பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 9, 2015

27.மாதர் ‍- தமிழ்நாட்டு மாதருக்கு.

           இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண்மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில்வெளி நாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒருஉபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷபண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள்(அதாவது ஞான சாஸ்திரங்கள்); காளிதாஸன் முதலிய மஹாகவிகளின் காவியங்கள்; ராமாயணம், பாரதம்; பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் - இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய், அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்றஞானத் தெளிவும் நாகரீகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர். இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந் நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் ''இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்'' என்ற பொய்க் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும் பின்னிட்டு ரவீந்திரநாத தாகூர், ஜகதீச சந்திரவஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், ''அடா! இந்த ஹிந்துக்கள் நாகரீகத்திலும், அறிவிலும் இவ்வளவுமேம்பட்டவர்களா' என்று வியப்பெய்தினர்.

         தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்துகொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலீஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளிநாட்டாரின் எண்ணத்தையே உண்மையெனக் கருதி மயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால் இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலீஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்து விட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்து போய் அதோகதியில் விழுந்துவிடுமோ என்றுஅஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று. இப்படிப்பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமிவிவேகானந்தர் முதலானோர் தம்முடைய ஞான பராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலீஷ் படித்த சுதேச  தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரீகத்தில் நம்பிக்கை செலுத்துவராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர்,  முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக் கொண்டிருந்த போது தாமும் பழித்தவாறே,  இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கிய போது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர்.விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்ககர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் ஹான்களை நம்மவர் கவனிக்கவே யில்லை.  அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில் , அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணிவந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப் பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாகக் கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று.

             அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும், அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்தி படைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வருவார்களாயின், அதினின்றும்இங்குள்ள ஸ்திரீகளுக் கெல்லாம் மதிப்பு உயர்ந்துவிடும். இந்த விஷயத்தை ஏற்கெனவே நம்முடையமாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள்.வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதைஎழுதுகிறார்.  இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும்உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும், இந்த ஸ்திரீ இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தை யொட்டி அற்புதமான ப்ரஸங்கங்கள் செய்து சிறந்த கீர்த்திடைந்திருக்கிறார். மேலும், வங்காளி பாஷையிலே கவிதை யெழுதுவோராகிய ஸ்ரீமதி காமிநீராய், ஸ்ரீீமதி மன குமாரி தேவி, ஸ்ரீமதி அநங்கமோஹினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்று புகழ்ச்சியுரைகளுடன்  சிறிது காலத்துக்கு முன்பு ப்ரசுரம் செய்திருப் பதினின்றும்,  இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தி யேற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

       புனா நகரத்துச் சித்திர பண்டிதராகிய ஜனாப் பைஜீரஹ்மின் என்பவர் அமெரிக்காவின் ராஜதானியாகிய''நியூயார்க்'' நகரத்திற்குப் போய் சென்ற வருஷத்தில் அந்நகரத்துச் சிற்பிகளால் மிகவும் போற்றப்பட்டார். இவருடைய சித்திரங்களை அங்குள்ளோர் மிகவும் வியந்தனர். அஜந்தாவிலுள்ள குகைச்சித்திர வேலைகளின் ஆச்சரியத்தைக் குறித்து ஸ்ரீமான் பைஜீரஹ்மின் கொலம்பியா ஸர்வ கலாசங்கத்தாரின் முன்னே நேர்த்தியான உபந்யாஸம் புரிந்தார். இவருடன் இவருடைய மனைவியும் அங்கு சென்றிருந்தாள். இவர் ''இந்தியா தேசத்து சங்கீதம்'' என இங்கிலீஷில் ஒருபுத்தக மெழுதியிருக்கிறார். ஹிந்து ஸங்கீத சாஸ்திரத்திலும் வாய்ப்பாட்டிலும் நல்ல தேர்ச்சியுடையவர். இவர்அமெரிக்காவில் பல மாதர் ஸபைகளின் முன்பு ஹிந்து ஸங்கீதத்தைக் குறித்து பல உபந்யாஸங்கள் செய்தார். இடைக்கிடையே தம் உபந்யாஸக் கருத்துக்களை திருஷ்டாந்தப்படுத்தும் பொருட்டு நேர்த்தியான பாட்டுக்கள் பாடி அந்நாட்டினரை மிகவும் வியப்புறச் செய்தார். இங்ஙனம், தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வாராயின், அதினின்றும் இங்கே நம்முடைய ஸ்திரீகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும், தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்குக்கல்வித் தோணியே பெருந்துணையாம். எனவே, கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ் சகோதரிகள் இரவு   பகலாகப் பாடுபட்டு அவ்வத் துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயலவேண்டும். இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும்உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம். ஓளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப்பயிற்சி கஷ்டமாகுமா?  சற்றே ஊன்றிப் பாடுபடுவார்களாயின், தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்துவிடுவார்கள். அறிவு திறந்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிஸூலபமாய் விடும். எனவே, பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள்; தமிழ்ச் சகோதரிகளே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டு இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு காத்து நிற்கிறது.தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது! வந்து விட்டது;  நீங்கள் விடுதலை பெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மையுறும்.

சகோதரிகளே!

                தமிழ் நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது. ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்னதன்மை யுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின்,அதைக் கண்ணாடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம். அதாவது காவியம் முதலிய நூல்களேயாம். இங்கிலாந்து தேசத்தின் தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின், அதன், தற்கால நாகரீகத்தை ஒருவாறு அளவிடக் கூடும். எனவே, தமிழ் நாட்டின் புராதன நாகரீகத்தை அளவிட்டறிவதற்கு தமிழ் நூல்களே தக்க அளவுகோலாகின்றன.  இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல; அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்க்ருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.

                   தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல்முதலாக அகஸ்தியராலும் அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்நி(தொல்காப்பியர்) என்ற முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப் பட்ட தென்பது மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் ஸம்ஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கின்ற தென்பது மெய்யே எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒரு வேளை பின்னிட்டு மறைந்திருக்கக் கூடுமென்று நினைப்பதற்குப் பலஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும்,ஸம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்னாகவே, தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்ததரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள்காணப்படுகின்றன.

              ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிறஇடங்களிலும் காணப்படும் நாகரீகங்களுக் கெல்லாம்முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது  ஆர்ய நாகரீகம்.  அதாவது, பழைய ஸம்ஸ்கிருதநூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது இந்த ஆரிய நாகரீகத்துக்கு ஸமமான பழமை கொண்டது தமிழருடையநாகரீகம் என்று கருதுவதற்குப் பலவிதமான ஸாக்ஷ்யங்களிருக்கின்றன. ''ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்'' என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது. ''தமிழரும் ஆரியருமல்லாத ஜனங்களைக் கடவுள் பேச்சில்லாமலா வைத்திருந்தார்?'' என்று கேட்பீர்களாயின், மற்றச் சொற்களும் பல இருக்கத்தான் செய்தன. ஆனால், மனித நாகரீகத்தில்முதன் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும், இலக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்றபாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னே சமைந்தன. பல இடங்களில் இவை இயற்றின நடையையே முன் மாதிரியாகப் கொண்டன. அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப்பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முறையாக நாகரீகம்பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழையநாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்தியசெய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது.

