பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 19, 2015

44. ராகவ சாஸ்திரியின் கதை்                வேதபுரத்தில் தெலுங்குப் பிராமணர்களின் புரோகிதராகிய குப்பு சாஸ்திரி என்பவர் நேற்றுக் காலை என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தார். நாற்காலியில் உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தார்.

"ஆச்சர்யம்! ஆச்சர்யம்."  என்றார்.

"என்னங்காணும் ஆச்சர்யம்!" என்று கேட்டேன். 

குப்புசாமி சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்: - "புளியஞ் சாலைக்கு அருகே சத்திரம் இருக்கிறது. தெரியுமா! அங்கே மலையாளத்திலிருந்து ஒரு நம்பூரி பிராமணர் வந்திருக்கிறார். அவருடைய கல்விக்கோர் எல்லையே கிடையாது. நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்திநாலு  கலைஞானம் - ஸகலமும் அவருக்குத் தெரிகிறது என்றார்.

"இத்தனை விஷயம் அவருக்குத் தெரியுமென்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டேன். 

குப்பு சாஸ்திரி:- "நேற்று நான் சம்பாஷணை செய்து கொண்டிருந்தேன். ஸம்ஸ்கிருதம்தான் பேசுகிறார். கடல் மடை திறந்து விட்டது போல வார்த்தை சொல்லுகிறார். ஸரஸ்வதி அவதாரமென்றே சொல்லவேண்டும்" என்று அளவில்லாமல் புகழ்ந்தார்.

"அந்த நம்பூரியின் பெயரென்ன?"  என்று கேட்டேன். 

 "அவர் பெயர் ராகவ சாஸ்திரி" என்று குப்பு சாஸ்திரி சொன்னார். 

"அவரை நம்மிடம் அழைத்து வாரும்" என்று சொல்லி அனுப்பினேன்.

             இன்று காலையில் மேற்படி ராகவ சாஸ்திரி வந்தார். குப்பு சாஸ்திரிக்கு பக்கத்து கிராமத்தில் ஏதோ விவாகக் கிரியை நடத்தி வைக்கும்படி நேரிட்டிருப்பதால், அவர் கூட வராமல் இந்த ராகவ சாஸ்திரியை என் வீட்டு அடையாளம் சொல்லி யனுப்பிவிட்டா ரென்று பின்னிட்டுத் தெரிந்தது.

                ராகவ சாஸ்திரியைப் பார்த்தால் பார்ஸிக்காரரைப் போலே யிருந்தது. காலிலே பூட்ஸ், கால்சட்டை, கோட்டு, நெக்டை, டொப்பி - பாதாதிகேசம் வெள்ளைக்கார உடுப்புப் போட்டிருந்தார். நான் இவரைப் பார்த்தவுடனே 'பார்ஸியோ யூரேஷியனோ' என்று எண்ணி "நீ யார்" என்று இங்கிலீஷிலே கேட்டேன். 

"நான் தான் ராகவ சாஸ்திரி. தாங்கள் என்னைப் பார்க்க விரும்பியதாக குப்பு சாஸ்திரி சொன்னார். தாங்கள்தானே காளிதாசர்?" என்று அவர் கேட்டார்.  

'ஆம்' என்று சொல்லி உட்காரச் சொன்னேன். அவரை ஏற இறங்க மூன்று தரம் பார்த்தேன். என் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. "நீர் பிராமணனா" என்று கேட்டேன். "இல்லை" என்றார்.

 "நீர் நம்பூரி பிராமணன் என்று குப்புசாஸ்திரி சொன்னாரே?" என்றேன்.   


அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- "நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்புசாஸ்திரி தாமாகவே ஊகித்துக்கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்" என்றார்.

