பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 6, 2015

21. ஓம் சக்தி - (தொடர்ச்சி V )

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

           ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைஉடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும்விட ஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம் இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனாய் இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படி கருமங்களைச் செய்யும்பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார். ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால்  வயிற்றுக்குச்  சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது; குடியானவனாயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேகதடங்கல்கள் இருக்கின்றன; பட்டத்தில் மழை பெய்யவில்லை; அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும், விதைக்க வித்துக்களில்லை; விதை விதைத்தாலும், களைகளைச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸூகிக்க ஐவேஜி இல்லை; அப்படி வீடுகொண்டு வந்து சேர்த்துப் பலனை அநுபவிக்கவும் இடமில்லை; ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக் களத்தில் விற்றுவிட வேண்டியிருக்கிறது. ஆகையால், உழுது உண்ணுவதைவிட வேறு என்ன தொழில் செய்தாயினும்பிழைக்கலாமென்று "கொள்ளைக்கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத்திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிறான். அவன் செய்யும்தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அதுஅவனுக்குத்தான் நன்மை தருமேயல்லாது இதரர்களுக்குத் தீமையே செய்யும். இருந்தாலும், ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிறான் மனைவி மக்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றிப் பார்த்தவரெல்லாம் பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரக்ஷனை செய்தால், அவன் மானம் அழிந்து போகிறது.'பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியார உண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால் நிராயுத பாணிகயாய் இருக்கிறார்கள். போலீஸ் என்ற உள் நாட்டுக் காவற்காரரோ சம்பளம் சொற்பமானதாலும், அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத்தயாராயிருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு 'எக்கிரிமெண்டு' (உடன்படிக்கை) செய்து கொண்டு அவர்கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி சவுகரியங்களால்திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன்அதைக் கைக் கொள்ளுகிறான். ஆனால், அந்தத் தொழிலில் ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச்செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற்குரிய மோடசத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோ அவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறிசெய்யுங்காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிறான். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை. ஏழைகள், துணையின்றிச் செல்லும் ஸ்திரீகள் நோயாளிகள், தூர ஸ்தலங்களிலிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகிய இவர்களையும் இவர்களைப் போன்ற மற்றவர்களையும் ஹிம்ஸிப்பதில்லை. அதோடு நில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிறான். தன்னைப் பகலில் கொள்ளையடித்த "சாவுகாரனையும், லேவாதேவிசெய்யும் நிஷ்கண்டகனையும், ஏன் இரவிற் கொள்ளை யடிக்கககூடாதென்று தன்னைத்தானே கேட்கிறான். 'குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி,  நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, தோல்கேட்டு வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டுவரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, - இன்னும்எண்ண முடியாத வரிகளைப் போட்டு, வீடு வாசல், நிலம் கரை, ஆடு - மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளை யடிக்கப் படாது?' என்றகேள்வியும் அவனுக்கு உண்டாகிறது. இவ்விதமாக ஆட்சேபணை ஸமாதானங்களால் தம் மனதில் கொள்ளையடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்துகொள்கிறான். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்கு விரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், காலசுபாவம் என்ற அவசியத்தால்ஆபத் தர்மமாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதை ஒரு கொள்கை யாக வைத்துக்கொண்டு அவன் காரியங்களை ஆரம்பிக்கிறான். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள். எவர் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும்,  தான்கொண்டதே கொள்கையென்று அவன் காலத்தைக் கழித்து வருகிறான்.  அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று அடுத்துத் தொடர்ந்தே வருகிறது. அவன் மனோதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம்.

            ஒரு கொள்கை என்பதென்ன?  இதைநாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாதஎவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்கவேண்டும். ஆனால், அவ்வறிவின் துணையால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதன்சாயலாகவே தன் கருமங்களைச் செய்து வருபவனல்ல. எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத்தின் நோக்கம் இன்னதென்றே அறியாமல், கேவலம் இந்திரிய பாதைகளைக் கழித்துக் கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்து போகின்றனர். அவர்களெல்லாம் ஏதோ நல்லதோ கெட்டதோ கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கருமங்களை அவரவற்றிற்குரியபடி செய்துஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன?

ஒரு கொள்கையாவது, 'பகுத்தறிவின் துணையால் செய்யத்தக்கது இது, செய்யத் தகாதது இது' என்று ஒருவன்அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம்நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கொள்கைகளைஅவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன்படி நடக்க முடியாதவனாய் இருந்தால், அவனும் ஜீவப் பிரேதந்தான்.

இதிலிருந்து, 'கொள்கையற்ற மானிடப் பதர்கள்,கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப் பதர்கள்' என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகிறது. இவ்விரண்டு வகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது.அவர்கள் இருக்கும் வரை சோற்றுக்குக் கேடாகவும் நிலத்திற்குப் பளுவாகவும் இருந்து போவார்கள்.

ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிபூச்சிகள் போல ஒரு வகுப்பார் தலையெடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமான கொள்கைகளை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக் கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்கமாகப் போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக் கொள்கைகளைக் கேட்டுப் 'இவ்வரிய கருத்துக்களுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் "பூஜிதையையும் ஏற்றுக்கொண்டு வெறியடைகிறார்கள்.ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச் செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும் சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. 'தட்டிச் சொல்ல ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்' என்றபடி பேசிவிட்டு,ஆபத்து வந்த காலத்தில் 'நான் சொன்னபடி நீங்கள் செய்யவேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது' என்றுஜனங்களை ஏமாற்றுகிறார்கள். அதிலும் கேடாய், தங்களுடைய கொள்கைகளை ஜால வித்தைக்காரன் போல் மாற்றிவிடுகிறார்கள்.

             இம் மஹா பாதகர்களால் நம் தேசத்திறகுவிளையும் தீமைகள் கணக்கில் அடங்கா. ஏனெனில் இவர்களைப் பார்த்து அநேகம் அறிவில்லாத மனிதர்கள் செல்லக் கூடாத மார்க்கங்களிற் சென்று விடுகிறார்கள். நமக்கு கொள்கை வேண்டுமே யல்லாது ஆள் வேண்டியது அவசியமில்லை. ஒருவன் தான் பறையறையும் நல்லதோர் கொள்கையை விட்டுவிட்டு விலகி நடப்பானானால் அப்பொழுது நாம் அவனைக் கொண்டாடுவது மதியீனம். அவனை எவ்வகையாலும் நாம் இகழ்ச்சி செய்தே நடத்த வேண்டும். தான் குடிக்கும் காபிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும், தான் உடுத்தும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கைவிடுவானானால்,அவனை மானிடரால் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனிலும் பதரான மனிதன் ஒருவன் இருக்கமுடியாது. அவன்சம்பந்தப்பட்ட மட்டில், கொள்கைக்கும் செய்கைக்கும் வெகுதூரம் உண்டு.

பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங்களையும் இழந்து எங்கேயோ யிருந்துவந்த ஒரு வெள்ளை நிற ஜாதியாருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். நாம் முப்பது கோடி ஜனங்கள். அவர்கள் இரண்டு லக்ஷங்கூட இல்லை.உலகத்தோர் எல்லோரும் இதை எங்கு எக்காலத்திலும் இல்லாத அற்புதம் என்று நினைக்கிறார்கள். இதனால் உலகத்திலுள்ள மற்ற ஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம் ஜனங்களையும்) அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களை மகாவீரசூரர்களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அதற்குப் பதிலாய், நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டு விடுகிறது. இந்தியன் எங்கே போனாலும்நிந்திக்கப் படுகிறான். யாரும் நம்மீது காறித் துப்புகிறார்கள். உலகத்தோர 'இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல, வேறே எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம் மிகுந்த அந்தஸ்துக்களைப் பாராட்டினால் அது ஒவ்வா ஒழுக்கம். நாம் சுயாதீனம் அடைந்தபிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்களைச் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள்.

நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரீயும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றேதான் உண்டு. அதாவது, நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டிப் பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்கவேண்டியது. இந்தக் கொள்கைப்படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் இவற்றை நாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து நடப்பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதையையும் அந்தஸ்தையும் இச்சிக்கப்படாது.  வீடு, வாசல், மனை மக்கள், எல்லோரையும் இழக்கும்படி நேர்ந்தாலும் இழந்தே தீரவேண்டும்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்      
எவ்வவர் தீமையு மேற் கொள்ளார் - செவ்வி      
 அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்வார்      
கருமமே கண்ணா யினார்.

என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவன் தான் பேடியென்று ஒப்புக்கொண்டு பின்னடையவேண்டும். நானும் ஸ்வராஜ்யக் கொள்கை யுள்ளவன் என்று முன்வந்து நிற்கவேண்டாம். சுதந்திரக் கொள்கையை உடையவன் தன்ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்து விடச் சித்தமாயிருக்க வேண்டும், ஹோ பரதா! சோம்பலுள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது மழையென்றும், வெய்யிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தாகமென்றும், நித்திரையென்றும் பாராட்டாதே, இந்தச் சரீரமே அநித்தியம் "என்றால்,அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா?  இந்திரியஅவஸ்தைகளுக்கு அஞ்சியாவது இந்திரிய சுகங்களைக் கோரியாவது தேசிய தர்மத்தைக் கைவிடாதே. பிரம்மமே நித்தியம், சத்தியமே ஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்கவேண்டும். உன்னுடைய ஜய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில் எந்தெந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரதமாதா முன்போல் உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கைவிடாதே. கைவிடாதே, கைவிடாதே. முக்காலும் சொன்னோம்.

                                          வந்தேமாதரம்.


No comments: