பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 23, 2014

மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.

பாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில் வெளியிட்டிருந்தோம். அவை மீண்டும் இப்போது அனைவரின் பயன்பாட்டுக்காக இந்த வலைப்பூவில் மீள்பதிவு செய்யப்படுகிறது. பாரதி அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன. நன்றி.

1. சென்றுபோன நாட்கள்"

"சென்றுபோன நாட்கள்"
ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி
எழுதியவர்: எஸ்.ஜி.ராமனுஜலு நாயுடு

(மகாகவி காலமாகி ஏழெட்டு ஆண்டுகளிலேயே அவருடைய பெருமையை உணர்ந்தவரும், புதுச்சேரியில் அவரோடு பழகியவருமான எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு என்பவர் எழுதி அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த "அமிர்த குண போதினி" எனும் மாத இதழில் 1928ஆம் வருடம் நவம்பர், டிசம்பர், 1929ஆம் வருடம் ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பை "மகாகவி பாரதியார்" எனும் தலைப்பில் நாங்கள் வெளியிடும் இரண்டாவது பகுதி இலவச அஞ்சல் வழிக் கல்வித் திட்டத்தில் முதல் பாடமாக வெளியிடுகிறோம். இந்த கட்டுரை மறுபடி "காலச்சுவடு" அறக்கட்டளை சார்பில் 2006 டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கோவையில் நடத்தப்பெற்ற "உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்" நிகழ்ச்சியையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையின் தமிழ்நடை அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதை நினைவில் வைத்துப் படிக்க வேண்டும். இதனை மறுவெளியீடு செய்ய அனுமதித்த காலச்சுவடு அறக்கட்டளையினருக்கு எமது மனமார்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறோம். இந்த முதல் பாடம் துவங்கி அடுத்த பனிரெண்டு மாதங்களுக்கு பாரதி பாடங்கள் உங்கள் கரங்களில் தவழும். படித்து, ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலெழுதி பயன்பெறுங்கள்.)

"ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் பறிமுதல் செய்யப்பெற்றுப் பெரும் கிளர்ச்சி எழுந்துள்ள இச்சமயம்* (1928இல் எழுதப்பட்டது) அவரது ஜீவியத்தை வரைதல் பொருத்தமானது. பலர் பலவிதமாக அவரைப் பற்றி வரைந்துள்ளனர். அவருடன் கலந்து நட்பு முறையிலிருந்த வகையில் நமக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதுகிறோம். பாரதியாருக்கு ஏற்பட்ட பிரசித்தியெல்லாம் அவர் காலஞ்சென்ற பிறகுதான்; விசேஷமாக அவரது பாடல்களால்தான். அவர் ஆதியில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராய் இருந்து வந்த நாளில் அவரைத் தெரிந்தவர்கள் மிகச் சொற்பம். உதவி ஆசிரியரின் நிலை திரைக்குப் பின்னிருந்து வேலை செய்து அவ்விதமே ஒழிந்துபோவதாம்! 'மித்திர'னின் உதவி ஆசிரியராய் இருந்து கொண்டே சக்ரவர்த்தினி என்ற மாத ஸஞ்சிகையின் ஆசிரியத்துவத்தையும் ஏற்று, அதை நடத்தி வந்தார். 'மித்திர'னில் *எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும் என்று தொடர்ச்சியாகப் பாடல்கள் எழுதத் தொடங்கினார். 'மித்திர'னில் இதுதான் அவரது முதல் பாடலாகும். இது இப்போது வெளிவந்துள்ள அவரது நூல்களில் சேர்க்கப்படவில்லை. சக்ரவர்த்தினி பத்திரிகையில் அவரால் எழுதப்பட்ட வியாசங்களும் பாடல்களும் புதுமணம் கமழ்ந்து யாவராலும் விரும்பப்பட்டன.

(*கட்டுரை ஆசிரியர் எழுதும் காலத்தில் இந்தக் கவிதை எந்த நூலிலும் வெளிவரவில்லை. ஆனால் பிந்நாளில் இது வெளிவந்து சீனி.விஸ்வநாதன் வெளியிட்ட நூலில் காணப்படுகிறது. அந்தக் கவிதையை கற்போர் பயன்பெய வேண்டி இங்கே தந்திருக்கிறோம்)

எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்.

புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ
இன்னலொடு கண்ணீ ரிருப்பாகி விட்டனவே! 1.

ஆணெலாம் பெண்ணாய் அரிவையரெலாம் விலங்காய்
மாணெலாம் பாழாகி மங்கிவிட்ட திந்நாடே! 2.

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே! 3.

வீமாதி வீரர் விளிந்தெங்குப் போயினரோ?
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே! 4.

வேத வுபநிடத மெய்ந்நூல்க ளெல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே! 5.

ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னதுபோய்
வீதி பெருக்கும் விலையடிமை யாயினரே! 6.

செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே
வந்தே தீப்பஞ்ச மரபாகி விட்டதுவே! 7.

மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! 8.

பொன்னு மணியுமிகப் பொங்கிநின்ற விந்நாட்டில்
அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனைபேர்? 9.

ஃஃஃஃஃஃஃ

அந்தக் காலத்தில் பாரதியார் தீவிர தேசபக்தராயிருந்தார். எதிலும் நிதானத்தையே யனுசரித்து நின்ற ஸ்ரீமான் ஜி.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் பாரதியார் வேறுபட்டுப் பிரிந்து இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கி, அதற்கு ஆசிரியராய் அமர்ந்தார். அப்பத்திரிகயின் சொந்தக்காரர் வேறொருவராவர். பாரதியாரின் தமிழ்நடை அது முதற்கொண்டு ஒரு புதுவழியில் மாறியது. அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகு சிறப்புடனும் திறமையுடனும் எழுதிவரத் தொடங்கினார். சிறுசிறு பதங்களுடன் கூடிய ஒரு நவீன கம்பீர நடை இந்தியா பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளியாகி வந்தது. நாலாயிரம் பிரதிகள் வரை போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு பத்திரிகையிலும் அவ்வார வர்த்தமானத்தின் சார்பாய் ஒரு பெரிய சித்திரம் கண்ணுக்கினிய காட்சியாய் மிக்க அழகுடன் பிரசுரிக்கப்பட்டு வந்தது. அந்தப்படம் இன்னின்னவாறு இருக்க வேண்டுமென்று சித்ரீகருக்குப் பாரதியார் சொல்லுங்காலையில் அப்படத்தின் அம்ஸங்களையெல்லாம் தமது முகத்திலும் அபிநயங்களிலும் காண்பித்து விடுவார். சித்ரீகரின் மனதில் அந்தப் பாவனைகள் நன்கு பதிந்துவிடும். அவ்விதமே சித்திரமும் தயாராகும்.

ஃஃஃஃஃஃஃ

இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிரக வாசகமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்ஸம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய் சட்டவரம்புக்கு உட்பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயமென்று பலர் கூறினர். ஒரு சமயம் பாரதியார் டிராம் வண்டியில் செல்லுகையில், இந்தியா பத்திரிகையைப் படித்த உத்தியோகஸ்தர் மிக்க கோபாவேசமாய் இப்பத்திரிகையின் ஆசிரியரை அவசியம் தண்டிக்க வேண்டுமென்று பாரதியாரிடம் கூறினார். பாரதியார் 'அப்படியா!' என்றார். இந்த ஸம்பவத்திற்குப் பிறகு இந்தியா பத்திரிகை தனக்கென்று ஒரு புது காரியாலயமும் அச்சுக்கூடமும் அமைத்துக் கொண்டு வேறாய்விட்டது. பத்திரிகையே வேறு கை மாறினும் அதன் கொள்கை எப்போதும்போல் இருக்கும் என்று ஒரு தனிக்குறிப்பும் வெளியிடப்பட்டது.

ஃஃஃஃஃஃஃ

இந்தியா பத்திரிகை வரவரக் 'கார'மாகி விட்டது. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் 'பாஞ்சாலி சபதம்' போலி பெருங்காவியமாகத் தொடர்ச்சியாய் பத்திரிகையில் எழுதிவந்தார். அது முற்றும் வீர ரஸமாய் இருந்தது. அதனைத் தனிப் புஸ்தக உருவமாய் வெளியிடுவதற்குப் பாரதியார் விரும்பினார். அது ஆபத்தென அவரது நண்பர்களால் தடுக்கப்பட்டது. இந்தியா பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரியராக இருந்தாரேயன்றி வெளிப்படையாக அன்று. ஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்பவருமென்று பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்றும் இந்தியா பத்திரிகையில் பாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார். 1907ஆம் வருஷத்தில் ஸ்ரீ லஜபதிராயைத் தேசப்பிரஷ்டம் செய்தகாலையில் அவர் தம்மைப் பற்றி இரங்கிப் பிரலாபிப்பதாகப் பாரதியார் இந்தியா பத்திரிகையில் அரிய பாடல்களை வரைந்து அதற்குத் தெளிபொருள் விளக்கமும் குறிப்பிட்டார். அந்த விளக்கம் இப்பொழுது வெளிவந்துள்ள அவரது நூல்களில் இல்லை. பாடல்கள் மட்டுமேயுள்ளன.

(நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக அந்தப் பாடலை இங்கே கொடுத்திருக்கிறோம். கட்டுரையாசிரியர் கூறியுள்ளது போல பாடலுக்கு பாரதி எழுதிய தெளிபொருள் விளக்கம் காணப்படவில்லை)

லாஜ்பத்ராய் பிரலாபம்.

நாடிழந்து மக்களையு நல்லாளை யும்பிரிந்து
வீடிழந் திங்குற்றேன் விதியினையென் சொல்கேனே 1.

வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? 2.

ஆசைக் குமர நருச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? 3.

அன்றிலைப்போன் றென்னை யரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? 4.

வீடு முறவும் வெறுத்தாலு மென்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? 5.

ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளு
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு 6.

சிந்துவெனுந் தெய்வத் திருநதியு மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனனாடு 7.

ஐம்புலனை வென்ற அறவோர்க்கு மாற்றலர்தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரருக்குந் தாய்நாடு 8.

நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கெளரவராம்
புல்லரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு 9.

கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு 10.

கன்ன னிருந்த கருணைநிலம் தர்மனெனு
மன்ன னறங்கள் வளர்த்த புகழ்நாடு 11.

ஆரியர்தந் தர்மநிலை யாதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. 12.

வீமன் வளர்ந்த விறனாடு வில்லசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம் 13.

சீக்கரெனு மெங்கள் விறற்சிங்கங்கள் வாழதரு நல்
லாக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு 14.

ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ் ஞான தயாநந்தர் திருநாடு 15.

என்னருமைப் பாஞ்சால மென்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? 16.

ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ? 17.

என்னை நினைந்து மிரங்குவரோ? அல்லாது
பின்னைத் துயர்களி லென் பேரு மறந்திட்டாரோ? 18.

தொண்டுபட்டு வாடு மென்றன் தூய பெரு நாட்டிற்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலு மின்புறுவேன் 19.

எத்தனைஜன் மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந் தன்னில் வைத்தால் வாடுகிலேன். 20.

ஃஃஃஃஃஃஃ

இவ்விதமே அவ்வப்போது நடந்தேறிய ஸம்பவங்களுக்கெல்லாம் சிறுசிறு பாடல்களை 'இந்தியா' பத்திரிகையில் தமது பெயருடன் வெளியிடுவதானார். வந்தேமாதர கீதத்துக்கு 'இனிய நீர் பெருக்கினை இன்கனி வளத்தினை' என்று தமிழ் பொழிபெயர்ப்பு ஒன்றும் வெளியிட்டார். அப்பாடல்களின் மூலமாக மட்டும் அவர் பெயரைத் தமிழ்நாட்டினர் அறிந்து வந்தனர்.

2

இந்தியா பத்திரிகைக்குப் பாரதி ஆசிரியரென்று எவருமே அறியார். பாரதியாருக்குத் தமிழ்நாட்டிலிருந்த பெயர் இவ்வளவுதான். சென்னையிலுள்ளார் மட்டும் அதிலும் சில முக்கியஸ்தர்கள் மட்டும் உண்மையை உணர்ந்திருந்தனர். தமது பாடல்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஸ்வதேச கீதங்கள் என்று இரண்டணா விலையில் ஒரு புஸ்தகமாக வெளியிட்டார். அதைக் குறித்து இந்தியா பத்திரிகையில் 'சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் அடங்கிய 'ஸ்வதேச கீதங்கள்' வரப்பெற்றோம்' என்று தம்மை அந்நியர் போலக் கொண்டு அதற்கு ஒரு மதிப்புரையும் வரைந்தார்.
ஃஃஃஃஃஃஃ

ஸ்ரீ திலகர் 1907ஆம் வருஷத்தில் புதிய கக்ஷியைத் தழுவிப் பிரஸங்கங்கள் செய்ய, அதில் முதல் பிரஸங்கத்தைப் புதிய கட்சியின் கோட்பாடு என்ற பெயருடன் நூல் வடிவமாக ஆங்கிலமும் தமிழுமாய் ஒரு அணா விலையில் வெளியிட்டார். பாரதியார் புதிய கக்ஷியைத் தழுவி நின்றார். கவிதா சக்தி ஜனங்களிடை பெருக வேண்டுமென்று விஸ்தாரமாக வரைவார். 'சுதேசமித்திரன்' வெள்ளி ஜுபிலி நடந்த காலத்தில் பாரதியாரும் அங்கு வந்திருந்தார். 'மித்திரன்' ஆசிரியரான ஸ்ரீ ஜி.சுப்பிரமண்ய ஐயர் பழைய கக்ஷியையும், புதிய கக்ஷியையும் தழுவி நின்றதில், பாரதியார் தமது இந்தியா பத்திரிகையில் உக்கிரகமாய்க் கண்டனங்கள் வரைந்தார். கண்டனமான படங்களும் வெளியிட்டார். "பால பாரதம்" என்ற ஆங்கில வாரப் பத்திரிகையொன்றையும் வெகு திறமையுடன் நடத்தி வந்தார். 1907ஆம் வருஷத்தில் பரிமளா என்ற நாவலை அச்சிட நாம் சென்னை சென்றிருந்த சமயம் ஒரு கொடிய முறை ஜ்வரத்தினால் வருந்தும்படியாக, பாரதியாரே பரிமளா 'புரூப்'கள் முக்காற் பாகத்தையும் திருத்தி முடிவுசெய்து, அந்த நாவலைப் பற்றி இந்தியா பத்திரிகையின் தலையங்கத்தில் ஆறு கலங்கள்வரை மதிப்புரை வரைந்தார். அதிலே மொழி பெயர்க்குந் தொழிலைக் குறித்தும், தமிழ்மொழியில் ஸம்ஸ்கிருத பதங்களைச் சேர்ப்பதைக் குறித்தும் தமிழின் இயற்கை இனிமையைக் குறிக்கும் 'அங்கனாமணி' என்பதிலும் 'பெண்மணி' என்ற தமிழ்ச்சொல் மிக்க இனிமையுடையது என்றும் விஸ்தாரமாக வரைந்தார்.

ஃஃஃஃஃஃஃ

சூரத்தில் நடந்த காங்கிரஸுக்குப் பாரதியாரும் சென்றிருந்தார். சூரத்தில் காங்கிரஸ் பிளவுபட்டது. பாரதியார் தாம் சென்னையிலிருந்து பிரயாணப்பட்டது முதல் மறுபடியும் சென்னை வந்து சேர்ந்த வரையில் நடந்த விஷயங்களைக் கோர்வையாகத் தொகுத்து இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு, எங்கள் காங்கிரஸ் யாத்திரை என்று ஒரு புஸ்தகமாகவும் இரண்டணா விலையில் பிரசுரம் செய்தார். நூல்கள் யாவும் சொற்ப விலைக்கே உதவப் பட்டன. ஒவ்வொன்றும் புதுச் சுவை, புதுநடை, புதிய அழகு கொண்டு இலங்கின.

ஞானரதம் என்ற தலைப்பெயருடன் தமிழ்நாடு என்றும் கண்டிராத துள்ளிக் குதிக்கும் ஒரு புதிய கந்தர்வ நடையில் இயற்கையின் அழகுகளைப் பற்றியும், தேசச் செய்திகளைப் பற்றியும், நெருங்கிய நண்பர்களின் மனமாறுபாடுகளைப் பற்றியும் அற்புதமான கல்பனையுடன் வாரந்தோறும் இந்தியாவில் எழுதிவந்தார். அவற்றை ஒருங்கு சேர்த்து ஞானரதம் என்று ஒரு புஸ்தகமாக வெளியிட்டார். அதன் விலை அணா எட்டு. அதற்கு இணையான நூல் தமிழ்மொழியில் இல்லை. சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நடையானமைந்தது.

ஃஃஃஃஃஃஃ

பாரதியின் இந்தியா பத்திரிகை சட்ட வரம்பை மிகவும் மீறி நெருப்பு மழை மொழியத் தொடங்கிற்று. இது பாரதியாரைப் பிடித்த கெட்ட காலம்தான். சாந்தமான நடையில் அவர் சென்றிருந்தால் நாளைக்கும் இந்தியா பத்திரிகை நடக்கக்கூடும். இந்தியா பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது. போலீசார் இந்தியா பத்திரிகையின் காரியாலத்துள் பிரவேசித்துப் பாரதியாருக்கு வாரண்டைக் காண்பித்தனர். தாம் ஆசிரியரல்லவென்றும் தமது பெயர் வாரண்டிலில்லையென்றும் கூறிக்கொண்டிருக்கையில் இந்தியா பத்திரிகையை வெளியிடுபவரான ஸ்ரீநிவாஸன் என்பவர் அங்குற்று "என்ன?" என்றார். போலீசார் அவரே ஆசிரியராகப் பதிவு செய்யப்பெற்றவரென்று அறிந்து அவரைக் கைது செய்தனர். விசாரணை காலத்தில் ஸ்ரீநிவாஸன் தாம் ஆசிரியரல்ல என்றும் பாரதியாரே உண்மை ஆசிரியரென்றும், தாம் ஒரு குமாஸ்தா போலவே இருந்து வந்ததாயும் தமக்கு வியாஸம் எழுதச் சக்திகூடக் கிடையாதென்றும் தெரிவித்துக் கொண்டார். ஆயினும் அவருக்கு ஐந்து வருஷ கடினகாவல் சிக்ஷை விதிக்கப்பட்டது. பாரதியாருக்கும் வாரண்டு பிறந்தது. அதற்குத் தப்பிப் பாரதியார் புதுச்சேரி போய்ச் சேர்ந்தார்.

ஃஃஃஃஃஃ

இது சம்பந்தமாக சுதேசமித்திரன் 16-11-1908இல் துணையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது.

"சென்னையிற் பிரசுரமாய் வந்த இந்தியாவென்ற வாராந்தத் தமிழ்ப் பத்திரிகையில் சென்ற மார்ச்சு மாதம் முதல் ராஜத்துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதாக அதன்பேரில் ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டி, அதை அச்சிட்டுப் பிரசுரப் படுத்துவோரான (Printer and publisher) ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்காரைக் கைதிப்படுத்தி, விசாரணை செய்ததில், ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ தீபாந்திர சிக்ஷை விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாகக் கவர்ன்மெண்டார் யாரை நினைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து விசாரணைக்குக் கொண்டு வருவதும் ஜட்ஜுகள் கொடுந்தண்டனை விதிப்பதும் இப்போது சாதாரணமாய்விட்டது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அவசியமென்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், ராஜத்துவேஷக் குற்றஞ் செய்கிறவர்கள் படித்தவர்களாயும் கெளரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர்களிடத்தில் கவர்ன்மெண்டாரும் ஜட்ஜுகளும் அவ்வளவு கொடுமை காட்டாமல் இருக்கக்கூடும். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை யெழுதினவரல்ல; எழுதினவரும் அந்தப் பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார்கள். ஸ்ரீநிவாஸய்யங்கார் பெயர் போலீஸ் கமிஷனர் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர் அகப்பட்டுக் கொண்டாரேயன்றி, குற்றத்துக்கு முதல் உத்திரவாதம் அவர் பேரில் தாங்கியதல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்குக் கொடுந் தண்டனை விதிக்காமல் இலகுவான தண்டனை விதித்திருக்கக்கூடும் அல்லது இந்தியா பத்திரிகையில் ராஜத்துவேஷக் குற்றமுள்ள வியாஸங்கள் தோன்றின துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால், இப்போது ஓடிப்போயிருக்கிற எடிட்டரும் புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாஸங்கள் தோன்ற இடங் கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்."

ஃஃஃஃஃஃஃ

தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும். தண்டனையடைந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொண்டாரென்று ஒரு வருஷத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக வதந்தி. பாரதியார் சென்னையை விட்டுப் போனதற்குப் பிறகு இந்தியா பத்திரிகையும் சென்னையில் நின்றுவிட்டது. பாரதியாரின் அதிர்ஷ்ட காலமும் சென்னையின் பிரபல வாழ்க்கையும் இத்துடன் பூர்த்திபெற்றது. இனி, தமது அந்திய காலத்தின் எஞ்சிய சில நாட்களைக் கழிப்பதற்குத்தான் பத்து வருஷங்களுக்கு மேற்பட்டு பாரதியார் புதுச்சேரியிலிருந்தும் சென்னைக்கு மறுபடியும் வருபவராகிறார்.

3

"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கியம் பாரதியாருக்குப் பொருந்தும். புதுச்சேரிக்குப் பாரதியார் வெறுமனே வந்து விடவில்லை. இந்தியா பத்திரிகையின் வியாஸங்கள், கணக்குப் புஸ்தகங்கள் யாவற்றுடனும் வந்து குதித்தார். புதுச்சேரியிலும் தமிழன்பர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். சென்னையில் பயந்து நின்ற ஒரு தன்மை புதுச்சேரியில் அவரை விட்டு நீங்கிவிட்டது போலுங் காண்கிறது. இந்தியா பத்திரிகையைப் புதுச்சேரியிலிருந்தும் தொடங்கிவிட்டார். அங்கும் தமது பெயரை ஆசிரியராகக் காண்பித்துக் கொள்ளவில்லை. சென்னையில் ஸ்ரீநிவாஸன் என்பவரைத் தெரிந்தெடுத்ததுபோல் புதுச்சேரியிலும் ஒருவரைத் தெரிந்தெடுத்து அமைத்து விட்டார். இந்தியா பத்திரிகை சென்னையில் நடைபெற்றதைவிட இன்னும் 'கார'மாகவும் வியாபகமாவும் நடைபெறலானது. இந்தச் சமயம் பாரதியார் விஜயா என்ற ஒரு தினசரித் தமிழ்ப் பத்திரிகையையும் தொடங்கிவிட்டார். அதுவும் பிரபலப்பட்டு விட்டது. காலந்தவறாமல் வெளிவந்தவாறு இருந்தது. விஜயாவில் பிரதி தடவையும் சித்திரப் படங்கள் பதிப்பிக்கப் படலாயின. அந்தப் படங்களையும் அதிலுள்ள வியாசங்கள் பெரும்பான்மையையும் அப்படியே எடுத்து இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு, இந்தியாவின் உருவையும் இரட்டிப்பாக்கி விட்டார். சென்னை இந்தியா பத்திரிகையில் ஒரு தடவைக்கு ஒரு படமாய் வரப்போக, புதுச்சேரி இந்தியாவிலோ பக்கங்கள் முற்றிலும் படங்களாகவே திகழ்ந்தன. வாசக நடையும் உக்கிரகமானது. பாரதியாரின் பாலபாரதம் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையும் புதுச்சேரியில் நடைபெற்று வந்தது. இத்துடன் கர்மயோகி என்ற மாதப் பத்திரிகையொன்றும் தாமே ஆசிரியர் என்று புலப்படுத்திக் கொண்டு புது முறையில் வெளியிடத் தொடங்கினார்.

ஃஃஃஃஃஃஃ

சென்னையிலிருந்தகாலை பாரதியார் 'வந்தேமாதரம்' என்ற கீதத்துக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாக இனிய நீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை என்று தமிழ் மொழிபெயர்ப்பை இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு, அதை ஸ்வதேச கீதங்கள் என்ற நூலிலும் சேர்த்தார். புதுச்சேரியில் கர்மயோகிப் பத்திரிகையைத் தொடங்கியதும் அதன்முதல் ஸஞ்சிகையில், முந்திய மொழிபெயர்ப்பு அத்தனை தெளிவும் சுலபமுமாயில்லையென்று நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந்தென்றலும் என்று வேறொரு மொழிபெயர்ப்பினை இன்னும் சுவையமுதம் பெருகுமாறு வெளியிட்டார். இப்பாடலையும் வேறு சில கீதங்களையும் சேர்ந்து ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாகமாக ஜன்மபூமி என்ற பெயரால் வெளியிட்டார். அதன் பின்னர், இன்னும் அநேக புதிய பாடல்களுடன் மாதா வாசகம் என்ற மற்றொரு நூலையும் வெளியிட்டார். இது தென்னாப்பிரிக்காவில் அச்சிடப்பட்டதாக ஞாபகம். ஆக மூன்று கீத நூல்கள் பிரகடனமாயின. அதன் பின்னர் பாஞ்சாலி சபதம் என்ற அரிய நூலினை முதற் பாகமாக வெளியிட்டார். அதிலுள்ள ரஸத்தை என்னென்று புகழ்வோம்! அதற்கு நிகர் அதுவே நிகர். அதன் இரண்டாம் பாகம் பாரதியாரின் நாளில் வெளிவரவில்லை. பின் பாலகர்களுக்கென முரசு, பாப்பா பாட்டு என்று சிறு நூல்களைக் காலணா விலையில் வெளியிட்டார். அவை இரண்டும் இரு தங்க விக்கிரகங்கள்தான். அதற்கு அடுத்ததாகக் கண்ணன் பாட்டு என்ற அரிய பிரபந்தத்தைத் தமிழகத்திற்கு உதவினார். அதன் அற்புதத்தைப் பேச நமக்குச் சக்தியில்லை. இத்துடன் இந்தியா பத்திரிகையில் அடிக்கடி புதிய பாடல்களின் அமுதம் வெளிவந்தவாறு இருந்தன. பாரதியாருக்கு இப்பொழுது சென்னையில் இருந்த செல்வாக்கு புதுச்சேரியிலும் இன்னும் பிரபலமாகிவிட்டதென்றே சொல்ல வேண்டும். இத்துடன் புதுச்சேரியில் சூர்யோதயம் என்ற வாரப் பத்திரிகையும் புதுவிதமான அமைப்பில், ஆனால் மகா காரமாக வெளிவரத் தலைப்பட்டது. அதிலும் பாரதியார் ஆசிரியராகச் சம்பந்தப்பட்டிருந்தாரென்று தெரிகிறது. இந்தியா பத்திரிகையை வாரம் இருமுறையாக்கவும் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதுவரையில்தான் பாரதியாருக்குப் புதுச்சேரியில் சுக்கிரதசை! சென்னை அரசாங்கத்தார் இந்தியா பத்திரிகையையும், சூர்யோதயம் என்ற பத்திரிகையையும் சக்கரவர்த்தியாரின் பெயரால் பறிமுதல் செய்துவிட்டதாக அரசாங்க கெஜட்ட்டில் வெளியிட்டு விட்டனர். புதுச்சேரி ஃபிரென்சு இலாகாவாயினும் அங்குள்ள தபாலாபீஸ் பிரிட்டிஷ் இலாகாவுடன் சம்பந்தித்தே இருந்தது. இந்தியா, விஜயா, சூர்யோதயம் பத்திரிகைகளைத் தபாலாபீஸில் கொண்டு போய்க் கொட்டியதும் அவற்றை ஒருமிக்கக் கட்டி சென்னைத் துரைத்தனத்தாருக்கு அனுப்பி விடப்பட்டதாகத் தெரிகிறது. பத்திரிகையின் சந்தாதாரருக்குக் கொடுபடவில்லை. இதைப் பிறகு பாரதியார் அறிந்து திகைத்தார். இந்தியா, விஜயா, சூர்யோதயம் இம்மூன்றும் திடீரென்று நின்று போக நேர்ந்து விட்டன. தபால் மூலமாக அனுப்ப ஹேதுவில்லை. பாரதியாரின் பத்திரிகை முயற்சிகள் யாவும் அடியுடன் நின்று போயின. பத்திரிகைகள் வருமானத்தால் ஜீவித்த பாரதியாரை வறுமை நோய் பிடித்தாட்டத் தொடங்கிற்று. பத்திரிகைகள் நின்று போனதுடன் புதுச்சேரியின் ஆரவார வாழ்க்கையும் பூர்த்திபெற்றது.

4

அச்சுக் கோர்ப்போர் பதங்களை வெகு நெருக்கிச் சேர்த்து, பதங்களுக்கு அதிக நோவு உண்டாகப் பண்ணிவிடுவது பெரிய துன்பமாகும். பல பதங்களை இடையில் இடம்விடாது ஒரே சொற்றொடராக்கி வேதனைப் படுத்துவதில் பாவம் பதங்கள் அலறிக் கூவுகின்றன. சிறுசிறு பதங்களையும் விசாலமாய்த் தூரத்தூரப் பிரித்து, ரயிலில் இரண்டாம் வகுப்பில்* உள்ளவர்கள் இடம் விட்டு விசாலமாய் தாராளமாக உட்கார்ந்திருப்பதுபோல் செய்து பதங்களைப் பரவசப்படுத்த வேண்டும். ( குறிப்பு:- திரு நாயுடு அவர்கள் குறிப்பிடும் அந்த நாளில் ரயில்வேயில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருந்தது. பொதுவாக சாதாரண மக்கள் மூன்றாம் வகுப்பில், அதாவது இப்போதைய இரண்டாம் வகுப்பு போன்றது, அதில்தான் பயணம் செய்வர். இரண்டாம் வகுப்பு என்பது சற்று வசதியுள்ளவர்கள் பயணம் செய்யும் வகுப்பு. எனவே அதில் இடங்கள் சற்று விசாலமாக அமைந்திருந்ததைக் குறிப்பிடுகிறார் கட்டுரை ஆசிரியர்) மெயில் வண்டியில் மூன்றாம் வகுப்பிலே நெருக்கத்தில் பிரயாணிகள் படும்பாட்டைவிட, அச்சுக் கோர்ப்போரால் பதங்கள் முகுதியும் நொந்து, உருவமும் இளைத்து உள்ள பொருளும் கெடுவது - அவைகளைப் பெற்ற தாய்மாராகிய ஆசிரியர்களுக்குக் கனத்த கண்ணீர்ப்ப் பெருக்கையுண்டு பண்ணிவிடுகின்றது. ஸ்ரீமான் நமச்சிவாய முதலியாரவர்களைப் போன்ற மகானுபாவர்களின் நூல்களிலே பதங்கள் விசாலித்த இடம்கொண்டு, ஒடிந்த பதங்களுக்கு வரியின் கடைசியில் (-) சிறு கோடும் இடப்பெற்று அழகு மிகுந்து ஆநந்தமாய்த் துள்ளிக் குதிக்கின்றன. பதங்களின் கருத்தும் நன்கு புலனாகின்றது. இவ்விதம் அச்சுக் கோர்ப்பதற்கு எழுத்துப் பிரதிகளிலேயே அவ்விதம் பதம் பதமாகத் தூரப் பிரித்து எழுத வேண்டுமென்று அச்சுக்கூடத்தார் நூலாசிரியர்களின் மீது குற்றஞ்சாட்டுகின்றார்கள். நூலாசிரியர்களோ தாம் எழுதிச் செல்வது எங்கே அது முடிவதற்குள் தமக்கு மறந்து போகின்றதோ வென்று மகாவேகமாய் தமது கற்பனையின் விஷயத்தை எதுவும் விட்டுவிடாமல் கடிதத்தில் அடக்கிவிட வேண்டி, மடமடவென்று கிறுக்கிக்கொண்டு போகவேண்டியவர்களாயுள்ளார்கள். ஆதலின் பதங்களைத் தூரத்தூர வைத்து ஒழுங்கு செய்ய அந்த எழுதும் அவசரத்திலே அவ்வளவாகச் சாத்தியப்படுவதில்லை.

இவ்விதம் பதங்களைத் தூரத்தூர வைத்து எழுதுவதிலே பாரதியார் மிகவும் தேர்ந்தவர். எவ்வளவு வேகமாய் எழுதிய போதிலும் ஒரு பதத்திற்கும் மற்றொரு பதத்திற்கும் வேண்டிய வரை தாராளமாக இடம் விட்டு எழுதுவதையே தமது வழக்கமாகக் கொண்டவர். பாடல்களைப் பதம் பதமாய்ப் பிரித்துத் தூரத்தூர எழுதுவதுபோல் வசன நடையையும் அமைத்து வரைவார்.

பாரதியார் தமது பத்திரிகைகள் நின்று போனபின்னர், சுதேசமித்திரனுக்குக் காளிதாஸன், சக்திதாஸன் என்ற பெயருடன் அநேக அரும்பெரும் விஷயங்களையும் அரிய கற்பனைக் கதைகளையும் எழுதி வந்தார். பாரத ஜனசபை என்று காங்கிரஸ் மகா சபையின் ஆதி வரலாறுகளை ஒவ்வொரு காங்கிரஸின் நடவடிக்கைகளையும் சுருக்கமாக விவரித்து இரண்டு பாகங்களாக இயற்றினார். அதன்பின் மகாகவி ரவீந்திரநாதரின் ஐந்து வியாசங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். அதிலே அவர் உபயோகித்துள்ள புதிய பதங்களும் அதை எழுதிச் சென்றுள்ள அர்த்த புஷ்டியான தமிழ் நடையும் தமிழ்நாட்டிற்குப் புதியவையாகும்.

பாரதியாரைப் பிடித்துத் தருவோருக்கு நூறு ரூபாய் பரிசு தரப்படுமென்று ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதிலே அவரது உயரம் இத்தனை அடியென்றும், கஞ்சா, புகையிலை உபயோகிப்பவரென்றும், பூணூலை எடுத்து விட்டவரென்றும் இன்றும் பல குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

பாரதியார் புதுச்சேரியில் பெரிய தாடிக்காரராகவும் விளங்கியதாய் அவ்வுருவில் எடுத்த படம் ஒன்றால் தெரிகிறது. இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள அவரது படம் அவரது வதனத்தின் உண்மையான அழகு கொண்டதாய் இருக்கவில்லை. தம்மைப் படம் பிடிக்கும்போதுகூட எதையோ நினைத்துக் கொண்டு விழித்தது போன்ற நிலையில் இப்போதைய படம் உள்ளது.

பாரதியாரை மன்னித்துவிடுவதாகச் சென்னை அரசாங்கத்தார் தெரிவித்த பின்பு, அவர் புதுச்சேரியிலிருந்தும் வெளிவரவும் உடனே கைதியாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். அதன்பின் அவரை விடுவிக்கும்படி போலீஸாருக்கு உத்திரவு வந்து, அதன் பின்னர் சென்னை வந்து சேர்ந்தார். பாரதியாரின் அக்ஞாத வாசம் தீர்ந்தது. அவரைப் பிடித்த சனியும் விலகிற்று.

5

கவிதையோ, நூலோ, ஒரு நற்கருமமோ எதுவும் திடீரென்று ஆக்கப்பெற்று விடுவதில்லை. அதற்கு ஒவ்வொரு கால சந்தர்ப்பங்கள் தோன்றிக்கொண்டு, தூண்டுதல் செய்து ஏவுகிற பலரோ சிலரோ ஒருவரோ ஏற்பட்டு, அவற்றால்தான் அவை நிறைவேற்றுவிக்கப்படுகின்றன. ஆகவே, கவிதையோ நூலோ இயற்றுதற்குச் சந்தர்ப்பம் - என்பது தேவைப்படுவதாகின்றது. கருத்து இன்றிக் கவிதைகள் தோன்றமாட்டா. ஒரு கருத்து மனத்தினிடை எழுவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியோ, ஒரு நினைவோ, கனவோ, ஒரு மனோபாவமோ, சிந்தனையோ - எதுவோ ஒன்று உதித்தால்தான் அவற்றின் பொருளைக் கவியிலே அமைத்துக் கவிதைகள் இயற்ற முடியும். விஷயமின்றி எவ்விதம் ஒரு கவி பாடுவது? பாடுவதற்கு ஏதேனும் ஒரு கருத்தின் துணை வேண்டுமே. அந்தக் கருத்துக்கு அதச் சம்பந்தித்த ஒரு நிகழ்ச்சியிருந்தாலன்றோ முடியும்? ஒரு நூல் இயற்றுவதற்கு ஏதேனும் சரக்கு கிடைத்தபிந்தான் அதைக் கொண்டு நூல் எழுதிவிட வேண்டுமென்ற நோக்கம் மனத்துள் உதிக்க, உடனே நூலை ஆக்குதற்கான சக்தியும் அடுத்தடுத்துத் தோன்றிக்கொண்டு தூண்ட அவ்வழியில் நூலும் நெடுக எழுதப்பட்டுப் பூர்த்தி கொள்ளலாம். இவ்வாறின்றி எவ்வித நோக்கமுமேயில்லாமல் திடீரென்று நூல் இயற்றுதல் என்பது எவ்வாறு கூடும்? கவிதைகள் புனைவதற்கும் இவ்விதமே எங்கிருந்தேனும் ஒரு சரக்கு கிடைக்க வேண்டும். அந்த சரக்கை ஆதாரமாய்க் கொண்டுதான் அது ஆக்கப்பட வேண்டும். இதைப் போலவே பாரதியாரின் பாடல்களும் 1906ஆம் வருஷம் முதற்கொண்டு 1920ஆம் வருஷம் வரையிலும் இடையிடையே ஏற்பட்ட ஸம்பவங்களின் பலனாகவும் தூண்டுதல்களின் காரணமாகவும் அவரது மனத்துள் பலவித புதுக் கருத்துகள் தோன்றிக்கொண்டு அவ்வப்போது பாடப்பெற்று, அவற்றுள் பெரும்பான்மையும் 'இந்தியா' பத்திரிகையில் வெளியாகி, அவர் காலத்திற்குப் பிறகு இப்போது தனி நூல் வடிவமாக வெளிவரலாயின.

ஃஃஃஃஃஃஃஃ

எண்ணிக்கையில் அடங்காத பாடல்கள் எவ்வளவோ கேட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பாடல்கள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் எந்தெந்த தூண்டுதலில் எந்தெந்த நோக்குடன் சொல்லப்பட்டனவென்ற வரலாற்றினை நாம் தெரிந்து கொள்வதற்கு முடிகின்றதா? இங்ஙனம் பாடப்பெற்ற சந்தர்ப்பங்களைக் கண்டுகொள்ளக் கூடிய விவரங்களுள்ள பாடல்கள் சொற்பமாகவே இருக்கும். அவ்வரலாறு தெரிந்து அப்பாடல்களை நாம் சிந்திக்கும் போதுள்ள சுவையினை, வெறுமனே அப்பாடலின் பொருளை மட்டிலும் தெரிந்துகொள்வதிற் பெற முடியாது. இதன் ஸம்பந்தமாக ஒரு குறிப்பு மட்டும் இவ் விஷயத்தின் தெளிவுக்காக இங்கு கொடுக்கின்றோம்.

ஃஃஃஃஃஃஃஃ

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்தகாலையில் 'தமிழ்நாட்டைப் பற்றி நல்ல கருத்துகள் அமையப் பெற்றதும் அதன் பெருமையை விளக்கக்கூடியதுமான பாடல்களை புனைந்து அனுப்புவோருக்கு இன்ன வெகுமதி தரப்படும்' என்று ஒரு விளம்பரம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. அதை பாரதியார் பார்த்தனரேனும் அவரது ஸ்வபாவப்படி அதை லக்ஷியம் செய்யாமல் விட்டுவிட்டார். எவரையும் மதிக்கப்பட்டவரல்ல. எல்லோருமே அவருக்கு ஒரு துரும்புபோல. ஒரு சக்கரவர்த்திக்குள்ள கர்வம் அவருக்கு இருந்தது. ஆனால் அன்பினரைக் காணினோ அவர்களின் கைக்குழந்தையாகி விடுவார். நில்லென்றால் நிற்பர், உட்காரு என்றால் உட்காருவர். அன்பின் வலையில் பாரதி சிக்கிவிடக் கூடுமேயன்றி அகோர கோப அச்சுறுத்தலின் வகையில் அவரை ஒரு விரலத்தனைகூட அசைக்க முடியாது. இது அவரது ஜென்மத்தோடு பிறந்த குணம். இதனை எழுதுங்கால் அவரோடு சண்டையிட்டு மிக்க ஆநந்தமாய்ப் போக்கிய அந்தப் பழைய நாட்களின் நினைவு நம் நெஞ்சில் புகுந்துகொண்டு மேலே எழுதுதற்குக் கூடாமல் கண்களில் ஜலம் நிறைந்து தத்தளிப்பு உண்டாவதால் இவ்விஷயத்தை இத்துடன் விட்டு ஒதுங்கிக் கொண்டு விடுகிறோம்.

ஃஃஃஃஃஃஃ

பாரதியாரின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்ரமணிய ஐயரவர்களும் மற்ரும் சில நண்பர்களும் அந்த விளம்பரத்தின்படி ஒரு பாடல் செய்ய வேண்டுமென்று பாரதியாரை நிர்ப்பந்தப் படுத்தினர். அவர்கள் அதிகாரம் செய்யப் பாத்தியதைப் பெற்றவர்கள். பாரதியார் இவர்களின் விருப்பத்தைக் கேட்டுப் புன்னை கொண்டார். வேறு பதில் சொல்லவில்லை. அதன் பின்பு வாத்தியார் ஐயரவர்கள், "வெகுமதிக்கு, நான் உங்களைப் பாடும்படி சொல்லவில்லை; சங்கத்துப் பண்டிதர் அநேகரின் முன்பு உங்கள் கவி ஜோடி கேட்கட்டுமே என்றுதான் சொல்லுகிறேன். சங்கத்தார் கவி கேட்பது, தமிழர்தம் நாட்டைப் பற்றி செந்தமிழில் பாடிக் களிக்கட்டும் என்ற நோக்கத்துடன்தான்; ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் லோபித்தனம் காட்ட வேண்டும்? என்று குத்திப் பேசிக் கேட்டார். "அதற்கு நான் சொல்லவில்லை" என்று இழுத்தார் பாரதியார். வாத்தியார் "அதெல்லாம் போகிறது, எங்களுக்குத் தேவை ஸ்வாமி" என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

ஃஃஃஃஃஃஃ

பாரதியார் அதற்கு "நான் கட்டாயம் பாட்டு எழுதிவிட்டு மூச்சு விடுகிறேன். அது வேண்டுமென்கிற சன்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் சர்க்காருக்கு நண்பர்கள்; எனது கவியை "நல்லது" என்று அவர்கள் உரத்துச் சொல்லக்கூடப் பயப்படுகிறவர்கள், அதனால் தான் தாமதித்தேன்" என்று சொல்லி ஒரு நிமிஷ நேரம் பூப்பூவாய் நகைத்தார். உடனே வரைவதற்கு எழுதுகோலைக் கொண்டார்.

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே" ...

என்று பல்லவி எழுதி வாசித்துக் காண்பித்தார். வாத்தியார் மலைத்தார். எடுத்த விஷயங்கள் அத்தனையும் பல்லவியிலேயே சுருக்கமாய் முடிந்துவிட்டது. கவிதையிலே காதில் இனிப்புப்படச் சரக்குக் கூட்டவேண்டுமென்று நிபந்தனையுண்டு. இந்தக் கவிதையில் காதினிலே தேன்வந்து பாய்வதாகச் சொல்லியாய்விட்டது. அங்கிருந்தவர்களின் செவிக்கும் தேன்போலவே தித்தித்தது. மற்றும் தமிழ்நாட்டருக்கும் தமிழனுக்கும் அவர் குறித்திருக்கும் வீரவன்மை அளவற்றது. சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற வார்த்தையை உணர்ச்சி உள்ள ஒருவன் சேர்ந்தாற்போல் உச்சரிப்பானாயின் மார்பு கனத்துத் தோள் பூரிக்காமல் இருக்க வழியில்லை. பிறகு மற்ற சரணங்களையும் எழுதி முடித்தார். அதைத் தமிழ் சங்கத்தாரின் விலாஸத்துக்கும் அனுப்பினர். ஆயினும், சங்கத்தாரைப் பற்றிப் பாரதியார் ஆசி கூறியது பொய்யாகிவிடவில்லை. இவ் வரலாறுகளை நமது அன்பர் க.சு.பாரதிதாசனின் அலங்காரமான வசன நடையில் கேட்டால் இன்னும் இனிக்கும்.

(கட்டுரையாசிரியர் குறிப்பிடும் பாரதிதாசனின் அந்தப் பகுதி படிப்போர் அறிந்து கொள்வதற்காக இங்கே கொடுக்கப்படுகிறது. இது நமது முதல் பாட திட்டத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது)

"தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்க் கவிகள் தந்தால்
அமைவான பாட்டுக்கு அளிப்போம் பரிசு என்று
சான்ற மதுரை தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போன்ற கவி ஒன்று செப்புகநீர் என்று
பல நண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார், அதற்கு நமது ஐயர்
என் கவிதான் நன்றாயிருந்திடினும் சங்கத்தார்
புன்கவி என்றே சொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்
அந்த விதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெல்லாம்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்ற
அழகுத் தமிழ் நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்
காது இனிக்கும் நல்ல கருத்து இனிக்கும் பாட்டு இந்நாள்
மேதினியிள் சோதி விளக்கு"

(கட்டுரையாசிரியர் 1928ஆம் வருடத்தில் எழுதிய இந்தக் கட்டுரையில் இடையிடையே அவர் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளை வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக சில இடங்களில் கொடுத்திருக்கிறோம். எனினும் கட்டுரையின் வேகமும் கருத்துக் கோர்வையும் தடைபடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம்.)


ஃஃஃஃஃஃஃ

இவ்விதமே ஒவ்வொரு விஷயத்துக்கும் அந்தந்த வேளைக்குத் தக்கவாறு தூண்டுதல்கள் தோன்றிக்கொண்டு அவைகள் நிறைவேறிப் புஷ்பித்துக் காய்த்துக் கனியாகின்றன. மேற்கூறிய தூண்டுதலும் சந்தர்ப்பமும் நேரிடாவிடில் பாரதியார் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாடலைப் பாடியிருக்க முடியாது. இதனால் கவிதா சக்தியின் உதயம் எவ்வெப்போது நேரிடுகின்றதென்பதையும், ஒவ்வொரு பாடலுக்கும் அதைப் பாடிய காரணமும் ஒன்று இருக்கக் கூடுமென்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். இவ்விதம் பல சமயங்களில், பல தினங்களில் பாடிய பாடல்களெல்லாம் ஒருங்கு சேர்ந்து பின்பு ஒரு பாடற்புத்தகமாக உருக்கொள்ளுகின்றது. ஒரு பாடற்றிரட்டு நூல் தயாராகும் வரலாறு இவ்விதமாகத்தான்.

பாரதியார் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்ததினால், 'தமிழ்நாடு' என்ற அளவிலேயே அவருக்குத் தேன்போல் இனிக்கவும் அதையே கவிதையிலும் சேர்த்தார். எதுவும் இயற்கையில் தானாகவே சுயமாக அப்படியப்படியே வந்து விழுந்து காகிதத்தில் நிறைந்தால்தான், அது இயற்கையின் அழகு ததும்பி மணக்கும். தானே வருந்தி கஷ்டப்பட்டு எழுதுவது அவ்வளவு ருசிக்காது. அதிலே இயற்கையின் நறுமணம் கமழாது. பாரதியாரின் பாடல்கள் சக்தியின் தூண்டுதலால் தானாகவே, சுயமாக எழுந்ததன்றிப் பிரயத்தனம் செய்து எழுதப்பட்டதன்று.

6

சென்னைக்கு வந்தபின்பு பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராய் விளங்கினார். அவரது துள்ளிக் குதிக்கும் நடையைக் காண்பவர்கள் 'ஓ! இது பாரதி எழுதியது' என்று தெரிந்து கொள்ளாமற் போகார்.

காதல் முறையில் நவீனமாகக் கவிதைகள் இயற்ற வேண்டுமென்றும், 'பச்சை பச்சை'யாக எழுதும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்து, அதற்கு உதாரணமாக "வள்ளிப்பாட்டு" என்ற சிங்கார ரஸ கீர்த்தனையை 1920ஆம் வருஷ "மித்திரனில்" அனுபந்தத்தில் வெளியிட்டார். இன்னும் அநேக பாடல்கள் இயற்றி வைத்து இருப்பதாகவும் அதன் முகவுரையில் கூறியிருந்தார். இனியும் இயற்றலாம் என்று எவ்வளவோ கருதி இருக்கலாம்.

ஃஃஃஃஃஃஃ

புதிய உருவில் வங்காளி போன்றும், ஒரு யுத்தவீரன் போன்றும் சென்னையில் விளங்கிய பாரதியாரை ஒரு தினம் சுதேசமித்திரன் காரியாலயத்தில் மாலைப் பொழுதில் உட்காரவைத்துப் பாடும்படி நாமும் இன்னும் சிலரும் கேட்டுக் கொண்டோம். ஆ! அப்பொழுது அவர் தம்மையே மறந்து பாடிய இன்ப ரஸத்தை நேரிலிருந்து அனுபவித்தவர்களே உணரவல்லார். அவர் நம்மோடு திருவல்லிக்கேணி கடற்கரையில் பழைய நாட்களில் (1907ஆம் வருஷத்தில்) எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கின்றார். அவர் பாடுகையில் அந்தப் பாட்டின் அத்தனை ரஸங்களும் அவரது வதனத்தில் தத்ரூபமாய்த் தோன்றி ஜ்வலிக்கும்.

பாரதியார் எவ்வளவோ காலம் வாழப் போவதாக எண்ணியிருந்தார். எவ்வளவோ வேலைகள் செய்ய நினைத்திருந்தார். ஒரு வாரப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்று நம்மிடம் தர்க்கித்தார். பழைய இந்தியாவின் காரமான நடை கூடாதென்று நாம் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். 1920ஆம் வருஷத்து சுதேசமித்திரன் அனுபந்தத்தில் நல்ல வேலை செய்தார். 1921ஆம் வருஷ 'மித்திரன்' அனுபந்தத்திற்கு அவர் இல்லாமற் போய்விட்டார். அவர் வாழ்த்திச் சென்ற தமிழ்நாட்டில் சமீபத்தில் அவரது கீதங்களை அரசாங்கத்தினர் தடுத்துவிட்ட 'திருவிழா'வும் நடந்தது. நற்காலமாய் அந்தத் தடை நிவர்த்திக்கப்பட்டது. தமிழகத்தின் பாக்கியமே. பாரதியார் 1907ஆம் வருஷத்தில் தமது நண்பரொருவர் மரித்ததற்காக இரங்கிச் சில பாடல்கள் புனைந்தார். அச்சமயம் நாமும் அருகிலிருந்தோம். அவற்றின் இரண்டு அடிகளை இப்பொழுது பாரதியாருக்கே உபயோகித்து இவ் வியாசத்தை முடிக்கின்றோம்.

"அந்தோ மறலிநம் அமுதினைக் கவர்ந்தான்
நொந்தோ பயனிலை; நுவலயா துளதே!"

(இக்கட்டுரை "அமிர்தகுணபோதினி" எனும் மாத இதழில் 1928 நவம்பர், டிசம்பர், 1929 ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளிவந்தது)

2. பாரதியின் அறிவியல் பார்வை

முனைவர் திருமதி பி.பார்வதி, எம்.ஏ.,எம்.பிஃல்,பி.எச்டி.,
தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.


(மகாகவி பாரதியின் 125ஆவது பிறந்த நாளையொட்டி, புதுவை பல்கலைக் கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் சென்னையில் ஆண்டுதோறும், மகாகவியின் பிறந்த நாளை அவரது நினைவகத்தில் சிறப்பாகக் கொண்டாடிவரும் வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கொன்றை புதுவை பல்கலைக் கழக வளாகத்தில் 2007 செப்டம்பர் 21 முதல் 23 வரை மிகச் சிறப்பாக "பாரதி 125" பன்னாட்டுக் கருத்தரங்கம்" எனும் பெயரில் நடத்தின. இதில் சுமார் 140 கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். இதன் பதிப்பாசிரியர்களாக முனைவர் அ.அறிவுநம்பி (புதுவைப் பல்கலைக் கழகம்) அவர்களும், சென்னை வானவில் பண்பாட்டுக் கழக நிறுவனர் வழக்குரைஞர் கே.இரவி அவர்களும் செயல்பட்டு சிறப்பான நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் உள்ள அத்தனை கட்டுரைகளும் சிறப்பானவை. அவற்றில், புதுமையான கண்ணோட்டத்தோடும், பயனுள்ள பல நல்ல செய்திகளொடும் காணப்படும் 'பாரதியின் அறிவியல் பார்வை' எனும் கட்டுரை நமது கவனத்தை ஈர்த்தது. அதனை குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திருமதி பி.பார்வதி, எம்.ஏ.,எம்.பிஃல்.,பி.எச்டி., அவர்கள் எழுதியிருக் கிறார்கள். முனைவர் பார்வதி அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் கல்விப் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர். 57 வயதாகும் இந்தப் பேராசிரியரின் தமிழார்வமும், குறிப்பாக மகாகவி பாரதியின்பால் கொண்டுள்ள பக்தியையும் இந்த கட்டுரையிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இளைய தலைமுறையினருக்கு நமது பூர்வீக மஹான்கள் தந்துவிட்டுச் சென்றிருக்கிற அறிவியல் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற தாகத்தால் விளைந்தது இந்தக் கட்டுரை. நமது அஞ்சல் வழிப் பாடத்தில் அந்த கட்டுரையைப் பாடமாகக் கொடுப்பதின் மூலம் அதிலுள்ள செய்தி மேலும் பரவும் என்ற நோக்கத்தில், அந்த கட்டுரையை இந்த மாதப் பாடமாகக் கொடுத்திருக்கிறோம். படியுங்கள். புத்தக வெளியீட்டாளர்களுக்கும், பதிப்பாசிரியர்களுக்கும், கட்டுரை ஆசிரியருக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறோம். பாரதி பணியில் இந்த தலைப்பிலான கட்டுரை ஓர் புதிய மைல் கல். படிப்போம்; பயன்பெறுவோம்)

பாரதியின் அறிவியல் பார்வை

மகாகவி என்றும் தேசியகவி என்றும் போற்றப்படும் பாரதி தமது 39 வயதிற்குள் கவித்திறமையாலும், தேச பக்தியாலும் தமிழ்நாட்டைத் தன் வசப்படுத்தினார். சிறு வயது முதற்கொண்டே தேசபக்தியுடையவராய், விடுதலை உணர்வைத் தமிழ் மக்களுக்கு ஊட்டிச் சுதந்திரப்பள்ளு பாடியவர்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"

எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். மரணமில்லா பெருவாழ்வைப் பெற்ற பாரதி தேசபக்தியில், இறை நம்பிக்கையில், தேச விடுதலையில், பத்திரிகை தொழிலில் தோய்ந்திருந்தாலும் அறிவியல் பார்வையுடையவராகவும் திகழ்ந்திருக்கிறார். இக்கட்டுரை பாரதியின் அறிவியல் அறிவை எடுத்துரைக்கிறது.

மேலை நாடுகளின் தொழிற்புரட்சி அறிவியல் தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கக் காரணமானது. இதனால் மின்சாரம், தந்தி, தொலைபேசி, வானொலி போன்ற கருவிகள் 1830-1900 கால இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலை கீழை நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களையும், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியையும் உலகியல் கண்ணோட்டம் கொண்ட பாரதி கவனித்து வந்தார். எனவே, தமது இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் செய்திகளைப் பதிவு செய்து வைத்துள்ளார். இச்செய்திகளை வளர்ந்து வரும் தொழில் நுட்பம், வானியல் என்ற இரண்டு தலைப்புகளில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. பாரதியின் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் செய்திகள் இவண் பேசப்படுகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம்.

மேலை நாடுகளில் தொழிற்புரட்சி, தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ளக்கூடிய கட்டாய நிலையை உருவாக்கியது. எனவே, தகவல் பரிமாற்றத்திற்குரிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தனர். தகவல் பரிமாற்றத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தந்தியும், தொலைபேசியும் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஐந்தாவது ஆண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1901-இல் மார்க்கோனி என்ற அறிஞர் வானொலியைக் கண்டுபிடித்தார். இதன் பயன்பாடு தந்தி, தொலைபேசியைவிடச் சிறப்பாக இருப்பதை பாரதி தமது உலகியல் கண்ணோட்டத்தின் வழி அறிந்தார். இத்தொழில்நுட்பம் பற்றிய கருத்துக்கள் தமிழகத்திலும் பேசப்பட்டன.

தேசவிடுதலையை அடிநாதமாகக் கொண்ட பாரதிக்கு மக்களிடையே விழிப்புணர்வை, விடுதலை உணர்வைப் பரப்ப வானொலி பயன்படும் எனக் கருதினார். எனவே, தன் எண்ணத்தை 'பாரத தேசம்' என்ற பாடலில்,

'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்'

என வெளிப்படுத்தினார். தீவிர விடுதலைப் போராட்ட வீரராகிய பாரதி ஆங்கிலேயரை வெல்ல ஆயுதங்கள் செய்வோம் என்றார். இதழியலாளர் என்ற முறையில் பத்திரிகை வழி மக்களிடையே விடுதலை உணர்வைப் பரப்பிய பாரதி பத்திரிகைக்குரிய காகித ஆலையை உருவாக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். ஆயுதங்கள் செய்வதற்கும், காகிதத்தை உற்பத்தி செய்வதற்கும் தொழிற்சாலை தேவை. இதனை நிர்வகித்து நடத்த கல்வி வேண்டும். எனவேதான் பாரதி, ஆயுதம் செய்வோம், காகிதச்சாலை அமைப்போம், கல்விச் சாலைகளை வைப்போம் என வரிசைப் படுத்திக் கூறியுள்ளார் எனலாம்.

வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கருத்துகளை கவிதை வழி வெளியிட்ட பாரதி, உள்நாட்டு அறிவியல் வளர்ச்சியைக் கட்டுரை வழி எடுத்துரைத்துள்ளார். பாரதியின் காலத்தில் இந்திய நாட்டின் விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழந்தவர் ஜகதீச சந்திர போஸ். இவர் மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பதைச் செய்முறைப் பயிற்சி வாயிலாக நிரூபித்தார். இந்நிகழ்வை பாரதி 'உயிரின் ஒலி' என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். 'செடியின் நாடியுணர்ச்சிக்கும் இதர மனுஷ்ய மிருக ஜாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பதைத் தமது அற்புதமான பரீட்சைகளினால் உலகத்தின் உயிரொலியை நமக்குத் தெரியும்படிச் செய்தவர்' (பாரதி நூல்கள், ப.66) என ஜகதீச சந்திர போஸைப் பாராட்டுகிறார் பாரதி. இதன் வழி தனது காலத்தில் இந்திய நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்பில் அறிஞர்கள் முனைந்து செயல்பட்டு புதிய அறிவியல் கருத்துகளை உலகிற்கு எடுத்துரைத்த பாரதி போற்றுகிறார். தொழில்நுட்பக் கருத்துகளைக் கூறிய பாரதியின் படைப்புகளில் வானியல் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.

வானியல் அறிவு.

சூரியக் குடும்பத்தையும், பால்வெளிவீதியையும் (Milkyway) ஆராயும் அறிவை வானியல் அறிவு என்பர். இந்தியர்கள் பழங்காலம் தொட்டே வானியல் அறிவுடையவர்களாக விளங்கியதை வேதங்களும், உபநிடதங்களும் எடுத்துரைக்கின்றன. தமிழர்களும் வானியலில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் நிலை நாட்டுகின்றன. காலந்தோறும் எழுந்த தமிழ் இலக்கியங்கள் தமிழர்தம் வானியல் அறிவை, வானவெளியை ஆராய்ந்த விதத்தை எடுத்துரைக்கின்றன. பாரதியும் கவியில் வல்லவராக இருப்பதோடு வானியல் அறிவு பெற்றவராகவும் விளங்கியுள்ளார் என்பதை அவர்தம் படைப்புகள் எடுத்துரைக்கின்றன.

பாரதியார் கூறும் வானியல் செய்திகளை 1. அண்டவெளியின் தன்மை 2. சூரியகுடும்பம் 3. சக்தி அழிவில்லாதது 4. பூமியின் சுழற்சி 5. காற்றின் இன்றியமையாமை 6. சோதிடம் எனும் ஆறு தலைப்புகளில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. இக்கருத்துகளில் சோதிடம் தவிர்ந்த ஐந்து தலைப்புகளுக்கு உரிய கருத்துகள் வசன கவிதையில் இடம்பெற்றுள்ளன.

அண்ட வெளியின் தன்மை.

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. ஆனால், பால்வெளிவீதியாகிய அண்ட பகிரண்டம் ஒளி, ஆகாயம் என்ற இரண்டை மட்டுமே கொண்டிருக்கிறது. இதனை பாரதி தமது வசன கவிதைகள் வழி எடுத்துரைக்கிறார். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என்ற இரண்டு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஆய்வுக் கூடத்திலிருந்து மீண்டும் பூமிக்கு வர ஏற்பட்ட பிரச்சினைகள் நாடறிந்ததே. திரும்பி வந்த விண்வெளி ஓடம் பூமியின் மேற்பகுதியில் உள்ள காற்றுப் பகுதிக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட உராய்வினால் தீப்பிடித்ததால் கல்பனா சாவ்லா என்ற இந்திய விஞ்ஞானி மரணமடைந்தார். சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வரவேண்டிய விண்வெளி ஓடத்திலும் இத்தகு பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற ஐயமும் பயமும் அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் மட்டுமல்ல, உலகமக்கள் அனைவரிடமும் காணப்பட்டதை நாம் அறிவோம். கடவுள் புண்ணியத்தால் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சுனிதா வில்லியம்ஸ் தரை இறங்கியதை உலகமே கொண்டாடியது. இதன் வழி ஒளி, ஆகாயம் என்ற இரண்டு பூதங்களைக் கொண்ட பரவெளியிலிருந்து ஐம்பூதங்களைக் கொண்ட பூமிக்குத் திரும்ப வேண்டுமென்றால் காற்று மண்டலத்தைக் கடந்துதான் வரவேண்டும் என்பதை இன்று யாவரும் அறிந்துள்ளனர். அதற்கு இன்றைய கால தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இணையதளம் போன்றவையே காரணங்களாகும். ஆனால், இத்தகைய எந்த தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வாழ்ந்த பாரதி இதனை அறிந்துள்ளார். மிகச் சிறந்த வசன கவிதை வழி எல்லோருக்கும் புரியும் வகையில் அக்கருத்தை எடுத்துரைத்துள்ளார்.

'வானவெளி என்னும் பெண்ணை ஒளியெனும் தேவன் மணந்திருக்கிறான்
அவர்களுடைய கூட்டம் இனிது.
இதனை காற்றுத் தேவன் கண்டான்
காற்று வலிமையுடையவன்
இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான்
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை
இவன் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுப்பொல் கலந்தன
காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்
அவன் அமைதியின்றி உழலுகின்றான்
அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான்,
ஓலமிடுகின்றான், எழுகின்றான், நிலையின்றிக் கலங்குகின்றான்,
வெளியும் ஒளியும் மோனத்தில் கலந்து நகை செய்கின்றன.
காற்றுத் தேவன் வலிமையுடையவன்
அவன் புகழ் பெரிது. அப்புகழ் நன்று.
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
அவை மோனத்திலே கலந்து சித்தம் இன்புறுவன
அவை வெற்றி யுடையன
ஞாயிறே, நீதான் ஒளித் தெய்வம்.
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கின்றாள்.
உங்கள் கூட்டம் மிக இனிது. நீவிர் வாழ்க.'

என்ற பாரதியின் வசன கவிதை வரிகள் பூமியின் மேற்பரப்பில் காற்றும், அது புகமுடியாத உயரத்தில் வானமும், ஒளியும் இருப்பதை கவிதை நயத்துடன் எடுத்தியம்புகின்றன. அண்டபகிரண்டத்தில் காற்று இல்லை என்ற வானவியல் தன்மையை பாரதி உணர்ந்திருந்தான் என்பதை இதன் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

சூரிய குடும்பம்.

சங்கப் புலவர்களும் அவர்களுக்குப் பின் வந்த தமிழ் இலக்கியவாதிகளும் சூரிய குடும்பம் என்றால் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது என்ற ஒன்பதைக் குறிக்கின்றனர். தொலைநோக்கியைக் கண்டுபிடித்த பின்புதான் யுரேனஸ், நெப்டியூன் என்ற இரண்டு கோள்களையும் சூரிய குடும்பத்தின் கோள்களாக ஐரோப்பியர் கொண்டனர். பாரதியும் ஐரோப்பியர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டார் என்பதை

'ஞாயிறே நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றன,
பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் முதலியன பல நூறு வீடுகள்
இவையெல்லாம் நின்கதிர்பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல, இவையெல்லாம்
ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டனவென்பர்'

என்ற வசன கவிதையின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் சூரியன் ஒளிபட்டுத்தான் வெளியே தெரிகின்றன என்பதும், சூரியனிலிருந்து வெடித்து வெளிப்பட்டவை என மேனாட்டார் கூறிய செய்திகளையும் இவ்வரிகள் வழி எடுத்துரைக்கிறார். மேலும் சூரிய குடும்பத்தைச் சார்ந்த கோள்கள் ஒவ்வொன்றும் சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக தங்களது வரைகடவாது சுழல்கின்றன என்ற அறிவியல் செய்தியை

'செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன
அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்ல மாட்டா
அவன் எப்போதும் இவற்றை நோக்கியே இருக்கிறான்'

என்ற அடிகள் வழி எடுத்துரைக்கிறார்.

தூமகேது.

வானத்தில் அதிகாலைப் பொழுதில் தோன்றும் வால்நட்சத்திரத்தைத் தூமகேது என்று அழைப்பர். வால் நட்சத்திரம் வானத்தில் தோன்றினால் நாட்டில் மிகப் பெரிய கேடு நிகழும் எனக் கூறுவர். இந்த வால் நட்சத்திரம் எவ்வாறு தோன்றுகிறது? அதன் தன்மைகள் என்ன? அதனால் விளையும் செயல்கள் என்னென்ன என்பதை 'சாதாரண வருஷத்து தூமகேது' என்ற பாடல் வழி பாரதி எடுத்துரைக்கிறார்.

தினை என்பது மிகவும் சிறிய தானியம். பனை என்பது மிக உயர்ந்த மரம். ஒரு தினையின் மீது பனை நிற்பது போன்று ஒரு சிறிய விண்மீன் மிகப் பெரிய ஒளி மிகுந்த வாலினைக் கொண்டிருக்கும் என்பதோடு அது கீழ்த்திசையில் இருக்கின்ற வெள்ளி மீனோடு தோன்றும் என்றும் கூறுகிறார். மேலும் இந்த ஒளி மிகுந்த வால் வாயு நிறைந்தது என்பதை

'எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை யின்றதோர் வாயுவால்
புனைந்த நன்னெடு வால் போவதென்கிறார்' (சாதாரண வருஷத்து தூமகேது)

என்ற வரிகள் வழி எடுத்துரைக்கிறார். இந்தச் செய்தியை பாரத நாட்டு பழைய நூல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளன. ஆனால், இன்றைய காலத்தில் மேனாட்டார்தான் இதன் தன்மையை அறிந்துரைத்ததாக பாரத நாட்டினர் நம்புகின்றனர் எனக் கூறும் பாரதி இவ்வால் நட்சத்திரம் 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என அதன் வரவை எடுத்துரைக்கிறார். சாதாரண வருஷத்தில் வந்த தூமகேதுவால் கேடுகள் விளையாது பல நன்மைகள் விளையும் என வானியல் அறிஞர்கள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு, பாரதி தூமகேதுவிடம் தொல்புவியதனைத் துயர்கடல் ஆழ்த்துவாயா? புவியினைப் புனிதமாகப் புனைவதற்கா? எண்ணிலா புதுமைகள் விளையும் என்கிறார்களே அது உண்மையா? நின் வரவால் பலவும் விளையுமா? என்றெல்லாம் கேட்டு தூமகேது வருவதால் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் எவையெவை என்பதை எடுத்துரைக்கிறார்.

சக்தி அழிவில்லாதது.

சக்தியை அழிக்க முடியாது. ஒரு சக்தி மற்றொரு சக்தியாக மாறும் என்பது அறிவியல் கண்டுபிடிப்புக்களுள் ஒன்றாகும். இந்த அறிவியல் செய்தியை பாரதியார் அவருக்கே உரிய பாணியில் வசன கவிதையாக வெளியிட்டுள்ளார்.

'உடலைக் கட்டு உயிரைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு சக்தியைக் கட்டலாம்
அறிந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை'

எனக்கூறிய பின் அதனை விளக்க தலையணையைச் சான்றாகக் கூறுகிறார். ஒரு பஞ்சுத் தலையணைக்கு வடிவம், நியமம் இருக்கிறது. ஏதோ ஒரு சக்தி அதன் பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறது. காலங்கள் மாற அந்தத் தலையணையின் வடிவத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் அந்த வடிவத்தில் சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கவில்லை என்றால் அது அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணையாக மாறுகிறது. அப்பொழுது அந்தத் தலையணையில் உள்ள பஞ்சை எடுத்துக்கொண்டு மேலுறையைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய துணியில் அப்பஞ்சை அடைக்கும்போது புதிய வடிவம் வந்துவிடுகிறது. இந்த சான்றை எடுத்துரைத்த பாரதி

'வடிவத்தைக் காத்தலால்
சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை,
எங்கும் எதனிலும், எப்போதும் எல்லாவிதத்
தொழில்களும் காட்டுவது சக்தி'

என்று கூறுகிறார். இதன் வழி சக்தியை அழிக்க முடியாது. ஆனால், அச்சக்தி வடிவத்தை மாற்றிக் கொண்டிருக்கும் என்ற அறிவியல் கருத்தை மிகச் சிறந்த சான்று வாயிலாக எடுத்துரைத்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

சக்தி எது என்பதை 'அனந்தசக்தி' என்ற கட்டுரையில் பாரதியார் விளக்குகிறார். "எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச் செல்கிறது. எதனால்? சக்தியினால். தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னை சுற்றிவரும்படி சூரிய கோளம் நியமித்திருக்கிறது எதனால்? சக்தியால்" எனக்கூறி சக்திக்கு விளக்கம் தருகிறார்.

பூமியின் சுழற்சி.

'சக்திதான் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம். சக்திக்கடலிலே ஞாயிறு ஓர் நுரை. சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழி. சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம். மகாசக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்' என்றெல்லாம் ஞாயிறையும், காற்றையும் சக்தியின் படைப்புகள் என்று கூறும் பாரதியார் உலகச் சுழற்சிக்கும் இச்சக்தியே காரணம் என்கிறார்.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இச்சுழற்சிக்கு பூமியின் ஈர்ப்பு சக்திதான் காரணம் என்ற அறிவியல் செய்தியை மிக அழகாக தமது வசன கவிதையில் பாரதி எடுத்துரைத்துள்ளார். பூமியின் மேற்பகுதியில் காணப்படும் பள்ளங்களில் கடல் நீர் இருக்கிறது. பூமி வேகமாகச் சுழலும் போது இந்த தண்ணீர் கீழே கவிழுவதில்லை. வீடுகள், மலைகள் புரளவில்லை. இதற்குக் காரணம் ஆகர்ஷண சக்திதான் என்கிறார் பாரதி. இதனை.

'பராசக்தியின் ஆணை
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்
அது பொருள்களை நிலைப்படுத்துகிறது
மலை நமது தலைமேலே புரளவில்லை
கடல் நமது தலைமேலே கவிழவில்லை
ஊர்கள் கலைந்து போகவில்லை
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்' (வசன கவிதை)

என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஆகர்ஷண சக்தியைப் போற்றிய பாரதி உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத காற்றின் தன்மையையும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.

காற்றின் இன்றியமையாமை.

உயிர்கள் வாழ காற்று அவசியம். இக்காற்றை வாயு என்றும் அழைப்பர். அறிவியல் யுகத்தில் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் செயற்கைக் கோள்களை அனுப்பி அங்கு நம்மைப் போன்ற உயிர்ப்பிராணிகள் எவையேனும் தென்படுகிறதா என விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். சந்திரனிலும், வியாழனிலும் காற்று இல்லை. எனவே, உயிர்ப்பிராணிகள் இல்லை என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் தற்பொழுது செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளனர். இதன் வழி பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான பிராணவாயு இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

பாரதியும் காற்று என்பது எது? அதன் இயல்பு என்ன? அதன் வகைகள் யாவை போன்ற பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அறிவியல் பூர்வமான பதிலையும் தந்துள்ளார். உயிருடையன எல்லாம் காற்றின் மக்கள் என்று வேதங்கள் கூறிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு,

'உயிர் பொருள், காற்று அதன் செய்கை
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள்
அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று
காற்றே உயிர்'

எனக் காற்றை விளக்கிய பாரதி, இக்காற்றை உலக மக்கள் வாயுதெய்வம் ஏறிவரும் தேர் என அழைக்கிறார் என்றும் கூறுகிறார். இக்காற்றின் இயல்புகளை

'பனிக்கட்டியிலே சூடேற்றினால், நீராக மாறிவிடுகிறது
நீரிலே சூடேற்றினால் 'வாயு' வாகிவிடுகிறது
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது
அத் திரவத்திலே சூடேற்றினால் வாயுவாகின்றது
இங்ஙனமே உலகத்துப் பொருள்களனைத்தையும் வாயு
நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம்
இந்த வாயு பெளதீகத்தூள்
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்
தேவனென்று வணங்குகிறோம்'

என விளக்குகிறார். இக்காற்றுதான் மனிதனை இன்பமுடன் வாழவைக்கிறது. நம்மை நோயினின்றும் காக்கிறது. நல்ல மருந்தாக, நமக்கு உயிராக, அமுதமாக இருக்கிறது. இது சக்தியின் குமரன் என்றும், காற்றை அதன் சிறப்பை எடுத்துரைக்கும் பாரதியார் நம் உடலில் இருக்கும் காற்றின் வகைகளையும் எடுத்துரைக்கிறார்.

நம் உடலில் இருக்கும் காற்றினைப் பத்தாகக் கூறுவர். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, தும்மற் காற்று, விழிக்காற்று, கொட்டாவிக் காற்று, இமைக்காற்று, வீங்கற் காற்று என அவற்றை அழைப்பர். இவற்றுள் உயிர்வளியை பிராணன் என்றும் மலக்காற்றை அபானன் என்றும், தொழிற் காற்றை வியானன் என்றும், ஒலிக்காற்றை உதானன் என்றும், நிரவுக்காற்றை சமானன் என்றும் அழைப்பர். பாரதி இக்காற்றின் பெயர்களை அறிந்திருக்கிறார். இதனை

'ப்ராண வாயுவைத் தொழுகின்றோம்; அவன் நம்மைக் காத்திடுக;
அபாநனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
வ்யானனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
உதாநனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
ஸமாநனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம், உயிர் வாழ்க!

என்ற வரிகள்வழி அறியமுடிகின்றது. இக்காற்றே இவ்வையகத்தின் உயிர் என்பதை

'சந்திரன் சுழல்கின்றது; ஞாயிறு சுழல்கின்றது
கோடி கோடி கோடி கோடி யோசனை தூரத்துக்கப்பாலும்
அதற்கப்பாலும், அதற்கப்பாலும் சிதறிக் கிடக்கும்
வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டேதானிருக்கிறது'

எனவே, இவ்வையகம் உயிருடையது/வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம் என்ற வரிகளில் எடுத்துரைக்கிறார்.

சூரியன் கடலை வற்ற வைத்து இனிய மழையைத் தருகிறான். இம்மழையைப் பொழியும் மேகங்களைக் காற்றுதான் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே, மழை பொழிவதற்கு ஞாயிறும், காற்றும் காரணங்களாகின்றன. காற்று வெம்மை மிகுந்த பிரதேசங்களில் உருவாகும் மேகங்களை வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் கொண்டு வந்து மழையைப் பொழிவிக்கிறது என்பது அறிவியல் செய்தியாகும். கடல் மட்டத்திற்கு மேல் உள்ள காற்றின் அழுத்தம் குறைந்தால் அதனைக் காற்றழுத்தம் என வானியலாளர்கள் கூறுவர். குறைந்த காற்றழுத்தம் மழையைக் கொண்டு வரும். இதனை அவர்கள் 'காற்றுப்பள்ளம்' என்று அழைக்கின்றனர். இதனையே இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். காற்றழுத்தம் மெதுவான சுழற்சி என்றால் புயல் என்பது அதிவேக சுழற்சியாகும். இத்தகைய அறிவியல் கருத்துக்களைப் பாரதி

'வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய
பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
கொண்டு வருகிறது;
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை
கடற் பாரிசங்களிலிருந்தே வருகின்றது;
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
மழை கொண்டு வா!
உனக்குத் தூப தீபங்கள் ஏற்றி வைக்கிறோம்'

எனக் காற்றை வணங்குகிறார். இங்கு கடற்பாரிசம் என்று பாரதி குறிப்பிடுவது காற்றழுத்த தாழ்வுநிலையைத்தான். இன்று செயற்கைக் கோள்கள் வந்த பின்புதான் காற்றழுத்த தாழ்வு நிலையே மழைக்குக் காரணம் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். எந்தவித தொழில்நுட்பமும் இல்லா அக்காலத்தில் வாழ்ந்த பாரதியார் பல நுட்பமான அறிவியல் கருத்துகளை அறிந்து வைத்துள்ளார் என்பதை அவரது வசன கவிதைகள் மிக அழகாக எடுத்துரைக்கின்றன. வானியல் அறிவு மட்டுமின்றி சோதிட அறிவு மிக்கவராகவும் பாரதி திகழ்ந்தார்.

சோதிட சாத்திரம்.

கோள்களின் சுழற்சியும் அதனால் பூமியில் ஏற்படும் மாற்றங்களும் கணித முறைப்படி கணக்கிட்டு கூறுவதை 'சோதிடம்' என்று கூறுவர். 'கிரகங்களின் சஞ்சாரஞ் சொன்ன கணித நூல்' என்று அபிதான சிந்தாமணி சோதிடத்திற்கு விளக்கம் தருகிறது. பாரதியாரும் சோதிட அறிவு மிக்கவராக விளங்கியுள்ளார். இதனை பருவ நினைப்பு என்ற கட்டுரை வழி அறிய முடிகிறது.

பாரதியார் காலத்தில் 'விவேக போதினி' என்ற பத்திரிகையில் திரு சாமிநாதய்யர் அன்றைய கால பஞ்சாங்கத்தில் உள்ள பிழைகளை, "ஒரு காலத்தில் வஸந்த விஷுவானது கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாசிமாதத்தில் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம், இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக் கப்பால், அந்த விஷு அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது" என்று சுட்டிக் காட்டியுள்ளார். இதனை ஆராய்ந்த பாரதி வசந்த விஷு மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தைமாதப் பிறப்பன்று தொடங்கியது. ஆனால், அயன விஷுக்களின் சலனம் ஏற்பட்டதை அறியாமலோ, அறிந்தும் கவனியாமலோ நமது முன்னோர்கள் இருந்து விட்டனர். 20-1/2 நிமிடங்கள் அதிகமாக வைத்து கணித்து விட்டபடியால் அயன விஷு காலங்கள் வருடம் ஒன்றிற்கு 20-1/2 நிமிடம் பிந்தி வருகிறது. 80 ஆண்டுகள் ஆகிவிட்டால் ஒரு முழு நாள் பிந்திவிடும். இந்த மாற்றங்கள் ஏற்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஒரு காலத்தில் சித்திரையும், வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதுவேனில் காலமென்றும் இருந்தது. மேற்கூறிய கணிதத் தவறால் பருவக் காலங்கள் மாறிவிட்டன என்று கூறுகின்றார்.

"இளவேனில் காலம் பங்குனி மாதம் எட்டாம் தேதியில் பிறந்து விடுகிறது" என்ற பாரதியின் கூற்று அவர் காலத்தில் அயன விஷு என்று பிறந்தது என்பதை எடுத்துரைக்கிறது. எனவே பாரதி, அயன விஷு காலங்களில் செய்யும் ஸ்நாநம், தானம் முதலிய வைதிகக் கிரியைகளும் புண்ணியக் காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து விடுகின்றன என்றும் கூறுகிறார். இது அவரது சோதிட அறிவைப் பறைசாற்றுகிறது எனலாம்.

3. மகாகவி பாரதியார் பாடல்கள் - ஓர் அறிமுகம்.

அமரர் ஜீவா
(அமரர் ப.ஜீவானந்தம் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
பாரதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

பாரதி தமிழகத்தின் தனிப் பெருமை. பாரதி தமிழினத்தின் தவப்பயன். உண்மைக் கலையையும் மக்கள் வாழ்வையும் பிரிக்க முடியாதபடி இணைத்துள்ள சிறந்த ஜீவனுள்ள உறவோடும், அச்சமற்ற சிருஷ்டித் திறன்மிக்க சிந்தனை, தெள்ளிய நேர்மை, வற்றாத வளமிக்க உயிராற்றல் ஆகியவற்றோடும் பாரதியின் திருநாமம் என்றும் இணைந்து நிற்கும்.பாரதியின் பாடல்கள், நூற்கள், எழுத்துக்கள், சாகாவரம் பெற்ற மனிதன் மேதாவிலாசத்தின் நினைவுக் களஞ்சியங்களாக ஊழி ஊழி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

கம்பனுக்குப் பின் தமிழ் மக்களுக்கு, மகாகவி பாரதி, உணர்ச்சியாற்றல், கற்பனையாற்றல், அழகுக் கலையாற்றல், ரசனையாற்றல் முதலிய சிறந்த கவித்துவ அம்சங்கள் நிரம்பப் பெற்ற மகாகவி. அவரிடம் கொழுந்துவிட்டெரிந்த அரசியல் உணர்ச்சித் தீ, மேற்கூறிய நல்லிசைப் புலமையோடு இரண்டறக் கலந்து கவித்துவத்தின் அழகுக்கு அழகு செய்தது.

பொதுமக்கள் வாழ்வோடு, தண்ணீரில் மீன் மாதிரிப் பழகிப் பாரதி, தனது படைப்பாற்றல், படைப்புப் பணி முழுவதையும் மக்கள் விடுதலைக்கும் நல்வாழ்வுக்குமே தத்தம் செய்த பாரதி, இருபதாம் நூற்றாண்டைய மக்களின் -சிந்தனை ஓட்டங்களையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் அழகுச் சொட்டச் சித்திரிப்பதில் நேர் நிகரற்றக் கலைஞனாகப் பொலிந்தான்.

பாரதிக்கு "நான்", "நாங்கள்" என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறித்தன. பாரதியின் நல்லிசைப் புலமை, மாய காவ்ஸ்கி என்ற சோவியத் மகாகவி கூறியதுபோல், 'பிரபஞ்சம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் களிக்கும் காதலை' விரும்பிற்று. புஷ்கினைப் பற்றி ஒருவர் சொன்னதைப் போல பாரதியின் கவிதை "என்றும் இருக்கிற எப்பொழுதும் இயங்குகிற இனத்தைச் சார்ந்தது ..... சமுதாய உணர்வில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தன்மை வாய்ந்தது". பாரதியின் மேதைப் பார்வையில் சரித்திரக் கண்ணோட்டத்தின் தெளிவும் விழுந்திருந்ததால் அவனால் உறுதியான நம்பிக்கையோடு மேலும் மேலும் மேன்மேலும் முன்னோக்கி, முன்னோக்கிப் பார்க்க முடிந்தது. சந்தேக வாதக் கறை அவனுடைய பாடல்களில் ஒரு எழுத்தைக்கூட அசுத்தப் படுத்தியதில்லை.

"நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்"

என்று தனக்குத் தொழில் "நாட்டுப்பணி" (மக்கள் பணி) என்று ஆணித்தரமாக கூறி கவியரசின் தொழிலைப் பற்றி இவ்வாறு உலகறியப் பறை அறைகிறான் பாரதி. கவிஞன் என்பவன் 'மக்கள் தலைவன், மக்கள் தொண்டன்' என்ற நவயுக மகாகவியின் அறிவுரைக்கு இலக்கணமாக வாழ்ந்தவன் பாரதி.

'மக்கள் வாழ்க்கையை விட்டு ஓடி ஒளியக்கூடாது, தங்கள் பலத்தையும் திறத்தையும் உணர வேண்டும்' என்றே பாரதி காலமெல்லாம் போதித்தான். இன்று ஜன யுகத்தில் நாம் வாழ்கிறோம். நமக்கு மிக மிகத் தேவையான இலக்கியமும் கலையும், மக்கள் இலக்கியமாகவும், மக்கள் கலையாகவும்தான் இருக்க முடியும். அவை மக்களின் நலன்களை எதிரொலிப்பவைகளாகவே இருக்க வேண்டும். அவை ஜனநாயகத் தன்மை கொண்டவைகளாகவும், எதார்த்தமும், மனிதத்துவமும் உடையவைகளாகவும், தேசிய, அதே பொழுதில் சர்வ தேசியத் தன்மை உடையவைகளாகவுமே இருக்க வேண்டும்' என்று சீன அறிஞர் ஒருவர் கூறுகிறார். இந்த வகையில் பாரதி நமக்குத் தகுந்த முன்னோடி; சிறந்த வழிகாட்டி. இந்த எண்ணங்களோடு பாரதி பாடல்களின் அறிமுகத்தையும், பாடல்களையும் பார்க்கலாம்.

தமிழும் தமிழகமும்:

பாரதி தமிழை நினைக்கிறான். தனது நெஞ்சில் ஊறி உறைந்து நிற்கும் தமிழை நினைக்கிறான். தனது உயிரும் உணர்வும் ஆழ அமிழ்ந்து கிடக்கும் தமிழை நினைக்கிறான். அதேபொழுதில், தான் செவ்வனே அனுபவித்தறிந்த ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்கம், பிரெஞ்சு முதலான மொழிகளையும் அவற்றின் மூலம் உலகமொழிகளையும் நினைக்கிறான். உடனே

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்"

என்று ஒப்புநோக்கும் உணர்வுடன் தமிழமுதின் நிகரற்ற இனிமையைப் பெருமிதத்தோடு பாடுகிறான். அதே பொழுதில இத்தகைய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட கோடானு கோடித் தமிழர்களின் நிலையை நினைக்கிறான். "உலகமெலாம் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு" நிற்கும் அவர்களுடைய அவல நிலைமை பாரதியின் நெஞ்சைத் தாக்கி, கண் கலங்க வைக்கிறது. "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ! சொல்வீர்!" என்று தமிழகம் கிடுகிடுக்க அறைகூவி, சாதாரணத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்புகிறான்.

"ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு
ஆக்கையோடு ஆவியும் விற்றார்
தாங்களும் அன்னியர் ஆனார் - செல்வத்
தமிழின் தொடர்பு அற்றுப் போனார்"

என்று வயிற்றெரிச்சலுடன் ஆற்றாமையால் ஒரு புலவர் பாடினாரே, அத்தகைய 'ஆங்கிலத்-தமிழர்களை' அடுத்த படியாகப் பாரதி நினைக்கிறான். இவர்கள் தமிழில் "ஷேக்ஸ்பியர்" உண்டா, "மில்டன்" உண்டா, "டென்னிஸன்" உண்டா, "ஷெல்லி" உண்டா என்று புரியாத்தனமாக, ஆனால் புரிந்ததான எண்ணத்தோடு அடிக்கடி இளக்காரமாகக் கேட்கிறார்களே, அதையும் நினைக்கிறான். இவர்களுக்குப் பதில் - இதரர்களுக்கு உண்மை அறிவிப்பு செய்ய நினைக்கிறான். எனவே, உலக மகாகவிகளையெல்லாம் கவிதா மனோபாவத்தோடு நன்றாகக் கற்றறிந்து நிர்ணயித்திருந்த பாரதி

"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை"

என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான்.

பின்வந்த ஆராய்ச்சி வல்ல பன்மொழிப் புலவர்களான தமிழ்ப் பேரறிஞர்கள் பாரதி கூறிய இந்த உண்மையை அட்டியில்லாமல் ஒப்புக் கொள்கிறார்கள். ஆங்கில மோகம் பிடித்து அலைந்த தமிழர்களுக்கு, "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!" என்று பாரதி அறிவுறுத்துகிறான்.

(இன்றைய நிலையை ஜீவா கூறும் கூற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமே! இன்று ஆங்கில மோகம் எங்கு போய் முடிந்திருக்கிறது. தமிழில் பேசும் தமிழனை எங்காவது காணமுடிகிறதா? ஆங்கிலத்தின் இடையிடையே சிறிது தமிழ் கலந்து பேசும் அவலம் இன்று தலைவிரித்தாடுகிறதே. இந்த கொடுமை ஒழிய இன்னொரு பாரதிதான் பிறந்து வர வேண்டுமா?)

அடுத்தபடியாக "அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்" என்பதுபோல், "தாங்கள் கற்ற தமிழே எல்லாம்" என்று பத்தாம் பசலி மனப்பான்மையோடு புதுமை கண்டு கசந்து முகம் சுளிக்கும் வைதிகத் தமிழ்ப் பண்டிதர்களைப் பாரதி நினைக்கிறான். "எல்லாப் பொருளும் இதன்பால் உள" என்ற வெண்பாப் பாட்டை இவர்கள் சங்கராபரணத்தில் ஆலாபனஞ் செய்து எக்களிப்படைவதற்கு அடிப்படையான கிணற்றுத் தவளை மரபை நினைக்கிறான்.
"மறைவாக நமக்குள்ளே பழங்கதை
சொல்வதிலோர் மகிமை இல்லை"

என்று எடுத்துக்கூறி மாறுதல் வேண்டாத நம் பணிடிதர்களின் மனத்தடிப்பைச் சுக்கு நூறாக உடைத்தெறிகிறான் பாரதி. அதே மூச்சில்

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"

என்று தமிழ் வளர்ச்சித் திருப்பணியில் இறங்கும்படி ஆணையிடுகிறான். புதிய தமிழ்க் காதலர்களுக்கு, 'நாமே டமாரமடித்துக் கொள்வதனால் நமது புலமைக்குப் பெருமை ஏற்படாது. வெளிநாட்டார் வணக்கம் செலுத்தும் பொழுதுதான் நமது புலமையின் திறமைக்கும் பெருமை ஏற்படும்" என்பதைத் தமிழன்பர்கள் மறந்துவிடக் கூடாதென்றும் புத்தி புகட்டுகிறான்.

அடுத்தபடியாக "கவிதை கவிதைக்காகவே", "கலை கலைக்காகவே" என்ற கவிஞர்களையும், கலைஞர்களையும் பாரதி நினைக்கிறான். அவர்களுக்கும் யதார்த்தச் சூழ்நிலைக்கும், அவர்களுக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் சுருங்கச் சொன்னால் அவர்களுக்கும் உண்மைக்கும் ஒட்டும் உறவும் இல்லாதிருப்பதை நினைக்கிறான், உடனேயே அவர்களுக்கு
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்"

என்ற உண்மையைப் போதிக்கிறான். பள்ளத்தில் வீழ்ந்து பரிதாபகரமாகத் தவித்துத் தத்தளிக்கும் "குருடர்கள்" (பாமர மக்கள்) உண்மையுணர்ந்து உயர்நிலை எய்தவேண்டுமானால், வெள்ளத்தின் பெருக்கைப் போல், கலைப்பெருக்கம் கவிப்பெருக்கும் மேவ வேண்டும் என்று தமிழ் இலக்கியச் செழிப்பின் தேவையை வற்புறுத்துகிறான். இறுதியாக

"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்"

என்று மேற்கூறிய வகைதொகைகளிலெல்லாம் வளரும் தமிழை நுகரும் தமிழ் மக்கள் புதிய யுகத்தில் புதிய உலகத்தில் புதிய மனிதராய் மலர்ந்து புத்தின்பப் பெருவாழ்வு பெறுவர் என்று இமய முகட்டில் தூக்கி வைத்துத் தமிழுக்கு பூசனை புரிகிறான் பாரதி. மேற்கூறியவை "தமிழ்" என்ற பாட்டில் பாரதி காட்டும் முதன்மையான கருத்துக்கள். "தமிழில் முடியுமா?" என்று நம்பிக்கை செத்து, கேள்வி கேட்கும் பேராசிரியப் பெருமைக்காரர்களுக்கு

"வானம் அளந்ததனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே"

என்று தமிழை வாழ்த்தி நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" என்று பிரிதோரிடத்தில் பாடுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழில் அதன் வலுவில் வளர்ச்சியில் பாரதிக்கு இருந்த அசையாத உறுதி கங்கு கரையற்றது. பாரதியால் தமிழ் மேன்மையுற்றது, தமிழால் பாரதி மேன்மையுற்றான் என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூற்று மெய் மெய் மெய்.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை"

என்ற கருத்து தமிழர்களான பல ஆங்கிலம் கற்ற அறிவாளிகளையும் கல்விமான்களையும் பிடித்தாட்டுகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (இங்கு ஜீவா குறிப்பிடுவது 20ஆம் நூற்றாண்டு) - பாரதி காலத்தில் மேற்படிக் கருத்து உரம் பெற்று நின்றதைப் பாரதி காண்கிறான். இதை உடைத்தெறிய வேண்டிய தனது கடமையை உணர்கிறான். தமிழ்த்தாயின் வாய் மூலமாகத் தமிழின் வரலாற்றைக் கூறுகிறான்.

"ஆதிசிவன் பெற்றுவிட்டான்"

அதாவது என்று பிறந்தேன் என்று உரைக்க முடியாத தொன்மையினள் நான். அகத்தியன் இலக்கணத்தாலும், மூவேந்தர் அன்பு வளர்ப்பாலும், ஆரியத்திற்கு நிகராக வாழ்ந்தேன். கள், தீ, காற்று, வெளி இவை கலந்து தெள்ளு தமிழ்ப் புலவர்கள் நல்ல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்கள். பற்பல சாத்திரங்கள் படைத்தளித்தார்கள். உலகு புகழ வாழ்ந்தேன். அன்று என் காதில் விழுந்த திசை மொழிகள் பல. அவை இன்று இறந்தொழிந்தன.

"இந்த கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்"

"இன்றொரு சொல்லினைக் கேட்டேன்"

அது என்ன? 'புத்தம் புதிய கலைகள் தமிழினில் இல்லை. அவை சொல்லும் திறமை தமிழுக்கு இல்லை. மெல்லத் தமிழ் இனி சாகும்' - இதுதான் அந்த அவலச் சொல்.

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"
"இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன்".

இதற்கு முன் பல காவியங்களையும், பல சாத்திரங்களையும் கால மாறுதலுக்கு ஏற்பப் புதுமை செய்து தமிழ் அழியாது நின்று வந்திருக்கிறது. இன்றும் அறிஞர்களின் இடையறாத முயற்சியால் எட்டுத் திசையும் சென்று கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்து தமிழ் புகழ் ஏறிப் புவிமீது வாழ முடியும். இவ்வாறு சரித்திர உண்மைகளை எடுத்துக்காட்டி தமிழின் உயிராற்றலில் நம்பிக்கையை ஊட்டுகிறான் பாரதி உணர்ச்சிப் பெருக்கோடு. பாரதிக்குப் பின் இன்று வரை பல அறிஞர்களும், இளைஞர்களும் அந்த நன்னம்பிக்கையை நாள்தோறும் மெய்ப்பித்து வருகிறார்கள்.

பாரதி தனது தாயகத்தை - தமிழகத்தைப் பற்றிப் பாடுவதை அனுபவியுங்கள்! நாட்டன்பு நம்மிடம் மூண்டெழும்படி எவ்வாறு கிளறுகிறான் என்ற விந்தையைப் பாருங்கள்!

'செந்தமிழ்நாடு' என்றதும் அது சொற்றொடராகக் காதில் வந்து விழவில்லையாம். "இன்பத் தேனாக"க் காதில் வந்து பாய்கிறதாம். அந்த "இன்பத் தேனும்" வாயில் பாய்ந்து இனிமையூட்டவில்லை. காதில் பாய்ந்து பரவசமூட்டுகிறது. தொடர்ந்து, இது - இந்தச் செந்தமிழ்நாடு - "எங்கள் தந்தையர் நாடு" என்று பேச ஆரம்பித்தால் போதுமாம். "மூச்சில் ஒரு சக்தி பிறக்கிற"தாம். ஏன்? "தந்தையர் நாடு" என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சொல்லாக்கம். அதோடு பல்லாயிரம் ஆண்டையத் தமிழர் வாழ்வின் மாட்சியும், அதில் செறிந்து கிடக்கிறது. பின் மூச்சில் சக்தி பிறக்காது என் செய்யும்? இனி ஒவ்வொரு தமிழனின் காதிலும் தேனையும் உணர்ச்சித் தீயையும் பாய்ச்சும். அட்சரம் லட்சம் பெறும் அந்த அடிகளைப் படியுங்கள் - பாடுங்கள், பார்க்கலாம்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே".

இது மாதிரி ஒரு அடி உலக இலக்கியத்தில் வேறெங்கேனும் காண முடியுமா? தேசபக்தியைக் கடல் மடை திறந்ததுபோல ஓடவிட்டு எத்தனையோ நல்லிசைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் - பற்பல நாடுகளில், பலப்பல காலங்களில், ஆனால் மேற்கூறிய அடிகளில் பாரதி காட்டும் தேசபக்தியின் வேகமும் வன்மையும் போல் இனிப்பையும் நெருப்பையும் குழைத்து வேறெந்த கவிஞனேனும் பாடியதுண்டா?

இவ்வாறு சராசரித் தமிழனுக்கு உணர்ச்சியில் தேனைப் பாய்ச்சி, உயிரில் சக்தியைப் பாய்ச்சி, புதுத் தமிழனாக்கி நிறுத்தி, செந்தமிழ் நாட்டின் சிறப்பியல்புகளை, சாதனைகளை ஓவியம்போல் காட்டுகிறான் பாரதி. தமிழகத்தின் ஆண் - பெண்ணின் மேம்பாட்டை ஆறுகளின் வளமையால் நாடு "மேனி செழிக்கும்" அற்புதத்தை, மலை வளம், கடல் வளத்தை அமர சித்திரமாக வரைந்து காட்டுகிறான்.

'செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு' என்று பாடி, தனது தீர்க்க தரிசனக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி, நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறான். தமிழகத்தின் நேர்நிகரற்ற புலவர் பெருமான்களை, தமிழ்ப் பேரரசுகளை, தமிழ் மன்னர்களின் இணையற்ற விறல் வீரத்தை, தமிழர் நாகரிகப் பெருமையை, பண்பாட்டுத் திறத்தை, உலக இலக்கியம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் விதத்தில் பாடி, நாட்டைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நமக்குப் புத்துயிரும் புத்துணர்வும் ஏற்படும் வண்ணம் நமது இதய வீணையின் ஒவ்வொரு நரம்பையும் மீட்டுகிறான் பாரதி.

பாரத நாடு:

"சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயின்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும், உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இதைப் போலவே, ஓர் புதிய ஆதர்சம் - ஓர் கிளர்ச்சி - ஓர் தர்மம் - ஓர் மார்க்கம் - தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சம் அனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்தி மலர் போல் அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய "தேசபக்தி" என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகாங்கிதமாயின. யானும் அப்புதிய சுடரிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருடம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்".

இவ்வாறு 1909-இல் வெளியான "ஜன்மபூமி" (ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்) என்ற தனது பாடல் தொகுதிக்குத் தானே எழுதிய முன்னுரையில் பாரதி குறிப்பிடுகிறார். "தேசபக்தி" என்ற நவீன மார்க்கச் சுடரிடம் அன்பு பூண்டு புனைந்த பாடல்கள்தான் "பாரத நாடு" என்ற இந்தத் தலைப்பின் கீழ்க் காணப்படும் பாடல்கள்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே".

என்ற கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டவன் பாரதி. எனவே அவன், வேறு எந்தக் கடவுளையும் வணங்கவில்லை.

"வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்".

என்று பாடி மாநிலத் தாயைத்தான் முதல் கடவுளாக வணங்குகிறான். பாரதி இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால் ஓர் உண்மையைத் தெள்ளத் தெளிவாகக் காணமுடியும். அதாவது பாரதி, சிவலோகத்தையோ, வைகுண்டத்தையோ அல்லது செத்த பிறகு கிடைக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற எந்த நாட்டையும் பதவியையும் நம்பவில்லை. இந்த வாழ்வை, இந்த மண்ணை இங்குள்ள மக்களைப் பாரதி நம்பினான்.

ஆகவே முழு மூச்சோடு - தாமரை இலைத் தண்ணீர்க் கொள்கைக்கு நேர்மாறாக - தனது நாட்டிடம் பாரதி அன்பு பூண்டான். பாரத நாட்டைத் திரிகரண சுத்தியோடு மனம் நிறைய நேசித்தான். "ஜாதி மதங்களைப் பாரோம்", "வேதியரும் ஈனச் சாதியரும் ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்" என்று முழங்கினான். "வாழ்வும் வீழ்வும்", "முப்பது கோடி முழுமைக்கும்" பொது என்று கர்ஜித்தான். "புல்லடிமையும்", "தொல்லை இகழ்ச்சியும்" தீர

"ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தால் பின்நமக் கெது வேண்டும்"

என்று இந்நாட்டாரும், எந்நாட்டாரும் உலகில் இன்றும், என்றும் கடைப்பிடிக்கத் தகுந்த - கடைப்பிடிக்க வேண்டிய மனித மந்திரத்தை எடுத்தோதினான்.

நாட்டு வணக்கம் என்ற பாட்டில் பாரதி, பெற்றார் உற்றாரோடு, குழந்தை குட்டிகளோடு இழைந்து குழைந்து வாழ்வதற்கு இந்நாடே ஆதார பீடம் என்பதை இதயத்தைப் பிழிந்து பாடுகிறான். இந்த அருமருந்தன்ன பாட்டு மனித உணர்ச்சியுள்ள வரையில், அதிலும் வாழும் உணர்ச்சி உள்ளவரையில், அதில் ஆசாபாசத்தோடு வாழும் உணர்ச்சி உள்ளவரையில், சாகா வரம் பெற்று நிற்கும். யுகம் யுகாந்திர மட்டும், இந்தப் பாடலைப் பாடும் ஆண் - பெண் யாராயினும் உணர்ச்சி வசப்பட்டு நாட்டின்பால் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காதிரார்" என்பது திண்ணம். "பாரத நாடு" என்ற பாட்டு, "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு" என்ற பல்லவியில் ஆரம்பித்து பாரத நாட்டின் சகல சம்பத்துக்களையும் அதி அற்புதமாக வர்ணித்துக் காட்டுகிறது. "எங்கள் நாடு" என்ற பாட்டும் அவ்வாறே.

"மன்னும் இமயமலையும்
இன்னறு நீர்க்கங்கையும்
பன்னரும் உபநிட நூல்களும்
மாரத வீரர்களும்
நாரத கானமும்
பூரண ஞானமும்
புத்தர் பிரானருளும்
பெற்றநாடு எங்கள் நாடு".

ஆகவே,
"பாரத நாடு, பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலையீடே!"

என்று மனமுருக நாட்டைப் பற்றிப் பாடுவதோடு மட்டும் நிற்கவில்லை பாரதி. நாட்டுக்குரிய நமது கடமையையும் வலியுறுத்துகிறான். அந்தக் கடமை என்ன?

"இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்".

