பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, May 27, 2015

70. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம் -- ஆசாரச் சீர்திருத்தம்


                 இன்று காலையில் நான் நம்முடைய ஸ்நேகிதராகிய இடிப்பள்ளிக்கூடம்     பிரமராய வாத்தியாரைக் கண்டு, புரோகிதர் வந்தால் என் வீட்டுக்கு ஆவணி அவிட்டம் பண்ணுவிக்கும் பொருட்டு அனுப்பும்படி சொன்னேன். பிரமராயர் சொன்னார்:-  ''பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை. மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்ன செய்யலாம்? ஐயோ பாவம்? கிழவி; அந்த அன்னி பெஸன்ட் வயது இவளுக்குமிருக்கும்.  அதனாலே அந்த வாத்தியார் இன்றைக்கு உபாகர்மம் பண்ணி வைக்கக் கோவிலுக்கு வருவதே சந்தேகம். அவருடைய மருமகன் குமார சாஸ்திரி வருவான். நான் கோவிலுக்குத்தான் போவேன். ராமராயர் உங்களைப்போல் உபாகர்ம உபநயன விஷயங்களை வீட்டுக்குள்ளே ரஹஸ்யமாக நடத்தி வருகிறாராகையால், அந்தக் குமார சாஸ்திரி என் வீட்டுப் பக்கமாக வருவான். நான் உங்கள் வீட்டுக்கு உடனே அனுப்புகிறேன்? என்று சொன்னார். 

                  நான் அவரிடம்:- 'அதென்ன ஸ்வாமி?  இந்த ப்ராம்மண ஸமூஹத்தில் வருஷந் தவறாமல் இன்றைக்கு ஆவணியவிட்டமா நாளை ஆவணியவிட்டாமா என்று சண்டை நியதமாகவே நடந்துகொண்டு வருகிறதே, காரணமென்ன?' என்று கேட்டேன்.  அவர் சொன்னார்:-  'இந்துக்களிலே பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் அபண்டிதர்கள். பஞ்சாங்கமே முழுதும் தப்பிதம். உத்தராயண தக்ஷிணாயக் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிறான்; இருபத்திரண்டுக்கும் இருபத்து மூன்றுக்கும் நடுவிலே. அதாவது, பஞ்சாங்கம் பிரயோஜன மில்லை. நம்முடைய வருஷ மாஸந் தேதியெல்லாம் தப்பிதம்.  இதைக் கவனிக்க நாதனைக் காணோம், ஆவணி யவிட்டச் சண்டை நிர்த்தூளிப்படுகிறது. அஹோ! அபண்டிதா' என்றார்.  'பத்திரிகைகளிலே நடக்கிறதே அதைத் தவிர இந்த உள்ளூர்ப் பண்டிதர்களுக்குள்ளே வேறே ''லடாயி'' கள் உண்டோ?" என்று கேட்டேன்.

              'அதை என்ன சொல்வேன், போம்! அத்வைத சமாஜமே மிகவும் த்வைத ஸ்திதியில் இருக்கிறது. உச்சி குமாஸ்தா முத்துஸாமி அய்யர் வியாழக்கிழமைதான் பூணூல் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற கக்ஷி. மணிலாக் கொட்டை மஹாதேவ அய்யர் வெள்ளிக்கிழமை கக்ஷி. வெங்காயக் கடை வெங்கு அய்யர் தெரியுமோ உமக்கு? அவருக்கு முத்துஸாமி அய்யரே திதி, நக்ஷத்திரம் எல்லாம்; யாராவது நம்மிடம் வந்து இன்றைக்குத் திதி என்ன வென்று கேட்டால் நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லுகிறேன் என்று சொல்வோமோ, மாட்டோமோ?  அந்த இடத்தில், அவர் முத்துஸாமியைப் பார்த்து வந்து சொல்லுகிறேன் என்பார். அவர் கூட இந்தத்தடவை ஸர்க்கார் ரஜா ஆவணியவிட்டத்துக்காக வெள்ளிக் கிழமை தான் விடுகிறார்கள் என்பதையும் அவருடைய மாப்பிள்ளை ஸர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாலும்,அவருக்கு வியாழக்கிழமை ரஜா கிடையாதாகையாலும் வெள்ளிக்கிழமை யன்று உபாகர்மம் நடத்தினால் தான் மாப்பிள்ளையும் தானும் சேர்ந்து நடத்த முடியும் என்பதையும் உத்தேசித்து, இந்த நிலைமையில் முத்துஸாமி அய்யரைக் காட்டிலும் கும்பகோணமே ப்ரமாணம் என்பதாகத் தீர்மானஞ் செய்து விட்டார். ருஷியாவிலே குழப்பம் எப்படி இருக்கிறது ஸ்வாமி? 'என்று பிரமராயர் முடித்தார். 'அது எக்கேடும் கெட்டுப் போகிறது மேலே உபாகர்ம விஷயத்தைச்சொல்லும்' என்றேன்.

                   இந்த சமயத்தில் கோயில் தர்மகர்த்தா வீரப்ப முதலியாரும் அங்கே வந்து சேர்ந்தார்.வந்தவர், என்னை நோக்கி இன்று கோவிலில் பிராமணஅட்டஹாஸம் அதிகமாக நடக்கும். நீங்கள் கோவிலிலே பூணூல் போட்டுக் கொள்ளுகிறீர்களா? வீட்டிலேதானா?'' என்று கேட்டார். ''வீட்டில்'' என்றேன். "கோயிலும் வீடும்ஒன்றுதானே?'' என்று பிரமராயர் ஸூக்ஷ்மார்த்தமாகக் கேட்டார். ''ஆம்'' என்றேன். வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினார்; ''பூணூலை எடுத்துப் போடுங்கள்; இந்தியா முழுவதும் ஒரே ஜாதி, ஒரே உடுப்பு, ஒரே ஆசாரம் என்று செய்து விடவேண்டும்; அது வரை பிராம்மண சபை, அப்ராம்மண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை, முதலியார் சபை - இந்த இழவெல்லாம் தீராது. ஒரேகூட்டம் என்று பேசு. பூணூலென்ன கீணூலென்ன, வீண்கதை!' என்றார். பிரமராயர் சமாதானப் படுத்தப்போனார், வீரப்ப முதலியார் சொல்லுகிறார்:   'எல்லாம் தெரியும்.தெரியும். யாரோ ஒரு ராஜாவாம்; அவன் பூணூலை ஒரு தட்டிலும் பொன்னை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தானாம்; பூணூல் கீழே இழுத்ததாம்; பொன் மேலே போய்விட்டதாம். இதெல்லாம் மூட்டை. சரி சமானமாக ஐரோப்பியர்களைப் போலே நடப்போம். ஜப்பானிலே அப்படித்தான். ஜாதி வித்யாசத்தை முதலாவது நீக்கி விட்டுத்தான் மறுவேலை பார்க்கத் தொடங்கினார்கள். ஜப்பானியரைப் போல இருப்போம்' என்றார்.

'ஹிந்துக்களைப் போலவே இருப்போம்' என்று நான் சொன்னேன்.

'எப்போதும் பிரிவும் சண்டையும் இருக்க வேண்டுமென்பது உம்முடைய கக்ஷியோ?' என்று வீரப்ப முதலியார் கேட்டார். 'வேண்டியவர்கள் எல்லாம் பூணூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள் எல்லாரும் பூணூல் போட்டுக்கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே, இல்லா விட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரேகுடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்? என்றேன்.  'அன்பே சிவம்' என்று பிரமராயர் சொன்னார். இவ்வளவுடன் காலை சபை கலைந்தது.


No comments:

Post a Comment

You can give your comments here