பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 28, 2015

74. சமூகம் - பிராமணன் யார்?                                                ஓர் உபநிஷத்தின் கருத்து
               அஷ்டாதச உபநிஷத்துக்களிலே வஜ்ரஸூசிகை என்பதொன்று. "வஜ்ர ஸூசி" என்றால் வயிர ஊசி என்பது பொருள். இவ்வுபநிஷதம் ''பிராமணன் யார்?'' என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது.

"நான் பிராமணன், நீ சூத்திரன்" என்று சண்டைபோடும் குணமுடையவர்களுக் கெல்லாம் இவ் வேத நூல் தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன் போலீஸ் வேவு தொழில் பார்க்கிறான். அவன் ஒரு பூணூலைப் போட்டுக்கொண்டு, ஏதேனும் ஒரு நேரத்தில், கிராம போன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்வதுபோல, பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு, ஐயர் ஐயங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்துக் கொண்டு, "நான் பிராமணன், நான் தண்ணீர் குடிப்பதைக்கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது" என்று கதை பேசுகிறான். மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான். பஞ்சத்தினால் ஜனங்கள் சோறின்றி மடியும்போது, அந்தத் தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும் பொருட்டுப் "பஞ்சமே கிடையாது, சரியானபடி தீர்வை வசூல் செய்யலாம்" என்று ''ரிப்போர்ட்டு''எழுதி விடுகிறான். ஆறிலோரு கடமைக்கு மேல் ராஜாங்கத்தார் தீர்வை கேட்பதே குற்றம். பஞ்ச நாளில் அதுகூடக் கேட்பது பெருங் குற்றம். அங்ஙனம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி. அதற்குமப்பால், உள்ள பஞ்சத்தை இல்லை யென்றெழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு''சாஸ்திரி யார்'' என்று பெயர் வைத்துக்கொண்டு "நான் கௌதமரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்" என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிறான். இப்படியே, வைசியத் தொழில், சூத்திரத் தொழில் என்ற கௌரவத் தொழில்கள் செய்வோரும் இவற்றிற்குப் புறம்பான புலைத் தொழில்கள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்துவிட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்.

             நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும். 

            வஜ்ரஸூசீ உபநிஷத்து பின்வருமாறு:-

ஞானமற்றவர்களுக்குத் தூஷணமாகவும், ஞானக்கண்ணுடையவருக்குப் பூஷணமாகவும் விளங்குவதும் அஞ்ஞானத்தை உடைப்பதுமாகிய "வஜ்ரஸூசீ" என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன்:

              'பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன்என்று வேத வசனத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்பது பரிசோதிக்கத் தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். அங்ஙனம்  பிராமணன் என்பது அவனுடைய  ஜீவனையா? தேகத்தையா?  பிறப்பையா?  அறிவையா? செய்கையையா? தர்ம குணத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணனென்றால் அஃதன்று. முன் இறந்தனவும், இனிவருவனவும் இப்போதுள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்கை வசத்தால் பலவித உடல்கள் உண்டாகும்போது, எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத்தான் இருக்கின்றது. ஆகையால், (அவனுடைய) ஜீவன் பிராமணனாக மாட்டாது. ஆயின், (அவனது) தேஹம் பிராமணனெனில் அதுவுமன்று. சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே அமைப்புடையதாகத்  தானிருக்கிறது. மூப்பு, மரணம், இயல்புகள், இயலின்மைகள்- இவையனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும், பிராமணன் வெள்ளை நிறமுடையவன்,க்ஷத்திரியன் "செந்நிறமுடையவன், வைசியன் மஞ்சள்நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும், உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்த பின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால், (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின், பிறப்புப் பற்றி பிராமணன் என்று கொள்வோ மென்றால், அதுவுமன்று. மனிதப் பிறவியற்ற ஐந்துக்களிடமிருந்துகூடப் பல ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும், ஜாம்பூகர் நரியிலிருந்தும், வால்மீகர் புற்றிலிருந்தும், கௌதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிறோம். அது போக, வஸிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாஸர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகஸ்தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முன்னாளில் ஞானத்தில் பெருமையடைந்த வர்களாகிய பல ரிஷிகளின் பிறவி வகை தெரியாமலேயேஇருக்கிறது. ஆகையால், பிராமணன் எனக் கொள்வோமென்றால்,அதுவுமன்று. க்ஷத்திரியர் முதலிய மற்ற வர்ணத்தவர்களிற் கூடஅநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளா யிருக்கிறார்கள். ஆதலால்,அறிவு பற்றி ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். ஆயின், செய்கைபற்றி ஒருவனைப் பிராமணனாகக் கொள்வோ மெனில் அதுவுமன்று. பிராப்தம், சஞ்சிதம், ஆகாமி என்ற மூவகைச் செயல்களும், ஒரேவிதமான இயற்கை யுடையனவாகவே காணப்படுகின்றன. முன்செயல்களால் தூண்டப்பட்டு, ஜனங்களெல்லோரும் பின்  செயல்கள்செய்கிறார்கள். ஆதலால், செய்கை பற்றி ஒருவன் பிராமணனாய் விடமாட்டான். பின் தர்மஞ் செய்வோனைப் பிராமணனாகக் கொள்வோமென்றால், க்ஷத்திரியன் முதலிய நான்கு வருணத்தவரும்  தர்மஞ் செய்கிறார்கள். ஆதலால், ஒருவன்  தருமச் செய்கையைப்பற்றியே பிராமணனாகி விடமாட்டான். அப்படியானால் யார்தான் பிராமணன்?  எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும், அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய், இடம்பம் அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாச மென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி, ஒருவனுக்கு பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து.
பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையைப் பெற முயற்சி செய்யக்கடவர். க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் முதலிய மற்ற லௌகிக வர்ணங்களுக்கும் இதுபோலவே தக்கவாறு லக்ஷணங்கள் அமைத்துக் கொள்க. அவ்வவ்விலக்கணங்கள் பொருந்தியவர்களே அவ்வவ் வருணத்தின்ரென்று மதிக்கத்தக்கவர்கள், அந்த. இலக்கணங்கள் இல்லாதவர்கள் அவற்றையடைய முயற்சி செய்யவேண்டும். போலீஸ் வேவுத்தொழில் செய்பவன் பிராமணன் ஆகமாட்டான். குமாஸ்தா வேலை செய்பவன் க்ஷத்திரியன் ஆகமாட்டான். சோம்பேறியாக முன்னோர் வைத்துவிட்டுப்போன பொருளை யழித்துத் தின்பவன் வைசியன் ஆகமாட்டான். கைத்தொழில்களை யெல்லாம் இறக்கக் கொடுத்துவிட்டுச் சோற்றுக்குக் கஷ்டமடைவோர் சூத்திரர் ஆகமாட்டார்கள். இவர்களெல்லாம் மேம்பாடுடைய ஆரிய வர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வரவேண்டுமானால், உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய்வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இது நம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து.


No comments:

Post a Comment

You can give your comments here