பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 27, 2011

எம்.கே.தியாகராஜ பாகவதர்


ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர்




(எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு இது. அவருடைய விழா சில இடங்களில் கொண்டாடப்பட்டது, என்றாலும் அவருடைய புகழுக்கு அது போதுமானதல்ல. அவருடைய இசை இன்றும் அந்தக்கால பெரியவர்களுடைய மனங்களைக் கவர்ந்தது.)


சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்களைத் தனது இன்னிசையால் வசியம் செய்து வைத்திருந்த ஒருவர்; அன்றைய திரையுலக சூப்பர் ஸ்டாராக சுமார் பத்து ஆண்டுகள் வலம் வந்த நடிகர்; தன்னுடைய இனிய குரலால் பாடி பெண்களை மயங்கடித்த அழகர் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி. அவர்தான் எம்.கே.டி. என்று நாடு அறிந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்.

"மன்மத லீலையை வென்றார் உண்டோ?" எனும் அந்த இனிய குரலைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவர் பாட அதற்கு டி.ஆர்.ராஜகுமாரி அபினயம் பிடிக்க இன்றைய பெரிசுகள், அன்றைய வாலிபர்கள் மயங்கித்தான் போய்க் கிடந்தனர். "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி", "சிவபெருமான் கிருபை வேண்டும்", "அப்பனை பாடும் வாயால்" இப்படி எத்தனையோ பாடல்கள். அன்று பாகவதர் நடித்தப் படங்களைப் பார்த்து விட்டு இந்தப் பாடல்களை முணுமுணுக்காத வாயே இல்லையெனலாம்.

இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கெல்லாம் உரியவரான எம்.கே.தியாகராஜ பாகவருடைய நூற்றாண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி நிறைவடைகிறது. பாகவதர் பிறந்தது 3-1-1909 அன்று. பாகவதர் பொற்கொல்லர் வம்சத்தில் வந்தவர். வசதி குறைந்த மிகச் சாதாரண குடும்பம் பாகவதருடைய குடும்பம். பிள்ளை படிக்கட்டுமென்று பெற்றோர் இவரை பள்ளிக்கு அனுப்பினர்; ஆனால் அவருக்கு இசையில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. இவர் பாடுவதைக் கேட்டவர்கள் திகைத்துப் போய் அவருடைய தந்தையாரிடம் சொல்லி, பையனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுங்கள், நல்ல பாடகனாக வருவான் என்றனர்.

பிள்ளைக்குப் படிப்புதான் ஏறவில்லையே, நகை செய்யும் பட்டறையிலாவது பணிபுரியட்டுமென்று கொண்டு போய் விட்டார். அங்கு ஏராளமான கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. இது என்ன நமது நகை செய்யும் வேலைக்கு இத்தனை கிராக்கியா என்று வியந்து போய்ப் பார்த்தால் அங்கு பையன் பாட, கூட்டம் ரசித்துக் கொண்டிருந்தது. சரி இவன் படிப்புக்கும் லாயக்கில்லை, குலத்தொழிலுக்கும் லாயக்கில்லை பாட்டுதான் இவனுக்கு என்று அன்றை நாளில் ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டு, அமெச்சூர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த எஃப்.ஜி.நடேச அய்யரிடம் கொண்டு போய் விட்டார். அப்போதெல்லாம் நாடகங்கள் நடிப்பதற்கென்று பல பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. பல பெரிய பெரிய நடிகர்களெல்லாம் அந்த பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்கள்தான்.

அந்த காலகட்டத்தில்தான் நகரத்தார் குடும்பத்தில் வந்த லட்சுமணன் செட்டியார் என்பவரும் ஆர்.எம்.அழகப்பச் செட்டியார் அவர்களும் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய சினிமாப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்களும் "பவளக்கொடி" என்ற நாடகத்தைப் பார்க்கப் போனார்கள். அந்த நாடகத்தில் அர்ஜுனனாக வேடமிட்டு நடித்த சிறுவனின் பாட்டு இவர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. நாட்டுக்கோட்டையார்களுக்கு இந்தப் பையனை வைத்து ஒரு சினிமாப் படம் எடுத்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. விளைவு பாகவதர் நடித்து வெளியான படம் அவரது முதல் படமான "பவளக்கொடி". இது 1934இல் வெளிவந்தது. அப்போது தொடங்கியதுதான் பாகவதரின் திரையுலகப் பயணம். சுமார் பத்து வருடங்கள் ஒரே ஏறுமுகம் தான்.

பாகவதரின் இரண்டாவது படம் 1935இல் வெளிவந்தது "நவீன சாரங்கதாரா" என்ற பெயரில். இதையும் இயக்கியவர் கே.சுப்பிரமணியம் தான். 1936இல் "சத்தியசீலன்" என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்து பாகவதர் வெளியிட்டார். 1937இல் "சிந்தாமணி" என்ற படம் வெளியானது. தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனை புரிந்த படம் "சிந்தாமணி". இந்தப் படத்தின் "மாயப் பிரபஞ்சத்தில்" பாடலும் "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" எனும் பாடலும் வெகுவாகப் பிரபலமடைந்து அனைவரும் பாடத் தொடங்கிவிட்டனர். எங்கேயாவது ஒரு திரைப்படத்தைத் தொடர்ந்து பல மாதங்கள் ஓட்டி அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு மற்றொரு சினிமா அரங்கம் கட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அப்படிப்பட்ட நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. ராயல் டாக்கீசில் ஓடி வெற்றிபெற்ற "சிந்தாமணி" படத்தால் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் "சிந்தாமணி" என்றொரு சினிமா அரங்கம் கட்டப்பட்டது வியப்பிற்குரியது.

அதே ஆண்டில் பிரபலமான தமிழ்நாட்டுக் காதல் கதையான அம்பிகாபதி - அமராவதி கதை படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஒரு அமெரிக்கர். தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ப் புலவன் ஒருவனுடைய காதல் கதையைப் படமாக்கினார். இந்தப் படமும் ஓகோவென்று ஓடி வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் அம்பிகாபதியாக நடித்த பாகவதரும், அமராவதியாக நடித்த சந்தானலட்சுமியும் மிக நெருக்கமாக காதல் காட்சிகளில் நடித்ததை அந்தக்கால ஆசாரசீலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாவம்! அவர்கள் இன்றைய படங்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன சொல்வார்களோ?

முதன்முதலில் பாகவதர் 1934இல் நடிக்கத் தொடங்கிய "பவளக்கொடி”யைத் தொடர்ந்து அவர் மொத்தம் 14 படங்களில் நடித்திருக்கிறார். 1934இல் பவளக்கொடி, 1935இல் சாரங்கதரா,1936இல் சத்தியசீலன், 1937இல் அம்பிகாபதி, சிந்தாமணி, 1939இல் திருநீலகண்டர், 1941இல் அசோக்குமார், 1944இல் ஹரிதாஸ் கடைசியாக அமரகவி, ராஜமுக்தி, சியாமளா, சிவகாமி, சிவகவி ஆகிய படங்கலிலும் நடித்தார். இவற்றில் "ஹரிதாஸ்" படம் சென்னை பிராட்வே சினிமா தியேட்டரில் தொடர்ந்து மூன்று தீபாவளியைத் தாண்டி 114 வாரங்கள் ஓடியது, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு வெள்ளைப் புரவியில் பாகவதர் "வாழ்விலோர் திருநாள்" என்று பாடிக்கொண்டு வரும்போது, வழியில் தண்ணீர்க்குடத்துடன் வருகின்ற பெண்கள் குடம் கீழே விழுவதுகூட தெரியாமல் இவரைப் பார்த்துக் காதல்வசப்படும் காட்சிகள் திரையுலகத்துக்கு அப்போது ஒரு புதுமை. அது திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்கூட பாகவதருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.

பாகவதரின் நாடக காலங்களிலேயே இசையமைப்பாளர் ஜி.ராமநாத ஐயர் இவரோடு நெருக்கமான நட்பு பூண்டிருந்தார். பாபநாசம் சிவன் எனும் பாட்டு வாத்தியார் சென்னையில் குடியேறியிருந்த காலத்தில் மைலாப்பூரில் மார்கழி பஜனைகளைப் பாடிக்கொண்டு மாடவீதிகளில் வலம் வருவது வழக்கம். அவரது பாடல்கள் இயற்றும் திறமை, இசை ஞானம் இவைகளைக் கண்டு பாகவதர் தன்னுடைய படங்களுக்குப் முதலில் பாடல்கள் இயற்றி இசை அமைக்கவும், பின்னர் ஜி.ராமநாத ஐயர், கே.வி.மகாதேவான், சி.என்.பாண்டுரங்கன் ஆகியோர் இசை அமைப்பில் பாடல்களை எழுதவும் ஏற்பாடு செய்து கொண்டார். பாகவதர் பாட்டு என்றால் அதனை எழுதியவர் பாபநாசம் சிவன் என்று ஆயிற்று. அந்த காலகட்டத்தில் இந்த கூட்டணி வெளிக்கொண்டு வந்த பாடல்கள் அனைத்தும் அமரத்துவம் வாய்ந்ததாக இருந்தன.

இயற்கையிலேயே பாகவதருக்கு அமைந்திருந்த இசை ஞானத்தை சாஸ்திரிய வழியில் உயர்த்திக் கொள்வதற்காக அப்போது மிகப் பிரபலமான கர்நாடக இசை மேதைகளாக திருச்சியில் இருந்த ஆலத்தூர் சகோதரர்களிடம் இவர் சங்கீதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இன்னொரு சுவையான செய்தி, பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் பாடல்களைப் பாட குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் பாகவதர். அவரைப் போலவே அப்படியே பாடி தன்னை வெளி உலகத்துக்கு அறிமுகம் செய்து கொண்டார் டி.எம்.எஸ்.

டி.எம்.செளந்தரராஜனின் ஆரம்ப காலப் பாடல்கள் அப்படியே பாகவதர் பாடுவது போலவே இருக்கும். அவரே ஒரு பேட்டியில் சொல்லும்போது வீட்டில் உட்கார்ந்துகொண்டு பாகவதரின் பாடல்களை இவர் உரத்த குரலில் பாடும்போது, அக்கம்பக்கத்தார் பாகவதர்தான் பாடுகிறாரோ என்று பார்ப்பார்களாம். அது போலவே பாகவதர் பாடிய அதே பாடல்களின் வரிகளை டி.எம்.எஸ். தன்னுடைய திரைப்படங்கள் சிலவற்றில் அவர் போலவே பாடியிருப்பதை கவனித்திருப்பீர்கள். 'சிந்தாமணி'யில் பாகவதர் பாடியிருக்கிற 'ராதே உனது கோபம் ஆகாதடி" எனும் பாடலை வேறொரு படத்தில் டி.எம்.எஸ்.பாடியிருக்கிறார். தூக்குத்தூக்கி போன்ற படங்களில் டி.எம்.எஸ். பாகவதர் போலவே பாடியிருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.

திருநீலகண்டர் எனும் படமும் பாகவதர் பாடல்களால் சிறப்புப் பெற்றது. அவரது பழைய பாடல்களின் இசைவடிவங்கள் பிற்கால படங்கள் சிலவற்றிலும் பின்பற்றப்பட்டிருப்பதை கவனிக்கலாம். திருநீலகண்டரில் "தீனகருணா கரனே நடராஜா" எனும் பாடல் வடிவில் பின்னாளில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரனில் "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா" என்ற பாடலாக வெளிவந்தது. பாகவதரின் "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல் டி.எம்.எஸ்.குரலில் "மங்களமாய் வாழ வேண்டும்" என்று வெளிவந்தது. கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலர் முதலில் பாகவதரின் பாடல்களை, அவை கர்நாடக இசை ராகங்களில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் வராமல் இருந்தனர். பிறகு மிகப் பிரபலமடைந்த சில பாடல்களைக் கேட்ட பிறகு அவர்கள் கூட பாகவதரின் கர்நாடக இசையை ஏற்றுக் கொண்டார்களாம்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் கவர்னர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாகவதர் போருக்கு ஆதரவாக நிதிதேடி பல கச்சேரிகளைச் செய்து பிரிட்டிஷ் அரசுக்கு உதவியிருந்தார். அதனைப் போற்றும் விதத்தில் பிரிட்டிஷ் அரசும், சென்னை ஆங்கில கவர்னராக இருந்த ஜேம்ஸ் ஹோப் என்பவர் இவருக்கு "திவான் பகதூர்" எனும் விருதைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பாகவதர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

பாகவதர் நல்ல அழகான தோற்றம் கொண்டவர். பொன்னிறம் என்பார்களே அந்த நிறத்தை அவரிடம் பார்க்கலாம். அவரது சிகை அலங்காரம் பார்த்து பலர் அதே போல வைத்துக் கொண்டனர். அதற்கு அந்த நாட்களில் "பாகவதர் கிராப்" என்றே பெயர். பாகவதரின் படங்கள் சிலவற்றில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்தனர். திரையுலகில் இந்தப் பெயர்கள் உச்ச கட்டத்தில் இருந்த நாளில் ஒரு சோக நிகழ்ச்சி பாகவதருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஏற்பட்டது.

அந்த காலத்தில் பிரபலமானவர்களின் அந்தரங்க வாழ்க்கையை பத்திரிகைகளில் பிரசுரித்து அவப்பெயரை ஏற்படுத்தி வர சில பத்திரிகைகள் உருவாகின. அதில் லட்சுமிகாந்தன் என்பவர் நடத்திய "இந்துநேசன்" எனும் மஞ்சள் பத்திரிகை பிரபலமானது. இந்தப் பத்திரிகையில் பல பிரபலமானவர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் இவர்களைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளைப் பிரசுரிப்பது, அப்படிப் பிரசுரம் செய்யாமலிருக்க இவர்களிடம் பணம் பிடுங்குவது போன்ற செயல்களைச் செய்து வந்தார்கள். அப்படி "இந்துநேசன்" பத்திரிகை திரையுலகில் பிரபலமாக இருந்த பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களையும் பற்றி கேவலமாக எழுதிவந்தது.

அப்படியொருநாள் சென்னை புரசவாக்கத்தில் தாணா தெருவில் கைரிக்ஷாவில் பயணம் செய்து வந்து லட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் குத்திக் கொன்றுவிட்டனர். இது அந்த நாளில் மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த கொலை வழக்கில் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லி பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகழின் உச்சத்தில் இருந்த இவர்களுக்கு நேர்ந்த இந்த நிலைமையைக் கண்டு தமிழகமே நிலைகுலைந்து போயிற்று.

அப்போது பாகவதருக்குப் பல புதிய படங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. அவைகள் எல்லாம் நின்று போயின. புதிய படங்களுக்கு முன்பணம் கொடுத்த படமுதலாளிகள் தவித்துப் போயினர். தங்கள் முன்பணத்தைத் திரும்பப் பெருவதில் கவனமாக இருந்தனர். பாகவதர் மொத்தம் 30 மாதங்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். அந்த காலகட்டத்தில் அவர் பட்ட மனவேதனை, படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தை எப்படியும் திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்கிற நாணயம் அதனால் ஏற்பட்ட மனக்கவலை இவற்றால் அவரது உடல்நிலை கெட்டது. நீரிழிவு வியாதியால் அவதிப்படத் தொடங்கினார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்காக அன்றைய மிகப்பெரிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். நாயுடுவுக்காக பிரபலமான கே.எம்.முன்ஷி ஆஜரானார். நாயுடு விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அப்போது லண்டனில் இருந்த மேல்முறையீட்டு நீதிமன்றமான பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்தனர். இவர்களுக்கு பல பிரபலமானவர்களின் ஆதரவும் கிடைத்தது. இருவரும் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான பிறகு பாகவதரும் என்.எஸ்.கேயும் மறுவாழ்வு பெற முயற்சி செய்தனர். திராவிட இயக்கத்தார் இவர்களைத் தங்கள் பக்கம் அழைத்துக்கொள்ள விரும்பினர். என்.எஸ்.கே ஒப்புக்கொண்டு அவர்கள் இயக்கத்தோடு தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார், மறுவாழ்வும் பெற்றார். ஆனால் பாகவதரோ, தான் இறைபக்தி உள்ளவர் என்றும் தனக்கு இதெல்லாம் சரியாக வராது என்றும் ஒதுங்கிக் கொண்டார்.

விடுதலையான பாகவதர் திரும்ப அதே பழைய நிலைமையை அடையமுடியவில்லை. நாணயமும் நேர்மையும் தனது தர்மமாகக் கடைப்பிடித்த காரணத்தால் அவரது சொத்துக்கள் கரைந்தன. திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ ரெக்ரூட்மெண்ட் அலுவலகத்துக்கு எதிரில் பாகவதர் பங்களா என்ற பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கு இருந்த அவரது மாளிகை திரைப்படங்களில் வரும் அரண்மனை போல காட்சி தந்தது. பின்னாளில் அந்த மாளிகை இடிக்கப்பட்டு அங்கு இப்போது ஒரு பெரிய ஓட்டல் வந்துவிட்டது. பழைய நினைவுகளோடு அந்த இடத்தைப் பார்ப்பவர்களுக்குக் கண்களில் நீர் அரும்புவதைத் தடுக்கமுடியாது. அத்தனை சொத்துக்களும் கரைந்ததோடு, பாகவதரின் கண்பார்வையும் குறையத் தொடங்கியது.

எளிமையான வாழ்க்கையைத் தொடங்கி, அவரது தோற்றம், இசைத்திறமை இவற்றால் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பாகவதர் தனது இறுதி நாட்களில் வறுமையின் கோரப்பிடிகளில் சிக்கிக் கொண்டு தவித்தார். தயாள சிந்தையும், பிறருக்கு உதவும் நல்ல குணமும், கடவுள் நம்பிக்கையும் அதிகம் இருந்த பாகவதருக்கு இப்படி ஒரு சோதனை நேரந்ததை தமிழகம் கண்ணீர் சிந்தி கவனித்தது. சமயபுரதுக்கும் தஞ்சை புன்னைநல்லூர் மரியம்மனுக்கும் நேர்த்திக்கடன் செய்து அந்த சந்நிதிகளில் தவம் இருந்தார் பாகவதர். என்ன செய்து என்ன? அவர் செய்த நற்செயல்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தனது 50 வயதில் 1959ஆம் வருடம் நவம்பர் முதல் தேதி பாகவதர் இறைவனடி சேர்ந்தார்.






அப்பூதியடிகள்.


அப்பூதி அடிகள் வரலாறு


பொன்னி நதி வளம் பெருக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் வடகரையில் திருவையாற்றுக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் அமைந்துள்ள புண்ணியத் தலம் திங்களூர். இங்கு அறம் செழிக்க நற்செயல்கள் பல புரிந்து வாழ்ந்த அந்தண குலத்தோர் அப்பூதி அடிகள். இவர் பாவங்கள் அனைத்தையும் நீக்கியவர்; புண்ணியங்கள் அனைத்தையுமே தாங்கியவர். அத்தகையவர் திருமணம் செய்து கொண்டு திங்களூரில் தனது மனையாளொடும் வாழ்ந்து வந்தார். இந்த அந்தணக் குலத் தோன்றல் சிவ பக்தியில் ஆழ்ந்து திளைத்தவர். அடுத்தவர் துன்பம் தாங்காத உள்ளம் படைத்த இவர் ஓர் புண்ணியமூர்த்தி.

அப்பர் சுவாமிகள் மீதுற்ற பக்தி

இப்படி அறனும், வளமும் செழிக்க அற்புதமான இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் பற்றி கேள்வியுற்றார். இவரை அப்பர் என்றும் மக்கள் போற்றி வந்தார்களல்லவா? அத்தகைய மகா புண்ணியவானைக் கண்ணார தரிசிக்கவும், மனதார வணங்கி அவர்தம் ஆசியினைப் பெற்றிடவும் அனுதினமும் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்த பக்தி ரசம், அப்பர் மேல் அவர் கொண்ட காதல், பக்தி, ஈடுபாடு, இவர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களுக்குமே "திருநாவுக்கரசு" என்றே பெயர் வைத்து, அப்பெயரை பலமுறை உச்சரிக்கும் பாக்கியம் பெற்றிருந்தார். வீட்டிலிருந்த படி, மரக்கால் இவைகளுக்கும் திருநாவுக்கரசுதான். பசுக்கள், எருமைகள் அனைத்துக்கும் அவர் பெயரேதான். அவ்வூரில் அவர் செல்வந்தராகையால் ஒரு மடம் கட்டி அதற்கும் திருநாவுக்கரசர் என்று பெயரிட்டார். வழிப்போக்கர்கள் தாகசாந்தி செய்து கொள்வதற்கென்று பல தண்ணீர்ப் பந்தல்களை நாட்டி வைத்தார். அவைகளுக்கும் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் என்றே பெயரிட்டார். அவ்வூர் மக்களின் பயன்பட்டுக்காக அவர் எடுப்பித்த குளங்களுக்கும், நந்தவனங்களுக்கும் அதே பெயர் தான். என்ன இது? இப்படியொரு பக்தியா? தான் கண்ணால் கண்டிராத ஒரு சிவபக்தர், தலைசிறந்த மகான் அவர்மீது கொண்ட காதலால் அவர் செய்து வைத்த அத்தனைக்கும் அந்த மகானின் பெயரே வைத்தார் என்றால் அவரது பக்தியை என்னவென்று சொல்லிப் புகழ்வது?

நாவுக்கரசர் திங்களூர் வருகை

இப்படியிருக்கும் நாளில் திருநாவுக்கரசர் சுவாமிகள் பற்பல சிவத்தலங்களுக்கும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு காவிரியின் கரையோடு வந்து கொண்டிருந்தார். அப்படி அவர் திங்களூரைக் கடந்து செல்கையில் அவர் கண்களில் பட்ட அனைத்து இடங்களிலும் "திருநாவுக்கரசு" என்ற தனது பெயர் இருக்கக் கண்டார். அப்படி அவர் திகைத்து ஒரு தண்ணீர் பந்தலருகில் நின்றிருந்த சமயம் அங்கிருந்தவரைப் பார்த்து, இந்தத் தண்ணீர் பந்தலுக்கும் மற்ற பல அறக்காரியங்களுக்கும் இவ்வூரில் "திருநாவுக்கரசு" என்று பெயரிடப்பட்டிருப்பதன் காரணத்தை வினவினர். அதற்கு அந்த மனிதர் இவ்வூரில் அப்பூதி அடிகள் என்றொரு சிவபக்தர் இருக்கிறார். அவர் இந்தத் தண்ணீர் பந்தலுக்கு மட்டுமல்ல, அவர் செய்திருக்கிற அனைத்து தர்ம காரியங்களுக்கும் அதாவது அவர் கட்டிய சத்திரம், கிணறுகள், நந்தவனம், குளம் எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றுதான் பெயரிட்டிருக்கிறார் என்று கூறினார்.

இப்படி அவர் சொன்னதைக் கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் திகைத்துப் போனார். இவர் ஏன் அப்படி எல்லா அறச்செயல்களுக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார், அப்படிப்பட்ட புண்ணியவான் எங்கே இருக்கிறார் என்று வினவினார். அதற்கு அந்த மனிதர், அப்பூதியடிகள் இதே ஊரைச் சேர்ந்தவர்தான். இந்நேரம் வரை இங்குதான் இருந்தார். இப்போதுதான் தன்னுடைய வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் வீடும் அதோ மிகச் சமீபத்தில்தான் இருக்கிறது என்றார் அவர்.

அப்பூதியார் இல்லத்தில்
உடனே திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளுடைய வீடு அமைந்திருக்கிற தெருவுக்குச் சென்று அவர் வீடு எது என்று விசாரித்து அந்த வீட்டின் வாயிலில் போய் நின்றார். அப்போதுதான் உள்ளே நுழைந்து கால்கைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய அப்பூதியாரின் கண்களில் வாயிலில் வந்து நிற்கும் ஒரு முதிய சிவனடியார் பட்டுவிட்டார். உடனடியாக வாயிலுக்கு வந்து அங்கு நிற்கும் சிவனடியாரை வணங்கி திண்ணையில் அமரச் செய்தார். அப்பூதி அடிகளைக் கண்ட திருநாவுக்கரசரும் உளம் குளிர அந்த பெரியோனை வாழ்த்தி வணங்கினார்.

திண்ணையில் அமர்ந்த திருநாவுக்கரசரை அப்பூதியடிகள் "ஐயனே! தேவரீர் இவ்விடத்திற்கு எது குறித்து எழுந்தருளியிருக்கின்றீர்" என வினவினார். அதற்கு அப்பர் சுவாமிகள் சொன்னார், " அன்பரே! யான் திருப்பழனம் எனும் சிவத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம் ஐயனை தரிசித்துவிட்டு வரும் வழியில் நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தலைக் கண்டு, அப்படியே நீர் இன்னும் பல நற்காரியங்களையும் தர்மங்களையும் செய்திருக்கிறீர் என்பதை அறிந்தும் கேட்டும் உம்மீது மிகவும் மகிழ்ந்து இவ்விடம் வந்தோம்" என்றார். பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தரில் உம்முடைய பெயரை எழுதாமல் வேறு யாரோ ஒருவருடைய பெயரை எழுதியதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும் இங்கு வந்தேன்" என்றார்.

இதைக் கேட்ட அப்பூதி அடிகள் அப்பரை நோக்கி, "ஐயனே! பார்த்தால் நீர் நல்ல சிவனடியாராகத் தோன்றுகின்றீர். ஆனால் நீர் சொல்லிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இல்லையே. பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவ மன்னன் செய்த இடையூறுகளையெல்லாம் சிவபக்தி எனும் பலத்தினாலே வென்று வெற்றிகண்ட திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பெயரை நான் எழுதிவைக்க, நீர் இதனைக் கொடுஞ்சொல்லால் பேசுகின்றீரே. கல்லால் ஆன தோணியைக் கொண்டு கடலைக் கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகில் அறியாதவர் எவரும் உண்டோ? நீர் சிவ வேடத்தோடு நின்று கொண்டு இவ்வார்த்தைகளைப் பேசியதால் உம்மைச் சும்மா விடுகிறேன். நீர் யார்? எங்கிருப்பவர். எங்கிருந்து வருகின்றீர்" என்றெல்லாம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார்.

ஆட்கொள்ளப்பட்ட அடியார்

அப்பூதி அடிகள் கோபமாக அந்தப் பெரியவரிடம் பேச, அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திருநாவுக்கரச சுவாமிகள் அமைதியாகச் சொன்னார், "அன்பரே! சமணப் படுகுழியில் விழுந்து அதிலிருந்து மேலேறும்படியாக பரமசிவனால் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட உணர்வில்லாத சிறியேன் யான்" என்றார்.

அப்பூதி அடிகளுக்கு அதிர்ச்சி. தன் எதிரில் நின்று கொண்டு தான் கோபப்பட்டுப் பேசிய போதும் அன்பு பெருக்கெடுத்தோட, சற்றும் ஆணவமின்றி அடக்கத்தோடு தன்னை இன்னார் என்பதை அடையாளம் காட்டிடும் இவர்தானே திருநாவுக்கரசர் சுவாமிகள். இதை புரிந்து கொள்ள முடியாத மூடனாகிவிட்டேனே. அவர் கரங்கள் இரண்டும் தலைக்கு மேல் குவிந்தன. கண்கள் கண்ணீரை சொரிந்தன. பேச்சு தடுமாற, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும்படியாக பூமியில் விழுந்து திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு தன் கண்ணீரால் கழுவினார். அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளை எதிர் வணங்கி, அவரை அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள அடிகளாரும் உளம் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினார். பாடினார், ஆடினார்; மகிழ்ச்சிப் பெருக்கால் தான் என்ன செய்கிறோம் என்பதைக் கூட மறந்தார். வீட்டினுள்ளே ஓடினார், அங்கு தன் மனைவி மக்கள் ஆகியோரிடம் திருநாவுக்கரசர் தங்கள் இல்லம் நோக்கி வந்துவிட்ட செய்தியைச் சொல்லி அவர்களையும் வாயிலுக்கு அழைத்து வந்து வணங்கச் செய்தார். அப்பரை உள்ளே அழைத்துச் சென்று உபசரிக்கத் தொடங்கினர். அவர் பாதங்களைக் கழுவி, பாதபூசை செய்து அந்தப் பாதோதகத்தைத் தங்கள் தலைகளில் புரோட்சித்துக் கொண்டார்கள்.

பின்பு திருநாவுக்கரசு சுவாமிகளை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, முறைப்படி அர்ச்சித்து பூசனைகள் புரிந்து "சுவாமி! தேவரீர் இன்று இவ்வீட்டில் திருவமுது செய்தருள வேண்டும்" என்று வேண்டிக் கொள்ள நாயனாரும் அதற்கு உடன்பட்டார்.

அப்பர் அமுதுண்ணல்

அப்பூதியடிகள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிற திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு அறுசுவை விருந்து படைக்க தன் மனைவியைப் பணித்தார். அவரும் தங்கள் குலதெய்வமென மதிக்கும் அடியாருக்கு அடிசில் படைக்க ஓடியாடி பணிபுரிந்து அரியதொரு விருந்தினைத் தயாரித்தார். அடியார் அமர்ந்துள்ள ஒரு தலைவாழ இலை வேண்டுமே. தனது மூத்த மகனான திருநாவுக்கரசை அழைத்து வாழைத்தோட்டத்துக்குச் சென்று ஒரு பெரிய இலை கொண்டு வரப் பணித்தார். அந்தச் சிறுவனும் வீட்டிற்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளி சிறப்பாக விருந்துண்ணும்படியான ஒரு பெரிய இலையை அறுக்க முயன்றான். அப்போது வாழைக் குறுத்துக்குள்ளிருந்து ஒரு நல்ல பாம்பு அவன் கையில் தீண்டிவிட்டது. தன் கையில் சுற்றிக் கொண்ட அந்தப் பாம்பை உதறி வீழ்த்திவிட்டுப் பதைபதைப்புடன் தன்னுடலில் ஏறும் விஷம் அவனை நினைவிழக்கச் செய்யும் முன்பாக இந்த இலையைக் கொண்டு போய் கொடுக்க வேண்டுமே என்று ஓடி கண்களும் உடலும் பற்களும் நஞ்சின் கொடுமையால் கருத்த நிறமாக மாற இலையைத் தாயார் கையில் கொடுத்துவிட்டு கீழே விழுந்து இறந்தான்.

பாம்பு கடித்த பாலகன்

தன் தனையனின் நிலைகண்டு பதறிய தந்தையும் தாயும், "ஐயகோ! என்ன இது. இப்படி நேர்ந்து விட்டதே. விருந்துண்ண வந்த இடத்தில் வீட்டு பாலகன் பாம்பு கொத்தி மரணமடைந்துவிட்டான் என்று தெரிந்தால் அடியார் அமுதுண்ண மாட்டாரே, என்ன செய்வோம், பரமேஸ்வரா" என்று கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர். உடனே ஒரு பாயை எடுத்து அதில் உயிர் பிரிந்து கிடந்த மகனின் உடலைச் சுற்றி வீட்டின் முற்றத்தில் ஓர் மறைவான இடத்தில் வைத்துவிட்டனர். அதன் பின் அடியாரிடம் சென்று ஐயனே, எழுந்து வந்து அமுது செய்ய வேண்டும் என்றனர்.

அப்பர் சுவாமிகளும் எழுந்து கைகால்களைச் சுத்தி செய்து கொண்டு, வேறோர் ஆசனத்தில் அமர்ந்து அப்பூதி அடிகளாருக்கும், அவர் மனைவிக்கும் திருநீறு கொடுத்துவிட்டு, நான் திருநீறணியும் முன்பாக, திருநீறு பூசிக்கொள்ள உமது மகனையும் அழையுங்கள் என்றார் அப்பர். அதற்கு அப்பூதி அடிகள், "ஐயனே! அவன் இப்போது இங்கே வரமாட்டான்" என்றார்.

அப்பூதியடிகள் இப்படி பதில் சொன்னவுடன் மனத்தில் ஏதோவொரு ஐயம் ஏற்பட அப்பர் சுவாமிகள் அவரைப் பார்த்து "அவன் என்ன செய்கிறான்? ஏன் வரமாட்டான்? உண்மையைச் சொல்லுங்கள்" என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் பயந்து, உடல் நடுக்குற்று, பெரியவரை வணங்கி நின்று நடந்த விவரங்களைச் சொன்னார். அதனைக் கேட்ட அப்பர் சுவாமிகள் "நீர் செய்தது சரியா? நன்றாயிருக்கிறதா? உங்கள் பிள்ளை இறந்தது கேட்ட வருந்தாமல் நான் சாப்பிட வேண்டுமென்று வருந்துகின்றீகளே! என்னே உங்கள் மன உறுதி. வேறு யாரால் இப்படிப் பட்ட சூழ்நிலையில் இப்படி நடந்து கொள்ள இயலும்?" என்று சொல்லிக் கொண்டே எங்கே உங்கள் மகனின் உடல் என்றார்.

