பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 24, 2015

63. கலைகள் - அபிநயம்


                                         கூத்தில் அபிநயமே பிரதானம்

               தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல்.  அபிநயமே கூத்தின் உயிர்.  தாளந் தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது.
தற்காலத்தில் சில பாகவதர்கள் கதாகாலக்ஷேபங்களில் இடையே கொஞ்சம் கூத்தாடிக் காட்டுகிறார்கள்.  இதற்குச்சிலர், "பட்டணம் கிருஷ்ண பாகவதரின் வழி" என்று பெயர் சொல்லுகிறார்கள். 'இந்தக் கூத்து வெறுமே யதார்த்த நாட்டியமென்று பிறர் நினைக்க வேண்டும்' என்று உத்தேசித்தே அந்த பாகவதர்கள் அப்படிச் செய்கிறார்கள்.

              பாகவதர் ஒருவர் வேதபுரத்தில் நந்தனார் சரித்திரம் நடத்தினார். நந்தன் அடிமை, ஐயர் ஆண்டை. ஐயருக்கு முன்னே நந்தன் போய் நிற்கிறான். "நைச்ய" பாவம் என்றது நைச்யத் தோற்றம். நைச்யம் என்பது நீசன் என்ற சொல்லடியாகத் தோன்றி நீசத்தன்மை என்று பொருள்படும் குணப்பெயர். இங்கு நீசன் என்பது அடிமை. எனவே, நைச்ய பாவமென்றால் அடிமைத் தோற்றம். இதை, அந்த பாகவதர் பல அபிநயங்களினாற் காட்டினார். நிரம்ப நேர்த்தியான வேலை செய்தார். புருவத்தை அசைக்கிற மாதிரிகளும், கடைக்கண் காட்டுகிற மாதிரிகளும், தோளையும் வயிற்றையும் குலுக்குகிற மாதிரிகளும், மெல்ல மெல்ல பாகவதருடைய அபிநயங்கள் பக்தி ரஸத்திலிருந்து சிருங்கார ரஸத்தின் தோரணைகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்படி சிருங்காரத்தின் அபிநயங்களிலேயும் மேற்படி பாகவதர் குற்றமில்லை. புருவமும், கடைக்கண் முதலியவற்றை மிகத் திறமையுடன் வெட்டுகிறார். சிருங்கார ரஸத்திற்கு, பாவம் ரதி; சந்திரன், சந்தனம் முதலியன உத்தீபனங்கள் அல்லது தூண்டுதல்கள்  என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது. மேற்படி பாகவதர் சந்திரன் முதலியவற்றைக் கண்ணாலே குறிப்பிடுகிறார்.

             ஆனால் இவர் புருஷராக இருந்தும் புருஷாபி நயங்கள் குறைவாகவும், நாயிகாபிநயங்கள் அதிகமாகவும் கற்றிருக்கிற விந்தை குறிப்பிடத்தக்கது.

             மேற்படி நைச்ய பாவத்திலே, அதாவது அடிமைத்தோற்றம் காட்டுவதிலேகூட,    இவர் இந்தப் பெண்மையைக் கலப்பதனால் அதிக மிசிரம் ஏற்படுகிறது. ஆண்டையின் முன்னே வந்து நிற்கும் நந்தன் பறையன் பாதியும் தாஸி பாதியுமாகக் காட்டுகிறார்.