           இவர் இங்கிலீஷ்காரரைப் போல் உடுப்புப் போட்டிருந்தாலும் இவருக்கு இங்கிலீஷ் பாஷை தடதடவென்று  பேசவரவில்லை. எனக்கோ ஸம்ஸ்கிருதம் பேசத் தெரியாது. பிறர் பேசினால் அர்த்தமாகும். ஆகவே, 'நான் இங்கிலீஷில் கேட்பது, அவர் ஸம்ஸ்கிருதத்தில் மறுமொழி சொல்வது' என்பதாக உடன்பாடு செய்துகொண்டோம். 

           நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. அவருடைய பூர்வோத்தரங்களை யெல்லாம் விசாரணை செய்தேன். அவர் என்னிடம் சொல்லிய கதையை இங்கே சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-

       "நான் பிறந்தது கள்ளிக்கோட்டை என்று சொல்லப்படும் கோழிக்கூட்டுக்கு சமீபத்தில் இரண்டு காத தூரத்தில் உள்ள ஒரு கிராமம்.. என்னுடைய தாயார் நான் பிறந்து நாலைந்து மாதத்திற்குள் இறந்து போய்விட்டாள். தகப்பனார் என்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தார். நாலைந்து வகுப்பு வரை படித்தேன். எனக்கு இங்கிலீஷ் படிப்பு சரியாக வரவில்லை. அப்போதே எனக்கு மலையாள பாஷையிலே தேர்ச்சி உண்டாயிற்று. பதினைந்து வயதாக இருக்கையில் எனக்கு மலையாளத்தில் சுலோகம் எழுதத் தெரியும். பதினெட்டு வயது வரையில். சும்மா சுற்றிக்கொண்டிருந்தேன். பிறகு தகப்பனாரிடம் சொல்லாமல் காசிக்குப் புறப்பட்டுப் போய்விட்டேன. காசியில் பண்டிதர்கள் நான் பிராமணன் இல்லை என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சம்மதப்படவில்லை. அங்கே ஆர்ய ஸமாஜத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு நண்பர் ஆனார்கள். ஆர்ய ஸமாஜத்தார் ஜாதி பேதம் பார்ப்பது கிடையாது. அவர்களுக்குள்ளே உயர்ந்த ஸம்ஸ்கிருத வித்வான்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் ஐந்தாறு வருஷம் ஸம்ஸ்கிருதம் படித்தேன். பிறகு பஞ்சாப் நாட்டிற்குப்போய் லாஹூர் பட்டணத்தில் ஆர்ய ஸமாஜ உபதேசியாய்ச் சில வருஷங்கள் கழித்தேன். அங்கிருந்து கல்கத்தாவுக்கு வந்தேன். கல்கத்தா ஸர்வகலா சங்கத்தார் முன்பு பரீக்ஷை தேறி, "வியாகரண தீர்த்தன்" என்ற பட்டம் பெற்றேன். இதற்கிடையே மலையாளத்திலிருந்து எனது பிதா இறந்து போய்விட்டார் என்ற செய்தி கிடைத்தது. கொஞ்சம் பூர்வீக சொத்து உண்டு. அதைப் பிறர் கைக்கொள்ளாதபடி பார்க்கும் பொருட்டு, மலையாளத்துக்கு வந்தேன். இப்போது சில வருஷங்களாக கோழிக்கூட்டிலே தான் வாஸம் செய்து வருகிறேன். எனக்கு சாஸ்திரிப் பட்டம் பஞ்சாபிலே கிடைத்தது" என்றார்.  

"இங்கு எதற்காக வந்தீர்?"என்று கேட்டேன். அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்.

"எனக்கு விவாஹம் ஆகவில்லை. வேறு பந்துக்களும் இல்லை யாதலால் எவ்விதமான குடும்ப பாரமும் கிடையாது. போஜனத்திற்கு பூர்வீக சொத்திருக்கிறது. ஆதலால், என் காலத்தை தேசத்துக்காக உழைப்பதிலே செலவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிருக்கிறது. தேசத்துக்கு எவ்விதமான கைங்கர்யம் பண்ணலாம் என்பதைத் தங்களிடம் கேட்டுக்கொண்டு போகலாம் என்ற நோக்கத்துடன் இந்த ஊருக்கு வந்தேன்" என்று சொன்னார்.

"எனக்குத் தெரியாது. நீர் உலகத்துக்கு என்ன விதத்திலே உபகாரம் பண்ண முடியுமென்பது உம்முடைய காலதேச வர்த்தமானங்களையும் உம்முடைய திறமையையும் பொறுத்த விஷயம்" என்றேன்.

"ஜாதி பேதம் கூடாது. அதற்கு நமது பூர்வ சாஸ்திரங்களில் ஆதாரமில்லை. ஆணும் பெண்ணும் ஸமானம். யாரும் யாரையும் அடிமையாக நடத்தக்கூடாது. இன்று நாம் பிறரை அடிமையாக நடத்தினால் நாளை நம்மையேனும் நம்முடைய மக்களையேனும் பிறர் அடிமையாக நடத்துவார்கள். ஹிந்துக்கள் சட்டத்தை உடைக்காமல், இரவிலும், பகலிலும், விழிப்பிலும், தூக்கத்திலும், கனவிலும் எப்போதும், ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபடவேண்டும். விடுதலை யில்லாதவர்கள் எப்போதும் துன்பப்படுவார்கள். இது போன்ற விஷயங்களை ஊரூராகப் போய் உபந்யாஸம் செய்தாலென்ன?  தாங்கள் உத்திரவு கொடுத்தால் நான் இந்தக் காரியம் செய்யக் காத்திருக்கிறேன்" என்று ராகவ சாஸ்திரி சொன்னார். 

இப்படி இவர் பேசிக்கொண்டிருக்கும் போது, நம்முடைய சிநேகிதர் வேதாந்த சிரோமணி ராமராயர் வந்து சேர்ந்தார். அவரிடம் இந்த மலையாளியின் பூர்வோத்தரங்களையும் இவர் என்னிடம் கேட்கும் கேள்வியையும் சொன்னேன். ராமராயர் ஸந்தேஹமே அவதாரம். இவர் இந்த மலையாளியின் உடுப்பையும், இவர் கேள்வியையும் பார்த்து ஏதோ மனதில் ஐயங்கொண்டு பின் வருமாறு சொல்லத் தொடங்கினார்:-

"ஓய் மலையாளி, `காளிதாஸர்' இஹலோக தந்திரங்களில் புத்தி செலுத்துவது கிடையாது. 'சக்தி, சக்தி' என்று ஒருவன் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தால், அவன்எல்லா விதமான பந்தங்களினின்றும் விடுபட்டு ஜீவன் முக்தியடைவான் என்ற தர்மத்தையே அவர் இடைவிடாமல் சொல்லிக் கொண்டு வருகிறார். இந்த தர்மம் ஹிந்துக்களுக்கு மாத்திரமன்று. அமெரிக்கா தேசத்தார் எல்லாருக்கும் நல்லது சக்தி உபாஸனையினாலே காளிதாஸன் மஹாகவியானான். சக்தி உபாஸனையாலே விக்ரமாதித்யன் மாறாத புகழ் பெற்றான். இதைத் தான் இவர் சொல்லுவார். சுதேசிய விஷயமாக எப்படி உழைக்கலாம் என்பதை நீர் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சென்னைப் பட்டணத்திலும் வடநாட்டு நகரங்களிலும் புகழ்பெற்ற ஜனத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவரிடத்திலே போய் கேட்டுத் தெரிந்து  கொள்ளும்" என்று ராமராயர் சொன்னார்.

இங்ஙனம் ராமராயர் சொல்லியதில் அந்த ராகவ சாஸ்திரி திருப்தி அடையாமல், மறுபடி என்னை நோக்கி "எனக்கு என்ன உத்திரவு செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு நான்:-

"கேளீர், ராகவ சாஸ்திரியாரே! சட்டத்திற்கு விரோத மில்லாமல் நீர் சுதேசியம் பேசுவதிலும், மற்றபடி ஸமத்வம், விடுதலை முதலிய தர்மங்களை நீர் ஹிந்துக்களுக்குப் புகட்டுவதிலும் எனக்கு யாதொரு ஆக்ஷேபம் கிடையாது. ஆனால் நான் இப்போது கைக்கொண்டிருக்கும் தர்மத்தை உம்மிடம் சொல்லிவிடுகிறேன். ஸம்மதமுண்டானால் அதை இந்தியாவில் மாத்திரமன்று, பூமண்டல முழுதும் சென்று முரசு அடிக்கக் கடவீர். 

அந்த தர்மம் யாதெனில்:-  மானிடரே, நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி உலகம்நடக்கிறது. 'தெய்வமே சரண்' என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாகப் பயன்பெறும். மனிதன் தன் உள்ளத்தைத் தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்து விடவேண்டும். அதுவே யாகம். அந்த யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம், வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் முதலிய எல்லாவிதமான மேன்மைகளும் கொடுக்கும். இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில் சொல்லப்படுகிறது. இதனை அறிந்தால், பயமில்லை.ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான தெய்வ பக்தி சுலபம். ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப் பயமில்லாமல் செய்து மேன்மை பெற்றுமற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய இந்தப் பூமண்டலத்துக்கு நன்மை ஏற்படாது. உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அஹங்காரத்தை வெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமரநிலையடையும். தன்னை மற, தெய்வத்தை நம்பு. உண்மை பேசு. நியாயத்தை எப்போதும் செய். எல்லா இன்பங்களையும் பெறுவாய். இப்போது பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகின்றன. அந்தப் புதிய யுகம் தெய்வ பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது. ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை பெறுவார்கள். இது ஸத்தியம். இதை எட்டுத் திசைகளிலும் முரசு கொண்டடியும். இதுவே யான் சொல்லக்கூடிய விஷயம்" என்றேன்.

பிறகு, நான் சில வார்த்தைகள் பேசிய பிறகு ராகவ சாஸ்திரி விடை பெற்றுக் கொண்டு போகுந் தருணத்தில் ராமராயர் அவரை நோக்கி:-

"முதலாவது, இந்த உடுப்பை மாற்றி ஹிந்துக்களைப் போலே உடுப்புப் போட்டுக் கொள்ளும். அதுவே ஆரம்பத்திருத்தம். கல்கத்தாவில் 'அமுர்த பஜார் பத்திரிகை'யின் ஆசிரியராகிய ஸ்ரீமான் மோதிலால் கோஷ் அங்கே கவர்னராக இருந்த லார்ட் கார்மைக்கேல் என்பவரைப் பார்க்கப் போயிருந்தாராம். உஷ்ண காலத்தில் சீமை உடுப்பைப் போட்டுக் கொண்டு லார்ட் கார்மைக்கேல் வியர்த்துக் கொட்டுகிற ஸ்திதியில் இருந்தாராம் அப்போது மோதிலால் கோஷ் கவர்னரை நோக்கி, 'இந்தியாவில் இருக்கும்வரை எங்களைப் போலே உடுப்புப் போட்டுக்கொண்டால், இத்தனை கஷ்டம் இராது' என்று சொன்னாராம். அதற்கு லார்ட் கார்மைகேல் 'நீர் சொல்லுவது சரிதான். எங்களுடைய மூடத்தனத்தாலே அவ்வாறு செய்யாமலிருக்கிறோம்' என்று மறுமொழி சொன்னாராம். அப்படி யிருக்க நம்மவர் நம்தேசத்தில் சீமையுடுப்பு மாட்டுவது எவ்வளவுமூடத்தனம், பார்த்தீரா?"  என்று சொன்னார்.

 "இனிமேல் சுதேசி உடுப்புப் போட்டுக் கொள்கிறேன்" என்று ராகவ சாஸ்திரி ஸமஸ்கிருத பாஷையில் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.


No comments:

Post a Comment

You can give your comments here