கொத்தடிமைப் பட்டு சத்தற்ற வாழ்வில் நெளியும் மோழைகளுக்கும் கோழைகளுக்கும் மேற்கூறியவாறு பக்குவமாக நாட்டுக் கடமையை உணர்த்துகிறான் பாரதி.

"ஜய பாரத" என்ற பாட்டில் பாரத நாட்டின் பழம்பெருமைகளைச் சாங்கோபாங்கமாக எடுத்துக் கூறி, தாய் நாட்டை வாழ்த்துகிறான். இறுதியாக

"சுதந்திரத்தி லாசையின்று
தோற்றி நாள்மன் வாழ்கவே"

என்று நாட்டுத் தாய்க்கு நயம்படப் பல்லாண்டு பாடுகிறான்.

"பாரதமாதா" - என்ற பாட்டில் சரித்திர, இதிகாச, புராண, காவிய நாயகர்களின் கொள்கை செய்கைகளை பாரதமாதாவின் குணச் சித்திரங்களாக, எழில் நடப்புகளாக ஓவியம் தீட்டுகிறான் பாரதி. திருவாசகப் பள்ளியெழுச்சி, திவ்யப் பிரபந்தப் பள்ளியெழுச்சி கேட்ட நாட்டில், பாரதமாதா பள்ளியெழுச்சியும் கேட்க அருளினான் கவி வள்ளல் பாரதி.

பாரத சமுதாயம்:

தமிழகச் சான்றோர்கள், பாரத நாட்டு முனிவர்கள், மேலை நாட்டு நவீன அரசியல், சமுதாயப் புலவர்கள் இவர்களின் சமுதாயக் கண்ணொட்டம் என்ன என்பதை பாரதி நன்கறிந்தவன். நம் நாட்டுப் பண்புக்குப் பங்கம் வராமல் புத்தம் புதிய கருத்துக்களின் தேவையையும், ஊதியத்தையும் புறக்கணிக்காமல், இன்றைய நமது சமுதாயத்தின் பிரத்யட்ச சூழ்நிலையைத் தெளிவாகக் கணக்கிலெடுத்து உலகில், பாரத நாட்டில் நமது சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்துக் காட்டிய தமிழகத்தின் (பாரத நாட்டுக்கும் பொருந்தும்) தலைசிறந்த தீர்க்கதரிசி பாரதி.

"பாரத மக்களின் தற்கால நிலைமை"* என்ற பாட்டில் தனது காலத்துப் பாரத சமுதாயத்தின் அதள பாதாள நிலைமையைக் கல்லும் கனிந்துருக, வெகு உருக்கமாகப் பாடியிருக்கிறான் பாரதி. தமிழகத்தைப் பகைப் புலனாகக் கொண்டு "இந்தத் துணைக் கண்டத்தில் வாழும் மானிடப் பரப்பின் தொடை நடுங்கும் அச்சத்தை, புழுத்து நாறும் மூடநம்பிக்கையை பயங்கரமான பாமரத் தன்மையை நவக்கிரகக் குணாதிசயத்தை அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டைத்தனத்தை, புல்லிய வம்புதும்பு வல்லடி வழக்குகளை, விழிகள் குருட்டுத்தனத்தை, ஏமாந்த சோணகிரித்தனத்தை "பொறியற்ற விலங்குகள் போலும்" வாழ்க்கையை, நாம் நினைத்து நினைத்து, மனம் கரைந்து கரைந்து, கண்ணீரும் கம்பலையுமாய்த் தேம்பித் தேம்பி அழத்தக்க விதத்தில் பாடியுள்ளான் கருணையங்கடல் பாரதி.

(குறிப்பு: "பாரத ஜனங்களின் தற்கால நிலைமை" என்ற தலைப்பில் வெளியான பாடல் நொண்டிச் சிந்து மெட்டில் அமைக்கப்பட்டு பிரபலமான பாட்டு. அதன் முழு வடிவத்தையும் படித்துப் பாருங்கள். அதன் முதல் சில வரிகளை மட்டும் உங்கள் ஞாபகத்துக்காகக் கொடுத்திருக்கிறோம்.)

("நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." )

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே"

இந்த இலக்கண சூத்திரத்தை உறுதியாகக் கடைப்பிடித்தவன் பாரதி. "போகின்ற பாரதத்தில்" இன்னின்ன பண்புகள் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டும் என்கிறான். "நிகழ்கின்ற பாரதத்தில்" இன்னின்ன பண்புகள் நம்மிடம் மலர்ந்து மணம் வீச வேண்டும் என்கிறான். இதைப் புதிய சமுதாயத் தெளிவோடும் உறுதியாகக் கூறுகிறான்.

பாரத சமுதாயப் பாட்டு - பாரதி பாடிய இறுதிப்பாட்டு. பாரதியின் முதிர்ந்த அரசியல் சமுதாயத் தத்துவ ஞானச்சாரம் நிறைந்த பாட்டு. இங்குதான், பாரத சமுதாயத்தை பொதுவுடைமை சமுதாயமாக -உலகுக்கொரு புதிய சமுதாயமாக - தனது லட்சிய சமுதாயமாகக் காண்கிறான். இந்தச் சமுதாயத்தில்தான் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை - ஆன சமுதாயத்தை மக்களே - உண்மையில் = மன்னரான சமுதாயத்தைக் காண்கிறான். மனிதன் மனிதனான சமுதாயத்தை, மனிதன் அமரநிலை எய்திய சமுதாயத்தைக் காண்கிறான்.

சுதந்திரமும் விடுதலையும்:

ஆங்கில நல்லிசைப் புலவர்களான பைரன், ஷெல்லி முதலிய புலவர்களும் பாரத நாட்டின் மகாகவிகளுள் ஒருவரான குருதேவ் இரவீந்திரநாத் தாகூரும் எத்தனையோ அற்புத அற்புதமான சுதந்திரப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இன்னும் உலக இலக்கியத்தில் எத்தனையோ கவியரசர்கள் சுதந்திரதேவிக்கு நறுமணம் வீசும் கவி மலர்கள் பல சூட்டியிருக்கிறார்கள். ஆயினும் எங்கள் பாரதியைப் போல், சுதந்திரத்தைப் பற்றி அதன் எல்லா அம்சங்களையும் பற்றி இத்தனை ஆணித்தரமாகப் பாடிய புலவன் வேறு யாருமில்லை என்று துணிந்து கூறுவேன். பற்பல நாட்டு இலக்கியங்களும் தமிழில் வெளிவர, வெளிவர, தமிழர்கள் மேன்மேலும் பன்மொழிகளைப் பயிலப் பயில, சர்வதேச கலாச்சார உறவில் நெருங்கிய உறவு அதிகரிக்க, அதிகரிக்க, எனது மதிப்பீடு சராசரித் தமிழன் அறியும் நால் வருமென்று நம்புகிறேன்.

விடுதலை மகாகவியான பாரதியின் காட்சியில் பட்ட சுதந்திரம் மிகப் பெரியது. அது "ஆரமுது"; புளித்த கள்ளல்ல. அது "விண்ணில் இரவி"; மின்மினி அல்ல; "கண்ணிலும் இனியது அந்தச் சுதந்திரம்". பாரதி கருத்தில் இந்தச் சுதந்திரம் "கண்ணீரும் செந்நீரும்" வார்த்து வளர்க்கப்பட்டது. படுவதேயன்றி, "தண்ணீர் விட்டு" வளர்க்கப் படுவதல்ல. ஆகவே இதை வீர சுதந்திரம் என்று வீறுகொண்டு பாடுகிறான்.

"மானிடராதல் அரிது", "பிறந்தவர் யாவரும் இறப்பர்" இந்த உறுதி கொண்டவர்களுக்குக் "கண்ணினும் இனியது சுதந்திரம்". இந்த உண்மைகளை ஆணி அடிப்பது போன்று நிலை நிறுத்திக் கொண்டு

"மண்ணி லின்பங்களை விரும்பி சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?"

என்று நம்மை உறுத்து நோக்கி, கணீர்க் குரலில் கேட்கிறான். சுதந்திரத்தைக் கத்தரிக்காய், வாழைக்காய் மாதிரி விற்பது அடிமடத்தனம் என்று இடித்துச் சொல்கிறான் நமக்கு.பாரதி "சுதந்திர தேவிக்கு வணக்கம்" செலுத்தும் பாணி, ஈடும் எடுப்புமற்ற தனிப்பாணி. கோடானு கோடி விறல் வீரர்களைப் பாதகாணிக்கை செலுத்தி

"சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல்
மறக்கிலேனே"

என்று மெய் மறந்து வணங்குகிறான். சுதந்திரம் இல்லாதவன் "அணிகள்வேய் பிணம்" (அலங்காரம் செய்யப்பட்ட பிரேதம்) என்ற பாரதி கூற்றைவிட அடிமைத்தனத்தை இகழவும் முடியாது. சுதந்திரத்தைப் புகழவும் முடியாது. சுதந்திரம் இல்லாத நாட்டில்

"ஆவியங்குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்கமுண்டோ?"

என்று உலகு அதிர வினவுகிறான். அடிமை நாட்டில் காவிய நூல்களும் ஞானக் கலைகளும் விளையாது என்கிறான். விடுதலை விழையாத, சுதந்திரத்தைப் பரிபாலிக்காத மக்களைப் "பாவிகள்" என்று சபிக்கிறான். சுதந்திரம், ஜனநாயகம் என்னும் "பேரறத்தினைப் பேணும் நல்வேலி" என்றும், "சேராவாழ்க்கை", "துயர்மிடி" ஆகிய காரிருட் படலங்களைக் கிழித்தெறியும் "சோதி" என்றும், "வீரருக்கு அமுது" என்றும் அமுதத் தமிழில் போற்றிப் புகழ்கிறான். "வீர சுதந்திரம்" "சுதந்திர தேவியின் வணக்கம்" ஆகிய பாடல்கள் உலக சுதந்திர இலக்கியத்தில் மட்டுமல்ல, உயர்தரத் தமிழ் இலக்கியத்திலும் தெவிட்டாத ஆரமுதத் துண்டுகள். "சுதந்திரப் பள்ளு" என்ற பாட்டு, "பாரதி - மக்கள் கவி" என்ற மதிப்பீட்டுக்கு மணி மகுடம் சூட்டுகிறது. சுதந்திரம் "பால் பிடிக்கும்" காலத்திலேயே, "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ"மென்று அறுவடை விழாக் கொண்டாடுகிறானே. எதிர்காலத்தில் ஊடுருவிச் செல்லும் அவனுடைய "நுண்மாண் நுழைபுலம்" என்னே!.

ஜாதீய சமுதாயம் தகர்ந்து தரையோடு தரையாகித் தேய்ந்து போனதையும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோக மிராசும் ஆதிக்கமும் ஆதீனமும், பொடிசூர்ணமாகி ஆடிக்காற்றில் பறந்து போனதையும் பாரதி தொலை நோக்கிப் பார்க்கிறான். வர்க்கப் போராட்டத்தில் உழவனும் தொழிலாளியும் வரிசை மேல் வரிசை பெறுவதையும், சோம்பேறிக்குத் தண்டனை, உழைப்பாளிக்கு ஓட்டுரிமை கிடைப்பதையும் பாரதி பார்க்கிறான்.

*"நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்"

என்ற மக்கள் ஜனநாயகம் தழைப்பதையும் பாரதி பார்க்கிறான். சுதந்திரத்தின் சரியான திசையைச் செம்மையாகப் பார்க்கிறான்.

தீர்க்க தரிசனத்தாலும் உணர்ச்சி வேகத்தாலும் எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, கோடானு கோடி உழவர்களாக நின்று ஆனந்த சுதந்திரப் பள்ளுப் பாடுகிறான். "விடுதலை"ப் பாட்டில் "பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை", ஏழைக்கும் அடிமைக்கும் மாதர்க்கும் விடுதலை. "இழிவுகொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லை" "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே".இத்தகைய பொன்மிழிகளை இந்த ஜனநாயக சகாப்தத்தில் இந்த நூற்றாண்டில் ஒரு பேராற்றல் பெரும் புலவன், எளிமையாக இனிமையாகத் தமிழில் பாடினானே. அது தமிழும், தமிழ் மக்களும் செய்த தவப்பயந்தான். உலகில் எந்த மொழிக்கும் இந்தப் பேறு கிடைக்கவில்லை.

அமரர் ஜீவா அவர்கள் மேற்படி கட்டுரைகளை எழுதியதோடு மட்டுமல்ல, பாரதி புகழ் பரப்பிய சான்றோர்களில் தலைசிறந்தவராகவும் விளங்கியிருக்கிறார். அவர் எந்த மேடையில் இருந்தாலும், அங்கு பாரதியின் குரல் அவரிடம் எதிரொலிக்கும். பாரதிதாசன் நடத்தி வந்த "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்" எனும் இதழில் 1935இல் ஜீவா அவர்கள் எழுதிய "பாரதி கீதம்" எனும் தலைப்பிட்ட பாடலை இங்கே தருகிறோம். இந்தப் பாடலை ஸ்ரீ தியாகையர் சுவாமிகள் இயற்றிய "ஸ்ரீ ராம பாதமா" எனும் பாடலமைந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற குறிப்பையும் அவர் கொடுத்திருக்கிறார். அந்த பாடல் வருமாறு:--

பல்லவி
பாரதி கீதமே பாடுவோம் நிதமே
பயன் தரும் போதமே.

அநுபல்லவி
வீரமுங் காதலும் வீறுடன் வாழ்தலும்
வெற்றிதேச பக்தியூட்டும் முற்றிலும் விநோதமே

சரணங்கள்
வீழ்ந்த நற்றமிழர் வாழ்ந்திட அமிழ்தம்
விரும்பி யளிக்குமே நிதம்
சூழ்ந்த நற்பொருளே சொல்லிய தெருளே
சுத்தமெய்ச் சுதந்திரம் சமத்துவம் விதைத்திடும்

பாரததேச பக்த ராவேசம்
பரிவுடனே வாசம்
சேரிதத் தூண்டுகோல் சீர்கவி வேண்டுகோள்
ஜீவானந்தன் தோத்திரப்பா மேவும் ஸ்ரீசுப்ரமண்ய

அமரர் ஜீவா அவர்கள் "தாமரை" அக்டோபர் 1979 இதழில் பாரதியைப் பற்றி எழுதியுள்ள குறிப்பு நாம் படித்து இன்புற வேண்டிய செய்தி. அது இதோ:--

"கம்பனைப் போன்றுதான் பாரதியும் இயற்கை -- செயற்கைப் பெரும் புலவன். பாரதி பன்மொழிப் புலவன்;. தமிழ், ஆங்கில, ஆரிய மொழிகளின் சிறந்த நூல்களின் சிறந்த கூறுகளையெல்லாம் தெளிவுறக் கற்றவன் அவன். செய்யுட் பாக்களை அனாயாசமாக பல்வேறு யாப்புகளில் பாடவல்லவன் என்பதைக் காட்டியதோடு, சர்வ சாதாரணமான சிந்து வகைகளை எடுத்து, தனது எண்ணங்களுக்கு ஏற்ப, அவற்றில் பல்வேறு புதிய வண்ணங்களைத் தீட்டி, ஒரு புதிய பரம்பரையையே தமிழ்மொழியில் நிறுவிவிட்டான்".

இன்னொரு சுவையான செய்தி! 1947இல் தோழர் ஜீவா தலைமறைவாய் இருந்தார். அவருடைய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு இந்த நிலைமை. அப்போது அவர் புகழ்பெற்ற நாடக, சினிமாக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களுடைய வீட்டில்தான் இருந்தார். அப்போது தினமும் தோழர் ஜீவாவுடன் பாரதி பற்றி பேசவும், கேட்கவும் வாய்ப்பு நிறைய கிடைத்தது சகஸ்ரநாமத்துக்கு. ஜீவா பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் பற்றிச் சொல்லச் சொல்ல நாடகக்காரரான சகஸ்ரநாமத்துக்கு அந்த பாஞ்சாலி சபதத்தை அப்படியே நாடகமாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. அப்படியே அவர் "பாஞ்சாலி சபதத்தை" கவிதை நாடகமாக மேடை ஏற்றி பெரும்புகழ் பெற்றார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி. இந்த ஆண்டு அமரர் ஜீவாவின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமும் அவருடைய கட்டுரைகளையும், அவரைப் பற்றிய சில சுவையான செய்திகளையும் இந்தப் பாடத்தில் கொடுத்திருக்கிறோம். பயனுள்ளதாக அமையுமென்று நம்புகிறோம். வாழ்க பாரதி புகழ்! வாழ்க பாரதி புகழ் பரப்பிய ஜீவாவின் புகழ்!!

முதல் பத்திரிகை "சக்கரவர்த்தினி"

அறிஞர் தொ.மு.சி. ரகுநாதன்.

(பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகளில் ஒருவர் அமரர் தொ.மு.சி.ரகுநாதன். கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக அமரர் ஜீவாவுக்குப் பிறகு செயலாற்றியவர். இவர் சிறந்த ஆய்வாளர், முற்போக்கு சிந்தனையாளர், தமிழறிஞர். மகாகவியின் நூற்றாண்டு விழாவையொட்டி இவர் எழுதி வெளியிட்ட நூல் "பாரதி - காலமும் கருத்தும்" என்பது. மகாகவி பாரதியை பல்வேறு கோணங்களிலிருந்து ஆய்வு செய்து எழுதியுள்ள இந்த நூல் "இலக்கியச் சிந்தனை" மற்றும் "சாகித்திய அகாதமி" பரிசுகளைப் பெற்ற பெருமைக்குரியது. அறிஞர் தொ.மு.சி. அவர்கள் பாரதி பற்றி எழுதிய நூல்களில் இது நான்காவது நூல். இந்த நூலின் முன்னுரையில் இவர் "பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தைப் பற்றி மட்டுமே இந்த நூலில் ஆராய்ந்திருக்கிறேன்" என்கிறார். தனக்கு இலக்கியத்தின் நோக்கத்தையும், போக்கையும் போதித்து வளர்த்ததில் மகாகவி பாரதிக்கு பெரும் பங்குண்டு என்கிறார் இவர். நாற்பது ஆண்டு காலமாக பாரதியைப் பயின்று வந்திருக்கிறேன், பயின்று வருகிறேன் என்று கூறும் இவர் மகாகவி பாரதி முதன்முதலில் ஆசிரியராக இருந்து பணியாற்றிய "சக்கரவர்த்தினி" இதழ் பற்றிய ஆராய்ச்சியை இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த அரிய நூலிலிருந்து பாரதியின் "சக்கரவர்த்தினி" பற்றிய பகுதியை உங்களுக்கு பாரதி அஞ்சல் வழிப் பயிற்சியில் நான்காவது பாடமாக அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அறிஞர் தொ.மு.சி. அவர்களின் மூத்த சகோதரர் தொ.மு.பாஸ்கர தொண்டைமான் தஞ்சாவூர் கலைக்கூடம் அமைவதற்கும், தமிழ்நாட்டு ஆலயங்களின் பெருமைகளை கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தவும் காரணமாயிருந்த அரும் பெரும் கலைக் காதலராகவும், அரசாங்க உயர் அதிகாரியாகவும், இலக்கியவாதியாகவும் இருந்திருக்கிறார். அறிஞர் தொ.மு.சியின் இதர நூல்களையும் வாங்கிப் படித்து இன்புறுமாறு வேண்டிக்கொள் கிறோம்.

(நன்றி: "நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை". தொ.மு.சி. ரகுநாதன்.)

December 2007


திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
இணைந்து வழங்கும் பாரதி பற்றிய அஞ்சல் வழிப்பயிற்சி.
பாடம் 4.
மகாகவி பாரதியாரின் முதல் பத்திரிகை "சக்கரவர்த்தினி"

"பாரதியின் பத்திரிகைத் தொழில் பிரவேசம் 'சுதேசமித்திரனோடு' தொடங்கியது. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் பார்த்துவந்த தற்காலிக உபாத்திமைத் தொழிலை (1-8-1904 முதல் 10-11-1904 வரை) விரைவிலேயே உதறித் தள்ளிவிட்டு 1904ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில் "சுதேசமித்திர"னில் உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தார். பின்னர் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து 1906ஆம் ஆண்டு மே மாதத்தில் பாரதி "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, "சுதேசமித்திர"னிலிருந்து விலகினார். ஆனால் அதில் அவர் சட்டபூர்வமான ஆசிரியர் என்ற அறிவிப்பு இல்லை எனினும் ஆசிரியர் பொறுப்பு முழுவதும் அவர் கையில்தான் இருந்தது.

பாரதி 1904க்கும் 1906க்குமிடையில் ஒன்றரையாண்டு காலத்தில் "சக்கரவர்த்தினி" என்ற பத்திரிகையில் ஆசிரியர் பொறுப்பு வகித்ததாக தெரியவந்திருக்கிறது. இதனைப் பற்றி பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் தரும் குறிப்புகள்:

1. பெ.தூரன் இவ்வாறு எழுதுகிறார்: "சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவே இருப்பதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. அவருடைய கருத்துக்களையும், புதிய தேசிய உணர்ச்சியையும் யாதொரு தடையுமில்லாமல் வெளியிடுவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்தே "சக்கரவர்த்தினி" என்ற மாத இதழ் வெளியாயிற்று. அதற்குப் பாரதியார் ஆசிரியராக இருந்தார் (பாரதி தமிழ்: பக்.21)"

2. "பாரதியார் 1904ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட அவருக்கு அதிகம் வாய்ப்பு இருக்கவில்லை. 'சுதேசமித்திரன்' அலுவலகத்திலிருந்தே "சக்கரவர்த்தினி" என்ற மாத இதழும் வெளியாயிற்று. அதற்கு பாரதியார் ஆசிரியரானார். 1905 நவம்பர் மாதத்தில் வெளியான அதன் இதழிலிருந்து, வந்தேமாதரம் என்ற கட்டுரை 28-12-1905 'சுதேசமித்திரன்' இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பத்திரிகை எவ்வளவு காலம் நடைபெற்றதென்று தெரியவில்லை. இதில் பாரதியாரால் எழுதப்பட்ட "வியாசங்களும் பாடல்களும் புதுமணம் கமழ்ந்து யாவராலும் விரும்பப்பட்டன" என்று எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு "சென்று போன நாட்கள்" என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்."

திரு ரா.அ.பத்மநாபன் கூறுகிறார்: "சுதேசமித்திரனில் இருந்த பாரதி அதே காரியாலத்திலிருந்து வெளிவந்த "சக்கரவர்த்தினி" மாதப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார். ஆனாலும் இதிலும் சரி, மித்திரனிலும் சரி, அவர் தம்முடைய மனம்போல் தமது தீவிரமான கருத்துக்களைக் கொட்டித் தீர்க்க இடமிருக்கவில்லை......"

இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே முதலில் பெ.தூரன் அவர்களும் பின்னர் ரா.அ.பத்மநாபனும் "சக்கரவர்த்தினி"யைப் பற்றிய தமது குறிப்புகளை எழுதியுள்ளனர். ஆயினும் பாரதி சுதேசமித்திரனில் வேலை பார்த்த காலத்திலேயே அவனை ஆசிரியராகக் கொண்டு "சக்கரவர்த்தினி" என்ற மாதப்பத்திரிகை ஒன்று வெளிவந்தது என்ற செய்தி மட்டுமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பாரதி பத்திரிகை உலகில் புகுந்த காலத்தில், சக்கரவர்த்தினி என்ற சொல்லாட்சி விக்டோரியா மகாராணியையே குறித்து வந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. எனவே விக்டோரியா மகாராணியைக் குறிக்கும் பெயரில் ஒரு தீவிரவாத அரசியல் பத்திரிகை, அதுவும் பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்திருந்தால் அது விந்தையினும் விந்தையல்லவா? அவ்வாறாயின் பாரதி ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த 'சக்கரவர்த்தினி' பத்திரிகை ஓர் அரசியல் பத்திரிகையா? அல்லது செய்தி வர்த்தமானப் பத்திரிகையா?

"சக்கரவர்த்தினி" பத்திரிகை எப்போது தொடங்கப்பட்டது? இதில் எவ்வளவு காலம் பாரதி ஆசிரியராக இருந்தான்? எப்போது விலகிக் கொண்டான்? இத்தகைய கேள்விகள் எழுகின்றன.

இந்தப் பத்திரிகை 'சுதேசமித்திரன்' அலுவலகத்திலிருந்துதான் வெளிவந்ததா? அதற்கு ஏற்கனவே நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்கள் உதவவில்லை; மாறாக அதனை மறுக்கவே உதவுகின்றது. ஏனெனில் பாரதி "சுதேசமித்திரனில்" உதவி ஆசிரியராகச் சேர்ந்த காலத்தில் அதன் அலுவலகம் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் அரண்மனைக்காரன் தெருவில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் "சக்கரவர்த்தினியோ" சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து பிரசுரமானதாகத் தெரிகிறது.

"சுதேசமித்திரன்" அலுவலகத்திலிருந்து 'சக்கரவர்த்தினி' வெளிவரவில்லை என்று கொள்வதற்குச் சுதேசமித்திரனில் அந்தக் காலத்தில் வெளிவந்துள்ள ஒரு விளம்பரமும் நமக்கு உதவுகிறது. 1905 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் கீழ்கண்ட விளம்பரம் பிரசுரமாகியுள்ளது.

சக்கரவர்த்தினி
தமிழுணர்வோர் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இம்மாதாந்தரப் பத்திரிகை அவசியம் இருக்க வேண்டும். வருஷமொன்றுக்கு ரூபா இரண்டே விலை.

மானேஜர், 100, வீரராகவ முதலித் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை.

சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்து சக்கரவர்த்தினி வெளிவரவில்லை என்பதற்கு இந்த விளம்பரம் நல்லதொரு சான்றாகும்.

அடுத்து 'சக்கரவர்த்தினி' எத்தகைய பத்திரிகை? அரசியல் பத்திரிகையா? அல்லது வேறு பத்திரிகையா? பாரதி காலத்தில் சக்கரவர்த்தினி என்ற பெயர் விக்டோரியா மகாராணியையே குறித்தது என்று முன்னர் பார்த்தோம். இதனை வலியுறுத்தும் விதத்தில் திருமதி குகப்பிரியை (அந்தக் காலத்தில் பிரபலமான எழுத்தாளர்) 1960ஆம் ஆண்டு சென்னை வானொலியில் பேசிய ஒரு பேச்சு நமக்கு உதவுகிறது. "அந்தக் காலத்துப் பத்திரிகைகள்" பற்றிய அந்த உரையின்போது, அவர் "பொதுவாக வாணி, விலாசினி, விவேக சிந்தாமணி, விவேக போதினி, பிழைக்கும் வழி போன்ற பத்திரிகைகளும், விக்டோரியா மகாராணியின் நினைவின் சின்னமாகப் பெண்களுக்கென்று சக்கரவர்த்தினி, மாதர் மனோரஞ்சினி, பெண் கல்வி, ஹிதஹாரிணி போன்றவைகளும் வெளிவந்தன" என்று கூறியுள்ளார். அவ்வாறாயின் சக்கரவர்த்தினி, விக்டோரியா மகாராணியின் பெயரில் பெண்களுக்கென்று வெளிவந்த பத்திரிகைதானா?

இந்தக் கேள்விக்கு விடைகாண அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிய விவரங்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்த்ததில், 1961இல் சைவ சித்தாந்தக் கழகம் மூலம் சு.அ.ராமசாமிப் புலவர் எழுதி வெளியிட்ட "நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை" என்ற நூலில் சில விவரங்கள் கிட்டின. சைவ சித்தாந்தக் கழகம் தனது பார்வைக்குக் கிட்டிய பழந்தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றித் தொகுத்துத் தந்துள்ள விவரக் குறிப்பே இந்த நூல். இந்நூலில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்களுக்கென வெளிவந்த "சுகுணகுணபோதினி", "மாதர் மித்திரி", "பெண்மதி போதினி", "மாதர் மனோரஞ்சனி", "தமிழ் மாது" முதலிய பத்திரிகைகளோடு, 'சக்கரவர்த்தினி' பத்திரிகை பற்றியும் பின்வரும் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.

"சக்கரவர்த்தினி" (தொடக்கம்: 1905) மாத இதழ் பார்வைக்குக் கிடைத்தது. மலர் 2, இதழ் 9 1907 ஏப்ரல் மாத இதழ். ஆசிரியர் எம்.எஸ்.நடேசய்யர்; வெளியிட்டவர் பி.வைத்தியநாதய்யர். அச்சகம்: ஏ.எல்.வி.அச்சகம், சென்னை. அளவு 24 x 16 செ.மீ. பக்.32. சந்தா ரூ.2; தனியிதழ் 3 அணா. "இவ்விதழ் பெண்கள் முன்னேற்றத்தின் பொருட்டு வெளியிடப்பட்டது. 'மாதர் ஆடவர் கடமை', 'பெண்களும் பேயென்னும் வியாதியும்', 'கலாவதி' முதலிய கட்டுரைகள் பார்வைக்குக் கிடைத்த இதழில் வெளியாகியுள்ளன".

இந்தக் குறிப்பைக் கண்டவுடன் பாரதி ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த 'சக்கரவர்த்தினி' பத்திரிகை இதுவாகவே இருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. ஏனெனில், பாரதி சுதேசமித்திரனில் நவம்பர் 1904 முதல் மே 1906 வரை வேலை பார்த்த அதே காலத்திற்குட்பட்டு 1905இல் சக்கரவர்த்தினி தோன்றியிருக்கிறது. விளம்பரத்தில் காணப்படும் மலர் 2, இதழ் 9 என்பது 1907 ஏப்ரல் மாதத்தில் வெளியானது என்பதை கணக்கிட்டுப் பார்க்கும்போது சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. பாரதி 1906 மே மாதத்தில் "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு போய்விட்டதால் குறிப்பிட்ட விளம்பரத்தில் வந்த சக்கரவர்த்தினி இதழுக்கு பாரதி ஆசிரியராக இருக்கவில்லை. அதனால்தான் 1907 ஏப்ரல் சக்ரவர்த்தினி இதழுக்கு ஆசிரியர் எம்.எஸ்.நடேசய்யர் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வளவு ஊகங்களுக்குப் பிறகும் சக்கரவர்த்தினி 1905இல் வெளிவந்தது என்பதைத் தவிர, அதில் பாரதி பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாததால் மேற்கண்ட செய்திகள் அனைத்தும் ஊர்ஜிதம் செய்ய இயலாமல் ஊகங்களாக மட்டுமே இருந்தன. இந்த நிலையில் விசுவாவசு வருஷம், புரட்டாசி மாதம் வெளிவந்த "செந்தமிழ்" என்றொரு பத்திரிகையின் இதழ் ஒன்றில் ஓர் மதிப்புரை வெளியாகியது. அது:--

"சக்கரவர்த்தினி: இது சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை. பெண்பாலாரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது இது. இதன் முதல் இரு பகுதிகள் கிடைக்கப்பெற்றோம். நம் நாட்டு மாதர்கள் நிலையைச் சீர்படுத்துவதற்கென்றே எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தாலும் அவை மிகையாகாதென்று பத்திராசிரியர் இப்பத்திரிகையின் முதல் பகுதியில் எழுதியது முற்றிலும் பொருத்தமேயாம். ஒரு நாட்டின் சீரும் சிறப்பும் அந்நாட்டு மாதர்களைப் பொறுத்தே பெரும்பாலும் இருத்தலின் தேச நலத்தைக் கருதும் நன் மக்களெல்லாம் அதிலும் கவலை செலுத்தற்குரியர். இப்பத்திரிகை பெண்பாலார்க்கு முக்கியமாகத் தெரிய வேண்டிய பல இனிய வியாசங்களைத் தன்பால் நிரம்ப உள்ளது. இதுபோன்ற சிறந்த பத்திரங்களை நம்நாட்டு மாதர்கள் பெற்றுப் படித்துவரின் அவர்கள் லெளகீக வைதீக ஞானங்களில் தேர்ச்சி பெற்று விளங்குவரென்பது திண்ணம். இதற்குச் சுதேசமித்திரன் பத்திராசிரியராகிய ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய ஐயரவர்கள் முதலிய நல்லறிஞர்கள் விஷயமெழுதி வருகின்றனர். இதன் பத்திராசிரியர் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியாரவர்கள். இந்தப் பத்திரிகையை எல்லாரும் அபிமானித்து, அதனை நடாத்துபவர்க்கு ஊக்கமளித்து வர நம்மவர்கள் கடமைப் பட்டவர்களாவர்."

மேற்கூறிய 'செந்தமிழ்' இதழ் வெளிவந்த காலம் விசுவாவசு வருஷம், புரட்டாசி மாதம், அதாவது 1905 செப்டம்பர் மாத மத்தியாகும். இவ்விதழில் 'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் முதலிரு பகுதிகள் கிடைக்கப் பெற்றோம் எனக் கூறப்பட்டுள்ளதால், 'செந்தமிழ்' பத்திராதிபருக்கு 1905 ஆகஸ்ட், செப்டம்பர் மாத இதழ்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன என்பது தெளிவு. இதிலிருந்து 'சக்கரவர்த்தினி' பத்திரிகை 1905 ஆகஸ்ட்டில் துவக்கப்பட்டிருக்கிறது என்பதும், அப்போது அதன் ஆசிரியராக பாரதி இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது.

இந்த விவரங்களிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்தி, பாரதி முதன்முதலில் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த பத்திரிகை பெண்பாலரின் அறிவுப் பெருக்கத்துக்கென்று தொடங்கப் பெற்றது என்பதாகும். இருப்பினும் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. தீவிர அரசியல் வாதியாக இருந்த பாரதி, முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொள்வானேன்? தான் ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் அந்தப் பத்திரிகையில் அரசியல் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெண்கள் முன்னேற்றம் குறித்து அதிகம் பயன்படுத்தியது ஏன்? இதற்கு விடை காண்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல!

முதலாவதாக 'சக்கரவர்த்தினி' பாரதியின் சொந்தப் பத்திரிகை அல்ல. அதன் உரிமையாளர் பி.வைத்தியநாத ஐயர் என்பவர். சொந்தப் பத்திரிகை நடத்தும் அளவுக்கு பாரதிக்கு என்றும் பண வசதி இல்லை, பிதுரார்ஜித சொத்தும் அவருக்கு மிஞ்சியிருக்கவில்லை. அதனால்தான் அவர் காசிக்குச் செல்லும்படி நேர்ந்தது. பின்னர் எட்டயபுரம் மன்னர் ஆதரவில் சிறிது காலம் இருக்க நேர்ந்தது. பிறகு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பதினேழரை ரூபாய் சம்பளத்துக்குத் தமிழாசிரியராக வேலை பார்க்க நேர்ந்தது. சுதேசமித்திரனிலும் அவருக்குச் சம்பளம் ஒன்றும் அதிகம் இல்லை. சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் என்றாலும் சம்பளம் மிகக் குறைவு. எனவே சுதேசமித்திரனில் சேர்ந்த எட்டு மாதங்களில் சொந்த பத்திரிகை நடத்தும் வசதி அவனுக்கு அப்போது இல்லை. 'சக்கரவர்த்தினி' பத்திராதிபருக்கு 'இந்தியா' பத்திரிகை உரிமையாளர் திருமலாச்சாரியார் போல அரசியல் ஈடுபாடு இல்லாமல் பெண்கள் முன்னேற்றம் குறித்து மட்டும் பாரதியோடு ஒத்துப் போயிருக்கலாம், அதனால் அவருடைய பத்திரிகைக்கு ஆசிரியராகப் போயிருக்கலாம், பிறகு 'இந்தியா' பத்திரிகையில் தன் சொந்த அரசியல் கருத்துக்களை எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கு மாறிச் சென்றிருக்கலாம். சுதேசமித்திரனில் குறைந்த சம்பளம் கருதி உபரி வருமானத்திற்காகவும், சுதேசமித்திரன் அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயரின் அனுமதியோடு சக்கரவர்த்தினிக்குச் சென்றிருக்கலாம். ஆயினும் அரசியல்வாதியாக இருந்தும் பாரதி முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு பத்திரிகையின் ஆசிரியராக ஏன் பொறுப்பு ஏற்றுக்கொண்டான்?

இந்தக் கேள்விக்கு விடை காண முயல்வோம். சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட்டில்தான் வெளிவரத் தொடங்கியது. பாரதிக்கு பால்ய பருவத்திலேயே தேசபக்தி நெஞ்சில் தோன்றிவிட்டது என்றாலும், அவன் அதில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது இந்நாட்டில் "சுதேசிய இயக்கம்" தோன்றிய பின்னர்தான். அந்த சுதேசி இயக்கம் 'சக்கரவர்த்தினி' பத்திரிகை தொடங்கிய பிறகுதான் இந்த நாட்டில் ஏற்பட்டது. அரசியல் ஆர்வம் ஏற்படுவதற்கு முன்னதாகவே பாரதிக்கு காசியில் இருந்த 1898 முதல் 1903 தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்தில் பெருத்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. பாரதியின் காசிவாச கால நண்பர் கரூர் பண்டித எஸ்.நாராயண ஐயங்கார் எழுதுவதாவது:--

"காசியில் ஒரு சமயம் சரஸ்வதி பூஜையன்று பாரதி தமிழில் ஒரு உபந்நியாஸம் செய்ய விரும்பினார். வசிக்கும் வீட்டின் கூடத்தில் உபந்நியாஸத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை வகிக்க காசியிலேயே பிரபல வித்வானாகிய ஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் இசைந்தார். பெண் கல்வி என்பது பேச்சுக்கு விஷயமாகக் கொள்ளப்பட்டது. சுப்பையா (பாரதி) தமிழில் பிரசங்கம் நிகழ்த்தினார். பிரசங்கம் காரசாரமாக இருந்தது. ஸ்திரீகளுக்குக் கல்வி அவசியமானது என்று அவர் வற்புறுத்திப் பேசினார். தலைவர் அந்த அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; கண்டித்தும் பேசினார். சுப்பையாவுக்கு கோபம் மிகுந்துவிட்டது. பெண்கள் கல்வி இன்றித் தேசம் முன்னுக்கு வர முடியாது என்று மேலும் அடித்துப் பேசினார். பெண்களின் சமத்துவத்தைப் பற்றி அடிக்கடி அவர் வற்புறுத்திப் பேசுவது வழக்கம். பெண்கள் கல்வி, சமத்துவம் இந்த இரு விஷயங்களைத் தவிர அப்போது வேறு எதிலும் அவர் அதிகக் கவனம் செலுத்தவில்லை" ("காசியில் சுப்பையா" தினமணி சுடர் கட்டுரை 8-9-1956)

இளமையிலேயே ஷெல்லியிடம் பெரிதும் ஈடுபட்டு "ஷெல்லிதாசன்" என்று தன்னை அழைத்துக் கொண்ட பாரதி, ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியைப் போலவே பெண்கள் முன்னேற்றத்திலும், விடுதலையிலும் அதிகக் கவனம் செலுத்தியதில் அதிசயம் எதுவும் இல்லை. எனவே பாரதி மாதர் விடுதலையிலும் தீவிர அக்கறை கொண்டிருந்தான் என்பது தெளிவு. இதனால் 'சக்கரவர்த்தினி' ஆசிரியப் பொறுப்பை 1905 ஆகஸ்ட்டில் மனப்பூர்வமாக விரும்பியே ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்று நாம் முடிவு கட்டலாம்.

பாரதி அந்த பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அதே மாதத்திலேயே சுதேசிய இயக்கம் பிறப்பெடுத்து விட்டது. வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று வைஸ்ராய் கர்ஸான் அறிவித்ததும், அங்கு பேரெழுச்சி வெடித்தது. இந்தச் செய்தி கேட்டு பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தனது ஆங்கில நூலான "India Struggles for Freedom" என்ற நூலில் சொல்லுகிறார்: "வங்காளம் வேதனையால் முனகவில்லை. கர்ஜித்தது. மாகாணத் தலைவர்கள் கூடி வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அன்னிய சாமான்களைப் பகிஷ்கரிப்பது என்று முடிவெடுத்தனர். மேலும் 1905 ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று நடந்த ஒரு கூட்டத்தில்தான் சுதேசி இயக்கம் ஆரம்பமானது".

இந்த சுதேசி இயக்கம் பாரதியைக் கவர்ந்தது. சென்னையில் 1905 செப்டம்பர் 14 அன்று நடந்த "சுதேசிய மாணவர்களின் கடற்கரைப் பெருங்கூட்டத்தில், பாரதி தனது "வங்க தேசத்து வாழ்த்துக் கவி"களைப் பாடினான். அது, மறுநாள் 15-9-1905 அன்று சுதேசமித்திரனில் பிரசுரமாகியுள்ளது. ("வங்கமே வாழிய" என்ற தலைப்பிலான பாடல்கள்.)

இதன் பின்னர் வங்கப் பிரிவினை அமலுக்கு வரவிருந்த நாளான 16-10-1905 அன்று முதல் வங்கத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அந்த சந்தர்ப்பத்தில் பங்கிம் சந்திரரின் வந்தேமாதர கீதம், தேசிய கீதம் போல மக்களால் ஆர்வத்துடன் பாடப்பட்டது. அப்போதுதான் பாரதி அந்தப் பாடலை தமிழாக்கி 'சக்கரவர்த்தினி' நவம்பர் மாத இதழில் வெளியிடுகிறான். இதுவே பின்னர் 'சுதேசமித்திரனிலும்' வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு பாரதி எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு கூறுகிறான்: "இப்போது பெங்காள மாகாணத்திலிருக்கும் ஒவ்வொரு ஹிந்துவாலும் ஸாம கீதத்தைப்போல அத்தனை பக்தியுடன் பாடப்பட்டு வருகின்ற வந்தேமாதரம் என்ற திவ்ய கீதம் 25 வருஷங்களுக்கு முன்பு பங்கிம் சந்திரர் 'ஆனந்த மடம்' எனும் பெரு நூலை எழுதும்போதே, இந்தப் பாட்டு அடுத்த 25 வருஷங்களுக்குள்ளாக வங்க மக்கள் எல்லோருடைய நாவிலும் இருக்கும் என்பதை அறிந்திருந்தார் போலும்". எனவே பாரதி சுதேசி இயக்கம் வங்கத்தில் தோன்றிய அதே நேரத்தில் அதில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்: -- 'பங்கிம் சந்திரரின் "ஆனந்த மடம்" எனும் நவீனத்தைத் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து, 1908இல் வெளியிட்ட மகேசகுமார் சர்மா, தமது மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்: --

"இதில் வரும் வந்தேமாதரம் பாடலையும், கவி ஜயதேவரின் கீத கோவிந்த கீர்த்தனைகள் சிலவற்றையும் நான் கேட்ட பொழுதெல்லாம் தமக்குள்ள அவசர வேலைகளைக்கூட பாராமல், மனமுவந்து தயைகூர்ந்து இன்சுவை ஒழுகும் செந்தமிழ்ப் பாக்களில் மொழிபெயர்த்து அளித்த தேசபக்த ஆசுகவியும், "இந்தியா" பத்திரிகாசிரியருமான ஸ்ரீயுத சி.சுப்பிரமணிய பாரதியிடம் நன்றிக்கடன் பட்டவனாயுள்ளேன்".

மகேசகுமார் சர்மாவின் இந்த முன்னுரைக் குறிப்பின்படி அவர் வேண்டிக்கொண்டதின்படி பாரதி வந்தேமாதரம் கீதத்தை தமிழாக்கிக் கொடுத்ததைப் போலத் தெரிகிறது. ஆனால் வங்காளத்தில் பங்கிம் சந்திரரின் வந்தேமாதர கீதம் தேசிய கீதம்போல் அக்டோபரில் ஒலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே பாரதி அதனைத் தமிழாக்கி, சக்கரவர்த்தினி நவம்பர் இதழில் வெளியிட்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருக்கால் அந்த காலகட்டத்திலேயே பாரதியும் மகேசகுமார் சர்மாவும் இதனைத் தமிழாக்குவது குறித்துப் பேசியிருக்கலாமோ என்னவோ?

பாரதி பற்றி ஆய்வு நடத்தி நூல்கள் வெளியிட்டுள்ள பெ.தூரன் அவர்கள் மகேசகுமார் சர்மாவின் உறவினரான வி.கே.ராமநாத ஐயர் தம்மிடம் "வந்தேமாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பை ஒட்டிய ரஸமான சம்பவத்தை'க் கூறியதாகக் குறிப்பிட்டு, 'மகேசகுமார் சர்மா "ஆனந்த மடம்" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அழகாக கொண்டு வந்திருக்கிறார். அதிலே வெளியிடுவதற்காக வந்தேமாதர கீதத்தை மொழிபெயர்த்துத் தரும்படி பாரதியாரைக் கேட்டுக் கொண்டாராம். இரண்டு மூன்று மாதங்கள் அவருடைய வேண்டுகோள் நிறைவேறவில்லை. பிறகு ஒரு நாள் இரவு சுமார் பத்து மணிக்கு திருவல்லிக்கேணியில் குடியிருந்த பாரதியார் சென்னை ஜார்ஜ் டவுனில் குடியிருந்த மகேசகுமார் சர்மாவின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி "சர்மா! பாட்டு வந்துவிட்டது, எழுதிக்கொள்! கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன், நீ கேட்ட பாட்டு திடீரென்று உதயமாயிற்று. கடற்கரை ஓரமாகவே நேராக நடந்து இங்கே வந்து விட்டேன்" என்று கூறினாராம்.

ராமநாதய்யர் கூறியுள்ள விஷயம் நாடகத் தன்மையோடு ரஸமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என்பதை மேற்கண்ட விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மகேசகுமார் சர்மா கேட்டுக்கொண்டும் வந்தேமாதர கீதத்தைப் பாரதி, இரண்டு மூன்று மாதங்கள் மொழிபெயர்த்துத் தரவில்லை என்கிறார் அவர். ஒரு வேளை ஜயதேவரின் கீதகோவிந்தத்தைத் தமிழாக்கித் தர தாமதமாகியிருக்கலாமோ என்னவோ? சுதேசியப் போராட்டத்தில் கவனம் செலுத்தியிருந்த பாரதிக்கு சிருங்கார ரஸம் நிரம்பிய ஜயதேவரின் கீதகோவிந்தத்தை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் இல்லாது போயிருக்கலாம். ஆனால் தேச உணர்வை ஊட்டுகின்ற வந்தேமாதரத்தை எவருடைய தூண்டுதலும் இல்லாமல் சொந்த உத்வேகத்திலேயே செய்து முடித்திருக்க வேண்டும்.

இனி, 'சக்கரவர்த்தினி' பத்திரிகை இதழ்களில் பெண்கள் முன்னேற்றம் தவிர, அவருடைய அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தனவா என்பதையும் பார்க்கலாம். சக்கரவர்த்தினி பத்திரிகை இதழ்களை தேடி அலைந்த வகையில் இரண்டு இதழ்கள் 1906 ஜூலை, ஆகஸ்ட்டில் வெளியானவை கிடைத்தன. அதன் அட்டையில் காணப்பட்ட வாசகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வருமாறு:--

CHAKRAVARTINI
A TAMIL MONTHLY DEVOTED MAINLY TO
THE ELEVATION OF INDIAN LADIES.

சக்கரவர்த்தினி
தமிழ்நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக
வெளியிடப்படும் மாதாந்தரப் பத்திரிகை

ஆக, அட்டையில் காணப்படும் வாசகங்களே பத்திரிகையின் பிரதான நோக்கம் மாதர் முன்னேற்றம் ஒன்றே என்பதைத் தெளிவு படுத்திவிடுகிறது. அட்டையில் பத்திரிகையின் தலைப்பும், பொருளடக்கமும் மட்டுமே காணப்படுகின்றன. தலைப்புக்குக் கீழ் அந்தந்த இதழின் பொருளடக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர்கள் பெயர்களோடு இரு பத்திகளாக இடம்பெற்றிருக்கிறது. பொருளடத்துக்குக் கீழ் இரு பத்திகளுக்கும் அடியில் ஒருபுறம் பி.வைத்தியநாதய்யர், புரொப்ரைட்டர் என்றும் மறுபுறம் சி.சுப்பிரமணிய பாரதி, ஆசிரியர் என்றும் ஆங்கிலத்தில் அச்சிடப் பெற்றுள்ளது.

1906 ஜூலை மாத இதழில் "இத்துடன் நமது பத்திரிகைக்கு ஒரு வயது முற்றுப் பெறுகின்றது" என்று ஆசிரியர் குறிப்பிலிருந்து 'சக்கரவர்த்தினி' பத்திரிகை 1905 ஆகஸ்ட்டில் தொடங்கி மாதாமாதம் தவறாமல் வெளிவந்திருப்பது தெரிகிறது. அந்த இதழில் ஓர் விண்ணப்பமும், அதன் கீழ் ஒரு ஆங்கில அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

விண்ணப்பம்.

இத்துடன் நமது பத்திரிகைக்கு ஒரு வயது முற்றுப் பெறுகின்றது. அடுத்த இதழ் முதல் தகுந்த வித்வான்களாலும், கல்வித் தேர்ச்சி பெற்ற பெண்மணிகளாலும், பல உயர்ந்த விஷயங்கள் எழுதுவித்து, நமது பத்திரிகையை மிகவும் சீர்திருத்தத்துடன் பிரசுரிக்கக் கருதியிருக்கிறோம். சக்கரவர்த்தினியைப் படிக்கும் ஒவ்வொருவரும் புதிய சந்தாதாரர்கள் சேர்க்க முயற்சி பண்ணி இப்பத்திரிகையை அதிக உபயோககரமாக்க வேண்டுமென்று நமக்கிருக்கும் நோக்கம் எளிதில் நிறைவேறுமாறு புரிவார்களென நம்புகிறோம்.

நமது பத்திரிகையின் அபிவிருத்திக்குரிய ஆலோசனைகள் இதனைப் படிக்கும் பெண்மணிகளாலும் ஆடவர்களாலும் எழுதியனுப்பப்படுமாயின் அவை நன்றியறிவுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.
பத்திராதிபர்.

NOTICE
Contributions wanted, specially from Ladies. For terms, communicate
with the Editor. Preference is given to educational and literary articles.

இதன்மூலம் பத்திரிகையின் ஆசிரியர் பாரதி, மாதர் முன்னேற்றத்திற்கான "சக்கரவர்த்தினி" பத்திரிகையில் மாதர்களின் எழுத்துக்களே பெரிதும் இடம்பெற வேண்டும் என்று விரும்பிய உண்மை புலப்படுகிறது.

'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் தலையங்கப் பகுதியில் ஒரு ஈரடி குறட்பா பத்திரிகையின் லட்சிய கோஷம்போல ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டிருக்கிறார். அது:--

"பெண்மை யறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
ஒண்மையுற வோங்கும் உலகு"

'பெண்களின் அறிவு உயர்ந்தால் பெருமிதம் தோன்றும்; பெண்கள் சிறந்தொளிர்ந்தால் உலகமே சிறந்தோங்கும்" என்ற கருத்துக் கொண்ட இந்தக் குறட்பாவைப் பாரதியே இயற்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

'சக்கரவர்த்தினி'யில் பாரதி எழுதியுள்ள தலையங்கத்திலிருந்து அந்தப் பத்திரிகை அதன் முதலாண்டில் அதன் கர்த்தாக்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பரவலாக வினியோகம் ஆகவில்லை என்றும், முதலாண்டில் ஜி.சுப்பிரமணிய ஐயர், பண்டிதை அசலாம்பிகை போன்றோர் விஷயதானம் செய்து வந்திருக்கிறார்கள் என்றும், சில பிரபுக்களும் ஜமீன்தார்களும்கூட அதற்குச் சந்தாவோ, நன்கொடையோ வழங்கி உதவியிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. அதே சமயம் பெண்களுக்காக நடத்தப்பெறும் பத்திரிகையில் பெண்களே பெரிதும் பங்கெடுக்க வேண்டும் என்றும், அவர்களது பிரச்சினைகளையும், சந்தேகங்களையும் அவர்கள் அப்பத்திரிகைக்கு எழுதியனுப்ப வேண்டுமென்றும் பாரதி விரும்பியிருப்பது தெரிகிறது.

கிடைத்த இரு இதழ்களிலும் தலையங்கத்தைத் தவிர, ஒவ்வோர் இதழிலும் பாரதி தனது படைப்புக்கள் ஒவ்வொன்றே இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறான். பத்திரிகையின் பெரும் பகுதிப் பக்கங்களைத் தானே ஆக்கிரமித்துக் கொண்டுவிடாமல், அதிகமான பக்கங்களை ஏனைய எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, நாடகம், பாடல் முதலியவற்றுக்கே ஒதுக்கியிருக்கிறான்.

ஜூலை 1906 மாத இதழில் சக்கரவர்த்தினியில் பாரதி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ள "துளஸீபாயி சரித்திரம்" என்ற நெடுங்கதையின் இறுதிப்பகுதி இடம் பெற்றிருக்கிறது. இதனை அவன் "ஷெல்லிதாஸ்" என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறான். "ஷெல்லிதாசன்" என்ற புனைப்பெயரில் பாரதி ஆரம்ப காலத்தில் எழுதிவந்தான் என்று பாரதி வரலாற்றாசிரியர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஆதாரமாக எந்தச் சான்றையும் காட்டவில்லை. எனினும் 'சக்கரவர்த்தினி' இதழ் மூலம் அவன் இந்தப் புனைபெயரில் எழுதிவந்ததற்கான முதல் சான்று நமக்குக் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

'சக்கரவர்த்தினி' இதழ்களில் பாரதி எழுதிய "துளஸீபாயி சரித்திரம்" தொடராக வந்திருக்கிறது. அதன் முழுக்கதை என்னவென்று தெரியாவிட்டாலும், கிடைத்த பகுதிகளிலிருந்து இது ஒரு முகலாயர் காலத்துக் கதை என்பது தெரிகிறது. துளஸீபாய் எனும் ரஜபுத்ர வம்சத்துப் பெண்மணிக்கும் அப்பஸ்கான் என்ற முஸ்லீம் வீரனுக்கும் இடையே மலர்ந்த காதல் பற்றிய கதை என்று தெரிகிறது. கிடைத்த இறுதிப் பகுதியிலிருந்து இருவேறு மதங்களைச் சேர்ந்த இந்த இளம் காதலர்களிடையே மலர்ந்த காதல் தோல்வியுற்று நிராசையாக முடியாமல் இருவரும் ஒன்றுகூடிய நிகழ்ச்சி மங்களகரமாக முடிகிறது. இதிலிருந்து, ஜாதிவிட்டு ஜாதியில் திருமணம் செய்யும் கலப்புத் திருமணம் மட்டுமல்லாது மதம்விட்டு மதம் திருமணம் செய்யும் கலப்புத் திருமணத்தையும் பாரதி ஆதரித்திருக்கிறான் என்பதையும், மேலும் வங்கப் பிரிவினை நடந்து முடிந்த சில மாதங்களிலேயே எழுதத் தொடங்கிய இந்தக் கதையில் பாரதி இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறான் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

1906 ஆகஸ்ட் இதழில் பாரதி இராஜாராம் மோஹன்ராய் பற்றி நான்கு பக்க கட்டுரையொன்றை எழுதியிருக்கிறான். "இந்நாட்டு மாதர்களின் அபிவிருத்தியின் பொருட்டாக முதன்முதல் பாடுபட்ட மஹான் ராஜாராம் மோஹனராய் என்பவர்" என்று தொடங்கும் இந்தக் கட்டுரையில் பாரதி ராஜாராம் மோஹன்ராயின் பிரம்மஞான தத்துவம் பற்றிச் சுருக்கமாகக் கூறிவிட்டு அவரது சீர்திருத்தப் பணிகளையே பெரிதும் வலியுறுத்துகிறான். அவர் விக்கிரக ஆராதனை முதலான விஷயங்களில் தனித்த கருத்துடையவர் என்பதைக் குறிப்பிட்டு அதனைத் தானும் நியாயப்படுத்தி கட்டுரையின் பிற்பகுதியில் எழுதுகிறார்.

ராஜாராம் மோஹன்ராயின் பெருமையை கட்டுரையின் இறுதியில் கூறும்போது பாரதி எழுதுகிறார்:-- "ஊருக்கு ஊர் ராம் மோஹனருடைய சிலை ஸ்தாபித்திருக்க வேண்டும். எண்ணிறந்த ஸ்திரி ஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும்பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் (உடன்கட்டை ஏறுதல்) அரக்கனை மிதித்து கொல்லும்படியாக முதலிலே தூக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடிகளை நாம் மறந்து விட்டால் நமக்கு உய்வுண்டாமா? இத்தேசத்திலிருந்து ஒவ்வொரு பாஷையிலேயும் அவரது திருச்சரித்திரம் எழுதப்பட்டு அதனை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டாமா?”

சக்கரவர்த்தினி பத்திரிகையில் ஏனையோர் எழுதியுள்ள விஷயங்கள்:

1906 ஜூலை, ஆகஸ்டு மாதச் "சக்கரவர்த்தினி" இதழ்களில் பாரதியின் படைப்புக்களைத் தவிர, மகேச குமார் சர்மா (பங்கிம் சந்த்ரரின் ஆனந்த மடம் நாவலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்) எஸ்.வி.ஸ்ரீனிவாச அய்யர், டி.வி.அய்யாசாமி அய்யர், எஸ். ஸ்ரீனிவாச ஐயர், எல்.நாராயணசாமி அய்யர் ஆகியோரின் எழுத்துக்களும் மற்றும் பண்டிதை அசலாம்பிகை அம்மை ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மையார் ஆகிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. பாரதியே 1906 ஆகஸ்ட் இதழ் தலையங்கத்தில் கூறியுள்ளபடி, மாதர் முன்னேற்றத்துக்காக நடத்தப் பெற்ற 'சக்கரவர்த்தினி'யில், மாதர்கள் எழுதிய எழுத்தோவியங்கள் மிகவும் குறைவாக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

இவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் பெரும்பாலும் பத்திரிகையின் நோக்கமாகிய மாதர் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவையாகவே உள்ளன. உதாரணமாக "பெண்மணிகளின் பரிதாபகரமான ஏலம்" என்ற தலைப்பில் டி.வி.அய்யசாமி அய்யர் (ஜூலை இதழில்) எழுதியுள்ள கட்டுரை வரதட்சிணைக் கொடுமையைக் கண்டித்து எழுதியது. "பெண்கள் அபிவிருத்தியடைவதின் அவசியத் தன்மை" என்ற தலைப்பில் எஸ்.ஸ்ரீனிவாச அய்யர் எழுதியுள்ளது பெண் கல்வியை வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரையாகும். "ராம திலகம்" என்ற தலைப்பில் ஒரு தொடர் நாடகம் வந்திருக்கிறது. இது ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ - ஜூலியட்' நாடகத்தின் அப்பட்டமான தழுவல். இந்த நாடக ஆசிரியர் ரோமியோவை ராமாமிர்தமாகவும், ஜூலியட்டை திலகமாகவும் மாற்றி, நாடகத்துக்கு ராமதிலகம் என்று பெயர் வைத்துவிட்டார். இதில் நாயகனும் நாயகியும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கலப்புத் திருமணத்தை வரவேற்று இந்த நாடகம் எழுதப்பட்டிருக்கிறது.

ஆடவர்கள் எழுதியுள்ள விஷயங்களைத் தவிர, ஜூலை இதழில் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் எழுதியுள்ள "படித்த பெண்களினால் எய்தும் பயன்" என்ற தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்டுரை 'பெண்கள் படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள்' என்ற போலி வாதத்தை மறுப்பதாகவும், கணவன் மனைவி இருவருக்கும் கல்வி எத்தனை அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. அடுத்ததாக ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி "பார்வதி சோபனம்" என்ற தலைப்பில் பாடியுள்ள அம்மானைப் பாடலில் 'மன்மத தகனம்' என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த அம்மானைப் பாட்டில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவும் இல்லை.

'சக்கரவர்த்தினி' பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பாரதி பத்திரிகையின் இதழ்களில் புத்தக விமர்சனம், பொது வர்த்தமானங்கள் என்ற தலைப்பில் செய்திக் குறிப்புகள் ஆகியனவற்றையும் தனது பெயரைக் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார்.

உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் நடத்திய "குமரி மலர்" எனும் இதழில் கிடைத்த சில தகவல்களின்படி 1906 ஆண்டு பிப்ரவரி, மார்ச் 'சக்கரவர்த்தினி' இதழ்களில் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் 'மகாமகோபாத்யாய' பட்டம் பெற்றதற்காக நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பாரதி பாடிய "செம்பருதி ஒளி பெற்றான்" எனும் மூன்று பாடல்களும், அய்யரவர்களைப் பற்றி பாரதி முன்னுரையாக எழுதிய ஒரு சிறு குறிப்போடு வெளியாகியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. அது தவிர "மாதர் கல்விக் கணக்கு" என்ற தலைப்பில் இந்திய மாதரின் கல்வி நிலை மிகவும் பரிதாபமாக இருப்பதைப் பற்றியும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் லக்ஷ்மிநரசு நாயுடு என்பவர் வேறொரு வாராந்திரப் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு "பெளத்த மார்க்கத்தில் மாதர்கள் நிலை" என்ற நீண்ட கட்டுரையும் எழுதியிருப்பதும் தெரியவருகிறது. 1906 மார்ச் இதழில் சுவாமி விவேகானந்தர் பற்றி "ஸ்ரீமத் ஸ்வாமி விவேகானந்த பரமஹம்சர்" எனும் தலைப்பில் அவரது வாழ்க்கை, பணி பற்றி சில மாதங்கள் தொடர்ச்சியாக எழுதியதும் தெரிய வருகிறது. இந்தக் கட்டுரையில் பாரதி சுவாமி விவேகானந்தரை 'உண்மையான புருஷத் தன்மையும், வீர நெறியும் மனித வடிவெடுத்தாற்போல அவதரித்த ஸ்வாமிகள்" என்று போற்றியிருக்கிறான்.

இந்தக் கட்டுரையில் அறிஞர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ள சில விஷயங்களைப் பாடமாகக் கொடுத்திருக்கிறோம். மேலும் பல அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது "பாரதி: காலமும் கருத்தும்" எனும் நூலை வாங்கிப் படித்து பயன் பெறுங்கள். இனி அடுத்த பாடத்தில் சந்திக்கலாம்.


No comments:

Post a Comment

You can give your comments here