             தமிழ் நாட்டு மாதராகிய என் அன்புக்குரியஸகோதரிகளே! இத்தனை பழமையும் மேன்மையுஞ் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரீகத்தைக் காட்டிலுங்கூட  ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆர்ய திராவிட நாகரீகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது.
இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்குங் கடமை உங்களைச் சேர்ந்தது. எங்ஙனம் எனில்,பொதுப்படையாக நோக்குமிடத்தே மனித நாகரீகங்கள்ஆண் மக்களின் உதவி கொண்டு பிறப்பிக்கப்படுகின்றன.அப்பால் பெரும்பாலும் பெண்களாலேயே காக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் மகம்மதிய நாகரீகம் வந்து ஹிந்து தர்மத்தைத் தாக்கிற்று. ஆனால், ஹிந்துதர்மம் அதிலுள்ள முக்கிய அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, அந்தத் தாக்குதலால் அழிவெய்தாமல், முன்னைக் காட்டிலும் அதிக சக்தியுடன் மிஞ்சி நின்றது. ஸமீப காலத்தில் ஐரோப்பிய நாகரீகம் இந்தியாவுக்குவந்து சேர்ந்திருக்கிறது. இதுவும் நமது நாட்டு நாகரிகத்துடன் நன்றாகக் கலந்து விட்டது. இனி இதன் விளைவுகளை நம் நாட்டாரின் அறிவினின்றும் முற்றிலும் பிரித்துக் களைதல் ஸாத்தியப்படாது.  இது நம்முடையதேசஞானத்தின் மர்மங்களுக்குள்ளே கலந்துபெரும்பாலும் நமதாய் விட்டது. எனினும், நம்மவரிலே பல பண்டிதர்கள் பல வருஷங்களாக, 'இந்த ஐரோப்பியநாகரீகத்தை நாம் முற்றிலும் உதறித் தள்ளி விடுதல்நன்றோ? அல்லது, இதனை நாம் முழுமையாகவே தழுவிக் கொள்ளலாமா? அல்லது இதினுள்ளே நல்ல அம்சங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு தீயவற்றைக்களைந்து விடலாமா?' என்ற விஷயங்களைக் குறித்துநீண்ட ஆலோசனைகளும் விசாரணைகளும், ஆராய்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்தஐரோப்பிய நாகரீகமென்பது ஒரு ஸ்தூல வஸ்துவன்று. ஸ்தூல வஸ்துவாக இருந்தால் அதை நம் இஷ்டப்படி துண்டு துண்டாக வகுக்கவும், வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொள்ளவும், பிறவற்றை விலக்கவும் ஸௌகர்யப்படும். மனிதர்களின் பயிற்சி இத்தகைய பொருளன்று. அஃது ஸூக்ஷ்மப் பொருள்.

                  ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மை இயல்புக்கு ஸம்பந்தமில்லாதனவும், அதன் புறத்தோலின் மீது தோன்றும் தோற்றங்கள் போன்றனவுமாகிய முக்கியத் தன்மையில்லாத சில புற வழக்கங்களை விரும்பாத நம்மவரில் சிலர் அந்தநாகரீகத்தையே துண்டு துண்டாக வெட்ட வேண்டியபகுதிகளைக் கொண்டு பிறவற்றை நீக்குதல் நலமென்றுகருதுகிறார்கள். திருஷ்டாந்தமாக, தலைமயிரை கத்தரித்துக்கொள்ளுதல், சுருட்டுப் பிடித்தல், சாராயங் குடித்தல், பெண்களைத் தம் இஷ்டப்படி பரபுருஷருடன் பேசவும்பழகவும் இடங்கொடுத்தல் - இவை போன்றன வெல்லாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கெட்ட லக்ஷணங்களென்றும், ஆதலால் இவற்றை நாம் நீக்கிவிட வேண்டுமென்றும், ஐரோப்பியரின் உழைப்பு, விடா முயற்சி, ஒற்றுமை,பொருள் சேர்ப்பதில் அவர்களுக்குள்ள திறமை இவைபோன்றவை யெல்லாம் அந்த நாகரீகத்தின் நல்ல லக்ஷணங்களென்றும், ஆதலால் இவற்றை நம்மவர் கைக்கொள்ள வேண்டுமென்றும் நம்மவரிலே பலர் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், இங்ஙனம் பேசுவோர் விஷயங்களை ஆழ்ந்து கவனியாமல் அவற்றின் புறத்தோலை மாத்திரம் கருதும் இயல்புடையார். ஏனென்றால் தலை மயிரை வெட்டுவதும், சுருட்டுப் பிடிப்பதும், சாராயங்குடிப்பதும் ஐரோப்பிய நாகரீகத்தின் தத்துவங்களல்ல புகையிலை மாத்திரம் தான் சில நூற்றாண்டுகளின் முன்பு அமெரிக்காவிலிருந்து புதிதாக வந்த சாமான். ஐரோப்பா மூலமாக அது உலக முழுவதையும் வியாபித்தது. ஐரோப்பியர் அதைச் சுருட்டாகப் பிடிக்கிறார்கள். நம்மவரும் அந்த வழக்கத்தை அங்ஙனமே கைக்கொண்டார். பலர் அப்படிக்கின்றி, கொஞ்சம் வைதிகமான ஜனங்கள் அதைவாய்ப் புகையிலையாகவும், மூக்குப் பொடியாகவும் உபயோகிக்கிறார்கள். மதுபானம் ஐரோப்பியரின் ஸஹவாஸத்தால் இந்நாட்டில் மிகுதியுற்றதென்பது மெய்யேயாயினும், அது ஐரோப்பியரால் புதிதாகக் கொண்டு நுழைக்கப்பட்ட வழக்கமன்று; புராதன கால முதலாகவே நமது தேசத்திலுள்ளது.  கிருஷ்ண பகவானுடையசகோதரரும், அவதார புருஷரில் ஒருவருமாகிய பலராமர் பெருகுடியரென்றும், கிருஷ்ணனே சாதாரணமாகக் குடிக்கக் கூடியவரென்றும் பகவானுடைய மக்கள் குடிவெறி மிகுதியால்ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்தார்களென்றும் புராணங்கள் சொல்லுகின்றன.

