பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 1, 2015

90. சமூகம் - ஏன்?


                                                          குழு

              ''குழு'' என்ற பழைய தமிழ்ச் சொல்லுக்குக்''கூட்டம்'' என்று அர்த்தம். இப்போது மஹாஸபை என்று சொல்வதைப் பழைய தமிழர் குழு என்றனர். தமிழரசர் காலத்தில் ஐந்து குழுக்கள் உண்டு:  (1) குடிகள் குழு, (2) குருக்கள் குழு, (3) ஜோதிடர் குழு, (4) வைத்தியர்குழு, (5) மந்திரிகள் குழு.

              ராஜா செய்யும் விதிகள் இந்த ஐந்து குழுக்களின் அனுமதி பெற்ற பிறகுதான் உறுதிப்படும். குடிகளின் குழுவிலே ஜனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். குருக்கள் ஸபையிலே மதத் தலைவரும், சோதிடர் ஸபையிலே கணிதக்காரரும் இருந்து அரசியலானது சாஸ்திரக் கருத்தையும், ஜனாசாரங்களையும் தழுவி நடக்கும்படி ஆலோசனை சொல்லினர். வைத்தியர் குழு, நாட்டிலே நோய்கள் பரவாதபடி அரசன் செய்ய வேண்டிய சுத்தி முறைகளைக் கவனிப்பது. மந்திரிகளின் குழு அரசியலின் மூல தர்மங்களிலே தவறு நேரிடாமல் அரசனை நியாய வழியில் நடத்துவது. இந்த விஷயமெல்லாம் நமது நாட்டுப் பழைய சாஸனங்களைஆராய்ச்சி செய்யும் புராதன பரிசோதனைப் பண்டிதர்கள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். மணிமேகலை முதலிய பழைய நூல்களிலும் காணலாம். இது நிற்க. ஜனங்களுடைய ஸம்மதப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் ஏற்படும் சபைகள் இங்கிலாந்து முதலிய தேசங்களில் நாளுக்கு நாள் நாகரீகமும் சீர்திருத்தமும் பெற்று மேன்மேலும் அதிக வலிமையுடன் ஏறி வந்திருப்பதாகச் சரித்திரங்களிலே தெரிகிறது. நமது நாட்டில் இவை விருத்தியடையவில்லை. ஏன்! எதனாலே?

நகரம்

              வால்ட் விட்மான் என்பவர் சமீப காலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக் கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்ன வென்றால், அது வசன நடை போலே தான் இருக்கும். எதுகை, மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதை தான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை. வால்ட்விட்மான், கவிதையை பொருளில் காட்டவேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை யென்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம் உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதி விட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன், கம்பன், க்ஷேக்ஸ்பியர், மில்டன், தான்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸமான பதவியுடையவராக மதிக்கிறார்கள்.
குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.

              எல்லா மனிதர்களும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும் எல்லாரும் ஸமானம் என்ற ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.

             ஸர்வ ஜகத்தும் ஒரே சக்தியை உயிராகஉடையது. ஆதலால், எல்லாம் ஒன்று. ஆதலால் பயத்தைவிடு. பிறருக்குத் தீங்கு செய்யாதே. மற்றப்படியெல்லாம் உன் சொந்த இஷ்டப்படி நடந்துகொள். எல்லாரும் ஸமானம். யாருக்கும் பயப்படாதே. 

             கடவுள் ஒருவருக்கே பயப்பட வேண்டும். மனிதர் கடவுளைத் தவிர வேறொன்றுக்கும் பயப்படக்கூடாது. இதுதான் அவருடைய மதத்தின் முக்கியமான கொள்கை. எல்லாரும் பரஸ்பரம் அன்பு செய்யுங்கள் என்ற கிறிஸ்துவின் போதனையை அவர் கவிதையாக பலவகைகளில் சொல்லியிருக்கிறார். இந்த மஹான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் துஞ்சார். அங்கே, அடிமையில்லை, ஆண்டையுமில்லை. அங்கே,ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கை பொதுஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே, நகரத்தான் தலை, நகரத்தான் பிரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதிவு செய்து கொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே, பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் வருகிறார்கள். அங்கே பொதுக் கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.

               இவ்வாறு வல்ட் விட்மான் கற்பனை பண்ணின நகரத்தை கண்முன்னே பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்போதுகூட பல ராஜ்ய தந்திரிகளும் மந்திரிகளும் சாஸ்திரிகளும் முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள்.
பணக்காரன், ஏழை; உத்தியோகஸ்தன், கூலிக்காரன்; குடி, படை; ஆண், பெண்; மூத்தது, இளையது ‍‍‍ எல்லாரும் ஒருவருக்கொருவர் வஞ்சனை, துரோகம், அநியாயம், கொள்ளை, கர்வம், ஹிம்ஸை, அவமதிப்பு, கொலை முதலிய தீமைகள் செய்யாமல், பரஸ்பரம் அன்புடனும் மதிப்புடனும் நடந்து, எல்லாருக்கும் விடுதலையும் ஸமத்வமும் உள்ளதாகிய நகரம் கண்முன்னே தோன்றுவதை விரும்பாத மனிதனும் உண்டோ?

அனந்த சக்தி

              எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச் செல்லுகிறது; எதனால்?  சக்தியினால். தூமகேது அநேக லட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக் கொண்டு திசை வெளியில் மஹா வேகத்தோடு சுழலுகின்றது; எதனால்?  சக்தியினால். அந்த தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச் சுற்றிவரும்படி சூரிய கோளம் நியமிக்கிறது; எதனால்? சக்தியினால்.

             ஓர் கன்னிகை பாடுகிறாள். நெப்போலியன் ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் வெல்லுகிறான். இவை இரண்டிற்கும் சக்தியே ஆதாரம். கண்ணுக்குப் புலப்படுவதும், ஊக்கத்திற்குப் புலப்படுவதுமாகிய வெளியுலகங்கூட எல்லையற்ற தென்று பண்டிதர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த எல்லையற்ற உலகத்தை இயக்கும் சக்தி தானும் எல்லையற்ற தாகும். அநந்தமானது; அதனிலும் பெரிது. இவ்வித சக்தியை மனிதன் பாவனை செய்வதால் பலவிதப் பயன்களுண்டு ."யத்பாவயஸி தத் பவஸி," எதனைப் பாவிக்கிறாயோ நீ அதுவாக ஆகின்றாய்.

              ஆனால், இங்ஙனம் பாவனை செய்வது லேசானகாரியமென்று நினைத்து விடலாகாது. உயிர் தழும்பியதும் கனல்வதுமான சிரத்தையுடன் பாவனை செய்ய வேண்டும். இதனை வீண் கதையென்று நினைத்து விடவேண்டாம். விடாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தால் இதன் பயன் தெரியும்.

              ஞானிகளென்றும் யோகிகளென்றும் சொல்லப்படுவோர், இந்த சக்தியை, மனதறிந்து சில முறைகளை அனுஷ்டித்து பெறுகிறார்கள். ஸாமான்ய ஜனங்கள் விஷயம் தெரியாமல் இயற்கை முறையிலே சிறிது பெற்றவர்களாகின்றனர். சக்தி சிறிதும் இல்லாவிட்டால், ஒருவன் க்ஷண நேரங்கூட மூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்க முடியாது. வெளிக் காற்றிலே உலவி அத்துடன் யோகப்படுவதால் சக்தி உண்டாகிறது. சரீரத்தை உழைப்புக்கு உட்படுத்துவதால் இடைவெளியெங்கும் ததும்பிக் கிடக்கும் சக்தி அதனுள்ளே குடி கொள்ளுகிறது. அறிவைப் பலிஷயங்களிலே சிரத்தையுடன் செலுத்தி உழைப்பதனால் சக்தி உண்டாகிறது. இங்ஙனம் சிறிதுசிறிது ஏற்படும் சக்தியினாலேயேதான் உலகத்தில் மனிதர்கள் ஜீவித்திருக்கிறார்கள்.
தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம்.  இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர்தரிக்கின்றோம்.

              ''மாதா'' இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தியதிகரிக்கும்படி செய்க; அக் காரியத்தை நிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக'' என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும். ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை, மற்போர் முதலியவற்றிலே பழகுதல், பாடுதல், தர்க்கம், வாதம், தவம், பிரமச்சரியம், சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்கு சக்தி அதிகப்படுகிறது. மனம், வாக்கு, செயல் மூன்றும் சுத்தமாக இருக்கவேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாது செய்யப் பழகவேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தியேற்படும்.

புராதன ஸம்பிரதாய மென்பதால் மட்டுமே ஒன்று பொய்யாய் விடமாட்டாது; புதியதென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டு விடுதலும் பிழை.ஆராய்ந்து, அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான், ஒருவிஷயத்தின் மெய்மையும் பொய்ம்மையும் விளங்கும்.நமது முன்னோர்கள் "யோகம்" என்றதோர் மார்க்கம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இஃது ஹடயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என நான்கு வகைப்படும். இவற்றில் ஹடயோகந்தான் மிகக் குறைந்த பயன் தரக்கூடியது; மற்ற மூன்றிலும் அனந்த சக்திகள் பெறலாம். விஷயம் தெரியு முன்பாகவே, ''இதில் பயனென்ன விளையப் போகிறது'' என்று சந்தேகப்படுதல் தெளிந்தோர்செய்யும் காரியமன்று; அவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். அங்ஙனம் சாதனை செய்தவர்களுக்கு பலவித அபூர்வ சக்திகளுண்டாயிருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம். நமக்கும் ஏன் இந்த சக்திகள் ஏற்படக் கூடாது?

இந்த மூடத் தமோ குணத்தால் என்ன சுகங்கள் கண்டு விட்டோம்?  சோம்பராலும் அற்ப விஷயங்களிலே ஆசை கொண்டு மனதைக் கடலில் அகப்பட்ட  துரும்பு போலச் சலிக்க விடுவதாலும் என்ன பேறுகள் பெற்றுவிட்டோம்? 

துணிவு, உள்ளத் தூய்மை, ஏதாவதொரு  மகத்தான லட்சியத்திலே அறிவை ஆணி கொண்டடித்தது போலப்பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனை இல்லாமை - இவைதான் யோகத்தின் இரகசியம்.


No comments: