பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 3, 2015

8. நவராத்திரி - 1


ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், ஸரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என, மூன்று தொழில் நடத்துவது.
ஹிமாசலந் தொடங்கிக் குமரி முனை வரை, வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும் நீரையும் உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும் விழாக்களும் செய்கின்றனர். பக்தி செய்யும் செல்வரும் உண்டு.
மஹாளய அமாவாஸ்யை கழிந்தது.
இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு;  மேகங்கள் வந்து சூர்யனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு;இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.
சக்தி: நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்கிரமாதித்யனும், காளிதாசனும் வணங்கிய தெய்வம். "உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழை அருள் புரியும். சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் "வணங்கிப் பூஜைகள் செய்யவேண்டும்" என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி. கும்பகோணம் சங்கரமடத்தில் இந்தப் பூஜை மிகவும் கோலாஹலமாக நடத்தப் போவதாகப் பத்திரிகையில் ஒரு தந்தி போட்டிருந்தது. சஹஜமான விசேஷம். தேசம் முழுவதும் [இப்படி] நடப்பது [நல்லது].சங்கர மடத்திலும் [எனக்கு] ஒரு விதமான ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்துப் பார்த்தேன். அந்தத் தந்தியிலே பாதி சாஸ்திரம். வர்த்தமானத் தந்திக்குள்ளே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு விநோதம். ஆனால், அதிற்கண்ட சாஸ்திரம் உண்மையாக இருந்தது. நான் எதிர் பார்க்கவில்லை. எனவே தந்தியைப் படித்தபோது எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.
கும்பகோணத்துத் தந்தி பேசுகிறது: இந்த பூஜைகளின் நோக்கம் உலக நன்மை. நவராத்திரிக் காலத்தில் யோகமாயை துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு, துஷ்டரை எல்லாம் அழித்து மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருகவைத்தாள். மனிதர் படும் துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டாக தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல் இன்று வரை, பாரத தேசத்தில் எல்லாப்பாகங்களிலும் ஆரியர் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். தேவி உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறாள். ஒவ்வொரு தனிப் பொருளிலும் நிறைந்து நிற்கிறாள். இவளே மாயை, இவளே சக்தி; செய்பவளும,் செய்கையும், செய்கைப் பயனும் இவளே; தந்தையும் தாயும் இவள்; இவளே பரப்பிரம்மத்தின் வடிவம். இவள் காத்திடுக" என்பது தந்தி.
உண்மைதான். ஆனால், "தேவி அவ்வாறு அவதாரம் செய்த காலம் முதல்" என்ற வாக்கியம் மாத்திரம் கதை. தேவி எப்போதும் அந்த வடிவங்களிலே நிற்கிறாள். ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோகஸம்ரக்ஷணை எப்போதும் செய்யப்படுகிறது. எப்போதும் ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் துடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். ''தவம், கல்வி, தெய்வத்தைச் சரண் புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் (கிரியாயோகம்)'' என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். லௌகிகக் கவலைகளாலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமானிய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலைபெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன.
ஒன்பது நாளும் தியானம். கல்வி, தவம், இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும்; இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.
சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment

You can give your comments here