               சுருட்டுப் பிடித்தல் முதலியன ஐரோப்பியநாகரீகத்தின் தத்துவங்களல்ல என்று மேலே சொன்னேன். அவற்றை அங்ஙனம் பாவித்தல் வெற்றிலை போட்டுக் கொள்வதையும், மூக்குப்பொடி போட்டுக் கொள்வதையும், உச்சநிலையில் காலணா அகலக்குடுமி வைத்துக் கொள்வதையும் ஹிந்துமதத்தின் மூல தருமங்களாகக் கருதும் மடமைக்கு நிகராகும். மேலும் இவற்றையும் ஐரோப்பாவின் ஸ்திரீகளுக்குள்ள அதிக ஸ்வதந்திரங்களையும் ஒரே ஜாப்தாவில் சேர்த்துக் கணக்கிடுதல் மிதமிஞ்சிய அஞ்ஞானத்துக்கு லக்ஷணமாம். ஏனென்றால், ஸ்திரீ ஸ்வதந்திரம் ஆத்ம ஞானத்தை ஆதாரமாக உடையது. ஆண் பெண் எல்லாரும் சமானமென்பதும் பிறருக்குத் தீங்கு விளையாதவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கக்கூடிய அதிகார முண்டென்பதும் ஐரோப்பியநாகரீகத்தின் மூல ஸித்தாந்தங்கள். தலைமயிர் வெட்டிக்கொள்ளுதல் முதலியன ஸௌகர்யத்தையும் காலதேச வர்த்தமானங்களையும் தழுவியேற்படும் முக்கியதன்மை யில்லாத புறநடைகள். சரீர ஸௌகரியங்களைக் கருதியும் அலங்காரத்தின் பொருட்டாகவும் ஒரு தேசத்தார்ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கங்கள். சில சமயங்களில்அந்த தேசத்தாருக்கு நன்மையாகவும் பிறருக்குத்தீமையாகவுமிருக்கலாம். சில சமயங்களில் இவர்களுக்கேகேடாக முடியினும் முடியலாம். இவற்றுள், அலங்காரத்தைக் கருதி ஏற்படும் உடை வழக்கங்களும், மயிர் வைத்துக்கொள்ளும் வழக்கங்களும் எந்த நாட்டிலும் சாசுவதமாக நிற்கக் கூடியவை அல்ல. அடிக்கடி மாறும் இயல்புடையன. ஒரு தேசத்திலேயே எல்லோரும் ஒரே மாதிரி அலங்காரத்தை விரும்புவதில்ல. சிலருக்கு அலங்காரமாகத் தோன்றுவது சிலருக்கு விகாரமாகத் தோன்றக்கூடும். திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டில் பிராமணரும் வேறு சிலவகுப்பினரும் மீசையைச் சிரைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையான தமிழ் மக்கள் மீசையில்லாமலிருப்பது விகாரமென்று நினைக்கிறர்கள். இங்கிலாந்தில் நூறு வருஷங்களுக்கு முன்பு ஆண்பிள்ளைகள் தலைமயிரை கத்திரித்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது. தலைமயிர் முழுவதையும் நீளமாக   வளர்த்துவிடுதலே வழக்கமாகக் கொண்டிருந்தனர். தென்னிந்தியாவில் பெரும்பான்மையான பிராமணர் மீசை வைத்துக் கொள்வதில்லை. வேத பூமியாகிய ஆரியவர்த்தத்தில், பிராமணர்கள் மீசையில்லாமல் இருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன்மீசையைச் சிரைத்தால் அவருடைய நெருங்கிய சுற்றத்தாரில்யாரேனும் இறந்து போவதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களில் முன்பு நான் காசியில் ஜயநாராயணகலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ் நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ் நாட்டின் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகக்ஷவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள்என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்துவிட்டு வருவதின் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளே பலநாள்ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை.  கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத் தீர்த்தான். ''உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரந்தவறாமல் செத்துப் போய்கொண்டிருக்கிறார்களா?'' என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதின் காரணத்தை அறிந்து கொண்டு 'அப்படியில்லையப்பா,தமிழ் நாட்டில் பிராமணர் மீசை வைத்துக்கொள்ளும்வழக்கமில்லை' என்று தெரிவித்தேன். ஆசாரங்களும் பழக்கங்களும் சில சமயங்களில் மதக் கொள்கைகளைஆதாரமாகக் கொண்டிருக்கக்கூடும். யதேச்சையாகவும் அங்ஙனமின்றி வெறுமே அர்த்தமில்லாமலும் தோன்றி நடைபெறவுங் கூடும். குடுமி வைத்துக் கொள்ளும் மாதிரிகள் இவை போன்ற சரீர அலங்கார சம்பந்தமான வழக்கங்களை நமது நாட்டின் பிற்காலத்தில் மதக் கொள்கைகளுடன் பிணைத்து ஸ்ம்ருதிகளிலே அவற்றைக் குறித்துச் சட்டம் போடத் தொடங்கினார்கள். இந்த பரிதாபகரமான தவறுதல் ஆதிகாலம் முதல் மற்ற நாடுகளிலும் ஏற்பட்டு வந்திருக்கிறது. சிறிது காலத்து முன்பு வரை சீனா தேசத்தார் 'பன்றிவால்'என்று சொல்லப்படும் தமது நீளக் குடுமியை மிகவும் வைதிகமாகவும் அதனை வெட்டி யெறிதல் பெரும் பாவமுமாகவும் கருதி வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்நாட்டில் ராஜவம்சத்தின் ஆட்சி அழிந்து போய் குடியரசுஸ்தாபனம் செய்யப்பட்டபோது பதினாயிரம் லக்ஷக்கணக்கான சீனர் ஏககாலத்தில் குடுமிகளை வெட்டியெறிந்தனர். அந்தரோமங்கள் ஆயிரக்கணக்கான வண்டிகள் நிறைய ஏற்றப்பட்டு வியாபாரத்துக்காக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்விஷயத்தை நான் இவ்வளவு நீட்டாக சொல்ல வந்ததின்காரணம் யாதென்றால் இத்தகைய புற ஆசாரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நமது தேசத்து மாதர் மிதமிஞ்சிய கவலை செலுத்துவதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம்.

ஸஹோதரிகளே! 

நீங்கள் ஐரோப்பிய நாகரீகத்தின்சேர்க்கையைக் குறித்துச் சிறிதேனும் வருத்தப்பட வேண்டாம்.அது நமது தேசத்துப் பயிற்சியை அழிக்கும் வலிமையுடையதன்று. அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சுவதற்குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரீகங்கள் வந்து கூடும்போது அவற்றுள் ஒன்று மிகவும் வலியதாகவும் மற்றொன்று மிகவும் பலவீனமாகவும் இருக்குமாயின், வலியது வலிமையற்றதை இருந்த இடம் தெரியாமல் விழுங்கிவிடும். வலிமையற்ற நாகரீகத்துக்குரியபாஷையும் மதமும் முக்கியத் தன்மையற்ற புற ஆசாரங்கள்மாத்திரமேயன்றி விவாக முறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த  நாகரீகத்தைக் காத்து வந்த ஜனங்கள் பலமுடைய நாகரீகஸ்தரின் பாஷை, மதம் முதலியவற்றைக் கைக்கொள்ளுகிறார்கள். பிலிப்பைன் தீவில் அமெரிக்க நாகரீகம் இவ்வகை வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் நம்முடைய ஹிந்து நாகரீகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற நாகரீகங்களுடன் கலப்பதனால் இதற்குச் சேதம் நேருமென்று நாம் சிறிதேனும் கவலைப் படவேண்டிய அவசியமில்லை.உலகத்திலுள்ள நாகரீகங்கள் எல்லாவற்றிலும் நம்முடைய நாகரீகம் அதிகசக்தியுடையது.  இது மற்றெந்த நாகரீகத்தையும் விழுங்கி ஜீர்ணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால், ஐரோப்பிய நாகரீகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன்உண்மையியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிக சக்தியும் ஒளியும் பெற்று விளங்குகிறது.இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்துகொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம்நன்கு நடைபெறாது.

தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! 

உங்களிடம்எத்தனையோ அரிய திறமைகளும், தந்திரங்களும் உயர்ந்து இருந்த போதிலும், கல்வியின் பரவுதல் அதிகமில்லாதபடியால் அவ்வப்போது வெளியுலகத்தில் நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டுஅதற்குத் தக்கபடி நடக்க இடமில்லாமற் போகிறது.  ''ஸ்வதர்மத்தைக் காப்பாற்றுவதில் இறந்து விட்டாலும் பெரிதில்லை'' என்று கிருஷ்ணபகவான் பகவத்கீதையில் சொல்லுகிறார். ஆனால், இங்ஙனம் உயிரினும் அருமையாகப் போற்றுதற்குரிய கடமைகள் அல்லது தர்மங்களுக்கும் அர்த்தமற்றனவும் ஸத்தில்லாதனவுமாகிய வெற்று வழக்கங்களுக்கும் பேதமறியாமல் நீங்கள் மருட்சி கொண்டு வீணே துயரப்படலாகாது.  திருஷ்டாந்தமாக, தமிழ் நாட்டு மாதருக்கு மட்டுமேயன்றி  உலகத்து நாகரீக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரீ எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும். ஆனால் குழந்தைப்பிராய முதலாகவே செவிகளில் மிகவும் கனமான நகைகளைத் தொங்கவிட்டுத் தோள்வரையிலும், சில சமயங்களில் மார்பு வரையிலும், காது வளர்க்கும் வினோதமான ஆசாரம் தமிழ்நாட்டு மாதர்களில் பல பகுதியாரிடம் காணப்படுகிறது. நம்முள்ளே புதிதாக இங்கிலீஷ் படித்துத் தேறியவர்களில் பலர் தம்முடைய மனைவியர் ஏற்கெனவே நீளமாகவும் விகாரமாகவும் வளர்த்திருக்கும் செவிகளை மறுபடி சுருக்கித்தைத்துத் தோடு போட்டுக் கொள்ளும்படி செய்ய விரும்புகிறார்கள். தமக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கேனும் அங்ஙனம் காது வளர்க்காமலிருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இதற்காக பல ஸ்திரீகள் புருஷருடன் முரண்பட்டு வீட்டில் தீராத மனஸ்தாபமும் சண்டை சச்சரவுகளும் நிகழும்படி நிற்கிறார்கள். கற்பு எங்ஙனம் ஸ்வதர்மமோ அதுபோலவே காது வளர்ப்பதும் ஸ்வதர்மமென்று அந்த ஏழை ஸ்திரீகள் அறியாமையாலே நினைக்கிறார்கள். மாதரிடையே கல்வி பரவுமாயின், இவ்விதமான தப்பெண்ணங்கள் தாமே விலகிப்போய் விடும். குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதிவழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்படவேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப்பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள். 