            இருந்தாலும், பாகவதருடைய முகத்தில் காட்டும் அபிநயங்களைப் புகழ்ந்து சொல்லுதல் நம்முடைய கடமை. ஊடலை மாத்திரம் முகத்தில் தொண்ணூற்றொன்பது அபிநயங்களிற் காட்டுகிறார். இப்படி மற்ற வகுப்புக்களையும் சேர்த்தால் எத்தனைவித அபிநயங்களாகும்?  நிறைய ஆகும் அல்லவா? கருணா ரஸத்தின் பாவம் சோகம் என்று சொல்லப்படும். இதைக் காட்டுவதில் மேற்படி பாகவதருக்குத் தோடாப் பண்ணிப்போடத் தகும். இன்னும் ஒன்று, கடைசி. அதிலேதான் அந்த பாகவதர் முதல்தரமான வேலை செய்கிறார். அதாவது, பயாநக ரஸத்தைப் பதினாயிரம் அபிநயங்களிற் காட்டுகிறார். இந்த ரஸத்திற்குப் பாவம் பயம். மானுக்கும், முயலுக்கும், சில மனுஷ்யருக்கும் இயற்கை யாகவுள்ள பயத்தை இவர் அபிநயத்தில் பூதக் கண்ணாடி போலக் காட்டுகிறார். இந்த பாகவதர் சில தினங்களின் முன்பு என்னைப் பார்க்க வந்தார். "ஹாஸ்ய ரஸம், ரௌத்ரரஸம், வீரரஸம், அற்புதம், சாந்தம் என்ற  ஐந்து ரஸங்களையும் நீங்கள் தீண்டவே யில்லை. அதென்ன காரணம்?"என்று கேட்டேன். அந்த பாகவதர் சொல்லுகிறார்: "நான்என்ன செய்வேன்?  நான் நாட்டிய சாஸ்திரம் படித்தது கிடையாது. ஊரிலே கண்ட அபிநயங்களை நான் நடித்துக் காட்டுகிறேன். ஹிந்துக்களிலே அடிமைத் தனம் அதிகம். ஆதலால், எனக்கு "நைச்ய பாவம்" என்ற அடிமைத் தோற்றம் காட்டுதல் மிகவும் ஸுலபமாக வருகிறது. வீர ரஸம் காட்டச்சொன்னால் எப்படிக் காட்டுவேன்?  நான் பிறந்தது முதலாக இன்று வரை ஸஞ்சாரம் செய்து வந்திருக்கிற ஏழெட்டு ஜில்லாக்களில் ஒரு வீரனைக்கூடப் பார்த்ததில்லை. வீரரஸத்திற்கு நான் எங்கே போவேன்?"  என்று சொன்னார். அப்போது நான் "ரஸபண்டாரம்" என்ற ஸம்ஸ்க்ருத சாஸ்திரத்திலிருந்து பின்வரும் பொருளுடைய சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். அந்த நூல் சொல்லுகிறது:-

"லோக நடையினாலே சாஸ்திரம் பிறக்கிறது. அந்த சாஸ்திரத்தைப் பயிற்சியினாலே விஸ்தாரப் படுத்துகிறார்கள். ரஸதிருஷ்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம். ரஸவான்களுடைய பழக்கத்தாலும் பக்தி வழிகளை அனுசரிப்பதனாலும் ஒருவன் ரஸக்காட்சியை வருவித்துக் கொள்ளலாம்."

"ராகத் துவேஷங்களை ஜயிப்பதனால் ஒருவன் சித்த சமாதி யடைகிறான். அப்போது ஞானதிருஷ்டி யுண்டாகிறது. அந்த ஞானதிருஷ்டி யுடையவர்கள் புறப்பயிற்சியில்லாமலே சாஸ்திரங் களுக்குக் கண்ணாடிபோல் விளங்குவார்கள்."

"சிங்கார ரஸத்தை ஒரு கூத்தன் காண்பிக்கும் அபிநயங்களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள் கலக்கலாகாது. ஆண் மகனே பெண்ணுருக்கொண்டு கூத்தாடுவானாயின், அப்போது பெண்மை அபிநயங்கள் காண்பிக்கத்தகும். ஆண்மகன் உருமாறாமல் கூத்தாடும் போது பெண்மை தோன்றலாகாது."

        "வீர ரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடைய விரும்புவானாயின், ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவைஅவன் தியானம் செய்யக் கடவான். நாராயண உபாஸனையே கூத்தனுக்கு வீர ரஸத்தில் தேர்ச்சி கொடுக்கும்."

"பயாநக ரஸத்தை ஸபையிலே கூத்தன் அதிகமாக விவரிக்கலாகாது. எந்த நாட்டிலே கூத்தர் பயாநகத்தையும்சோகத்தையும் அதிகமாகக் காட்டுகிறார்களோ, அந்த நாட்டில் பயமும் துயரமும் அதிகப்படும்."

            "நைச்ய பாவம் அதிகமாகத் தோன்றும் கூத்தினாலே, ஒரு நாட்டார் அடிமை இயற்கை மிகுதியாக உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதலால், கூத்தர் கூத்துகளில் அடிமைத் தோற்றத்தை மிதமிஞ்சிக் காட்டாதபடி நாட்டார் கவனித்துக் கொள்ளவேண்டும்."

            "நாட்டிய சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்றால், அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்குப் பெண்மையும் உண்டாகும்.  அதை நெறி தவறிப் பயிற்சி செய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும், பெண்ணுக்கு ஆண்மையும் விகாரமாகத் தோன்றும்."

            "நாட்டிய சாஸ்திரத்தை ஆதியிற் பரமசிவன் நந்திக்குக்கற்றுக் கொடுத்தார். அப்போது, பகவான் நந்தியை நோக்கி,  'கேளாய், நந்தி! அபிநயம் தவறுவதாலே ஜனங்கள் நரகத்தை அடைகிறார்கள். தர்மிஷ்டனாகிய கூத்தன் அபிநய உண்மைகளை ஆசார்யனிடமிருந்து நியமங்களுடனே கற்றுக்கொள்ள வேண்டும். அடிமைகள் கூத்துப் பழகினால் அபிநய தர்மங்களைச் சிறிதேனும் தெரிந்து கொள்ளாமல் எப்போதும் அடிமைக் கூத்தொன்றே ஆடிக்கொண்டிருப்பார்கள். அங்ஙனம் அடிமைகள் சாஸ்திர விரோதமாக நைச்யம் ஒன்றையே காட்டி நடத்தும் கூத்தைப் பார்ப்போர் நரகத்தை அடைகிறார்கள்' என்று சொல்லி, மேலும்சொல்லுகிறார்:- ''தர்மிஷ்டனாகிய சிஷ்யன், நெறிப்படி ஆசார்யனிடமிருந்து கற்றுக்கொண்ட நாட்டியத்தில் நவரஸங்களும் ஸமரஸப்பட்டுக் காண்போருக்கு ஆனந்தத்தையும், லக்ஷ்மீ கடாக்ஷத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தி யுடையவனாக இருக்க வேண்டும். தெய்வ பக்தியினாலே ஸகல வித்தைகளும் வசப்படும்."

           இங்ஙனம் மேற்படி ரஸபண்டாரமென்ற நூலிலிருந்து நான் பல சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன்.

           இதையெல்லாம் கேட்டவுடன் அந்த பாகவதர் மிகவும் சந்தோஷமடைந்தவராய், "இந்த சாஸ்திரத்தை என்னிடம் கொடுங்கள். நான் எழுதிக்கொண்டு இந்தப் பிரதியைக் கொடுத்து விடுகிறேன்" என்றார். "அப்படியே செய்யுங்கள்" என்று சொல்லி அந்தச் சுவடியை அவரிடம் கொடுத்தேன்.

         அந்த சாஸ்திரத்தில், ''ரஸ ஞானத்திற்கு உபாஸனையே முக்ய ஸ்தானம், என்பது மிகவும் அழுத்திச் சொல்லப்படுகிறது. அதன் பேரில், தாம் சில தினங்களின் முன்பு வேதநாயகர் கோயிலைப் பிரதக்ஷணம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது இந்த ஊர்க் குள்ளச்சாமி என்ற பரதேசி தம்மை இடையே நிறுத்தி, "ஓம் சக்தி" என்ற மஹாசக்தி மந்திரத்தைத் தமக்கு உபதேசம் செய்துவிட்டுப் போனதாகவும் அதிலிருந்து தாம் பராசக்தி உபாஸனை செய்து வருவதாகவும் சொன்னார்.

         நான் மிகவும் சந்தோஷத்துடன், அவரை வண்டியேற்றிவழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் இன்னும் நம்முடைய புஸ்தகத்தை திரும்பக் கொடுத்தனுப்பவில்லை.


No comments: