பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 22, 2015

49. கலைகள் - ரத்னமாலை


(பல தேசத்து ஞானிகளின் வசனங்களை 'ஆர்ய' பத்திரிகையில் 'போல் ரிஷார்'  'Paul Richard'  என்ற பிரான்ஸ் நாட்டு வித்வான் தொகுத்தெழுதிவரும் கோவையிலிருந்து 'காளிதாஸன்' மொழி பெயர்த்தது.)

உண்மை நாட்டம், விடாமுயற்சி

தன்னைத்தான் செம்மைப்படுத்திக் கொள்வதில் செலவிடும் முயற்சியின் பயனே மனிதனுக்கு சந்தோஷத்தைத் தரக்கூடியது. ('அந்த் வான்' மருத்துவன்.)

மிகவும் மேல் நிலையிலிருப்போரும் மிகவும் தாழ் நிலையிலிருப்பாரும் எல்லாரும் ஒருங்கே செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு: அதாவது, ஓயாமல் தம்மைத் திருத்திச் செம்மை செய்தல். (கன்பூஷியஸ்.)

தன்னைத் திருத்துவதில் தளர்ச்சியே கூடாது. தான் அறநெறியில் தேர்ந்து விட்டாதாகக் கர்வங்கொள்ளும் போதே, மனிதன் அறத்திலிருந்து நழுவத் தொடங்குகிறான். (சூ-சிங்.)

லாபம் நின்றுபோனால், அப்போது நஷ்டம் ஆரம்பிக்கிறது. வேகத்துடன் ஏறிச் செல்வது பெரிதன்று; எப்போதும் ஏறிச்செல்ல வேண்டும்; அதுவே பெரிது. (ப்ளூதார்க்)

விருப்பமும் நம்பிக்கையும் தூண்டுமிடத்து மனிதன் உயிருக்கு அஞ்சிப் பின்வாங்கலாகாது. பாதையில் ஒரு க்ஷணங்கூடச் சோம்பி யிருக்கலாகாது தாமதம் செய்பவன் பாதையினின்றும் வலிந்து புறத்தே தள்ளப்படுவான். (பரீத்-உத்தீன்-அத்தர்.)

உண்மையை நாடி உழைப்பவன், இடையே சில விசேஷ சித்திகள் பெற்றவுடன் தடைப்பட்டு நில்லாமல், அதற்கு அப்பாலும் முயற்சி செய்தால் கடைசியாக நித்திய ஞானமாகிய செல்வத்தைப் பெறுவான். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)

நான் என்னை உணர்ந்தவனாகக் கருதவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்கிறேன். கடந்து போனவற்றை யெல்லாம் மறந்து, முன்னே நிற்பவற்றை நாடுகிறேன். பரிசு பெறும் பொருட்டுக் குறியை நோக்கி விரைகின்றேன். (பைபில்:பிலிப்பியர்.)

விடா முயற்சியும் உறுதியும் உடையவருக்கு எதுவும் அரிதில்லை. (லுன்-யூ)

பெறுதற் கரியவற்றைப் பெறவேண்டி அறிஞன் விடாமுயற்சியைக் கைக்கொள்ளுகிறான். (வஒ-த்ஸே).

ஊக்கத்துடன் தேடுகிறவன் காண்பான். (மஹா - உல்லா.)

சிலர் கல்வி பழகமாட்டார். சிலர் பழகியும் தேறமாட்டார். சிலர் கேள்வி கேட்க மாட்டார். சிலர் கேட்டும் விடைப்பொருள் தெரிந்துகொள்ள மாட்டார். இவர்களெல்லாம் மனஞ் சோர்ந்து போக வேண்டாம். சிலர் எதையும் தெளிவுறக்காணமாட்டார். சிலர் தெளிந்தும் கலங்குவார். இவர்கள் மனஞ்சோர வேண்டாம். சிலர் அப்யாஸம் செய்வதில்லை. சிலர் செய்தாலும் உறுதி யடைவதில்லை. இவர்கள் மனஞ் சோர வேண்டாம் விடாமுயற்சி ஒன்றிருந்தாற் போதும்; பிறன் ஓரடியிற் செய்வதை இவர்கள் நூறடியிற் செய்வார்கள். பிறன் பத்தடியிற்செய்வதை இவர்கள் ஆயிரம் அடியிற் செய்துவிடுவார்கள். இந்த விடாமுயற்சி விதிப்படி நடப்பவன் எத்தனை மூடனாயினும் மேதாவியாய் விடுவான்; எத்தனை பலஹீனனாயினும் வலிமை பெற்று விடுவான். (கன்பூஷியஸ்).

காலத்தாலும் பொறுமையாலும் முசுக் கட்டை இலை பட்டாய் விடுகிறது. (பாரசீகப் பழமொழி).

உடம்பைப் போல உணர்வும் தான் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் வழக்கத்தைப் பழக்கத்தினால் அடைகிறது. (ஸொக்ராதெஸ்).

ஆத்ம சுத்தியாகத் தொழிலைச் செய்யுங்கள். அதில் விழிப்போடிருங்கள். விடாமுயற்சி செய்யுங்கள் சிந்தனை யோடிருங்கள். உங்கள் விடுதலையிலே கருத்தைச் செலுத்துங்கள். (மஹா பரி நிர்வாண ஸூக்தம்.)

கடைசிவரை எவன் பொறுத்திருப்பானோ அவன் காக்கப்படுவான். (பைபில்:மத்தேயு.)

விடா முயற்சியாலே ஆத்ம வுடைமை பெறுவீர். (பைபில்: லூக்).

சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான். பெருக விதைத்தவன் பெருக அறுப்பான். (பைபில்: கொரிந்தியார்.)

தேவ யாத்திரை செய்வோன் எப்போதும் அதைரியப் படலாகாது. இஷ்டதேவதையின் அழகை ஒரு லக்ஷ வருஷம் பாடுபட்டுங் காணாவிடின் அப்போதும் அதைரியப்படலாகாது. (பஹா உல்லா.)

எந்த நாளும் அதைரியப்படாமல் இருப்பவனே பெருமை யடைந்து நித்தியானந்தத்தை உண்ணுகிறான். (மஹாபாரதம்.)

நியாயமுள்ள மனிதர் ஏழுதரம் விழுந்தும் மறுபடி எழுகிறான். (பைபில்:பழமொழி.)

நித்யப் பொருளைக் காணும் பொருட்டாக நீ செய்யும் முதன் முயற்சி பயன்படா விட்டால், அதனால் தைரியத்தை இழந்து விடாதே. விடாமுயற்சி செய்ய தெய்வத்தின் அருள் பெறுவாய். (ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.)

உடம்பைப் பேணுதல்

சீன தேசத்து ஞானி 'யாகதஸ்உங் - த்ஸே' என்பவர் சொல்லுகிறார்:- "மண்ணுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்ததோர் விம்பம்; அதன் பெயர்உடம்பு. அதனைத் தெய்வம் " உன் வசம் கொடுத்திருக்கிறது. உன் காவலிலே யகப்பட்டிருக்கும் மண்ணை விண்ணுடன் இசைத்து (ஸம்மேளப்படுத்தி) நடத்துவதேஉயிர் வாழ்க்கையென்று சொல்லப்படும்."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுகிறார்:- "உயிரும், உடம்பும்; உள்ளே குணம், வெளியே குறி."

'எபிக்தெதுஸ்' என்ற கிரேக்க ஞானி சொல்லுகிறார்:- "ஆத்ம சக்தியால் ஆத்மாவுக்கு விளையும் பயன் சரீர சக்தியால் உடலுக்கு உண்டாகும்."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-  தர்மிஷ்டர் உடம்பைப் போற்ற வேண்டும். அது ஆத்மாவின் கோயில். நித்யப் பொருள் அதனுள்ளே விளங்குகிறது."

ஸ்வாமி விவேகானந்தர்:-  "வலிமையுற, நோயின்றி உடம்பைக் காத்தல் அவசியம்.உடம்பு மிகச் சிறந்த கருவி. அதனினும் சிறந்த கருவி உன்னிடமில்லை. ஆதலால், அதை வலிதாக, நோயற்றதாக வைத்துக்கொள். உனது உடம்பு எஃகைப் போல் வலியதென்று பாவனை செய்துகொள். மெலிந்தோருக்கு விடுதலை யில்லை, மெலிவை யெல்லாம் துரத்திவிடு. உடம்பு வலிதென்று அதனிடம் சொல்லு. உன்னிடத்திலே நீ எல்லையற்ற திடமும் நம்பிக்கையும் கொண்டிரு."

"மஹாலக்கம்" என்ற பௌத்த நூல் சொல்லுகிறது:- "உடன் பிறந்தோரே! இரண்டுவித மிகையுமில்லாதிருப்போனே விடுதலை பெறுவான். எப்போதும் காமாதி இன்பங்களை
நாடுதல் ஒரு மிகை; இஃதிழிந்தது, சிறுமை, மிருகத்தன்மை, ஆபத்து - இந்த வழியிலே பாமரர் செல்லுகிறார்கள். மற்றொரு மிகையாவது உடம்பை மித மிஞ்சிய விரத முதலியவற்றால் வருந்தச் செய்தல். இது துன்பம்; இது வீண். புத்த பகவான் கூறியது, மேற்கூறிய சந்துகளிரண்டினும் வேறான வழி; அது அறிவைத் திறப்பது; தெளிவு தருவது; விடுதலைக்கும், ஞானத்துக்கும்,நிறைவுக்கும் வழி காட்டுவது."

யோக ஸூத்ரங்களின் ஆசிரியராகிய பதஞ்ஜலி முனிவர் சொல்லுகிறார்:- "வலிமைகளிலே மதியை நிறுத்தி ஸம்யமம் (ஆழ்ந்த தியானம்) செய்தால் யானையின் பலம் முதலியன கை கூடும்."

தமிழ்ப் பழமொழி:-  "சுவரிருந்தாலன்றோ சித்திரமெழுதலாம்?" [கருத்து:  வெயர்வை சிந்தும்படி நாள் தோறும் உடலை உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பிறகு போஜனம் செய்யவேண்டும். மனதிலே சந்தோஷம் வேண்டும். இவற்றாலே ஒருவன் உடம்பைக் காத்தால் ஒழிய, தர்மம் நடக்காது.]

தர்க்கம்

"விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக."  (பைபில்.)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:  "பிறர் குணதோஷங்களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப்பற்றி யோசித்தல் வீண்."

'ஹெர்மஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி:-  "மகனே, விவாதத்திலே நேரங்கழித்தல் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்."

'ஸொக்ராதெஸ்' என்ற கிரேக்க ஞானி:-  "அறியாதார் பேச்சை நிறுத்தினாற் கலக மில்லை."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-  "வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன்தெரிந்துகொள்ளுவான்."

திருவள்ளுவர்:-
"யாகாவா ராயினும் நாகாக்க"
"சொல்லிற் பயனுடைய சொல்லுக"


No comments:

Post a Comment

You can give your comments here