தமிழ் நாட்டு ஸஹோதரிகளே! 

               கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப் பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.
''மானமிழந்தபின் வாழாமை முன்னினிதே.'' கல்விகூட அத்தனை பெரிதில்லை, தைரியம் வேண்டும். எதுவரினும் நம்மைப் பிறர் தாழ்வாகக் கருதவும் தாழ்வாக நடத்தவும் இடங்கொடுக்கக் கூடாது என்ற மன உறுதி வேண்டும்.

               ஐரோப்பிய நாகரீகத்தின் புறத் தோற்றங்களிலேஆக்ஷேபத்துக்கு இடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றனஎன்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் இஃது வியக்கத் தக்கதொரு செய்தியன்று. நமது ஸநாதன ஹிந்து தர்மத்தின் புறநடைகளிலே கூடப் பல வெறுக்கத்தக்க அம்சங்கள் வந்து கலந்துதான் கிடக்கின்றன. அதுபற்றி ஐரோப்பிய நாகரீகத்தையே வெறுத்தல் சால மிகப் பெரிய பேதைமையாம். நம்முடைய ஹிந்து தர்மமாகிய வேத தர்மத்துக்கு ஐரோப்பிய நாகரீகம் தனது தத்துவ நிலையில் விரோதமன்று. அதன் உள்நிலை, நான் மேலே குறிப்பிட்டபடி, நமது ஹிந்து தர்மத்துக்குப் பெருத்துணையாக அமைந்திக்கிறது. ஸர்வ ஜீவ ஸமத்வம் எல்லா உயிர்களும் தம்முள்ளே நிகர் என்பது, ஸர்வ ஜீவ ஐக்கியம் - எல்லாஉயிர்களும் ஒன்றென்பது,  இவையே ஸநாதன ஹிந்து தர்மத்தின் வேர்க் கொள்கைகள். இவற்றை மனிதர் எப்போதும் தம்முடைய நினைப்புகளில் செயல்களில் விளங்கச் செய்யும்போதுதான் ஹிந்து மதத்துக்கு உண்மையான வெற்றி ஏற்படும். இக்கொள்கையின் ஒரு சிறு அம்சத்தையே ஐரோப்பிய நாகரீகம் தனக்கு ஆதாரமாக உடையது. எல்லா ஜந்துக்களும் நிகரென்பது இறுதியான உண்மை. மனிதரெல்லாரும் தம்முள்ளே ஸமானராவாரென்பது இவ்வுண்மையின் ஒரு சிறுபகுதி. இந்தப் பகுதி யுண்மையை நிலைநிறுத்தவேண்டு மென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உட்கருத்து.
ஆனால், ஆழ்ந்த உண்மைகளைக் கண்டுப்பிடிப்பதில் நாம் ஐரோப்பியரைக் காட்டிலும் மிகமிக உயர்ந்திருக்கிறோமெனினும், அவற்றை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதில் நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிக ஊக்கம் செலுத்துகிறார்கள். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாது. அனுஷ்டானத்துக்கு வராத ஞானத்தை ஞானமென்று சொல்வதேபிழை. ஆகவே, பூமி முழுமைக்கும் பெருந்துணையாக நின்றுமனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றக் கூடிய ஹிந்து மதத்தின் ஸார உண்மைகளை நாம் ஒழுக்கத்தில் காண்பிக்க வேண்டும். இங்ஙனம் காண்பிக்கும்படி நம்மவரைத் தூண்டி வழிகாட்டும்கடமையும் தகுதியும் நம்முடைய மாதர்களுக்கே உரியன. இதனை ஸாதிப்பதற்குரிய உபாயங்களைக் குறித்து மற்றொருமுறை எழுதுகிறேன்.



No comments: