பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, July 29, 2012

மழலைகளுக்கு இனிய பாடல்கள்.

மழலைகளுக்கு இனிய பாடல்கள்.

தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அந்தச் சிறார்களுக்கு LKG, UKG போன்ற நுழைவு வகுப்புகளிலேயே ஆங்கிலத்தில் "ரைம்ஸ்" எனப்படும் ஓசையைப் பிரதானமாகக் கொண்ட பாடல்களைச் சொல்லித் தருகிறார்கள். அந்தப் பாடல்களைக் குழந்தைகள் வீட்டிற்கு வந்து தங்கள் மழலையில் பெற்றோர்களிடம் பாடிக் காட்டும்போது, அவர்கள் மனம் குளிர்ந்து போகிறார்கள். 

வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடமும் குழந்தைகளை அந்தப் பாடல்களைப் பாடிக் காட்டச் சொல்லுகிறார்கள். பாடல்களின் பொருள் புரிகிறதோ இல்லையோ, அந்தப் பாடலின் வரிகளுக்கேற்ப குழந்தைகளும் பாவங்களை அழகாகக் காண்பிக்கின்றனர். எதைக் கற்பித்தாலும் உடனே அதனை உள்வாங்கிக் கொள்ளும் வயது. அந்தக் குழந்தைகள் தாய் மொழி தவிர மற்ற மொழிகள் எத்தனை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள நாம் ஊக்கமளித்தல் அவசியம். ஆனால் அதே நேரம் நம் தாய் மொழிதானே என்று அதனை அலட்சியப் படுத்திவிடக் கூடாது. 

ஆரம்ப வகுப்புக்களில் தமிழிலும் அதுபோன்ற அழகிய பாடல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். இப்போதும் சில இடங்களில் தமிழில் சில பாடல்களைச் சொல்லித் தருகிறார்கள். அவை இன்னமும் அதிகமாக இருத்தல் அவசியம். நம் நாட்டு கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் ஒத்து வருகின்ற மழலைப் பாடல்கள் புதிதாக இயற்றப்பட வேண்டும். 

அவை இளம் சிறார்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் இதுபோன்ற மழலைகள் பாடல்கள் சிலவற்றை நூலாக வெளியிட்டிருக்கிறது. அவற்றையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். 'ரெயின் ரெயின் கோ அவே", "லண்டன் பிரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டெளன்" போன்ற பாடல்களுக்குப் பதிலாக நல்ல தமிழ்ப் பாடல்களைப் பயிற்றுவிக்கலாம். இதில் ஆர்வமுள்ள கவித்துவம் நிறைந்த நண்பர்கள் புதிதாகப் பாடல்களை இயற்றி அனுப்புங்கள். நம் பாரதி இலக்கியப் பயிலகம் அவற்றைத் தேர்ந்தெடுத்து நமது வலைப்பூவில் வெளியிடலாம். குழந்தைகள் பாட அவற்றை நாம் அர்ப்பணிப்போம். நன்றி.

இது குறித்த ஒரு வேதனைக் கதையை உங்களுக்குத் தரவிரும்புகிறேன். 1976இல் "கல்கி" இதழில் வெளியான இந்த விவரங்களை இப்போது மீண்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கீழே காணப்படும் ஆங்கில Rhyme பாடல் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். படியுங்கள்.

Ring A Ring O roses
A pocket full of poises
A tishoo! A tishoo! we all fall down
A Ring. A Ring of Roses. A pocketfull of poises
Ash-a Asha-a All stand Still.


"கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கும் கிண்டர்கார்டன் குழந்தைகள் பாடி ஆடும் நர்சரி ரைம்தான் இது. ஆனால் இந்த நான்கு வரிகளுக்கும் பின்னால் ஒரு சோக சரித்திரமே உள்ளது. வேடிக்கைக்காக எழுதப்பட்ட வரிகள் இல்லை இவை. கொள்ளை நோயான பிளேக் நோய் லண்டன் மாநகரில் ஆயிரக்கணக்கானவரை கொள்ளை கொண்டு போனபோது மனத் தெம்புக்காக எழுந்த பாடல் இது. தி கிரேட் பிளேக் ஆஃப் லண்டன் (Great Plague of London) என்று பெயர் பெற்ற அந்தக் கொள்ளை நோயால் லண்டன் தெருக்களிலே பிணங்கள் குவிந்தன. Ring O Roses - ரோஜாக்கள் என்று குறிக்கப்பட்டது ரோஜா போல சிவந்த உடலில் உண்டாகும் கட்டிகளை. Pocket full of Poises என்பது பிளேக் தொற்றிக் கொள்ளாமல் இருக்க மக்கள் தங்கள் சட்டைப் பைகளில் (Pockets) எடுத்துச் சென்ற வாசனைப் பொருட்கள். tishoo, tishoo என்கிற வரிகள் "தும்மல் தொடங்கியவுடன் தொலைந்தோம் இன்று" என்று ஆற்றாமையினால் எழும் ஓசை.

கொள்ளை நோயாம் பிளேக்கின் கொடுமையிலிருந்து தப்ப வழியறியாது தவித்த நேரத்தில், பயத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த வரிகள் இவை."

Rain Rain go away என்றும் London Bridge is falling down என்றும் இவர்கள் பாடுவது நமக்குப் பொருத்தமாக இருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள். இனி தமிழில் மழலைப் பாடல்களைச் சொல்லித் தர முயற்சி செய்யுங்கள். பள்ளிகளில் இல்லாவிட்டாலும் வீட்டில் நாமே சொல்லித் தரலாமே. வாழ்க தமிழ் என்று உரக்கக் கூச்சலிட்டால் மட்டும் போதாது. தமிழை வாழவைக்க மழலைகளுக்குத் தமிழை ஊட்டி வளர்க்க வேண்டுமே! செய்வீர்களா? நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.


"மழலைத் தளிர்கள்"

(இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், மைசூர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்திய அரசு மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல். குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கியது. இதிலிருந்து சில பாடல்களை முதல் தவணையாகத் தருகிறோம். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்)

இந்த நூலின் அணிந்துரையிலிருந்து சில பகுதிகள். "இந்திய மொழிகளில் குழந்தைகளின் இலக்கியம் பெருகிவரும் தற்போதைய நிலையிலும் மழலையர் பாடல்களில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. ஆங்கில மொழியில் உள்ள மழலையர் பாடல்களால் இத்தகைய இடைவெளிகள் நகர மத்தியதர மக்களுக்காக நிரப்பப்படுகின்றன. ஆங்கில மழலையர் பள்ளிகளில் இவை ஊக்கப்படுத்தப் படுகின்றன. சமூகவயமாக்கம் என்ற நிலையில் ஒரு குழந்தையானது தன் தாய்மொழியில் செவியுறும் பல்வகை ஒலிகளைக் கற்றுக் கொள்வதும் அவற்றில் பயிற்சி பெறுவதும் தேவையானவை. ஒரு குழந்தையானது தன் தாய்மொழியின் மீது கொள்ளும் பற்றுக்கு முதல் படியாக இவ்வனுபவம் அமைகிறது. ......

"இந்த நூலில் உள்ள தமிழ் மழலைப் பாடல்கள், குழந்தைகளின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்துவகை நிலைகளையும் கொண்டதாய் அமையும். இப்பாடல்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும், தெருக்களிலும் பாடப்படும் பொழுது அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். இம்முயற்சி, குழந்தைகளின் தளிர் மனங்களில் இந்திய மொழிகளைப் பதிய வைக்கவும், வளர வைக்கவும் ஒரு முன்னேற்றப் படியாக அமையும்."
திரு இ.அண்ணாமலி, முன்னாள் இயக்குனர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்.

இனி சில பாடல்களைப் பார்ப்போம். அவற்றைப் படிப்பதோடு சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அவை குழந்தைகளின் வாழ்வோடு தொடர்புடையதாகையால் குழந்தைகளுக்குப் பயன்படும். குழந்தைகள் தாய்மொழியில் பாடவும் பயிற்சி கிடைக்கும். முயன்று பாருங்கள். தொடர்ந்து மேலும் சில பாடல்களை ஒவ்வொரு நாளும் தர முயற்சி செய்கிறேன்.

1. "நீ பிறந்த நாளிது"

நீ பிறந்த நாளிது
நீ பிறந்த நாளிது

அப்பா தருவார் பூப்பூச் சட்டை
அம்மா தருவாள் கிண்கிண் கொலுசு
தாத்தா தருவார் டிண்டிண் கடியாரம்
நானே தருவேன் ஆயிரம் முத்தம்.

2. பாப்பாக் கண்ணு

பாப்பாக் கண்ணு பாப்பாக் கண்ணு
படுத்தி ருக்குதாம் - மேலே
பச்சை வண்ணப் பொம்மைக் கிளிகள்
பறந்து சுற்றுதாம்.

மேலே தொங்கும் பொம்மைக் கிளியை
முறைத்துப் பார்க்குதாம் - பாப்பா
காலை காலை ஆட்டிக் கொண்டு
கையைத் தட்டுதாம்.

பொக்கை வாயைத் திறந்து காட்டிப்
புன்ன கைக்குதாம் - பாப்பா
பொம்மைக் கிளியை எட்டி எட்டிப்
பிடிக்கத் தாவுதாம்.

3. குறும்புக்காரப் பட்டு

எங்க பாப்பா பட்டு
இட்டுக் கொள்வாள் பொட்டு

தட்டில் உள்ள லட்டு
எனக்குத் தருவாள் பிட்டு

தாத்தா தலையைத் தொட்டு
தலையில் வைப்பாள் குட்டு

குட்டிப் பொண்ணு பட்டு
குறும்புக்கார சிட்டு.

4. சிரிக்கும் பாப்பா

சின்னப் பாப்பா நானு
சீனிப் பாப்பா நானு
குட்டிப் பாப்பா நானு
குழந்தைப் பாப்பா நானு
சிட்டுப் பாப்பா நானு
சிரிக்கும் பாப்பா நானு.5. பாப்பா தொப்பை

தொப்பை தொப்பை
என்ன தொப்பை
தொந்தித் தொப்பை
போடப் போட
விரியும் தொப்பை
போடா விட்டால்
சுருங்கும் தொப்பை
யாரு தொப்பை
பாப்பா தொப்பை.


6. கண்ணுப் பாப்பா

செல்லப் பாப்பா சிரித்திடு
ஹ ஹ ஹ ஹா

சீனிப் பாப்பா குதித்திடு
தை தை தை தை..

தங்கப் பாப்பா அழுதிடு
ம்.... ம்.... ம்.... ம்...

சுட்டிப் பாப்பா குரைத்திடு
லொள் லொள் லொள்

கண்ணுப் பாப்பா கரைந்திடு
கா... கா... கா... கா...


7. முத்தம் தருவேன்

ஆடிப் பாடிக் கைகோத்து

அம்மா என்னோடு விளையாடு!

அம்மா உனக்கு சும்மா நான்

ஆசை முத்தம் தருவேனே!


8. அப்பா! அம்மா!!

அப்பா அருகே வந்தாரே

ஆப்பிள் வாங்கித் தந்தாரே

இனிக்கும் முத்தம் தந்தாரே

இனிதே நானும் சிரித்தேனே.


எங்கள் அம்மா வந்தாங்க

ஏறிக் கொண்டேன் தோள்மீதே

உண்ணச் சோறு தந்தாங்க

உவந்தே நானும் உண்பேனே!


9. அம்மா சோறு ஊட்டு.

அம்மா சோறு போட்டு

அள்ளி வாயில் ஊட்டு

நிலவை எனக்குக் காட்டு

நிறைய கதைகள் கேட்டு

தொட்டில் கட்டிப் போட்டு

தூங்கிடப் பாடு பாட்டு

தொட்டிலை நீயே ஆட்டு

தூங்கிடுவேனே கேட்டு!


10. அம்மா எங்கள் அம்மா

அம்மா எங்கள் அம்மா

ஆசை உள்ள அம்மா!

உன்னை விட்டு அம்மா

இருக்க மாட்டேன் அம்மா!

கதைகள் சொல்லு அம்மா

கேட்டு மகிழ்வேன் சும்மா!

கண்கள் விழிப்பாள் அம்மா

அழுதால் எழுவாள் அம்மா!

அன்பின் எல்லை அம்மா

உன்னை என்றும் மறவேன் அம்மா!
11. அம்மா அம்மா வந்திடுவாய்!

அம்மா அம்மா வந்திடுவாய்
ஆசை முத்தம் தந்திடுவாய்

கண்கள் போல என்னை நீ
கவனத்தோடு காத்திடுவாய்

உன்னைப் போல வளர்ந்திடுவேன்
உன் உள்ளம் மகிழ படித்திடுவேன்

அம்மா அம்மா வந்திடுவாய்
ஆசை முத்தம் தந்திடுவாய்.

12. மும்பை மாமா வந்தாரு

மும்பை மாமா வந்தாரு

பந்து எனக்குத் தந்தாரு

தட்டித் தட்டி விளையாடு

தங்கப் பாப்பா என்றாரு.

தம்பிக்கு ஒன்று தந்தாரு

தங்கைக்கு ஒன்று தந்தாரு

எங்க மாமா வந்தாரு

இவரைப் போல யாருண்டு!


13. தாத்தா! தாத்தா!

தாத்தா நீங்க என்னைப் போல

பாப்பாவாக இருந்தப்போ

எப்படி யெல்லாம் இருந்தீங்க

என்ன வெல்லாம் செஞ்சீங்க.

உங்க தாத்தா உங்களுக்கு

கதைகள் எல்லாம் சொன்னாரா?

சொன்ன கதையை எங்களுக்குச்

சொல்லித் தாங்க இப்போது

தாத்தாவாக நானும் ஆனா

சொல்லித் தருவேன் பாப்பாவுக்கு!


14. எங்கள் தாத்தா.

தாத்தா தாத்தா வந்தாரு

தடியைக் கீழே வச்சாரு

கட்டி முத்தம் தந்தாரு

தலையைக் கோதி விட்டாரு

பரிசு ஒன்றைத் தந்தாரு

கண்ணே உனக்கு என்றாரு

புதுசா சட்டை தந்தாரு

போட்டுப் பார்த்து மகிழ்ந்தேனே!


15. குடும்பம்

அம்மா என்னை அணைத்தால்

அன்பு முத்தம் கொடுப்பாள்

அப்பா என்னை அழைத்து

அங்கும் இங்கும் அலைவார்

அண்ணன் என்னைத் தூக்கி

அழுகை நிறுத்தச் சொல்வான்

அக்கா என்னைக் கொஞ்சி

அழகாய் சிரிப்பாள் அன்பாய்!


16. பொம்மை

சின்னச் சின்ன பொம்மை

குட்டிக் குதிரை பொம்மை

சிவப்பு நிறத்து பொம்மை

சாவி கொடுத்தால் ஓடுது

எங்க மாமா கொடுத்தது

எனக்கு ரொம்ப பிடிக்குது

குட்டி குட்டி பொம்மை

குட்டிக் குதிரை பொம்மை. 

பாட்டி கொடுத்த பொம்மை

பல்லைப் பல்லைக் காட்டுது

தாத்தா கொடுத்த பொம்மை

தள்ளாடி நடக்குது.

8 comments:

ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

Kasthuri Rengan said...

நல்ல பதிவு

வலைச்சரம் மூலம் வந்தேன்
வாழ்த்துக்கள்

Ahila said...

அருமையான பதிவு

Unknown said...

அருமையானது......

Unknown said...

அருமையானது....

Unknown said...

அருமையானது....

HiCRT said...

குழந்தைகளுக்கு...

HiCRT said...

வாழ்த்துக்கள்... மிகவும் தேவையான ஒன்று.