பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 9, 2020

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்


                      சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்                                                 தஞ்சை வெ. கோபாலன்

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு.

சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும்.

ஆனால் ... அந்த மனிதர் சிறைவாசம் கொடுத்த கொடிய வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டவர். சூடான அல்லது காரமான எதையும் சாப்பிட முடியாதவர். தயிர் மட்டும் விரும்பிச் சாப்பிடும் அப்பட்டமான தேசிய வாதி. ஆம்! அந்த தமிழினத் தலைவன்தான் ம.பொ.சி.

இது என்ன? யாருக்கும் இல்லாத தனி நபர் வர்ணனை என்று நினைக்கலாம். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை. வடதமிழ் நாட்டில் கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். தமிழ் இவரது மூச்சு. தமிழ்நாடு இவரது உயிர் உறையும் புனிதமான இடம். முதன்முதலில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்றும், "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்றும், "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்றெல்லாம் குரல் கொடுத்து சென்னையைத் தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைத் தனித் தமிழ் மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது தமிழ் பேசும் மக்கள் வாழும் வடவெல்லைப் பகுதிகளில் சில தமிழகத்துக்கு இல்லை என்ற நிலையில், வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது என்ற நிலையில், இவர் வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியும், திருவாலங்காடாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், போராடியதன் விளைவாக இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது. தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துக்குச் சொந்தம் என்று போராடினார், "குளமாவது மேடாவது" என்று உடன்பிறந்தோரே கேலி செய்ததன் பலன் இவரது போராட்டம் தோல்வி கண்டது.

தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் உலா வருகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்தார். தனது 'தமிழரசுக்கழக' மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு “இலக்கிய மாநாடு” என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு.

இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரை நீண்டுவிடும். அந்தப் பெருமகனார் தமிழக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த புடம் போட்டெடுத்த தியாக புருஷன். அரசியல் என்பது தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ளவோர் சாதனம் என்ற நிலை பரவலாக இருக்கும் போது, இவர் ஏழ்மை நிலையிலேயே தன் அரிய பணிகளைத் தொய்வின்றி நடத்தி வந்தவர்.

அவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமா? வளமையான குடும்பத்தில் பிறந்து, வாய்ப்பும் வசதியும் நிரம்பப்பெற்றதன் பயனாகப் பல பெருந்தலைகளோடு பழக்கம் வைத்துத் தலைவனானவர்கள் பலர் உண்டு. கல்வியில் சிறந்து பட்டம் பெற்று, புகழ் பரவிநின்றதன் பயனாகப் பொது வாழ்க்கையிலும் தலையிட்டு முன்னேறியவர்கள் பலர் உண்டு. பெருந்தலைகளின் உதவியால் கைதூக்கி விடப்பட்டு பிரபலமானவர் சிலரும் இருக்கிறார்கள். இப்படி எதுவும்  இல்லாமல், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வறுமை ஒன்றையே சொத்தாகக் கொண்ட ஒருவர், ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்கமுடியாத சூழலில், தான் பிறந்த குடியினரின் குலத்தொழிலான கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எதிர்ப்பைத் தனது கள் எதிர்ப்பினால் ஏற்படுத்திக் கொண்டு திண்டாடிய ஒரு தொழிலாளியின் வரலாறு இது. இவர் செய்த தொழில்கள் பல. அதிலெல்லாம் இவர் முத்திரை பதித்தார். பின் எப்படிப் படித்தார். இவர் நாட்டின் சுதந்திரத்துக்காக சிறைவாசம் செய்தபோது ஏற்பட்ட அறிஞர்களின் தொடர்பாலும், ஏற்றுக்கொண்ட அச்சுக்கோர்க்கும் தொழிலை இயந்திர கதியில் அல்லாமல் கல்வி கற்கும் வாய்ப்பாக எண்ணி அதிலிருந்து கல்லூரியிலும் கிடைக்காத அனுபவக் கல்வியை அவர் பெற்றிருந்தார். 

இப்போது போல அல்லாமல் அன்றைய தினம் அச்சடிப்பதற்கு விஷயத்தை ஒவ்வொரு எழுத்தாக அச்சு கோர்த்துத்தான் செய்து வந்தார்கள். அந்த பணி இவருக்கு. அங்கு விஷயம் அச்சில் ஏற ஏற இவர் மனத்தில் தமிழ் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியது. முதலில் இவரை 'கிராமணி' என்றும் 'கிராமணியார்" என்றும்தான் அழைத்தனர். அவ்வளவு ஏன்? ராஜாஜி கடைசி வரை இவரை 'கிராமணி' என்றுதான் அழைத்து வந்தார். இவர் ராஜாஜியை ராமராகவும், தன்னை அனுமனாகவும் வர்ணித்து எழுதியும் பேசியும் வந்த உண்மையான ராஜாஜி தொண்டன் இவர். இவரது பணி சிறக்கச் சிறக்க சிலப்பதிகாரத்தை இவர் பிரபலமாக்க "சிலம்புச் செல்வர்" என்ற அடைமொழி இவர் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது. இந்த அடைமொழி இவராக போட்டுக்கொண்ட அலங்கார பட்டையம் அல்ல. சிலம்பில் கரைகண்ட இவருடைய புலமையின் வாயிலாக அறிஞர்கள் கொடுத்த விருது அது. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர்.
  
   சென்னையில் தேனாம்பேட்டைப் பகுதியில் வாழ்ந்த பொன்னுச்சாமி கிராமணியார்தான் இவரது தந்தை. தாயார் சிவகாமி அம்மையார். இவர்தான் ம.பொ.சியை உருவாக்கியவர். இவர் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள், பாடல்கள் இவைதான் இவரை ஓர் சத்திய புருஷராக உருவாகக் காரணமாக இருந்தன. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம். பிந்நாளில் ஞானப்பிரகாசமாக விளங்குவார் என்று எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ? பெற்றோரிடம் இவருக்கு அதீதமான பக்தி, அதிலும் தாயார் என்றால் அவருக்குக் கடவுளாகவே நினைப்பு. இவரும் படிக்கத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால் உடன் பிறந்த வறுமை, இவரால் புத்தகம் வாங்கக்கூட முடியாமல் மூன்றாம் வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் அன்னை கொடுத்த கல்வி, அவரது ஆயுளுக்கும் பயன்பட்டது.

முன்னமேயே சொன்னபடி இவர் பல தொழில்களை வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்தார். நெசவுத்தொழில் செய்தார். அச்சுக்கோக்கும் பணியினைச் செய்தார். இவர் காந்திஜி, ராஜாஜி இவர்களைப் பின்பற்றி மதுவிலக்குக் கொள்கையில் மிக திடமாக இருந்த காரணத்தால் இவரது உறவினர், ஜாதியினர் கூட இவரை வெறுத்து ஒதுக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். இவரை ஜாதிப்பிரஷ்டம்கூட செய்து விட்டனர். இவ்வளவு கஷ்ட தசையிலும் இவர் நாட்டை நினைத்தார், குடிப்பழக்கத்தினால் அழிந்து போய்க்கொண்டி ருக்கும் ஏழை எளியவர்களை நினைத்தார், நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை பரங்கியர்களை எப்படி விரட்டுவது என்று எண்ணமிட்டார். பதினைந்து ஆண்டுகள் வசித்துவந்த இவர்களது ஓலைக்குடிசை ஒருநாள் தீப்பற்றிக்கொண்டது. இவரது ஆழ்ந்த இறை நம்பிக்கை இவரைக் காப்பாற்றியது.

1928இல் இவருக்குத் திருமணம் ஆயிற்று. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த இளம் மனைவி கூற்றுக்கு இரையாகி விட்டார். இனி தேச சேவைதான் நமக்கு என்று மறுபடி திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். என்றாலும் பெற்றோரும் சுற்றத்தாரும் விடுவார்களா? 1937இல் தனது 31ஆம் வயதில் தனது மாமன் மகளான 17 வயது ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார்.

 அன்றைய பிரபலமான தேசபக்தரும், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களில் ஒருவரும், "தமிழ்நாடு" எனும் தினப்பத்திரிகையை நடத்தி வந்தவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவிடம் இவர் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு தொழிலாளர் பிரச்சினை. அது முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். போராடிய ம.பொ.சி. மட்டும் வெளியேற்றப்பட்டார். விதி விளையாடியது. மறுபடியும் வேலை தேடி அலையும் நிலைமை. அப்போது அவரது உறவினர் இவரைத் தன் கள்ளுக்கடையில் கணக்கு எழுத அதிக சம்பளம் ரூ.45 கொடுத்துக் கூப்பிட்டார். இவருக்கு கள்ளுக்கடைக்குப் போக இஷ்டமில்லை. மறுபடி அச்சுக்கோக்கும் பணியில் ரூ.18 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவருக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. மனைவியின் வழியில் வந்த ஒரு வீட்டில் இவர் வாழ்ந்தார்.

இவரது பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர கிரிமினல்களுடன் வாழும் 'சி' வகுப்பு கைதியாக. கடைசி காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு 'ஏ' வகுப்பு கிட்டியது. இவர் கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக விளங்கிய வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர்.

இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது. 1942 ஆகஸ்ட் 13ம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944 ஜனவரியில் இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். சிறையில் இறந்து போனால் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் வந்து விடும் என்பதால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர்.

தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு       10-30க்குக் கிளம்பும் ராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போனார்கள். அப்போது அரை நினைவிலிருந்த இவருக்கு யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். "ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது" என்று. என்ன கொடுமை? மறுநாள் சென்னை எழும்பூரில் இவரை அழைத்துச் சென்றனர்.

இவரது சிறை வாழ்க்கையில் பட்ட துன்பங்கள், இவரது உடல் நிலை இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. அடுத்ததைப் பார்ப்போம். இவர் வடசென்னை மதுவிலக்குப் பிரச்சாரக் குழு, ஹரிஜன சேவை, கதர் விற்பனை இப்படியெல்லாம் பணி செய்திருக்கிறார். வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் துன்பம் என்று அனுபவித்த ம.பொசிக்கு சுதந்திரம் கிடைத்த பிறகாவது நல்ல காலம் பிறந்ததா என்றால், அதுவும் இல்லை. அதுவரை அவருக்கு அதாவது சுதந்திரம் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் எதிரி. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான எதிரிகள், உள் கட்சியிலும், எதிர் கட்சியிலும். எல்லாம் அவர் பிறந்த நேரம்.

சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து விஷால் ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர். உடனே கலவரம். நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழு அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன.

 இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். காங்கிரஸ்  கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை.  காங்கிரசுக்குள் இருந்து கொண்டு தமிழரசுக் கழகம் என்றொரு அமைப்பை நடத்துவதை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை. அதனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் இவரை தமிழரசுக் கழகத்தைக் கலைத்து விட வேண்டும், அல்லது காங்கிரசை விட்டு  வெளியேறி தனிக்கட்சி நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். என்ன செய்வது? காங்கிரசை விட்டு வெளியேறினார்.

அவர் அதற்கு முன்பே கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த "தமிழரசுக் கழகத்தை" எல்லைப் போராட்டதில் ஈடுபடுத்தித் தானும் போரில் ஈடுபட்டார். எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சி இவரை தூக்கி வெளியில் எறிந்து விட்டது. போர் குணம் இவருக்கு உடன் பிறந்ததாயிற்றே. விடுவாரா. இவரும் முழு மூச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. அதில் இவருக்கு திருத்தணியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கே.விநாயகம் எனும் ஒரு தளபதியும் கிடைத்தார். பின்னாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிங்கம் போல நின்று வாதிட்டவர்.

 ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லை போராட்டத்திலும் இவர் தீவிரமாக ஈடுபட்டார். தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேரள முதலமைச்சர், கேரள காங்கிரஸ் இவற்றோடு பேசிய பின், குளமாவது, மேடாவது என்று இவருடைய போராட்டத்தை கேலி செய்து பேச, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இவர் எந்த இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அங்கு இவருக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் 'திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு" என்று அடிக்கடி நடத்தினார். அவர் ஒரு புடம்போட்டெடுத்த தேசியவாதி என்பதால் பிரிவினையும், இனவாதமும் பேசும் திராவிட இயக்கங்களை கடுமையாக எதிர்த்தார். அப்படி அவர் செயல்பட்ட போதும், இவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி செய்யாத ஒரு பணியை எம்.ஜி.ஆர் செய்தார். அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். எதிரியின் காலடியில் விழுந்து விட்டார் ஆதாயம் தேடி என்று. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று இவர் ஒரு கர்ம வீரராக வாழ்ந்தார்.

சுதந்திரதின பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போரில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந்தெல்லாம் புனித மண் எடுத்து அதையெல்லாம் டில்லியில் காந்திசமாதி ராஜ்காட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930இல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சிக்குக் கொடுத்தார். தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்து வந்து டில்லியில் சேர்த்தார். அதைப்பற்றி அவர் எழுதிய நூலில் அந்த பயணம் முழுவதிலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து கலந்து கொள்ளவோ, சந்திக்கவோ இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தாராம். தஞ்சை ரயில் நிலையத்தில் அன்றைய நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் டில்லி செல்வதற்காக நின்றிருந்த போது ம.பொ.சியைச் சந்தித்துப் பேசினாராம்.

தன் வாழ்நாள் எல்லாம் ராஜாஜியின் அந்தரங்க தொண்டராக இருந்தவர் இவர். எந்த பதவியையும் கேட்டுப் பெறாதவர் இவர். ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கிய போது எவ்வளவோ கூப்பிட்டும் ம.பொ.சி. அந்தக் கட்சிக்குப் போகவில்லை. ராஜாஜி 1952இல் மந்திரிசபை அமைத்தபோது தஞ்சை நிலசீர்திருத்த சட்டம் 60:40 அவசரச்சட்டம் அமலாகியது. அந்த அவசரச் சட்டம் அமலாகிய தினம் ராஜாஜி தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில், தஞ்சை நிலப்பிரபுக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு. அதுவரை இப்படியொரு சட்டம் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காலையில் ராஜாஜி வந்து விட்டார். அன்றைய "தி ஹிந்து" பத்திரிகையில் அவசரச்சட்டம் பற்றிய செய்தி வருகிறது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் மத்தியில் என்ன செய்வது கூட்டத்தை ரத்து செய்வதா என்ற நிலை.

மிராசுதார்கள் மத்தியில் ராஜாஜியின் கூட்டத்தை நடத்துவதா என்ற குழப்பத்துக்கு மத்தியில் ராஜாஜி ராமநாதன் செட்டியார் ஹாலுக்கு வந்து விட்டார். அரங்கம் நிறைந்த கூட்டம் எதிர்பார்ப்புகளோடு கூடியிருந்தது. ராஜாஜி கூட்டத்தில் எதிர்ப்புக்கிடையே பேசினார். அந்தக் கூட்டத்தில் சி.சுப்பிரமணியமும், ம.பொ.சியும்தான் அவசரச் சட்டத்தை விளக்கிப் பேசினார்கள். ஒருவழியாக நிலப்பிரப்புக்கள் சமாதானமாகி கூட்டம் முடிந்தது. ஆனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு அதிகமானதால், ராஜாஜி ம.பொ.சியிடம் நீங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லா இடங்களிலும் சட்டத்தை விளக்கிப் பேசி அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று பணித்தார். அவரும் அதுபோலவே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார்.

ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்தை திராவிட கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். புதிய கல்விக் கொள்கையை “குலக் கல்வித் திட்டம்” என்று ஒரு பெயர் சூட்டி மாநிலமெங்கும் போராட்டம் நடத்தினர். நல்ல எண்ணத்தோடு அனைவருக்கும் கல்வி, கல்வி நிலையங்கள் குறைவாக இருக்கிறது அவை அதிகமாகும் வரை காலை ஒன்றுமாக, மாலை ஒன்றுமாக வகுப்புகள் நடத்த உத்தரவிட்டதை திராவிட இயக்கங்கள் எதிர்த்தன. குலக்கல்வித் திட்டம் என்று அவர்களாகவே ஒரு பெயர் சூட்டி நிழல் யுத்தம் செய்தனர். மாயவரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் புதிய கல்வித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி. பேசிவிட்டுத் திரும்பும் போது இவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பொதுத் தொண்டில் சுதந்திர இந்தியாவிலும் அடிபட்ட தேசபக்தர் ம.பொ.சி.மட்டும்தான்.

இந்த மாமனிதன் நெடுநாள் நிறை வாழ்வு வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் இவர் எந்த அதிகாரத்தையும் காட்டி, எந்த பெருமையையும் கேட்டுப் பெறவில்லை. இவரது பெருமையை உணர்ந்த வர்களால் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இவருடைய ஏராளமான நூல்கள் இவருடைய பெருமையை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் தி.நகரில் இவருடைய சிலை இந்த தமிழ்த் தலைவரின் தியாகத்தை நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறது. இவர்1995ஆம் வருடம் அக்டோபர் 3ம் தேதி தனது 89ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்!



ஊத்துக்காடு.

           இந்த பெயரைக் கேட்டமாத்திரத்தில் நம் நினைவுக்கு வருபவர் அங்கு கோயில் கொண்டிருக்கும் காளிங்கநர்த்தன பெருமாளும், அவரைப் பற்றி ஏராளமான பாடல்களை இயற்றி இன்றுவரை தமிழிசையில் பாடப்பட்டு வரும் வேங்கடசுப்பையர் இயற்றிய கிருஷ்ணகானமும் நம் நினைவுக்கு வரும். எத்தனை பாடல்கள். அலைபாயுதே, ஆடாது அசங்காது வா கண்ணா இப்படி அவருடைய பாடல்களைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. அன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. காளிங்கன் தலைமீது ஏறி நர்த்தனமாடி, காளிங்கனின் கொட்டத்தை அடக்கிய கிருஷ்ண பகவானின் தரிசனம் அந்த தினத்தில் கிடைத்தது மாபெரும் பேறு.

       அன்று ஊத்துக்காடு என்றுமில்லா அளவுக்கு மக்கட் கூட்டத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ஆலயத்தினுள் நுழையக் கூட நெரிசலில் அல்லல் பட நேர்ந்தது. ஒருவழியாக ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிடைத்தது.

       ஊத்துக்காடு எனும் கிராமம் சாலியமங்கலத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக ஆவூர் சென்று பாபநாசம் கும்பகோணம் போகும் சாலையில் திருக்கருகாவூரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்த கிருஷ்ணத் தலம். இது 1000 – 2000 வருஷங்கள் பழமையானது. கிருஷ்ண ஜயந்தி திருவிழா இங்கு பிரபலமாக நடைபெறும். முன்பெல்லாம் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இரவு முழுதும் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி நடைபெறும். நாளடைவில் அது நின்றுபோயிற்று.

இங்கு மூலஸ்தானத்து கிருஷ்ண விக்ரகம் காளிங்கன் எனும் ஐந்து தலை நாகத்தின் தலைமீது கிருஷ்ணன் நின்று ஆடுவது போன்ற தோற்ற முடையது. பாம்பின் தலைமீது கண்ணன் நிற்பது போல தோந்றினாலும், பாம்புத் தலைக்கும் கண்ணன் காலுக்கும் இடையில் மெல்லிய நூலிழை போன்ற இடைவெளி உண்டு. இதுவே இங்குள்ள சிறப்பு. அருள்மிகு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊத்துக்காடு வந்து ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடுவது வழக்கம். அதுபோலவே தத்தமது குழந்தைகள் இசையில் வல்லவர்களாக, கலைகளில் சிறந்தவர்களாக ஆக வேண்டுமென்று நினப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

உத்ஸவர் கிருஷ்ணன் காலுக்கு கொலுசு வாங்கி சாத்தி வழிபடுவது சிறப்பு. காரணம் இந்த கிருஷ்ணன் காளிங்கன் எனும் பாம்பு வடிவுடைய அசுரனை அவன் தலைமேல் ஏறி நின்று, சுற்றிலும் ஆயர்பாடி சிறுவர்கள் பயந்து போய் பார்த்துக் கொண்டிருக்க இவன் அந்த ராட்சச வடிவுடைய அரக்கப் பாம்பை ஆடியே வதம் செய்த காலல்லவா கண்ணனின் கால்கள். அந்தக் கால்களுக்கு கொலுசு அணிவித்து அழகு பார்க்க வேண்டாமா? ஸ்ரீஜயந்தி அன்று கிருஷ்ண பகவானுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்விப்பர்.

தலவரலாறு:  தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் வசித்தது. சிவபெருமானுக்கு இந்த காமதேனு மலர்களைக் கொய்து கொண்டு வந்து இங்குள்ள கயிலாசநாதனுக்கு அர்ச்சித்து பூஜித்து வந்தது. இங்கு ஏராளமான பசுக்கள் நிரம்பியிருந்த காரணத்தால் இவ்வூர் “ஆவூர்” என வழங்கப்பட்டது. “ஆ” என்றால் பசு. பசு வந்த இடம் “கோ” வந்து “குடி”யேறிய காரணத்தால் கோவிந்தகுடி என்றாகியது. அது போலவே பட்டி எனும் பசு சிவனை பூசித்தத் தலம் பட்டீஸ்வரம். இப்படி பல ஊர்கள் இருந்த போதும் காமதேனு விரும்பி வசித்தத் தலம் ஊத்துக்காடு.

ஆதி நாளில் இவ்வூர் காமதேனுவின் சுவாசமாக இருந்ததால் “மூச்சுக்காடு” என்றும் நாளடைவில் “ஊத்துக்காடு” என மறுவியது. ஒரு முறை தேவரிஷி நாரதர் இங்கு வந்து இங்கிருந்த பசுக்களிடம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சரிதையைச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது, காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயர்குலச் சிறுவர்களை அங்கிருந்த ஒரு மடுவில் பெரிய பாம்பு ஒன்று இருந்து துன்புறுத்தி வந்ததையும், அதன் பெயர் காளிங்கன் என்றும், அந்தக் காளிங்கனின் ஆணவத்தை அடக்கக் கண்ணன் அதன் தலைமீது ஏறி நின்று அது சோர்ந்து வீழும்வரை தலைமீது ஆடியதையும் நினைவுகூர்ந்தார். இதனைக் கேட்டு காமதேனு கண்ணனை கண்ணீர் மல்க வணங்கி மகிழ்ந்தது.

  1. காமதேனுவுக்கு ஸ்ரீகிருஷ்ணனை எப்படியாவது தரிசிக்க வேண்டும், அவன் குழலிசையைக் கேட்டு மகிழ் வேண்டுமென்கிற ஆசை உண்டானது. அதை அப்படியே கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டது. அன்பர் குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணன் காமதேனுவின் கோரிக்கையை ஏற்காமல் இருப்பானா? ஓடோடி வந்தான். வேணுகானம் உள்ளம் உருக வாசித்தான். அப்போது மடுவில் காளிங்கன் தலைமீது தான் ஆடிய காட்சியை அதற்குக் காட்டினான். காமதேனு ஜென்மம் சாபல்யம் அடைந்ததாக உணர்ந்தது.
  2. பிந்நாளில் சோழ மன்னன் ஒருவன் இந்தப் பகுதிக்கு வந்த போது இந்த வரலாற்றைக் கேட்டான், அதற்கேற்றவாரு காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு இங்கொரு ஆலயத்தை வடித்துக் கொடுத்தான் என்கிறது இவ்வூர் தலபுராணம்

கோயிலடி:


       
கோயிலடி எனும் இந்த சின்னஞ்சிறு கிராமம் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் கல்லணைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஊரின் சிறப்பு என்ன? இந்த இடத்தை முதலில் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? இவ்விடத்தை முதல் ஊராகத் தேர்ந்தெடுக்கக் காரணம் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தின் போது நூறு தொண்டர்களுடன் அவர் தஞ்சை மாவட்டத்தினுள் நுழைந்த ஊர் இந்த கோயிலடி.

1930இல் ராஜாஜி நடத்திய இந்தப் போராட்டத்தின் போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் ஜே.ஏ.தார்ன் எனும் ஆங்கிலேயர். அவருக்கு இந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை எவ்வகையிலேனும் நிறுத்தி தோல்வியுறச் செய்துவிட வேண்டுமென்கிற வேகம். அதற்காக அவர் கிராமங்கள், ஊர்கள் தோறும் தண்டோரா அடித்து ஒரு அறிவிப்பினைச் செய்தார். சத்தியாக்கிரக தொண்டர்கள் இந்த மாவட்டத்தின் ஊர்கள் வழியாக வேதாரண்யம் செல்லுகின்ற பாதை நெடுகிலும் எந்த ஊரிலும், யாரும் சத்தியாக்கிரகிகளுக்கு உணவு அளிப்பதோ, தண்ணீர் கொடுப்பதோகூட கூடாது. அப்படி யாரும் கொடுத்தால் அவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்பது அவரது அறிவிப்பு. வழிநெடுக இருந்த ஊர்களின் அதிகாரிகள் முதல் தலையாரி வரையிலான அனைவரும் மக்களிடம் இந்த உத்தரவைச் சொல்லி அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த உத்தரவினால் மக்கள் அச்சமடைவார்கள், சத்தியாக்கிரகிகளுக்கு எந்த உதவியும் கிடைக்காது, போராட்டம் பிசுபிசுத்துப் போகும் என்று கனவு கண்டார்கள் அதிகார வர்க்கத்தினர். ஆனால் பாவம், அப்போது அவர்களுக்குத் தெரியுமா இந்தப் போராட்டத்தில் எதிர்பாராத அதிசயம் நிகழும் என்று.

இந்தப் பின்னணியில் ராஜாஜி தலைமையிலான தொண்டர்கள் திருச்சி ஜங்ஷன் பகுதியில் இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டு பெரிய கடைத்தெரு வழியாக நடந்து திருவரங்கத்தை அடைந்தனர். அங்கு இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு அங்கிருந்து திருவானைக்கா வழியாக திருவளர்ச்சோலை வந்து அங்கிருந்து கல்லணையைத் தாண்டி கோயிலடி கிராமத்தினுள் நுழைகின்றனர். அப்போது கோயிலடி ஊர் அருகில் காவிரிக் கரையில் ஏராளமான கிராம மக்கள் குவிந்திருந்தனர். சத்தியாக்கிரகிகளுக்கு இவர்கள் தங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்களா அல்லது எதிர்க்கவா என்பது தெரியவில்லை. தஞ்சை கலெக்டர் உத்தரவுப்படி தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்கிற அச்சமும், அதை எப்படி வெல்வது என்ற யோசனையுடன் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

சத்தியாக்கிரகிகள் ஊரை நெருங்கிய போதுதான் அங்கு கூடியிருந்தவர்கள் தங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள். தொண்டர்கள் ஊர்வலம் ஊரை நெருங்கியபோது காத்திருந்த கூட்டம் கைகளில் மலர் மாலைகளையும், கதர் நூல் மாலைகளையும் கொண்டு வந்து இவர்களுக்கு அணிவித்து வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிக்கு ஜே, என்றெல்லாம் கோஷமிட்டனர். அப்போதே தெரிந்து விட்டது, தஞ்சை மாவட்டத்தில் கலெக்டரின் உத்தரவுக்கு எவரும் அஞ்சவில்லை, தங்களுக்கு வழிநெடுக ஆதரவு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டனர்.

அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் விவசாயக் கூலிகள். அவர்கள் சொன்னார்கள், அரசாங்க ஆணை எங்களுக்கெல்லாம் தெரியும். அது தெரிந்ததால் ஊர் பெரிய மனிதர்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டார்கள். தேசத் தொண்டர்களுக்கு நாம் சென்று எல்லா உதவிகளையும் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஒன்றுகூடி இங்கே வந்திருக்கிறோம் என்றார்கள். அந்த ஏழை எளிய மக்களின் தேசபக்தி தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அவர்கள் உள்ளங்களில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.

அங்கிருந்து கிளம்பி அடுத்த பதினைந்து நாட்கள் கழிந்தபின் வேதாரண்யம் சென்றடையும் வரை அவர்களுக்கு பொதுமக்களின் வரவேற்பு சிறப்பாக அமைந்தது. அவர்களுக்கு குடிநீரோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது என்ற கலெக்டரின் ஆணை காற்றில் பறக்க விடப்பட்டது. யாரோ அப்படி கொடுத்தால்தானே தண்டனை ஆகையால் மரங்களைக் கொண்டு கொடுக்க வைத்தார்கள். உணவுப் பொட்டலங்களை ஒரு கூடையில் வைத்து சாலையோர மரத்தின் கிளையில் கட்டி வைத்தனர் மக்கள். அந்த மரத்தின் குறியீடாக ஒரு எண் குறிக்கப்பட்டிருக்குமல்லவா அந்த எண்ணை ஒரு சீட்டில் எழுதி அதைக் கொண்டு போய் யாரோ ஒரு சிறுவன் சத்தியாக்கிரகிகளிடம் கொடுப்பான். அந்த எண்ணுள்ள மரம் வரும்போது கூடை இறக்கப்படும், உணவு பரிமாறப்படும். போலீஸ் உங்களுக்கு உணவளித்தது யார் என்றால், இந்த மரம் என்றார்கள் சத்தியாக்கிரகிகள்.

அப்படிப்பட்ட ஊரை பாரதி இயக்கத்தார் காலடி பதித்த முதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனித பூமி. அந்த ஊரில் இருப்பதுதான் அப்பக்குடத்தான் பெருமாள் ஆலயம். அந்த ஆலயத்தினுள் சென்று பெருமாளை சேவித்துவிட்டு பிரகாரத்தில் உட்கார்ந்து அவ்வூரின் சிறப்பையும், அவ்வூர் மக்கள் சத்தியாக்கிரகிகளை வரவேற்று உபசரித்ததையும், பிறகு அன்று மாலை காவிரி ஆற்று மண்ணில் நடந்த பொதுக்கூட்டம் பற்றியும், அதில் உரையாற்றிய கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் பற்றியும் உரையாடினார்கள். அவ்வூர் மக்கள் சிலரும், ஆலயத்தில் தரிசனத்துக்கு வந்திருந்த மக்களும் இந்த உரையாடலைக் கேட்டு அவ்வூரின் முக்கியத்துவத்தை அவர்களும் தெரிந்து கொண்டார்கள். இரண்டு மூன்று கார்களில் சென்ற அனைவரும் அங்கு ஆலயம் தவிர, காவிரி ஆறு போன்ற இடங்களை தரிசித்து திருவையாறு திரும்பினார்கள்.

கோயிலடி எனும் சிற்றூர் இந்த அப்பக்குடத்தான் ஆலயம், உப்பு சத்தியாகிரகிகள் தஞ்சை மாவட்டத்தினுள் நுழைந்த இடம் ஆகியவை தவிர ஒரு சிறந்த கர்நாடக இசைக் கலைஞரையும் கொடுத்திருக்கிறது. அவர்தான் கோயிலடி ரங்கராஜன் எனும் இசைக் கலைஞர்.