பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 31, 2015

அன்னை சாரதா தேவியார்.


நமது தேசத்தில் பண்டைய காலந்தொட்டு பெண்களில் பல யோகியர் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். ஒளவையார், இராமாயணத்தில் சபரி, சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள், திருத்தொண்டர் புராணத்தில் மங்கையர்க் கரசியார், காரைக்கால் அம்மையார் போன்ற எத்தனையோ பெண் அடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் இந்த தேசத்தின் பெண்கள் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு இலக்கணமாகவே வாழ்ந்து வழிகாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 

அந்த மாதரசிகளின் வழியில் நாம் இப்போது பார்க்கப்போவது, அன்னை சாரதா தேவியைப் பற்றிதான். கல்கத்தாவில் காளிகோயில் பூசாரியாக இருந்த இராம கிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்க்கையையே இறையுணர்வில் ஆழ்த்தி, தன்னை மறந்து உலகத்துக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவர். அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்குத் திருமணம் ஆனது. அப்படி அந்த மகானைத் திருமணம் செய்து கொண்ட மங்கையோ, இந்த உலக வாழ்க்கைக்கு என பிறந்தவர் அல்ல, மனிதர்களை உய்விக்க வந்த மகாத்மா என்பதை திருமணமாகியும் துறவியாக வாழ்ந்து காட்டி மறைந்தவர் அன்னை சாரதா தேவியார். 

மக்கள் மனங்களை மயக்கி மாயா ஜாலங்களையோ, மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களையோ செய்து பிறர் மனங்களை கவர்ந்தவர் அல்ல இந்த தாய். உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் ஒரு அன்னை இவர்தான் என்று நினைக்கும் வகையில், அன்பே ஒரு தாயின் உருவெடுத்தது போல, பிறரது துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, ஆறுதல் வழங்கி, வழிகாட்டிக் கொண்டு வாழ்ந்தவர் அன்னை. அந்த அன்னை சாரதா தேவியாரின் வாழ்க்கைச் சரிதத்தையும், அவர் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளையும் இப்போது பார்க்கலாம்.

பாரத தேசத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த வங்காள தேசம்; அங்கு கல்கத்தா நகரத்துக்கு அருகில் அமைந்த ஜெயராம்பாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 1853 டிசம்பர் 22ஆம் நாள் அன்னை சாரதா தேவியார் அவதரித்தார். தந்தையார் பெயர் ராமச்சந்திர முகர்ஜி, தாயார் ஷ்யாமாசுந்தரி தேவி. பெற்றோருக்கு இவர்தான் முதல் குழந்தை.

கிராமத்தில் பிறந்த பெண் குழந்தை, அதுவும் பிற்போக்கான பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த இந்தப் பெண்ணின் இளம் வயது எப்படி இருந்திருக்கும்? கிராமத்தில் இதர குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், ஆடு, மாடுகளை மேய்த்து, குளிப்பாட்டி அவற்றுக்கு தீனி கொடுத்து கவனித்துக் கொள்ளுதல், வீட்டில் மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல், அக்கம்பக்கத்தாருக்குத் தேவையான பணிகளைச் செய்தல் என்று மிகச்சாதாரண கிராமத்துப் பெண் குழந்தைகளைப் போலத்தான் இவரும் வளர்ந்தார். 

அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் படிக்க பள்ளிக்கூடம் செல்ல அனுமதிப்பதில்லை. அத்தனை பிற்போக்கான காலம். அன்னையும் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பள்ளிக்கூடப் பாடம்தான் படிக்கவில்லையே தவிர, தாய் தந்தை யரிடமும், அக்கம் பக்கத்தாரிடமும் வாழ்க்கைக் கல்வியை மிக நன்றாகப் பயின்றவர். இளமையில் கல்வியைத் தவறவிட்ட அன்னை, பின்னர் வயது வந்ததும் தானாகவே முயன்று கற்று, படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். பண்பாட்டில் சிறந்த குடும்பச் சூழ்நிலை, மிக உயர்ந்த ஜீவனாக விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மனைவியாக அமைந்த சூழ்நிலை, இயல்பாகவே பண்பாட்டில் தோய்ந்த உயர்ந்த உள்ளம் ஆகியவற்றால் அன்னை தொடக்கம் முதலே மிக உயர்ந்த ஆன்மீக வாழ்க்கையைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார். 

அந்தக் காலத்தில் பிறந்த ஒருசில ஆண்டுகளுக்குள்ளாகவே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அன்றைய பெரியவர்கள் அதற்கும் ஒரு காரணம் அழகாகச் சொல்லி வந்தார்கள். கொடி இளசாக இருக்கும்போதுதான் கொழுகொம்பில் ஒட்டி உறவாடி வளருமாம்; முதிர்ந்து போனால் கொழுகொம்பில் அது ஒட்டாதாம். குழந்தைப் பருவத்திலேயே கணவன் வீட்டாரைத் தன் உறவாகக் கருதும் எண்ணம் வளருமாம்; இல்லையேல் அவர்களை அன்னியமாகப் பார்க்கும் குணம் வந்துவிடுமாம். அன்றைய நிலைமை அப்படி! குழந்தைகள் மண்வீடு கட்டி விளையாடும் பருவத்தில் மணமேடை கண்டு, அருகில் ஒரு சிறுவனைக் காட்டி இவன் தான் உன் கணவன் என்றால், அந்தக் குழந்தை விளையாட்டை நினைப்பாளா, கணவன் மனைவி என்ற உறவை உணர்வாளா? ஆம்! சாரதா தேவியாருக்கு ஐந்து வயதாகும்போதே குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் அவருக்குக் கணவராக அமைந்த ராமகிருஷ்ணருக்கோ அப்போது வயது இருபத்தி மூன்று. பதினெட்டு வயது வித்தியாசத்தில் திருமணம். அன்றைய இந்தியாவின் நிலைமை அது! என்ன செய்ய முடியும்?

ஐந்து வயது குழந்தைக்குத் திருமணம் ஆயிற்றே தவிர, பெண் அவள் பெற்றோருடன் தான் இருந்தாள். அவருக்கு 19 வயது ஆனபோதுதான் விவரம் புரிந்து, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது, கணவர் இருக்கிறார், அவருக்கு அப்போது வயது 37 என்பதையெல்லாம் உணர முடிந்தது. பெற்றோர்கள் பெண்ணை கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஐந்து வயதில் திருமணம் ஆன காலம் முதல், 19 வயதில் கணவன் இல்லம் சென்றது வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஓரிரு முறை குடும்ப நிகழ்ச்சிகளையொட்டி அன்னை ஜெயராம்பாடியிலிருந்து புறப்பட்டு குருதேவரின் ஊரான காமார்புகூருக்குச் செல்ல நேர்ந்திருக்கிறது. 

1872இல் கணவன் வீடு வந்த அன்னை அதன் பிறகு 13 ஆண்டுகள் அதாவது 1885 வரையில் கணவனை சிறிதுகூட பிரியாமல் தட்சணேஸ்வரத்திலேயே கணவனுடன் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் அன்னையின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்கிறது. கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளை முறையாச் செய்வார். கணவனுக்கு மட்டுமல்லாமல், அவரைக் காண வருகின்ற பக்தர்களுக்கெல்லாம் உணவு தயாரிப்பது, பரிமாறுவது, இல்லற தர்மம் குறைவு படாமல் ஒரு ஆதர்ச இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் அன்னை. கணவன் ஒரு சக்தி உபாசகன் என்பதால் அவருக்கு சேவை செய்யும் அன்னையும் தன்னை ஒரு தலைசிறந்த ஆன்மீக சாதனையாளராக ஆக்கிக் கொண்டார்.

கல்கத்தா நகரத்தின் ஒரு பகுதியில் இருந்தது தட்சணேஸ்வரம். அங்கு இருந்த காளி கோயிலில் பகவான் ராமகிருஷ்ணர் பூசாரியாக இருந்தார். அவருக்கு அந்த ஆலயத்திலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அறையிலிருந்து சிறிது தூரத்தில் நகபத் என்றொரு கட்டடம். மிகச் சிறிதான அந்த இடத்தில் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் அன்னை சாரதா தேவியார். மிகச் சிறிய அந்த இடத்தில்தான் உணவு தயாரித்தல், விருந்தினர்களை உபசரித்தல் போன்ற அனைத்தையும் பொறுமையும், புன்னகையுமாக செய்து வந்தார் அன்னை.

மற்ற பெண்களைப் போல வண்ண வண்ண ஆடைகள், விலை உயர்ந்த பட்டாடைகள், தங்க அணிகலன்கள் போன்ற எதையும் அணியாமல், அன்னை துறவு நிலைக்கேற்ப அகலமான சிவப்பு நிறக் கரையுடன் கூடிய வெண்ணிற ஆடை அணிவார். இப்போதெல்லாம் நம் தமிழ்நாட்டுப் பெண்களும் நெற்றியில் தலைமுடியை வகிடு எடுக்கும் இடத்தில் பெரிய குங்குமப் பொட்டு அணிவதைப் பார்க்கிறோமல்லவா? அது தமிழ் நாட்டு வழக்கம் அல்ல. அது வங்காளத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது நம் பெண்களும் அதை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். அன்னை தன்னுடைய தலை வகிட்டில் மிகப் பெரிதான் குங்குமப் பொட்டை அணிவார்.

அவர் தலையில் நீண்ட கூந்தல், பிரித்து விட்டால் தரையைத் தொடுமளவுக்கு நீளம். அதை இன்றைய நாகரிக மங்கையர் தலைமுடியை அப்படியே பிரித்து விட்டுக் கொண்டிருக்கிறார்களே அது போல முடியைப் பின்னாமல், கொண்டையிடாமல் பிரித்துப் பின்புறமாக விட்டு, தன் புடவையால் தலையை மூடிக் கொண்டிருப்பார்கள். காதிலும், கழுத்திலும் கைகளிலும் ஒருசில தங்க நகைகளும் மின்னும்.

