பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 21, 2015

48. கலைகள் - கொட்டைய சாமி


                    தென் பாண்டி நாட்டில் நெட்டையபுரம் என்றொரு ஊர் இருக்கிறது. எந்தக் காரணத்தாலோ, அவ்வூர் ஜனங்கள் அக்கம் பக்கத்துக் கிராமத்தார்களைக் காட்டிலும் சராசரி முக்கால் அல்லது ஒரு சாண் அதிக உயரமாக இருப்பார்கள். இது பற்றியே நெட்டையபுரம் என்ற காரணப்பெயர் உண்டாயிற்றென்று பல பண்டிதர்சுகள் ஊகிக்கிறார்கள்.

                        அந்த ஊரில் மிகவும் கீர்த்தி யுடைய சிவன் கோயில் ஒன்றிருக்கிறது. ஆனித் திருவிழாவின் போது அக்கோயிலில் தேரோட்டம் மிகவும் அற்புதமாக நடக்கும் சூழ்ந்துள்ள கிராமங்களினின்றும் நாயக்கர்களும், நாய்க்கச்சிகளும், ரெட்டிகளும் ரெட்டிச்சிகளும், பறையர் பறைச்சிகளும் பெருங் கூட்டமாகத் தேர் சேவிக்கும் பொருட்டு வந்து கூடுவார்கள்.

                 கொண்டையெல்லாம் செவ்வந்திப் பூ, வீதியெல்லாம் கரும்பு சவைத்துத் துப்பிய சக்கை. அவர்களுடைய குழந்தைகள் ஆணும் பெண்ணும், பெரும்பகுதி நிர்வாணமாகவும், சிறு பகுதி இடுப்பில் மாத்திரம் ஒருசிறு துணியை வளைந்து கட்டிக்கொண்டும் வரும். துணி உடுத்திய குழந்தைகளுக்குள்ளே ஆண் பெண் வேற்றுமை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஏனென்றால், ஆண் குழந்தைகளைப் போலவே பெண் குழந்தைகளுக்கும் முன் குடுமி சிரைக்கும் விநோதமான வழக்கம் அந்த ஜாதியார்களுக் குள்ளே காணப்படுகிறது.

                 மேற்படி நெட்டையப் புரத்தில் ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவருக்கு இப்போது சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும். செக்கச்செவேலென்று எலுமிச்சம்பழம் போலவே பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அவருடைய நடையுடை பாவனைகளிற் உடை மாத்திரம் இங்கிலீஷ் மாதிரி. நடையும் பாவனைகளும் முற்காலத்துப் பாளையக் காரரைப் போலேயாம். பூட்ஸ் முதல் தொப்பி வரை அம்மனிதருடைய உடுப்பைப் பார்த்தால் லண்டன் நகரத்து லார்டு மக்களின் அச்சு சரியாக இருக்கும். இவர் மூன்றுதரம் இங்கிலாந்துக்குப் போய் வந்திருக்கிறார். இங்கிலீஷ் பாஷை பேசினால், திக்காமலும் தட்டாமலும் சர சர சர வென்று மழை வீசுவது போல் வீசுவார். அவருக்குத் குதிரை யேற்றத்திலும் வேட்டையிலும் பிரியம் அதிகம். நானூறு வேட்டை நாய்கள் வளர்க்கிறார். இவருடைய அந்தப்புரத்தில் பன்னிரண்டு தாலி கட்டிய பெண்டாட்டிகளும் வேறு பல காதல் மகளிரும் இருக்கிறார்கள். 

                  இந்த ஜமீன்தார் சிவ பக்தியில் சிறந்தவர். விபூதி ருத்திராக்ஷங்களை மிகவும் ஏராளமாகத் தரிக்கிறார். தினம் இரண்டு வேளை அரண்மனையில் தானே சிவபூஜை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை தோறும் தவறாமல் மாலையில் சிவன் கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிவருகிறார். திருவிழாக் காலங்களில் முதலாவது வந்து நின்று முக்கால் வாசிப் பொழுதையும் கோயிலிலே செலவிடுவார். தேரோட்டத்தின்போது வடத்தை மற்ற ஜனங்களுடன் சேர்ந்து நெடுந்தூரம் இழுத்துக்கொண்டு போவார். அப்பால் கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு ஜனங்களை உற்சாகப்படுத்தின படியாகவே, தேர் மீட்டும் நிலைக்கு வந்து நிற்க எவ்வளவு  நேரமான போதிலும் கூடவே வருவார்.

                 கோயிலுக்கு வரும் ஸமயங்களில் மாத்திரம் இவர் ஐரோப்பிய உடையை மாற்றித் தமிழ் உடை தரித்துக் கொண்டு வருவார். பலாச் சுளைகளைப்போல் மஞ்சளாகக் கொழுக்குக் கொழுக் கென்ற உடம்பும் பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஒரு ஜரிகைப் பட்டுத் துண்டும், கை நிறைய வயிர மோதிரங்களும், தங்கப் பொடி டப்பியும், தங்கப்பூண் கட்டிய பிரம்புமாக இந்த ஜமீன்தார் சென்ற ஆனித் திருவிழாவின்போது, ஒரு நாட் காலையில், மேற்படி சிவன் கோயிலுக்கெதிரே, வெளிமண்டபத்தில் கல்யாண ஜமக்காளத்தின் மீது பட்டுத் தலையணைகளில் சாய்ந்து கொண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த வெள்ளிக்காளாம்பியில் சவைத்துத் துப்பிக் கொண்டிருந்தார்.

               அந்த சமயத்தில், மேற்படி ஜமீன்தாரின் முன்னே, கன்னங்கரேலென்ற நிறமும், மலர்போலத் திறந்த அழகிய இளைய முகமும், நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக, ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய இளைஞனொருவன் வந்து தோன்றினான்.           "இவன் பெயர் கொட்டைய நாயக்கன். இவன் யோகியென்றும் அந்த ஊரில், சிலர் சொல்லுகிறார்கள். ஞானப் பயித்தியங்கொண்டவனென்று சிலர் சொல்லுகிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவனுக்குக் கொட்டைய சாமியார் என்று வழங்குகிறார்கள்.

               இவனைக் கண்டவுடனே ஜமீன்தார்:- "வாடா, கொட்டையா" என்றார்.

               'சாமி, புத்தி' என்றான் கொட்டையன்.

               'காவி வேஷ்டி உடுத்திக் கொண்டிருக்கிறாயே; என்ன விஷயம்?' என்று ஜமீன்தார் கேட்டார்.

               கொட்டையன் மறுமொழி சொல்லவில்லை. சும்மா நின்றான்.

               'ஸந்யாஸம் வாங்கிக்கொண்டாயா?' என்று ஜமீன்தார் கேட்டார்.

               'ஆமாம்; பாண்டியா, ஊரார் வீட்டு ஸ்திரீகளை யெல்லாம் ஸந்யாஸம் பண்ணிவிட்டேன்' என்று கொட்டையன் சொன்னான்.

               'சாப்பாட்டுக் கென்ன செய்கிறாய்' என்று ஜமீன்தார் கேட்டார்.

               "என்னுடைய பெண்டாட்டிக்கு அரண்மனையில் சமையலறையில் வேலையாயிருக்கிறது. அவள் அங்கிருந்து பேஷான நெய், தயிர், சாதம், கறி, எல்லாம் மஹாராஜா போஜனம் பண்ணு முன்னாகவே எனக்குக் கொணர்ந்து தருகிறாள். ஆதலால், பரமசிவனுடைய கிருபையாலும், மஹாராஜாவின் கிருபையாலும்,மேற்படி பெண்டாட்டி யின் கிருபையாலும் சாப்பாட்டுக்கு யாதொரு கஷ்டமுமில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"துணிமணிகளுக்கு என்ன செய்கிறாய்?"  என்று ஜமீன்தார் கேட்டார்.

கொட்டையன் மறுமொழி யொன்றுஞ் சொல்லவில்லை. சும்மா நின்றான்.

அப்போது ஜமீன்தார் அவனை நோக்கி:- "நாலாநாள் இரவில் நீ கீழவாயிலோரத் திலுள்ள பாம்பலம்மன் கோயிலிலிருந்து சில கற்சிலைகளையும், ஒரு வேலாயுதத்தையும் வேஷ்டிகளையுந் திருடிக்கொண்டு வந்தாயாமே; அது மெய்தானா!" என்று கேட்டார்.

"இல்லை, பாண்டியா திருடிக்கொண்டு வரவில்லை. சும்மா எடுத்துக்கொண்டு வந்தேன்" என்று கொட்டையன் சொன்னான்.

இதைக் கேட்டவுடனே ஜமீன்தார் கலகல வென்று சிரித்தார். பக்கத்திலிருந்த மற்றப் பரிவாரத்தாரும் சிரித்தார்கள்.

அப்போது ஜமீன்தார் கேட்கிறார்:- "சரி, கொட்டையா, நீ திருடவில்லை; சும்மா எடுத்துக் கொண்டு வந்தாயாக்கும். சரி, அப்பாலே என்ன நடந்தது?" என்றார்.

"கோயிற் பூசாரி சில தடியாட்களுடன் என் வீட்டுக்கு வந்து ஸாமான்களைக் கேட்டான். சிலைகளையும் துணிகளையும் திரும்பக்கொடுத்து விட்டேன். வேலாயுதத்தை மாத்திரம் கொடுக்கவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"ஏன்?" என்று ஜமீன்தார் கேட்டார்.

"அந்த வேலை எங்கள் வீட்டுக் கொல்லையில் மந்திரஞ் சொல்லி ஊன்றி வைத்திருக்கிறேன். அத்தனை பயல்களுங் கூடி அதை அசைத்து அசைத்துப் பார்த்தார்கள். அது அணுவளவு கூட அசையவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.

"அவ்வளவு பலமாக ஊன்றி விட்டாயா?"  என்று ஜமீன்தார் கேட்டார். "இல்லை, பாண்டியா, அதை ஒரு பூதம் காப்பாற்றுகிறது. ஆதலால் அசைக்க முடியவில்லை" என்று கொட்டையன் சொன்னான்.இதைக் கேட்டவுடன் ஜமீன்தார் கலகலவென்று சிரித்தார். ஸபையாரும் நகைத்தனர்.

அப்போது, ஜமீன்தார் கொட்டையனை நோக்கி, "ஏதேனும் பாட்டுப் பாடு; கேட்போம்" என்றார்.

"உத்தரவு; பாண்டியா என்று சொல்லிக் கொட்டையன் கண்ணனைப் போலவே கூத்தாடிக் கொண்டு பின்வரும் டொம்பப் பாட்டுகள் பாடலானான்.

                   (வண்டிக்கார மெட்டு)
                 1. கால் துட்டுக்குக் கடலை வாங்கிக்
காலை நீட்டித் தின்கையிலே
என்னை யவன் கூப்பிட்டே
இழுத் தடித்தான் சந்தையிலே,
"தண்டை சிலம்பு சல சலென
வாடி தங்கம்,
தண்டை சிலம்பு சல சலென"


 2.  சந்தையிலே மருக் கொழுந்து
சரம் சரமாய் விற்கையிலே
எங்களிடம் காசில்லாமல்
எங்கோ முகம் வாடிப் போச்சே!
"தண்டை சிலம்பு சல சலென;
 வாடி தங்கம்,
தண்டை சிலம்பு சல சலென."
கொட்டையன் இங்ஙனம் ஆட்டத்துடன் பாடி முடித்தவுடனே, ஜமீன்தார் "சபாஷ்" என்று சொல்லி, "இன்னுமொரு பாட்டுப் பாடு,  கொட்டையா" என்றார்.
கொட்டையன் தொடங்கிவிட்டான்:-

              (பாட்டு)
"காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்,
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்
"எப்போ எப்போ கலியாணம்?"
காடு விளைய விட்டுக்
கண்டாங்கி நெய்ய விட்டுக்
கொக்குச் சமைய விட்டுக்
குழைய லிட்டே தாலிகட்டிக்
"காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்.


இதைக் கேட்டு ஜமீன்தார் "சபாஷ்" என்று சொல்லிக் கொட்டையனை நோக்கி, "இன்னுமொரு பாட்டுப் பாடு" என்றார்.

கொட்டையன் உடனே ஆட்டமும் பாட்டுந் தொடங்கி விட்டான்:-

                                           (பாட்டு)
"வெற்றிலை வேண்டுமா, கிழவிகளே?"
"வேண்டாம், வேண்டாம், போடா!"
"பாக்கு வேண்டுமா, கிழவிகளே?"
"வேண்டாம், வேண்டாம், போடா!"
"புகையிலை வேண்டுமா, கிழவிகளே?"
"வேண்டாம், வேண்டாம், போடா!"
"ஆமக்கன் வேண்டுமா, கிழவிகளே?"
"எங்கே?  எங்கே?  கொண்டுவா, கொண்டுவா"


இந்தப் பாட்டைக் கேட்டு ஜமீன்தார் மிகவும் சிரித்து "போதும்; போதும்; கொட்டையா, நிறுத்து; நிறுத்து" என்றார்.

கொட்டையன் ஆட்டத்தையும் பாட்டையும் உடனே நிறுத்தி விட்டான். இப் பாட்டுகளை மிகவும் அற்புதமான நாட்டியத்துடன் கொட்டையன் பாடியது பற்றி ஜமீன்தார்மிகவும் ஸ்ந்தோஷ மெய்திக் கொட்டையனுக்கு ஒரு பட்டுத் துண்டு இனாம் கொடுத்தார்.

நான் அந்த ஸமயத்தில் அந்த கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்காகப் போயிருந்தேன். அங்கே இந்தச் செய்திகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்று ஸாயங்காலம் நான் மறுபடி அந்தக் கோயிலுக்குப் போனேன். அங்கு வெளி மண்டபத்துக் கெதிரே கொட்டையன் நின்றான். காலையில் தனக்கு ஜமீன்தார் இனாம் கொடுத்த பட்டுத் துண்டைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து இரண்டு கைகளிலும்  நாலி நாலியாகக் கட்டிக் கொண்டிருந்தான்.

நான் அவனை நோக்கி:-  "ஏன், கொட்டைய சாமியாரே, பட்டை ஏன் கிழித்தாய்?"என்று கேட்டேன்.

இதைக் கேட்டுக் கொட்டையன்:
"பாட்டைக் கிழித்தவன் பட்டாணி -அதைப்
பார்த்திருந்தவள் கொங்கணச்சி -
துட்டுக் கொடுத்தவன் ஆசாரி - இந்தச்
சூழ்ச்சியை விண்டு சொல், ஞானப்பெண்ணே"
என்று பாடினான்.
"இதற்கென்ன அர்த்தம்?" என்று கேட்டேன். கொட்டையன் சிரித்துக் கொண்டு மறுமொழி சொல்லாமல் ஓடிப் போய்விட்டான்.

காலையில் ஜமீன்தாரிடம் பட்டுக்கு மேலே இவன் கொஞ்சம் பணமும் கேட்டதாகவும், அவர் கொடுக்க முடியாதென்று சொன்னதாகவும், அந்தக் கோபத்தால் இவன் பட்டைக் கிழித்துக் கைகளில் நாலி நாலியாகத் தொங்கவிட்டுக் கொண்டதாகவும், பின்னாலே பிறரிடமிருந்து கேள்விப்பட்டேன்.

"கொட்டைய சாமி" என்ற சிறிய கதை முற்றிற்று.




No comments: