொண்டு டெல்லிக்குள் வந்தான் மாலிக்காபூர். அத்தனை செல்வங்களையும் தன் மனத்துக்குகந்த சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் பாதங்களில் சமர்ப்பித்தான். அவை அத்தனையும் தென்னாட்டுக் கோயில்களில் அடித்த கொள்ளை அல்லவா? அவை அவனை சும்மா விடுமா? அலாவுதீன் கில்ஜி விஷமிட்டுக் கொல்லப்பட்டான். பிறகு நடந்தவைகளைத்தான் பார்த்தோமே.

இவ்வளவுக்கும் பிறகு நாம் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு உண்மை என்ன தெரியுமா? அந்த மாலிக்காபூர் ஒரு சிறந்த ராணுவத் தலைவன். இவனுக்கு முன்னால் எந்த முஸ்லிம் ராணுவத் தலைவனும் செய்யாத காரியங்களை இவன் செய்து முடித்தான்; அளவற்ற செல்வங்களைக் கொள்ளையடித்தான்; மனசாட்சி யில்லாமல் இவனை ஆளாக்கியவர்களையே கொன்று குவித்தான், அதன் பலனை வெகு சீக்கிரமே இறைவனிடம் தண்டனையைப் பெற்றான். இவனைப் பின்பற்றித்தான் இவனுக்குப் பிறகு டில்லி ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்த பல தலைவர்களும் இவன் வழியைப் பின்பற்றி தென் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தனர். இவனை ஆளாக்கியவர்களை இவன் அழித்தான் அதற்கான தண்டனையையும் பெற்றான். ஊரையடித்து உலையில் போட்டுக்கொண்டு தன்னை உருவாக்கியவனையும் கொன்று தானும் மாண்டுபோன இந்த அடிமையைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். கோஹினூர் வைரத்தை இவன்தான் தென்னக படையெடுப்பின் போது கொள்ளையடித்துக் கொண்டு வந்தான் என்றொரு செய்தியும் உண்டு. இப்படியாக சினிமாக் கதை வில்லனைப் போன்ற ஒருவனின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தோம். தமிழ் நாட்டில் இடித்துத் தகர்க்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு அந்த இடிபாடுகளிலிருன்து இன்னமும் மீளாமல் போன பல ஆலயங்கள் இந்த பாதகனை நினைத்துக் கொண்டு வேதனைப் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதோடு இவனது வரலாற்றை நிறைவு செய்வோம்.Saturday, September 19, 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படத்துக்காகப் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஓரிரண்டு பாடல்களை இப்போது பார்ப்போம்.

                   நாடு கெட்டுப் போகுது

பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...
[விக்ரமாதித்தன், 1962]

                             நீதி தவிக்குது

ஒருவன்: மூளை நெறஞ்சவங்க 
காலம் தெரிஞ்சவங்க 
மூத்தவங்க படிச்சவங்க 
வாழ்கின்ற நாடு!-இது

மற்றவன்: மூச்சுத் திணறுதுங்க 
முளியும் பிதுங்குதுங்க 
பாத்துக்குங்க கேட்டுக்குங்க 
ஜனங்கள் படும்பாடு!-இது

ஒருவன்: நெலமை இப்படி இருக்குது 
நீதி கெடந்து தவிக்குது 
கொடுமை மேலே கொடுமை வளர்ந்து 
நெருக்குது - அது 
அருமையான பொறுமையைத்தான் 
கெடுக்குது - ஊர் (நெலமை)

மற்றவன்: பாதை மாறி நடக்குது, 
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது 
பழமையான பெருமைகளைக் 
கொறைக்குது-நல்ல 
பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப் 
பறக்குது - ஊர்ப் (நெலமை)

ஒருவன்: என்ன இருந்தாலும் மனுசன் 
இப்படி ஆடக் கூடாது

மற்றவன்: எதுக்கும் ஒரு முடிவிருக்குது 
அதிகநாளு ஆடாது

ஒருவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும் 
எண்ணம் உடம்புக் காகாது

மற்றவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா 
கவனிக்காமெப் போகாது-ஊர் (நெலமை)
ஒருவன்: அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே 
அகந்தை புகுந்து கலைக்குது

மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள் 
மக்கள் கழுத்தை நெரிக்குது

ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து 
வேட்டையாடிக் குவிக்குது

மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து 
வீட்டுகாரனைக் கடிக்குது-ஊர் (நெலமை)
[உத்தம புத்திரன்,1958] 

                    கண் தூங்குமோ?
எங்கே உண்மை என் நாடே
ஏனோ மௌனம் சொல் நாடே
மேலான செல்வம் வீணாகலாமோ?
வீழாமல் மீளாயோ! (எங்கே)

மீறிவரும் குரல் கேளாயோ
வெற்றி வரும் வேகம் பாராயோ
பாராளத் தகுந்தவள் உன் மகளோ
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ (எங்கே)

காலமுன்னைக் குறை கூறாதோ
காவியங்கள் யாவும் ஏசாதோ
வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ
போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தூங்குமோ....?
[இரத்தினபுரி இளவரசி,1959] 

               ஆமாம் சாமி ஆசாமிகள்
ஆண்: ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு (ஆறறிவில்)
அடக்கமில்லா பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கும் நடையிலும்
ஆதிகால பண்பைக் காட்டிப்
பறக்க விடும் உடையிலும் (ஆறறிவில்)
தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகைப் பார்க்கவரும் முறையிலும்
அவன் கண்டது போல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும்
ஏமாறும் மனத்திலும்
ஆமாஞ்சாமி கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத
மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும்
துடை நடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்து திரியும்
ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவில்)
[மகனே கேள், 1965] 

        
                    ஆணவக் குரங்கு!
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடுமயிலே! (ஆடு மயிலே)

பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி நிலைபெறவே! (ஆடு மயிலே)

ஆடாதே நீயும் ஆடாதே-வீண்
ஆணவக் குரங்கே ஆடாதே
போடாதே சத்தம் போடாதே-கொடும்
பார்வை ஆந்தையே போடாதே!
வாடாதே முகம் வாடாதே
வண்ண மலரே வாடாதே!
வழக்கமான பூசை முடியுமுன்னே
மறந்தும் இதழை மூடாதே! (வாடாதே)

ஓடாதே மானே ஓடாதே-நீ
ஓடும் வழி தவறி ஓடாதே!
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே! (ஓடாதே)
[இரத்தினபுரி இளவரசி,1959] 

Wednesday, September 16, 2015

கணாபத்தியம்

இந்து மத வழிபாட்டில் “ஷண்மத” ஸ்தாபனம் செய்து இறைவனை ஆறு வழிகளில் வழிபடச் செய்தவர் ஆதி சங்கரர். அவை, சைவம், வைணவம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகியவை. இதில் கணாபத்தியம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடுதல்
இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் செய்யப்படுவது. கணபதியை வணங்கிய பின்னர்தான் இதர வழிபாடுகளை நடத்துவது மரபு...
கணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. கணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம்.. பத்தாம் நூற்றாண்டில் விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மிகப்பெரியது.  
மகாராஷ்டிரப் பகுதிகளில் 17ம் நூற்றாண்டுக்கும், 19ம் நூற்றாண்டுக்கும் இடையில் காணாபத்தியப் பிரிவு முதன்மை பெற்றது. தென்னிந்தியாவிலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விநாயகர் சிறுத்தொண்டர் மூலம் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது என்று கருதப்படுகிறது. அவர் கொணர்ந்த விநாயகப் பெருமான் நாகை மாவட்டத்திலுள்ள திருச்செங்காட்டாங்குடி எனும் கிராம சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இப்போதும் வழிபாடுகள் நடந்து வருகிறது. இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர். இசைக் கச்சேரிகளில் முதலாவதாகப் பாடப்படும் “வாதாபி கணபதிம் பஜே” எனும் பாடலும் விநாயகப் பெருமானை முன்னிருத்திப் பாடப் படுவதுதான். திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், கீழே குடிகொண்டிருக்கும் மாணிக்க விநாயகர், திருவையாற்றை அடுத்த கணபதி அக்ரஹாரத்தில் இருக்கும் விநாயகர், செட்டிநாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் போன்ற சிலவிடங்களில் விநாயகர் சிறப்பாக வழிபடப் படுகிறார். “விநாயக சதுர்த்தி” புண்ணிய தினத்தில் அன்த விக்ன விநாயகர் நம் விக்கினங்களைப் போக்கி நல்வாழ்வு தர பிரார்த்தனை செய்வோம்.

பாரதியாரின் வசன கவிதை -- 5


காற்று
1
ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல்  தென்னோலை.
குறுக்கும் நெடுக்குமாக ஏழட்டு மூங்கிற் கழிகளைச்     சாதா ரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித் திருக்கிறது.
ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு தொங்குகிறது.
ஒரு சாண்கயிறு.
இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.
கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்
அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து
 வார்த்தை சொல்லவேண்டும். இல்லாவிட்டால்,
முகத்தைத் தூக்கிகொண்டு சும்மா இருந்துவிடும்,
பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்தவீட்டுக் கயிறு பேசும்.
அதில் சந்தேகமே யில்லை.
ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.
அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள்
 பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக்
 கொண்டும், வேடிக்கைபேச்சுப் பேசிக்கொண்டும்
 ரசப்போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.
பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர்  வைக்கலாம்.)
கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளி யம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
“என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான்
 சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ?
 போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்: -- “அட போடா, வைதிக மனுஷன்!
 உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது
 சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?”என்றது.
“சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்”
 என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக்
 குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று.
ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு
சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே                                           நமக்கு சந்தோஷந் தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி தான்,             உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன
குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப்  பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது.
சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்     கொண்டது.
மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல்,           மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து     கொண்டே வந்தது.
“என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச்
  சொல்ல மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம்
 வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
“அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக்  கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று  கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில
விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்விடாதே, இரு” என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிதுநேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப  மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை   விட்டுவிட்டது.
உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள்.                                                                    ஒரு வரிக்கு      ஒரு வர்ணமெட்டு.
இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன்,  அது. மாற்றி மாற்றிப் பாடி -- கோலாஹலம்!
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகிநின்று
 பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை
 தானாகவேபோய்க் கந்தனைத் தீண்டும்.
அது தழுவிக்கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்!
இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக்                       களியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு  வரப் போனேன்.
நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்
கந்தன் என் வரவை எதிர்நோக்கி யிருந்தது.
என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய்,
வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய விட்டாயே” என்றது.
“அம்மா நல்ல நித்திரைபோலிருக்கிறதே?” என்று  கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து
 வெளிப்பட்டு என்முன்னே நின்ற தேவனுடைய
 மஹிமையை என்னென்று சொல்வேன்!
காற்றுத் தேவன் தோன்றினான்.
அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று  நினைத்திருந்தேன்.
வயிர ஊசிபோல் ஒளிவடிவமாக இருந்தது.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”
 காற்றே, போற்றி. நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றியபொழுதிலே வானமுழுதும்
ப்ராணசக்தி நிரம்பிக் கனல்வீசிக்கொண்டிருந்தது.
ஆயிரமுறை அஞ்சலிசெய்து வணங்கினேன்.
காற்றுத்தேவன் சொல்வதாயினன்: -- “மகனே, ஏதடா
 கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று
 கேட்கிறாயா? இல்லை. அது செத்துப்போய் விட்டது.                                               நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும்.                        என்னுற வில்லாதது சவம்.
 நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு
 உயிர்த்திருந்தது’; சுகம்பெற்றது. சிறிது களைப்பெய்திய வுடனே                           அதை உறங்க -- இறக்க -- விட்டு விட்டேன்.
 துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்கு
 மிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து
 ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும்.
நான் விழிக்கச்செய்கிறேன். அசையச்செய்கிறேன். நான்
சக்திகுமாரன், என்னை வணங்கி வாழ்க” என்றான்.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.”


2
நடுக் கடல். தனிக் கப்பல்.
வானமே சினந்துவருவதுபோன்ற புயற்காற்று.
அலைகள் சாரிவீசுகின்றன, நிர்த்தூளிப்படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன,
சூறையாடுகின்றன.
கப்பல் நிர்த்தனஞ்செய்கிறது;
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது;
பாறையில் மோதிவிட்டது.
ஹதம்!
இருநூறு உயிர்கள் அழிந்தன.
அழியுமுன், அவை, யுகமுடிவின் அனுபவம்
 எங்ஙனமிருக்கு மென்பதை அறிந்துகொண்டு போயின.
ஊழி முடிவும் இப்படியேதானிருக்கும்.
உலகம் ஓடுநீராகிவிடும்; தீ நீர்.
சக்தி காற்றாகிவிடுவாள்.
சிவன் வெறியிலே யிருப்பான்.
இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும்.
அஃது சக்தியென்பது தோன்றும்.
அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.
காற்றே பந்தல்கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில்
 உயிர் பெய்கிறான்.
காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி,
 நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித்                                             தூளை நீராக்கிச் சண்டமாருதம் செய்கின்றான்.
காற்றே யுகமுடிவு செய்கின்றான்.
காற்றே காக்கின்றான்.
அவன் நம்மைக் காத்திடுக.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.” 


3
காற்றுக்குக் காது நிலை.
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்.
காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது.
காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு,
இடியிடிக்கச்சொல்லி வேடிக்கை பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?
காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகின்றோம்.


4
பாலைவனம்.
மணல், மணல், மணல், பல யோஜனை தூரம் ஒரே மட்ட
  மாக நான்கு திசையிலும் மணல்.     மாலை நேரம்.
அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு
 வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான்.
பாலைவனத்து மணல்களெல்லாம் இடைவானத்திலே
 சுழல் கின்றன.
ஒரு க்ஷணம், யம வாதனை. வியாபாரக்கூட்டம் முழுதும்
மணலிலே அழிந்துபோகிறது.
வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை
அச்சந்தருவது.
அவனுடைய செயல்கள் கொடியன.
காற்றை வாழ்த்துகின்றோம்.


5

வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று  புராணங்கள் கூறும்.
உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர்தான் காற்று.
உயிர் பொருள், காற்று அதன் செய்கை.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள்.
அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று.
காற்றே உயிர். அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.
மரண மில்லை. அகில வுலகமும் உயிர் நிலையே.
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் -- எல்லாம்
 உயிர்ச் செயல்,  உயிரை வாழ்த்துகின்றோம்.


6
காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற                         இனிய வாசனையுடன் வா.
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த                                           ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டுகொடு.  காற்றே, வா.
எமது உயிர்-நெருப்பை நீடித்துநின்று நல்லொளிதருமாறு  நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.


7

சிற்றெறும்பைப் பார்.
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவய
" வங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில்செய்கின்றன.
எறும்பு உண்ணூகின்றது, உறங்குகின்றது, மணம்செய்து
 கொள்கின்றது, குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
 தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்விளையாட்டு
விளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்.
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்,
 நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.


8
மழைக் காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான்.
பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழமுடியாது.
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ?
காற்று நம்மீது வீசுக.
அது நம்மை நோயின்றிக் காத்திடுக.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்.
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை  அழிக்கின்றான்.
காற்றுத் தேவனை வணங்குவோம்.
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது, நாற்றம்
 இருக்க லாகாது, அழுகின பண்டங்கள் போடலாகாது,
 புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது.
காற்று வருகின்றான்.
அவன்வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர்
தெளித்து வைத்திடுவோம்.
அவன்வரும் வழியிலே சோலைகளும், பூந்தோட்டங்களும்
செய்து வைப்போம்.
அவன்வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள் களைக்                     கொளுத்தி வைப்போம்.
அவன் நல்ல மருந்தாக வருக.
அவன் நமக்கு உயிராகி வருக;
அமுதமாகி வருக.
காற்றை வழிபடுகின்றோம்.
அவன் சக்தி குமாரன். மஹாராணியின் மைந்தன்.
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்.
அவன் வாழ்க.


9

காற்றே, வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே.
காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தங்களைக் கீழே தள்ளிவிடாதே.
பார்த்தையா? இதோ, தள்ளிவிட்டாய்.
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலி யிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை
பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம் -- இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து
நொறுக்கிவிடுவான்.
சொன்னாலும் கேட்கமாட்டான்.
ஆதலால், மானிடரே வாருங்கள்.
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதிசெய்வோம்.
இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத்  தோழனாகிவிடுவான்.
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்;
வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.


10
மழை பெய்கிறது,
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும்
    ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
    உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
    ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல்,
    ஈரத்திலேயே உணவு.
 உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
 ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது.
 தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
 நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர்                        ‘விதிவசம்’ என்கிறார்கள்.
 ஆமடா, விதிவசந்தான்.
‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய விதி.
 சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
 தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான
   சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும்
   மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்
   கதைகளை மூடரிடங் காட்டி வயிறுபிழைத்து வருகிறார்கள்.
 குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்?
 அது அமிழ்தம், நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல
   உடைகளுடன் குடியிருப்பாயானால்.
 காற்று நன்று.
 அதனை வழிபடுகின்றோம்.


11

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்.
எற்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோதுகிற சக்தி,
சுழற்றுவது, ஊதுவது.
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்.
சக்தியின் கலைகளையே தெய்வங்க ளென்கின்றோம்.
காற்று சக்தி குமாரன்.
அவனை வழிபடுகின்றோம்.


12

காக்கை பறந்து செல்லுகிறது;
காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது.
அலைகள்போலிருந்து, மேலே காக்கை நீந்திச்செல்வதற்கு
 இடமாகும் பொருள் யாது? காற்று.
அன்று, அஃதன்று காற்று;
அது காற்றின் இடம். வாயு நிலயம்.
கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்
 தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து மோதுகின்றன.
அதூள்களைக் காற்றென்பது உலகவழக்கு.
அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர்.
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது.                                                  நீரிலே குடேற்றினால் ‘வாயு’ வாகிவிடுகிறது.
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது.
அத் திரவத்திலே சூடேற்றினால், ‘வாயு’ வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் ‘வாயு’
 நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம்.
இந்த ‘வாயு’ பௌதிகத் தூள்.
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத்தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்துசெல்லும் வழி காற்று.
அந்த வழியை இயக்குபவன் காற்று.
அதனை அவ்வழியிலே தூண்டிச்செல்பவன் காற்று.
அவனை வணங்குகின்றோம்.
உயிரைச் சரணடைகின்றோம்.


13

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்.
இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது.
அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால்.
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது?
 உயிர் நிலையில்.
ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே!
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின்
 உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது
 உயிருடனேதான் செல்லுகிறது.
காற்றாடி! உயிருள்ளது.
நீராவி-வண்டி உயிருள்ளது! பெரிய உயிர்.
யந்திரங்களெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது.
அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்.
எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர்  கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழலுகிறது.
சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது.
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும்     சிதறிக்கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது
 சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன.
எனவே, இவ் வையகம் உயிருடையது.
வையகத்தின் ‘உயிரை’யே காற்றென்கிறோம்.
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம்.


14

காற்றைப் புகழ நம்மால் முடியாது.
அவன் புகழ் தீராது.
அவனைரிஷிகள் “ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம” என்று  போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக்  காத்திடுக.
அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
ஸமாநனைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காக்க
காற்றின் செய்ல்களையெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்குகின்றோம்.
உயிர் வாழ்க.


15

உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்?
நீ கண்கண்ட தெய்வம்.
எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன.
உயிரே,
நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.
தோன்றும் பொருள்களின் தோற்றநெறி நீ.
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்.
பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு,
 இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற
 உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத யிர்த்தொகைகள்-
 இவையெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக்கிடக்கும்
 உயிர்களைக் கருதுகின்றோம்.
காற்றிலே ஒரு சதுர-அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய
 ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய
 ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்;
அவற்றுள் இன்னுஞ் சிறியவை -- இங்ஙனம் இவ் வையக
 முழுதிலும் உயிர்களைப் பொதிந்துவைத்திருக்கிறது.
மஹத் -- அதனிலும் பெரிய மஹத் -- அதனிலும் பெரிது --
அதனிலும் பெரிது --
அணு -- அதனிலும் சிறிய அணு -- அதனிலும் சிறிது --
அதனிலும் சிறிது --
இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம்.
புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களை
 யெல்லாம் போற்றுவோம்.
“நமஸ்தே, வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”