அன்னை தினமும் காலையில் மூன்று மணிக்கு எழுந்து விடுவார். சூரியோதயத்துக்கு முன்னமேயே குளித்து முடித்து பளிச்சென்று நெற்றியில் குங்குமத்தோடு மங்களகரமாக விளங்குவார். அதன் பின்னர் தியானத்தில் அமர்ந்து நன்றாக பொழுது விடியும் வரை இறைவனை தியானித்து கண்ணை மூடிக்கொண்டிருப்பார். அதன் பிறகுதான் குடும்ப வேலைகள், உணவு தயாரித்தல் போன்றவை. பிற்பகல் ஒரு மணி வரை அவருடைய பணிகளை அவரே செய்து முடிப்பார். அந்த வெயில் நேரத்தில் வீட்டுக்கு வெளியே மக்கள் நடமாட்டமே இருக்காது. வீட்டின் வாயிலில் வந்து தன்னுடைய நீண்ட முடியை வெயிலில் உலர்த்திக் கொள்வார். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சிலர், இந்தப் பகுதியில் சாரதாமணி தேவியார் வாழ்வதாகச் சொல்லுகிறார்களே, ஆனால் நாங்கள் அவரை இதுவரை கண்ணால் கண்டதே இல்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு அன்னை பிறர் கண்களில் படாமலே தனித்து வாழ்ந்து வந்தார்.

குருதேவர் இருப்பதோ தட்சணேஸ்வரம் காளி கோயிலில். அங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டமும், அவர்கள் பேச்சும், பாட்டும் ஆனந்த பரவசமாய் குருதேவருடன் இருப்பார்கள். அன்னை அந்தப் பக்கம் போகவே மாட்டார். தான் வசித்த நகபத் இல்லத்திலிருந்தபடியே தட்சணேஸ்வரத்தைப் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பார். அப்படி அவர் ஒரே யிடத்தில் இருந்தபடியால் காலில் கீல் வாத நோய் வந்துவிட்டது. அதன் காரணமாக ஒருசில அக்கம்பக்கத்துப் பெண்களோடு பழகும் வாய்ப்பும் அன்னைக்கு ஏற்பட்டது.

குருதேவர் உணவுப் பிரியர் அல்ல. பசிக்கு உணவு அவ்வளவுதான். ஆனால் காளிகோயில் பிரசாதம் அவர் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகையால் ராமகிருஷ்ணருக்கு அன்னையே உணவு தயாரித்து பரிமாறுவார். கணவருடைய அறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த அறையை சுத்தம் செய்து, துணிமணிகளைச் சரிசெய்து வைத்துவிட்டு வருவார். குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாய் தனது இறுதிக் காலத்தில் மகனுடைய அறையில் வந்து தங்கினார். மாமியாருக்கும் பணிவிடைகளை அன்னை அன்போடு செய்தார். குருதேவரை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடவே அவர்களுக்கெல்லாம் உணவு தயாரிக்கும் பணி அன்னைக்கு அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் நாலைந்து கிலோ கோதுமை மாவு பிசைந்து சப்பாத்தியும் அதற்கான சப்ஜியும் செய்வார். உணவு உண்டபின் விருந்தினர்களுக்கு தேவையான வெற்றிலைச் சுருள்களையும் தயாரித்து வைத்திருப்பார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரை தரிசிக்க வரும் பெண் பக்தர்கள் அன்னையுடன் வந்து தங்கிக் கொள்வார்கள். அப்படி வரும் பக்தைகளுக்கு வேண்டிய செளகரியங்களை அன்னை செய்து தருவார்; உணவு பரிமாறுவார். அப்படி அன்னையோடு வந்து தங்கும் பக்தைகளில் சிலர் கடைசி வரையில் அன்னையுடன் நல்ல நட்போடு பழகினார்கள். அவர்களில் கோலாப்மா, யோகின்மா என்ற இரு பெண்மணிகளைக் குறிப்பிடலாம்.

1874இல் அன்னையின் தந்தை காலமானார். தாயும், சகோதரர்களும் வறுமையின் பிடியில் துன்புற்றனர். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பும் அன்னைக்கே வந்து சேர்ந்தது. அன்னையின் தாயார் ஷ்யாமாசுந்தரி, நெல் குத்தி புடைத்துக் கொடுத்து அதில் வரும் கூலியில் வாழ்ந்து வந்தார். அவர் இப்போது அன்னையுடன் வந்த பின்னர், அன்னையும் தன் தாயாருக்கு உதவியாக நெல் குத்துதல் புடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலானார். செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ன? பிறருக்குப் பயன்படும் செயல் என்றால் அதில் அன்னை ஏற்றத் தாழ்வு பார்த்ததில்லை. 

அன்னை சொல்லுவார்: "பிறரை நேசிப்பதும், பிறருக்காக சேவை செய்வதும், மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று. அவற்றையே, பிரதிபலன் எதிர்பார்க்காமல் இறைவனுக்குச் செய்யும்போது, அது ஒரு அற்புதமான ஆன்மீக சாதனையாக ஆகிறது. தமக்கென்று ஏற்பட்ட பிறருக்கு உழைத்தல் என்னும் தர்மத்தை அன்னையும் தன்னுடைய தர்மமாக ஏற்று நடத்தி வந்தார்.

அன்னையின் வாழ்க்கையில் கணவனுக்குச் செய்யும் பணிவிடைகள், விருந்தினர்களைப் பேணி உபசரித்தல், உணவு பரிமாறுதல், குடும்பத்தை அனுசரித்து பாதுகாத்தல் இவைகளைத் தவிர அவருடைய இதர வேலைகள், குணங்கள் பற்றியெல்லாம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இவர் காலையில் நெடு நேரமும், இரவில் அதிக நேரமும் ஆழ்ந்த தியான நிலையில் இருந்து இறைவனை வழிபட்ட செய்தி மட்டும் நமக்குக் கிடைக்கிறது.

ஒரு முறை, இவர் தன்னுடைய தம்பி மகளிடம் சொன்னார்: "குழந்தாய்! எனக்கு உன் வயதிருக்கும்போது நான் எவ்வளவு வேலைகள் செய்வேன் தெரியுமா? இருப்பினும் அத்தனை வேலைக்கிடையிலும் நான் தினமும் ஒரு லட்சம் நாம ஜபம் செய்யும் பணியையும் செய்து வந்தேன்" என்றார். இதிலிருந்து இவர் வாழ்க்கை எப்பதியிருந்திருக்கிறது என்பது தெரிகிறது அல்லவா?

அன்னைக்கு யோகப் பயிற்சியும் இருந்திருக்கிறது. ஆறு சக்கரங்கள், குண்டலினி போன்றவற்றை தானே வரைந்து அன்னைக்கு பயிற்சி அளித்தார் குருதேவர். ஆகவே தட்சணேஸ்வரத்தில் அன்னை குருதேவருடன் இருந்த காலம் முழுவதும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன், தியாக வேள்வியை செய்துகொண்டு துறவறத்தில் வாழ்ந்தார் என்பது தெரிகிறது.

1886 ஆகஸ்ட் 16இல் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜீவன்முக்தி சமாதியடைந்தார். அதுமுதல் அன்னை தன் உடலில் இருந்த மங்கல நாண்களை நீக்கினார். புடவையில் இருந்த சிவப்புக் கரையை நீக்க முற்பட்டபோது, குருதேவரின் ஆன்மா பேசுவதைப் போல உணர்ந்தார். அவர் சொன்னார், "என்ன செய்கிறாய்? நான் எங்கே போய்விட்டேன். ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குப் போவது போலத்தானே நான் போயிருக்கிறேன்" என்றாராம். ஆகையால் அவர் விதவைக் கோலம் பூணாமல் விட்டு விட்டார். 

கணவரின் குரல் சொன்ன செய்தியின்படி அவர் நித்திய ஜீவனாக இருக்கிறார் என்பதை உணர்ந்த அன்னை அதுமுதல் விதவைக் கோலம் பூணாமல், தான் நித்திய சுமங்கலி என்பதை உணர்த்த மெல்லிய கரையுடைய புடவை, தங்க வளையல் ஆகியவற்றை அணிந்திருந்தார்.

குருதேவர் சமாதியடைந்த பின்னர் அன்னை சில உறவினர்கள், பக்தர்கள் புடைசூழ பிருந்தாவனம் சென்றார். அங்கிருந்து அயோத்தி போன்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று அங்கெல்லாம் சிலகாலம் தங்கினார்.

குருதேவரின் வழிகாட்டுதல்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது இறுதிக் காலத்தில் அன்னைக்குச் செய்த உபதேசம் முக்கியமானது. அவர் சொன்னார்: "என் காலத்துக்குப் பிறகு நீ காமார்புகூருக்குச் சென்று விடு. எப்போதும் சாதமும் கீரையும் மட்டுமே கிடைத்தாலும் அதை உண்டு வாழ்க்கையை நடத்து. சதா சர்வ காலமும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டே இரு." என்று சொல்லியிருந்தார். பிருந்தாவனத்திலிருந்து திரும்பியபின் காமார்புகூருக்குச் சென்று அங்கிருந்த நெல்லைக் குத்தி, தோட்டத்தில் தானே பயிரிட்ட கீரையைப் பறித்து உண்டு வாழ்ந்தார். உணவுக்கு உப்பு வாங்கக்கூட அன்னையிடம் பணம் இருந்ததில்லை. அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் குருதேவர் சொன்னபடி கைக்குத்தல் அரிசியோடு வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரையைச் சேர்த்து உப்பு இல்லாமல் உணவருந்தும் யோகினியாகவே வாழ்ந்தார் அன்னை.

குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் குடும்பத்தார் அல்லவோ அன்னையைப் பாதுகாத்து வரவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. குருதேவரின் பணிக்காக தட்சணேஸ்வரம் கோயிலில் இருந்து மாதாமாதம் ரூ.7 அளித்து வந்தனர். அதை இப்போது அன்னையிடம் கொடுத்து வரத் தொடங்கினர். ஆனால் குருதேவரின் அண்ணன் மகனான ராம்லால் என்பவர் அதை அன்னைக்குக் கொடுக்க விடாமல் தடுத்து விட்டார். தங்கள் வீட்டிலேயே ஒரு தடுப்பு அமைத்து அன்னை வாழும் பகுதியைத் துண்டித்து எந்த உதவியையும் செய்யாமல் ஒதுங்கிவிட்டார் அந்த ராம்லால். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் கூட அன்னைக்கு எந்த உதவியையும் செய்வதில்லை. குருதேவரின் அண்ணன் மகன் ராம்லால் தட்சணேச்வரம் கோயிலில் இப்போது அர்ச்சகராக ஆகிவிட்டதால், அனைவரும் அவருடன் சென்றுவிட, அன்னை மட்டும் தனிக்குடிசையில் தனித்துவிடப்பட்டார்.

குடும்பத்தாரின் நிந்தனை ஒரு பக்கம் இருந்த நிலையில், அந்த கிராமத்தாரும் இவரை கேலி செய்தும், தூற்றிக்கொண்டும் அவர் மனதை புண்படுத்தி வந்தனர். கணவனை இழந்த பெண் விதவைக் கோலம் பூண்டு வெள்ளாடை உடுத்துவதற்கு பதிலாக சிவப்பு கரை உள்ள புடவை அணிந்து கொண்டு, கையில் வளையல் அணிவதை கிராமத்தார் ஏற்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பு அத்தனை பிற்போக்கானது. அப்படியிருக்க அறியாமையில் மூழ்கிய அந்த கிராமத்து மக்களை நொந்து என்ன பயன்?

ஆனால் இவைகள் பற்றியெல்லாம் அன்னை கவலைப்படவில்லை; மனம் வாடவும் இல்லை. யாரையும் அவர் குறை சொல்லவுமில்லை. இப்படி ஆகிவிட்டோமே என்று தன் விதியையும் நொந்து கொள்ளவில்லை. கடவுள் மீது பழிபோடவுமில்லை. யாரிடமும் போய் தன் நிலைமையைச் சொல்லி வருந்தவுமில்லை. பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் தான் ஒரு தவசி, ஏனையோரைப் போல தானும் ஒரு சாதாரண பெண் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தார் அன்னை. 

இத்தனைக்கும் இடையில் ஒரே ஒரு பெண், பெயர் பிரசன்னமயி என்பது; அவர் மட்டும் அன்னையிடம் பரிவும் ஆறுதலும் காட்டி அரவணைத்து வந்தார். தாங்கமுடியாத துயரம் அன்னையின் மனத்தை வாட்டும் போதெல்லாம், குருதேவரின் காட்சி அவருக்குக் கிடைத்தது, ஆறுதல் தந்தது.

அன்னை தனித்து கிராமத்துச் சூழ்நிலையில் படும் பாட்டை அறிந்த குருதேவரின் பக்தர்கள் அவரை கல்கத்தா வந்து தங்கும்படி வேண்டினர். ஆனால் அதற்கு முதலில் இணங்காத அன்னை, பின்னர் வேறு வழியின்றி பக்தர்கள் தரும் ஆதரவில் கல்கத்தா நகரம் வந்து தங்கத் தொடங்கினார்.

கல்கத்தாவில் ஆன்மீகப் பணி.

குருதேவருடன் தட்சணேஸ்வரத்தில் இருந்த காலத்திலேயே குருதேவரைச் சந்திக்க வரும் பெண்கள் பலரும் வந்து அன்னையுடன் தங்குவது வழக்கம் அல்லவா? அப்ப்டிப்பட்ட பக்தர்கள் இப்போதும் அன்னையை நாடி வரத் தொடங்கினர். குருதேவரின் புகழ் பரவப் பரவ அன்னையை நாடி வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்தது. அவரை நாடி வரும் பக்தைகளுக்கெல்லாம் அன்னை மந்திர தீட்சை கொடுத்து வரத் தொடங்கினார். இந்த மந்திர தீட்சை எனும் அருட்பிரசாதத்தை துறவிகள் என்றில்லை இல்லறத்தில் இருப்போரும் பெறும் வழக்கம் உண்டு. இப்போதும் ராமகிருஷ்ண மடத்தில் மந்திர தீட்சை பெற்ற இல்லறத்தார் ஏராளம்.

அன்னையின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடங்கள் நான்கு மட்டுமே. அவை தட்சணேஸ்வரம், உத்போதன், ஜெயராம்பாடி, கோயல்பாரா ஆகிய ஊர்கள். தட்சணேஸ்வரத்தில் இருந்த காலம் வரை அன்னையை எவரும் அறியவில்லை. குருதேவரின் நெருக்கமான சீடர்களுக்கு மட்டுமே இப்படியொருவர் இருப்பது தெரியும். 

அன்னை மிகக் குறைந்த அளவே ஆகாரம் உட்கொள்வார். அதுபோலவே அளவோடுதான் உறக்கமும். இரவு 11 மணிக்குப் படுக்கச் சென்றால், மூன்று மணிக்கு எழுந்து விடுவார். மாலை வேளைகளில் ஆண் பக்தர்கள் அன்னையை தரிசிக்க வருவது வழக்கம். ஒரு கட்டிலும் அமர்ந்த வண்ணம் உடல் முழுதும் போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பார் அன்னை. மிகத் தாழ்ந்த குரலில் பேசுவார். சில சமயங்களில் சைகைகள் மூலம் சொல்ல வந்ததை உணர்த்துவார். 

இப்படி அவர் மக்களுக்காக அருள் பாலித்து வரும் காலகட்டத்தில் 1919ஆம் ஆண்டின் இறுதியில் உடல் நலம் குன்றத் தொடங்கியது. அது தொடங்கி 1920 ஜூலை 20 வரை அவர் நோயினால் சிரமப்பட்டார். 

அன்னை தன் பக்தர்களைப் பார்த்து சொன்னார்: "உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறரது குற்றங்களைப் பார்க்காதீர்கள். அதற்கு பதிலாக உங்களிடம் உள்ள குற்றங்களைப் பாருங்கள். உலகம் முழுவதையுமே உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். உலகில் யாருமே உங்களுக்கு அன்னியர் இல்லை. உலகம் முழுதும் உங்களுக்கு சொந்தம்" என்றார்.

1920 ஜூலி 20 நள்ளிரவு 1.30 மணிக்கு அன்னை மகாசமாதி அடைந்தார். மறுநாள் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கங்கைக் கரையில் தகனம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஒரு அழகிய சிறு கோயில் அமைக்கப்பட்டது. 

Sunday, August 30, 2015

அன்னை அபிராமியின் அருள் பெருக்கு

                                 
உலகத்து நாயகி அவள். தன்னை நாடி வருவபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருகிறாள். கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள். ராஜராஜேஸ்வரியான பராசக்தி ஒவ்வோர் ஊரிலே ஒவ்வொரு பெயருடன் தன் மெய்யடியார் துயர்தீர்க்க, தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அபய வரத ஹஸ்தங்களால் தன் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நின்று, அருள் செய்கிறான்.

தேவி பராசக்தி ஏன் நிற்க வேண்டும்? ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எல்லா ஆலயங்களிலும் அமர்ந்த திருக்கோலத்திலேதான் காண்கிறோம். அவள் செல்வத் திருமகள்: சஞ்சலை என்று பெயர் பெற்றவள். ஆகவே நொடியிலே வேறெங்கும் சென்றுவிடப் போகிறோமே என்ற கருத்துடன் அமர்ந்து அருள் செய்கிறாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அன்னை மட்டும் ஏன் நிற்க வேண்டும்? காஞ்சிமா நகரிலே உள்ள காமாட்சி மட்டுமே அமர்ந்த கோலம். மற்ற எல்லாத் தலங்களிலும் நின்ற நிலையிலே அருள்பவர் ஆடவல்லவ னாகிய அம்பல வாணன் மட்டும். மற்ற உத்ஸவ மூர்த்திகளான சிவபெருமான் அமர்ந்த திருக்கோலமாக சோமாஸ்கந்தராகவேதான் காட்சி தருகிறார். அன்னை மட்டும் ஏன் நிற்க வேண்டும்? திருமயிலையில் எழுந்தருளியுள்ள அன்னை கற்பகத்தை ஒரு கவிஞர், ‘மங்கலமாய் எங்கும் நின்றவளாம், மயில்போல உருவம் எடுத்தவளாம்’ என்று போற்றுகிறார்.‘உட்கார்ந்தவன் எழுவதன் முன்னே நின்றவன் நெடுந்தூரம் போவான்’ என்பது முதுமொழி. தன் அடியார் அழைக்குமுன்னே ஓடிவந்து அருள் செய்தற்காகவே விழிப்புடன் நின்றுகொண்டே இருக்கிறாளாம்! 

அன்னையின் அருள் பெருக்கு எத்தகையது என்பதற்கு எத்தனை எத்தனையோ சான்றுகள் கூறலாம். திருக்கடையூரில் வாழ்ந்த அபிராமி பட்டரை அறியாத தமிழ்ப் பெருமக்கள் இருக்க முடியாது. இவர்மீது அன்னை அருள்மாரி பொழிந்தது, அற்புதமான கவிதை மலர்களாக மலர்ந்து, நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றது. அன்னை தன் அடியாரைத் தடுத்து ஆட்கொண்டது பற்றி நினைக்கும்பொழுதெல்லாம், எத்தனையோ மகான்களின் கவிதைகள் நம் கண்முன்னே விரிகின்றன. வடமொழி, தென்மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய எந்த மொழியை எடுத்துகொண்டாலும் அவளது பேராற்றல் அருள்வாரிதி நம்மைத் திகைக்கச் செய்யும். அவர்களுள் மிகமிகச் சமீபகாலத்தில் சோழமண்டலத்தில் வாழ்ந்த பெரியார் அபிராமி பட்டர். பிரசித்தி பெற்ற மூககவியைப் போலவே இவரது இயற்பெயரும் யாருக்கும் தெரியாது. அபிராமியையே வழிபட்டதனால் அபிராமி பட்டர் என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது. இவருடைய அற்புதமான ஒலிமாலைகளை, ‘சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து’ என்று போற்றுகிறது அடியார்களது நெஞ்சம். ஒரு பாட்டின் கடைச் சொல்லே தொடக்கமாக உள்ள நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதி அது. சிவநேகச் செல்வரும், அன்னையின் மெய்யடியார்களும் திருமுறைகளைப் போலவே இதையும் பாராயணம் செய்து பயன் பெறுவர். 

பூர்ணிமையின் பொலிவிலே, முழு வடிவிலே தாயின் அற்புத வடிவை அமர்த்திப் பூசனை, மானஸிக பூஜை செய்துகொண்டிருந்த பட்டரை உலகம் பித்தன் என்று இகழ்ந்தது; பேயன் என்று பரிகசித்தது; எள்ளி நகையாடியது. ஆனால் தஞ்சையை ஆண்டுவந்த அரசர் சரபோஜி மன்னர் கண்டதென்ன? மகாதேஜஸ்வியாக ஒளி வீசுகின்றார் இந்தப் பெரியார். அரையிலே கந்தைதான்; ஆயினுமென்ன? உலக சிந்தையே சிறிதுமில்லாத மெய்ஞ்ஞானி போல் அல்லவா தோன்றுகிறார் என்று நினைக்கிறார். மக்கள் உன்மத்தன், பித்தன் என்று சொல்லுவதைப் பொருட்படுத்தாமல் அருகில் சென்று, “ஸ்வாமி, இன்று என்ன திதி?” என்று வினவுகிறார். பட்டர் சந்த்ரமண்டல நடுவிலே வீற்றிருக்கும் அன்னையின் திருவுருவுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த சமயம். “தாரா-காந்திதிரஸ்காரிநாஸாபரணபாஸுரா| கதம்பமஞ்ஜரீக்லுப்தகர்ணபூரமநோஹரா ||” என்று மலர்களைத் திருவடி களிலே தூவும் சமயம். அரை குறையான ஒலியில் இன்று என்ன இதி என்று யாரோ கேட்பது தெரிகிறது. “பெளர்ணமிதான்” என்ற சொல் அர்ச்சனைகளுக்கு இடையே அவர் வாயினின்றும் எழுகிறது. 

அன்று அமாவாஸ்யை, கடலாடச் சென்று மீளும் நடுவழியில் அமிருத கடேசுவரப் பெருமானை, காலனைக் காலால் உதைத்த காலஸம்ஹார மூர்த்தியை வழிபட வந்த அரசர், ‘அல்லாத காலனைமுன் அடர்த்தான் தன்னை’ச் சேவித்துப் பின் அபிராமசுந்தரியைச் சேவிக்க வந்து நிற்கும் சமயம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க இறைவியின் முன்னே நின்றார் சரபோஜி மன்னர். கூடியிருந்த மக்கள், ‘பார்த்தீரா! நாங்கள் பித்தன் என்றோம்; நீர் ஏற்கவில்லை’ என்று சொல்வது போல, பயத்துடன் கூடிய மெல்லிய நகையொலி மண்டபம் முழுவதும் நிறைந்தது. அரசர் திகைத்தார். 

நிஷ்டை கலைந்தது. அபிராமி பட்டர் கண்களை மலரவிழித்துச் சுற்றும் ஒரு முறை பார்த்தார். துறவிக்கு வேந்தன் துரும்பு என்றாலும், தாம் பூர்ணிமை என்று சொன்னத்தை நினைத்து வெட்கினார். உடனே கடல்மடை திறந்தது போல அமுதவெள்ளமாக வெளிவந்தது கவிதை. தாய் அபிராமவல்லி தன் குழந்தை அபிராமி பட்டரின் வாக்கை மெய்யாக்குவதற்குத் தன் காற் சிலம்பைக் கழற்றி வானில் வீசி, ‘அதோ பார் முழுமதி’ என்று சரபோஜி மன்னனுக்குக் காண்பித்தாள். அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழையையும் பொறுத்து மூடி மறைத்துக் காக்கும் பேரன்புதான் தாயின் திருவருள். ஆகவேதான் இறைவனது பெருமையைப் பற்றிப் பேசும் பொழுதுகூட, ‘தாயினும் சாலப்பரிந்து’ என்று பேசுகிறது தமிழ்மறை. 

அந்த அருட்பெருக்கிலே பிறந்த அற்புதக் காட்சிகளை நூறு பாடல்களில் காட்டுகிறார் பட்டர்பெருமான். தாயின் அற்புதாமன ரூபஸெளந்தர்யம் எப்படித் தெரிகிறது, பாருங்கள் . அவளது எல்லையற்ற பேரெழில் அவர் கண்ணுக்குப் புலனாகிறது. ‘ஸிந்தூராருணவிக்ரஹாம்’ என்று செல்லுவது போல, அன்னை சிவந்த நிறமாகத் தோன்றவில்லை; பச்சைப் பசுங்கிளிபோல் பசுமையாக, மரகதவல்லியாகத் தோன்றுகிறாள். பசும்பொன் அணிகள் அழகுக்கு அழகு செய்கின்றன. நெற்றித் திலகம் பளிச்சென்று பொன்னிறமாகத் தெரிகிறது சின்னஞ்சிறு நுதலிலே. 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது மலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே !

தாயே! கதிரவன் உன் நெற்றியில் திலகமாகக் காட்சிதருகிறான். உன் பேரெழிலின் முன் அவனது ஒளி மங்கி மழுங்கிவிடுகிறது. உன் நிறம் அருணவர்ணமா? பசுமையா? மாணிக்கமா? மாதுளம்பூ உன் எதிரே நிற்க முடியாமல் உன் நிற அழகில் தோற்றுவிடுகிறதோ? அப்படியானால் ஏன் உன் அடியார்கள், ‘தாடிமீகுஸுமப்ரபா, அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம், என்று பேசுகின்றனர்? கருணை அலைவீசும் கண்கள் என்கிறார்களே. தாயே, உன் நிறம்தான் என்ன? சிவப்பா? பசுமையா? பாலபாஸ்கரன் நுதல்திலகமா? ஆம், திலகம்தான், இதே காட்சியைத்தான் புதுமைக் கவிஞர், “முற்றிய ஆழியிலே அலைவந்து மோதிஎறிகையிலே, கற்றைக்கதிர் எழவே உமை திருக்காட்சி வியப்பேனடி” என்கிறார்.
அது மட்டுமா? மலர்க்கமலை துதிக்கின்ற மென்கொடி, மின்னற்கொடி, வித்யுல்லதா. “கடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிஸேவிதா” என்று பேசுகிறது ஸஹஸ்ரநாமம். இத்தகைய பெருமைகளை உடைய உன்னைத் துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது? 

முதலில் திருமுக மண்டலத்தையும் திலகத்தையும் கண்ட அவர் தாயின் திவ்ய ஸெளந்தர்யத்தை ஏற இறங்க ஒரு முறை பார்க்கிறார். மரகதாங்கியா? அல்ல, மதிக்கின்ற, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாகச் சிவந்த நிறத்தவளாகக் காட்சி தருகிறாள்.
இப்படிக் காட்சி தருகிற அன்னையை நோக்கி, “அம்மா, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமல்லவா நீ?” என்கிறார். உணர்வு என்பது எதைக் குறிக்கிறது? நுண் உணர்வின்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் என்றல்லவா கூறுகிறார், உன்னைப் பிள்ளைத் தமிழாலே வழிபட்ட குமரகுருபார்? அன்பு, பக்தி, வாத்ஸல்யம் இவற்றையே அவர் நுண்ணுணர்வு என்று குறிக்கிறார். அத்தகைய மெய்யடியார்களால் எப்போதும் முப்போதும் மதிக்கப்பெறும் மாணிக்கம் அல்லவா நீ? உன்னையன்றி எனக்கு வேறு யார் துணை? நீயே எனக்கு எல்லாம். ஸர்வஸ்வமும் நீயே. பல பாடல்கள்-நூறு பாடல்கள்- பாடியும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. ‘எல்லோரும் வாருங்கள், சுகமிருக்குது பாருங்கள்’ என்று நந்தன் கூவி அழைத்தது போல, ‘அன்னையைத் தொழுபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?’ என்று ஆசைகாட்டி அழைக்கிறார் பட்டர். 

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா 
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 

நாம் முதலில் எதை வேண்டுகிறோம்? பொருள்செல்வம்தான்; சந்தேகமென்ன? நம்மை வசீகரிக்கும் முறை அந்த மெய்யடியாருக்குத் தெரியாதா? ஆகவே முதல்முதலாகத் தனம் தரும் என்றார். செல்வதை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா நலன்களையும் அடைந்துவிட முடியுமா? அறிவில்லாத மூர்க்கரிடம் செல்வம் இருந்து பயனென்ன? ஆகவேதான் கல்வி தரும். கல்வியும் அறிவும் கிட்டிவிடுகின்றன. கோழையாகவும், எடுத்த செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் இல்லாத சந்தேகப் பிராணியாகவும் ஒருவன் இருந்தால் பயனென்ன? அவனால் யாருக்கு நம்மை? நாட்டுக்குத்தான் நன்மையா? வீட்டுக்குத்தான் நன்மையா? ஆகவேதான் நல்ல மனம் தரும் என்று சொல்லவில்லை; ‘ஒருநாளும் தளர்வு அறியா மனம்,. வாழ்க்கைப் போராட்டத்தில் எதுதான் வந்து எதிர்த்தபோதும் தளர்ந்து பின்வாங்கிச் சோர்ந்து போக மாட்டேன். அர்ஜுனன் சோர்ந்தபொழுது இறைவன் கீதோபதேசம் செய்தான். இங்கே இவனது சோர்வுக்கு எது மருந்து? அன்னையின் பேரருள். இதைத்தான் ‘ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்’ என்கிறார். அது போதுமா? 

நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும். பிறருக்குத் தீங்கு நினைத்தல், பகைமை, காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் என்ற அறுவகைப் பகைமையும் இல்லாத மனம் தருவாள். வையத்துள் வாழ்வாங்கு வாழ வேறு என்ன தேவை என்றே கேட்கிறார் பட்டர். குருபியாகவோ நோயுற்ற வனாகவோ இருந்துவிட்டால் பிறர் இவன் சொல்லை மதிக்க வேண்டாமா? அதற்குத் தாய் என்ன கொடுக்கிறாள்? ‘தெய்வ வடிவம் தரும்.’ குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து அலங்கரிப்பதிலே இன்பம் காண்பவள் தாய். ஆஹாரத்திலும் சரி, அணிகளிலும் சரி, நல்லுரைகள் கூறுவதிலும் சரி. இங்கே ஒவ்வொன் றாகக் கொடுத்துவிட்டு அழகிய வடிவையும் கொடுக்கிறாளாம். ‘அம்மா! தாயே! அபிராம சுந்தரி!’ என்று ஒரு முறை அழைத்தால் போதுமாம்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம். ‘வேண்டுவார் வேண்டுவன ஈவான் கண்டாய்” என்று சிவபெருமானைப் பேசுகிறது அப்பர் திருத்தாண்டகம்.
இங்கே பட்டர் அவ்வளவோடு திருப்தி அடையவில்லை. எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தாவல்லது இவளது பேரருள். ஆகவே, ‘நல்லன எல்லாம் தரும்’. யாருக்கு? அவளுடைய மெய்யடியாருக்கு. அன்பர் என்பவர்க்கே. கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே. அவள் கண்களை மலரவிழித்து நோக்க வேண்டும் என்பதில்லை. கடைக்கண் பார்வை ஒன்றே அருள்மாரியாகிப் பொழிந்து நம்மை வாழ்விக்கும். நலன்கள் எல்லாம் தாமே நம்மைத் தேடி ஓடி வரும். இப்படிப்பட்ட தாயின் புகழைச் சிறுசிறு காட்சிகளாகக் காட்டுகிறார். அவற்றில் இரண்டை இதோ பார்ப்போம். ஒன்று-கேள்வி; மற்றொன்று காட்சி. கேட்கிறார்.

உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ? 
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம் 
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ, என் நெஞ்சகமோ? 
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்களையே! 

தாயே, நின் உறைவிடம் எது? இறைவனது வாமபாகம் மட்டும்தானா? வேதத்தின் அடியோ? வேதாந்தமோ? அல்லது அமுதுடன் பிறந்தானே, அந்தப் பூர்ணசந்திரனா? பின் ஏன் உன்னைச் சந்திரமண்டலத்தில் தியானிக்க வேண்டும்? அல்லது தாமரை மலரா? ஏழையேனது இதயகமலமா? மறைகின்ற வாரிதி. அமுதம் நிறைந்த கடலா? ‘ஸதாஸாகராந்தே மணித்வீபமத்யே’ என்று ஏன் சொல்லுகிறார்கள்? “இப்படிப் பலவிதமாகச் சொன்னால் என் போன்ற குழந்தைகளுக்கு எப்படிப் புரியும், நீயே சொல்லம்மா!” என்கிறார். இதன் பின் அற்புதமான காட்சி கண்முன்னே விரிகிறது. அம்மா இதோ தெரிகிறாள். மேலும் மேலும் கேள்விகளும் விடைகளும் எதற்கு? 

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் 
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த 
கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்தே 
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவம் இல்லையே! 

வேறு தவமும் வேண்டுமா என்று கேட்கிறார் பட்டர். இந்த அற்புதமான அந்தாதியைப் படிக்கக் கொடுத்துவைத்த தமிழ் மக்களாகிய நாம் பாக்கியசாலிகள். பொருளையே விரும்பாத இவருக்குத் களத்துக்குக் குறுணிமானியமாகச் சரபோஜி மன்னர் அளித்த செப்புப் பட்டயம் பட்டரின் ஸந்ததியாரிடம் இருக்கிறது. இவரைப் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் பல உண்டு.

Tuesday, August 25, 2015

தஞ்சை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

தஞ்சை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

கல்வியாளர்கள்:
1. சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார் (1871 -1947) வரலாற்று ஆய்வாளர்.
2. ஸ்ரீநிவாச ராமானுஜம் (1887-1920) கணிதமேதை
3. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் (1855-1942) தமிழறிஞர், சுவடி ஆய்வாளர்

ஆன்மீகப் பெரியோர்கள்:
1. சுப்பிரமணிய பட்டர் (அபிராமி பட்டர்) (18ஆம் நூற்றாண்டு) திருக்கடவூர்.
2. ஸ்ரீ ஸ்ரீரவிஷங்கர் (1956) யோகா குரு

நிர்வாகிகள்:
1. டி.மாதவ ராவ் (1929-1891) திருவாங்கூர் திவான், காங்கிரஸ் தலைவர்
2. டி.வெங்கட ராவ், இவரும் திருவாங்கூர் திவான்
3. டி.ஆனந்த ராவ் (1852-1919) மைசூர் திவான், நிர்வாகி
4. வி.பி.மாதவ ராவ் (1850-1934) மைசூர் திவான், பரோடா திவான், நிர்வாகி
5. ஒரத்தூர் என்.சீனிவாசன், பி.ஏ.,பி.எல்., HR&CE ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டும்போது பணியாற்றியவர்

புத்தக வெளியீட்டாளர்:
1. ஜி.ஏ.நடேசன் (1873-1948) புத்தக வெளியீட்டாளர்.

திரைப்பட கலைஞர்கள்:
1. சிவாஜி கணேசன், புகழ் பெற்ற திரைப்பட நடிகர்.
2. டி.ஆர்.ராஜகுமாரி (1922-1999) புகழ் வாய்ந்த தமிழ் நடிகை
3. எஸ்.ஷங்கர், இயக்குனர்
4. விஜயகுமார், திரைப்பட நடிகர்
5. ராஜேஷ், நடிகர்
6. ஈ.வி.சரோஜா, நடிகை
7. கே.சாரங்கபாணி, பழம்பெரும் நடிகர்
8. டி.எஸ்.துரைராஜ், நடிகர்

அரசியல் தலைவர்கள்:
1. ஜி.கருப்பையா மூப்பனார், காங்கிரஸ் தலைவர்
2. ஜி.கே.வாசன், த.மா.கா. கட்சித் தலைவர்
3. ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார், காங்கிரஸ் தலைவர், தஞ்சை நகர்மன்றத் தலைவர்
4. கோ.சி.மணி, தி.மு.க. முன்னாள் அமைச்சர்
5. ராவ்பகதூர் அருளானந்தசாமி நாடார், கறந்தை தமிழ்ச்சங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர்
6. பி.ஏ.யாகப்ப நாடார், காங்கிரஸ் தலைவர், தஞ்சை ஜில்லா போர்டு தலைவர்
7. எஸ்.முத்தையா முதலியார், ஜஸ்டிஸ்கட்சி பிரமுகர்
8. பி.எஸ்.சிவசாமி ஐயர், அட்வொகேட் ஜெனரல்.
9. ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேண்தர், காங்கிரஸ் தலைவர்
10. எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர், தொடக்க கால காங்கிரஸ் தலைவர்
11. ஆர். வெங்கடராமன், முன்னாள் குடியரசுத் தலைவர்.
12. மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், முன்னாள் தமிழக முதல்வர்
13. ஏ.டி.பன்னீர்செல்வம், ஜஸ்டிஸ்கட்சித் தலைவர்
14. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர்
15. வி.நாடிமுத்து பிள்ளை, முன்னாள் ஜில்லா போர்டு தலைவர், காங்கிரஸ் தலைவர்
16. குன்னியூர் வி.சாம்பசிவ ஐயர், நிலப்பிரபு, ஜில்லா போர்டு தலைவர், காங்கிரஸ்காரர்
17. எஸ்.என்.எம்.உபயதுல்லா, தி.மு.க. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
18. ஜி.நாராயணசாமி நாயுடு, மயிலாடுதுறை, காங்கிரஸ் தியாகி, முன்னாள் எம்.எல்.ஏ.
19. கல்விக்காவலர் கி.துளசிஅய்யா வாண்டையார், கல்வியாளர், காங்கிரஸ் தலைவர்
20. ஏ.எம்.கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
21. மணலி கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்
22. பி.இராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்
23. வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்
24. பெ.மணியரசன், இடதுசாரி இயக்கத் தலைவர்.
25. டாக்டர் வரதாச்சாரி, காங்கிரஸ் தலைவர், மயிலாடுதுறை
26. சர்தார் வேதரத்தினம் பிள்ளை, காங்கிரஸ் தலைவர், வேதாரண்யம் இவர்கள் தவிர இன்னும் ஏராளமானோர் தஞ்சை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் தஞ்சை மாவட்ட மக்கள் சார்பில் வணக்கங்கள்.
Friday, August 21, 2015

நான் கண்ட சில அரசியல் தலைவர்கள். 1

                       
கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல அரசியல் தலைவர்களைப் பார்த்து வருகிறேன். மகாத்மா காந்தியடிகள் தொடங்கி, இன்றைய இளம் தலைமுறை தலைவர்கள் வரையில் பலரது குணாதிசயங்களைக் கண்டு சிலரிடம் மதிப்பும், சிலரிடம் வெறுப்பும், சிலரிடம் அலட்சியப் போக்குமாக இப்படி பலதரப்பட்ட எதிர்வினைகளை நான் கடைபிடித்து வருகிறேன். தனி நபருடைய விருப்பு வெறுப்புகள் அரசியல் தலைவர்களை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை; ஆனால் எந்தவித பலனையும் எதிர்பாராமல் பொதுவாக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பவர்களின் கருத்து எப்போதும் வெகுஜன கருத்தாகத்தான் இருக்க முடியும். 

1.வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை.

முதன் முதலாக பாபு ராஜேந்திர பிரசாத் தமிழகத்துக்கு வந்தார். அவரை அழைத்து வந்தவர் வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை. பட்டுக்கோட்டை சின்னக்கடைத் தெருவில் ஒரு பொதுக்கூட்டம். அப்போது பட்டுக்கோட்டை ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டை. நாலைந்து பெஞ்சுகளைப் போட்டு அதில் சில நாற்காலிகள். வேதரத்தினம் பிள்ளை பேசிக்கொண்டிருக்கிறார். பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். மேடைக்குப் பின்புறமும் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் கையில் வைத்திருந்த குடையின் முனையால் ராஜன்பாபுவின் இடுப்பில் குத்திக் கொண்டிருந்தனர். திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்த அவர் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் எழுந்து கொண்டார். அவர் கண்களில் கண்ணீர். இதனை அறிந்த வேதரத்தினம் பிள்ளை எழுந்து பேசினார். பாபு ராஜேந்திர பிரசாத் பிஹாரில் மிகப் பெரிய தலைவர். அங்கு நிகழ்ந்த பூகம்பத்தின் போது இவர் தனியொரு மனிதனாக இருந்து நிவாரணங்களை மக்களுக்கு வழங்கி சேவை செய்தவர். அப்படிப்பட்டவரின் அருமை தெரியாமல் இங்கு சிலர் அவரைக் குடையால் குத்தி அவமதிக்கிறார்கள். அவர் சிந்திய கண்ணீர் வீண் போகாது. ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாகத் திகழும் இதே பட்டுக்கோட்டையை காங்கிரசின் கோட்டையாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்று விட்டார். பிறகு சில நாட்கள் கழித்து பட்டுக்கோட்டையில் மிகச் செல்வாக்கு உடையவரும் செல்வந்தருமான நாடிமுத்துப் பிள்ளையை ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து காங்கிரசுக்குக் கொண்டு வந்தார். அது முதல் பட்டுக்கோட்டை காங்கிரஸ் கோட்டையாக மாறியது. நியாயத்துக்காகச் சவால் விட்டு சாதித்துக் காட்டிய வேதரத்தினம் பிள்ளையை மறக்க முடியுமா?

2. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்

தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாடுபட்ட அருமையான தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார். அவரை ராஜாஜி 'கிராமணி' என்றுதான் அழைப்பார். அவர் மேடையேறினால் தமிழ் ஆற்றொழுக்கோடு அழகாக தவழ்ந்து வந்து விழும். அவர் பேசியதை அப்படியே அச்சிட்டால் ஒரு சிறிய இலக்கணப் பிழைகூட இல்லாமலும், வாக்கியங்கள் முழுமையாகவும் இருப்பதை கவனிக்கலாம். அவர் பேசும் விஷயத்தை அழுத்தம் கொடுக்க அடிக்கடி ஆம்! என்ற சொல்லை பயன்படுத்துவார். மகாகவி பாரதியும் ஓரிடத்தில் "இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம்! இந்தியா உலகுக்கு அளிக்கும், ஆம்! ஆம்! இந்தியா உலகுக்கு அளிக்கும்" என்று சொல்லுவான். தான் சொல்லும் கருத்தை வலுவாகச் சொல்லும் பாணி இது. இதனை ஐயா ம.பொ.சி. கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருக்கும். அவர் பேச்சுக்களை அதிகம் கேட்டிருக்கிறேன், தமிழன் குரல், செங்கோல் போன்ற இதழ்களை விடாமல் படித்திருக்கிறேன். அவர் எந்த நேரத்திலும், யாரையும் பற்றி கடுமையான சொற்களால் தாக்கியதில்லை. அவரைக் காங்கிரசிலிருந்து நீக்கியபோது கூட அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு தரக்குறைவான சொல்லைக்கூட பயன்படுத்தியதில்லை. எந்த அரசியல் எதிரியையும் தரக்குறைவாக விமர்சித்ததில்லை. இத்தனைக்கும் அவர் காலத்தில் திராவிட இயக்கத்தை அவரைப் போல வேறு யாரும் எதிர்த்தவர்களும் இல்லை எனலாம். அத்தகைய 'மகான்' போல ஒரு தலைவர் இன்று இல்லையே என்கிற ஏக்கம் மட்டும் என்றென்றைக்கும் உண்டு.

3. கு.காமராஜ்.

பெருந்தலைவர் காமராஜ் என்று போற்றி பாராட்டப்பட்ட கு.காமராஜ் அவர்கள் அரசியலில் நெளிவு சுளிவுகளை நன்கு கற்றறிந்தவர். ஏட்டறிவினால் தலைவராக ஆனவர் அல்ல அவர், ஆனால் அனுபவ அறிவினால் இந்த அகிலத்தைக் கட்டியாண்டவர். அவரது தோற்றமே தமிழகத்தின் நகர்ப்புறமல்லாத கிராமப்புற மனிதரின் தோற்றத்தை நினைவு படுத்தக் கூடியது. தனது உடை அலங்காரம், பேச்சு, தன்னுடைய கவுரவம், தன் நிலைமைக்கு இப்படி கண்ட இடங்களில் காரிலிருந்து இறங்கி ஏழை எளிய தெருவோர மக்களிடம் பேசினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கருதாமல் காரியமே கண்ணாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நன்மைகள் பல செய்தவர். அரசியலில் சாணக்கியத் தனம் சிறிதும் குறைந்தவர் அல்ல அவர். ஆனானப்பட்ட ராஜாஜியையே சமாளித்த காங்கிரஸ்காரர் என்றால் பார்த்துக் கொள்ளலாம் அவரது திறமையை. சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் வந்தது. சிறைக்குச் சென்ற பல தியாகிகள் சட்டமன்ற தேர்தலில் நிற்க விரும்பினார்கள். ஆனால் தியாகம் வேறு, தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு. 1952 தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென்கிற சூழ்நிலை. அப்பை சப்பையாக யாரையாவது நிறுத்திவிட்டு தோல்வி அடைந்துவிட்டால் காங்கிரசின் எதிர்காலம் என்னாகும்? தேர்தலுக்குப் பணமும் செலவு செய்ய வேண்டும், செல்வாக்கும் இருக்க வேண்டும், வெறும் தியாகமும் சிறை சென்றதும் மட்டும் வெற்றியைத் தந்து விடுமா? அதனால் சில தியாகிகள் புறக்கணிக்கப்பட்டு அதுவரை எதிர்கட்சியில் இருந்தவர்களையும், அரசியலில் ஈடுபடாமல் இருந்த செல்வந்தர்களையும் காங்கிரசுக்கு இழுத்து சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தார். காரைக்குடியில் சா.கணேசனுக்கு, அரக்கோணத்தில் ஜமதக்னிக்கு இப்படி பலருக்கு சீட் இல்லை. ஆனால் இதில் பெருந்தலைவரின் அரசியல் வெற்றி பெற்றது. தியாகியாகவே வாழ்ந்து தியாகியாகவே மறைந்த மாபெரும் தியாகி காமராஜ் அவர்கள்.

4. ப.ஜீவானந்தம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், பிறகு ஜனநாயகப் பாதையை ஏற்றுக்கொண்டு தேர்தல் முறைக்கு வந்து அரசியல் நடத்தியது இவை அத்தனையும் அவர்களுடைய நேர்மையைப் பறை சாற்றுவதாக இருந்தது. அதிலும் தொடக்க காலத்திய கம்யூனிஸ்ட் தலைவர்களான ப.ஜீவானந்தம், கே.டி.ராஜு, எம்.கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, ஏ.எம்.கோபு, எம்.காத்தமுத்து போன்றவர்கள் குறிப்பாகத் தஞ்சை மாவட்டத்தில் அதிகம் அரசியல் செய்தவர்கள். ஒருமுறை கரூர் திருவள்ளுவர் விளையாட்டுத் திடலில் நடந்த பொருட்காட்சியில் கலை அரங்கத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு மக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு வந்து அரங்கத்தினுள் நுழைய வைத்தது. அவர் பேசிக்கொண்டிருந்தது ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி". ஆங்கிலத்திலிருந்து கீதாஞ்சலி வரிகளைத் தமிழாக்கி மிக அழகாக நிதானமாகச் சொல்லி வந்ததை ரசிக்காத மக்களே இல்லை. அதுவரை கீதாஞ்சலியைப் படிக்காதவர்களைக் கூட தேடிக் கண்டுபிடித்து படிக்க வைத்த பேச்சு அது. தமிழுக்குக் கிடைத்த மிக உயர்ந்த பண்பாளர் ப.ஜீவானந்தம்.


5. எம்.காத்தமுத்து.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் எம்.காத்தமுத்து. இன்றைய அரசியல் தலைவர்களைப் போல அவரை நினைக்க முடியாது. மிகவும் எளிமையானவர். நாகைப்பட்டினமோ அல்லது திருத்துறைப்பூண்டியோ அவரது தொகுதி என்று நினைக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அவரை அணுகலாம். ஒரு தொழிற்சங்கம் நடத்திய போராட்டம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அவர்களுடைய போனஸ் நிறுத்தப்பட்டது திருமதி இந்திரா காந்தி காலத்தில் அப்போது இத விஷயம் டெல்லி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த விவரங்களை நேரடியாக அறிந்து கொள்ள அவரை அடிக்கடி சந்தித்தோம். அவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு ராமேஸ்வரம் விரைவு வண்டியில்தான் வருவார். அது காலை சுமார் 5 மணியளவில் தஞ்சைக்கு வரும். அவர் கையில் ஒரு சிறிய தோல்பெட்டி, ஒரு ஹோல்டால் இவற்றுடன் இறங்குவார். அவரை அழைக்கச் செல்லும் நாங்கள் அவற்றை வாங்கிக் கொள்ள விரும்பி கேட்டபோது, அவர் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னார், "அவரவர் சுமையை அவரவரே சுமக்கத்தான் வேண்டும். நாம் செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் வேறு ஆட்களிடம் ஒப்படைப்பது தவறு. நம் வேலையை மிகவும் அக்கறையோடு நம்மால் மட்டும்தான் கவனிக்க முடியும். அதே அக்கறையுடன் அடுத்தவர் செய்வார் என்று எதிர்பார்க்க முடியுமா?" என்றார். அவர் சொன்னது மனதில் பளீரென்று உறைத்தது. இன்னொரு முறை ராமேஸ்வரம் வண்டியில் தஞ்சையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவர் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வார் என்று நினைத்திருந்த எனக்கு அவரும் அவருடன் வேறு சிலரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தது ஆச்சரியம் தந்தது. இரவு வெகுநேரம் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு பயணம் செய்தேன். விழுப்புரம் தாண்டியது தூங்கிவிட்டேன். எழும்பூர் சென்றதும் நாங்கள் இறங்கி நடந்தோம். அவர் எழும்பூரில் பீப்பிள்ஸ் லாட்ஜ் எனும் விடுதியில் தங்குவார். காரணம் அங்குதான் ரூ.5க்கு அப்போது அறை கிடைக்கும். நிலையத்தை விட்டு வெளியேறும் இடத்தருகில் இன்னொரு இடதுசாரிக் கட்சி எம்.பி. ஒருவர் வெளியே போய்க்கொண்டிருந்தார். அவரை வரவேற்க சிலர் வந்து அவரது சிறிய கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த காரின் கதவை திறந்துவிட்டு ஏறிக்கொண்டு போயினர். தோழர் எம்.காத்தமுத்து புன்னகை புரிந்தார். என்ன சிரிக்கிறீர்கள் என்றேன். அவர் சொன்னார், எந்த கம்யூனிஸ்டுக்கு பெட்டியைச் சுமந்துகொண்டு, காரையும் திறந்துவிட்டு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்றார், புரிந்து கொண்டேன்.

இன்னமும் பல தலைவர்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அடுத்தடுத்து சொல்லுகிறேன். பயனுள்ளதாக இருக்கிறதோ, இல்லையோ, இப்படியும் சில தலைவர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தக் கட்டுரை.

Thursday, August 13, 2015

சுதந்திரத் திருநாள் வாழ்த்து! 15/8/2015

 பாரதி இலக்கியப் பயிலகத்தின் சார்பில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

வாழ்க சுதந்திரம்!                        வாழ்க நிரந்தரம்!                       வாழிய வாழியவே!!          
                                                      

இந்திய நாட்டின் சுதந்திரம் பற்றிப் பாடிய கவிஞர் பாரதியார். தூங்கிக் கிடந்த பாரத மக்களைத் தம் உணர்ச்சிகரமான பாடல்களால், தட்டி எழுப்பியவ‌ர் பாரதி. நாட்டின் ஒற்றுமை, அதனால் ஏற்படும் பலன், விடுதலை பெற வேண்டியதன் தேவை ஆகியவற்றையும் பாரதி பாடினார். அத்துடன், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே தீர்க்க தரிசனமாக

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்

என்று விடுதலை பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடினார் அமரகவி பாரதியார்.

இந்தியா, ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்பது பாரதியாரின் தணியாத ஆசை. அதற்காக, இந்திய மக்களை எந்த வகையில் எல்லாம் விழிப்புணர்ச்சி அடையச் செய்ய வேண்டுமோ, அந்த வகையில் எல்லாம் உணர்ச்சிகரமான பல சுதந்திர இயக்கப் பாடல் களைப் பாடினார்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
     வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்
     அறிவைச் செலுத்து வாரோ?

கிடைப்பதற்கு அரிய அமுதத்தை உண்ண விரும்புவோருக்கு அறிவை மங்கச் செய்யும் கள்ளைக் கொடுத்தால் உண்பார்களா? சுதந்திர வேட்கை உடைய இந்தியர்கள், சுதந்திரத்தைத் தவிர, வேறு எதையும் ஏற்க‌ மாட்டார்கள் என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவிக்கிறார். விடுதலை வேட்கை எனும் இந்தப் பயிரைத் தண்ணீர விட்டு வளர்க்கவில்லை; தியாகிகளின் கண்ணீர விட்டு வளர்த்தோம்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்

விடுதலையைப் பற்றிய தாகம் என்றைக்கும் தணியாது. சுதந்திர தாகம் என்றைக்கு அடங்கும்? என்றைக்கு என் பாரதத் தாய் அடிமை விலங்குகளைத் தகர்த்து எறிந்து விடுதலை பெறுவாள்?  

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
      என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
ஏழை என்றும் அடிமை என்றும்
      எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
      இந்தியாவில் இல்லையே!

மாதர் தம்மை இழிவு செய்யும்
      மடமை யைக்கொ ளுத்துவோம்


இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இவையெல்லாம் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். சுதந்திரம் அடைந்து விட்டோம். அது சாதாரண சுதந்திரம் அல்ல. மகிழ்ச்சி தரும் ஆனந்த சுதந்திரம். அதை அடைந்து விட்டோம். எனவே, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம்.


சுதந்திர தின வாழ்த்து 2015

அனைவருக்கும் "பாரதி இலக்கியப் பயிலகத்தின்" சுதந்திர தின வாழ்த்துக்கள்.  இந்திய சுதந்திரத்துக்காக சர்வபரித்தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளில் ஒருசில பிரபலமான தலைவர்களை இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வோம். இந்த வீரத் தியாகிகள் சிந்திய ரத்தத்தாலும், சிந்திய வியர்வையாலும், சிறைகளில் பட்ட துன்பங்களாலும் தான் இன்று சுதந்திரத்தின் பயிரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள், அந்தத் தலைவர்களின் பெயரால். இந்த வீரத் திலகங்களுக்கு வீர வணக்கம் செய்வோம் இன்று.

                               "சுதந்திரப் பயிரை எப்பாடுபட்டேனும் காப்போம்!"
                                                                                                                             

ஜன சங்கம்

பிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச்  சென்ற பின் நேரு பிரதமரானார்.  அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும்  என்று காந்திஜியும், சர்தார் படேலும் விரும்பினர்.

இத்தலைவர்கள் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆனால் சர்தார் படேல்  போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக் இருந்தனர்.
படேல் அவர்களது உடல் நலக் குறைவிற்குப் பின் நிலைமை மோசமாகியது.  நேரு-லியாகத் அலி  உடன்படிக்கையால் கிழக்கு வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் அரசின் தயவில் விடப்பட்டனர்.பாகிஸ்தான் அரசால் அவர்கள்  துன்புறுத்தப் பட்டது, பலவந்தமாக பாரதத்துக்கு அனுப்பப்பட்டது இவை ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப்  பொறுமை  இழக்க வைத்தது.


அவர் ஏப்ரல் 8, 1950 அன்று நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.ஏப்ரல் 14 ம்  நாள் தனது ராஜினாமா பற்றிய ஒரு உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..

அதில் அவர் ‘நேருவின் கொள்கைகள் நாட்டை  அழிவுப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றும் ,நம்  தாய்நாடு பிரிவினைக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான  நிலைக்குத் தள்ளப்டும்’ என்றும் கூறியிருந்தார்.
ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினரும் அதைப்  பாராட்டினர். அவரது துணிச்சலான , சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பாராட்டி  டில்லி நகர வாசிகள்  அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தனர்.


தனது முத்தாய்ப்பான பேச்சில் முகர்ஜி அவர்கள் ‘நேருவின் காங்கிரசுக்கு மாற்றாக நாட்டுக்கு ஒரு தேசிய வாத , ஜனநாயக  மாற்று தேவை ‘என்று குறிப்பிட்டார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினருக்கும் குறிப்பாக ஆர்ய  சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்  சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களைத் தான் ஆரம்பிக்க எண்ணிய கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டம் நிறையது. 1951 ல் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.. முகர்ஜியின் கோரிக்கைக்கு ஆர்ய சமாஜத்திடமிருந்து நம்பிக்கையூட்டும் பதில் கிடைத்தது. ஆனால் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
ஆர் எஸ் எஸ் ன் இயக்க  ரீதியான அமைப்பையும்  ,அதற்கு இளைய தலைமுறையினரிடையே இருந்த வரவேற்பையும் அறிந்திருந்த  முகர்ஜி அதனிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்தார். ஆனால்  எந்தப்  பதிலும் வராததால் முகர்ஜி அவர்கள் மேலும் கால தாமதம் செய்ய விரும்பாமல் திட்டமிட்டபடி புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்தார்.


அவர் கொல்கத்தா சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு  ‘இந்திய மக்கள் கட்சி’ என்று  பெயரிடப்பட்டது.  இது ஆர் எஸ் எஸ் இல் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது.  முன்பு காந்தி படுகொலையில் ஆர் எஸ் எஸ்ஸை   தொடர்பு படுத்தி  அதைத்  தடை செய்த போது அரசியல் ஆதரவு இல்லாத குறை உணரப்பட்டது.
 ஆகவே அது இப்போது இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது . கட்சிக்கு வேறு பெயரையும் பரிந்துரை செய்தது. அதன்படி பாரதீய ஜன சங்கம்  என்ற பெயர் சூட்டப்பட்டது.
1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கத்தின் ஸ்தாபகக்   கூட்டம் நடைபெற்றது. முகர்ஜி அவர்கள் தேசியத்  தலைவராகவும் , பால்ராஜ்  மதோக் அவர்கள் தேசியச்  செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

                                                                 ஷ்யாமா பிரசாத் முகர்ஜி
கட்சி துவக்கப் பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. முகர்ஜியின் செல்வாக்கை உணர்ந்த நேரு அவரையும், ஜன சங்கத்தையும் தேர்தல் கூட்டங்களில் தனது  தாக்குதலுக்கு இலக்காக்கினார்.
இது ஒரு வகையில் ஜன சங்கத்திற்கு நன்மை செய்து  நல்ல விளம்பரத்தைப் பெற்றுத்  தந்தது. ஜன சங்கம் நாடு முழுக்க 3 மக்களவைத்  தொகுதிகளை வென்றதுடன்  3 சதவிகித வாக்குகளைப் பெற்று  தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.
 ஜன சங்கத்தின் தேசியக்  கட்சி என்ற தகுதியும், மக்களவையின்  உள்ளேயும், வெளியேயும்  முகர்ஜி அவர்களின்  வளர்ந்து வரும் புகழும் ஜன சங்கத்தை காங்கிரசுக்கு  ஒரு உண்மையான தேசீய , ஜனநாய மாற்றாக எழுந்ததைச் சுட்டிக் காட்டியது. இதுவே  காங்கிரசுக்கு  மிகச்  சரியான மாற்றாக  மெல்ல மெல்ல வளர்ந்த ஜன சங்கம்  அமைந்த வரலாறாகும்.

பாரதிய ஜனதா கட்சி

ஜனதா கட்சி உடைத்த பின் முன்பிருந்த  ஜனசங்கம் புது வடிவம் பெற்றது.அது பாரதிய ஜனதா  கட்சி என்ற புதுப் பெயருடன் 1980 ஏப்ரல் மாதம் தோன்றியது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார்.
முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது  காவியும், பச்சையும் கொண்ட கொடியாக   மாறியது. முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக  மாறியது. இவையெல்லாம் கட்சி உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலும் , ஜே . பி  இயக்கத்திலும் அடைந்த அனுபவத்தின் தாக்கமே.  1984 மக்களவைத் தேர்தலில் பா ஜ கவுக்கு 3 இடங்களே கிடைத்தன.  அத்வானி அவர்கள் கட்சியின் தலைவரானார்.
1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா ஜ க  85 தொகுதிகளில் வென்றது. 1991ல் அது 119 ஆக  உயர்ந்தது.
1996ல் பா ஜ க மிக அதிக பட்சமாக 187 தொகுதிகளை வென்றது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அவர் 13 நாட்களே ஆட்சியில் இருந்தார் 
பிறகு 1998 ல்  மீண்டும்  வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை அ தி முக ஆதரவை விலக்கிக் கொண்டதால் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 
1999  ல்  பா ஜ கவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசமைத்தது. இம்முறை             அடல்  பிஹாரி வாஜ்பாய் அவர்கள் 5 ஆண்டுகள்  ஆட்சி செய்தார்.

                                                                               நரேந்திர மோடி


2014 மக்களவைத் தேர்தல்  பா  ஜ கவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர்   நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப்பட்டார். தேர்தலலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. நரேந்திர மோடி தலைமையில் ஒரு நிலையான ஆட்சி தோன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை ஆட்டி அசைத்து கவிழ்த்துவிட சில சக்திகள் மும்முரமாக முயன்று கொண்டிருந்தாலும், மக்கள் ஆதரவும் அன்பும் இருக்கும் வரை பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது என்றுதான் மக்கள் எண்ணுகிறார்கள்.

Courtesy:  Bharathiya Janatha Party, Chennai.

Monday, August 10, 2015

காலத்தை வென்ற கலாம்.


ஆழிசூழ் தீவில் தோன்றிய
கேடில் விழுச் செல்வமே!
மீனளந்த மரபில் வந்து
வானளந்த மாமணியே!
அறிவியலில் மேதையாகி
பாரதத்தை உயர்த்தி வைத்தாய்!
நம்மைக் குனிந்து பார்த்த குவலயத்தை
உம்திறமையால் நிமிர்ந்து பார்க்க வைத்தாய்!
இந்திய குடியரசின் தலைமைப் பதவி
உமது திறமைக்குப் பரிசாய் பெற்றாய்!
சரியான மனிதருக்குச் சரியான நேரத்தில்
கிடைத்ததால் பெரும் பேறு பெற்றோம்!
கடைமகனுக்காய் கவலையுற்ற
முதல் குடிமகனும் நீயே!
உல்லாச மாளிகையின் உட்கிடந்து சுகிக்காமல்
பல்லாற்றால் பணிபுரிந்து உலகப் புகழ் பெற்றீர்!
ஏவியது மட்டுமன்று 'அக்னி'
பாவாயும் ஊடாயும் தாவித்தாவிச் சென்று
மேவியதும் மாணவர்மிசை 'அக்னிக்குஞ்சு'
குஞ்சே பெருநெருப்பாய், நஞ்சரிக்கும் பெருஞ்சுடராய்
துஞ்சுவார் அகத்தை கொஞ்சி உசுப்பியவர் நீர்!
கோடுயரக் காடுயரும்
காடுயர மக்கள் பீடுயரும் என்று சொன்னீர்!
வானமுதம் வேண்டி கானமிசைக்காமல்
கானல்லவோ கைகொடுக்கும் என்று சொன்னீர்!
மணம்புரிந்தால் மனைவிக்கும் மகவுக்குமாய் வாழநேருமென
மணக்காமல் மாணாக்கர் உயர்வினை நாடி நின்றீர்!
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வழக்கத்தை இங்கு இல்லையாக வைத்தீர்!
புனிதராக மனித நேயம் காத்தீர்!
முதியோரைப் பேணுவீர் இன்றேல்
கதிகெடுக்கும் சுனாமி வந்து சுருட்டும் என்றீர்!
மாறிவரும் விஞ்ஞான அறிவு கொள்ளவும்
மாற்றாமல் மரபுநெறி காத்திடவும் சொன்னீர்!
எளிமை எனும் சொல்லுக்கு எடுத்துக்காட்டே!
துளியேனும் ஆசைக்கு இடமின்றி வாழ்ந்தீர்!
பட்டியலிட்டு கொண்டமட்டும் பற்றுவாரிடையே நீர்
பெட்டியோடு போய் பெட்டியோடு மட்டுமே திரும்பியவர்!
உமக்கும் ஒரு பற்றுண்டு அப்பற்று அறிவுச்சுடரை
மாணவரிடை பற்றவைக்க விரும்பும் பற்று!
பற்றினீர் அவ்வழி, சாற்றினீர் புதுநெறி
வங்கம் உம்மை வருவியக்கால்
தங்கத் தமிழர் தவிர்த்தார் உம்மை
மதங்கடந்த மகான்கள் உம்மை
மறுதலித்த காட்சி அவர்தம் மாட்சிமைக்குச் சாட்சி!
தமிழனைத் தமிழனே தாழ்த்தினார்
காமராசர், கருப்பையா பட்டியலில் கலாமும் சேர்ந்தார்!
கலக மானுடப் பூச்சிகளினிடையே
உழைப்பில் ஒளிரும் மின்மினி ஆனீர்!
முன்னாள் குடியரசுத் தலைவரே, நீர்
என்னாளும் குடிகளின் தலைவரே!
அலையிடைப் பிறந்த அமுதமும் நீரே!
மலையிடை மறைந்த மணியானீர் நீரே!
புனிதர் நீர் அடக்கமானதால் அன்றோ
பேய்க்கரும்பு இன்று இனிக்கிறது!
கலாம் எனில் கரம் சலாமிடுகிறது
உலாவந்த ஒளிக்கதிரே நீர்
சீராளனாய் மீண்டு வருவீர்! ஏனெனில்
தாரளமாய் எம்முள் விதைக்கப்பட்டீர்!

(9-8-2015இல் தஞ்சையில் நடந்த கவியரங்கொன்றில் திருநெய்த்தானம் அ.இராமகிருஷ்ணன் அரங்கேற்றிய கவிதை)

ஜி.ஏ.நடேசன்

                                            

தமிழ்நாட்டு அரசியலில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரலாற்றில் ஜி.ஏ.நடேசன் எனும் பெயர் அடிபடுவதைப் பார்க்கிறோம். ஆனால் யார் இந்த ஜி.ஏ.நடேசன் இவருடைய பங்களிப்பு என்ன என்பதைப் பற்றியெல்லாம் விவரமாக நமக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை. ஏதோ நமக்குக் கிடைத்த ஒரு சில விவரங்களை இங்கு பார்க்கலாம். இந்த ஜி.ஏ.நடேசனின் முழுப்பெயர் கணபதி அக்ரஹாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் என்பது. அடடே! தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கு மிக அருகில், கணபதி அக்ரகாரத்தைச் சேர்ந்தவரா இவர் என்றவுடன் தஞ்சாவூர் ஆசாமிகளுக்கு ஒரு விழிப்பு தோன்றக்கூடும். கணபதி அக்ரகாரத்தைத் தெரியாதவர்களும் உண்டா என்ன?

ஜி.ஏ.நடேசன் 1873 ஆகஸ்ட் 25ஆம் நாள் தஞ்சை மாவட்டம் காவிரிக்கரையில் கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், புத்தக வெளியீட்டாளர், அரசியல்வாதி, சுதந்திரப் போராட்ட வீரர் இத்தனையும் உள்ள தமிழ்நாட்டுக் காரர். ஜி.ஏ.நடேசன் & கம்பெனி என்ற புத்தக வெளியீட்டாளர் பெயரைக் கேள்விப்பட்டிருப்போமே, அவர்தான் இவர்.

இவர் கும்பகோனத்தில் பள்ளிப்படிப்பையும், சென்னை ராஜதானி கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். புத்தக வெளியீட்டாளராகப் பணியைத் தொடங்கிய இவர் முதல் கிளைன் பார்லோ (Glyn Barlow) என்பவரிடம் பயிற்சி பெற்று பிறகு சொந்தமாக நூல் வெளியீட்டுக் கம்பெனியாகிய ஜி.ஏ.நடேசன் அண்டு கம்பெனியை 1897இல் தொடங்கினார். இவரது இளமைப் பருவத்திலேயே இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பங்கேற்கத் தொடங்கினார். 1900ஆம் வருஷம் "தி இந்தியன் ரெவ்யூ" எனும் பெயரில் ஒரு ஆங்கில மாதாந்திர பத்திரிகையைத் தொடங்கினார். இதில் பொதுவாக அரசியல் விஷயங்களை எழுதிவந்ததோடு இலக்கிய சம்பந்தமான கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். 

1915இல் மகாத்மா காந்தி முதன்முதலாகத் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்தாரல்லவா? அப்போது அவர் சென்னை ஜார்ஜ் டவுனில் தம்புச் செட்டித் தெருவில் இருந்த ஜி.ஏ.நடேசன் இல்லத்தில் தான் தங்கினார். காந்திஜி அங்கு தங்கிய நாட்கள் ஓரிரு நாட்கள் அல்ல, 21 நாட்கள் அதாவது 1915 ஏப்ரல் 17 முதல் மே 8ஆம் தேதி வரை அங்குதான் தங்கினார். 

முதலில் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளால் கவரப்பட்டு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த இவர், பின்னர் ஏதோ காரணங்களால் மனம் மாறி இந்தியன் லிபரல் கட்சி என்ற அரசியல் அமைப்பில் இணைந்தார். 1922இல் இவர் அந்தக் கட்சியின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். இவருக்கு இருமுறை அரசாங்கத்தின் உயரிய அவைகளில் உறுப்பினர் பதவி கிடைத்தது 1923இல் ஒரு முறை, பிறகு 1931இல் மறுமுறை. இவருடைய பதவிக் காலத்தில் இவர் கனடா நாட்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பார்லிமெண்டரி குழுக் (Empire Parliamentary Association) கூட்டத்தில் கலந்து கொண்டார். வேறு சில உயரிய குழுக்களிலும் இவர் இடம் பெற்றிருந்தார். 1938இல் இவர் சென்னை நகரத்தின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார்.

1948 ஏப்ரல் 29ஆம் நாள் ஜி.ஏ.நடேசன் அவர்கள் தனது 74ஆம் வயதில் காலமானார். தனது இறுதி மூச்சு உள்ளவரையிலும் இவர் அயராது உழைத்து வந்தவர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.