பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 21, 2015

46. கலைகள் - மலையாளம் (2)


                 அந்த ராகவ சாஸ்திரி இன்னும் ஊருக்குப் போகவில்லை. வேதபுரத்தில் தான் இருக்கிறார். இன்று காலையில் வந்தார். நான் தனியே இருந்தேன். வேறு யாருமில்லை. எங்களுக்குள்ளேயே பேச்சு நடந்தது. மிகவும் நீண்ட கதை. அவர் ஆறுமணி நேரஞ் சொன்னார். எனக்கு ஞாபகமிருக்கிற பாகத்சைச் சுருக்கமாக எழுதுகிறேன்.

நான் கேட்டேன், "சாஸ்திரியாரே, அந்த தீயர் ஸமாஜத்தின் பெயரென்ன?"

சாஸ் - "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்."

"யோகம் என்றால் சபை என்று அர்த்தமா?"

சாஸ் - "ஆம்."

"அந்த சபை அங்கே, மலையாளத்தில் அதிகமாய் பரவி யிருக்கிறதோ?" என்று நான் கேட்டேன்.

சாஸ் - "ஆம். அதில் ஸ்திரீகளினுடைய யோகம் என்ற பகுதி ஒன்றிருக்கிறது."

"ஓஹோ! புருஷர் ஸமாஜத்தைப்பற்றி முதலாவது பேசுவோம்" என்றேன்.

ராகவ சாஸ்திரி தொடங்கினார். ராகவ சாஸ்திரி சொல்லியது என்னவென்றால்:-

மேற்படி ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்துக்கு வட மலையாளத்தில், கண்ணனூர், மாஹி, கோழிக்கூடு முதலிய இடங்களிலும், தென் மலையாளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் முதலிய இடங்களிலும், கொச்சி ராஜ்யத்திலும், மங்களூரிலும், மலையாள தேசம் முழுதிலுமுள்ள முக்கிய ஸதலங்கள் எல்லாவற்றிலும் கிளைச் சபைகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னைப் பட்டணத்தில் ஒரு கிளை இருக்கிறது. இந்த வருஷத்துப் பெருங் கூட்டம் சில மாதங்களின் முன்பு திருவாங்கூரில் உள்ள ஆலுவாய் என்ற ஊரிலே நடந்தது. அப்போது பாலக்காட்டிலுள்ள விக்டோரியா காலேஜ் முதல் வாத்தியாராகிய ஸ்ரீமான் பி. சங்குண்ணி அக்ராஸனம் வஹித்தார். இப்போது அவர் செய்த பிரசங்கத்தில் சில குறிப்பான வார்த்தைகள் சொன்னார். அவையாவன:-

நாம் பயப்படக்கூடாது. மனம் தளரக்கூடாது. மேற்குலத்தார் நம்மை எத்தனை விதங்களில் எதிர்த்தபோதிலும் நாம் அவர்களைக் கவனியாமல் இருந்து விடவேண்டும். எனக்குப் பாலக்காட்டில் அடிக்கடி கையெழுத்துச் சரியில்லாத மொட்டைக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கடிதங்களில் நான் காலேஜ் வாத்தியாராய் வேலையில் இருக்கக்கூடாதென்றும், அது பிராமணர் செய்ய வேண்டிய தொழில் என்றும், எனது முன்னோர் செய்த தொழில்களாகிய உழவு, விறகு வெட்டுதல், பனை யேறுதல் முதலியனவுமே நான் செய்யத்தக்க தொழில்களென்றும் பாலக்காட்டுப் பிராமணர் சொல்லுவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் கவனியாததுபோலே இருந்து விடவேண்டும். நாம் கீழ் ஜாதி என்ற நினைப்பே கூடாது. எவன் தன்னை எப்படி நினைத்துக்கொள் கிறானோ, அவன் அப்படியே ஆய்விடுகிறான். நாம் மேல் ஜாதியாரை வெல்லவேண்டுமானால், மேன்மைக் குணங்கள் பழகிக் கொள்ளவேண்டும். படிப்பினால் மேன்மை யடையலாம். இங்ஙனம் ஸ்ரீமான் சங்குண்ணி தீயருக்கு நல்ல நல்ல உபதேசங்கள் செய்தார்.
ஸ்ரீீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பெண்களின் கூட்டம் இவ்வருஷத்தில் ஆலுவாயில் நடந்தது. ஆண்களின் கூட்டம் கழிந்த பிறகு, பெண் கூட்டம் நடத்தினார்கள். இதில் திருவாங்கூரின் திவானாகிய ஸ்ரீமான் கிருஷ்ணன் நாயர் அக்ராஸனம் வகித்தார். இந்த ஆலுவாயில் ஒரு நதி ஓடுகிறது. அதன் ஜலம் மிகவும் ரமணீயமானது. வாஸந்த காலத்தில் அவ்வூர் வாஸத்துக்கு மிகவும் இன்பமென்று கருதி வடநாட்டிலிருந்துகூட அநேகர் அங்கே வந்து வாஸம் செய்கிறார்கள். ஆலுவாயில் தீயர் யோகத்தின் பெண் கிளைக்கூட்டம் நடந்தபோது அங்கே கௌரியம்மையென்ற தீய ஜாதிப்பெண் வந்து இங்கிலீஷில் பேசினாள். இவள் பி.ஏ. பரீக்ஷையில் தேறினவள். இவளுடைய பேச்சை எல்லாரும் வியந்தார்கள். தீயர் முன்னுக்கு வந்து மேன்மை பெற முயற்சி செய்வதில் திவான் கிருஷ்ணன் நாயர் மிகுந்த அனுதாபம் காட்டி வருகிறார்.

"தீயர் கள்ளிறக்கும் ஜாதியார் அன்றோ?  தீயருக்கு ஈழுவர் என்ற பெயர் அன்றோ, நமது தமிழ் நாட்டுச் சாணாரைப் போலே?" என்று கேட்டேன்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- "ஆம், சாணாரைப் போல் கள்ளிறக்கும் தொழில் உண்டு. சங்குண்ணி சொல்லியது போலே விறகு வெட்டுதல், உழுதல், மற்றும் வைத்தியம் செய்தல், மந்திரவாதம் செய்தல் இவையெல்லாம் பண்டு தீயர் தொழிலாக இருந்தன. இப்போது தீயர்களில் வக்கீல்கள், உத்தியோகஸ்தர், வாத்தியார், உயர்ந்த தொழில் செய்வோர் இருக்கிறார்கள்."
நம்பூரிகளும் தீயரும்

          "நம்பூரிகள் மிகவும் வைதீகமாயிற்றே? அவர்களிடத்தில் தற்காலத்துப் புதிய தீயர் எவ்விதமான எண்ணம் வைத்து நடக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

"பகை" என்று ராகவசாஸ்திரி சொன்னார். "காரணமென்ன?" என்றேன்.

"புதிய தீயர் இப்போது நம்பூரிகளைப் பகைப்பது மாத்திரமே யல்லாது, எப்போதுமே நம்பூரிகளைத் தீயர் பகைத்து வந்ததாகச் சொல்லி வருகிறார்கள். ஆலுவாயில் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஒரு "ஸமஸ்கிருத பள்ளிக்கூடம் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார். நிறையப் பணம் சேர்ந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்கும் ஸமஸ்கிருதம் கற்பிக்கப் படுகிறது. ஒரு மகம்மதியப் பிள்ளைகூட அந்தப்பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசித்து வருகிறான். இங்ஙனம் பல வகைகளிலே தீயர் மேன்மை பெற முயல்வதில் நம்பூரிகளுக்குச் சம்மதமில்லை. அதனால் நம்பூரிகளிடம் தீயருக்குப் பகை உண்டாகிறது. இயற்கை தானே? செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா?

"பிராமணராக நம்பூரிகள் பரசுராமனால் செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பு மீன் பிடிக்கும் செம்படவராக இருந்தனரென்றும் தீயர்கள் நம்பி வருகிறார்கள். மலையாள பூமி செழித்துப்போய் காடு பட்டுக் கிடந்ததை பரசுராமன் நாடாகத் திருத்திய போது, அங்கு வந்து குடிபோகும்படி கர்நாடகத்திலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பிராமணர் களைக் கூப்பிட்டார். இந்தப் பார்ப்பார் அங்கே போய் குடியேறச் சம்மதப்படவில்லை. எனவே பரசுராமன் கோபம் கொண்டு தென் கன்னடக் கரையிலிருந்த "செம்படவரைப் பிராமணராகச் செய்து குடியேற்றினார். நம்பூரிகள் விவாக சமயங்களில் குளம், நதி, ஏதேனும் நீர் நிலைக்குப் போய் வலை போடுவது போலே அபி நயிக்கும் பொய்ச் சடங்கொன்று நடத்தி வந்தார்கள். இப்போது, நம்பூரிகளும் நாகரீகப்பட்டு வருகிறபடியால் வீட்டிலேயே ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் வாழை இலையைத் துண்டு துண்டாக மீன் ஸ்தானத்தில் போட்டு வைத்து, அதன் மேலே வலைபோடுவது போல் துணி போட்டு அபிநயித்து வருகிறார்கள். மேற்படி பரசுராமன் கதை பொய்க் கதை என்பதே என்னுடைய அபிப்பிராயம். இக்காலத்து நம்பூரிகள் விவாக சமயங்களில் மீன் பிடிக்கும் சடங்கு நடத்துவதற்கு வேறேதேனும் மூலமிருந்தாலும் இருக்கலாம். ''நான் அக்கதையை ஏன் சொன்னேன்'' என்றால், இக்காலத்துத் தீயர்களுக்கு நம்பூரிகளிடத்தில் எத்தனை பெரும்பகை இருக்கிறதென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேனே யொழிய வேறொன்று மில்லை.

"ஆதிமுதல் தீயருக்கும் பிராமணருக்கும் சண்டைஉண்டு. தீயர் மற்ற ஹிந்துக்களைப் போலே மக்கள் - தாயத்தை அனுசரிக்கிறார்கள். மருமக்கள் - தாயம் நாயருக்குள்ளே இருப்பதுபோல் தீயருக்குள் இல்லை பிராமணர் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் செய்வது போலே தீயருடன் செய்து கொள்ள இடமில்லை. தீயர் அதனை விரும்பவில்லை. இதுவே நம்பூரிகளுடன் பகைமைக்கு மூலம்.

"நம்பூரிகளிலே பலர், பரசுராமன் மலையாளத்து பூமியைத் தங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள். அவர்கள் பெரிய ஜமீன்தார்களாகவும் மிராசுதாரர் களாகவும் இருக்கிறார்கள். 'ஜன்மி'கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். 'ஜன்மி' என்றால் ஜன்மபாத்யதை உடையவர்களென்று அர்த்தம்.

"நம்பூரிகளெல்லாம் நல்ல சிவப்பு நிறம்; மிகவும் அழகாக இருக்கிறார்கள். பொதுவாகவே மலையாளத்தார் தமிழரைக் காட்டிலும், தெலுங்கரைக் காட்டிலும் அதிக சிவப்பு நிறமுடையவர்கள். குஜராத்தியரை மாத்திரமே, நிறவிஷயத்தில், தக்ஷிணத்தில் மலையாளிக்குச் சமமாகச் சொல்லலாம். அதிலும், நம்பூரிகள் நல்ல சிவப்பு. ஆனால் நாகரீக ஜனங்களில்லை. நம்பூரிக்கும் நாகரீகத்துக்கும் வெகுதூரம்.

"நம்பூரிக்குள்ளே ஜாதிப்பிரிவுகள் உண்டு. இந்தியாவில் ஜாதி வித்யாஸத்திலே ஒரு விநோதம் என்ன வென்றால், எந்த மூலையிலே போய் எந்த ஜாதியை எடுத்துப் பார்த்தாலும் அதற்குள் நாலு உட்கிளை யில்லாமல் இருப்பதில்லை. நம்பூரிகளுக்குள்ளே ஸம்ஸ்கிருதப் படிப்பும் வேதபாடமும் இப்போதும் அழிந்து போகவில்லை. திருஷ்டாந்தமாக தாழைக் காட்டுமனை என்ற இல்லத்து நம்பூரிகள் வேதப்படிப்பில் கீர்த்தி பெற்றவர்கள்; அவர்களிடம் பணமும் அதிகம். பிராயச்சித்தம் முதலிய வைதீக கிரியைகளிலே முடிவான தீர்மானங்கள் கேட்கவேண்டுமானால், ஜனங்கள் அந்த இல்லத்தாரிடத்திலே கேட்கிறார்கள்."

இங்ஙனம் மேற்படி ராகவசாஸ்திரி சொல்லி வருகையில், நான் "ஜன்மி"களாகி ஜமீன்தார்களாகவும் வித்வான்களாகவும் ஒரே குடும்பத்தார் இருப்பது விசேஷந்தான்? என்று சொன்னேன்.

அதற்கு ராகவசாஸ்திரி - வேதத்துக்குப் பொருள் தெரிந்து படிக்கும் நம்பூரிகளை நான் பார்த்தது கிடையாது. பிறரை மயக்கும் பொருட்டு ஓர் இரண்டு வேதசாம்ஹிதை களைப் பாராமல் குருட்டு உருப்போட்டு வைக்கிறர்கள். இதில் அதிக விசேஷமில்லை" என்றார்.

அதற்கு நான்:- "சாஸ்திரியாரே, ஜமீன்தார்களாய் பணச்செருக்கிலே இருப்போர் பிறரை மயக்க விரும்பினால் கல்விக் கஷ்டம் இல்லாமலே மயக்குவதற்கு வேறு நூற்றுத் தொண்ணூறு சுலபமான வழிகள் உண்டு" என்றேன்.

பிறகு சாஸ்திரியார் நம்பூரிகளின் அறிவுக் குறையைக் குறித்துப் பல கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை மிகவும் பெரிய கதைகள். இந்த வியாஸம் ஏற்கனவே மிகவும் நீண்டுபோய் விட்டது. ஆதலால், அவர் சொல்லியதின் தொடர்ச்சியை மற்றொரு வியாஸத்தில் எழுதுகிறேன். ராகவ சாஸ்திரி நான் மௌன விரதம் பூண்ட நாளில் துஞ்சத்து எழுத்தச்சன் விஷயமாகச் சொல்லிய விஷயத்தைக் குறித்து மறுபடி இன்று காலை சம்பாஷித்தோம். அதையும் பின்புதான் தெரிவிக்கவேண்டும்.

மலையாளத்துக் கதை

 மலையாளத்துக் கதை போகப்போக ரஸப்படுகிறது. ராகவசாஸ்திரி மலையாளத்தைப் புகழுகிற புகழ்ச்சியைக் கேட்டால் யாருக்கும் அந் நாட்டிலே போய் சில மாதங்கள் கழித்து வரவேண்டுமென்ற இச்சை யுண்டாகும்.

நம்பூரிப் பிராமணர்களும், பலாப்பழமும், மாம்பழமும், வாழைப்பழமும், இனிய ரூபங்களும் மலிந்து கிடக்கும் அந்த நாட்டை நினைக்கும்பொழுது எனக்குப் பெரிய விருப்ப முண்டாகிறது. இயற்கைத் தெய்வம் அங்கே அழகு முழுவதையும் சிந்தியிருப்பதாக ராகவசாஸ்திரி சொல்லுகிறார். "மலையாள மென்பது ஸௌந்தரியத்தின் பெயர் என்று குழந்தைப் பருவம் முதலாகவே என்மனதிற்பட்டிருந்தது. நான் மலையாளத்திற்குப் போனதே கிடையாது. சும்மா வடக்கம் மலையாளத்தைப் பற்றியும் தெற்கம் மலையாளத்தைப் பற்றியும் கதை கேட்டிருக்கிறேன். மலையாள பகவதிக்கும் சாஸ்தாவுக்கும் அந்த நாட்டில் நடக்கும் மகிமையைக் கேட்டுப் பலமுறை ஆச்சர்யப்பட்ட துண்டு. மலையாளத்து மந்திரவாதிகளின் கதைகளைக் கேட்டு நகைத்ததுண்டு. மலையாளம் சக்தி நாடென்றும் அங்கே பெண்களுக்குப்படிப்பும் அறிவும் மிகுதியென்றும் அதனாலேதான் அந்த நாட்டிற்குப் பெண் மலையாளம் என்னும் பெயருண்டாயிற்று என்றும் கேள்விப்பட்டேன். அங்கே புலயரைத் தீயரும், தீயரை நாயரும், நாயரை நம்பூரியும் மிகவும் இழிவாக நினைக்கிறார்களென்பது மூன்றுலோகப் பிரஸித்தம். இந்த ராகவசாஸ்திரி வந்ததிலிருந்து எனக்கு அந்த நாட்டிலே ஜாதிப்பகைமை ஏற்படுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகத் தெரிவதுடன் இங்கிலீஷ் படித்த தீயர்,நாயர், இரு பகுதிகளிலும் ஒரு பகுதியார் மேற்படி பகையை நெருப்புக்கு நெய்விட்டு வளர்க்கக்கூடிய நிலைமையிலே இருக்கிறார்களென்பதையும் காண்கிறேன்.

"தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக" என்று சாஸ்திரி சொன்னார்.

"மலையாளத்துக் கதை மேலே நடத்தும்" என்றேன். ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:-

"நம்பூரி இல்லத்தில் (வீட்டில்) வெளித்தோட்டமிருக்கும் வேலிக்குள் யாரும் நுழையக்கூடாது. நம்பூரிப் பெண்கள் ஜமுனா (அந்தபுரம்) தோட்டத்திலே குளப்புரை அந்தப் பெண்களில் பலருக்கு விவாஹமே கிடையாது சாவு மட்டும். புருஷரில்லாமல் வாழ்ந்து, செத்த பிறகு பிணத்துக்கு மணச்சடங்கு செய்வதுமுண்டு. நம்பூரிகளில் மூத்த பிள்ளைக்கு சொத்து எல்லாம். மூத்த பிள்ளை ஒருவன் மாத்திரமே விவாஹஞ் செய்யலாம். மற்ற இளைய பிள்ளைகள் நாயர்ஸ்திரீகளுடன் ஸம்பந்தஞ் செய்து கொள்ளுவார்கள். ஒரு நம்பூரி பல பெண்கள் மணந்து கொள்ளுவான். அப்படி யிருந்தும் அவர்களில் பெண் தொகை மிச்சப்பட்டு பலர் மணமறியாமல், வெளியிலறியாமல், காற்றறியாமல் வாழ்ந்து குளப்புரையருகே தோட்டத்தில் புதைக்கப்படுகின்றனர்.

'மனோரமா' என்று அங்கே (மலையாளத்தில்) ஒரு பத்திரிகை இருக்கிறது. அதில் போன வருஷம் ஒரு நம்பூரி தனது ஜாதி ஸ்திரீகளின் அறியாமையைப்பற்றி ஒரு வேடிக்கையான கதை எழுதினார். அந்த நம்பூரி வீட்டில் அவருடைய பந்துக்களில் ஒரு ஸ்திரீ இந்து தேச சரித்திர விஷயமாகப் பேசுகையிலேகும்பினி (ஈஸ்டு இந்தியா கம்பெனி) என்றொரு ராணி யிருந்ததாகவும் மேற்படி கும்பினியின் தங்கை பெயர் இந்தியா என்றும் சொன்னாளாம்.
"நம்பூரிகளுக்குள்ளே இப்போதுதான் ஸபை கூடி ''இங்கிலீஷ் படித்தால் ஜாதிபிரஷ்டம் பண்ண வேண்டுமா வேண்டாமா'' என்று ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனை இன்னும் முடிவு பெறவில்லை. ''ஜன்மி''கள் (நம்பூரி ஜமீன்தார்கள்) இப்போது ஏழைகளாய் வருகிறார்கள். அவர்களுடைய செல்வம் குறைகிறது. அவர்களுக்கு நோயும் மரணமும் மிகுதிப்படுகின்றன" என்றார்.

அப்போது நான் சொன்னேன்:-  "உண்மையாகவே இந்த நம்பூரி உயர்ந்த குலம். காலத்தின் குறிப்பையறியாமல் தாழ்ச்சியடைகிறான் போலும்? என்றேன்.

ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:-  "நம்பூரிகளுக்குள்ளே எழுதப் படிக்கத் தெரியாத சிலர் கவிதை செய்கிறார்கள். திருஷ்டாந்தமாக காஞ்ஞோனி இல்லம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. கவிதை, ராஜாக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கும்படி செய்கிறார்கள். மலையாளத்தில் கவிதைக் காற்று வீசுகிறது.
"நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் என்பது ஒரு வகை மணம். முண்டு (வேஷ்டி) கொடுப்பதே சடங்கு. நாயர்களுடனும் பிராமணருடனும் நாயகர்களில் ராஜகுடும்பத்தார் முதல் ஏழைகள்வரை எல்லாரும் இஷ்டப்படி ஸம்பந்தஞ் செய்து கொள்ளலாம். ஒரு ஸ்திரீ தன் இஷ்டப்படி ஸம்பந்தங்களை நீக்கலாம், மாற்றலாம், சட்டம் தடுக்காது. பிள்ளைக்குத் தகப்பன் பெயர் கிடையாது. தாயின் பெயரை மாத்திரந்தான் நியாயஸ்தர் விசாரணையிலே கூடக் கேட்பார்கள்" என்றார்.

"நல்லது, புதிய தீயருக்கும், நாயருக்கும், நம்பூரிகளுக்கும் ஒற்றுமையும், அன்பும், அறிவும் பகவதி சேர்த்திடுக" என்றேன்.

இந்த சமயத்தில் "பாப்பா" (பாப்பா - ஸ்ரீ பாரதியாரின் இளைய குமாரி.) வந்து "பகவதிப் பாட்டு பாடட்டுமா?" என்றுகேட்டது. "பாடு பாடு" என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.

ஆ  ஆ  ஆ  !
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்; - அவை    நேரே இன்றெனக்குத் தருவாய்; - என்றன்    முன்னைத் தீயவினைப் பயன்கள்; - இன்னும்    மூளாதழிந்திடுதல் வேண்டும்; - இனி    என்னைப் புதிய உயிராக்கி; - எனக்    கேதும் கவலை யறச்செய்து; - என்றும்    சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! ஹே!    காளீ, வலிய சாமுண்டீ! - ஓங்    காரத் தலைவி யென் னிராணீ!




No comments: