பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 26, 2015

69. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்


                 இந்தியா முழுதிலுமுள்ள ஹிந்துக்களின் அனுகூலத்திற்குப் பாடுபட்டு வரும் ''அகண்ட பாரத ஹிந்து சபை''யின்  காரியதரிசியான ஸ்ரீ ரத்னசாமு என்பவர் தேராதூன் (Dehradun) பட்டணத்திலிருந்து ''ஹிந்து'' பத்திரிகைக்குஎழுதியிருக்கும் லிகிதமொன்றில் பின்வருமாறுசொல்லுகிறார்:-

               'இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமான முடையவர்களுக் கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.

              ஆம்; ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகை குறையும் போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே தூங்குகிறார்கள்; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.
பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்து சபையின் காரியதரிசி ஸ்ரீீ ரத்னசாமு என்பவருக்கு ஸ்ரீ காசி ஹிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ஸ்ரீமான் பகவான் தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யோசனைசொல்லுகிறார்: 'பறையர்களுடைய தீண்டாமையை உடனே நீக்கி விடவேண்டும். காசி, நவத்வீபம், பிருந்தாவனம் என்ற ஸ்தலங்களிலுள்ள பண்டிதர்களும் சங்கர மடத் தார்களும் மற்றுமுள்ள மடாதிபதிகள் முதலியவர்களும் இவ்விஷயமாக உடனே உத்தரவு கொடுக்கவேண்டும்?

                பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டு மென்றாவது சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது,மேற்படி ரத்னசாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. ஹிந்துக்களுக்கு இதர வகுப்பினர் பந்தி போஜனம், சம்பந்தங்கள் இல்லாதிருக்கும் வரை பஞ்சமரும் அப்படியே இருக்கலாமென்று ஸ்ரீ ரத்னசாமு சொல்லுகிறார். ஆனால் பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிகள் பள்ளிக்கூடங்கள் முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும் கடமை யாரைச் சேர்ந்தது? அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை? ஹிந்து தர்மத்தின் மஹிமையை நன்றாக றிந்தோர் இஹலோக வாழ்க்கையில் எத்தனை கொடூரமான கஷ்ட நிஷ்டூரங்கள் நேரிட்டாலும் இந்த தர்மத்தைக் கைவிடமாட்டார்கள். உலகத்தில் நிகரற்ற தாகிய வறுமையானது நமது தேசத்தை வந்து பிடித்துக் கொண்ட கால முதலாக நமது நாட்டார் பசியாலும் அதனாலேற்படும் நோய்களாலும் லக்ஷக்கணக்காக அகால மரணத்துக் கிரையாகி வருகிறார்கள். பசித் துன்பம் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், கீழ் வகுப்பினருள் அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம் நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பினர் அதிகமாகச் சாகிறார்கள். பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும், நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம்போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்றே மறந்து போய் விட்டதாகத் தோன்கிறது.

              ''அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய்                                                          ஆவுரிதுத் தின்றுழலும் புலையரேனும்                                                                         கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராயின்                                                              அவர் கண்டீ யாம் வணங்குங் கடவுளாரே''

என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோர் அதன் பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை.

     'ஒக்கத் தொழுகிற்றிராயின் கலியுகம் ஒன்றுமில்லை' என்ற திருவாய்மொழிக் கருத்தை அநேகர் அறியாதிக்கின்றார்கள். ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதனால் நாம் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விடமாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும்; இருந்தாலும் நமக்கு ஸர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல், அசிரத்தையாக இருப்போமானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும்; அதில்சந்தேமில்லை.

ஹிந்து மதம் ஒன்று, சைவம் வைஷ்ணவம் முதலியஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள். இதை தேசத்து ஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குருக்கள், மடாதிகாரிகள் முதலிய சிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

              'திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்                                                                     செய்கை கொடுமுளற அறிவரார்?                                                                             ஆறு சமயங்கடொறும் வேறு வேறாகி                                                                       விளையாடும் உனையாவரறிவார்?'

    என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்து மகா ஜனங்களுக்கன்று. மஹாஜனங்கள் இவ்வுண்மையை நன்றாகத் தெரிந்து நடக்கிறார்கள். பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர - என்ற நான்கு பிரிவிலும் பெரும் பகுதியோர் எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்குகிறார்கள்,வேதரிஷிகளைப்போலே.

ஆனால் சைவ வைஷ்ணவ மடங்களிலும் பௌராணிகர் கூட்டத்திலும் பரஸ்பரமாகிய மதகண்டனைகள் கொஞ்சம் நடந்து வருகின்றன. அதை உடனே நிறுத்தவேண்டும்.

                                                   ஹிந்துக்கள் யார்?
வேதத்தை நம்புவோர்.

ருத்ரன், நாராயணன், குமாரன் முதலியதேவர்கள் ரிஷிகளால் ஒன்றாகக் கருதி வணங்கப்பெற்றோர். ஒரே தெய்வத்தை இங்ஙனம் பல பெயர் கூறி வணங்கியதாக அந்த ரிஷிகளே சொல்லி யிருக்கிறார்கள்.

                                                        நல்ல காலம்

ஹிந்து மதம் ஒன்று. ஆகவே, வைஷ்ணவ  சமயாசாரியார், சைவ சமயாசாரியார். சங்கரமடத்தார் முதலிய குருக்களெல்லாம் தமது பிரதிநிதிகள் மூலமாக ஒன்று கூடி யோசனை செய்து, ஹிந்துக்களுடைய ஜனத்தொகை குறையாமல் பாதுகாப்பதற்கு வழி செய்யவேண்டும்  பிறமதங்களிலிருந்து ஜனங்களை நமது கூட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கு வழிகளென்ன, என்பதைப்பற்றி யோசனைசெய்ய வேண்டும். தெய்வம் ஹிந்துக்கள் மீது கடைக்கண் செலுத்தி விட்டது; நாம் கும்பிடும் சிலைகளெல்லாம் வெறும் கல்லும் செம்புமல்ல. மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடி அத்தனை கெட்ட நிலைமையில் ஹிந்துக்கள் வீழ்ந்த சமயத்தில், மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதி முற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மஹா ஞானிகளும், சித்த புருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள். ஹிந்துக்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இதனை எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும்.

                                                  ஜாதிப் பிரிவு

   காச்மீர ராஜ்யத்திலே ஹிந்து ராஜா; ஆனால் ஹிந்துக் குடிகளைக் காட்டிலும் முகம்மதியக் குடிகள்அதிகம். அந்த ராஜ்யத்து ஹிந்துக்களிலே ஒரு விசேஷம் என்னவென்றால் அவர்களத்தனை பேரும் பிராம்மணர்;  வேறு ஜாதியே கிடையாது. இமயமலைக் கருகேயுள்ள காஸ்கரா ஜில்லாவில் பிராம்மணரைக் காட்டிலும் க்ஷத்திரிய ஜாதியாருக்கு மதிப்பு அதிகம். க்ஷத்திரியன் உயர்ந்த ஜாதி; பிராமணன் தணிந்த ஜாதி. திருநெல்வேலி ஜில்லாவில்  கம்பளத்து நாயகர் என்ற ஜாதியைச் சேர்ந்த சில ஜமீன்தார்கள் இருந்தார்கள். இவர்கள் கலியாணத்திலே தாலி கட்டும்பொழுது பிராம்மணன் வரக்கூடாது. அவர்கள் ஜாதி புரோகிதர்கள் வந்து கலியாணத்திலே முக்கியச் சடங்கு நடத்த வேண்டும். அப்போது அரண்மனைக்கு சமீபத்திலே ஒரு பிராம்மணன் வந்தால் அதுவே அபசகுனம். அடித்துத் துரத்தி விடுவார்கள். ''ஜாதி பேத வினோதங்கள்'' என்று யாரேனும் புஸ்தகம் எழுதினால் நிறைய விலையாகும். சர்க்கார் அச்சிடும் (ஜனசங்கியை) புஸ்தகத்திலும் வட இந்தியா ஜாதிகளைப் பற்றி நெஸ்பீல்டு (Nesfield)  என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் புத்தகத்திலும், பத்திரிகைகளிலும் அனுபவத்திலும் தெரியக்கூடிய செய்திகளை யெல்லாம் ஒன்று சேர்த்து நல்ல தமிழ்ப் புஸ்தகம் போடலாம்; நிறைய லாபம் கிடைக்கும். இந்த மாதிரியான புஸ்தகம் எழுதுவதற்கு வேண்டிய சௌகரியங்கள் எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் வேறு யாரேனும் இந்தத் தொழில் செய்தால் நான் பத்துப் புஸ்தகம் விலைக்கு வாங்கிக்கொள்வேன்.


No comments:

Post a Comment

You can give your comments here