பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 21, 2015

47. கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை



                    இன்று காலை பொழுது விடிய இரண்டு நாழிகைக்கு ஒருவர் வந்து என் வீட்டுக்கதவை இடித்தார். நான் போய்க் கதவைத் திறந்து பார்த்தேன் கையில் ஒரு லாந்தர் வைத்துக் கொண்டிருந்தார். நெற்றியிலே ஸ்ரீ சூர்ணம், தலையில் பாகை; உடம்பில் முழந்தாள் வரை நீண்ட பெரிய கர்நாடக உடுப்பு; காலில் பாதக் குறடு; கையில் தும்பிக்கை போலே ஒரு தடி. "யார்?  எந்த ஊர்?"  என்று கேட்டேன்.

                   அப்போது அவர் சொல்லுகிறார்;-  "நான் வசிப்பது கும்பகோணம் என் பெயர் டிண்டிம சாஸ்திரி. வேதபுரத்தில் ஸ்வாமி தெரிசனத்துக்காக வந்தேன். தங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நெடுநாளாக இருந்த ஆசையை "இப்போது தீர்த்துக் கொண்டேன்" என்றார்.

                  ''சரி'' என்று சொல்லி நான் அவரை உள்ளே அழைத்து வந்தேன். மேல் மெத்தையில் குழந்தை குட்டிகள் தூங்கிக் கொண்டிருந்தபடியால். கீழேயே கூடத்தில் ஒரு பிரப்பம்பாயை விரித்தேன். விளக்கேற்றினேன். டிண்டிமரும் நானும் உட்கார்ந்து கொண்டோம். டிண்டிம சாஸ்திரி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியை எடுத்தார். நானும் அவரும் வெற்றிலை போட்டுக் கொண்டோம். அப்போது டிண்டிமர்:- "தாங்கள் பிரஹ்மபத்ரம் (புகையிலை) போடுவது கிடையாதோ?" என்றார்.

               நான் சொன்னேன்:-  'கிடையாது, ஸ்வாமி; முன்னெல்லாம் நாளொன்றுக்கு மூன்று தூக்குப் புகையிலை சவைத்துத் துப்பிக்கொண்டிருந்தேன். இரண்டு வருஷகாலமாக அவ்வழக்கத்தை நிறுத்தி விட்டேன்" என்றேன்.

              "சரிதான்" என்று சொல்லி லேசாக நகைத்து விட்டு, டிண்டிம சாஸ்திரி தம்மிடமிருந்த புகையிலை டப்பாவைத் திறந்து அதற்குள்ளிருந்த சுகந்த பரிமள புகையிலையை ஒரு கொத்து, எலுமிச்சங்காய் அளவு, கையில் எடுத்து வாய்க்குள்ளே திணிக்கக் மாட்டாமல் திணித்துக் கொண்டார்.

              இரண்டுதரம் எழுந்து வெளியே எச்சில் துப்பிவிட்டு வந்தார். மேலே இருந்த பட்டையையும் தலையில் இருந்த பாகையையும் கழற்றிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்: "முந்தி ஒரு தடவை 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் மலையாளத்திலிருந்து தீய ஜாதியைச் சார்ந்த 'ராகவ சாஸ்திரி, என்ற மனுஷ்யன் வந்ததாகவும், அவர் மலையாளத்து நம்பூரிப்பிராமணர்களைத் தூஷித்துப் பேசியதாகவும் தாங்கள் எழுதியிருந்தீர்கள். நான் அதற்கப்புறம் மலையாளத்துக்குப் போய் பல நம்பூரிப் பிராமணர்களைக் கண்டேன். அவர்களெல்லோரும் மஹா யோக்கியர்கள். "தீயர்களைக் கஷ்டப்படுத்துகிற நாயர்களைக் கஷ்டப்படுத்தினார்களே யென்றாலோ, அதுவெல்லாம் பழைய கர்மம். அதனால் உண்டான பாவ பயன்களை அவர்கள் அனுபவித்தார்கள்; இப்போதும் அனுபவிக்கிறார்கள். சந்திரனிலே கூட மாசு தோன்றுகிறது. அதுபோல், உலகத்திலும் எந்த ஜாதியாரிடத்திலும், குற்றம் கண்டு பிடிக்கப் போனால், குற்றம் இருக்கத்தான் செய்யும். ''குற்றம் பார்க்கில் சுற்றமில்லை'' என்று ஓளவையாரே சொல்லியிருக்கிறார்கள். மேற்படி ஓளவையாரைக் குறித்து நான் மலையாளத்தில் கேள்விப்பட்ட புதுமைகளைத் தங்களிடம் சொல்லவேண்டுமானால், அது வேறு பெரிய கதையாக நீளும். நம்பூரிப் பிராமணர்களை மொத்தமாகக் கவனிக்கும்போது நல்ல ஸாதுக்களாகவே யிருக்கிறார்கள். அவர்களுடைய யோக்கியதை இக்காலத்தில் சோபிக்க இடமில்லை. முதலாவது, அவர்களுக்கு நவீன லௌகீகக் (அதாவது ஐரோப்பியக்) கல்வியில்லை. அது ஓர் ஊனம். ஆனால், அதை அவர்கள் சீக்கிரத்தில் நிவிர்த்தி செய்து கொள்வார்கள்.

ஒரு நம்பூரி என்னிடம் சொன்னார்:-  "இங்கிலீஷ் பாஷையிலுள்ள சாஸ்திரங்களைத் தெரிந்து கொள்வதில் அவர்களுடைய வைதீக நெறிக்கு யாதொரு விரோதம் கிடையா தென்றும், ஆனால், இங்கிலீஷ் பாஷையைப் படித்தால் தான் தோஷமென்றும், ஆதலால் இங்கிலீஷிலிருந்து மேற்படி சாஸ்திரங்களை யாராவது தர்ஜமா பண்ணி போட்டால் "நம்பூரிமார் வாசிப்பதும் அல்லாமல் மேற்படி சாஸ்திரங்களில் அதுல்யமாக பாண்டித்யம் பெறுவார்கள் என்றும், நம்பூரியின் புத்திக்கு ஸமானமான தீக்ஷணம் இந்த லோகத்தில் வேறு எந்த ஜாதியாருக்கும் கிடையாது என்றும் அந்த நம்பூரி சொன்னார்."

இங்ஙனம் டிண்டிம சாஸ்திரி கதை சொல்லி வருகையில் நான் இவரிடம்:- "ஸ்வாமி, தாங்கள் என்ன ஸ்மார்த்தரா வைஷ்ணவரா, விஷயம் தெரியவில்லையே. நெற்றியில் நாமம் இல்லை; ஸ்ரீசூர்ணம் மாத்திரம் தெரிகிறது. வைஷ்ணவர் சாஸ்திரி என்று பெயர் வைத்துக் கொள்வதில்லையே" என்றேன்.

அதற்கு டிண்டிம சாஸ்திரி:- "நான் ஸ்மார்த்தன் தான். கீற்று நாமக்காரன். நாங்கள் லேசாக நாமம் போடுவோம். நேற்று மத்தியானம் சார்த்தினபடியாலே திருமண் கலைந்து போய் ஸ்ரீசூர்ணம் மாத்திரம் தெரிகிறது. ஸ்ரீரங்கத்துக் கோயிலில், ஸ்மார்த்தர் நாமம் போட்டுக்கொண்டு பரிசாரகம் செய்கிறார்கள். அனேக ஜில்லாக்களில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

             நம்பூரிப் பிராமணரைப் பற்றி நான் பிறந்தது முதல் இன்றுவரை நீர் ஒருவர்தான் ஸ்தோத்திரம் பண்ணக்கண்டேன். இதுவரை எங்கே போனாலும் நம்பூரியைத் திட்டுவார்களே யொழிய, நம்பூரி நல்லவன் என்று யாரும் சொல்வது கிடையாது" என்று நான் சொன்னேன்.

அப்போது டிண்டிம சாஸ்திரி சொல்லுகிறார்: - ஐயோ, ஸ்வாமி! ஐயோ, ஸ்வாமி! ஐயோ, ஸ்வாமி! தங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் இந்த ஸங்கதி மாத்திரம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்! மலையாளத்தில் தெய்வம் நேரே பேசுகிறது, ஸ்வாமி. அங்கே நல்ல பாம்புகள் மனுஷ்யருடைய காலைச் சுற்றிவரும், கடிக்காது. பதிவிரதைகள் அந்தப் பாம்புகளை வசப்படுத்திப் போட்டார்களாம்.

"நம்பூரி என்றால், ''நம்பிஸ்ரீ'' என்ற பட்டத்தின் திரிதல் விகாரம். பாலக்காட்டில், எனக்கு ஒரு நம்பூரிப் பிராமணர் ஸ்நேகிதராக இருந்தார். அவருக்கு அவ்வூர் வக்கீல் ஒருவர் சொல்லிய சில சரித்திர சம்பவங்களை அவர் எனக்குச் சொன்னார்.

"152-ம் வருஷத்தில் கொச்சி ராஜா ஐம்பதினாயிரம் நாயர் படையும் சில போர்த்துகீசிய பீரங்கிப் பட்டாளமும் சேர்த்துக்கொண்டு கோழிக்கூட்டு (கள்ளிக்கோட்டைத்) தம்பிரான் மேலே படையெடுத்து வந்தார். அப்போது தம்பிரானைச் சேர்ந்த பிராமணர்கள் கூட்டம் கூடி கொச்சி ராஜா அன்னியருடன் சேர்ந்துகொண்டு பிராமண சத்துருவாக மூண்டதுபற்றி அவனைச் சாபமிட்டார்கள். பிராமண சாபத்துக் கிடமான ராஜாவுக்கு ஐயம் கிடையாதென்று தீர்மானித்துக் கொச்சி ராஜனுடன் வந்த ஐம்பதினாயிரம் போர்த்துகீசியர் முகத்தை நோக்கப்போர்த்துகீசியர் கடலை நோக்கத் தம்பிரான் தலை பிழைத்தது.

"திப்பு சுல்தான் காலத்தில்தான் முகம்மதிய ஸேனாதிபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரிந்து நிற்கும்படி செய்வித்து பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தை சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப்போய் விட்டதாக புல்லர்டன் என்ற இங்கிலீஷ் சேனாதிபதி எழுதிவைத்திருக்கிறான். இச்சங்கதிகளெல்லாம் ''லோகன்'' எழுதின ''மலபார் மானுயல்'' புஸ்தகத்தில் போட்டிருக்கிறதாம். அந்தக் காலத்து போர்த்துகிசிய வைஸ்ராய், ''ஆல்பான்ஸோ ஆல்புகர்க்'' என்பவன் கொச்சி ராஜாவிடம் சொன்னானாம்: ''இனிமேல் இந்த ராஜ்யத்தில் பிராமண வாக்கு செல்லாது. இனிமேல் அன்னியனுடைய கோலுக்கு வணங்க வேண்டும்'' என்று சொன்னானாம்.

             "திப்பு சுல்தான் கோழிக்கூட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முஸ்லீம் ஆக்கி கோமாம்சம் புசிக்கச் செய்தானாம். அவனை எதிர்க்கத் திறமையில்லாமையால் கோட்டயம் ராஜாவும் கூத்தாட்டு ராஜாவும் இங்கிலீஷ்காரருக்கு விண்ணப்பஞ் செய்தார்கள்: - "நீங்கள் பிராமணர்களையும் ஏழைகளையும் ராஜ்ய முழுவதையும் காப்பாற்ற வேண்டும்" என்று. இங்ஙனம் மேற்படி டிண்டிம சாஸ்திரி எத்தனையோ விதமான கதைகள் சொன்னார். அவர் சொன்ன விஷயங்களை யெல்லாம் பின்னிட்டு "நம்பூரிமார்" என்று தனிக்கதை எழுதுவேன். அதிலே சொல்லுகிறேன். இது நிற்க, காலை தோசை தின்று பால் சாப்பிட்டு விட்டுத் தாம்பூலம் தரித்துக்கொண்டு டிண்டிம சாஸ்திரி என்னிடம் விடைபெற்றுச் சென்றார். அவர் போய் பத்து நிமிஷத்துக் கெல்லாம் பழைய ராகவ சாஸ்திரி முன்போல ஐரோப்பிய உடை தரித்துக் கொண்டு வந்து ப்ரஸந்நமானார்.

அவர் யார் ஞாபகமிருக்கிறதா?  ஆதியில் இந்த ராகவ சாஸ்திரி என்னிடம் வந்து நம்பூரியைப் பழித்துப் பேச அதை நான் சுதேசமித்திரன் பத்திரிகைக் கெழுத, அதைப் பார்த்துத் தான் டிண்டிம சாஸ்திரி என்னை உணர்ந்து வந்தார். ராகவசாஸ்திரி வந்தவுடன் நான் அவரிடம் டிண்டிமர் வந்துவிட்டுப்போன விருத்தாந்தங்களையெல்லாம் சொன்னேன்.

அப்போது ராகவ சாஸ்திரி கடகடவென்று சிரித்தார். இவர் கையில் "ரயில் பை" கொண்டு வந்திருத்தார். அதை எடுத்துக்கொண்டு "நான் மெத்தையிலே போய்த் தனியாக ஐந்து நிமிஷம் இருக்கவேண்டும்" என்று சொன்னார்.

"அதற்கு என்ன, செய்யும்" என்றேன். தனியாகப் போயிருந்தார். திரும்பி வரும் போது பார்த்தால் பூட்ஸ் எல்லாம் போய், ஸ்ரீசூர்ணம், தலைப்பாகை ஸஹிதமான டிண்டிமசாஸ்திரி வந்து தோன்றினார், ''இதென்னடா வேடிக்கை'' யென்று தீரவிசாரணை செய்யும்போது, ஒரே ஆசாமி ராகவ சாஸ்திரியாகவும் டிண்டிம சாஸ்திரியாகவும் இரண்டு வேடந் தரித்து எனக்கு நம்பூரிகளுடைய விஷயத்தில் கோபம் அதிகப்படும்படி செய்வதற்காக இப்படி விளையாடினார் என்று தெரியவந்தது.

               அவர் பிறப்பில் தீயரில்லை. நம்பூரிதான் என்றுந் தெரியவந்தது.


No comments: