பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 30, 2015

1956 அரியலூர் ரெயில் விபத்து


                                                                லால்பகதூர் சாஸ்திரி 

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரெயில் விபத்துகளில், அரியலூர் ரெயில் விபத்து மிகவும் பயங்கரமானதாகும். அதில், 250 பேர் பலியானார்கள். விபத்துக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று அன்றைய ரெயில் மந்திரி லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்.   திருச்சியில் இருந்து 35 மைல் தூரத்தில் அரியலூருக்கும், கல்லகம் என்ற ரெயில் நிலையத்துக்கும் இடையே "மருதையாறு" என்ற காட்டாறு ஓடுகிறது.

இதன் மீது ரெயில்வே பாலம் இருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த திடீர் வெள்ளத்தின் காரணமாக ரெயில் பாலத்தை சுற்றிலும் அரிப்பு ஏற்பட்டது. தண்ணீர் ஓடுவதால் அது வெளியே தெரியவில்லை. 23.11.1956 நள்ளிரவில் பல ரெயில்கள் அந்த பாலத்தின் வழியாக சென்றன. அதிகாலை 5.30 மணி இருக்கும்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" ரெயில் பாலத்தின் மீது சென்றது.   அந்த நேரத்தில் பாலம் திடீரென்று இடிந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரெயில் என்ஜின் மற்றும் 7 பெட்டிகளும் ஆற்றுக்குள் கவிழ்ந்து வெள்ளத்தில் மூழ்கின. இந்த பெட்டிகளில் நான்கு பெட்டிகள் 3ம் வகுப்பு பயணிகள் சென்றது.


(இதில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது) 2 பெட்டிகள் 2ம் வகுப்பு பயணிகளுக்குரியது. ஒரு பெட்டி பார்சல் வண்டியாகும். பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினார்கள்.

நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார்கள். விபத்தில் பலியான பெண்கள், கைக்குழந்தைகளின் உடல்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன.

விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அந்த ஆறு ரத்த ஆறு போல பயங்கரமாக காட்சி அளித்தது. இந்த ரெயில் விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் எம்.ஜி.துரைசாமி, ஃபயர்மேன்கள் முனுசாமி, கோதண்டன், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞரான‌ சாவித்திரி (கணேசன்) உள்பட 250 பேர் பலியானார்கள்.

விடியற்காலை 5.30 மணிக்கு விபத்து நடந்திருக்கிறது. உடனே அருகிலுள்ள திருச்சி ஜங்ஷன் முதலான இடங்களுக்குச் செய்தி சென்று அங்கிருந்து மீட்பு சிறப்பு ரயில் புறப்படத் தயாரானது. இது போன்று விபத்து நடந்ததை ரயில்வே நிர்வாகம் ரயில்வே ஊழியர்களுக்குத் தெரிவிக்க ஜங்ஷனில் மின்சார சங்கை ஒலிஎழுப்பி தெரிவிப்பார்கள். அப்படி விடியற்காலையில் சங்கொலி கேட்டு பரபரப்படைந்த ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீசார் ஆகியோர் ஸ்பெஷல் ரயிலில் ஏறி அரியலூர் புறப்பட்டனர். அப்போது ரயில்வே போலீஸ் சுப்பரின்டெண்டாக இருந்தவர் முகமது சனவுல்லா ஃபரூக்கி என்பார். ஒழுங்கும், கட்டுப்பாடும், இறையுணர்வும் மிக்கவர். அவருடன் சார்ஜெண்ட் பிளேக் என்பாரும் மேலும் பல உயர் அதிகாரிகளும் புறப்பட்டனர். ஸ்பெஷல் வண்டி விபத்து நடந்த பகுதியை அடைந்ததும் சூப்பரின்டெண்ட் முகமது சனவுல்லா ஃபரூக்கி அங்கு சவுக்குத் தோப்பில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிணக்குவியல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கேயே துணிவிரித்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்தினார். பிறகு மளமளவென்று நிவாரணப் பணிகளுக்கு ஆணை பிறப்பித்தார். அவருடைய மனிதாபிமானமிக்க செயல்பாடுகளை அங்கிருந்த மக்கள் பார்த்து வியந்து போயினர்.

                                                              ஓ.வி.அழகேசன்

ரெயில் கார்டுகள் வைத்தியநாதசாமி, ஆறுமுகம் இருவரும் உயிர் தப்பினார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஆற்றங்கரையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டது. அடையாளம் காணமுடியாத 60 உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.  

அரியலூர் விபத்து பற்றி கேள்விப்பட்டதும் கவர்னர் ஸ்ரீபிரகாசா கண்ணீர் விட்டார். டெல்லியில் மத்திய ரெயில்வே உதவி மந்திரியாக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன் பதவி வகித்தார். விபத்து செய்தி கிடைத்தவுடன் ஓ.வி.அழகேசன் அரியலூர் வந்தார். ஆற்றில் ரெயில் கவிழ்ந்து கிடந்ததையும், ரத்த வெள்ளத்தில் பிணங்கள் கிடந்ததையும் பார்த்தார்.


ஆற்றங்கரையில் குவியல் குவியலாக பிணங்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அழகேசன் கண்ணீர் விட்டார். அங்கேயே அவர் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். இரவு வெகு நேரம் வரையில் நின்றிருந்து பிணங்கள் மீட்கப்படுவதை பார்வையிட்டார். சென்னைக்கு திரும்பிய அழகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுபோன்ற பயங்கர விபத்தை நான் பார்த்ததே இல்லை. விபத்து சேதங்களையும், பிணக்குவியல்களையும் பார்த்து நிலைதடுமாறி அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ரெயில் கவிழ்ந்த ஆற்றுப்பாலம் நன்றாகத்தான் இருந்தது. பேய் மழையின் காரணமாக பாலத்தின் முகப்பில் மண் அரிக்கப்பட்டதால் தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் ரெயில் ஆற்றுக்குள் விழுந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய மந்திரிகள் சி.சுப்பிரமணியம், M.பக்தவச்சலம் ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தார்கள். பெண்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி மண்ணோடு மண்ணாக சகதியில் புதைந்து போனது. அதற்குள் கிடந்த பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.இதனால் பிணங்களை மீட்க முடியவில்லை. அந்த பெட்டியை கரையில் எடுத்துப் போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள். ரெயில்வே மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்து வந்தார். தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆற்றுக்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதால் அதற்கு பொறுப்பு ஏற்று லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

லால்பகதூர் சாஸ்திரியின் ராஜினாமாவை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிரதமர் நேரு சொன்னதாவது:- 

ஐதராபாத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்ய லால் பகதூர் சாஸ்திரி முன்வந்தார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இப்போது "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" கவிழ்ந்ததும் மறுபடி ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார். "இந்த விபத்துக்கு நானே பொறுப்பு" என்று மந்திரி அவருடைய ராஜினாமா கடிதத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்த கடிதம் கிடைத்தவுடன் நான் அவருடன் விரிவாக மனம் விட்டுப்பேசினேன். இந்த தடவை ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதே சரி என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதால் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விபத்துக்கு லால்பகதூர் சாஸ்திரியே காரணம் என்று அர்த்தம் இல்லை.

ஆனால் இந்த மாதிரி ராஜினாமா செய்வதுதான் முறை என்பதை எடுத்துக்காட்டவே இதற்கு நாம் சம்மதம் கொடுத்தேன். என்ன ஏற்பட்டாலும் சரி, கொஞ்சம் கூட கவலைப்படாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்ற நினைப்பு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. இதை முன்னிட்டே ரெயில்வே மந்திரியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்." இவ்வாறு நேரு கூறினார்.  

லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு பின்னணி இருந்தது. அரியலூர் ரெயில் விபத்து ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஒரு ரெயில் ஆற்றில் விழுந்து 126 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளத்தினால் பாலம் சேதம் அடைந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

"மழைக்காலத்தில் ரெயில்வே பாலத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாலங்கள் சரிவர ரிப்பேர் செய்யப்படும்" என்று லால்பகதூர் சாஸ்திரி உறுதி அளித்து இருந்தார். ஆனால் சில மாதத்துக்குள்ளாக ஐதராபாத் விபத்து போலவே தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் விபத்து ஏற்பட்டது.

இதனால் மந்திரி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். முன்பு கொடுத்த வாக்குறுதி பொய்யாகிவிட்டதே என்று கவலைப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி விபத்துக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.   பீகார் மாநிலத்தில் 6.6.1981 அன்று ரெயில் ஆற்றுக்குள் விழுந்ததில் 2 ஆயிரம் பேர் உயிர் இழந்தார்கள்.

விபத்துக்கு உள்ளான அந்த பாசஞ்சர் ரெயில், சமஸ்திபூரில் இருந்து பான்மங்கி என்ற இடத்துக்கு போய்க்கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. எல்லா பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூரை மீதும் பலர் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர். தமரகாட் என்ற இடத்தில் கோசி ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது "தட தட" என்று 7 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. என்ஜினும், அதற்கு அடுத்த பெட்டியும் மட்டுமே ஆற்றுக்குள் விழாமல் தப்பின. ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டு இருந்ததால் 5 பெட்டிகள் அடியோடு மூழ்கின. இந்த ரெயில் விபத்தில் 200 பேர் பலியானதாகவும், பின்னர் அது 800 பேர் என்றும் கூறப்பட்டது.

ரெயில் விபத்தில் செத்தவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை, என்றாலும் விபத்து நடந்தபோது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. அதனால் 5 பெட்டிகளை வெள்ளம் அடித்துச்சென்று விட்டது. 2 பெட்டிகள் மட்டும் வெள்ளத்துக்குள் மூழ்கி கிடந்தது தெரிந்தது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கலாம் என்று பீகார் சட்டசபை துணை சபாநாயகர் கஜேந்திர பிரசாத் கிமான்ஷு தெரிவித்தார். சாவு எண்ணிக்கை 3 ஆயிரம் இருக்கும் என்று பீகார் கிராமப்புற வளர்ச்சி மந்திரி சவுத்ரி சலாவுடீனும் தெரிவித்தார்.

பீகார் ரெயில் விபத்துதான் உலகிலேயே மிகப்பயங்கரமான பெரிய விபத்தாகும். கடந்த 1917 டிசம்பர் 10ந்தேதி பிரான்சு நாட்டில் ராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ரெயில் விபத்தில் சிக்கி 543 பேர் இறந்ததுதான், இதுவரை உலகிலேயே பெரிய ரெயில் விபத்தாக கருதப்பட்டு வந்தது. பீகார் ரெயில் விபத்து அதையும் மிஞ்சி விட்டது.


டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களின் நினைவலைகளிலிருந்து சில துளிகள்.டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கலாம். ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தைப் பற்றியும், 1937இல் சென்னை மாகாணத்தில் உருவான காங்கிரஸ் அரசாங்கத்தைப் பற்றியும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பற்றியும் அறிந்தவர்களுக்கு ராஜன் என்ற பெயர் அவர்கள் ரத்தத்தோடு கலந்த பெயர். அவரை தி.சே.செள.ராஜன் என்றும் அழைப்பர். இதில் "தி" தில்லைஸ்தானம் எனும் ஊரையும், "சே" சேஷு அய்யங்கார் என்ற அவர் தந்தையின் பெயரையும், "செள" என்பது இவருடைய முழுப்பெயரான 'செளந்தரராஜனின்' முதலெழுத்தையும் குறிக்கும். 

இவர் எல்.எம்.பி. எனும் மருத்துவர் பட்டம் பெற்று, ரங்கூன் சென்று அங்கு பணிபுரிந்து, பிறகு லண்டன் சென்று படித்தபோது, அங்கு 'இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் புரட்சிக்காரர்களான வீர சவார்க்கர், வெ.வெ.சு.ஐயர் போன்றவர்களோடு பழகியவர். இவர் திரும்ப திருச்சிக்கு வந்து, ஸ்ரீரங்கமெனும் வைஷ்ணவத் தலத்தில் தன் மருத்துவத் தொழில் செய்ய முயன்றபோது, இவருக்கு ஏற்பட்ட தாங்கொணா தொல்லைகள், அனைத்தும் சக மனிதர்கள் கொடுத்தவை, அத்தனையையும் தாங்கிக் கொண்டு, ஜாதிப்பிரஷ்டத்துக்கு ஆளாகி, அரசியலில் மட்டுமல்லாமல், ஜாதீய விஷயங்களிலும் புரட்சிக்காரராக மாறி திருஈங்கோய்மலையில் பண்ணைவீட்டில் இருந்து விவசாயியாக மாறியதையும் தன் சொந்தக் கதையான "நினைவலைகளில்" விவரமாக எழுதியிருக்கிறார். 

அதில் பல்வேறுபட்ட தகவல்கள் இருந்த போதிலும், அவர் கடல் கடந்து போன ஒரே பாவத்துக்காக சக ஜாதியார் அவரைப் படுத்திய பாட்டை இப்போது நினைத்தாலும் ஆத்திரம் வருமளவுக்கு துன்பத்தைக் கொடுத்திருக்கிறது. அத்தகைய துன்பங்களை எதிர்கொள்ள அவர் செய்த குற்றம்தான் என்ன? கடல் கடந்து போனது. அடேயப்பா! நமது சாத்திரக் கொம்பர்கள் மாறவே மாட்டார்களோ என்று அச்சம் கொள்ளத் தூண்டும் வரலாற்று நிகழ்வுகள். அதை மீண்டும் இங்கே, இப்போது அவருடைய நூலிலிருந்து படித்துப் பார்த்து புரிந்து கொள்ளலாமே! வாருங்கள் "நினைவலைகளுக்குள்" செல்லலாம். இந்த நூல் முதன் முதலில் 1947இல் வெளிவந்தது. 2011இல் சந்தியா பதிப்பகம் இதனை வெளியிட்டது. இவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த விவரங்களை அனைவரும் படித்து இன்புற வேண்டுமென விரும்புகிறோம்.