பின்னர் சிறுவனின் உடலைக் கரங்களில் அள்ளிக் கொண்டு அப்பரும் அப்பூதியடிகளும் குடும்பத்தார் ஊராரும் அவர் பின் செல்ல அனைவரும் அவ்வூரிலிருந்த சிவாலயம் சென்றனர். அங்கு கொண்டு போய் சிறுவனின் உடலை இறைவன் முன் கிடத்திவிட்டு "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.

மாண்டவன் மீண்ட அதிசயம்

அப்படி அவர் அந்தத் திருப்பதிகத்தை சிவபெருமான் மீது பாடி முடிக்கவும் உடலில் ஏறிய நஞ்சு இறங்கி அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்து அப்பர் சுவாமிகளின் திருவடிகளில் வீழ்ந்தான். அப்பரும் அவனுக்குத் திருநீறு பூசி வாழ்த்தியருளினார். அப்பூதியடிகளுக்கும், அவர் மனைவியாருக்கும் தங்கள் மகன் உயிர் பிழைத்த மகிழ்ச்சிகூட இல்லாமல், நாயனார் உணவருந்தாமல் இருக்கின்றாரே என்று கவலையடைந்தார்கள்.

அப்பர் பெருமானும் அவர்களது உள்ளக்கிடக்கையை அறிந்து அவர்களோடு அவர்களது வீட்டுக்குச் சென்று அவர்கள் அனைவரோடும் உட்கார்ந்து திருவமுது செய்தார். சில நாட்கள் அவர்களோடு தங்கிய பின்னர் அவர் அங்கிருந்து திருப்பழனம் சென்றடைந்தார். சைவசமய குரவராகிய திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெரும் செல்வம் என்று வாழ்ந்திருந்த அச்சிவனடியார் அப்பூதியடிகளின் வாழ்க்கைச் சரிதம் இது.

"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்" (சுந்தரரின் திருத்தொண்டர் திருத்தொகை)

எத்தனை ஆசைகள்?


எத்தனை ஆசைகள்?

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மனதில் தோன்றும் உணர்வு ஆசை. குழந்தை முதல் முதியவர் வரை எதிலாவது அல்லது எவற்றிலாவது ஆசை கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா? சின்னஞ் சிறு குழந்தைக்கு பசி வந்த போது பால் பருக ஆசை. வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்களின் மீது ஆசை. கட்டிளங்காளைகளுக்கு காதல் கொண்ட பெண்களின் மீது ஆசை. வளர்ந்த மக்களுக்கோ, சொத்து, சுகம், பணம், வசதிகள் என்று அனைத்தின் மீதும் ஆசை. முதியவர்களுக்கோ இறைவன் திருவடிகளை அடையவேண்டுமே என்ற ஆசை. வாழ்க்கை என்பது சாஸ்வதம் என்று எண்ணிக் கொண்டு எப்போதும் எல்லாமும் தனக்கே வேண்டுமென்று சிலர் எண்ணுவதும் உண்டு.

மனித மனத்தின் எல்லையற்ற பெருவெளியில் உண்டாகும் வளமான எண்ணங்களே ஆசை. இந்த ஆசைகள் நிறைவேறினால் மனம் திருப்தியுறுகிறது. ஆசை நிராசையாக ஆகும்போது வாழ்க்கையில் வெறுப்பே விளைகிறது. "ஆசையே துன்பங்களுக்குக் காரணம்" என்று கெளதம புத்தர் சொல்லியருளியதாக படிக்கிறோம். ஆனால் அதை மனதில் வாங்கிக் கொள்ளவில்லையே. ஆசையினால் தூண்டப்பட்டுதான் மனிதனின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தாயுமானவ சுவாமிகள் மனதை இலவம் பஞ்சாகவும் ஆசையைப் பெருங் காற்றாகவும் ஒப்பிடுகிறார்.

"ஆசை எனும் பெருங்காற்றுடு இலவம் பஞ்சு
எனவும் மனது அலையும் காலம்"

அப்படி மனம் ஆசையால் அலைக்கழிக்கப்படுவதால் ஏற்படும் துன்பத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

"மோசம் வரும்; இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முக்திக்கு ஆன
நேசமும் நல்வாசமும் போய்ப், புலனாய் இல்
கொடுமை பற்றி நிற்பர், அந்தோ
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே!
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?"

மனம் தன்வசமின்றி ஆசையின் பின் சென்று அலைக்கழிக்கப்பட்டால் மோசம் வந்து சேரும், நாம் கற்றதும், கேட்டதும் வீணாகிவிடும். முக்தி பெறுவதற்கான வழிகளும், புண்ணியங்களும் நம்மை விட்டுப் போய்விடும் என்கிறார் தாயுமானவர்.

இன்னொரு பாட்டில் அவர் கூறும் செய்திகளையும் பார்க்கலாம்.

"ஆசைக்கு ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்; நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே இன்னும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர் உண்பதும், உறங்குவதும் ஆக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக் கடலுக்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்;
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!"

இந்த பாடலுக்கு விளக்கமும் தேவையா என்ன? உலகம் முழுவதையும் கட்டி ஆண்டாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அந்த கடலையும் ஆள வேண்டுமென்கிற ஆசை வருமாம். குபேரன் போல செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் தாமிரத்தைத் தங்கமாக்கும் ரசவாத வித்தை தெரிந்தால் நன்றாக இருக்குமே என்பராம். நூறு வயது வாழ்ந்த பின்னும் சாவா வரம் பெற காயகற்பம் தேடி அலைவராம். இப்படி இருப்பதை விட்டு இல்லாததற்குத் தேடி அலைதல் வேண்டாம். உள்ளது போதும் என்று பரிசுத்த நிலையை இறைவனிடம் மன்றாடிப் பெறுவோம் என்கிறார் தாயுமானவர். ஆசைக்கு ஓர் அளவில்லை என்பதற்கு இந்தப் பாடல் சரியான எடுத்துக்காட்டு.

திருமூலர் இன்னும் ஒரு படி மேலே போகிறார். அவர் சொல்லுகிறார்

"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே!"

இதைவிட ஆசையினால் விளைகின்ற துன்பத்தை வேறு யாரும் விவரித்திட முடியுமா சொல்லுங்கள். ஆசை அதிகரிக்க அதிகரிக்கத் துன்பங்கள்தான் பெருகுமாம். ஆசையை விட விட ஆனந்தம் பெருகுமாம். இறைவனிடத்தில் கூட உங்கள் ஆசை ஒரு அளவோடுதான் இருக்க வேண்டுமாம். ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் என்பதிலிருந்து அதிலும் ஒரு கட்டுப்பாடோடு இருப்பதே நன்று என்பது திருமூலர் தரும் அறிவுரை.

மனிதனுக்கு ஏற்படும் ஆசைகளை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று வகைப்படுத்திருக்கிறார்கள். இந்த ஆசைகள் இல்லாத மனிதனே இருக்க முடியாது. "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சின்ன வயதிலேயே நமக்குப் பாடத்தில் கதைகள் மூலம் சொல்லி வைத்தார்கள். மைதாசுக்கு பேராசை வந்து தான் தொட்டதெல்லாம் பொன்னாக மாற வேண்டுமென்று வரம் கேட்டான். வரமும் கிடைத்தது. வயிற்றுப் பசிக்கு
உண்ண கையால் தொட்ட உணவும் பொன்னாகிப் போனபின் எதை உண்பான், எப்படி உயிர் வாழ்வான்? இந்தக் கதைகளெல்லாம் எதற்காகப் பாடங்களில் ஆரம்ப கட்டத்திலேயே போதிக்கப் படுகின்றன?

பண ஆசை, சொத்து ஆசை இவைகள் ஏற்பட்டுவிட்டால் போதும். அவன் ஆசைக்கு எல்லை என்பதே இருக்காது. வழியில் எந்தக் கார், பங்களா அல்லது எஸ்டேட் எதைப் பார்த்தாலும் அது தனக்குச் சொந்தமாக இருக்கக்கூடாதா என்று எண்ணத் தொடங்கி விடுகிறான். தேவைக்கு மேலாகவும், நியாயமற்ற வழிகளிலும் பொருளீட்டி வைத்துக் கொண்டு தான தர்மங்கள் செய்யாமலும், அதர்ம வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பவர்கள் ஆசைக்கு ஒரு முடிவே கிடையாது. இவர்களால் இந்த சமூகம் நாசமடைகிறது. அளவுக்கதிகமான வசதிகளும் செல்வமும், ஆசையும் நிரம்பிக் கிடப்பவர்கள் நல்வழிச் செல்வோராக இல்லையென்றால் சுற்றியிருப்பவர்களுக்கு நரகம்தான்.

ஆசைப்பட்டு, தவறான வழியில் செல்வம் சேர்ப்பவனால்தான் சமூகத்துக்குக் கேடு. நல்வழியில் செல்வம் சேர்ந்திருந்தால், நற்குடிப் பிறந்திருந்தால், மனதில் இரக்கமும், தயா சிந்தனையும் இருப்பவர்களுக்கு ஆசைகள் இருக்கும். அவர்கள் ஆசை மக்கள் இன்புற்றிருக்க வேண்டும். தேவைகள் உள்ளவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டுமென்கிற நல்ல ஆசைகள் இருக்கும். அதைத்தான் திருவள்ளுவரும்

"ஊருணி நீர் நிறைந் தற்றே; உலகவாம்
பேரறிவாளன் திரு" என்று கூறுகிறார்.

உலகம் நன்றாக இருக்க விரும்புவன் ஆசைப் பட்டால் மற்றவர்கள் நலம் பெற்று வாழ்வார்கள். தீய வழியில் பேராசை கொண்டு ஈட்டிய செல்வம் படைத்தோரால் இந்த உலக மக்களுக்குத் தீங்குகள்தான் அதிகம். ஆகையால் ஆசை என்பது அளவோடு இருத்தல் அவசியம். ஆசைப் படுவது நல்ல நோக்கத்துக்காக இருத்தல் அவசியம். ஆசை சரிதான், ஆனால் பேராசை பெரு ஆபத்து என்பதை உணர்தலே நன்று.


எது ஆனந்தம்?

மனிதன் ஒவ்வொரு நாளும் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகிறான். குடும்ப வாழ்க்கையில் மனம் லயித்திருக்கும்போது அவன் மனத்தில் சாந்தம் அல்லது ஆனந்தம் நிலவுகிறது. வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது பூசல் எழுமானால் அப்போது அவன் கோபத்தை அடைகிறான். சில விஷயங்களைப் பார்த்தோ கேட்டோ வியப்பினை அடைகிறான். தனக்கு ஆபத்து வருகிறது என்றால் பயம் ஏற்படுகிறது. சில செயல்கள் அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றன. துன்பப் படுவோரைக் காணும் போது கருணை பிறக்கிறது. காதல் மனைவி அன்போடு செயல்படுவாளானால் மனத்தில் ஆசை அல்லது காமம் உண்டாகிறது. அவ்வப்போது பிறர் வியக்கும் வண்ணம் வீரதீர சாகசங்களைச் செய்யவும் அவன் முயற்சி செய்கிறான்.

இந்த உணர்ச்சிகளைத்தான் நம் பெரியவர்கள் நவரஸம் என்று குறிப்பிடுகிறார்கள். அவை சாந்தம், அத்புதம், ரெளத்ரம், பயாநகம், பீபத்ஸம், ஹாஸ்யம், கருணை, சிருங்காரம், வீரம். இவைகளே நவரஸங்களாகும். இந்த நவரஸத்துக்குள் ஏதாவது ஒரு உணர்வுக்கு மனிதன் ஆட்பட்டே தீர வேண்டும். இவற்றில் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சி என்றால் என்ன அது எப்போது ஏற்படுகிறது, அந்த ஆனந்தம் எந்தெந்த செயல்களில் நமக்குக் கிடைக்கிறது என்பதைச் சற்று சிந்திக்கலாம்.

மனிதன் எவ்வெப்போது ஆனந்த உணர்வினை எய்துகிறான். அவன் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தாலே அவன் ஆனந்தமாக இருக்க முடிகிறது. நினைத்த காரியம் முடிதல் போன்றவற்றால் ஏற்படும் உணர்வினை திருப்தி, மனநிறைவு என்கிறோம். அதுவும் ஆனந்தத்தின் பிரதிபலிப்புதான். நல்ல விருந்து உண்ட பிறகு விருந்தளித்தவர் உணவு அருந்தியவரிடம் சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்கிறார். அவர் சொல்லுகிறார் "பிரம்மானந்தமாக" இருந்தது என்று.

ஆனந்தம் எப்படியெல்லாம் மனிதனுக்குக் கிட்டுகிறது. முதலில் உடலுக்குக் கிடைக்கும் ஆனந்தம். நல்ல வெயிலில் வெகு தூரம் நடந்து ஒரு நிழலுக்கு வந்து உட்கார்ந்து சிறிது குளிர்ந்த நீரைப் பருகும்போது, ஆனந்த மடைகிறான். ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பதில் சிலருக்கு அளவிடற்கரிய ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவுகளை உண்ணும்போது அளவற்ற ஆனந்தத்தை அடைகிறான். நல்ல கவிதைகளைப் படிப்பதில் சிலருக்கு ஆனந்தம். நல்ல திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆனந்தம். நல்ல இசையை ரசிப்பதில் ஆனந்தம்.. ஆனால் அந்த ஆனந்தம் எத்தனை நேரம் நீடிக்கும். இவை எல்லாவற்றிலும் நிறைவான, நித்தியமான ஆனந்தம் எங்கு கிடைக்கிறது? வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்படியான ஆனந்தம் எப்போது கிடைக்கும்.

தன் மனத்துக்கும், பிறருக்கும், நாம் செய்கின்ற காரியத்தினால் ஏற்படும் ஆனந்தம் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய ஆனந்தம். இல்லையா?

அவசியத் தேவை ஏற்படும்போது "காலத்தால் செய்த உதவியாக" எந்த கைமாறும் கருதாது நாம் பிறருக்குச் செய்யும் உதவியில்தான் உண்மையான ஆனந்தம் கிடைக்கிறது. கவிதை படிப்பதில், திரைப்படம் பார்ப்பதில், நல்ல உணவு உண்பதில் உள்ள ஆனந்தம் தற்காலிகமானது. ஆனால் எந்தக் கைமாறும் கருதாமல் ஒருவனுக்குச் செய்கிற உதவியில்தான் நிரந்தரமான ஆனந்தம் உண்டாகிறது. அப்படி நாம் பிறருக்குச் செய்த உதவியை உடனே மறந்துவிட வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் தரித்திர நாராயணர்களுக்கு செய்யும் சேவையே பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் சேவை என்று. அதில் பொதிந்து கிடக்கும் உண்மையை நாம் உணர்ந்தால் போதும். வாழ்க்கையில் எதில் ஆனந்தம் ஏற்படுகிறது என்கிற வினாவுக்கு விடை கிடைத்துவிடும்.

ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு ஆற்றில் சலசலத்து ஓடும் நீரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அந்த இடத்தில் ஓடிய நீர் அதே இடத்தில் அடுத்த விநாடியில் இல்லை. உலகம் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலை வந்தால் மாலையும் இரவும் வந்து விடுகிறது. ஆனால் மனிதனுக்குக் கிடைக்கும் ஆனந்தம் மட்டும் எப்போதும் நிலைத்திருக்குமா? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நொடிப் பொழுதில் மாறிக் கொண்டே இருக்கும் இவ்வுலக வாழ்வில் நாம் காணும் பொருள்களில் ஆனந்தத்தை, இன்பத்தைக் காண முயற்சி செய்ய வேண்டாம். நிரந்தரமான ஆனந்தம் தருவது எது? நமது பெரியோர்கள், மகான்கள் அதற்கான விடையை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அசையும் பொருளிலும், அசையாப் பொருளிலும் இருப்பவர் எவரோ, உலகத்தில் என்றும் நிலைபெற்றிருக்கும் சாட்சியாக இருக்கும் சக்தி எதுவோ, முனிவர்களும், பெரியோர்களும் அந்த சக்தியை என்ன பெயர் கொண்டு அழைத்தார்களோ அந்த இறையருள் தான் நிரந்தரமான ஆனந்தத்தைக் கொடுக்கும் சக்தி. இறைவனுக்கு உருவமென்று எதுவும் இல்லை. அனைத்து ஜீவராசிகளிடமும் இறைவன் நீக்கமறை நிறைந்திருக்கிறான். "அஹம் பிரம்மாஸ்மி" என்று நம் பெரியவர்கள் சொன்னதையும் நாம் நினைவு கூருதல் அவசியம். அடிபட்டு தெருவில் அனாதையாகக் கிடந்து தவிக்கும் ஒரு பிராணியை நாம் எடுத்துச் சென்று சிகிச்சை செய்து அது குணமாவதைக் காண்பதில் அடையும் ஆனந்தம் வேறு எதில் இருக்கிறது. ஒரு காட்டு யானை
தான் ஈன்ற குட்டியை அனாதையாக விட்டுவிட்டுக் காட்டுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைச் சமீபத்தில் படித்தோம் அந்த குட்டி யானையைக் கொண்டு வந்து அதற்கு பால் ஊட்டி குழந்தையைப் போல் வளர்த்து வரும் ஒருவருக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை வேறு எதற்கும் ஈடாகச் சொல்ல முடியுமா?

இறைவனுக்குச் செய்யும் சேவை மட்டுமே மனிதனுக்கு நிலையான மன ஆனந்தத்தைத் தருவது. சுகத்தைத் தருவது. இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நிரம்பியிருக்கிறான். அந்த இறைவனுக்கு உருவம் இல்லை. நாம் காணும் எந்தப் பொருளிலும் இருப்பவன் இறைவனே என்ற எண்ணத்தோடு பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது. இந்தக் கருத்தையே மகாகவி பாரதியும் தனது "பாரதி அறுபத்தாறு" எனும் பகுதியில் சிறப்பாகக் குறிப்பிடுகிறான்.

"உயிர்களெலாம் தெய்வ மன்றிப் பிற வொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்!
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலும் இங்கு பலப் பலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்" என்கிறான்.

"ஊருக்குழைத்திடல் யோகம்" "பிறர் துன்பத்தைக் காணப் பொறாதவன் புண்ணியமூர்த்தி" என்று பாரதி சொன்ன செயல்களெல்லாம் உண்மையான ஆனந்தத்தைக் கொடுக்க வல்லது. இந்த ஞானம் வந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்?


எளிமையில் நிறைவு.

மனிதரில் பலர் எளிமையாகவும், சிலர் ஆடம்பரத்தோடும் வாழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். வசதிகள் இல்லாதவன் எளிமையாக இருப்பதில் ஒன்றும் வியப்பு இல்லை. எல்லா வசதிகளும் இருந்தும் எவனொருவன் எளிமையாக வாழ்ந்து காட்டுகிறானோ அவன் தான் பாராட்டுக்குரியவனாகிறான். மனதில் அடக்கம், ஆணவமின்மை, பிறர் துன்பம் கண்டு இரங்கும் குணம் இவைகள் இருந்தால் எளிமை தானாகவே வந்து சேரும். பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காக வெளியில் எளிமை போல காட்டிக் கொண்டு, மனத்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆடம்பரத்தைக் கடைப்பிடித்தால் அது எளிமையாக ஆகாது. இந்தப் பின்னணியில்தான் எளிமையில் நிறைவு குறித்து இப்போது பார்க்கப் போகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இந்தியா ஹவுஸ் எனும் இடம், இந்திய தேசபக்தர்களின் தங்கும் விடுதியாக இருந்து வந்தது. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டில் வீர சவார்க்கர், வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் தங்கியிருந்தனர். பண்டிகை காலங்களில் இங்குள்ள இந்தியர்கள் ஒன்றுகூடி அந்தப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒரு முறை விஜயதசமியைக் கொண்டாட முடிவு செய்தனர். அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி லண்டனுக்கு வந்திருந்தார். இந்தியா ஹவுசில் இருந்த தேசபக்தர்கள் தங்களது விஜயதசமி விழாவுக்கு காந்தியை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்தனர். காந்தியும் சம்மதித்தார்.

விழா நாளும் வந்தது. விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன. அன்று மாலை சிறப்பு விருந்தினர் காந்திக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விருந்துக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவதற்காக சாவர்க்காரும், வ.வெ.சு.ஐயரும் வெளியில் சென்றிருந்தனர். விருந்து தயாரிப்பில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனும் வேறு சில இளைஞர்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் ஒரு இந்தியர் அங்கு வந்து சேர்ந்தார். அன்றைய விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் யாரோ ஒரு இந்தியர் அவர் என்று நினைத்து டி.எஸ்.எஸ்.ராஜன் அவரை வரவேற்றார். அப்போது அவர் நானும் உங்களோடு ஏதாவது வேலையைச் செய்யட்டுமா என்று கேட்டார். அதற்கு டாக்டர் ராஜன், சரி நீங்கள் இந்தக் காய்கறிகளை நறுக்கிக் கொடுங்கள் என்றார். வந்த புதியவரும் காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டு நறுக்கத் தொடங்கினார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சவார்க்கரும், ஐயரும் வந்து சேர்ந்தார்கள். வந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கும் புதியவரைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். அடடா! மிஸ்டர் காந்தி, நீங்கள் ஏன் இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றனர். அப்போதுதான் புதிதாக அங்கு வந்தவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்பது டாக்டர் ராஜனுக்குப் புரிந்தது. சிறப்பு விருந்தினரிடம் வேலை வாங்கிவிட்டோமே என்று அவர் வெட்கினார். ஆனால் காந்தி சொன்னார், இதில் என்ன தாழ்வு இருக்கிறது. நாம் எல்லோரும் ஒன்றுகூடி விருந்து தயாரித்து விழா கொண்டாடுகிறோம், அதில் நான் என் பங்குக்கு சின்ன வேலையைச் செய்கிறேன். செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு கிடையாது என்றார். இத்தனை பெரிய மனிதரின் எளிமை அங்கிருந்தோரை வியப்படைய வைத்தது. அதனால்தான் அவர் பின்னாளில் மகாத்மா என்று பெருமை பெற்று விளங்கினார்.

எளிமை என்பது பிறப்பின்போது உடன் பிறந்த குணம் என்பதோடு, ஒருவன் வளர்ந்து வரும் சூழலையொட்டியும் அமைகிறது. 1962இல் கேரள மாநிலத்தில் முதன் முதலாக ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை ஏற்றவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு அவர்கள். பதவி ஏற்றவுடன் அவர் தனது காரியாலயம் செல்வதற்கு மிதிவண்டி யொன்றில்தான் செல்லத் தொடங்கினார். இது பிறர் பார்த்து வியந்து பாராட்ட வேண்டுமென்பதற்காக அல்ல. இயற்கையிலேயே அவரிடமிருந்த எளிமை அவரை அப்படி மிதிவண்டியில் செல்லத் தூண்டியது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் விடுவார்களா. Protocol என்று சொல்லி அவரை காரில் வரும்படி செய்து விட்டனர்.

பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அலுவல் காரணமாகப் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக காவல் துறையின் கார் சங்கொலி எழுப்பிக் கொண்டு சென்றது. அப்போது தலைவர் காமராஜ் அவர்கள் அது என்ன சத்தம் என்று கேட்டார். அருகிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அது முதலமைச்சர் பாதுகாப்புக்காக செல்லும் கார் எழுப்பும் சங்கு ஒலி என்றார். இது என்னண்ணேன், யாருக்கு முன்னால சங்கு ஊதிட்டு போவாங்க? எனக்கு எதுக்கு சங்கு. முதலிலே அவங்களைப் போகச் சொல்லுங்க என்றார். இல்லைங்க அது உங்க பாதுகாப்புக்கு காவல்துறை செய்ய வேண்டியது என்றார். அதெல்லாம் எனக்கு வேண்டாம்ணேன். என் மக்கள் கிட்டேயிருந்து எனக்கு பாதுகாப்பா, என்று அந்த அதிகப்படியான பாதுகாப்பு ஆடம்பரங்களுக்கு காமராஜ் முற்றுப் புள்ளி வைத்தார்.

1952இல் ராஜாஜி மந்திரிசபை அமைந்தது. அப்போது ராஜாஜி சில எதிர்கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு மந்திரிசபை அமைத்தார். அதன் காரணமாக சில எதிர் கட்சிகள் அந்த மந்திரிசபையில் இருந்த அமைச்சர்கள் செல்லுமிடங்களில் கருப்புக் கொடி காட்டினார்கள். அப்படி ஒரு முறை எம்.பக்தவத்சலம் சென்ற இடத்தில் அவ்வூர் பிரமுகர்கள் சிலர் அவருக்குக் கருப்புக் கொடி காட்ட அவர் பேசவிருந்த டவுன்ஹால் முன்பாக நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த பக்தவத்சலம் அவர்கள் யார் எதற்காக கருப்புக் கொடி ஏந்தி நிற்கிறார்கள் என்றார். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கருப்புக் கொடி காட்டுகிறார்கள் என்றனர் அதிகாரிகள்.
அதற்கு அமைச்சர் பக்தவத்சலம் அவர்களை ஹாலுக்கு உள்ளே வரச் சொல்லுங்கள், அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும் என்றார். அமைச்சர் போய் உட்கார்ந்ததும் கருப்புக் கொடி காட்டியவர்கள் வரிசையில் உள்ளே வந்ததும் அவர்கள் கையில் இருந்த கருப்புத் துணியை தான் வாங்கிக் கொண்டு மேஜை மீது வைத்தபடி அவர்களை வணங்கி நின்றார் பக்தவத்சலம். இறுதியாக அவர்களது தலைவர் ஒருவர் தங்கள் எதிர்ப்பைச் சொன்னார். அமைதியாக அவர் பேசுவதை கேட்டுக் கொண்டார். எதிர்ப்பாளர்களும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை. போலீஸ் தடியடி செய்து கலைக்கவுமில்லை. அமைச்சரோ, தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்தை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அவர்களை மரியாதையோடு வழியனுப்பி வைத்த எளிமை, இனி எந்தக் காலத்திலும் நடக்குமா தெரியவில்லை.

ஒரு ஊரில் சிலர் ஒன்று சேர்ந்து கட்டிய சினிமா தியேட்டர் ஒன்று, பங்குதாரர்களிடையே ஏற்பட்ட பூசல் காரணமாக உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி ஏலத்திற்கு வந்தது. அந்த தியேட்டர் வளாகத்திலேயே நீதிமன்ற அதிகாரிகள் ஏலம் விட ஏற்பாடு செய்தனர். ஏலம் நடந்து கொண்டிருந்தது. ஏலம் கேட்டவர்களில் ஒருவர் முழங்கால் வரை வேட்டி கட்டிக் கொண்டு, மேலே சட்டை எதுவும் அணியாமல் ஒரு துண்டால் உடலை மூடிக் கொண்டு ஏலம் கேட்டுக் கொண்டிருந்தார். அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்து அவர் யார், அவரால் பணம் கொடுத்து தியேட்டரை வாங்கும் சக்தி இருக்கிறதா என்று ரகசியமாக விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி ஆச்சரியமூட்டக் கூடியதாக இருந்தது. அந்த ஊரில் இருந்த மிகப் பெரிய
மண்டியின் அதிபர் அவர். மிளகாய், துவரம்பருப்பு, மஞ்சள் இவைகளின் மொத்த வியாபாரி அவர். மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது தெரிய வந்தது. இறுதியில் அவர்தான் அந்த தியேட்டரை ஏலம் எடுத்து நடத்தினார்.

எளிமை அடக்கத்தின் அடையாளம். எளிமை என்பது மனம் பக்குவமடைந்ததற்கு எடுத்துக் காட்டு. ஆடம்பரம் ஆளை கவிழ்க்கும் தன்மை கொண்டது. எளிமை நிச்சயமாகப் பெருமை அளிக்கும். வீண் ஆடம்பரம் முகத்துக்கு நேராக இல்லா விட்டாலும், பின்னால் கேலி செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்து விடும். எனவே எளிமையே உயர்வு. எளிமையைக் கைக் கொண்டவர் பெருமைக்குரியவர்.








Tuesday, April 26, 2011

"இன்குலாப் ஜிந்தாபாத்."


                                                                                               
மாவீரன் பகத்சிங். "இன்குலாப் ஜிந்தாபாத்."

பகத்சிங், இந்தப் பெயர் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் ஆழப்பதிந்துவிட்ட பெயர். தனது 24ஆம் வயதில் இந்த வீர இளைஞன் ஆங்கில அரசால் தூக்கிலடப்பட்டான். இவன் வரலாற்றை அறிந்து கொள்ள, அவன் வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்திய சுதந்திரப் போர் மூன்று கட்டம்.
1885 முதல் 1906 வரை மிதவாத காங்கிரசார் மனுச்செய்து உரிமைகள் கேட்ட வரலாறு
1906 முதல் திலகர் காலம். திசை தெரியாத போர். தனித்தனி வன்முறை
1919க்குப் பிறகு மகாத்மா சகாப்தம். அகிம்சை, சத்தியாக்கிரக முறை.
ஆங்கிலேயர் அடக்குமுறையை எதிர்த்து ஆங்காங்கே வன்முறை இயக்கங்களும் இருந்தன.
உ.பி.யில் சந்திரசேகர ஆசாத் தலைமையில்
பஞ்சாபில் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் போர் முரசு
1907 செப்டம்பர் 28இல் பஞ்சாப் மாநிலம் லாகூர் அருகில் சாந்தோ கிராமம், சீக்கிய விவசாயக்குடும்பம். அப்பா சர்தார் கிஷன் சிங், அம்மா வித்யாவதி தேவி.
சித்தப்பா ஒருவர் அஜித் சிங் புரட்சிக்காரர், லாலா லஜபதி ராயுடன் நாடுகடத்தப்பட்டு பர்மா மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டவர்.
மற்றொரு சித்தப்பா சர்தார் ஸ்வரண் சிங், சிறைக் கொடுமைக்கு ஆளாகி மாண்டுபோனார்
அப்பா சர்தார் கிஷன் சிங்கும் சிறந்த தேசபக்தர், புரட்சிக்காரர்.
இத்தகைய குடும்பத்தில் பிறந்த பகத்சிங் தேசபக்தனாக உருவெடுத்தார்.

1927 நவம்பரில் காந்திஜி மங்களூரில் இருந்தார். அப்போது வைஸ்ராய் இர்வின் காந்திஜியை அவசரமாக டில்லிக்கு அழைத்தார். நவம்பர் 5இல் தம்மை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காந்திஜியும் உடனே டில்லி விரைந்தார். எதிர்பார்ப்புகளோடு.
வைஸ்ராய் இந்தியா மந்திரி அனுப்பியிருந்த ஒரு அறிக்கையைக் காட்டினார்.
அதில் இந்தியாவுக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுக்க சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தியர் எவரும் இதில் இல்லை.
ஒரு அஞ்சல் அட்டையில் தெரிவிக்க வேண்டிய செய்தியை 1500 மைல் பயணம் செய்து காந்திக்கு தந்தது
நவம்பர் 8, 1927இல் சைமன் கமிஷன் அமைப்பு.
அன்னிபெசண்ட் அம்மையார் கூட இந்த கமிஷன் எதற்கு என்றார்.
1929இல் இங்கிலாந்தில் பொதுத்தேர்தல். அதற்கு கண்துடைப்புதான் இந்த கமிஷன்.
இந்தியாவில் எல்லா கட்சிகளும் சைமன் கமிஷனை எதிர்த்தன.
தங்களுக்குத் தேவை "பூரண சுதந்திரம்" சைமன் கண்துடைப்பு அல்ல என்றனர்.
காங்கிரஸ் கட்சி சைமனை நிராகரித்தது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதைதான் கமிஷன் என்றார் அன்னி பெசண்ட்