                                                  
"நினைவலைகள்"


டாக்டர் தி.சே.செள.ராஜன் அவர்கள் லண்டனிலிருந்து இந்தியா திரும்புகிறார். அங்கு சம்பாதித்த பணமெல்லாம் செலவழிந்து ஊர் திரும்ப மட்டும் கையில் பணத்தோடு கப்பல் ஏறி, பின்னர் ரயில் ஏறி திருச்சி வருகிறார். இந்தியாவில் எல்.எம்.பி. பட்டம் பெற்று ரங்கூன் சென்று அங்கு வேலை பார்த்து, பிறகு லண்டன் சென்று படித்து வைத்தியராக ஊர் திரும்புகிறார். லண்டன் சென்றதில் புகழ்பெற்ற சர்ஜனாக முடிந்ததே தவிர கையில் காசு இல்லை.

லண்டனிலிருந்து ஒரு ஜெர்மன் கப்பலில் மூன்றாம் வகுப்பில் பயணம். காரணம் அதில் குறைந்த கட்டணம். அப்படித் திரும்பி வருகையில் கப்பல் பல துறைமுகங்களில் நின்று வந்தது. அப்படி நின்ற அல்ஜீரியா, ஜெனோவா, ரோம், நேப்பிள்ஸ், சூயஸ் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். இருபத்தியெட்டு நாட்கள் பயணம் செய்து கொழும்பு வழியாக தூத்துக்குடி வந்து சேர்ந்தார். இவர் லண்டனில் புரட்சிக்காரர்களோடு இருந்தமையால், கப்பலில் வந்து இறங்கியதும் போலீஸ் சோதனை கடுமையாக இருந்தது. மிகுந்த துன்பப்பட்டு ஊர் திரும்பியபோது அங்கு வறுமையின் பிடியில் தன் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் அவருக்காகக் காத்திருந்தனர். இவர் புரட்சிக்காரர் ஆகையால் இவருக்கு அங்கு வீடு கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர் மனைவி ஊருக்கு வெளியே ஒரு வீட்டை தயார் செய்து வைத்திருந்தார்.

திருச்சி ஜங்ஷனில் இவர் தந்தையும் இவருக்கு ரங்கூனிலிருந்து லண்டன் சென்று படிக்க உதவிய பசுபதி ஐயர் என்பாரும் வரவேற்றனர். மனைவி நோயினால் உடல் வருந்தி இருப்பதைக் கண்டு துன்பப்பட்டார். சுற்றத்தாரோ, நண்பர்களோ இவரைத் தங்கள் இல்லங்களுக்கு அழைக்கவில்லை. அப்போது அரவிந்தர் முதலானோருக்கு நண்பராகவும் பரோபகாரியாகவும் இருந்த கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரின் நட்பும் இவருக்குக் கிட்டவில்லை. இவருக்கு நடந்த வரவேற்பு உபசாரத்தில் ஆசாரசீலர்கள் எவரும் கலந்து கொள்ளவுமில்லை, விருந்து உண்ணவும் இல்லை. சீர்திருத்த வாதியான கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரும் பலர் அறிய இவருடன் உணவு உண்ண துணியவில்லை.

ஸ்ரீரங்கத்தில் தான் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்படுவது குறித்து அங்கிருந்த சில வைதீகர்களிடமும், வேத பண்டிதர்களிடமும் விசாரித்ததில் கிடைத்த விவரங்கள். "பிராமணன் சமுத்திரத்தைத் தாண்டக் கூடாது; அது சாஸ்திர விரோதம்; அதற்கு பிராயச்சித்தமும் விதிக்கப்படவில்லை. ராஜன் சீமைக்குப் போகுமுன் சாஸ்திரமறிந்த விற்பன்னர்களிடம் சம்மதமும் பெறவில்லை; ஆகையால் அவர் பிராமண்யத்தை இழந்துவிட்டவராவார். இனி, அவர் பிராமண சமூகத்தில் இடம் பெற முடியாத நிலை. இவருடைய பெற்றோர், உறவினர், நண்பர் யாரேனும் இவருடன் உறவு கொண்டாடினால் அவர்களும் ஜாதிப்பிரஷ்டத்துக்கு உள்ளாவர். ராஜன் மீது தனிப்பட்ட கோப தாபம் எதுவும் இல்லையென்றாலும், சாஸ்திர விரோதச் செயலுக்கு அவர்கள் சம்மதிக்க முடியாது" இதுதான் அவர்கள் அளித்த விளக்கம்.

ஊர் திரும்பி, கற்ற மருத்துவக் கல்வியின் துணையோடு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற எண்ணியவருக்கு பெருத்த ஏமாற்றம். பிழைப்புக்கு என்ன செய்வது? பேசாமல் ரங்கூன் திரும்பிவிடலாமா என்ற முடிவுக்கு வந்தார். அங்கு ரங்கூனில் இவர் விட்டுச் சென்ற தொழில் மீண்டும் கைகொடுத்தது. வைத்தியத் தொழிலில் அங்கு நல்ல வருமானம். பணம் வரத் தொடங்கியதும் மகளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமென்று மனைவியின் வேண்டுகோள். அவளுக்கு அப்போதைய திருமண வயது வந்துவிட்டது, அதாவது பன்னிரெண்டு வயதாகிவிட்டது. இந்த இளம் வயதில் திருமணமா என்று ராஜன் சிந்தித்தார். மனைவியின் நச்சரிப்பால் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார் குடும்பத்துடன்.

வங்காள விரிகுடாவைத் தாண்டி ரங்கூன் சென்றவர்களுக்குக் கூட, இவர் இன்னும் அதிக தூரம் கடல் பயணம் செய்து லண்டனுக்குச் சென்றதால் பெரிய குற்றம் செய்துவிட்டவராகக் காட்சி யளித்தார். ஆனால் ரங்கூனில் வசித்த பிராமணர்கள் இவரை அங்கீகரிக்கவே செய்தார்கள். வைதீக கோஷ்டியாரின் ஜாதி விலக்கை எப்படி சமாளிப்பது என்ற பயம் தோன்றியது. மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். பரம்பரையாக இவருடைய வம்சத்தாருக்குக் குலகுருவாக விளங்கிய அகோபில மடம் ஜீயர் சுவாமிகள் வைதீகர்களுடைய நடவடிக்கைகளைத்தான் ஆதரித்தார். அவரே இவருக்கு எதிராக இருந்ததால், இவருடைய பெரும் கூட்டமான உறவினர்களும் இவரிடமிருந்து விலகியே இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீரங்கத்தில் அவருடைய பெரிய மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நிலை.

பெற்றோர், உற்றார் உறவினர், செல்வந்தர் கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் என்று எவரும் உதவிக்கு வராத நிலையில் பெண்னுக்குக் கல்யாணம் செய்வது எங்ஙனம்? வரன் தேடும் முயற்சிக்கும் ஏகப்பட்ட இடையூறுகள். கையில் இருக்கும் பணம் செல்வாகுமுன்பு கல்யாணம் செய்துவிட வேண்டும். இந்த நிலையில் இவருக்கு ஒரு எதிர்பாராத உதவி கிடைத்தது. இவருடைய பழைய ஆசிரியரும், ஸ்ரீரங்கம் உயர்தர பாடசாலை நிறுவனருமான வீரராகவ ஐயங்கார் இவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களுக்குள் இரண்டு கட்சி எப்போதும் உண்டு. அவர்கள் வடகலை, தென்கலை. நெற்றியில் கொண்டி நாமம் போடுவோர் வடகலை; கொண்டிக்கு அடியில் மூக்கில் வெள்ளைக் கோடு இழுப்பவர் தென்கலை. 


இவர்களுக்குள் ஏன் சதாகாலமும் சண்டை? இவ்விருவருக்குள்ளும் சமபந்தி உணவு, கொள்வினை, கொடுப்பினை இவற்றில் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களுக்கிடையே சொந்தங்கள் உண்டு; பங்காளிகள் உண்டு, மாமன், மைத்துனன் உறவுகள் உண்டு. குரு சிஷ்ய பாவத்தில் தென்கலை ஆசாரியர்களுக்கு வடகலைச் சீடர்கள் உண்டு, வடகலை ஆசாரியார்களுக்குத் தென்கலை சீடர்களும் உண்டு. வடமொழி, தமிழ் இரண்டிலும் இவர்களுக்குப் பாண்டித்யம் உண்டு. வடகலையாருக்கு வடமொழியிலும், தென்கலையாருக்குத் தமிழிலும் பழக்கம் அதிகம். இவர்களுக்குள் இத்தனை ஒற்றுமை இருந்தும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற வைணவ ஸ்தலங்களில் இரு பிரிவினருக்குள்ளும் ஏகப்பட்ட விவாதம், ஓயாத வழக்கு வியாஜ்யம். வக்கீல்களுக்கு இவர்களால் நல்ல வருமானம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? இவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளில் வைணவமோ, ஆசாரமோ இன்னதென்று தெரியாத நீதிபதிகளிடம் இவர்கள் தீர்ப்பு பெற்று மகிழ்வார்கள். முஸ்லீம், கிருஸ்தவ நீதிபதிகளிடத்திலும் இவர்கள் போய் நின்று நியாயம் கேட்கப் பின்வாங்கமாட்டார்கள். இதுமாதிரியான கோஷ்டிச் சண்டைகளில் பெரிதும் பங்கேற்போர் பழைய காலத்து மடிசஞ்சிகள். படித்த நவீன காலத்து மனிதர்களும் இந்த கேலிக்கூத்தில் பங்கேற்பார்கள். 

இந்த இவ்விரு கலையார்களுமே ராஜன் சீமைக்குப் போய் வந்த குற்றத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரு கோஷ்டியாரும் கோர்ட், கேஸ் என்று அலைந்ததில் இவர்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதை சீர்செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியது. வாத்தியார் வீரராகவ ஐயங்காரின் மத்தியஸ்தம் இதற்கு ஒரு வழி காட்டியது. ஜாதிப்பிரஷ்டம் ஆன ராஜனை மீண்டும் வைணவ ஜாதியில் சேர்க்க ஒரு சமாதான திட்டம் உருவாயிற்று. அதன்படி:-

1. ராஜன் தன் பாவத்துக்குப் பிராயச்சித்தமாக வடகலை கோஷ்டியாரின் பொதுநிதிக்கு ஐநூறு ரூபாய் நன்கொடை கொடுக்க வேண்டும்.

2. இன்னொரு ஐநூறு ரூபாய், இவருக்குப் பிராயச்சித்தம் செய்யும் முறையைத் தேர்ந்து, அதை செய்து வைப்பதற்காகவும் கொடுக்க வேண்டும்.

3. நான்கு வைதீகப் பிராமணர்களுடன் அகண்ட காவேரிக் கரையில், ராஜன் பிறந்தது முதல் செய்த சகல பாவங்களுக்கும் பரிகாரமாக அவர் மனைவி சகிதமாக புனர் உபநயனம் முதற்கொண்டு எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து கொள்ள வேண்டும்.

4. சேது (ராமேஸ்வரம்) வுக்குச் சென்று அந்த நாலு பேருடன் மூன்று நாட்கள் தங்கி முப்பத்தாறு முறை சமுத்திர ஸ்நானம் செய்து அங்கு தானங்கள் வழங்க வேண்டும்.

5. இவற்றையெல்லாம் முறையாக செய்து முடித்த பிறகு ராஜனின் பெண் கல்யாணத்தை வைதீகர்கள் வந்து சடங்குகளை செய்து நடத்தி வைப்பர்.

6. ராஜன் வீட்டில் உணவருந்த இஷ்டமில்லாதவர்களை அவர் வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லக்கூடாது.

7. அப்படி என்னுடன் கலந்து உண்பவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்யக் கூடாது.

ராஜன் தான் பிறந்த ஜாதியாருடன் சேர்ந்து கொள்ள விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இவை. ஆனால் இவருடைய பெண்ணை மணந்து கொள்ளப்போகும் மணமகனோ அவரைச் சேர்ந்தவர்களோ இவற்றை விரும்பவே இல்லை என்பது ஒரு நல்ல அறிகுறி. இருந்தாலும் வைதீகக் கோட்டைக்குள் புகுந்து மகளின் திருமணத்தை நல்ல முறையில் நடத்திட இவை அனைத்தையும் செய்து முடித்து மீண்டும் வைதீக ஜாதி சம்புடத்தினுள் புகுந்து கொண்டார் ராஜன்.

இதில் இன்னொரு கூத்தும் நடந்தது. நன்கு வேதம் பயின்ற பண்டிதர்கள் சிலர் இந்த நடவடிக்கைகளை ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களின் கருத்து, 'சாஸ்திர சம்மதம் இல்லாத வழிமுறைகளைப் பணம் பிடுங்குவதற்காக சிலர் உபயோகித்துக் கொண்டார்கள்' என்றார்கள் அவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், ராஜனின் பெண் கல்யாணத்துக்கு ராஜனின் பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை. காரணம் வைதீகம் அல்ல; ராஜனின் மனைவி மீது இருந்த கோபம் தானாம்.

பெண் கல்யாணம் முடிந்து ராஜன் ஸ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பிவிட்டார். ஆனால் ஸ்ரீரங்கம் போர்க்களமாகிப் போனது. ஊர் வைதீகர்கள் இரண்டு பட்டுப் போய்விட்டார்கள். ராஜன் வீட்டுத் திருமணத்துக்கு ஒத்துழைத்தவர்களை மற்றவர்கள் நிராகரிக்கத் தொடங்கினர். கல்யாணம் செய்துவைத்த வைதீகர் (பிரம்மா) லண்டன் பிரம்மா என்று பெயர் வைத்தனர். சமையல் செய்த சுந்தரம் லண்டன் சுந்தரம் ஆனார். ராஜன் செய்த பிராயச்சித்தத்தில் பண ஆதாயம் பெற்ற சிலர் எதிரிகளுக்குப் பயந்து வந்த பணத்தை அவர்களோடு பங்கிட்டுக் கொண்டு சமாதானமாகிப் போயினர். இதை ராஜன் "சோற்றுப்பானைப் புயல்" என்று வருணிக்கிறார்.

இத்தனை ஆகியும் அகோபிலமட ஜீயர் சுவாமிகள், ராஜனை அவரது அடியாராக அங்கீகரிக்கவில்லை. ஆனால் 1937இல் ராஜன், ராஜாஜி அமைத்த மந்திரிசபையில் சுகாதார மந்திரியாக பதவியேற்ற சமயம், ஜீயர் மனமிரங்கி அவரை மீண்டும் மடத்தின் சீடராக ஏற்றுக்கொள்ள சம்மதித்தார். ஆனால் ராஜனோ அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதற்கு வீம்பு மட்டும் காரணமல்ல. தமிழ்நாட்டில் ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக ராஜன் இருந்து வந்ததும், தமிழ்நாட்டில் ஹரிஜனங்களுக்கு ஆலயத்தைத் திறந்துவிட்டு ஆலயப் பிரவேசம் செய்து வைத்ததும், இந்த வைதீக சமூகத்தாருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் தனக்களிக்கப்பட்ட சலுகையைப் பெற ராஜன் விரும்பவில்லை. வைதீக சமூகம் நெறி தவறி வாழ்க்கை நடத்துவதால் பலவீனப்பட்டிருப்பதும், அதை மேலும் கேவலப்படுத்தத் தான் விரும்பவில்லை யென்றும் ராஜன் சொன்னார்.

ராஜன் மனைவி மகளுடன் ரங்கூன் திரும்பினார். அப்போது மனைவி கர்ப்பிணி. ராஜன் சொல்லியும் கேட்காமல் முழுப்பிரசவம் ஆனதும் மனைவி இறந்தாள், ராஜன் குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்டார். வீடா, வேலையா? இந்த சிக்கலில் தவித்தார். முடிவில் ரங்கூன் பிராக்டீசை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்ப முடிவு செய்தார். மனைவியைப் பறிகொடுத்துவிட்டு நான்கு குழந்தைகளுடனும் அறுநூறு ரூபாய் பணத்துடனும் 1914இல் ஊர் திரும்பினார் ராஜன். ஸ்ரீரங்கத்தில் கடைசியாகப் பிறந்த ஆண் குழந்தையும் இறந்தது. ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப அவ்வூர் வைதீகர்களைப் போலவே ராஜனும் உச்சுக்குடுமி, பஞ்சகச்சம், நாமம், கோஷ்டியார் நடத்தும் சடங்களில் சங்கமம் இப்படி ஐக்கியம் ஆகிவிட்டார் ராஜன்.

அவர்களோடு ஐக்கியமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தற்கால நிலைமைக்கு ஏற்ப மாற்றிவிடலாம் என்கிற நப்பாசை ராஜனுக்கு. நாட்டில் அரசியல் மாறுகிறது, ஆட்சிகள் மாறுகின்றன, அரசாங்கத்தில் ஆட்கள் மாறுகிறார்கள். சமூக வாழ்க்கை மாறுகிறது, அப்படியிருந்தும் இவர்களுடைய புராதன வாழ்க்கை முறை மட்டும் மாறாமலே இருப்பது ஏன்? வைதீகர்களை குளிப்பாட்ட என்னவென்ன உண்டோ அத்தனையையும் செய்தார் ராஜன். அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை பலமடங்கு அதிகப்படுத்திக் கொடுத்துப் பார்த்தார். வைதீகக் காரியங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து அவர்களை மகிழ்விக்க முயன்றார். இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் செய்யவேண்டிய காரியங்களை சிறப்பாக செய்தார். பாகவதோத்தமர்களை விழுந்து விழுந்து நமஸ்கரித்து அவர்கள் மனங்களைக் குளிர்வித்தார். அவர்கள் மனங்குளிர அவர்களுக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கினார். தான் இத்தனை செய்தும், அவர்களில் பெரும்பாலோர், ராஜன் ஏதோ செய்யக்கூடாத பாபக் காரியத்தைச் செய்துவிட்டவர் போலவும், அந்த பாவத்திலிருந்து அவர் கடைத்தேறி புனிதராக வேண்டுமென்பதற்காகத் தாங்கள் மனமிரங்கி அவர் கொடுக்கும் தட்சணைகளை கருணையோடு வாங்கிக் கொள்வதாகவும் நினைத்தார்கள். அந்த வைதீகர்கள் பரம ஏழைகள். வேத ஞானமும், ஒழுக்கமும் அவர்களிடம் அறவே இல்லை. சடங்குகளை நடத்திவைக்கும் முறைகளை மட்டும் கற்று வைத்திருந்தார்கள். அதை பிரயோகம் என்பர். வேத சாஸ்திரம் படித்தவர் சிலரும் வறுமை காரணமாக இவர்களோடு இணைந்திருந்தார்கள்.

இப்படி ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்கள் வட, தென் என்று பிரிந்திருந்த காரணத்தால், இவர்கள் எப்படியாவது ஒன்று சேர்த்தால் என்ன என்ற மடமையான எண்ணம் ராஜனுக்கு ஏற்பட்டுவிட்டது. ரயில்வேயில் பணியாற்றிய ஒரு தென்கலை வைஷ்ணவரின் உதவியோடு "ஸ்ரீரங்கம் பாரதீய வைஷ்ணவ சபா" என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல உபதேசங்களை செய்வித்து அவர்களுக்கெல்லாம் சன்மானம் வழங்கினார். சன்மானம் பெற்றவர்களுக்கு சந்தோஷம், ஆனால் படித்த வைதீகர்களுக்கு இதில் சம்மதமில்லை. ஆதரவில்லாமல் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

எப்படியும் கடல் நீரில் உப்பை எடுத்துவிட வேண்டுமென்பது போன்ற முயற்சியில் ராஜன் ஈடுபட்டார். மக்களைக் கவர இலவசமாக வைத்தியமும் செய்தார். அதனால் செல்வாக்கு பெருகியதே தவிர வைதீகர்கள் மாறவில்லை. வடகலையாரில் பெரும்பாலோருக்கு அகோபில மடமே குரு பீடம். ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருடையது என்பது அந்தக் கலையாரின் கட்சி. ஆகையால் வடகலை நாமம் போட்ட சின்னங்கள், யானை, குடை, எடுபிடி சாமான்கள் இவைகளுடன் ஸ்ரீரங்கத்தினுள் நுழையக்கூடாது என்பது தென்கலையார் கட்சி. அதைப் பின்பற்றி ஒரு ஆங்கிலேய ஜில்லா கலெக்டர் நூறு வருஷங்களுக்கு முன்பு (இது சொல்லப்பட்டது 1947இல்) ஸ்ரீரங்கம் தென்கலையாருடையது என்றும், அதில் வடகலையாருக்கு எந்தவித பாத்தியமும் இல்லை என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதுதான் தென்கலையார் உரிமை கொண்டாடுவதற்கான மூல சாசனம்.

ராஜன் ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள் அங்கு எழுந்தருளினார். பல ஆண்டுகள் கோர்ட், வழக்கு ஆகியவை மூலம் ஸ்ரீரங்கம் வீதிகள் பொதுத்தெருக்கள் என்று தீர்ப்பான பிறகு சுவாமிகள் தன் மடத்திற்கு வருவதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது. அவருக்குக் கோயிலில் பெருமாள் தரிசனம் தக்க மரியாதைகளுடன் நடத்தி வைக்கவேண்டுமென்று வடகலையார் விரும்பினர். ராஜனும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஜில்லா சப் ஜட்ஜ் உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன் மூன்று நாள் மரியாதைகளுடன் சேவை நடந்தேறியது. மூன்றாம் நாள் தென்கலையார் சென்னை ஹை கோர்ட்டில் ஒரு தடை உத்தரவை பெற்றார்கள். அதற்குள் மூன்றாம் நாள் சேவையும் நன்கு நடந்தேறிவிட்டது. இதனாலெல்லாம் ஸ்ரீரங்கத்தில் யாதொரு புரட்சியும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் முக்கியம்.

அகோபில மடம் ஜீயர் இரண்டு மாதகாலம் ஸ்ரீரங்கத்தில் தங்கினார். சீடர்கள் தினசரி கைங்கர்யங்களைச் செய்து வந்தனர். எனினும் ராஜனையும் அவர் தந்தையையும் நன்கு தெரிந்த ஜீயர் சுவாமிகள் இவர்களைத் தன் அருகில்கூட சேர்க்கவில்லை. ராஜனின் தந்தை ஓரிரு முறை ஜீயர் சுவாமிகளிடம் சென்று தனக்குப் பரந்யாசம் (இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரை வைத்தல் - சரணாகதி) செய்துவைக்க வேண்டுமென்று பிரார்த்தித்தார். பரந்யாசம் எனும் சரணாகதி வைஷ்ணவர்களுக்கு ஒரு புனிதமான சடங்கு. 

பரந்யாசம் செய்து கொள்பவர் முதல் நாளே வைதீகச் சின்னங்களோடு மடத்துக்குச் சென்று சுவாமிகளின் முன்பாக இடைவிடாது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டிருக்க வேண்டும். சுவாமிகளின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் போதும் என்றதும் நமஸ்காரத்தை நிறுத்தி, பரந்யாசம் செய்துகொள்ள பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இதற்காக குறைவான தொகை பத்து ரூபாய் மடத்தில் செலுத்த வேண்டும். மறுநாள் காலை சுவாமிகள் லக்ஷ்மிநரசிம்மருக்கு ஆராதனம் செய்யும் வேளையில் கோஷ்டியில் காத்திருந்து பிறகு சுவாமிகளிடம் தனித்துச் சென்று அவரிடம் உபதேசம் பெற்றபின்பு, மடத்துக்குத் தன்னால் இயன்ற காணிக்கை அளித்துவிட்டு, அல்லது செலவுகளை ஏற்றுக் கொண்டு, மடத்தில் அன்று உணவு அருந்திப் பின் செல்ல வேண்டும்.

ராஜன் கடல்கடந்து சென்றவர் என்பதால் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டதும், மகள் கல்யாணத்துக்காக அவர் பட்ட சிரமங்களும் தெரிந்திருந்த சுவாமிகள், அவருடைய தகப்பனார் என்பதால் இவருக்குப் பரந்யாசம் செய்யத் தயங்கினார். அவரை சமாதானம் செய்ய, அவரிடம் "நீர் சேதுஸ்நானம் செய்துவிட்டு வாரும், பிறகு பரந்யாசம் செய்துவைப்பதைப் பற்றி யோசனை செய்வோம்" என்று சொன்னார். ராஜனின் தந்தை முன்கோபி. தானே ஸ்ரீரங்கம் மடத்து ஏஜெண்டாக இருந்த காலத்தில் இப்போது சந்நியாசம் வாங்கி சுவாமிகளாக இருப்பவர் மடத்தில் அப்போது பூஜை செய்துவந்தார். அப்படி இருந்தவர், இப்போது தனது ஒரு விதி வகுத்தது ராஜன் அப்பாவுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. 

"ஓய்! உம்மை எனக்குத் தெரியாதா? இன்று ஆச்சாரியாராகிவிட்டீர். ஆராதனம் பண்ணிக்கொண்டிருந்த ஜமாச்சாரியார்தானே நீர்? நான் என்ன பாவம் செய்ததற்காக எனக்குச் சேது ஸ்நானம் விதிக்கிறீர்? நான் இருமுறை இதற்கு முன்பாக சேதுஸ்நானம் செய்திருக்கிறேன். கங்கை, யமுனை, சிந்து முதலான புனித தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்திருக்கிறேன். இமயமலை முதல் கன்யாகுமரி வரை எல்லா க்ஷேத்திரங்களிலும் தரிசனம் செய்திருக்கிறேன். தினமும் வைதீக கர்மாக்களைக் கிரமமாகச் செய்து வருகிறேன். என்னிடம் குறை சொல்ல எதுவுமே இல்லை. என்னைக் காட்டிலும் பலவித பாவங்களைச் செய்துவருபவர்களுக்கெல்லாம் நிபந்தனையின்றி பரந்யாசம் செய்து வைக்கிறீர். நான் ஏதோ மகாபாதகம் செய்துவிட்டவன்போல் எனக்கு விதி ஏற்படுத்துகிறீர்களே? இது என்ன நியாயம்?" என்று கூச்சலிட்டார்.

"சரி சுவாமி! சீமைக்குச் சென்று திரும்பிய என் மகன் உதவியினாலேதானே நீங்கள் இந்த ஊருக்கு வந்து நூறு வருஷங்களாகப் பெறமுடியாத மரியாதைகளையெல்லாம் கோயிலில் பெற்று, இந்த மடத்தில் எழுந்தருளியிருக்கிறீர். இது என் மகனுடைய செல்வாக்கினால் உங்களுக்கு நடந்தது. அவன் தங்களிடத்துப் பரந்யாசம் கோரவில்லை. நான் என் மகனிடத்தில் வசிக்காமல் எங்கே போவது? என் மகன் துன்மார்க்க செயல் ஒன்றிலும் ஈடுபட்டவன் அல்ல. அவனுடன் தங்குவது பாவமென நீங்கள் கருதினால் பரந்யாசம் ஆனபிறகும் நான் அவன்கூடத்தானே இருக்க வேண்டும். ஆகையால் எனக்குப் பரந்யாசம் தேவையில்லை." என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். மகன் ராஜனிடமும் நடந்ததை எடுத்துச் சொன்னார்.

பரந்யாசம் செய்துகொண்டு மகனைப் பிரிய ஒப்புக்கொள்ளாமல், மகனுடன் தான் இருப்பேன் அதனால் பரந்யாசம் இல்லையென்றால் அது தேவையில்லை என்று வந்துவிட்ட தந்தையிடம் ராஜனுக்கு அன்பு மேலிட்டது. 

இது நடந்து சில வருஷங்களுக்குப் பிறகு அகோபில மடம் ஜீயர் பரமபதம் அடைந்தார். அவர் ஸ்தானத்துக்கு அவரைப் போலவே படித்த வேத விற்பன்னரும், நல்லொழுக்கம், சீலம், உயரிய வாழ்வு இவை உடையவரும், செல்வருமான திருநெல்வேலி வீரவநல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியார் எழுந்தருளினார். பரம வைதீகர்; உலகப் போக்கை ஒன்றும் அறியாதவர். மடத்தை நன்கு பரிபாலித்து வந்தார். அவர் ஸ்ரீரங்கம் வர விரும்பியபோது பழையபடி கோர்ட், கேஸ் என்று சண்டை தொடங்கிவிட்டது. அவர் பயந்து போய் காவிரிக்கரையில் உள்ள திருப்பராய்த்துறை எனும் ஊரில் தங்கிவிட்டார். என்னதான் முயற்சி செய்தும் அவரால் ஸ்ரீரங்கம் வந்து தரிசனம் செய்ய முடியாமல் கோர்ட், வியாஜ்யம் தொடர்ந்தது. கடைசியில் ஜீயர் சுவாமிகள் ராஜனை அழைத்துப் பேசி, அவரும் சர் டி.தேசிகாச்சாரியார் எனும் பிரபலமான மனிதருடன் சேர்ந்து ஒரு சமரச உடன்பாட்டுக்கு கோர்ட் மூலம் பெற்று, அந்த ஜீயர் தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்கி அங்கேயே முக்தியும் அடைந்தார்.

ஆக, இப்படி இந்த விவகாரங்கள் தொடர்ந்து நடந்தன ......


1915இலேயே தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர் "ஆசாரத் திருத்த வியாசங்கள்" எனும் தலைப்பில், சுதேசமித்திரனில் தான் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். அதில் அவர் சொல்ல வந்த கருத்து 'பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரைக் குடிக்காதீர்கள்' காலத்துக்குத் தக்கபடி தங்கள் போக்கையும் நடவடிக்கைகளையும் ஆசாரத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார். நாம் எதைக் கேட்டுப் பின்பற்றியிருக்கிறோம், இதை மட்டும் பின்பற்றுவதற்கு? காலம்தான் நம்மை மாற்ற வேண்டும்.
Monday, July 27, 2015

ஆசார திருத்த வியாசங்கள். Part IV


                                       கல்விச் சாலைகளில் மதப்பயிற்சி. 
                                             by ஜி.சுப்பிரமணிய அய்யர்

1910ஆம் வருஷம் மார்ச்சு மாதம், சைதாப்பேட்டையில் லார்ட் பிஷப்பென்ற கிருஸ்தவ மதாசாரியர் செய்த ஒரு பிரசங்கத்தில், நமது கல்விச் சாலைகளில் மதம் போதிக்கப் படுவதில்லை யென்றும், கல்விச் சாலைகளை நடத்துவோர் கவர்ன்மெண்டானதால் அப்படிப் போதித்தல் சாத்திய மில்லாம லிருக்கின்ற தென்றும், மதபக்தியும் நல்லொழுக்கமும் கற்பிக்காத கல்வி பிரயோஜனமற்ற தென்றும், ஆகையால் கவர்ன்மெண்டார் கல்விச் சாலைகளை நடத்துவதை விட்டுவிட வேண்டுமென்றும், அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து அவரவர் மதத்தைக் கற்பிக்க வேண்டுமென்றும், பேசினார்.

இப்படிப் பேசினதில் கவர்ன்மெண்டு கல்விச் சாலைகளை நடத்துவதினின்றும் விலகிவிட வேண்டுமென்று சொன்னதுதான் புதிது. கல்விச் சாலைகளில் மதப் பயிற்சியும் அவசியமென்று ஆங்கிலேயர், வெகுகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இந்தியாவும் இங்கிலாந்தைப் போன்ற தேசமென்று நினைத்து இப்படிச் சொல்லுகிறார்கள். நம் தேசத்தில் ஈஸ்வர பக்தியும், சதாசாரமும், பெருங்குணமும், ஸ்கூல்களில்தான் உண்டாக வேண்டுமென்ற அவசியமில்லை. நமது பூர்வீக வழக்கங்களும், பெரியவர்களுடைய ஆசாரங்களும் முன்னிருந்தன போல் இருந்துவரும் பட்சத்தில், ஸ்கூல்களிற் பயிற்சி யில்லாமலே லார்ட் பிஷப் கோருவது நிறைவேறும். நமது மதாசாரியர்களும், சாஸ்திர விற்பன்னர்களும், பொதுவாய் நமது பெரியோர்களும், நம் சிறுவர்களை நல்ல வழிகளிற் செலுத்த வேண்டியது தங்கள் கடமையென்று உணர்வார்களானால், நமது பழக்க வழக்கங்களிலும், ஸ்தாபனங்களிலும் மதப்பயிற்சிக்கு அவசியமான வசதிகள் இருப்பதைக் காண்பார்கள்.

கல்விச் சாலைகளை நடத்துவதினின்றும் கவர்ன்மெண்டு விலகுவது நிறைவேறக் கூடியதல்ல. கல்வியை நடத்துவதில் கவர்ன்மெண்டுக்குள்ள சம்பந்தம் வரவர நெருங்கி பெறுக வேண்டுமென்று கவர்ன்மெண்டுக்கு விருப்பம் உண்டாகி வருகிறதேயன்றி, தளர்ந்து விலக வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவில்லை. இப்படித்தான் இனியும் இருக்குமென்று நம்புகிறோம். அந்தந்த சமூகத்துத் தலைவர்கள் தங்கள் சிறுவர்களைத் தங்கள் விருப்பப்படி படிப்பிக்க வேண்டுமென்ற முயற்சி கவர்ன்மெண்டின் ஆதரவில்லாமலே செய்யப்பட்டு வரவேண்டுமென்று நினைக்கிறோம்.

நம் சிறுவர்களின் நடத்தையைப் பற்றி, ராஜாங்கத்தார் மனதில் வரவர சமுசயமும் அச்சமும் உண்டாகி வருகின்றன. இந்த நடத்தைக்குக் காரணம் அச்சிறுவர்கள் ஸ்கூல்களிற் பெறும் பயிற்சியென்று நினைக்கப் படுகிறது. ஆகையால் ஸ்கூல்களையும், காலேஜ்களையும் தங்கள் பார்வையிலேயே வைத்து நடத்த வேண்டுமென்பது ராஜாங்கத்தாரின் முறையாய் ஏற்பட்டு வருகின்றது. இந்த முறை சரியானதென்று நாம் நினைக்கவில்லை. சிறுவர்களின் கல்வியில் கவர்ன்மெண்டுக்கு எவ்வளவு அக்கறையோ, அவ்வளவு பெற்றோர்களுக்கும், பொதுவாய்ச் சமூகத்தினருக்கும் உண்டு. ஆகையால், கல்விச் சாலைகளை நடத்துவதை ராஜாங்கத்தார் சமூகத்தினருக்கு முழுவதும் கொடுத்து விடாவிட்டாலும், அவர்களின் ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் இப்போதைவிட அதிகமாய்த் தழுவி, அவைகளை நடத்துவதே உசிதமாகும்.

மன்னார்குடி நேஷனல் ஹைஸ்கூலில் தியாஸபிகல் கான்பரன்ஸ் நடந்த போது ஸர் எஸ்.சுப்பிரமணியய்யரும், மிஸ்டர் டி.சதாசிவ அய்யரும் இந்தியச் சிறுவர்களின் மதக் கல்வியைப் பற்றிப் பேசினார்கள். இதைப் பற்றிப் பேச இவ்விரு பெரியவர்களைக் காட்டிலும் தகைமை யுடையோர்களை நம்மவருள் காண்பரிது. நம் தேசத்தில் இந்தியர்களின் நற்பெயரைக் கெடுத்து, அவர்களின் நன்மைக்கு விரோதமாகவும், நம் நற்காலத்துக்கு இடையூறாகவும், சில வருஷங்களாகத் தோன்றி வரும் அநாயக வெறியானது, பெரும்பாலும் நம் சிறுவர்களையே பற்றியதாய், அவர்களுக்கும் அவர்கள் கொடுமைக் கிலக்காகும் பிறருக்கும் உயிர் நஷ்டத்தை யுண்டாக்குவதை நோக்கி வருந்தாதவர்கள் இரார்கள். இது நம் தேச க்ஷேமத்தைக் கோரியவர்களுக்கும் கவர்ன்மெண்டுக்கும் பெருங்கவலையை யுண்டாக்கியிருக்கிறது. இக்கொடிய வெறியை யொழிப்பது எவ்வாறென்று இந்தியப் பிரமுகர்கள் பலவிடங்களில் சிந்தை கொண்டு, பல உபாயங்கள் செய்து, தாமாகவும் கவர்ன்மெண்டோடு கலந்தும், பாடுபட்டு வருகிறார்கள். சிறுவர்களை ராஜீயக் கலகங்களிற் சேரவிடக் கூடாதென்று அபிப்பிராயம் பரவி வருகிறது. இதோடு, மதக் கல்வியைச் சிறுவர்களுக்கு ஊட்டுவதையும் ஒரு பரிகாரமாகப் பலர் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பொதுக் கல்வி முறையில் மதப் பயிற்சிக்கே இடம் அமைக்காதிருப்பது ஒரு பெருங்குறை யென்றும், இக்குறையால் தெய்வபக்தி, பெரியோரிடம் பணிவு, அடக்கம், ஒத்தோரிடம் அனுதாபம், ஜீவகாருண்யம் முதலிய மதப் பயிற்சியால் விளையக்கூடிய நற்குணங்கள் நஷ்டமாகி, சமூகங்கட்கு ஹானி யுண்டாகிறதென்றும் சுமார் 50- வருஷமாகக் கவர்ன்மெண்டு இந்த விஷயத்தில் காட்டி வந்த அசட்டையின் பலனை இந்த அநாயக நிகழ்ச்சி ரூபமாக நம் தேசம் அனுபவிக்கிறதென்றும், அநேகர் அபிப்பிராயப் படுகிறார்கள்.

ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யரும், மிஸ்டர் டி.சதாசிவ அய்யரும் இவ்விஷயத்தில் தங்களுக்குள்ள ஆழ்ந்த உணர்ச்சியை வெளியிட்டார்கள். ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யர், இந்த அநாயகச் செயல்கள் கவர்ன்மெண்டின் கண்களைத் திறந்து விட்டன என்றார். மிஸ்டர் சதாசிவ அய்யரும் அநாயக வெறியர்கள் தவறான மத உணர்ச்சியால் தூண்டப் பட்டவர்களென்று கருத வேண்டும் என்றார். இருவரும் மதக்கல்வி இதற்கு மருந்தாகு மென்றும், எவ்வித மதக் கல்வியும் பலவகைப்பட்ட ஜனங்களைக் கொண்ட நம் தேசத்தின் நன்மைக் குற்றபடி அமைவதாகு மென்றும், அப்படி யமைப்பதில் தியாஸபியும், அதைச் சேர்ந்தவர்களும் எவ்வாறு உதவி செய்யக் கூடுமென்றும் காட்டினார்கள். 

ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யர் மதமாற்றலால் உண்டாகும் கொடுமையையும், தீங்கையும் பற்றி மிகுந்த ஆத்திரமும் சூழ்ச்சியும் விவகாரமும் காட்டிப் பேசினார். ஒவ்வொரு சமூகத்துக்கும் தேசத்துக்கும் தக்கபடி மதம் அமைகின்றது. ஒரு ஜனத்தை அதன் மதத்தினின்று மாற்றுவது அந்த இனத்தின் முற்போக்கைத் தடுப்பதாகு மென்றார். உலகமெல்லாம் ஆத்ம ஞானத்தைப் பரப்புவது இந்தியாவின் பொறுப்பென்றும், அந்தப் பொறுப்பை வகிக்க யோக்கியதை யுண்டாகும்படி இந்தியா முதலில் ஆத்ம ஞானம் நிரம்பியதாக வேண்டுமென்றும், இது மகாத்மாக்களின் சங்கற்பமென்றும் சொன்னார்.

ஹிந்துக் குடும்பங்களில் மதக் கல்வி புறக்கணிக்கப் படுவதையும், தேசம் இப்போதுள்ள நிலையில் மதக் கல்வி விஷயத்தில் பாடுபட தலைவர்கள் முற்பட்டு வாராமையையும் குறித்து வருந்தினார். சிறுவரைத் திருத்த முயலுவோர் தம் நடத்தையே சிறுவர்க்கு ஒரு படிப்பினையா யிருக்கும்படி நடக்க வேண்டுமென்றும், அப்படி இப்போதில்லாதிருப்பது பெரும் வசையாகு மென்றும் இருவரும் கண்டித்துப் பேசினார்கள். வீடுகளில் எப்போது சிறு பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் புருஷர்கள் கல்வியும் மதமும் சரித்திரமும் வீட்டில் கற்பிக்கிறார்களோ அப்போது தான் இந்த வசை நீங்கும். வெளியில் போனால் பிள்ளைகள் தம் மதத்துக்கும் வழக்கத்துக்கும் பாதகமான பல கண்டு அனுபவிக்கிறார்கள். அவ்வனுபவம் நல்லது பொல்லாதது என்று அவர்களுக்கு எங்கே யார் சொல்வார்கள்? தாய் தகப்பன் அண்ணன் தம்பியன்றோ வீட்டில் சொல்ல வேண்டும்.

மிஸ்டர் சதாசிவய்யர் நம் சிறுவர்கள் மதமாறுதலுக்கு நம்மில் வயதில் பெரியவர்களின் நடத்தையும் ஒரு காரணமாகுமென்றார். எடுத்துக் கொண்ட வேலையில் ஈடுபடுவதையும், விடா முயற்சியையும், மொத்தத்தில் ஒழுக்க நலத்தையும் கிருஸ்தவ மதப் பிரசாரகர்களிடமிருந்து நாம் கற்க வேண்டுமென்றார். கிருஸ்தவ மதப் பிரசாரகர்களைக் கண்டு வியந்து மோகித்து நம் சிறுவர்கள் கிருஸ்தவர்களாகிறார்கள் என்றார். இது உண்மையாக இருக்கக் கூடுமாயினும், முழு உண்மையுமல்ல. இக்காலத்துச் சிறுவர்களைக் கிருஸ்தவ மதமானது மதமாக மட்டும் கவரவில்லை. அந்த மதத்தில் இக்காலம் மேனாட்டார் உலக வாழ்வில் அடைந்துள்ள மேம்பாடும் அடங்கியதாகச் சிறுவர்கள் மதிக்கிறார்கள். 

அவ்வளவு உலக ஆதிக்கியத்தையும், செல்வத்தையும், வளத்தையும் பெறுவிக்கும் இக்கால நாகரிகமானது மேனாட்டில் பரவியுள்ள கிருஸ்தவ மதத்தால் ஆகியதென்று தங்கள் மனதில் அழுந்த உணருகிறார்கள். சுவாதீன புத்தியும், ஊக்கமும் ஒற்றுமையும், தைரியமும், உலகத்தை உருமாற்றிச் செய்துள்ள வேலைகளைக் கண்முன் பார்த்து வியந்து, அவையனைத்தும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியவர்களால் ஆயினவென்று அறிகிறார்கள். இக்கால நாகரிகமும் தர்மமும் வேறு, புராதன நாகரிகமும் தர்மமும் வேறு. அக்காலத்துக்கு அது ஒத்தது. இக்காலத்துக்கு இதுவே ஒக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். 'ஒரு கன்னத்திலடித்தால் மற்றொரு கன்னத்தையும் அடித்தவனுக்குக் காட்டு' என்று கிருஸ்து சொன்னபடி மேனாட்டார் நடந்திருந்தால், அவர்கள் இராஜ்யமும், மேம்பாடும் எப்படியிருக்கும்? புத்தர் கட்டளையையும் கன்பூசியசின் நீதியையும் ஜப்பான் அனுசரித்திருந்தால், இக்காலத்து முதற்தர ராஜ்யங்களுள் ஒன்றாக மதித்து எண்ணும்படி யாயிருக்குமா? பர்ஷியா, துருக்கி போன்ற புராதன தேசங்கள் எந்த வழியைப் பற்றி முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன? சாகக் கிடந்த சைனா உயிர்க்குறி காட்டுவது எதனால்? இவ்வாறு பல கேள்விகள் தங்கள் கண்முன் காண்பவற்றாலும், கேட்பவற்றாலும், படிப்பவற்றாலும் சிறுவர்கள் மனதில் உதிக்கின்றன. ஹிந்து சமூகத்தில் மிஸ்டர் சதாசிவ அய்யர் எடுத்துக் காட்டியுள்ளபடி குணக் கேடுகளையும், கொடுமைகளையும், கோளாறுகளையும் நோக்க, அவர்கள் அலட்சியம் வெறுப்பாக முதிர்கின்றது. நம் சமூகத்தைத் திருத்தவும் கூடுமோவென்று உள்ளம் அழிகிறார்கள். கடல் தாண்டக் கூடாது, சிசுவிதவை ஜன்ம மெல்லாம் விதவையே. மாயும் கிழம் மழலைப் பெண்ணை மணக்கலாம், இவைபோன்ற அக்கிரமங்களைச் சகியாது அகற்றவும் முடியாது நம் சிறுவர்கள் சமூகத்தையும், மதத்தையும் ஒதுக்கித் தள்ள முயலுகிறார்கள். ஹிந்து மதம் வேறு, சமூகம் வேறு அல்லவாகையால், இரண்டையும் தொலைத்து விட்டால், தேசாபிமான கைங்கரியத்துக்குச் சாதகமாயிருக்குமென்று கருதுகிறார்கள்.

இப்படி நாம் இழுதுவதால் மதமாற்றலைச் சற்றும் அங்கீகரித்ததாக நினைக்கலாகாது. சிறுவர்கள் மனதில் சுழலும் எண்ணங்களை வெளியிட்டோம். காலதர்மம் என்பது ஒன்றுண்டு. அது மாறக்கூடியது. உலக வாழ்க்கையில் வளமையைத் தேடுவது இக்கால தர்மமாயிருக்கிறது. இதை அனுசரித்து நடப்பது தவறென்று தோன்றவில்லை. இக மேம்பாட்டைத் தேடுவதில் தடையாகாவென்று காட்டுவதும், அவற்றைத் திருத்தும் ஒரு வழியாகும். இவ்வழியே சாத்தியமான வரையில் நடக்க வேண்டியது. அப்புறம் தேச நன்மைக்குற்றபடி பற்ற வேண்டிய வேறு வழிகளையும் கூசாது பற்ற வேண்டும். ஜப்பான், பெர்ஷியா, துருக்கி போன்ற தேசங்கள் தங்கள் மதங்களை மாற்றிக் கொண்டா முன்னுக்கு வந்தன? என்று கேட்பது சரியாகாது. அவைகளுள் சமூகக் கட்டு வேறு, மதம் வேறு. மதம்மாறாமல் சமூகக்கட்டை மாற்றலாகும். நம்முள் அவ்விதமில்லை. ஆகையால், மகாத்மாக்களின் சங்கற்பமென்றும் நம்மதமே மகோன்னதமான தென்றும் சொல்வதோடு நில்லாமல், இக்கால தர்மத்தையும் கூட்டித் திருத்தங்கள் செய்வது நலம். மிஸ்டர் டி.சதாசிவய்யர் சொன்னது போல, பிரிட்டிஷ் ஆட்சியானது தாராளத் தன்மையுடையதாயும், தாராள முயற்சிகளையெல்லாம் ஆதரிப்பதாயும் இருப்பதால், அதன் ஆதிக்கியத்தின் கீழ் அமைதியோடு நாம் முற்படும்படியான முயற்சிகள் எத்தனையோ செய்ய வாய்த்திருக்கின்றது. இதன் பொருட்டு இந்தியர்கள் எல்லோரும் நன்றியும், திருப்தியும் கொள்ளல் தகும்.

Sunday, July 26, 2015

ஆசாரத் திருத்த வியாசங்கள் - பகுதி III

                               
                               ஹரித்துவாரில் குருகுலவாசக் கல்விப் பயிற்சி.

வடக்கே ஹரித்துவார் க்ஷேத்திரத்தில் பஞ்சாப் தேசத்து ஆரிய சமாஜத்தார் குருகுலவாச மென்று பெயரிட்டு ஒரு பெரிய காலேஜ் நடத்துகிறார்கள். குருகுலவாசமாவது, நமது வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறபடி, சிஷ்யர்கள் ஆசாரியரை யடைந்து அவருக்குப் பணிவிடை செய்து, அவர் தயவினால் வித்தை கற்கும் ஸ்தலம். ஹரித்துவார், கங்கைநதி மலையிலிருந்து இறங்கி சமபூமியில் பிரவகிக்கும் மகா நேர்த்தியான திவ்விய ஸ்தலமாகையால், அங்கு இந்த குருகுலத்தை ஸ்தாபித்தது ஆரிய சமாஜத்தாரின் விவேகத்தைக் காட்டுகின்றது.

இந்த குருகுலத்தில் பழைய வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தர்மத்திற்கும் மதாசாரங்களுக்கும் விரோதமில்லாமல் ஹிந்துப் பிள்ளைகள் கல்வி கற்று, விஜாதீயப்படாமல் மதாபிமானிகளாகவும், தேசாபிமானிகளாகவும், ராஜபக்தர்களாகவும் வளருகிறார்கள்.. இந்த உத்திருஷ்டமான வித்தியா ஸ்தாபனத்தில் இன்னும் பல விசேஷங்களும் உள்ளன. அவைகளைச் சொல்லப் புகின் வளரும். ஆயினும் இந்த குருகுலம், மகாஷய முன்ஷிராம் என்ற பெரியோரால், அவரைப் போலவே துறவறம் பூண்ட உபதேசிகர்களின் உதவியைப் பெற்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவிலுள்ள மற்ற காலேஜ்களில் அனுஷ்டானத்திலிராமல் இந்தக் காலேஜில் மட்டும் இருக்கும் ஒரு மகா முக்கியமான வழக்கத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

சமீபத்தில் இந்தக் குருகுலத்தைச் சேர்ந்த 19 காலேஜ் பிள்ளைகளும், அஸிஸ்டெண்ட் மானேஜர் மகாஷய நந்தலாலும், நாலு வேலைக்காரர்களும் சரஸ்வதி யாத்திரை என்று ஹரித்துவாரிலிருந்து சிம்லாவுக்கு யாத்திரை போனார்கள். இவர்களுடன் இந்தியரது அமெரிக்க நண்பராகிய மைரன் பெல்ப்சும் போனார். இந்த இரண்டு இடத்துக்கும் உள்ள தூரம் 350 மைல். இவ்வளவு தூரத்தையும் செப்டம்பர் மாசம் முழுதும் பிள்ளைகள் வெறுங்காலால் நடந்து போனார்கள். வழியில் ஆலயங்களிலும், தர்மசாலைகளிலும் சில இடங்களில் டாக் பங்களாவிலும் இறங்கிச் சமையல் செய்து சாப்பிட்டுக் களைப்பாற்றிச் சென்றார்கள். ஒரு நாளைக்குச் சராசரி 10 அல்லது 12 மைலுக்கு அதிகம் நடந்ததில்லை. போன வழியெல்லாம் மலைப் பிரதேசமானதால் பல மலைச்சிகரங்களையும், ஆரண்யங்களையும், பள்ளத்தாக்குகளையும் செழிப்பான கிராமங்களையும் பார்த்துக் கொண்டு போனார்கள். இந்தப் பிள்ளைகள் அனைவரும் ஒரே மாதிரியாய்க் காலையில் 3 அல்லது 4 மணிக்கு எழுந்து, அந்த நாள் பிரயாணத்துக்கு எவ்வித குழப்பமுமில்லாமல் மெளனமாய்த் தயார் செய்வார்கள்.

நமது தேசத்தில் அனேக மலைகளும், காடுகளும், வனங்களும், அருவிகளும், நதிகளும் இருந்து இந்த ஆரிய வர்த்தத்தை திவ்ய பூமியாக்கியிருக்கின்றன. இங்கு மனுஷருடைய ஜீவனத்துக்காவது சுக செளக்கியத்துக்காவது இயற்கையினாலும், வேளாண்மையினாலும் கிடைக்கக் கூடாத பதார்த்தங்களில்லை. இந்த பதார்த்தங்களை அதிக சிரமமில்லாமல் சுளுவாய்ப் பெற்று, திவ்விய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை போய், பல பெரியோருடைய வாசத்தாலும், அருஞ்செயல்களாலும் புனிதம் பெற்ற ஸ்தலங்களைத் தரிசிக்கலாம். இப்படித் தரிசிப்பதால் மனசுக்கு ஆனந்தமும், உற்சாகமும் விசாலமும் உண்டாவதன்றி ஜகத்தை சிருஷ்டித்த ஈஸ்வரனுடைய சங்கற்பத்தின் அளவிடக்கூடாத பெருமையை ஒருவாறு மனதால் சிந்திக்கவும் இடமுண்டாகின்றது.

இப்படி குருகுல வாசத்துப் பிள்ளைகள் யாத்திரை சென்றதில், அவர்களுக்கு தேக ஆரோக்கியம் உண்டாகி, அவர்கள் மனப்ப்யிற்சி பெற்றதுமல்லாமல், உயர்ந்த கருத்துகளும் ஜீவகாருண்யமும் சாந்தமும் தெய்வ பக்தியும் பெற்றார்கள். அவர்கள் யாத்திரை போன காலமெல்லாம் அவர்கள் வாயினின்று ஒரு ஆத்திரமான சொல்லாவது அவர்கள் சரீரத்தினால் கடுமையான செயலாவது உண்டானதில்லையென்று மிஸ்டர் மைரன் பெல்ப்ஸ் "மாடர்ன் ரெவ்யூ"வுக்கு எழுதின வியாசத்தில் சொல்லுகிறார். அடக்கமும், பெரியோரிடத்தில் உபசாரமும் தெய்வ பக்தியும், பிராணிகளிடத்தில் தயவும் பெற்றார்களென்றால், இதைவிட அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய விலை பெற்ற பொக்கிஷம் என்ன இருக்க முடியும்?

இந்த குருகுல வாசத்தைப் போல தேசத்திலுள்ள மற்ற காலேஜ்களும் ஸ்கூல்களும் ஏன் செய்யக்கூடாது? நேர்த்தியான ஆரணியங்களும், அருவிகளும், நதிகளும் உள்ள மலைப் பிரதேசங்கள் பல தென்னிந்தியாவில் இருக்கின்றன. நீலகிரி, சேர்வராயன் மலை, கொடைக்கானல், குற்றாலம் இவைகள் போன்ற நேர்த்தியான தேக செள்க்கியமும் மனதுக்குச் சுகமும் கொடுக்கக்கூடிய மலைப் பிரதேசங்கள் இருக்கின்றன. வருஷத்துக்கு மூன்று மாதம் போல் பிள்ளைகளுக்கு விடுமுறை காலமிருப்பதால், அக்காலத்தில் யோக்கியரான நல்ல உபாத்தியாயர் ஒருவர் பிள்ளைகளிற் சிலரை அழைத்துக் கொண்டு இந்த இடங்களுக்குப் போய்ப் பார்த்து வந்தால், அவர்களுக்கு குருகுல வாசத்துப் பிள்ளைகளுக்குண்டான நன்மைகள் உண்டாகக் கூடுமே. நம் தேசத்துச் சிறுவர்கள் பலர் தேச சஞ்சாரம் செய்யாமலேயே முதுமையடைகிறார்கள். ஆகையால் அவர்களுக்குக் குறுகின புத்தியும், வீண் கர்வமும், அன்னியரிடத்தில் அவமதிப்பும், அனுபோலமின்மையும் உண்டாகின்றன. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் எந்த மலைப் பிரதேசமானாலும், அந்த இடத்தில் காலேஜ் பிள்ளைகள் வந்து தங்கி, பலவிதமாய் ஆனந்தமும் உற்சாகமும் மன உயர்வும் சரீரத்திடனும் பெற்றுப் போகிறார்கள். இப்படி விடுமுறை காலங்களில் மலைப் பிரதேசங்களில் போய் வசிப்பது அங்கு காலேஜ் பிள்ளைகளுக்கு வெகு பிரியமென்று சொல்லப்படுகின்றது. மூளை வேலை செய்து களைத்துப் போன பெரியோருக்கும் மலை வாசத்தால் சரீரமும், மனசும் களைப்பு நீங்கி, எப்போதையும்விட அதிகத் திடனையடைகின்றன. இந்தியப் பிள்ளைகளுக்கு இந்த நன்மைகள் கூடாவா? மேற்கண்ட உத்தம குணங்களைப் பெற்று, நம் சிறுவர்கள் குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் கேவலம் புஸ்தகப் பூச்சிகளாய் வளராமல், கை, கால், காது, வாய் முதலிய அவயவங்களும் அதனதன் சேஷ்டைகளுக்கு உற்ற வசதிகள் பெற்று, அவைகள் செய்யும் உத்தமமும், பரிசுத்தமுமான் வேலைகளால் மனதுக்கு ஞானமுண்டாகி, ஆண்மையும், அறிவும் பெற்ற உத்தம புருஷர்களாகவும், யோக்கியதையும் பரோபகாரச் சிந்தையும் உள்ள பிரஜைகளாகவும் முன்வர வேண்டும். 

ஆசாரத் திருத்த வியாசங்கள். Part II

                                     
                                            by ஜி.சுப்பிரமணிய ஐயர். 
                                   பண்டிதர்கள் என்ன சொல்லுகிறார்கள்.

திருவையாற்றில் 1913ஆம் வருஷம் ஜனவரி மாதம் கூடின பரிஷத் என்று வடமொழியிற் சொல்லப்படும் பிராமணப் பண்டிதர்களின் சபையைப் பல அமிசங்களில் காலவேற்றுமையைக் குறிக்கும் அடையாளமாகக் கொள்ள வேண்டும். போன வருஷம் காஞ்சிபுரத்தில் இதேமாதிரியாய் ஒரு பண்டித பரிஷத் கூட்டப்பட்டது. ஆனால் அந்த பரிஷத்துக்குப் பல பண்டிதர்கள் பலவிடங்களிலிருந்து வந்திருந்த போதிலும், அது ஒழுங்காய் நடைபெறாமல், வந்திருந்த பண்டிதர்களிற் சிலர் மனவருத்தத்துடன் கலைந்து போனார்கள். 

இந்த வருஷமும் பரிஷத்தில், சுமார் 120 பண்டிதர்கள் திருவையாற்றுக்கு அருகிலுள்ள இடங்களிலிருந்தும், சென்னையிலிருந்தும், பங்களூரிலிருந்தும், ஜாம்நகர், பெளநகர், தார்வார், கோலாப்பூர் முதலான தூரஸ்தலங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். ஹிந்து சமூகத்தின் ஆசாரங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் பண்டிதர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து மனவருத்தமில்லாமல் சமாதானமாய்த் திருத்தங்களைப் பற்றி விவகரித்தார்கள். இவர்கள் ஒரே விதமான அபிப்ராயம் சொல்லவில்லை யென்பது ஆச்சரியமல்ல. நமது பூர்வீக சாஸ்திரங்களைத் தற்கால அவசியங்களுக்குப் பொருந்தினவைகளாய்ச் செய்வதில் பண்டிதர்கள் ஒரே விதமாய் அபிப்ராயப்படுவது சாத்தியமல்ல. தற்காலத் தேவைகளை உணர்ந்து அத்தேவைகள் பூர்த்தி செய்யப்படா விட்டால் தேசத்தின் அபிவிர்த்திக்குப் பெருந்தடையா யிருக்குமென்று தீவிரமான நம்பிக்கையுடையவர்களுக்கு மட்டும் சாஸ்திரங்களையும் தற்காலத் தேவைகளையும் ஒத்திருக்கும்படிச் செய்யத் தோன்றும். பழைய நுல்களையே படித்த பண்டிதர்களுக்கு இம்மாதிரி தேசாபிமானம் உண்டாவது எதிர்பார்க்கக் கூடியதல்ல. அவர்களுக்குச் சரித்திரம் தெரியாது. தேசத்து முற்கால தற்கால நிலைமைகளையும் அறிந்தவர்களல்ல. இந்தியாவின் பிற்கால நிலைமைக்கு எவைகள் அவசியமோ, அவைகளைப் பற்றியும் அவர்கள் சிந்தித்தவர்களல்ல. உலகத்தில் பற்பல தேசங்களில் நேரிட்டுக் கொண்டிருக்கும் பிரமாதமான வேற்றுமைகளும், புதுமைகளும் இன்னவென்று அவர்கள் அறிய முயறவர்களல்ல வென்றும் நாம் சொல்ல வேண்டியதில்லை. 

ஆகையால் கேவலம் புஸ்தகப் பூச்சிகளாய் இருந்த விடத்திலேயே இருந்து லோக விவகாரங்களை அறியாத பண்டிதர்களுக்கு இந்தியாவுக்குத் தற்காலம் வேண்டிய மாறுதல்களும் புதுமைகளும் தெரியாமலிருப்பது ஆச்சரியமல்ல. சமுத்திர யாத்திரை செய்வதும், பெண்கள் பெரிய மனுஷியான பிறகு விவாகம் செய்வதும் நாம் எல்லோரும் புண்ணிய பூமியென்று அன்புடன் கருதும் இத்தேசத்தின் பிற்கால க்ஷேமத்துக்கு இன்றியமையாவென்பதை அறியாமல் விரோதமாய் அபிப்பிராயப் பட்டார்கள். வாஸுல்கம் (வரதட்சணை) மட்டும், அதாவது பெண்கள் விவாகம் செய்யப்படும் போது மாப்பிள்ளைகளுக்குப் பணங் கொடுக்கும் வழக்கம் மட்டும், சாஸ்திர விரோதமென்று ஒரே மனதாய்ச் சொன்னார்கள். இப்படிச் சொன்னது அனுபோகத்தில் எவ்வளவு பலனைக் கொடுக்குமோ தெரிய வேண்டும். இவர்களுடைய அபிப்பிராயத்தை விட, பிள்ளைகளே பெண்களிடத்திலிருந்து பணம் வாங்குவதில்லையென்று விவாகத்திற்கு முன்னால் நிச்சயம் செய்து கொண்டால் அதனால் அதிகப் பலன் விளையுமென்று நினைக்கிறோம்.

திருவையாற்றில் கூடின பண்டிதர்களில் பெரும்பாலார் திருத்தங்களுக்கு விரோதமாய் இப்போது அபிப்பிராயப்பட்ட போதிலும், இப்பண்டித சபை மாதிரி பிரதி வருஷமும் அல்லது அடிக்கடியாவது சபை கூடி அவசியமான ஆசாரங்களைப் பற்றி கவனிப்பார் களானால் சில வருஷங்களுக்குள் இத்திருத்தங்கள் அவசியமென்று தெரிந்து கொள்வார்கள். பண்டிதர்களுடைய அபிப்பிராயம் எப்படியிருந்தாலும், திருத்தங்கள் நடந்து கொண்டேயிருக்கும். பண்டிதர்கள் விரோதமாயிருக்கிறார்களென்று அன்னிய தேசம் போவது நிற்காது. பெண்களுக்கு விவாக வயதும் உயர்ந்து கொண்டே வருகிறது.

ஹிந்து சமூகத்தில் பண்டிதர்கள் ஒரு பொருட்டான வகுப்பாகக் கருதப்பட வேண்டுமானால், அவர்கள் ஆங்கிலங் கற்று முன் சென்று கொண்டிருக்கிறவர்களுடன் ஒத்து செல்ல வேண்டும். பண்டிதர்களுக்காக தேசம் நின்ற நிலையில் இருக்கப் போவதில்லை. உலகமெல்லாம் முன்சென்று கொண்டிருக்க இந்தியா மட்டும் பின்னிற்க இசையாது. முற்காலத்தைப் போல் இந்தியா தனியான தேசமாய் உலகத்து மற்ற தேசங்களுடன் சம்பந்தப்படாத தேசமாயில்லை. மற்ற தேசங்களுடன் இந்தியாவுக்கு சம்பந்தம் நெருங்கி வருகிறபடியால், மற்ற தேசங்களைப் போல் இந்தியாவும் முன் செல்ல முயலும். இங்கிலாந்தில் மட்டும் இப்போது சுமார் இரண்டாயிரம் இந்தியப் பிள்ளைகள் படிக்கிறார்களென்றால், அங்கும் மற்ற தேசங்களிலும் படிப்புக்காகவும், தொழிலுக்காகவும், வேறு காரியங்களுக்காகவும் அன்னிய தேசங்களுடன் பழக்கமும் சம்பந்தமும் பெறும் இந்தியர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டுமென்று பண்டிதர் அறியக் கடவர். இந்தப் பெரும் சம்பவத்தையறிந்து, பண்டிதர்கள் அதற்கொத்தபடி நடந்தாலன்றி அவர்கள் செல்வாக்கற்றுப் போவார்களென்பதை நிச்சயமாய் நம்ப வேண்டும். 

மேலும் இப்போது ஆங்கிலங்கற்ற பண்டிதர்கள் சிலர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். திருவையாற்றுக் பரிஷத்தில் ஒரு பண்டிதர் சமுத்திர யாத்திரை செய்வதற்கு அனுகூலமாகச் சில நியாயங்கள் சொன்னார். கிருஷ்ணன் துவாரகையில் வசித்த போது அவரைப் பார்க்கப் பிராமணர் சமுத்திரம் தாண்டிச் செல்லவில்லையா? மர்மகோவா என்ற இடத்தில் பிராமணர் கப்பல் யாத்திரை செய்தார்களென்று எழுதியிருக்கும் சிலாசாசனம் இல்லையா? நரேந்திரனாகிய சக்கரவர்த்தி (சுவாமி விவேகானந்தர்) இங்கிலாந்தில் வசிப்பதால் அவரைத் தரிசிக்கப் பிராமணர்கள் செல்லுவது கடமையல்லவா? இவ்விதம் இந்தப் பண்டிதர் தர்க்கிறார். இவ்வாறு தற்காலத் திருத்தங்களுக்குச் சாதகமாகத் தர்க்கிக்கும் பண்டிதர்கள் இனி அதிகமாவார்கள். பண்டிதர்கள் சிறிது ஆங்கிலங் கற்றவர்களா யிருந்தாலும், அல்லது ஆங்கிலம் கற்றவர்களுடன் பழகினவர்களாயிருந்தாலும், திருத்தங்களின் அவசியத்தை யுணர்ந்து பேசுவார்கள். பழைய காலத்துப் பண்டிதர்களும் மடாதிபதிகளும் சமூகத் தலைவர்களின் மதிப்பை பெற்றிருக்க வேண்டுமானால் அவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை மாற்றி புது நாகரிகத்துக்கு ஒத்தவாறு அபிப்பிராயங்கள் கொள்வது அவசியமாகும்.

Friday, July 24, 2015

Kaalabhairava Ashtakam

ஆசாரத்திருத்த வியாசங்கள். பகுதி 1.

                              
                                       இரண்டு பெரியோரின் அபிப்பிராயங்கள்.

மிஸ்டர் ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் செய்த பிரசங்கம். 1910ஆம் வருஷம் ஏப்பிரல் மாசம் சென்னை சர்வகலா சங்கத்தார் வித்யா பட்டங்கள் கொடுக்கக்கூடின போது, மிஸ்டர் ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் செய்த சிறந்த பிரசங்கம் நீண்ட பிரசங்கமாயிருந்தாலும், அதில் அவர் ஒரே விஷயத்தைப் பற்றித்தான் விசேஷமாய்ப் பேசினார். நமது காலேஜ்களில் பிள்ளைகள் பெறும் கல்வியில், ஆஸ்திக்ய பக்தியுண்டாகும்படி அவர்கள் கற்பிக்கப் படுவதில்லையென்று தெரிந்தவர் பலர் குறை சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் சென்னையில் கிறிஸ்தவ மதாசாரியரான லார்டு பிஷப் அப்படியே குறை சொன்னார். அப்படி அவரும் மற்றவர்களும் சொல்லுவதைத் தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், ஆங்கிலப் படிப்பினால் ஆஸ்திக்ய புத்தியும், மதாபிமானமும் கிளர்ச்சி பெற்று வருகின்றனவேயன்றிக் குறைந்து போகவில்லை என்றும் மிஸ்டர் ஜஸ்டிஸ் ரஹீம் வாதித்துப் பேசினார்.

இதற்குத் திருஷ்டாந்தங்களாக, மகமதியருள் "ஆலிகர் நிகழ்ச்சி" ஒன்று புதிதாய்த் தோன்றியிருப்பதையும், ஹிந்துக்களில் "பிரம்ம சமாஜம்" போன்ற நவீன மதக் கொள்கைகள் தோன்றியிருப்பதையும் சொன்னார். பொதுவாய், மகமதியர் ஹிந்துக்கள் இவ்விரு வகுப்பாரும் பிரிட்டிஷ் ராஜாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னால், தங்கள் தங்கள் மதாசாரங்களில் எவ்வளவு பற்றும் உற்சாகமும் கொண்டிருந்தார்களோ, அவைகளை விட இப்போது அதிகமாகவே கொண்டிருக்கிறார்கள். மதப் பயிற்சியும், ஒழுக்கப் பயிற்சியும் வித்தியா சாலைகளில் மாத்திரம் பிள்ளைகள் பெறவேண்டிய தில்லை. அவரவர் குடும்பங்களிலும் பெறுகிறார்கள். மகமதியக் குடும்பங்களில் பிள்ளை "கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை" என்ற வேதவாக்கியத்தை எப்போதும் காதிற் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். எந்தக் காரியம் செய்தாலும் கடவுளை நம்பியே செய்கிறார்கள். சரீர கிலேசத்தின் பொருட்டு வருஷத்துக்கு ஒரு மாசம் விரதம் கொண்டாடப் படுகின்றது. தான தர்மங்களும் செய்யப்படுகின்றன. இவ்வாறே, ஹிந்து சிறுவர்களும் அவர்கள் குடும்பங்களிற் பயிற்சி பெறுகிறார்கள்.

இவ்வாறு பயிற்சி பெறும் சிறுவர்கள் காலேஜ்களில் மேல்நாட்டு லெளகிக சாஸ்திரங்களைக் கற்கும்போது, தாங்கள் வீட்டிற் கற்பதையும் காலேஜ்களில் கற்பதையும் சமரஸப்படுத்திக் கொள்கிறார்கள். எப்போது கல்வியால் புத்தி பயிற்சி பெறுகின்றதோ, அப்போது மதாபிமானமும் நவீன வேகத்தை அடைகின்றது. அவ்வாறே இந்தியாவில் ஆதிமுதல் மனக் கிளர்ச்சியும் மதக் கிளர்ச்சியும் ஒன்றாகவே தோன்றி வந்திருக்கின்றன. ஒன்று மறைந்த காலங்களில் மற்றொன்றும் மறைந்து போயிருக்கின்றது. ஒன்று தோன்றின காலங்களில் மற்றொன்றும் தோன்றி வந்திருக்கின்றது. ஆகையால் தற்காலம் மேற்றிசை நாகரிகத்தை நாம் அங்கீகரித்து, நாம் எல்லா வழிகளிலும் புதுக் கிளர்ச்சியைக் காட்டி வரும்போது, பூர்வீக சனாதன தர்மங்களில் நம்பிக்கையும் அன்பும் குறையாமல் அதிகப்பட்டு வருகின்றன. ஆகையால், லார்டு பிஷப்பும் மற்றவர்களும் சொல்லுவது தமக்குச் சம்மதமில்லை. சென்னை சர்வகலா சங்கத்தார் நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் கல்வியானது நாஸ்திக்கியத்தை உண்டு பண்ணுகிறதென்று தாம் நம்பினவராயிருந்தால், அந்தச் சமயத்தில் பிள்ளைகளைப் பார்த்துப் பிரசங்கம் செய்ய ஒப்புக் கொண்டிருக்க மாட்டாரென்று ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் சொன்னார். 

இப்படிச் சொன்னதெல்லாம் பெரும்பான்மையும் சரி. தற்காலம் ஹிந்து ஜனங்களுக்குள் மதாபிமானம் புதிதாயுண்டாகி வருகிறதென்பது உண்மை. உயர்ந்த ஆங்கிலக் கல்வி கற்ற சிலர், நமது பூர்வீக மதாசாரங்களைச் சோதித்து அவைகளின் உட்கருத்துக்களை அறிந்து, அவைகளில் நம்பிக்கை பாராட்டி வருகிறார்கள். சுமார் 25 வருஷங்களுக்கு முன்னால், ஆங்கிலம் கற்ற ஹிந்துக்கள் சிறிதும் பாரமார்த்திக புத்தி இல்லாமல் அர்த்த பராளாய்ப் பொருள் தேடுவதிலேயே நோக்கங் கொண்டவர்களா யிருந்தார்கள். இப்போது இந்த இயல்பு சிறிது மாறி வருகிறதென்பதிற் சந்தேகமில்லை. நம் முன்னோர்களின் பெருமைகளை அறியாமல் அவர்கள் இயற்றி வைத்துப் போன நூல்களையும் அவர்கள் விதித்திருந்த தருமங்களையும் அசட்டை செய்து, மேல்நாட்டு நாகரிகமே சரியென்று நம்பியிருந்தது போய் சிலர் அந்த நூல்களையும், தர்மங்களையும் அறிந்து முன்னோருடைய பெருமைகளை மதித்து வருகிறார்கள். ஆனால் இதற்குக் காரணம், ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் சொன்னது போல், காலேஜ்களிற் கற்பிக்கும் கல்வியல்ல வென்பது நமது அபிப்பிராயம். இந்தக் கல்வியினால் சிறுவர் மனதிலுண்டாகும் உணர்ச்சியானது நாஸ்திக்கிய புத்தி கொண்டதாயும், பெரியோரிடத்தில் மதிப்பில்லாததாயும், பிரத்தியட்சமே பிரமாணம், பரோட்சம் கற்பனை என்பதாயும் இருக்கின்றது. இந்த உணர்ச்சியினாலேயே நம் சிறுவர்கள் முன்னோர்களினுடைய வழிகளை நீக்கித் தாறுமாறான புது வழிகளிற் பிரவேசிக்கிறார்கள். பெரும்பான்மையோரும் முதுமைப் பருவம் வந்தபோதுங் கூட இவ்வழிகளிலேயே நிற்கிறார்கள். சிறுபான்மையோர் நம் தேசத்தில் இப்போது புதிதாய்த் தோன்றி வரும் தேசாபிமானத்தால் தூண்டப்பட்டு முன்னோரது சரித்திரத்தை அறிய விரும்பி, நமது மதத்திலும், ஆசாரங்களிலும் மதிப்புக்குரிய பாகங்கள் இருக்கின்றனவென்று தெரிந்து கொள்ளுகிறார்கள். இந்தப் புது தேசாபிமானத்துக்கு, ஆங்கிலக் கல்வி ஒருவாறு காரணமென்று சொல்ல வேண்டுமாயினும், அது முக்கிய காரணமல்ல. இந்தப் படிப்பினால், நமக்கு உண்டாகிவரும் அன்னிய தேசத்தாருடைய சரித்திர ஞானமும் அனுபோகமுமே முக்கிய காரணம். உலகத்தாரைப் போல் நாமும் உயர்ந்த தன்மையை அடைய வேண்டுமென்ற விருப்பமே இந்தப் புதிய தேசாபிமானத்துக்கு முக்கிய காரணம். ஆங்கிலப் படிப்பினால் இந்தத் தேசாபிமானம் உண்டாயிருக்கிற தென்று சொல்லக் கூடுமாயினும், அந்தப் படிப்பு மதப் பயிற்சியும், ஒழுக்கப் பயிற்சியும் கொண்டு ஆஸ்திக்ய பக்தி உண்டாக்கக் கூடியதா யிருக்குமாயின், இந்தத் தேசாபிமானம் குறையுமென்று யார் சொல்லுவார்கள். அப்போது சிறுவர்கள் அடக்கமும், பெரியோரிடத்தில் மதிப்பும், பெரியோர் காட்டின வழிகளில் நோக்கமும் கொண்டவர்களாவார்கள்.

மகமதியச் சிறுவர்கள் அவர்கள் குடும்பங்களிற் பெறும் மதப் பயிற்சியைப் பற்றி மிஸ்டர் ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் சொன்னார். ஹிந்துக் குடும்பங்களிலும் அவ்விதப் பயிற்சிக்கு இடம் அமைக்கப் பட்டிருந்தாலும் அது இப்போது இல்லாமலே போய்விட்டது. ஹிந்துச் சிறுவர்கள் தங்கள் வீடுகளில் இப்பயிற்சியை எவ்விதமாயும் பெறுவதில்லை. பெரியோரும் செய்து காட்டுவதில்லை. செய்து காட்டும் பெரியோரைச் சிறுவர் மதிப்பதுமில்லை. இந்த விஷயத்தில் மகமதியக் குடும்பங்களுக்கும் ஹிந்துக் குடும்பங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதுபோல் காணுகின்றது. சிறுவர்கள் பிற்காலத்தில் மத ஆராய்ச்சி முதலியவைகள் செய்வதற்குக் காலேஜ் படிப்பினால் வசதிகளும் உண்டாவதில்லை. தமிழிலாவது சமஸ்கிருதத்திலாவது ஞானமில்லாமல் வளரும் சிறுவர்கள் இந்த ஆராய்ச்சிகளை எப்படிச் செய்வார்கள்? இப்போது நடந்து வரும் வித்தியாப்பியாச முறையால் ஹிந்து நாகரிகத்தின் பெருமைகள் சில காலத்திற்குள் மறைந்து போகுமென்று சிலர் பயப்படுவது முற்றிலும் காரணமற்றதல்ல.Thursday, July 23, 2015

"ஆசாரத்திருத்த வியாசங்கள்"

                             
                                              ஜி.சுப்பிரமணிய ஐயரின் முன்னுரை
                   (அவருடைய பழந்தமிழ் நடையின் சாரம் இன்றைய எளிய நடையில்)

இந்தத் தலைப்பில் "தி இந்து", "சுதேசமித்திரன்" ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் தொடர்ந்து இங்கே பார்க்கலாம். இந்த கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிய நூலுக்கு ஐயர் அவர்கள் ஒரு முன்னுரை வழங்கியிருக்கிறார். அந்த முன்னுரை நூறு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கத்திலிருந்த தமிழ்நடையில் இருப்பதால் இன்று படிப்பவர்களுக்குச் சற்று சிரமமாகவும், சில சொற்களைப் புரிந்து கொள்ளமுடியாமலும் இருக்கலாம். ஆகையால் முன்னுரையின் சாரத்தை மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு பின்னர் ஒவ்வொரு கட்டுரையையும், அவர் எழுதிய தமிழ் நடையிலேயே படிக்கலாம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ் நடையையும் நாம் படித்ததாக இருக்கட்டுமே! இனி ஐயர் அவர்களின் முன்னுரையின் சாரம்:


"
ந்த நூலிலுள்ள கட்டுரைகள் நம் மக்களின் பழக்கவழக்கங்கள் இப்போதைய நிலைமைக்குத் தக்கவாறு மாறவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துவதாகவும், இந்தியராகிய நமக்குச் சிறந்த பண்புகள் மேலோங்கி பெருமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எழுதப்பட்டவை. இந்தக் கட்டுரைகள் பெரும்பாலும் அன்றைய "சுதேசமித்திரன்" இதழ்களில் தலையங்கமாக வெளிவந்தவை. 

அரசியல் குறித்தோ, தொழில்துறை குறித்தோ இவற்றில் சொல்லப்படவில்லை. அவைகளும் நாட்டு நன்மைக்கு அவசியமென்பதால் அவற்றை வேறு யாரேனும் எழுத வேண்டுமென்பது நமது எண்ணம். நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் பழக்க வழக்கங்களும், குணாதிசயங்களும் அவ்வப்போது காலத்துக்குத் தக்கபடி மாற வேண்டியது அவசியம். மேலை நாடுகளின் வரலாறுகளைப் பார்க்கும்போது அந்த நாட்டு மக்கள் தங்கள் நாடு மாறிவருவதற்கேற்பவும், ஏனைய நாட்டு மக்களைப் போலத் தங்களையும் மாற்றிக் கொள்வதையும் காண்கிறோம். குறிப்பாக ஜப்பான் மக்கள் இப்படித்தான் மாறியிருக்கிறார்கள். இந்தியர்களைவிட நாகரிகமும், வல்லமையும் அதிகமாகப் பெற்ற நாடுகளைப் பின்பற்றி நாமும் பழக்க வழக்கங்களையும், குணங்களையும் மாற்றிக்கொண்டு அவர்களைப் போல வாழ வேண்டும். இப்படிச் சொல்வதால், இந்தியர்கள், ஐரோப்பியர்களைப் போல உடை உடுத்தல், உணவு உண்ணுதல், வீட்டினுள் அவர்களைப் போல நடந்து கொள்ளுதல் இவற்றைப் பின்பற்ற வேண்டுமென்பது நம் கருத்தல்ல. புதுமைகளை ஏற்றுக்கொண்ட நம்மவர்களிலே சிலர் நம்மைப்பார்த்து இழிவாகவும், மனம் புண்படப் பேசியும் வருந்தச் செய்கிறார்கள். இப்படிச் சிலர் நடந்து கொள்வதால் சீர்திறுத்தங்களை வேண்டுவோரை சாமானிய மக்கள் தவறாகக் கணக்கிடுகிறார்கள்.

அயல் நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்தவர்களும், நாகரிகத்தை அனுசரித்து முன்னேறிய நம்மவர்களும், சாதாரண மக்களுடைய மனங்களைப் புண்படுத்தாமல் சீர்திறுத்தங்களை போதிக்க வேண்டும். நமது இந்திய தேசம் முன்பு இருந்தது போல வெளித்தொடர்புகள் இல்லாமல் தனித்துவத்துடன் இருந்தது போல இப்போதும் இருக்கவேண்டு மென்று  நினைக்கக்கூடாது. பிரிட்டன் நம்மை  ஆண்டு கொண்டிருப்பதால் நாம் அதனுடன் பலவிதங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுபோலவே ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டு நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, நாமும் அவர்களைப் போல பல வழிகளில் முன்னேறி நாகரிகமும், வளமும் அடைய முயலவேண்டும். அப்படி ஆகவேண்டுமானால், நாமும் நமது பழைய பழக்க வழக்கங்களை கைவிட்டு புதுமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாமும் அவர்களுக்குச் சமமாக ஆகமுடியும். அப்படியின்றி ஏனைய நாடுகள் முன்னேறிச் செல்ல, நாம் தனி வழியில் பழைமையில் தோய்ந்திருந்தால் சில காலத்திற்குள் நாம் நாசமடையும் வாய்ப்புகள் நேர்ந்து விடும். 

தற்காலத்தில் இந்தியா தேசத்தில், முகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் ஆகியோர், இதில் முக்கியமாக முகமதியர் நாட்டில் செல்வாக்கையும், அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்க முயன்று வருகின்றனர். அப்படிச் செய்வது முற்றிலும் அவசியம், தவறு இல்லை. ஆனால், நாம் சொல்லவருவது, நாமும் அவர்களைப் போல நம்முடைய சுபாவமான மந்த கதியை விட்டுவிட்டு தீவிரகதியைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இந்துக்களாகிய நாம் பிற்பட்டு நிற்காமல், மற்றவர்களைப் போல சரிசமானமாக தோளோடு தோள் நின்று இந்தியாவை வலுவான தேசமாக ஆக்க முடியும்.

இப்படிப்பட்ட கருத்துக்களால் உந்தப்பட்டு, நமது அனுபவத்தினாலும், அறிவுக்கு எட்டிய வகையில் புதிய பாதைகளை நம் தேசத்தாருக்குச் சொல்ல வேண்டு மென்பதற்காக இந்த நூலை பிரசுரம் செய்கிறோம். நம்முடைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்குக் கல்வி அறிவு கிட்டும்படி செய்து, ஆணுக்கு நிகரான சுதந்திரமும் கொடுத்து சிறந்த இல்லத் தரசிகளாகவும், நல்ல குடும்பத் தலைவிகளாகவும் ஆக்குவதோடு, நாட்டு நடப்பில் அக்கறை கொண்டு ஆண்களுக்கு நிகராக தேசசேவையிலும் ஈடுபடுத்த வேண்டும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருமே அவர்களுடைய ஆற்றல், அறிவு இவற்றை விரிவு படுத்திக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் இருந்திட வேண்டும். நாட்டின் நலன் கருதி, தொழில்களைப் பெருக்கி, ஊக்கம், ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கை ஆகிய பெருங்குணங்களைப் பெற வேண்டும். அன்னிய நாடுகளுக்கெல்லாம் இந்தியர்கள் அதிக அளவில் சென்று வரவேண்டும். இருக்குமிடமே சொர்க்கம் என்று அறியாமையால் கூண்டுக்குள் பதுங்கிக் கொள்ளக்கூடாது. இதுபோன்ற செய்திகளை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்த தேச சேவை என்றும், உத்தமமான கைங்கர்யம் என்றும் நம்புகிறோம்." -- ஜி.சுப்பிரமணிய ஐயர்.

மேற்கண்ட பகுதி அவருடைய முன்னுரையின் தற்கால நடையில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியாகும். இனி தொடர்ந்து அவருடைய கட்டுரைகளை (வியாசங்களை) படிக்கத் தொடங்குங்கள். சில சொற்கள் இப்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. பள்ளிக்கூடங்களில் எழுதப்படும் கட்டுரைகளை வியாசங்கள் என்பர். அப்போதெல்லாம் பத்திரிகையில் எழுதப்படுவனவும் வியாசங்கள் என்றே குறிக்கப்பட்டன; பாரதியும் அப்படித்தான் எழுதுகிறார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர்


தமிழ்நாட்டில் ஏராளமான சுப்பிரமணிய ஐயர்கள் இருந்திருக்கிறார்கள்; எனினும் மகாகவி பாரதியாரை உலகத்துக்குக் காட்டியவர் எனும் பெருமைக்குரியவர்; தி ஹிந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி தேசபக்தியைத் தூண்டியவர்; சமூக சீர்திருத்தவாதி; உடல் நோயையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தேச சேவையில் ஈடுபட்டவர் இந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மட்டும்தான். அவர் விதவைகள் மறுமணம், பால்ய வயதுத் திருமண எதிர்ப்பு, பெண் கல்வியின் அவசியம், பெண்கள் சுதந்திரம் போன்ற பல விஷயங்களில் உரக்கக் குரல் கொடுத்தவர். அவற்றைப் பல கட்டுரைகளிலும் கொடுத்திருக்கிறார். இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரிய இந்த ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிய சில விவரங்களை இங்கே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

நமது தேசத்தில் மக்களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை இன்றைய அவசர சூழலில் நாம் நினைக்க நேரம் இருப்பதில்லை; இளைய தலைமுறையினரிடம் இவர்கள் பெயரைச் சொன்னால், அவர்களுக்குத் தெரிவதில்லை. பழம்பெரும் மாளிகையில் வசிக்கும் ஒருவர் தன் இளவயது மகனிடம், இந்த மாளிகை யார் கட்டியது தெரியுமா? என்னுடைய பாட்டனார் அந்தக் காலத்தில் திவானாக இருந்தவர், அவர் கட்டிய மாளிகை இது. இப்போதும் எப்படி உறுதியோடும், அழகோடும் இருக்கிறது பார் என்று சொல்வதைப் போல, நாமும், நம் வாரிசுகளிடம், இன்றைய பாரதம் இப்படி உருவாகத் தங்களுடைய அனைத்து சக்திகளையும் செலவிட்டுப் பாடுபட்ட நமது முன்னோர்களுடைய பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டாமா? விதண்டாவாதம் பேசும் ஒருவர் ஒரு இழையில் வீம்புக்கு எழுதுகிறார், பாரதியாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியவில்லை, அதனால்தான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி வேலையிலிருந்து நீங்கி சென்னைக்கு வந்தார் என்கிறார். எத்தனை அபத்தமான வாதம்? இந்த அபவாதத்தைத் தெரிந்தோ தெரியாமலோ சில பண்டித சிகாமணிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனை மறுத்து வலுவான வாதங்களை முன்வைக்கவென்று 'திருவையாறு பாரதி இயக்கம்' தனது வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் போது, ஓராண்டு முழுதும், ஒவ்வொரு மாதமும் ஒரு அறிஞரின் சொற்பொழிவை வைத்து அதனை "பன்னிருவர் பார்வையில் பாரதி" என்ற ஒரு நூலாகவும் வெளியிட்டது. அதில் ஒரு மாதம் தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் அமைந்திருக்கும் திருவருட் கல்லூரியின் முதல்வராக இருந்த பேராசிரியர் இரா.கலியபெருமாள் "தமிழிலக்கிய வழியில் பாரதியார்" எனும் தலைப்பில் பேசினார். அதில் மகாகவி பாரதியாரின் இலக்கண, இலக்கிய ஞானம் பற்றியும், அவருடைய 'விநாயகர் நான்மணி மாலை'யில் அவருடைய இலக்கண ஞானம் மிளிர்வதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். 

இந்தக் கட்டுரையில் முதலில் ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிவிட்டு, அதன் பின்னர் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் "ஆசாரத்திருத்த வியாசங்கள்" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் பார்க்கலாம். இந்த "ஆசாரத்திருத்த வியாசங்கள்" எனும் அவருடைய நூல் 1914இல் முதன் முதலில் வெளியாயிற்று. அதன் பழைய பிரதியை தஞ்சை பாரதி சங்கத்தின் திரு வீ.சு.இராமலிங்கம் பாதுகாத்து வைத்திருந்து டிசம்பர் 2003இல் ஒரத்த
நாடு மருதம் பதிப்பகத்தின் மூலம் மீள்பதிப்பு கொண்டு வந்தார். அதிலிருந்து ஒரு சில கட்டுரைகளை இங்கே பார்ப்போம். முதலில் ஐயரின் வாழ்க்கைக் குறிப்புகள் அமரர் வீ.சு.இராமலிங்கம் மீள்பதிவு செய்த "ஆசாரத்திருத்த வியாசங்கள்" நூலின் முன்னுரையிலிருந்து:

"ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் 19-1-1855 அன்று திருவையாற்றில் பிறந்தார். தந்தையார் வக்கீல் கணபதி ஐயர், தாயார் தனம்மாள். திருவையாறு தாலுக்கா பள்ளியிலும், பின்னர் தஞ்சாவூரில் இருந்த எஸ்.பி.ஜி. மிஷன் பள்ளியிலும் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் வென்றார். இரண்டு ஆண்டுகள் தஞ்சாவூர் எஸ்.பி.ஜி.கல்லூரியில் படித்து எஃப்.ஏ. யில் தேர்வு பெற்றார். இதுதான் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் கல்வி நிலையங்களானது. அவருடைய பதிமூன்றாம் வயதில் தந்தை காலமானார். இவர் மீனாட்சி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1874ஆம் ஆண்டில் சென்னை சென்று அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து அவர் சர்ச் ஆஃப் ஸ்காட்லாண்ட் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் வேலை; அந்த சந்தர்ப்பத்தில் அவர் பி.ஏ. தேர்வு பெற்றார். அவரை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்ற அழைத்தனர். அவரும் அந்தப் பணியை ஏற்றுச் சிறப்புற செய்து வந்தார். கல்விப் பணியே வாழ்நாள் பணியாக அவர் கருதி திருவல்லிக்கேணியில் ஆரியன் உயர்நிலைப் பள்ளி எனும் பள்ளியைத் தொடங்கினார். அன்றைய நாளில் மிகச் சிறந்த கல்வியை அவருடைய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கினார்.

1878இல் முத்துசாமி ஐயர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் ஒருவர் நீதிபதியாக நியமித்தது அதுதான் முதல் தடவை என்பதால், ஆங்கில பத்திரிகையான 'தி மெட்ராஸ் மெயில்' ஒரு கருப்பர் எப்படி நீதி வழங்க முடியும் என்று எழுதியதை ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவரைப் போல ஏராளமான இந்தியர்களும் கடுமையாக எதிர்த்தனர். நமக்கென்று ஒரு பத்திரிகை இல்லாததால் அல்லவோ, ஆங்கிலேயர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று கருதி ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து 1878இல் 'தி இந்து' எனும் பெயரில் ஒரு ஆங்கில இதழைத் தொடங்கினர். அதற்கு ஐயர் ஆசிரியர். அதன் பின்னர் 1882இல் அதாவது மகாகவி பாரதி பிறந்த ஆண்டில் 'சுதேசமித்திரன்' என்ற பெயரில் ஒரு தமிழ்ப் பத்திரிகையையும் தொடங்கினார். தமிழ்நாட்டில் பத்திரிகை தொழிலில் முதலில் வழிகாட்டியாக இவர் சிறப்பாக வாழ்ந்து காட்டினார். தொடர்ந்து அவர் அரசியலிலும், பத்திரிகை தொழிலிலும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய தேசிய இயக்கத்திலும் முன்னிலை வகித்து வந்தார்.

1885இல் பம்பாயில் கூடிய முதல் காங்கிரஸ் தொடக்கக் கூட்டத்தில் இவர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தின் முதல் தீர்மானமும் ஐயர் கொண்டு வந்ததுதான். இந்திய சுதந்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட இந்த காங்கிரசில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். அரசியல், சமூகம் ஆகிய துறைகளில் இவருடைய ஆர்வம் ஒரு புதிய இந்தியாவை நிர்மாணிக்க உதவியது எனலாம்.

ஜாதிப் பிரிவினைகளை அவர் எதிர்த்தார்; தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்காகப் பாடுபட்டார்; பெண் விடுதலைக்கு வித்திட்டவர் ஐயர் என்றால் அது மிகையில்லை; அந்தக் காலத்திலேயே அவர் விதவைத் திருமணத்தை ஆதரித்தார் என்றால் அதிசயிப்பீர்கள்; வாய்ச்சொல்லில் மட்டுமல்ல செயலிலும் அதைத் தன் குடும்பத்தில் தன் மகளுக்கே விதவைத் திருமணம் செய்துவைத்துப் புரட்சியைச் செய்தார். ஆம்! 1899இல் தன் விதவை மகளான சிவப்பிரியாவுக்கு மன்னார்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்குத் திருமணம் செய்வித்தார்.

அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவரைத் கொடிய தோல் நோய் பற்றிக் கொண்டது. உடலெங்கும் கட்டிகள் தோன்றி அது உடைந்து புண்ணாகி ஒரு தொழுநோயாளியைப் போலத் தோற்றமளித்தார். 1915இல் மகாத்மா காந்தி இவரைச் சந்தித்திருக்கிறார். அப்போது ஐயரின் உடலில் கசிந்த நீரைத் தன் மேல் வஸ்திரத்தால் துடைத்து ஆறுதல் சொன்னார் மகாத்மா. கொடிய நோய் அவரை 15-4-1916இல் 61ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீங்கிடச் செய்து விட்டது. 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதியாரை அடையாளம் கண்டு, தன்னுடைய சுதேசமித்திரனுக்கு உதவி ஆசிரியராக அழைத்துச் சென்ற ஐயரைப் பற்றி பாரதியார் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

"காலம் சென்ற 'சுதேசமித்திரன்' சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமிழ்நாட்டின் உயர்வுக்கு முக்கிய சாதனங்களாக அவர் என்னென்ன விஷயங்களைக் கருதினாரென்று எனக்கு நன்றாகத் தெரியும். அவருடைய உள்ளத்திலிருந்த மூல தர்மங்களை எனக்கு ஞாபகமுள்ள வரை இங்கெழுதுகிறேன்:

1. தமிழ் நாட்டார் விசேஷ அவசரங்கள் நேரிட்டாலொழிய மற்றபடி எப்போதும் தமிழிலே பேசவும், எழுதவும் வேண்டும்.கற்கும் கலைகளெல்லாம் தமிழ் வழியாலே கற்க வெண்டும்.

2. ஜாதி பேதங்கள் பாராட்டி நமக்குள்ளே அர்த்தமில்லாத உயர்வு தாழ்வுகள் கற்பிக்கலாகாது.

3. ஸ்திரீகளைக் கஷ்டப்படுத்தலாகாது. அவர்களுக்கு மேலான அறிவு தந்து மேன்மைப்படுத்த வேண்டும்.

4. வைஷ்ணவம், சைவம் முதலிய மத பேதங்களாலும், வடகலை, தென்கலை போன்ற உட்பிரிவுகளாலும், நமது ஜனங்களுக்குள் விரோதம் பாராட்டுதல் நியாயமில்லை. நாமெல்லோரும் ஹிந்துஸ்தானத்தின் குமாரர். அவரவர் கொள்கை அவரவர்க்கு. மதப்பிரிவுகள் காரணமாகத் தீராத வியாஜ்யங்கள் செய்வதும், கலகங்கள் நடத்துவதும் அறிவில்லாதோர் செய்கையாகும்.

5. உடை, உணவு முதலிய செளகரியங்களுக்கெல்லாம் நமது நாட்டுப் பொருள் கிடைக்கும்போது அன்னியர் பொருளை வாங்கக்கூடாது.

6. எப்பொழுதும் ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபடவேண்டும்.

இத்துடன் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை நிறைவு செய்துகொண்டு, அடுதடுத்து அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை மீள்பதிவு செய்ய விழைகிறேன். மாமனிதர், மகான் ஜி.சுப்பிரமணிய ஐயரைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தச் செய்தி எல்லா இளைஞர்களுக்கும் எட்ட வேண்டும்; அதுவே நம் பிரார்த்தனை.Monday, July 20, 2015

குழந்தைகளுக்கான பாடல்கள்

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டவும், உணவு ஊட்டவும் இந்தப் பாடல்களைப் பாடி குழந்தைகளை மகிழ்விக்கலாமே!

1. சாய்ந்தாடுதல்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு 
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளiயே சாய்ந்தாடு 
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு 
கனியே பாலே சாய்ந்தாடு.

2. கை வீசு 


கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
அப்பம் வாங்கலாம் கைவீசு
அமர்ந்து தின்னலாம் கைவீசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி யுண்ணலாம் கைவீசு
பழங்கள் வாங்கலாம் கைவீசு
பரிந்து புசிக்கலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு
தேரைப் பார்க்கலாம் கைவீசு
திரும்பி வரலாம் கைவீசு
கம்மல் வாங்கலாம் கைவீசு 
காதில் மாட்டலாம் கைவீசு.

3. காக்கா 
காக்கா வா

காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டுவா 
குருவி குருவி 
கொண்டைக்குப் பூக்கொண்டுவா 
கிளiயே கிளiயே 
கிண்ணத்தில் பால் கொண்டுவா
கொக்கே கொக்கே 
குழந்தைத் தேன் கொண்டுவா 
அப்பா முன்னே வாருங்கள் 
அழாதே யென்று சொல்லுங்கள் 


நிலாநிலா ஓடிவா 

1. 
நிலாநிலா வாவா 
நில்லாமே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா.
நடுவீட்டில் வையே
நல்ல துதி செய்யே
வெள்ளiக் கிண்ணத்தில் சோறு 
அள்ளiயெடுத்து யூட்டு