1927இல் சென்னையில் AICC. காந்தி வரவில்லை. Dr.அன்சாரி தலைவர்
முக்கிய தீர்மானம் சைமனை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
தென் இந்தியாவில் நீதிக்கட்சி தவிர மற்ற அனைவரும் சைமனை எதிர்த்தனர்.
2-2-1928 இல் சைமன் கமிஷன் பம்பாய் வந்தது.
அன்று இந்தியா முழுவதும் ஹர்த்தால். சென்னையில் துப்பாக்கி பிரயோகம் மூவர் இறப்பு. பலர் காயம்
கல்கத்தாவில் போலீஸ் - மாணவர்கள் மோதல்
டில்லியில் பலத்த எதிர்ப்பு. கமிஷனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
லாகூரில் பிரம்மாண்ட கூட்டம். லாலா லஜபதி ராய் தலைமையில் ஊர்வலம்.
லால் (லஜபதி ராய்) பால் (பிபின் சந்திர பால்) பால் (பால கங்காதர திலகர்)
30-10-1928 சைமனே திரும்பிப்போ Simon Goback ஆர்ப்பாட்டம். போலீஸ் தாக்குதல்
Police Supdt. Scott உத்தரவு Sanders DSP லாலாவை மார்பில் தடியால் அடித்து மயக்கம்
பஞ்சாப் சிங்கம் லாலாஜி மயக்கத்தோடு ஆஸ்பத்திரியில் அனுமதி
17-11-1928 லாலா காலமானார்.
"போலீசார் என்மீது அடித்த ஒவ்வொரு அடியும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் சவப்பெட்டியில் அடித்த ஒவ்வொரு ஆணியாகும்" என்றார் லாலா.
லக்னோவில் நேரு, கோவிந்த வல்லப பந்த் தாக்கப்பட்டனர். பந்த் கழுத்து நரம்பில் அடித்து அவர் வாழ்நாள் முழுவதும் தலை ஆடிக்கொண்டிருந்தது.
லக்னோ நகர் எங்கும் பலூன் காத்தாடி எங்கும் சைமன் திரும்பிபோ என்று எழுதியிருந்தது.
பாட்னாவில் ஆங்கில அதிகாரிகள் கூலிக்குக் கொண்டு வந்த 50,000 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.
பம்பாயில் சர் பட்டம் பெற்ற 22 பேரில் ஒருவர் கூட சைமனை வரவேற்க வரவில்லை.
சைமன் பெருவியாதிக்காரன்போல் நாடு திரும்ப நேர்ந்தது.
பாரதமாதா சங்கம் என்ற புரட்சி இயக்கம் கூடி லாலாவின் மரணத்துக்கு பழிவாங்க முடிவு

இந்த பாரதமாதா சங்கம் பகத் சிங் சித்தப்பா அஜித் சிங்கால் தொடங்கப்பட்டது.
லாலா இறப்பதற்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அஜித் சிங்கும் அவரோடு நாடு கடத்தப்பட்டார். இந்த முறையில் அஜித்சிங், லாலா உறவு அதிகம்.
இந்த அஜித் சிங் சுதந்திரத்துக்கு முதல் நாள் 14-8-1947இல்தான் காலமானார்.
பகத்சிங்கின் குடும்பமே தியாகக் குடும்பம்.
பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளை எதிர்த்து மாணவராக இருந்த பகத்சிங் தனது 17வயதில் தீவிரமாக ஈடுபட்டார்.
லாகூரில் ஆரிய சமாஜ் பள்ளியில் ஆரம்பக் கல்வி, தேசியக் கல்லூரியில் படிப்பு.
இவர்கள் அனைவரும் பாரத இளைஞர் சங்கம் என்ற தேசிய இயக்கம் நடத்தினர்.
இதன் செயலர் பகத் சிங். பகவதிசரண் முதலானோர் உறுப்பினர்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்பு. சீக்கியர்கள் நடத்திய அகாலி இயக்கத் தொடர்பு.
உ.பியிலிருந்து சந்திரசேகர ஆசாத் லாகூர் வந்தார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் சந்திப்பு.

லாலாஜியை அடித்துக் கொன்ற DSP சாண்டர்சை நிழல்போல ஜெயகோபால் தொடர்ந்தான்.
சாண்டர்சின் போலீஸ் ஸ்டேஷன் கண்காணிப்பு. ஜெயகோபால் தகவல் கொடுக்க வேண்டும்.
ஆசாத், பகத்சிங், ராஜகுரு சைக்கிளில் வந்து தனித்தனியாக நின்றனர்.
சாண்டர்ஸ் வெளியே வந்ததும் ஜெயகோபால் சமிக்ஞை கொடுக்க இவர்கள் தயார் நிலை.
சாண்டர்ஸ் மோட்டார் சைக்கிளை எடுத்து அதில் ஏறவும், ராஜகுரு துப்பாக்கியால் சுட்டார்.
குண்டு அவன் மீது பாய்கிறது. அவன் தப்பிவிடக்கூடாது என்று பகத்சிங்கும் சுடுகிறார்.
சாண்டர்ஸ் பிணமாகிறான்.
பகத்சிங், ராஜகுரு இருவரும் காலேஜ் நோக்கிச் செல்ல, ஒரு போலீஸ்காரன் பின்தொடர்கிறான். ஆசாத் அவனை எச்சரித்தும் கேட்காததால் அவனை ஆசாத் சுட்டுக் கொல்கிறார்.
பிறகு மூவரும் நிதானமாக நடந்து காலேஜ் ஹாஸ்டலுக்குச் செல்கிறார்கள்.
நாடு முழுவதும் மறு நாள் ஒரே பரபரப்பு. பத்திரிகைகளில் செய்தி.
"லாலாவின் மரணத்துக்கு பஞ்சாப் இளைஞர்கள் பழிக்குப் பழி வாங்கினர்"
"இந்திய தேசிய ராணுவம்" என்ற பெயரில் ஊர் முழுவதும் நோட்டிஸ் ஒட்டப்பட்டது.
அரசாங்கம் நடுங்கியது. வெள்ளையர்கள் வெளியே வர பயந்தனர். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்.
லாகூரில் பல இளைஞர்களை போலீஸ் கைது செய்தது.
எனினும் புரட்சி இயக்கத்தினர் மாறு வேடத்தில் ஊரைச் சுற்றி வந்தனர்.
இனி இங்கு இருக்கக்கூடாது என்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் முயற்சி.

சந்திரசேகர ஆசாத்: இவர் உ.பி.யைச் சேர்ந்தவர், பார்க்க பண்டா மாதிரி இருப்பார், போலீசுக்கு இவரை அடையாளம் தெரியாது, எனவே இவர் சுலபமாகத் தப்பித்துவிடலாம்.
பகத் சிங்: இவர் ஊரறிந்த நபர். எல்லோருக்கும் இவரைத் தெரியும். உயரமானவர், அழகானவர், இளமை யானவர், அழகிய மீசை, ஐரோப்பியர் போல உடை. இவர் தப்புவதுதான் கடினம்.
பகவதிசரண் என்பவர். புரட்சிக்காரர்களுக்கு நண்பர். இவர் மனைவி துர்க்கா தேவி.
சுகதேவ் துர்க்காதேவியிடம் பகத் சிங் தப்ப உதவி கேட்டார். என்ன உதவி?
கல்கத்தா தப்பி செல்லும் வரை பகத் சிங்கின் மனைவி போல நடிக்க வேண்டும். தயக்கத்துடன் துர்க்காவும் கணவர் பகவதிசரணும் ஒப்புக்கொண்டனர்.
பகத் சிங், அண்ணி என்று துர்க்கா தேவியை வணங்கினார். இருவரும் கணவன் மனைவி போலவும், ராஜகுரு அவர்களுடைய வேலைக்காரன்போலவும் நடித்து விடியற்காலை 5க்கு கிளம்பினர்.லாகூரிலிருந்து கல்கத்தா செல்லும் மெயிலில் பயணம். இருவரும் மேல் வகுப்பு. ராஜகுரு வேலைக்காரனாக மூன்றாம் வகுப்புப் பயணம். ராஜகுரு வழியில் லக்னோவில் இறங்கிக் கொண்டார்.
பகத் சிங், துர்க்கா தேவி கல்கத்தா சேர்ந்தனர். பகவதிசரண் வரவேற்று உபசரிப்பு. வங்காளி உடையில் பகத் சிங் நடமாட்டம். ஊர் சுற்றல்.
கல்கத்தாவில் வெடிகுண்டு செய்யும் நிபுணர் யதீந்திரநாத்துடன் நட்பு. இவருடன் ஆக்ரா சென்று அங்கு ஓர் பாழடைந்த வீட்டில் வெடிகுண்டுகள் செய்தனர்.
ஓராண்டு காலம் கழிந்தது. டில்லி சென்றார் பகத் சிங். அங்கு பூதகேஸ்வர தத் என்பவருடன் ஊர் சுற்றல்.
புரட்சிக்கு ஏதாவது செய்ய நினைத்தனர்.
அப்போது டில்லி சட்டசபையில் தொழில் தகறாறு சட்டமும், இந்திய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமும்
விவாதிக்கப்பட்டது. இரண்டும் இந்தியர்களுக்கு தொழிலாளர்களுக்கு எதிரானவை. இந்திய மண்ணில்
இந்திய வரிப்பணத்தில், இந்தியர்களுக்கு எதிரான சட்டங்களா?
பகத் சிங் முடிவு செய்தார். சட்டசபை கட்டிடத்தில் குண்டு வீச. இது ஆபத்தானது என்பதால், இதில் பகத் சிங்கை ஈடுபடுத்த புரட்சிக்குழு சம்மதிக்கவில்லை. எனினும் பகத் சிங் தீர்மானித்துவிட்டார்.
1929 ஏப்ரல் 8ஆம் தேதி, டில்லி சட்டசபை கட்டிடம். பார்வையாளர் காலரி நிரம்பி வழிந்தது. அதில் பகத் சிங்கும் பூதகேஸ்வர தத்தும் இருந்தனர். மோதிலால் பேசிக்கொண்டிருந்தார். வித்தல்பாய் படேல் தலைமை வகித்தார். மதன்மோகன் மாளவியா இருந்தார். வைஸ்ராய் லார்டு இர்வினும் அவனருகில் சர் ஜான் சைமனும் இருந்தனர்.
அப்போது இரண்டு குண்டுகளை எடுத்து மனிதர்கள் இல்லாத வெற்றுப் பகுதியில் வீசினர் இருவரும். குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. கட்டிடம் அதிர்ந்தது. உயிர் இழப்பு எதுவும் இல்லை. அச்சுறுத்தவே இது.
பலர் ஓடினர். சிலர் மேஜைக்கு அடியில் ஒளிந்தனர். வைஸ்ராயும் சர் ஜான் சைமனும் ஓசையின்றி எழுந்து ஓடிவிட்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயம் பிடித்தது. கலக்கமின்றி இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே.
\ ஆரவாரம் அடங்கியது. புகைமூட்டம் குறைந்தது. பார்வையாளர் காலரியில் ஐரோப்பிய உடையுடன் இருவர் மட்டும் கையில் துப்பாக்கியோடு தப்பியோட முயற்சிக்காமல் தலை நிமிர்ந்து நின்றனர்.
அனைவருக்கு அச்சம், யாரும் அவர்களை நெருங்கவில்லை. பயம்.
சிவப்பு நிற துண்டுப் பிரசுரங்கள் அவைக்குள் வீசப்பட்டன. "இன்குலாப் ஜிந்தாபாத்" "வந்தேமாதரம்" கோஷம்.
தப்பிச் செல்ல எந்த முயற்சியும் இருவரும் மேற்கொள்ளவில்லை.
சார்ஜெண்ட் இவர்கள் அருகில் வந்தார். இருவரும் கைதாக ஒத்துழைத்தனர். துப்பாக்கிகளை தூர எறிந்தனர்.
"ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்றான் சார்ஜெண்ட்.
"செவிடர்கள் காதில் நாங்கள் சொல்லும் செய்தி விழவேண்டுமல்லவா? அதற்காக" என்றனர் வீரர்கள்.
சார்ஜெண்ட்டுக்கு இருவரிடமும் பக்தி, மரியாதை ஏற்பட்டது.
8-4-1929 இந்த நிகழ்ச்சி. பிறகு 2 மாதம் கழித்து 6-6-1929 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
கோர்ட்டில் பகத் சிங் கொடுத்த வாக்குமூலத்தின் ஒரு பகுதி:--

"நாங்கள் யாரையும் கொல்லும் நோக்கத்தில் குண்டுகளை வீசவில்லை. கொடுங்கோல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை குறிவைத்தே அவை வீசப்பட்டன. இது இரக்கமற்ற, பொறுப்பற்ற, வெள்ளை ஏகாதிபத்திய அரசு. இந்திய மக்கள் செயலற்று செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை ஏமாளிகளாக ஆக்கிக்கொண்டு இந்த சட்டசபை, இந்திய மக்களுக்கு, உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கள் நோக்கமெல்லாம் ஏகாதிபத்திய அடக்குமுறை ஆட்சி நடத்தும் செவிடர்களின் காதில் ஒலியைப் பாய்ச்சுவதுதான். தலையற்றவர்களுக்கு அறிவுபுகட்டவும், அமைதியாக இருக்கும் இந்த நாட்டில் வீசப் போகும் புயலுக்கு முன்னெச்சரிக்கையாகவும் இந்த குண்டுகளை வீசினோம். தனிப்பட்ட எவரையும் கொல்லும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நினைத்திருந்தால் இந்திய மக்களின் வெறுப்பை முழுமையாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் வைஸ்ராய் இர்வினையும், சர் ஜான் சைமனையும்கூட கொன்றிருக்க முடியும். ஆனால் நாங்கள் அதனைச் செய்யவில்லை. அது எங்கள் நோக்கமும் அல்ல. ஏகாதிபத்திய ஆட்சிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கவே இப்போது நாங்கள் குண்டுகளை வீசினோம். நாங்கள் உங்களிடம் எந்த சமாதானமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் சுயமரியாதையைக் காண்பிக்கவும், உங்களுக்குச் சரியான எச்சரிக்கை கொடுக்கவும் நடந்த இந்த முயற்சி நாங்கள் விரும்பியே செய்தோம்"

தீர்ப்பு வந்தது: குண்டு வீசிய குற்றத்துக்காக பகத் சிங்குக்கும், பூதகேஸ்வர தத்துக்கும் ஆயுள் தண்டனை.
பகத் சிங்கின் வாக்குமூலம் உலக பத்திரிகைகள் அனைத்திலும் வந்து பரபரப்பாகப் பேசப்பட்டன. இந்திய நாட்டு இளைஞர்கள் இவ்விரு இளைஞர்களின் வீர தீர பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் வீறுகொண்டு எழலாயினர். இவர்கள் இந்தியர்களின் ஆதர்ச வீர புருஷர்களாயினர்.
இந்த வழக்கையடுத்து DSP சாண்டர்ஸ் கொலை வழக்கு தொடர்ந்தது.
சிறையில் பல தொல்லைகள். அவமதிப்புகள். கைதிகள் நீண்ட நாள் உண்ணா நோன்பு இருந்தனர். வழக்குக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை என்பதால் பிரிட்டிஷ் அரசு ஒரு அவசர சட்டத்தைக் கொணர்ந்தது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் கொணராமலும், சாட்சிகள் விசாரிக்காமலும் இவர்களுக்குத் தண்டனை கொடுக்க வகை செய்தது சட்டம்.
உண்ணாவிரதத்தின் 63 வது நாளில் ஜதீந்தாஸ் இறந்தார். இவர் குண்டு செய்யும் நிபுணர்.
தலைமறைவாக இருந்த பகவதிசரண் காட்டில் குண்டு தயாரிக்கையில் வெடித்துச் சிதறினார். இவரது உடல் ஊருக்குள் கொண்டு வரப்படாமல் ராவி நதியில் இழுத்து விடப்பட்டது.

7-10-1930இல் பகத் சிங், ராஜ்குரு, சுகதேவி மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சாண்டர்ஸ் கொலை வழக்கு நடந்து வந்த நாளில் பகத் சிங்கின் தந்தை ஒரு மனு கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் பகத் சிங், கொலை நடந்த அன்று ஊரிலேயே இல்லை என்று. வெகுண்டெழுந்தான் பகத் சிங். பொய் சொல்வதை அவன் மனது ஏற்கவில்லை. தந்தையை கடுமையாகக் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதினான்.
பகத் சிங்கை காப்பாற்ற அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மகாத்மா காந்தி வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதினார். கடைசிவரை அந்த கடிதங்களை வைஸ்ராய் எடுத்துக் கொள்ளவேயில்லை. நேரு எப்படியும் பகத் சிங் காப்பாற்றப்பட்டு விடுவான், மகாத்மாவின் முயற்சி பலிக்கும், வைஸ்ராய் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவாவது மாற்றிவிடுவார் என்று நம்பினார். அவர் நம்பிக்கை பலிக்கவில்லை.

24-3-1931 விடியற்காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவாகியது.
மக்கள் வெள்ளம் கூடத் தொடங்கியது. அடுத்த மூன்றாம் நாள் லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கவிருந்தது. லாகூர் சிறையைச் சுற்றி தேசபக்தர்களும் தேசத் தொண்டர்களின் உறவினர்களும் கூடினர். தண்டனை நிறைவேறும் நாளில் சமாளிக்கமுடியாத கூட்டம் வரும் என்று அரசு நினைத்தது.
\ சிறையில் மூவரும் எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்தனர். வெளியே மழை மேகம் திரண்டு பெரிய பிரளயம் ஏற்படுவது போன்ற மக்கள் வெறி. உள்ளே "இன்குலாப் ஜிந்தாபாத்" "வந்தே மாதரம்" இவற்றுடன் தேசபக்தி பாடலை உரத்தக் குரலில் மூவரும் பாடுவது வெளியே கேட்டது. நிசப்தத்துடன் மக்கள் அதனைக் கேட்டனர்.
உறவினர்களும் பகத்சிங்கின் பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் சிறைக்குள் சென்று பகத் சிங்கைப் பார்த்தனர். சற்றும் கலங்காத பகத் சிங் அனைவருக்கும் தைரியம் சொன்னார். தாய் மயங்கி வீழ்ந்தாள். அவரைத் தேற்றி அனுப்பினார் பகத் சிங்.
மறுநாள் வரை காத்திருக்க விருப்பமில்லாத சிறை அதிகாரிகள் மூவரையும் 23ஆம் தேதி மாலையே தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றனர். சிறைக்குள்ளே பாடல். "இங்குலாப் ஜிந்தாபாத்" என்ற பகத் சிங்கின் கோஷம் விண்ணை முட்டியது. பதிலுக்கு சிறைக்கைதிகள் அனைவருமே "இங்குலாப் ஜிந்தாபாத்" என்று எதிரொலித்தனர். பாடலும், கோஷமும் சிறிது சிறிதாக குறைந்தது.
என்ன நடக்கிறது உள்ளே? நாளைதானே தூக்கு என்று என்ன நடக்கிறது.
அதிகாரிகள் மூவரையும் தூக்கு மேடையில் நிறுத்தினர். முகத்தை மறைக்க கட்ட வந்த கருப்பு துணியை நிராகரித்தனர். எங்கள் பாரத மண்ணைப் பார்த்துக் கொண்டே உயிர் விடுவோம் என்றனர். தூக்குக் கயிறு மாட்டப்பட்டது. இழுக்கப்பட்டது. நொடிப்பொழுதில் அவர்கள் ஆவி பிரிந்து உடல் தொங்கியது. மூன்று விலை மதிக்கமுடியாத வீரத் தியாகிகளின் உடல் பிணமாகத் தொங்கியது.
செய்தி தெரிந்து வெளியே கொந்தளிப்பு. மக்கள் வெள்ளம் அலைமோத, அதிகாரிகள் திருட்டுத் தனமாக அவர்கள் உயிரை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் தாங்களே கொண்டு போய் சட்லெஜ் நதிக்கரையில் எரித்து மிச்சத்தை ஆற்றில் இழுத்து விட்டுவிட்டனர்.
மறுநாள் மக்கள் சட்லெஜ் நதிக்கரையில் மிச்சமிருந்த அவர்கள் சாம்பலை எடுத்து வந்து ஊர்வலம் விட்டனர். நினைவாலயம் எழுப்பினர். சுதந்திர இந்தியா பாகிஸ்தான் வசம் போய்விட்ட அந்த இடத்தை வாங்கி அங்கோர் நினைவாலயம் 1950இல் எழுப்பினர்.
பின்னர் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் அந்த நினைவாலயம் இடிந்து போனதால், மறுபடியும் அங்கு ஓர் நினைவாலயம் எழுப்பப்பட்டது.
பகத் சிங் தூக்கிலடப்பட்டுவிட்ட செய்தி கேட்டு நேரு சொன்னார்:

"எல்லாம் முடிந்து விட்டதே. கடந்த சில நாட்களாக நான் வாய் மூடிக் கிடந்தேன். எனது ஒரு வார்த்தைகூட நன்மைக்கு எதிராக அமைந்துவிடக்கூடும் என்று கருதி வாய் மூடி இருந்தேன். இதயமே வெடித்து விடுவது போலிருந்தது. இருந்தாலும் நான் அமைதியாக இருந்தேன். இப்போது எல்லாம் முடிந்து விட்டது. நமக்கு யார் மிகவும் அன்பானவனாயிருந்தனோ, எவனுடைய மகத்தான தைரியமும் தியாகமும் இந்திய இளைஞர்களுக்கு ஆதர்ஷமாக விளங்கியதோ, அவனை நம்மில் யாராலுமே காப்பாற்ற முடியாமல் போய்விட்டது"
24 வயதில் தூக்கில் தொங்கி நாட்டுக்காக உயிர்விட்ட அந்த வீரத் தியாகியை நாடே போற்றி வாழ்த்துகிறது. அவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளை நாம் மீண்டும் சொல்லி புனிதமடைவோம்.
"இன்குலாப் ஜிந்தாபாத்." வந்தே மாதரம்.












Saturday, April 23, 2011

இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை


அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது.


சகாயம் ஐ.ஏ.எஸ்.,                      A file picture of Madurai District Collector U. Sahayam. Photo: Special Arrangement.

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது<http://www.deccanchronicle.com/chennai/dt-collector-declares-assets-210> சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., <http://www.deccanchronicle.com/chennai/dt-collector-declares-assets-210> அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!